Tag Archives: amazon

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

ddg-bangs-640x460மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக டக்டக்கோவை பயன்படுத்தும் போது, நீங்கள் யார் என்பதை அது கவனிக்காமல் இருக்கிறது. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எனவே உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப்பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு பிரதான அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாறலாம் என நினைப்பதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை என்பது குறிப்பிடத்தக்கது:

ஸ்டாப்வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப்வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப்வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டும் அல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருப்பின், லேப் வசதி மூலம் தொடச்சியாக பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

பெரிய எழுத்துக்கள்

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிடல் எழுத்துக்களை அமைக்க விரும்பினால் அதற்கான வசதியையும் இந்த தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் டைடில் கேஸ் என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துக்களை லோவர் கேஸ் அல்லது அப்பர் கேசாக மாற்றவும் இதை பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளை தேட

கூகுளில் தகவல்களை தேடும் போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால் டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100 க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

பிடிஎப் கோப்புகள்

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல் கோப்புகளையும் எளிதாக தேடலாம். எச்.டி.எம்.எல்: என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளை காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதே போல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும் போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையை சேர்த்துக்கொண்டால் போது, இத்தகைய கோப்புகளை மட்டும் தேடலாம்.

நெத்தியடி தேடல்

சில நேரங்களில் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி இருக்கிறது. இந்த வசதி ஐபேங்க் என சொல்லப்படுகிறது. தேடல் பதத்திற்கு முன் ஆச்சர்யக்குறியை சேர்த்து, குறிப்பிட்ட தளத்திற்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்திற்கு  !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது: https://duckduckgo.com/bang

ஆய்வுப்பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம் தெரியுமா? https://duckduckgo.com/bang?q=google

உடனடி பதில்கள்

இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ் எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. கூகுள் நாலட்ச் கிராப் எனும் பெயரில் இது போன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோ தான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும் தான் தேவை எனில் தேடல் பதத்திற்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையில் எனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப் மட்டுமே சார்ந்திருப்பது தான் ஒரே குறை.

குறுக்கு வழிகள்

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு போட்டோஷாப்  சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளை பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும் கூட பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள் போல வருமா? என கேட்பவர்களுக்காக கூகுல் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சனையா? எனும் பொருள்பட, ஈஸ் கூகுள் டவுன் என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் என தோன்றுகிறது.

 

நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.

 

டக்டக்கோ தொடர்பான முந்தைய பதிவுகள்: http://cybersimman.com/?s=%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B

கவனிக்க வேண்டிய இசை தேடியந்திரம்!

hypeஇணையத்தில் தகவல்களை தேடுவதற்கும் இசையை தேடுவதற்கும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. தகவல்கள் என வரும் போது நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் அல்லது அது தொடர்பான மேலதிக விவரங்கள் கிடைக்கின்றனவா என்று பார்க்கிறீர்கள்.

ஆனால் இசையை தேடும் போது, நீங்கள் எதிர்பார்க்கும் பாடல்களை மட்டும் அல்ல, நீங்கள் விரும்பக்கூடிய பாடல்களையும் உங்கள் அறியாமல் எதிர்பார்க்கிறீர்கள். அதாவது, குறிப்பிட்ட ஒரு பாடல் அல்லது பாடகர் அல்லது இசைக்குழுவை நீங்கள் தேடும் போது, அந்த தேடல் தொடர்பான தகவல்களோடு தொடர்புடைய பாடல் அல்லது இசைக்குழுவை தெரிந்து கொள்ள முடிந்தாலும் மகிழ்ச்சி தான்.

உதாரணத்திற்கு இளையராஜா இசையில் 70 களின் இறுதியில் ஒலித்த குறிப்பிட்ட பாடலை தேடும் போது, அந்த பாடலோடு, அதே காலத்தில் வெளியான ஜி.குமார் அல்லது ஜி.கே.வெங்கடேஷ் இசையில் வெளியான தொடர்புடைய ஒரு பாடல் முன்வைக்கப்பட்டால் அதை கேட்டுப்பார்த்து சபாஷ் போடத்தோன்றும்.

இதை இசை கண்டறிதல் என்கின்றனர். இசைப்பிரியர்கள் புதிய இசையை இப்படி தான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகின்றனர். இதற்கு தொழில்நுட்பம் மூலம் உதவும் சேவைகளும் இருக்கின்றன.
இசை தேடியந்திரங்களும் இவ்விதமே செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தான் ஹைப் மெஷின் தேடியந்திரம் அமைந்திருக்கிறது.

ஹைபெம்.காம் (http://hypem.com ) எனும் இணைய முகவரி கொண்ட ஹைப்மெஷின் உண்மையில் இசை வலைப்பதிவுகளுக்கான தேடியந்திரம். அதாவது இசை தொடர்பான ஆர்வத்துடன் எழுதி வருபவர்களின் பதிவுகளை இது தொகுத்தளிக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் விரும்பும் இசை பற்றி இணையத்தில் எழுதுகின்றனர். அவை எல்லாவற்றையும் இங்கே கண்டறியலாம் என அழைப்பு விடுக்கிறது ஹைப் மெஷின்.
ஆங்கிலத்தில் இசை தொடர்பான எழுதி வருபவர்களின் 800 க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் இதன் பட்டியலில் உள்ளன. இந்த இசைப்பதிவுகளில் சுட்டிக்காட்டப்படும் பாடல்களை இந்த தளம் மூலம் நீங்கள் தேடலாம், கண்டறியலாம்.

ஆக, இதில் குறிப்பிட்ட பாடகர் அல்லது இசைக்குழுவை நீங்கள் தேடும் போது அந்த பாடகர் அல்லது இசைக்குழு தொடர்பான இசை வலைப்பதிவாளர் குறிப்புகளை இதில் காணலாம். அப்படியே அவர்கள் கொடுத்துள்ள இசைக்கோப்புக்கான இணைப்பு மூலம் பாடலை கேட்டுப்பார்க்கலாம். ஆனால் பாடலை டவுண்லோடு செய்ய முடியாது. தேவை எனில் அமேசான் அல்லது ஐடியூன்ஸில் வாங்கிக்கொள்ளலாம்.
இசை வலைப்பதிவாளர்களின் பரிந்துரைகளை ஒரே இடத்தில் தேட வழி செய்வதோடு, அவர்கள் மூலமே புதிய இசையை கண்டறியவும் உதவுகிறது.
எனவே , நீங்கள் விரும்பி தேடக்கூடிய பாடல் பற்றிய விவரங்களோடு, நீங்கள் விரும்பக்கூடிய இசை பரிந்துரைகளையும் இங்கு எதிர்கொள்ளலாம்.
ஒரு இசைப்பிரியருக்கு இதைவிட சுவாரஸ்யம் வேறு என்ன இருக்க முடியும்?

இசை வெளியின் பரந்து விரிந்த பரப்பில் வெளியாகும் பலவித இசைகளை அறிமுகம் செய்து கொள்வதோடு, மனதை கவரக்கூடிய புதிய இசையையும் கண்டறியலாம்.

தனித்தனியே இசை வலைப்பதிவாளர்களை தேடி படிக்க முயல்வதை விட, இப்படி ஒற்றை தேடலில் அனைத்து விதமான இசை பரிந்துரைகளையும் அணுக முடிவது அற்புதம் தான். இசை வலைப்பதிவாளர்களுக்கும் தங்களுக்கான வாசக ரசிகர்களை தேடிக்கொள்ள இது உதவும்.
பாடகர்களை குறிப்பிட்டு தேடுவது தவிர, தற்போது பிரபலமான பாடல்கள், பாடகர்கள், வீடியோக்கள் ஆகிய தலைப்புகளிலும் இசையை அணுகலாம். இசை வகைகளுக்கு ஏற்பவும் அணுகலாம்.

மேற்கத்திய இசை சார்ந்து இருப்பதால் நம்மவர்களுக்கு ஆதங்கம் ஏற்படலாம் என்றாலும் இளையராஜாவை தேடினாலும் குறிப்புகள் வருகின்றன.

டிவிட்டரில் பகிரப்படும் பாடல்களும் அடையாளம் காட்டப்படுகின்றன.
அமெரிக்காவில் குடியேறிய ரஷயரான அந்தோணி வோலோட்கின் ( Anthony Volodkin) என்பவர் 2005 முதல் இந்த தேடியந்திரத்தை நடத்தி வருகிறார். கார்டியன் நாளிதழின் 100 இணையதளங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோடு பரவலாக கவனத்தை ஈர்த்த இந்த தேடியந்திரம் தனி மனித முயற்சி என்பதை மீறி, முதலீட்டாளர்கள் ஆதரவுடன் பெரிதாக வளர்ந்திருக்கிறது.

தேடியந்திர முகவரி:http://hypem.com/popular?workaround=lol

குறிப்பு: இசையை போலவே , புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை தேடும் போதும் நாம், எதிர்பார்த்த தகவல்களை மட்டும் அல்லாமல், தொடர்புடைய புத்தகம் அல்லது படங்களின் பரிந்துரைகளையும் எதிர்பார்க்கிறோம். இத்தகைய கண்டறிதல் தேடியந்திரங்கள் அநேகம் இருக்கின்றன. அவை பற்றிய விவரங்கள் தனிப்பதிவாக!

குறிப்பு: தமிழ் இந்துவில் எழுதி வரும் ஆ’வலை’ வீசுவோம் தொடரில் வெளியாகும் தேடியந்திரங்களின் நீட்டிப்பாக இந்த அறிமுகத்தை கொள்ளலாம்.: http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F/article7726703.ece

இணையம் கொண்டாடும் ஓவியர்!

bobross1பாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா?
இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ்.’அமெரிக்க ஓவியர்,ஒவிய பயிற்சியாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்’ என்கிறது இவருக்கான விக்கிபீடியா அறிமுகம் பக்கம்.கூடுதல் விவரம் வேண்டும் என்றால் இவரது ஜாய் ஆப் பெயிண்டிங் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கூறலாம்.

பிபிஎஸ் தொலைக்காட்சியில் 1980 களில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தான் பாப் ராசை மிகவும் பிரபலமாக்கியது.எல்லோருக்கும் நெருக்கமாக்கியது.அந்த கால அமெரிக்கர்களுக்கு நிச்சயம் பாப் ராசின் மகிமை தெரிந்திருக்கும்.அவரது பெயரை கேட்டவுடனே,’ஓவியம் வரைய கற்றுக்கொடுத்து வாழ்க்கை பற்றிய உற்சாகத்தையும்,ஊக்கத்தையும் அளித்த மனிதர் அல்லவா என்று அவரைப்பற்றி நினைவு கூறக்கூடும்.
எல்லாம் சரி,பாப் ராசை இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்.அதிலும் அவரது அவரை பிரபலமாக்கிய தொலைக்காட்சித்தொடர் ஒளிபரப்பாக 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில்,இப்போது என்ன அவசியம் என்று கேட்கலாம்.

இணைய யுகத்திலும் அவரது ஆளுமை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது என்பதே இதற்கு காரணம்.
ராஸ் வழங்கிய ஜாய் ஆப் பெயிண்டிங் தொலைக்காட்சி நிகழ்ச்சி கடைசியாக 1994 ம் ஆண்டு ஒளிபரப்பான நிலையில்,தற்போது அந்த நிகழ்ச்சித்தொடர் இணையத்தில் மறுஒளிபரப்பாகி ஹிட்டாகி இருக்கிறது.அதுவும் எப்படி தெரியுமா?நேரடி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாக லட்சக்கணக்கானோரை கவர்ந்திருக்கிறது.
அப்படியா? என்று நீங்கள் ஆச்சர்யமடைந்தால் டிவிட்ச்.டிவி(www.twitch.tv )பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த இணை சேவையில் தான் ராஸ் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்.

டிவிட்ச் உண்மையிலேயே சுவாரஸ்யமான இணைய சேவை.முதல் முறையாக கேள்விப்படும் போது நம்ப முடியாத வியப்பில் ஆழ்த்தக்கூடிய சேவை.டிவிட்ச் வீடியோகேம்களுக்கான பிரத்யேக இணைய ஒளிபரப்பு சேவை.அதாவது இது வீடியோகேம் ஆடுவதற்கான சேவை அல்ல;வீடியோகேம் ஆடுவதை பார்ப்பதற்கான சேவை.வேறுவிதமாக சொல்வதென்றால் இது வீடியோகேம்களுக்கான யூடியூப் போன்றது.இதில் வீடியோகேம் பிரியர்கள் தாங்கள் கேம் ஆடுவதை நேரடியாக ஒளிபரப்புவார்கள்.சக வீடியோகேம் பிரியர்கள் அதைப்பார்த்த படி அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.இணைய நேரடி ஒளிபரப்பு சேவையான ஜஸ்ட்ன்.,டிவியின் கிளையாக துவங்கி மரமாக வளர்ந்து பின்னர் அமேசான் நிறுவனத்தால் வாங்கப்பட்ட டிவிட்ச்.டிவி இணைய உலகின் முன்னணி தளங்களில் ஒன்றாக உருவாகி இருக்கிறது.

வீடியோகேம் விளையாடுவதை எல்லாம் கூட யாராவது பார்ப்பார்களா? எனும் கேள்வியோ,சந்தேகமோ தேவையில்லாத ஒன்று.ஏனெனில் இதை இப்போது இ-ஸ்போர்ட்ஸ் என்று கொண்டாடுகின்றனர்.மற்ற விளையாட்டு போல இதிலும் நட்சத்திரங்கள் உருவாகி இருக்கின்றனர்.

டிவிட்ச்.டிவி பற்றியும் அது உருவாக்கியுள்ள இணைய விளையாட்டு கலாச்சாரம் பற்றியும் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன என்றால் டிவிட்ச்.டிவி புதிதாக ஒரு சேனலை துவக்கியுள்ளது என்பதும் அது படைப்பாற்றல் கலைக்கானது என்பதும் தான்.
டிவிட்ச்.டிவியில் எப்படி வீடியோகேம் ஆடுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமோ,அதே போல புதிதாக துவங்கப்பட்டுள்ள டிவிட்ச் கிரியேட்டிவ் பகுதியில் ஓவியர்களும்,போட்டோஷாப் கலைஞர்களும் தாங்கள் உருவாக்கத்தை நேரடியாக ஒளிபரப்பலாம்.

twitch-bob-rossடிவிட்ச் அடிப்படையில் வீடியோகேம் ஒளிபரப்பிற்கான தளமாக இருந்தாலும் கூட,பல பயனாளிகளி போட்டோஷாப் உருவாக்கம் மற்றும் ஓவியங்கள் வரைவதை ஒளிபரப்பவும் இதை பயன்படுத்து வந்ததை உணர்ந்ததால் இதற்கென்றே தனிச்சேவை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடியோகேம் ஆடி ஆடி அலுத்துப்போகும் போது,கலை உருவாக்கத்தில் லயித்துப்போவது பலருக்கு பிடித்தமானதாக இருந்திருக்கிறது.இதை மேலும் ஊக்குவிக்க தான் டிவிட்ச் கிரியேட்டிவ் உதயமாகியுள்ளது.
இந்த இடத்தில் பாப் ராஸ் உங்கள் நினைவில் வந்திருந்தால் சபாஷ் போட்டுக்கொள்ளவும்.

ஓவியம் வரைதலை நேரடியாக ஒளிபரப்ப வழி செய்யும் ஒரு இணையதளத்தின் பயன்பாட்டிற்கு ஓவியம் மூலம் மக்களுடன் பேசிய ஒருவரை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும்? அதனால் தான் டிவிட்ச் கிரியேட்டிவில் அன்மையில் பாப் ராஸ் தொலைக்காட்சியில் தொகுத்து அளித்த ஜாய் ஆப் பெயிண்டிங் நிகழ்ச்சி அப்படியே மறுநேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.சும்மா இல்லை அந்த நிகழ்ச்சி தொகுப்பு அனைத்தும் தொடர்ச்சியாக ஒளிபரப்பாக துவங்கியது.நிகழ்ச்சியின் 403 பகுதிகளும் எட்டரை நாட்களில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டது.

டிவிட்ச் ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் இந்த ஒளிபரப்பை பார்த்து ரசித்துள்ளனர்.முதல் நாளில் மட்டும் 80 லட்சம் பேர் பார்த்துரசித்துள்ளனர்.அது மட்டும் அல்ல குறிப்பட்ட நேரத்தில் 60 ஆயிரம் பேருக்கு மேல் நேரடியாக பார்த்து ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ராஸ் ஓவியம் வரையும் கலை எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என நினைத்தவர்.அந்த நோக்கத்துடன் தான் அவர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஓவியம் வரைய கற்றுக்கொடுத்தார்.நீங்களும் ஓவியம் வரையலாம் எனும் செய்தியுடன் அவர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு ஓவியம் வரைந்து காட்டுவதை பார்த்தால் உற்சாகமாகா இருக்கும் என்கின்றனர் பாப் ராஸ் ரசிகர்கள்.அவரது மென்மையான பேச்சு மற்றும் நம்பிக்கை அளிக்கும் பாணி பார்ப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியது என்றும் அவரை கொண்டாடுகின்றனர்.

ஒரு முறை ராஸ், வண்ண குறைபாடு கொண்ட ஒருவருக்காக அவரால் பார்க்க கூடிய கிரே வண்ணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதன் பல்வேறு வேற்பாட்டை பயன்படுத்திய அழகிய ஓவியம் ஒன்றை வரைந்து காட்டியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.அவர் மக்களின் ஓவியர்.

அதனால் தான் டிவிட்ச் கிரியேட்டிவில் அவரை பார்த்து ரசித்திருப்பதுடன் ஒவ்வொரு பகுதி (ஓவியம்) முடிந்ததும் குட்கேம் என கருத்து சொல்லி மகிழ்ந்துள்ளனர்.வீடியோகேம் உலகில் மிகப்பெரிய பாராட்டுச்சொல் இது.
பல பயனாளிகள் ராஸ் ஓவியம் வரைவது மூலம் கொண்டு வந்த உற்சாகம்,நம்பிக்கை ஆகியவற்றையும் அடையாளம் கண்டு பாராட்டியிருக்கின்றனர்.

தொலைக்காட்சி யுகத்தில் கோலோச்சிய பாப் ராஸ் இணைய யுகத்தில் மறு அவதாரம் எடுத்திருப்பது படைப்பாற்றல் காலத்தால் அழியாதது என்பதை உணர்த்துகிறது.
டிவிட்சி கிரியேட்டிவில் நேரடியாக பார்க்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.ராஸின் நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடியூப்பில் காணக்கிடைக்கின்றன.அவருக்கான இணையதளம்,டிவிட்டர் பக்கம் எல்லாமும் இருக்கிறது.

டிவிட்ச் கிரியேட்டிவ் இணையதளம்;http://www.twitch.tv/bobross

பாப் ராஸ் யூடியூப் சேனல்: https://www.youtube.com/user/BobRossInc

——–
நன்றி;தமிழ் இந்துவில் சில வாரங்களுக்கு முன் எழுதியது.

f1

பேஸ்புக் அடிமைகளா நாம்?


உழைப்பு யாருது, செல்வம் யாருது …
என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி.
இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து எழுதப்பட்டவை.
பேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம்’ என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும் போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது ,செல்வம் யாருடையது ? என கேட்டு இந்த பத்தியை எழுதியிருக்கிறார்.
ஹபிங்டன் போஸ்ட் இணைய இதழில் பேஸ்புக்கை தொழிற்சங்கமயமாக்குவோம் (Let’s Unionize Facebook) எனும் தலைப்பில் எழுதியுள்ள இந்த பத்தியில், அவர் நாமெல்லாம் பேஸ்புக் அடிமைகளா? என்று கேள்வி எழுப்புகிறார். பேஸ்புக்கிற்கு மட்டும் அல்ல, டிவிட்டர் அடிமைகள், இன்ஸ்டாகிராம் அடிமைகள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இணைய சேவைகளுக்காக நாம் ஓயாமல் உள்ளடக்கத்தை உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.
இந்த கருத்துக்கு அவர் வந்து நிற்கும் விதம் தான் கவனத்திற்கு உரியது. வரலாற்றின் இடைப்பட்ட காலமான 15 ம் நூற்றாண்டில் நிலமே பெரும் செல்வமாக கருதப்பட்டதாகவும், பெரும் நிலப்பரப்பை கொண்ட பிரபுக்களிடம் பலரும் அடிமைகளாக வேலை பார்த்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.

சைபர்வெளி அடிமைகள்
காலம் மாறியிருக்கிறதே தவிர வரலாறு மாறவில்லை , இன்று நிலம் என்பது சைபர்வெளியாகி இருக்கிறது, அதில் நாமெல்லாம் அடிமைகளாக இருக்கிறோம், அமேசானின் ஜெப் பெசோசும், பேஸ்புக்கின் ஜக்கர்பெர்கும் இணைய பிரபுக்களாக நமது உள்ளடக்கத்தை கொண்டு செல்வம் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
பேஸ்புக்கின் 100 சதவீத உள்ளடக்கம் நம்முடையது அல்லவா என கேட்கும், இதை இலவசமாக செய்து கொண்டிருக்கும் முட்டாள்கள் அல்லவா நாம் என்றும் கேட்கிறார். இதை அவர் சொல்லும் விதம் இன்னும் துடிப்பாக இருக்கிறது. தினமும் நாம் எந்த ஊதியமும் பெறாமல் , ஜக்கர்பர்கின் இணைய நிலத்தில் குடியிருக்கும் உரிமைக்காக அவருக்காக உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.ஜக்கர்பர்கின் 33 பில்லியன் டாலர் செல்வமும் நாம் சேர்த்து கொடுத்தது என்கிறார்.
இதன் பிறகு அவர் சொல்லும் விஷயம் என்ன தெரியும? 20 ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தங்களிடம் உழைப்பு எனும் சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டு அதன் ஆற்றலை உணர்த்த தொழிற்சங்கம் அமைத்துக்கொண்டது போல, பேஸ்புக் பயனாளிகள் தொழிற்சங்கம் அமைக்கலாகாதா? என்றும் ரோசன்பிளம்’ கேள்வி எழுப்புகிறார்.

f2பேஸ்புக்கிற்காக உழைப்பு!

நிச்சயம் புதுவிதமான சிந்தனை தான். அதற்காக பேஸ்புக்கிற்கு எதிராக நாம் கொடி பிடித்து போராட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் நிச்சயம் நமது பேஸ்புக பழக்கம் பற்றி யோசித்தாக வேண்டும். பேஸ்புக்கை இலவச சேவையாக கருதி மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது உள்ளடக்கத்தை வைத்து பேஸ்புக் விளம்பர வருவாயை அள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். நம்மை அறியாமல் நாம் பேஸ்புக் போன்ற தளங்களுக்காக அடிமைகள் போல உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
இந்த கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சமூக வலைப்பின்னலாக அது ஏற்படுத்தி தரும் பலன்களை வைத்து நீங்கள் வாதிடலாம். உண்மை தான், பேஸ்புக் இணைய யுகத்தில் நட்புக்கும் ,தகவல் பரிமாற்றத்திற்கும் இன்னும் பல பயன்களுக்கும் வித்திட்டிருக்கிறது. மறுப்பதற்கில்லை. பல நேரங்களில் பேஸ்புக் போன்ற சேவைகள் சமூக ஊடகங்களாக செயல்படுகின்றன. எகிப்திலும் வளைகுடா நாடுகளிலும் மலர்ந்த சமூக புரட்சியில் பேஸ்புக்கிற்கும் அதன் சமூக சகாக்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. சமூக ஊடகங்களில் பயன்பாட்டிற்கு இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

பேஸ்புக் பயன்பாடு
பிரச்சனை பேஸ்புக்கை நாம் எப்படி பயன்படுத்த பழகியிருக்கிறோம் என்பது தான். சமூக வலைப்பின்னலாக பேஸ்புக்கின் ஆதார பலம் நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்கள் ,அவர்களின் நண்பர்கள் என நட்பு வளையத்தை விரியச்செய்வது தான். இந்த நட்பு வளையத்தில் எதை பகிர்ந்து கொள்கிறோம் என்பதும் , எதற்காக பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது இல்லையா?
எல்லாவற்றையும் நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கிறது. வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படங்களையும், சுற்றுலா பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் எந்த யோசனையும் இல்லாமல் பேஸ்புக்கில் பகிர்கிறோம். அதனால் என்ன வந்துவிடப்போகிறது?
ஆனால், உங்கள் தனிப்பட்ட பயணம் பற்றிய புகைப்படம் , நண்பர்களின் நண்பர்களுக்கு எந்த விதத்தில் அவசியமானது யோசித்துப்பாருங்கள்? உங்கள் மகனுடனோ , மகளுடனோ இருக்கும் புகைப்படம் நிலைத்தகவலாக வெளியிடுவது எதற்காக? அவற்றுக்கு காரணம் இல்லாமல் கிடைக்கும் லைக்குகளை விட்டுத்தள்ளுங்கள்.
புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பானது தான். வீட்டிற்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடமு புகைப்பட ஆல்பத்தை காண்பித்து மகிழ்வது வழக்கமானது தான். ஆனால் நன்றாக் யோசித்துப்பாருங்கள், எல்லோரிடமும் நீங்கள் இவ்வாறு செய்வதில்லை. அதற்கு ஒரு பரஸ்பர நெருக்கம் தேவை. வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் நீங்கள் புகைப்பட ஆல்பத்தை காட்ட விரும்ப மாட்டீர்கள். அதற்கான நெருக்கமும் இணக்கமும் இல்லாத நிலையில் அந்த நண்பரும் கூட அதை விரும்பமாட்டார். இதெல்லாம் எழுதப்படாத சமூக விதிகள். இயல்பாக எல்லோரும் அனுசரித்து நடப்பவை.
f3
தனியுரிமை கவலை
ஆனால் பேஸ்புக்கில் சொந்த ஊர் பயண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எந்தவகையான வெளிப்பாடு? ஊர் மாறியிருக்கிறது, விவசாயம் மங்கிவிட்டது போன்ற பொதுவான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். கிராமத்து மண்வாசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட குடும்ப காட்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்களை பகிர்வது எதனால்? உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களும் குடும்பத்தின் புகைப்படங்களும் தேவையில்லாமல் இணையத்தில் எல்லா இடங்களிலும் இறைந்து கிடப்பது நல்லதல்ல.
வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் ,விண்ணப்பித்தவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க சமூக வலைப்பின்னல் பக்கங்களை அலசிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத்தெரியுமா? விண்ணப்பத்தில் குறிப்பிடும் தகவல்களை எல்லாம் விட ஒருவரைப்பற்றி சித்திரத்தை அவரது சமூக வலைப்பின்னல் பதிவுகள் உணர்த்தி விடுவதாக கருதப்படுவதும் உங்களுக்குத்தெரியுமா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பேஸ்புக் பதிவுகளை ஆதாரமாக கொண்டு செயல்படுவதாக கூறப்படுவதை அறிந்திருக்கிறீர்களா?
நேற்று நீங்கள் பேஸ்புக்கில் எந்த சிந்தனையும் இல்லாமல் பகிர்ந்து கொண்ட தகவலும் புகைப்படமும் என்றேனும் ஒரு நாள் உங்களுக்கு வில்லங்கமாக முடியும் வாய்ப்பு இருக்கிறது தெரியுமா?
ஜார்ஜ் ஆர்வெல் சித்தரித்த கண்காணிப்பு யுகம் போல நாளை யாரேனும் , பேஸ்புக்கில் நீங்கள் விரோதமான கருத்தை சொல்லியிருந்தீர்களே என்று கேட்க்க்கூடிய நிலை வரலாம். இது கற்பனை தான். ஆனால் நிகழாது என்று சொல்வதற்கில்லை.

என்ன செய்யலாம் ?

அதற்காக பேஸ்புக் பயன்பாடே தவறு என்று பொருள் அல்ல. அது உங்கள் விருப்பம்; உரிமையும் கூட. பேஸ்புக்கை பயன்படுத்துங்கள், ஆனால் எதற்காக பயன்படுத்துகிறோம் என யோசிக்கவும் செய்யுங்கள். லைக்குகளுக்கும் ,கமெண்டுக்கும் ஆசைபட்டு நீங்கள் பொதுவில் பகிர விரும்பாத எதையும் இணையத்தில் ஆவணப்படுத்தாதீர்கள். இணையத்தில் வெளியிட்ட எதையும் நீங்கள் திரும்ப பெற முடியாது? உங்கள் பக்கத்தில் டெலிட் செய்தாலும் அதற்கு முன்பாகவே அதன் நகல் இணையத்தில் பல இடங்களில் பதிவாகி இருக்கும்.
எனவே , எதையும் பகிரும் முன் , இது சமூக வெளிக்கு ஏற்றதா என யோசியுங்கள்.
கருத்துக்கள் என்றால் வலைப்பதிவாக எழுத முடியுமா என முயன்றுப்பாருங்கள். புகைப்படங்கள் என்றால் இமெயில் மூலம் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா என யோசியுங்கள்.
மறக்காமல் பேஸ்புக்கின் தனியுரிமை அமைப்பிற்கு (பிரைவசி செட்டிங்) சென்று பாருங்கள். எந்த வகை தகவல்கள் யாருக்கானவை என தீர்மானியுங்கள். தனியுரிமையில் இறுதி அதிகாரம் பேஸ்புக்கிடமே இருக்கிறது என்றாலும் கொடுக்கப்பட்டுள்ள உரிமையையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இது பேஸ்புக்கை சரியாக பயன்படுத்த வைக்கும்.

விக்கி வாழ்க!
வலைப்பதிவு யுகம் முடிந்து பேஸ்புக் யுகம் துவங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், பலரும் வலைப்பதிவுக்கு முழுக்கு போட்டு பேஸ்புக் படைப்பாளிகளாகில் வருவதாக சொல்லப்படும் கட்டத்தில் இந்த எதிர்கருத்து ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் இணையத்தில் தனியுரிமையின் அவசியத்தையும் அதன் அலட்சியத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மெல்ல உணர்த்துவங்கியிருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.
எல்லாவற்றையும் பகிரும் போக்கு பற்றிய கேள்விகளை எழுப்புவது தான் இந்த பதிவுன் நோக்கம்.
இன்னொரு முக்கிய விஷயம் சமூக ஊடக் பயன்பாட்டில் ஒருவர் தனக்கான சரியான வலைப்பின்னலை கண்டுகொள்வதும் முக்கியம். கல்லூரி மாணவர்களுக்கும், பணியிட்த்தில் இருப்பவர்களுக்கும் பேஸ்புக் பயன்பாடு கேளிக்கையை தரலாம். ஆனால் தொழில்முறை நபர்களுக்கான லிங்க்டுஇன் சமூக வலைப்பின்னல் தங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருக்காதா? என யோசிக்க வேண்டும்.
இவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட சமூக வலைப்பின்னல் ரகத்தை சேர்ந்தது தான் தெரியுமா? ஒயாமல் நிலைத்தகவல் பதிவு செய்வதற்கு நடுவே விக்கிபீடியாவிலும் நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளாலாமே!

பேஸ்புக் தொடர்பான மைக்கேல் ரோசன்பிளம்’ கட்டுரை: http://www.huffingtonpost.com/michael-rosenblum/lets-unionize-facebook_b_7526822.html?ir=India&adsSiteOverride=in

குறிப்பு; பேஸ்புக் தொடர்பான சிந்தனைகளில் ஓபன் சோர்ஸ் முன்னோடியான ரிச்சர்ட் ஸ்டால்மன் கருத்துக்கள் முக்கியமானவை. பேஸ்புக் பயன்பாட்டிற்கு எதிராக அவர் எழுதிய கட்டுரை எழுப்பும் கேள்விகள் சிந்தனைக்குறியவை; https://stallman.org/facebook.html

——–

நன்றி; தினமணி.காமில் நெட்டும் நடப்பும் பகுதியில் எழுதியது

ஸ்மார்ட்கீ வந்தாச்சு

ஆண்ட்ராய்டு ஆதிக்கம்

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில் ஆய்வு அமைப்பான ஸ்ட்ராடஜி அனல்டிக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, 2014 ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தியான ஸ்மார்ட்போன்களில் 84 சதவீதம் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. ஆனால் முந்தைய காலாண்டை விட இது நூலிழை அதாவது 1 சதவீதம் குறைவு என்றாலும் ஆண்ட்ரய்டு முன்னிலை இடத்தில் நீடிக்கிறது.
இரண்டாவது இடத்தில் ஆப்பிளின் ஐஓஎஸ் (12 சதவீதம் ) இருக்கிறது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன்கள் 3 சதவீத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது. பிளாக்பெரிக்கு ஒரு சதவீதம். ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் அதில் சாம்சங் ஸ்மார்ட்போனின் பங்கு 35 சதவீத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்திருப்பது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் போட்டியே இதற்கு காரணம்.
ஆனால் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தினாலும் வளர்ச்சி கோட்டை பொருத்தவரை அது உச்சத்தை தொட்டுவிட்டதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே சந்தை பங்கை இதற்கு மேல் அதிகரிக்க முடியாது, தக்க வைத்துக்கொண்டாலே பெரிய விஷயமாக இருக்கும் என்கின்றனர்.
இதே போல , ஸ்மார்ட்போன் சந்தையில் லெனோவோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சீனாவிடன் லெனோவோ , மோட்டாரோலா மொபிலிட்டையை வாங்கியதை அடுத்து இந்த கூட்டணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் ஜியோமி மூன்றாவது இடத்துக்கு வந்த நிலையில் இந்த கூட்டு அந்நிறுவனத்தை 4 வது இடத்துக்கு தள்ளியுள்ளது. ஐ.டீசி (IDC) ஆய்வு தெரிப்விக்கும் தகவல் இது.
——————

மைக்ரோசாப்ட் லூமியா முதல் பார்வை

லூமியா போன்களில் நோக்கியா பெயருக்கு பதிலாக மைக்ரோசாப்ட் பெயரே முன்னிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. சரி , மைக்ரோசாப்ட் பெயரில் வெளியாகும் லூமியா போன் எப்படி இருக்கும் என அறிவதில் ஆர்வம் இருக்கிறதா? சீனாவின் வெய்போ இணையதளம் இதற்கான பதிலை அளித்துள்ளது. இந்த தளத்தில் மைக்ரோசாப்ட் லூமியாவின் போன் எனும் தகவலுடன் புதிய போனின் புகைப்படம் கசிந்துள்ளது. சீன அரசிடம் சான்றிதழ் பெற்ற RM-1090 போன்களில் இவை இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூமியா 530 போலவே காட்சி அளிக்கும் இந்த போனின் மேல்பகுதியில் நோக்கியா லோலோவுக்கு பதில் மைக்ரோசாப்ட் பெயர் இடம் பெற்றுள்ளது. பின் பக்கத்திலும் மைக்ரோசாப்டின் பெயர் தான்.
9.32 மீமீ அகலம் , இரட்டை சிம் வசதி,1,905mAh பேட்டரி, 3 ஜி வசதி ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது.
வரட்டும் பார்க்கலாம்.

——-

அமேசானின் அதிரடி

மின்வணிக ஜாம்பவானான அமேசான் அமெரிக்க சந்தையில் அமேசான் பயர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததும் அது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததும் பழைய செய்தி. 83 மில்லியன் டாலர் மதிப்பிலான போன்கள் விற்காமல் தேங்கி இருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த நிலையில் அமேசான், ஸ்மார்ட்போனை இத்தோடு விட்டுவிடும் என்று யாரேனும் நினைத்தால் அது தவறாக தான் இருக்கும். ஏனெனில் அமேசான் தொடர்ந்து ஸ்மார்ட்போன் திட்டத்தில் ஈடுபட்டு எதிர்காலத்தில் அடுத்த போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பார்டியூன் பத்திரிகை தெரிவிக்கிறது.
அமேசான் பயன் போன் விஷயத்தில் விலையில் தவறு செய்த்தாகவும் அதுவே மோசமான வரவேற்பிற்கு காரணம் என அமேசான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இபுக் ரீடர் சாதனமான கிண்டில் விஷயத்தில் இப்படி தான் ஆரம்பத்தில் நடந்தது ஆனால், தவறுகள் சர் செய்யப்பட்ட பின் கிண்டில் கலக்கவில்லையா? என அமேசான் நினைக்கிறது. ஆக, அமேசான் ஸ்மார்ட்போன் சந்தையில் வைத்த கண்ணை எடுக்காமலே இருக்கிறது.

———–

ஆண்ட்ரய்டு வியரில் பிளிப்கார்ட்

ஸ்மார்ட்போன் திரை போலவே ஸ்மார்ட்வாட்ச்க்கான திரையும் முக்கியத்துவம் பெறலாம். ஆக, எனவே நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான செயலிகளிலும் (ஆப்) கவனம் செலுத்தியாக வேண்டும். இதை பிளிப்கார்ட் உணர்ந்திருப்பதாக தெரிகிறது. அதன் அடையாளம் தான், ஆண்ட்ராய்டு வியருக்கான பிளிப்கார்ட்டின் செயலி.
இந்தியாவின் முன்னணி மின்வணிக தளமான பிளிப்கார்ட், ஆண்ட்ராய்ட் வியர் ஸ்டோருக்கான முதல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ 360 போன்ற பிளிப்கார்ட்டில் விற்பனையாகும் ஸ்மார்ட்வாட்சிகளில் இந்த செயலி முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ் லிஸ்ட் மற்றும் நோட்டிபிகேஷன ஆகிய வசதிகள் இந்த செயலியில் உண்டு. எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் செயலியில் உள்ள எல்லா வசதிகளும் இதிலும் இடம்பெறலாம்.
ஸ்மார்ட்வாட்சி வைத்திருப்பவர்கள் , ஆண்ட்ராய்டு சாதனத்தில் பிளிப்கார்ட் செயலியை அப்டேட் செய்தால் போதுமானதாம்.
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய தகவல் அதன் அறிமுகத்திற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கம் என்று எதிர்பார்கக்ப்பட்டதற்கு மாறாக 2015 வசந்தத்தில் தான் ஆப்பிள் வாட்ச் சந்தைக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.

————-

புதிய அறிமுகங்கள்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அறிமுகங்கள் தொடர்கின்றன. தொடர இருக்கின்றன. தைவானை சேர்ந்த எச்.டி.சி ஏற்கனவே இந்த ஆண்டு புதிய அறிமுகங்களை செய்துள்ள நிலையில் மேலும் இரண்டு அறிமுகங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது. எச்டிசி டிசைர் 620 எனும் பெயரில் இரண்டு வடிவங்களில் இந்த போன் வரலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே இந்திய நிறுவனமான ஐபால் 3 புதிய ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் ஆன்டி வரிசையில் அறிமுகமாகும் இந்த போன்கள் ரூ,3,499, ரூ,4,699 மற்றும் ரூ. 6499 ஆகிய விலை கொண்டிருக்கும் என நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் எப்போது கிடைக்கத்துவங்கும் எனும் தகவல் இல்லை. இதனிடையே கூகிள் நெக்சஸ் சாதனம் விரைவில் எனும் அறிவிப்புடன் பிளிப்கார்ட் தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ (Oppo ) நிறுவனம் தனது என்3 மற்றும் ஆர் 5 போன்களை டிசம்பர் முதல் விற்பனைக்கு கொண்டு வரலாம் என சொல்லப்படுகிறது. ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையை முக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. 4.85 மீமீ அகலம் கொண்ட ஒப்போ ஆர் 5 உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் சொல்கிறது.

———–

ஸ்மார்ட்கீ வந்தாச்சு

ஸ்மார்ட்போனிலேயே பணம் செலுத்தும் வசதி வந்தாச்சு. இனி ஹோட்டல் அறைகளுக்கான சாவியாகவும் ஸ்மார்ட்போனே பயன்படலாம். அமெரிக்காவின் ஸ்டார்வுட் ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டல்களில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹோட்டல் அறையில் உள்ள பூட்டுகள் பளுடூத் வசதி கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட்போன் அல்லது ஆன்லைனில் ரூம் புக் செய்யும் போது அறை எண் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆக, ஹோட்டலுக்கு வந்தால் வரவேற்பறையில் காத்திருக்காமல் நேராக ரூமுக்கு சென்று ஸ்மார்ட்போனை காட்டி கதை திறக்கச்செய்யலாம்.
மற்ற ஹோட்டல்களும் இதே போன்ற திட்டத்தை வைத்துள்ளன. இந்த வசதி எளிதானது என்றாலும் பாதுகாப்பு பற்றிய அச்சங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஹோட்டல் சாவியை மறந்து வைத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது. ஸ்மார்ட்போன் போல ஸ்மார்ட்வாட்சிலும் இந்த வசதி வரலாம் என்கின்றனர். ஹோட்டல் மட்டுமா வீடுகளுக்கும் ஸ்மார்ட் கீ வரப்போகிறது. எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்.

————
தமிழ் இந்துவுக்காக எழுதியது. நன்றி; தமிழ் இந்து