Tag Archives: blog

தகவல் திங்கள்; இணைய இதழ் எனும் பழைய அற்புதம்!

683
ஜெஸா கிரிஸ்பின், இணையத்தில் மிகப்பெரிய சாதனையாளர் எல்லாம் கிடையாது- அதனால் தான் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதாவது அவர் இணையத்தில் பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை; ஆனால் எல்லோரும் அறிந்தவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவில்லை. முக்கியமாக எந்த சமரசங்களிலும் ஈடுபடாமல், கிளிக்குகளை அள்ளுவதற்கான வலை விரிப்பு உத்திகளில் எல்லாம் ஈடுபடாமல் தனக்கும்,தன்னை போன்றவர்களுக்கும் ஈடுபாடு மிக்க கதை,கவிதை,கட்டுரைகள் தேடி பகிர்ந்து கொண்டு வந்தார். இதற்கான வாகனமாக திகழ்ந்த புக்ஸ்லட் இணைய இதழை மூடப்போவதாக அவர் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

யாரிந்த கிரிஸ்பின்

உண்மையில் இந்த அறிவிப்பு மூலமே ஜெஸா கிரிஸ்பினையும், அவரது இணைய இதழான புக்ஸ்லட்டையும் அறிந்து கொண்டுள்ளேன். இருந்தும் என் இணைய அறியாமையை நொந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன எனில், கிரிஸ்பின், 14 ஆண்டுகளாக நடத்தி வந்த இணைய இதழை நிறுத்த முடிவு செய்திருக்கிறார் என்பது தான். அதைவிட முக்கியமான விஷயம் இந்த முடிவை முன்வைத்து அவர் இணையம் தொடர்பாக முன்வைத்திருக்கும் சில கருத்துக்கள் தான். ஒரு சுயேட்சை இலக்கிய ஆர்வலராக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையதத்தின் சமகால போக்கை லேசாக உலுக்கியெடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இணைய இதழ்கள் செழித்து விளங்கிய இணைய பொற்காலத்தையும் திரும்பி பார்த்து ஏங்க வைத்திருக்கிறது.

இந்த இடத்தில் இணைய இதழ் எனும் சொல் உண்டாக்க கூடிய கிளர்ச்சியை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறேன். இணையம் மூலம் நடத்தப்படும் பத்திரிகைகளே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை வெப்சைன் என அழைக்கப்படுகின்றன. வெப்சைன் என்றால் ஆர்வம் உள்ள எவரும் நடத்தக்கூடிய இதழ் என்று பொருள். அதற்கு முதலீடு வேண்டாம். பெரும் வாசக கூட்டம் வேண்டாம். வருவாயும் கொட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. இலக்கிய மகுடங்களும், விமர்சன சான்றிதழ்களும் தேவையில்லை. ஆர்வம் உள்ள ஒருவர் அந்த ஆர்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்தாலே போதுமானது. அந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு படித்து பாராட்டக்கூடிய வாசகர்களை தேடிக்கொள்ளலாம்.
ஒரு பத்திரிகை நடத்தும் ஆர்வத்தை இணையம் நிறைவேற்றி தந்தது தான் இணைய இதழ்களின் சிறப்பாக இருந்தது.

புக்ஸ்லட் துவக்கம்
இப்படி இணையத்தின் ஆற்றலை பயன்படுத்திக்கொண்டு 2002 ல் கிரிஸ்பின் துவக்கிய இணைய இலக்கிய இதழ் தான் புக்ஸ்லட். அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் பிறந்து வளர்ந்து ஆஸ்டின் நகரில் வசித்து வந்த கிரிஸ்பினுக்கு அப்போது 23 வயது தான். கல்லூரி படிப்பை கூட முடித்திராத கிரிஸ்பின் புத்தகங்களை தேடித்தேடி படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். அவர் பார்த்து வந்த வேலையில் கைநிறைய நேரம் இருக்கவே, நேரத்தை கொல்லும் சோதனை முயற்சியாக புத்தக விமர்சனங்களை தனது வலப்பதிவில் எழுதத்துவங்கினார். அதை பலரும் படித்து ஊக்குவிக்கவே கூடுதல் உற்சாகத்துடன் அதிகமாக எழுதத்துவங்கினார்.

அதன் பிறகு பணி மாற வேண்டிய நிலை ஏற்பட்ட போது, புக்ஸ்லட்டையே முழு நேர வேலையாக ஏற்றுக்கொண்டு இலக்கிய இதழாக நடத்தினார். அந்த ஆண்டே டைம் பத்திரிகை 50 சிறந்த இணையதளங்களில் ஒன்றாக அவரது இணைய இதழை அடையாளம் காட்டியது.

அங்கீகாரமும் பாராட்டும்

அதன் பிறகு அவர் தொடர்ந்து அந்த இதழை உற்சாகமாக நடத்தி வந்தார். புத்தக விமர்சனம், இலக்கிய கட்டுரைகள், எழுத்தாளர்கள் நேர்கானல்கள் என ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார். இதனிடையே இலக்கிய வலைப்பதிவாளராக அங்கீகரிக்கப்பட்டு முன்னணி நாளிதழ்களில் புத்தக விமர்சனம் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. பதிப்புலகம், பத்திரிகை உலகம் இரண்டிலுமே எந்த அனுபவம் இல்லாதவர் இலக்கிய உலகில் தனக்கான சிறிய இடத்தை தேடிக்கொண்டார். அவர் எழுதிய கட்டுரைகள் புத்தக வடிவிலும் வெளியாகின.
இதை எல்லாம் விட முக்கியமான விஷயம் புக்ஸ்லட் இணைய இதழை கிரிஸ்பின் நடத்திய விதம் தான். எல்லோரும் பெஸ்ட் செல்லர் பின்னர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அவர் வெகுஜன சந்தை பற்றி கவலைப்படாமல் பரவலாக கவனிக்கப்படாத படைப்புகளை அடையாளம் காட்டி வந்தார். அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களை விரிவாக பேட்டி கண்டு நீளமான நேர்கானல்களை வெளியிட்டு வந்தார். வெளிநாட்டு படைப்பாளர்கள் எழுத்துக்களை அறிமுகம் செய்தார். தொலைதூர நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்களை எல்லாம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த வகையில் உண்மையான இலக்கிய இதழாக புக்ஸ்லட் செயல்பட்டு வந்தது. ஆக, இணையம் மூலம் சாதித்த சாமானியராகவே கிரிஸ்பின் இருக்கிறார்.

மூடுவிழா ஏன்?

இந்நிலையில் தான் அவர் புக்ஸ்லட்டை தொடர்ந்து நடத்தப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். புக்ஸ்லட்டின் கடைசி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவை எடுத்தது பற்றி அவர் கார்டியன் நாளிதழில் அருமையான பத்தி ஒன்றை எழுதியிருக்கிறார். இணைய சுதந்திரம் செழித்த காலத்தில் புக்ஸ்லட் மலர்ந்தது, இன்று இணையமே அதை கொன்றுவிட்டது என்பது போன்ற தலைப்பில் அமைந்துள்ள அந்த கட்டுரையின் மைய விஷயம், இணையம் மாறிவிட்டது, இப்போது இணையத்தில் எல்லோரும் கிளிக்குள் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதை என்னால் செய்ய முடியாது என்பது தான்.

இணையம் மூலம் கருத்துக்களை பகிரும் சுதந்திரம் மட்டுமே பொருட்படுத்தக்கூடிய விஷயமாக இருந்த நிலை மாறி இப்போது இணையத்தில் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு விளம்பர நிறுவனங்களை கவர வேண்டும், அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கிளிக்குகளை காட்ட வேண்டிய நிலை இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். ஆனால் கிளிக்குகளை பெற வேண்டும் என்றால், எதை விரும்பி படிக்கின்றனரோ அதை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளவர், இந்த நிலையில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார்.

ஒரு ஆர்வலராக மட்டும் இருக்கும் போது விரும்பியதை எல்லாம் எழுத முடிகிறது, 20 பேர் மட்டும் கேள்விபட்டுள்ள எழுத்தாளரின் நீளமான பேட்டியை வெளியிட முடிகிறது. எந்த தடையும் ,வரம்பும் இல்லாமல் செயல்பட முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளவர், கிளிக்களுக்கு தூண்டில் போடும் இடமாக இணையம் மாறிவிட்ட காலத்தில் இது சாத்தியமாகவில்லை என கூறியிருக்கிறார்.

இணைய கால விமர்சனம்
அவருடைய கட்டுரை, புலம்பலாகவோ, முறையீடாகவோ அமையாமல் இந்த காலத்தின் இணைய போக்கை படம் பிடித்து காட்டி விமர்சிக்கும் வகையிலேயே இருக்கிறது.கவனம் பெறுவதையும், லைக்குகளை அள்ளுவதையும், வைரலாக பரவுவதையுமே முக்கியமாக கருதும் இணையவாசிகளை அவர் ஐய்யோ பாவம் என பார்ர்த்து பரிதாப்படுவதாகவே தோன்றுகிறது.

அந்த கால இணையம் காணமால் போன குறைய நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளவர், கடந்த காலத்தில் மூழ்கியிருக்க விரும்பாவிட்டாலும், இணையத்தில் வருவாய் ஈட்டுவதற்காக மட்டுமே தன்னால் அதன் விதிகளுக்கு ஏற்ப வளைய முடியாது என்பது போல குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த ஒரு இதழ் மூடப்படுவது கொஞ்சம் வருத்தமானது தான். ஆனால் புக்ஸ்லட் மூடப்பட்டது மட்டும் வருத்தம் தரவில்லை, புக்ஸ்லட் போன்ற சுயேட்சையான இணைய இதழ்கள் மூடப்படும் நிலையை இன்றைய இணையம் ஏற்படுத்தியிருப்பது தான் வருத்தமாக இருக்கிறது.
ஏதாவது ஒரு கட்டத்தில் இதற்கு இணைய வாசகர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் கிரிஸ்பின்.
இணையம் மாறிவிட்டது. லாப கணக்குகள் பற்றிய கவலை இல்லாமல் ஈடுபாட்டின் அடிப்படையில் மட்டுமே இலக்கிய ஆர்வலர்கள் இயங்கிய காலம் திரும்பி வருமா என்று தெரியவில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் சரியாக இருக்குமா? என்று தெரியவில்லை. இணையத்தின் பரிணாம வளர்ச்சி இது. நாம் பார்த்து பழகிய இணையம் இன்னும் என்ன என்னவோ மாற்றங்களை வளர்ச்சியாக சந்திக்க உள்ளது.

அதற்காக இணையத்தின் ஆதார தருணங்களை திரும்பி பார்க்காமல் இருந்துவிட முடியுமா என்ன? அந்த வகையில் இணைய இதழ்களின் பொற்காலம் பற்றி அசைபோட வைத்து நம் கால இணையம் பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார் கிரிஸ்பின்.

தமிழ் இணைய இதழ்கள்
இந்த கட்டுரையை முன் வைத்து தமிழ் இணைய இதழ்களை நினைத்து பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும்.
இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் மற்றும் பிர இதழ் கட்டுரைகளை வெளியிட்டு வரும் கீற்று, ஆழமான அறிவியல் கட்டுரைகள் வெளியிட்டு வரும் சொல்வனம், அருமையான இலக்கிய கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிட்டு வரும் மலைகள் ஆகிய முயற்சிகள் பளிச்சென நினைவுக்கு வருகின்றன.
கிரிஸ்பின் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் சூழலில் கிளிக்குகள் பின்னே சென்று, இணையம் தந்த சுதந்திரத்தை இழக்க விரும்பாதது பற்றி குறிப்பிட்டு ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால் இணையம் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பு அதிகம் இல்லாத தமிழ் இணைய சூழலில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த இணைய இதழ்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அந்த வகையில் வருவாய் வாய்ப்பில்லாத நிலையிலும் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் வலைப்பதிவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன்.

புகஸ்லட் இணைய இதழ்;http://www.bookslut.com/

ஜெஸா கிரிஸ்பின் எழுதியுள்ள கட்டுரை: http://www.theguardian.com/books/booksblog/2016/may/16/bookslut-was-born-in-an-era-of-internet-freedom-todays-web-has-killed-it

———

பிரதிலிபியில் பகிர்ந்து கொண்டது:

தகவல் திங்கள் எனும் பெயரில் தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதி வந்த இணையம் தொடர்பான பத்தியை இனி பிரதிலிபியில் தொடர உள்ளேன். தற்பதிப்பு சேவைக்கான தளமாக விளங்கும் பிரதிலிபியில் பிரத்யேக ஆக்கம் எழுதலாம் என யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், தகவல் திங்கள் பத்தியை இதில் தொடர்கிறேன். சாமானியர்கள் இணையத்தில் தங்களை படைப்புகளை வெளியிடும் ஆற்றல் மற்றும் எளிதான பதிப்பிக்கும் சாத்தியத்தை உணர்ந்த ஆரம்ப கால இணையத்தின் அடையாளமாக திகழும், ’இணைய இதழ்கள்’ பற்றிய கருத்துக்களை அசைபோடும் வகையில் முதல் பத்தி அமைந்த்து தற்செயலானது என்றாலும் பொருத்தமாகவே இருக்கிறது——

இமெயில் பிரச்சனைக்கு தீர்வு

http _www.five.sentenc.esஉங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது.

இமெயில் பிரச்சனைக்கு இது அழகான தீர்வு. பதில்களை நீட்டி முழக்காமல் 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்வது நல்ல யோசனை தான். ஆனால் இந்த இணையதளத்தில் 5 வரிகளுக்குள் இமெயிலை அனுப்ப முடியாது. இந்த தளத்திற்குள் நுழைந்தால் , பிரச்சனை மற்றும் தீர்வு எனும் தலைப்புகளில் இமெயில் சுமையின் பாதுப்பு பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் அழகாக குறிபிடப்பட்டுள்ளது.
பிரச்ச்னை என்ன என்றால் இமெயிலுக்கு பதில் அளிக்க அதிக நேரம் தேவைப்படுவதால் புதிய இம்யெல்கள் குவிந்து விடுகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க முற்பட்டால் இன்னும் தேக்கம் ஏற்படும்.
இதற்கான தீர்வு தான் எந்த மெயிலையும் குறுஞ்செய்தி போல கருதி 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்பது. எழுத்துக்களை எண்ணிக்கொணிடிருப்பதை விட வரிகளை எண்ணுவது சுலபம் இல்லையா? இது தான் இந்த தளம் முன் வைக்கும் தீர்வு.

இருப்பினும் இந்த வழியை நீங்கள் இந்த தளத்தில் இருந்து கடைபிடிக்க முடியாது. நீங்கள் இமெயில் அனுப்பும் போது இதை நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டும். இதை வலியுறுத்துவது மட்டும் தான் இந்த தளத்தின் கடமை.

ஒரு இணைய பொது சேவை போல இருந்தாலும் இது உண்மையில் ஒரு தனிநபரின் கொள்கை விளக்க இணையதளம். மைக் டேவிட்சன் எனும் இணைய பிரமுகர் ஒருவர் தனது இமெயில் பிரச்சனைக்கு தீர்வாக எந்த இமெயிலுக்கான பதிலையும் 5 வரிகளில் முடித்துகொள்வது என தீர்மானித்தார். நல்ல முடிவு தான். ஆனால் சபதில் பெறுபவர்களும் 5 வரி மகத்துவத்தை புரிந்து கொள்வதற்கான இந்த கொள்கையை விளக்குவத்ற்காக அழகான இணையதளத்தை உருவாக்கினார். அந்த தளம் தான்; http://www.five.sentenc.es/. இந்த தளத்திற்கான இணையப்பை தனது இமெயில் கையெழுத்தில் இணைத்தார்.

இது தான் இந்த தளத்தின் பின்னே உள்ள சுவாரஸ்யமான கதை. மைக் 2007 ல் இந்த தளத்தை உருவாக்கினார். இன்னும் செல்லிபடியாக கூடியதாக தான் இந்த அறிவுரை இருக்கிறது. ( இதே போல 2 ,3,4 செண்டன்சஸ் என்றும் இணையதளம் அமைத்துள்ளார்).

மைக் எழுதிய மூல விளக்கம் இது. இமெயில் பதில் பற்றிய அவரது வாதம் பொருள் பொதிந்தது என இது புரிய வைக்கும்.; http://www.mikeindustries.com/blog/archive/2007/07/fight-email-overload-with-sentences


இணையதள முகவரி; http://www.five.sentenc.es/

——–

உண்மையில் சில வரிகள் மெயில் அனுப்ப விரும்பினால் அதற்கான வழியான இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம் என எழுதியிருந்தேன். ஆனால் அந்த ஷார்ட்மெயில் சேவையும் மூடப்பட்டு பாதை மாறிவிட்டது.எனவே நீங்களே சுருக்கமான இமெயில் அனுப்புவது தான் சிறந்த வழி.

சரி, இமெயிலில் உங்கள் அனுபவம் எப்படி ? நீங்கள் அனுப்பும் மெயிலின் சராசரி நீளம் என்ன/ உங்களுக்கு வரும் மெயிலின் சராசரி அளவு என்ன? பகிர்ந்து கொள்ளுக்களேன் ! பயனுள்ளதாக இருக்கும்.

யூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்

http _peggo.co_யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா?
ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம்.

டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும்.

வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்கோவிலேயே தேடல் வசதியும் இருக்கிறது. தேடப்படும் வீடியோவுக்கு இணையான தொடர்புடைய வீடியோக்களையும் பட்டியலாக பார்க்கலாம்.

இசைப்பிரியர்களுக்கு ஏற்ற அருமையான இணையதளம்; http://peggo.co/

————-
பி.கு; வலைப்பதிவு பயிற்சி பற்றிய அறிவிப்புக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. வலைப்பதிவு தொடர்பான கேள்விகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். பதிவர்கள் வெற்றி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியின் பிரதான நோக்கம் புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிப்பது. இதற்கு விதையிட்ட பல சம்பவங்களில் ஒன்று நான் இந்தியா டுடேவில் இருந்த போது நிகழ்ந்தது. அப்போது கோவையில் இருந்து வந்திருந்த வாசகர் ஒருவர் விவசாயம் சார்ந்த தனது கருத்துக்கள் மற்றும் ஆய்வுகளை வெளியிட முடியுமா? என எனது ஆசிரியரிடம் கேட்டுள்ளார். இதழின் வரம்பிற்குள் அதற்கான வாய்ப்பில்லை என்று குறியவர், நீங்கள் வலைப்பதிவு துவங்கி வெளியிடலாமே என்று யோசனை கூறியிருக்கிறார். கோவை பெரியவரோ, அப்படியா , வலைப்பதிவை நாமே துவங்கலாமா? இது சாத்தியமா என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் அளித்த பின் அவரும் நானும் இது பற்றி நீண்ட நேரம் விவாதித்தோம்.
வலைப்பதிவு பலருக்கு சாதாரணமாக இருந்தாலும் , வலைப்பதிவை இன்னும் முழுமையாக இருக்கும் அந்த கோவை பெரியவர் போன்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்த பயிற்சி உதவும் என்பது என் நம்பிக்கை.
வலைப்பதிவு பாடங்கள் பத்து அல்லது பதினைந்து நாட்களில் துவங்கும். பாடங்கள் இமெயிலில் தான் வரும். ஒரு வகுப்பின் தன்மை மற்றும் சீரான தன்மைக்காக இந்த ஏற்பாடு. ஆர்வம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யலாம்: http://valaipayirchi.wordpress.com/

உங்கள் பாஸ்வேர்டுக்கு வந்த ஆபத்து!.

elliot1

திரையுலகில் தலைவா படம் தமிழக‌த்தில் மட்டும் திரைக்கு வராமல் தாமதமாவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது போல இணைய உலகில் பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை அமர்களப்படுகிறது. இந்த சர்ச்சையின் மையம் கூகுலின் குரோம் பிரவுசரில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்னும் குற்றச்சாட்டாக இருந்தாலும் உண்மையில் உங்கள் பாஸ்வேர்டுக்கு இணைய உலகில் பாதுகாப்பு இல்லை என்பதே இணையவாசிகள் இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.

பாஸ்வேர்டு விஷயத்தில் அப்பாவி இணையவாசிகள் எந்த அளவுக்கு அபாயங்களை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது என்பதையும் இந்த சர்ச்சை உணர்த்துகிறது. பாஸ்வேர்டுக்கு ஒரு பாஸ்வேர்டு அவசியம் என்ற கருத்தையும் இந்த விவகாரம் வலியுறுத்துகிறது.

பாஸ்வேர்டு விழிப்புணர்வு பெற விரும்புகிறவர்கள் கட்டாயம் இந்த சர்ச்சை பற்றிய பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி அம்பலமானது?

எலியட் கெம்பர் என்னும் இங்கிலாந்தை சேர்ந்த இணைய வடிவமைப்பாளர் தனது வலைப்பதிவில் வெளியிட்ட ஒரு பதிவில் இருந்து இந்த சர்ச்சை துவங்குகிறது. ‘குரோமின் பொறுப்பில்லாத பாஸ்வேர்டு பாதுகாப்பு உத்தி’ எனும் தலைப்பில் வெளியான இந்த பதிவு கூகுலின் குரோம் பிரவுசரில் பாஸ்வேர்டுகளை சேமிப்பதில் உள்ள, பலரும் கவனிக்காத அபாயத்தை சுட்டிக்காட்டியது.

கூகுலின் குரோம் பிரவுசரை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை கவனித்திருக்கலாம்.அதாவது ஜிமியில் உள்ளிட்ட பாஸ்வேர்டு தளங்களுக்குள் நுழையும் போது ,உங்கள் பாஸ்வேர்டை சேமிக்க வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்படும்.இப்படி சேமித்து கொண்டால் அடுத்த முறை இந்த சேவையை பயன்படுத்தும் போது பாஸ்வேர்டை மீண்டும் ஒருமுறை டைப் செய்யும் அவசியம் இல்லாமல் ஒரே கிளிக்கில் உள்ளே நுடைந்துவிடலாம் என்னும் நோக்கில் இணையவாசிகளுக்காக உண்டாக்கப்பட்ட சின்ன வச‌தி இது.

பாஸ்வேர்டை சேமித்து வைப்பது என கருதுபவர்கள் இந்த வசதியை நன்றி வேண்டாம் என நிராகரித்து விடுவார்கள்.பலர் நம்முடைய கம்ப்யூட்டர், அதில் நாம் ப‌யன்படுத்தும் பிரவுசரில் பாஸ்வேர்டை சேமித்து வைத்தால் என்ன என்று இந்த வசதியை பயன்படுத்துகின்றனர்.கூகுல் குரோம் மட்டும் அல்ல பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசரிகளிலும் இந்த வசதி இருப்பதால் பாஸ்வேர்டு சேமிப்பு பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை.

ஆனால் கெம்பர் கூகுல் குரோம் விஷயத்தில் ஒரு திடுக்கிடும் உண்மையை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்.

பாஸ்வேர்டு சேமிப்பு!elliot2

குரோமில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகள் அனைத்தையும் மற்றவர்கள் எளிதாக தெரிந்துகொண்டு விடலாம் என்றும் இது திடுக்கிட வைக்கிறது என்றும் அவர் இது தொடர்பான பதிவில் கூறியிருந்தார்.குரோம்//செட்டிங்ஸ்//பாச்வேர்டு என்று பிரவுசரின் முகவரி பகுதியில் டைப் செய்தால் போதும் பிரவுசரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பாஸ்வேர்டுகளையும் அழகாக காட்டிவிடும்.

இது திகைப்பானது தானே.யோசித்து பாருங்கள் உங்கள் கம்ப்யூட்டரை அணுக கூடிய எந்த நபரும் மிக எளிதாக நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பாஸ்வேர்டுகளையும் தெரிந்து கொண்டு விடலாம் என்பது ஆபத்தானது தானே.பாஸ்வேர்டு பாதுகாப்பின்மை பற்றி பலவிதமாக எச்சரிக்கப்படுகிறது.தாக்காளர்கள் மற்றும் விஷமிகள் உங்கள் பாஸ்வேர்டை திருட வாய்ப்பிருப்பதா