Tag Archives: video

உங்களை செதுக்கி கொள்ள உதவும் யூடியூப் சானல்கள்

youயூடியூப் வெறும் பொழுதுபோக்கு வீடியோக்களின் இருப்பிடம் மட்டும் அல்ல. பாடம் பயில உதவும் கல்வி சார்ந்த வீடியோக்கள் முதல், விஞ்ஞான தகவல்களை எவருக்கும் புரியும் வகையில் எளிதாக விளக்கும் வீடியோக்கள் வரை பயனுள்ள சேனல்கள் பல இருக்கின்றன. ஆர்வம் மட்டும் இருந்தால், போட்டோஷாப் முதல், புகைப்படக்கலை வரை எல்லாவற்றையும் யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

கட்டுரைகள் அல்லது புத்தகங்களை வாசிப்பதைவிட வீடியோவாக பார்த்து தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு யூடியூப் ஒரு பல்கலைக்கழகம் தான். அந்த வகையில், உங்களை நீங்களே செதுக்கி கொள்ள விரும்பினாலும் சரி, அதற்கேற்ற வீடியோ சேனல்கள் அநேகம் இருக்கின்றன. அதாவது செயல்திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் வீடியோ சேனல்கள்.

செயல்திறன் மேம்பாடு என்பது நிறுவனங்களுக்கு மட்டும் உரித்தானதா என்ன? தனிமனிதர்களுக்கும் செயல்திறன் மேம்பாடு முக்கியம் தான். சோம்பலை வெல்ல, எதையும் தள்ளிப்போடாமல் குறித்த நேரத்தில் முடிக்க, நினைத்ததை செய்து இலக்கை நோக்கி முன்னேற செயல்திறன் மேம்பாட்டு உத்திகள் அவசியம். இதற்கு வழிகாட்டும் புத்தகங்களும் அநேகம் இருக்கின்றன. கட்டுரைகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இந்த புத்தகங்கள் கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதில் உள்ள வழிகளை சுவாரஸ்யமாக வீடியோ வடிவில் விளக்கும் சேனல்கள் சிலவற்றைப்பார்க்கலாம்:

வாரம் ஒரு வீடியோ: (http://www.productivitygame.com/ )

’புரடக்டிவிட்டி கேம்’ யூடியூப் சேனலில் வாரம் ஒரு வீடியோவை பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும், புகழ்பெற்ற செயல்திறன் மேம்பாட்டு புத்தகத்தின் சாரம்சம் அல்லது அதில் உள்ள முக்கிய வழிகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளன. அனிமேஷன் முறையில் சுவாரஸ்யமாக கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த சேனலுக்கு புதியவர்கள் ஏற்கனவே பதிவேற்றப்பட்ட வீடியோக்களையும் பார்க்கலாம். செயல்திறன் மேம்பாட்டு நுணுக்கங்களை அறிந்து கொள்ள சிறந்த வழி என்பதோடு, அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டியாகவும் இவற்றை கருதலாம். இந்த வீடியோ விளக்கத்திற்கு பிறகு மூல நூலை படிப்பது இன்னும் சுவாரயமாக இருக்கும். இதே பெயரிலான இணையதளும் இருக்கிறது. வீடியோவில் இடம்பெறும் புத்தகக சுருக்கடத்தின் பிடிஎப் வடிவங்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன.

மேதைகளின் பாதை (http://www.evancarmichael.com/ )

புத்தகங்களை பார்த்து கற்றுக்கொள்வது முன்னணி தொழிலதிபர்கள் வாழ்க்கையில் இருந்தும் செயல்திறனுக்கான வழிகளை கற்றுக்கொள்ளலாம். அதை தான் இவான் கார்மைக்கேலின் யூடியூப் சேனல் செய்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் வாரன் பப்பே வரை பலரது வாழ்க்கையில் இருந்து முன்னேற்றத்திற்கான வழிகளை தனது வீடியோக்கள் மூலம் இவர் தொகுத்தளிக்கிறார். கனடாவைச்சேர்ந்தவரான இவானும் ஒரு தொழில்முனைவோர் தான். தொழில்முனைவோர்களை நான் நம்புகிறேன் என்றும் சொல்லும் இவான், அவர்கள் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடியவற்றை வீடியோ வழியில் விளக்கி ஊக்கம் அளிக்கிறார். யூடியூப் சேனலில் இவருக்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இவரது இணையதளம் மூலமும் வீடியோக்களை அணுகலாம். அமைதியான தூக்கம், முடிவெடுக்கும் ஆற்றல், வெற்றிக்கான வழிகள் என பல்வேறு விஷயங்களில் வழிகாட்டுகிறார். தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு கூடுதலாக ஊக்கம் அளிக்கும் இந்த இணையதளம்.

கேரியை கேளுங்கள்  (https://www.garyvaynerchuk.com/ )

அமெரிக்கரான கேரி வெயன்ர்செக் தொழில் நிறுவனங்களை துவக்குவதையே தொழிலாக வைத்துக்கொண்டிருப்பவர். தொடர் தொழில்முனைவாளர் என்று வர்ணிக்கப்படுகிறார். இணைய ஆற்றலை புரிந்து கொண்டு அவற்றை தொழில் வாய்ப்புகளாக மாற்றுவது கேரிக்கி கைவந்த கலை. தொழில் அனுபவத்தில் தான் கற்ற பாடங்களை கேரி வீடியோவாக பகிர்ந்து கொள்கிறார். தானே ஒரு தொடர் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். என் வாழ்க்கையின் வெற்றிக்கு பொறுமை தான் முக்கிய காரணம் என ஒரு வீடியோவில் உற்சாகமாக சொல்கிறார். இவரது வாழ்க்கை பாடங்கள் உங்களுக்கும் ஊக்கம் அளிக்கலாம். 7 லட்சத்திற்கு மேற்பட்ட சந்ததாரர்களை கொண்ட யூடியூப் சேனல் தவிர தனது பெயரில் சுறுசுறுப்பான இணையதளத்தையும் நடத்தி வருகிறார்.

இணைய நுணுக்கங்கள் (https://www.youtube.com/user/dottotech )

செயல்திறன் மேம்பாட்டு குறிப்புகள் இணைய பயன்பாடு சார்ந்ததாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் ஸ்டீவ் டோட்டோவின், டோட்டோடெக் சேனலை நாடலாம். கூகுள் வரைபட சேவையை பயன்படுத்தும் வழிகள், இணைய குறிப்பேடு சேவையான எவர்நோட்டை இன்னும் சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? ஜிமெயிலில் நீங்கள் அறிய வேண்டியவை என பல்வேறு விதமான இணைய நுணுக்கங்களை இவர் வீடியோவில் விளக்குகிறார். பிரவுசர் குறிப்புகள் முதல் பாஸ்வேர்டு பாதுகாப்பு வரை எண்ணற்ற விஷயங்களை அறியலாம். தினம் ஒரு வீடியோவாக பார்த்து வந்தால் கூட போதும் நீங்கள் இணைய பயன்பாட்டில் கில்லாடியாகிவிடலாம். தொழில்நுட்ப சந்தேகங்கள் இருந்தாலும் இவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

மாணவர்களுக்கு.. (https://collegeinfogeek.com/ )

நீங்கள் மாணவராக இருந்து கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பினால் காலேஜின்போகீக் யூடியூப் சேனல் அதற்கு வழிகாட்டுகிறது. படித்தவற்றை எப்படி மறக்காமல் நினைவில் நிறுத்திக்கொள்வது, அதிகாலை பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது எப்படி? சுய ஒழுக்கத்தை உருவாக்கி கொள்வது எப்படி? வகுப்பில் குறிப்புகள் எடுப்பது எப்படி? என பலவகையான தலைப்புகளில் வீடியோக்கள் வழிகாட்டுகின்றன. அமெரிக்கத்தன்மை இருந்தாலும் இதில் இடம்பெறும் குறிப்புகள் பொதுவானவை. தாமஸ் பிராங்க் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார். இவருக்கும் தனியே இணையதளம் இருக்கிறது.

சுய முன்னேற்றக்குறிப்புகள் (https://www.youtube.com/channel/UCRI6t05DNVlV0XhdI7hx_iw)

ஒன்பர்செண்ட்பெட்டர் சேனல், சுய முன்னேற்ற நூல்களில் இடம்பெற்றிருக்கும் குறிப்புகளை அழகிய அனிமேஷன் வீடியோக்களாக வழங்குகிறது. வாரம் நான்கு புத்தகங்கள் படிப்பது எப்படி? புதிய பழக்கங்களை உருவாக்கி கொள்வது எப்படி? போன்ற விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம். பல பெஸ்ட்செல்லர் புத்தகங்களின் முக்கிய வழிகளையும் அனிமேஷன் வீடியோவாக பார்க்கலாம்.

பணியிட வழிகாட்டி (https://www.youtube.com/channel/UCAp3b6zIvS8ct4yci-GwxIg/videos )

சிம்ப்ளிவிட்டி வீடியோ சேனல் அலுவலக சூழலில் செயல்திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக வழிகாட்டுகிறது. இமெயில் பயன்பாடு, இணைய குறிப்பேடு சேவைகளை பயன்படுத்தும் வழி என எல்லாமே பணி சார்ந்த வீடியோக்களாக அமைகிறது. குறிப்பாக இமெயில் பயன்பாட்டில் நேரத்தை வீணாக்காமல் மேலும் சிறந்த முறையில் அவற்றை கையாளும் வழிகளை விளக்கும் பல வீடியோக்கள் இருக்கின்றன. இணையம் சார்ந்த பல நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

 

தளம் புதிது; வீடியோக்களை திருத்த உதவும் சேவை

இணையவாசிகள் பலரும் இப்போது ஸ்மார்ட்போனில் இருந்து தான் இணையத்தை அதிகம் அணுகுகின்றனர். பேஸ்புக் பதிவுகளை பார்ப்பது முதல், ஒளிப்படங்களை பார்ப்பது, வீடியோக்களை கண்டு ரசிப்பது என எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட்போனை நாடுகின்றனர். ஸ்மார்ட்போன் உள்ளங்களையில் இணையத்தை கொண்டு வந்தாலும் அதில் சின்ன சின்ன சிக்கல்கள் இல்லாமல் இல்லை. உதாரணத்திற்கு வீடியோக்களையே எடுத்துக்கொள்வோம். இணைய வீடியோக்கள் முழுவதும், அகல வடிவில் எடுக்கப்பட்டவை. இவற்றை ஸ்மார்ட்போன் திரையில் பார்க்கும் போது பொருத்தமில்லாமல் இருக்கும்.

ஸ்மார்ட்போன் திரையில் ஒளிப்படங்களோ, வீடியோக்களோ சதுர வடிவில் அல்லது, நீள் வடிவில் இருந்தால் நல்லது. ஒளிப்படம் என்றால், ஸ்மார்ட்போன் திரைக்கு ஏற்ப திருத்திக்கொள்ளலாம். ஆனால் வீடியோக்களை என்ன செய்வது?

இந்த கேள்விக்கு பதிலாக அமைகிறது கிராப்.வீடியோ இணையதளம். அகல வடிவிலான வீடியோக்களை ஸ்மார்ட்போன் திரைக்கு ஏற்ப இந்த தளம் திருத்தி தருகிறது. அடிப்படை சேவை இலவசமானது. ஆனால் கூடுதல் வசதிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையதள முகவரி: https://crop.video/

 

 

 

——-

செயலி புதிது: பழக்கங்களை கற்றுத்தரும் செயலி

பழக்க வழக்கங்கள் தான் சாதனையாளர்களை உருவாக்குகின்றன என்கிறது டைனிகெயின் செயலி. ஆண்ட்ராய்டு போன்களுக்கான இந்த செயலி, நீங்களும் இது போன்ற வெற்றிகரமான பழக்க வழக்கங்களை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. மற்றவர்கள் பின்பற்றும் வெற்றிகரமான பழக்கங்களை அறிந்து கொண்டு பின்பற்றுவதோடு, பிரபலமானவர்களின் அதிகாலை பழக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

அதிகாலை பழக்கங்களை மேலும் மேம்படுத்திக்கொள்வதற்கான குறிப்புகளையும் அளிக்கிறது. அதற்கேற்ப நன்றாக தூங்குவதற்கான வழிகளையும் முன்வைக்கிறது. உங்கள் வாழ்க்கையை மேலும் ரசிக்க, மேலும் மகிழ்ச்சியாக இருக்க இந்த குறிப்புகள் வழி காட்டும் என இந்த செயலி தெரிவிக்கிறது. பணியிடத்தில் மேலும் கவனத்தை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த செயலியை நாடலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.ziggycrane.tinygain

 

–=

நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.

 

 

 

 

 

 

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய வீடியோ இணையதளங்கள்

vimeo2இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப் இணையதளம் தான் முதலில் நினைவுக்கு வரும். யூடியூப் முன்னணி வீடியோ பகிர்வு தளமாக விளங்கும் நிலையில் இதில் வியப்பில்லை என்றாலும், யூடியூப் தவிரவும் பல வீடியோ இணையதளங்கள் இருக்கின்றன தெரியுமா? யூடியூப் தளத்திற்கு ஒரு மாற்று தேவை என நினைத்தாலும் சரி, அல்லது மேலும் சிறந்த வீடியோ இணையதளங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது எனும் எண்ணம் கொண்டிருந்தாலும் சரி, யூடியூப் போன்ற வீடியோ தளங்களை அறிந்து வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் இணைய அனுபவத்தை மேலும் செழுமையாக்கவும் உதவும். மாற்று வீடியோ தளங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் தளங்களில் முக்கியமான தளங்களின் பட்டியல் இதோ:
விமியோ
யூடியூப் தவிரவும் அறிந்திருக்க வேண்டிய வீடியோ தளமாக விமியோ கருதப்படுகிறது. இணையத்தின் ஆரம்ப கால வீடியோ தளங்களில் ஒன்று. 2004 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தளத்தின் பெயர் ஆங்கிலத்தில் வீடியோ+ நான் (மீ) ஆகிய வார்த்தைகளின் சேர்க்கையாக அமைந்துள்ளது. ஹை டெபினிஷன் வீடியோக்களை பார்க்கும் வசதியை அளித்த முதல் வீடியோ தளமாகவும் கருதப்படுகிறது. இதன் முகப்பு பக்கத்திலேயே பலவிதமான வீடியோக்களை பார்க்கலாம். முகப்பு பக்கத்தில் வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதத்திற்கு பழகிவிட்டால், இணையவாசிகள் தங்களுக்கு தேவையான தலைப்பை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அனிமேஷன், ஆவணப்படங்கள், இசை, பேஷன், உணவு என 20 க்கும் மேற்பட்ட தலைப்புகள் இருக்கின்றன. இவைத்தவிர பிரத்யேக பரிந்துரைகளும் இருக்கின்றன. விமியோ தயாரிப்பு வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம். மேலும் பல விதங்களில் வீடியோக்களை தேர்வு செய்யும் வசதி இருக்கிறது. தேவையான வீடியோக்களை தேடும் வசதியும் இருக்கிறது. தரமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதோடு இதில் உறுப்பினராக வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அடிப்படை சேவை இலவசமானது என்றாலும் கூடுதல் அம்சங்களுடன் கட்டணச்சேவைகளும் இருக்கின்றன. பயணர்கள் தாங்கள் விரும்பும் வீடியோ பிரிவில் உறுப்பினராக இணைந்து புதிய வீடியோக்களை பின் தொடரலாம்.
இணைய முகவரி: https://vimeo.com/

டெய்லிமோஷன்
விமியோவுக்கு நிகராக மாற்று வீடியோ தளங்களில் பிரபலமான தளம் டெய்லிமோஷன். பயனர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய வீடியோ தளம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் பழமையான வீடியோ சேவை தளம் தான். இது பிரெஞ்சு இணைய சேவை; ஆனால் உலகாலவிய வீடியோக்களை கொண்டது. இதன் முகப்பு பக்கத்தில் வரிசையாக வீடியோக்களின் பட்டியலை பார்க்கலாம். விளம்பரங்களின் ஊடுருவலை மீறி முகப்பு பக்கம் எளிமையாகவே இருக்கிறது. எண்ணற்ற சேனல்கள் இருக்கின்றன. விரும்பமான சேனல்களை பின் தொடரும் வசதியும் இருக்கிறது. பிரபலமான சேனல்களும் முன்னிறுத்தப்படுகின்றன. உறுப்பினராக இணைந்து வீடியோக்களை எளிதாக பதிவேற்றலாம். ஆனால் பதிவேற்றும் வீடியோக்களும் ஒரு மணி நேரம் அல்லது 4 ஜிபி கொள்ளளவு எனும் வரம்பு இருக்கிறது. டெய்லிமோஷன் கேம்ஸ், டெய்லிமோஷன் ஸ்டீரிமிங் ஆகிய உப சேவைகளும் இருக்கின்றன. வீடியோக்களை தேடும் வசதியும் இருக்கிறது. இந்திய பதிப்பும் இருப்பது கவனிக்கத்தக்கது.
இணைய முகவரி: http://www.dailymotion.com/in
மெட்டகேப்
மற்றொரு அருமையான வீடியோ தளம் மெட்டாகேப். 2003 ம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து துவக்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் தி கலெக்டிவ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இணையத்தின் மூன்றாவது பிரபலமான வீடியோ தளம் என்றும் கருதப்படுகிறது. இதன் முகப்பு பக்கம் அதிக சிக்கல் இல்லமால், வீடியோக்களை முன்வைக்கிறது. சமீபத்திய வீடியோ, முன்னணி வீடியோ மற்றும் இப்போது பிரபலமாக இருப்பவை என மூன்று வகைகளில் வீடியோக்களை பார்க்கலாம். இவை தவிர பல்வேறு வகைகளும் இருக்கின்றன. விரும்பிய சேனல்களில் சந்தாதாராக சேரலாம். விரும்பிய வீடியோக்களை தேடியும் கண்டறியலாம்.
இணைய முகவரி: http://www.metacafe.com/
livestreamலைவ் ஸ்டிரீம்
யூடியூப் போன்ற இணையதளம் தான். ஆனால் நேர்டி ஒளிபரப்பிற்கானது. உலகம் முழுவதும் இருந்து நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். பல்வேறு பிரிவுகளின் கீழ் வீடியோக்களை காணலாம். இந்திய மற்றும் தமிழ் சேனல் வீடியோக்களையும் பார்க்கலாம். நேரடி வீடியோக்களை பதிவேற்ற வேண்டும் எனில் கட்டணம் செலுத்து உறுப்பினராக வேண்டும்.
இணைய முகவரி: https://livestream.com/
ஓபன் வீடியோ
வீடியோக்களுக்கான நூலகம் போல செயல்படுகிறது. ஆய்வு நோக்கில் வீடியோக்கள் சேகரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் கல்வி சார்ந்த வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆவணப்படங்களின் தொகுப்பும் உள்ளது. அமெரிக்காவின் நாசா அமைப்பின் வீடியோக்களையும் காணலாம்.
இணைய முகவரி: https://open-video.org
இவைத்தவிர நெட்பிளிக்ஸ் போன்ற தளமான ஹுலு, சோனி நிறுவனத்தின் கிராக்கில், இணைய டிவி என்று வர்ணிக்கப்படும் வியோ, செய்தி வீடியோக்களுக்கான லைவ்லீக், நகைச்சுவை வீடியோக்களுக்கான பிரேக்.காம், வழிகாட்டல் வீடியோக்களுக்கான வீடியோஜக் உள்ளிட்ட வீடியோ தளங்களும் இருக்கின்றன. பிளிக்கர், மைஸ்பேஸ், டிவிட்ச் உள்ளிட்ட தளங்களின் மூலமும் வீடியோக்களை காணலாம்.

தூங்க வைக்கும் இணையதளம் இது!

தூக்கமின்மை பிரச்சனையால் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக என்றே ’நேப்பிளிக்ஸ்’ எனும் புதிய இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த இணையதளத்தை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் தானாக தூக்கம் வந்துவிடும்- அதாவது இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள யூடியூப் வீடியோக்களை பார்த்தால் தூக்கம் வரும்! அதற்கேற்ற வகையில் இந்த தளத்தில் இடம்பெறும் வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
யூடியூப்பில் பொதுவாக, ஹிட்களை அள்ளிக்குவிக்கும் வீடியோக்களே அதிகம் பேசப்படும்: அதன் காரணமாகவே அதிகம் பார்த்து ரசிக்கப்படும். இப்படி ஹிட்டான வீடியோக்கள் தவிர அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதே போல ஒரு சில நிடங்களுக்கு மேல் பார்க்க முடியாமல் அலுப்பூட்டி விரட்டும் வீடியோக்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வகை வீடியோக்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
நேபிபிளிக்ஸ் இணையதளம் இத்தகைய அலுப்பூட்டும் வீடியோக்களை எல்லாம் தேடிப்பிடித்து பட்டியலிடுகிறது. அதன் நோக்கம், இவற்றை பார்த்து தூக்கத்தை வரவைத்துக்கொள்வது தான்.
சுவாரஸ்யம் இல்லாத படங்கள் அல்லது வீடியோக்களை பார்க்கும் போது, தூக்கம் வருகிறது என நொந்து கொள்வோம் அல்லவா? இவற்றை விமர்சசனமாக தான் கருத வேண்டுமா என்ன? இத்தகைய வீடியோக்களை எல்லாம் ஒரே இடத்தில் சேமித்து வைத்து, தூக்கமின்மையால் தவிக்கும் போது, ஏதேனும் ஒரு சில வீடியோக்களை தேர்வு செய்து பார்த்தால் தூங்கி வழியலாம் அல்லவா? இதை தான் நேப்பிளிக்ஸ் தளம் செய்கிறது.
பார்வையாளர்களுக்கு தூக்கத்தை வர வைக்க கூடிய வீடியோக்கள் மட்டுமே இந்த தளத்தில் இடம்பெறுகின்றன. இந்த வீடியோக்களையும், அவரவர் ரசனைக்கேற்ப விளையாட்டு, வீடியோகேம், இசை என பலவகைகளில் இருந்து தேர்வு செய்து பார்க்கலாம். வீடியோக்களில் நேரத்தை செட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
டிவி பார்த்துக்கொண்டே தூங்கிவிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த தளம் மிகவும் ஏற்றதாக இருக்கும். பொதுவாக இணையத்தில் வீடியோ பார்ப்பவர்களுக்கும் இந்த தளம் உதவியாக இருக்கும்.
மழையின் ஓசையை படம்பிடிக்கும் வீடியோ, ஒருவர் காரை சுத்தம் செய்வதை சித்தரிக்கும் வீடியோ என இந்த கலெக்‌ஷன் அருமையாக அமைந்திருக்கிறது.

இணையதள முகவரி:http://napflix.tv/

 

இந்த தளத்தை இந்த பதிவுடன் பொருத்திப்பார்த்தால் சுவார்ஸ்யமான புரிதல் உண்டாகும்: http://cybersimman.com/2016/09/18/video-18/

 

திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்!

furnitureதளம் புதிது; திரைப்படத்தில் பார்த்த பர்னீச்சர்கள்!

திரைப்படங்களை பார்க்கும் போது கதை, திரைக்கதை, வசனம்,காமிரா கோணம் இத்யாதிகளை மட்டும் நாம் ரசிப்பதில்லை. நட்சத்திரங்களின் பேஷன் மற்றும் படப்பிடிப்பு அரங்கில் பயன்படுத்தப்பட்ட மேஜை,நாற்காலி உள்ளிட்ட பர்னீச்சர்களையும் ரசிக்காமல் இருப்பதில்லை. நம்மில் பலர் ஒரு படி மேலேச்சென்று படத்தில் பார்த்த பர்னீச்சர் பிடித்திருந்தால் அதையே தேடிப்பிடித்து வாங்குவதும் உண்டு.
ஆனால் இது அத்தனை எளிதல்ல: குறிப்பிட்ட காட்சியில் இடம்பெற்ற பர்னீச்சரை அடையாளம் கண்டு அதை எங்கே வாங்க முடியும் என தெரிந்து கொள்ள முயலும் போது பல நேரங்களில் கூகுளே கூட கைவிரிக்கலாம்.
ஆனால் கவலையே வேண்டாம், இப்படி திரைப்படங்களில் பார்த்த பர்னீச்சர்களை கண்டு கொள்வதற்காக என்றே அருமையான இணையதளம் ஒன்று இருக்கிறது. சீன் ஆன் செட் (https://www.seenonset.com/ ) எனும் அந்த தளத்தில் ஹாலிவுட் படங்களில் உள் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பர்னீச்சர்களை எளிதாக அடையாளம் காணலாம்.
பர்னீச்சர்கள் மட்டும் அல்ல, ஒளி விளக்குகள் போன்றவற்றையும் அடையாளம் காணலாம். அதே போல டிவி நிகழ்ச்சிகளில் இடம்பெற்றவற்றையும் இதில் தேடலாம்.
பரினீச்சர்கள் அல்லது படங்களை குறிப்பிட்டு தேடும் வசதி இருப்பதோடு, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட திரைப்பட பர்னீச்சர் முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப்படுகிறது.

செயலி புதிது; கல்லூரித்தகவல்கள்

பள்ளி படிப்பை முடித்ததும் வெளிநாடுகளில் உயர் கல்வி பெற விரும்புகிறவர்கள் அங்குள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களை சரியாக தெரிந்து கொள்ள விரும்பலாம். இதற்காக இணையத்தில் தேடிப்பார்த்து தனித்தனியே தகவல்களை தேர்வு செய்வது ஒரு வழி. மாறாக ஒரே இடத்தில் தகவல்களை பெற விரும்பினால் ஸ்கூல்டு செயலி அதற்கு உதவியாக இருக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி, அமெரிக்காவில் உள்ள முன்னணி கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. அனுமதி வாய்ப்பு குறித்த விவரங்களையும் அறியலாம். கல்லூரிகளில் வழங்கப்படும் பாட திட்டங்கள் பற்றிய தகவல்களோடு .கல்லூரி படிப்பை முடித்தால் கிடைக்க கூடிய ஊதியம் உள்ளிட்ட தகவல்களையும் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.schoold.co/


வீடியோ புதிது; செல்வந்தர் காட்டும் வழி

செல்வந்தராக வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா? அதற்கான வழிகளை ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? எனில் டேனியல் அல்லேயின் வீடியோ உங்களுக்கு வழிகாட்டும். அமெரிக்க இளம் லட்சாதிபதிகளில் ஒருவரான டேனியல் அல்லே தன்னிடம் குவிந்திருக்கும் செல்வத்தை சுயமாக சம்பாதித்தவர். அந்த அனுபவம் தந்த நம்பிக்கையில் தான் செல்வ குறிப்புகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இவர் உருவாக்கியுள்ள ஒரு வீடியோவில் செல்வந்தாரவாதை தவிருக்கும் ஐந்து பதங்கள் பற்றி எச்சரிக்கிறார். ” இதன் விலை மிகவும் அதிகம், ‘ மழை காலத்திற்காக சேமிக்கிறேன்,’ என் வாழ்க்கைத்துணை நிதி விஷயங்கள பார்த்துக்கொள்கிறார்”, ‘பணம் மகிழ்ச்சியை வாங்கித்தராது’ மற்றும் பணம் தீயது ஆகிய ஐந்து பதங்களை தவிர்க்க வேண்டும் என்கிறார். இந்த பதங்கள் தான் உங்களின் செல்வம் சேர்க்கும் ஆற்றலை சுருக்குகின்றன என்றும் சொல்கிறார். இது பற்றிய விரிவான விளக்கத்தை வீடியோவில் பார்க்காலம்.

வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=6W6iokBfH-E

இமெயில் குறிப்புகள்

அலுவல்நோக்கிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி நீங்கள் இமெயிலை அடிக்கடி பயன்படுத்தி வரலாம். இமெயில் அனுப்புவதில் உங்களுக்கென தனி பாணியும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பும் இமெயில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற அக்கரையும் ஆர்வமும் உங்களுக்கு இருந்தால் அவுட்சோர்ஸ்-பிலிப்பைன்ஸ்.காம் தளம் உருவாக்கியுள்ள இமெயில் பயன்பாடு குறிப்புகள் தொடர்பான வரைபட சித்திரம் உதவியாக இருக்கும்.
இந்த வரைபட சித்திரம் ஒருவர் அனுப்பும் இமெயில்கள் அதை பெறுபவருக்கு நெருடலை ஏற்படுத்தாத வகையில் அமைவதற்கான வழிகளை பட்டியலிடுகிறது.
இந்த வழிகளை இமெயிலில் தவிர்க்க வேண்டிய பத்து வார்த்தைகள் எனும் தலைப்பில் அவற்றுக்கான விளக்கத்துடன் பட்டியலிட்டுள்ளது.
முக்கியமானது என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். மெயிலை பெறுபவருக்கு மெயில்கள் முக்கியமானவை எனத்தெரியும். – தேங்க்ஸ் என்று சுருக்கமாக குறிப்பிட வேண்டாம். எப்போதும் தேங்க் யூ என்றே பயன்படுத்துங்கள்- இல்லை என்று வார்த்தையை பயன்படுத்தாமல் அந்த பொருள் வரும் வித்த்தில் கருத்துக்களை தெரிவுக்கவும்- மன்னிப்பு கேட்காதீர்கள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அதை நேரில் கேளுங்கள் ,மெயிலில் அல்ல . இப்படி விரிகின்றன விளங்கங்கள்.

இமெயில் குறிப்புகளை மேலும் அறிய: http://www.outsource-philippines.com/these-10-words-make-you-sound-rude-in-emails-infographic/

பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி

தளம் புதிது: பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி
safeshare_logo

இணையத்தில் வீடியோக்களை பார்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில் யூடியூப் நன்கறியப்பட்டதாக இருக்கிறது. யூடியூப் தவிர விமியோ உள்ளிட்ட வீடியோ பகிர்வு சேவைகளும் இருக்கின்றன.
யூடியூப்பில் எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம் என்றாலும், இடையூறாக தோன்றும் விளம்பரங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். எனினும் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்க விரும்பினால் சேப்ஷேர்.டிவி இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது.
யூடியூப் வீடியோவுக்கான இணைப்பை இந்த தளத்தில் சமர்பித்தால் அதில் உள்ள விளம்பரங்களை நீக்கி வீட்டு, இடையூறு இல்லாமல் பார்க்க கூடிய வடிவில் மாற்றித்தருகிறது. இந்த இணைப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
விளம்பரங்களை நீக்குவதோடு, தொடர்புடைய வீடியோக்களையும் நீக்கி விடுவதால் சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த இணைப்புகளை நம்பி பரிந்துரைக்கலாம். நாம் தேர்வு செய்ய வீடியோவை மட்டும் அவர்கள் பார்க்க முடியும். அந்த வகையில் இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது. யூடியூப்பில் உள்ள பாதுகாப்பு வசதியை விட இது சிறந்த்து என்கிறது சேப்ஷேர் தளம். எனவே கல்வி சார்ந்த வீடியோக்களை பரிந்துரைக்க இந்த வசதி மிகவும் ஏற்றது. வீடியோவின் துவக்கம் மற்றும் முடிவையும் தீர்மானிக்கும் வசதி இருக்கிறது.
யூடியூப் வீடியோ மட்டும் அல்லாமல் விமியோ தளத்தில் உள்ள வீடியோக்களையும் இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.

இணைய முகவரி: http://safeshare.tv/

செயலி புதிது: உள்ளங்கையில் விக்கிபீடியா’

wikipedia-android
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவிலும் அணுகலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது, ஆண்ட்ராய்டு போன்களுக்கான விக்கிபீடியா செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவில் மாற்றி அமைக்கப்பட்ட முகப்பு பக்கம் மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
செயலியை திறந்ததும் தோன்றும் முகப்பு பக்கத்தில் தேடல் வசதி பிரதானமாக இருக்கிறது. இங்கிருந்தே வேண்டிய கட்டுரைகளை தேட்த்துவங்கலாம். குரல் வழி தேடலுக்கான வசதியும் இருக்கிறது.
தேடல் பகுதிக்கு கீழ், பிரபலமாக உள்ள கட்டுரைகள், செய்திகள் மற்றும் ஒளிபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. வாசிக்கும் கட்டுரைகளுக்கு தொடர்புடைய கட்டுரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
முகப்பு பக்கத்தை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் அதிகம் பயன்படுத்தாத அம்சங்களை விலக்கி விடலாம்.
வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரைகளை சேமித்து வைத்து பின்னர் படிக்கும் வசதியும் இருக்கிறது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் கூட சேமிக்கப்பட்ட கட்டுரையை வாசிக்கலாம்.
கட்டுரைகளின் மொழியையும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பின்னணி மற்றும் எழுத்துரு அளவிலும் மாற்றங்களை செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=org.wikipedia

==

வீடியோ புதிது: நலமாய் இருப்பதன் அறிகுறிகள்
2
வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். அப்படி பிரச்சனைகள் வரும் போது உடலும் உள்ளமும் சோர்ந்து போகலாம். ஆனால், வாட்டும் பிரச்சனைகளால் சோர்வுக்கு உள்ளாகி இருக்கும் போது அதிலிருந்து மீண்டு வர விரும்பினால், பவர் ஆப் பாசிடிவிட்டு உருவாக்கியுள்ள வீடியோவை பார்த்து ஊக்கம் பெறலாம்.
ஒருவரது சோர்வான மனநிலைக்கான காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக இருப்பதற்கான பத்து காரணங்களை இந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது.
சொந்தமாக குடியிருக்க விடு இருப்பது, குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைப்பது, அக்கறை கொள்ள யாரேனும் இருப்பது .. என நீளும் இந்த காரணங்களை யாராலும் மறுத்து சொல்ல முடியாது.
ஊக்கம் தருவதோடு, சிந்திக்கவும் வைக்கிறது இந்த வீடியோ.

வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=mQonlXk_FBM

பாஸ்வேர்டு குறிப்புகள்

இணைய உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்ட்களின் முக்கியத்துவதும் அதிகரித்திருக்கிறது. பாஸ்வேர்ட் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.
பலரும் வலுவான பாஸ்வேர்டு உருவாக்கி கொள்வதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இல்லை என்றாலும் கூட, இணைய சேவைகளில் உறுப்பினராக பதிவு செய்யும் போது, உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதாக இருக்கிறது, இன்னும் வலுவாக்கவும் எனும் குறிப்பை அடிக்கடி பார்க்க நேரிடலாம்.இதனால் குழப்பமும் உண்டாகலாம்.
வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி எனும் கேள்வி உங்களுக்கும் இருந்தால், அதற்கு சில எளிதான வழிகள் இருக்கின்றன. எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தாமல், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயன்படுத்தவும். பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் போன்றவற்றை இடையிடையே பயன்படுத்தவும். உருவ எழுத்துக்களையும் பயன்படுத்தலாம்.
உங்கள் பெயர், நிறுவன பெயர் , குடும்பத்தினர் பெயர் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும். அகராதியில் உள்ள வார்த்தைகளையும் விட்டுவிட வேண்டும். அதோடு ஓவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.
அதோடு வழக்கமாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்களின் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.