Tag Archives: social

ஹாஷ்டேக் பிறந்த கதை தெரியுமா?

1-ts4Bq_xGIqK-A77lCe64ggஇணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரோடு ஸ்டோவ் பாயட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டுவதை விட, பொருத்தமான ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் உள்ளங்குளிர ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் உருவாகி பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர்.

ஹாஷ்டேக் என்றதும், # எனும் குறியீட்டுடன் இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் அடிக்கடி பகிரப்படும் பதங்கள் நினைவுக்கு வரும். நீங்களே கூட இத்தகைய பதகங்களை உருவாக்கி பகிர்ந்து இருக்கலாம் அல்லது, உங்களை கவர்ந்த தலைப்புகளுடன் இத்தகைய பதத்தை குறிப்பிட்டு நீங்களும் இணைந்திருக்கலாம். # முன்குறிப்புடன் அமையும் பதங்கள் ஹாஷ்டேக் என குறிப்பிடப்படுகின்றன. சமூக ஊடக மொழியின் பிரதான குறுக்கெழுத்து என இதை சொல்லலாம். வெறும் குறுக்கெழுத்து மட்டும் அல்ல, இணைய இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவும் ஆன்லைன் ஆயுதம். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் இந்த கருத்தை முழு மனதோடு ஆமோதிப்பார்கள்.

அந்த அளவுக்கு ஹாஷ்டேக் சமூக ஊடக உலகில் பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு கணக்குப்படி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் மட்டும் தினந்தோறும் 125 மில்லியன் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்படுபவை தனிக்கணக்கு.

ஹாஷேக் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ஏனெனில் இவை குறும்பதிவுக்கடலில் அவரவர் தங்கள் நோக்கத்திற்கும், தேவைக்கும் பொருத்தமான குறும்பதிவுகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டியாக இருக்கின்றன. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை ஒருங்கிணைப்பதற்கான குறியீடாக அமைவதன் மூலம் ஹாஷ்டேக் இதை சாத்தியமாக்குகிறது. அது மட்டும் அல்ல, குறும்பதிவுகள் சார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்கான வழிகாட்டியாகவும் ஹாஷ்டேக் அமைகிறது.

HASHTAG10_7F5CF76ECCDC4989B4A0D7F5DDEF92DFஹாஷ்டேக் மட்டும் உருவாக்கப்படவில்லை எனில் டிவிட்டர் சேவை இந்த அளவு பயனுள்ளதாக இருந்திருக்குமா? என்பது தெரியவில்லை. டிவிட்டர் உருவாக்கப்பட்ட போதே, அதில் குறும்பதிவுகளை வெளியிடுவது, நண்பர்களை பின் தொடர்வது உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் கூச்சலும், குழப்பமும் அதிகம் இருந்தது. தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கும் குறும்பதிவுகளில் பொருத்தமானவை பிரித்தறிவதற்கான வழி இல்லாமல் இருந்தது.

ஆனால், ஹாஷ்டேகின் அறிமுகம் இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு காண உதவியது. # எனும் அடையாளத்துடன் குறிப்பிட்ட மையக்கருத்தை சுட்டிக்காட்டும் குறிச்சொல்லை சேர்ப்பதன் மூலம் தொடர்புடைய குறும்பதிவுகளை எல்லாம் அந்த குறிச்சொல் கீழ் அடையாளம் காணலாம். உதாரணத்திற்கு இந்தியா கிரிக்கெட்டில் பெரிய அளவில் வெற்றி பெறும் போது, # இந்திய கிரிக்கெட் எனும் குறியீட்டை உருவாக்கி குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டால், இந்திய கிரிக்கெட் வெற்றி தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் அனைத்தையும் இதன் கீழ் படித்துவிடலாம். இது ஒரு விவாதச்சரடாகவும் தொடரும். இந்த குறியீட்டை கிளிக் செய்தால் போதும், தொடர்புடைய குறும்பதிவுகளை வரிசையாக காணலாம்.

இந்த வசதி தான் டிவிட்டரில், தொடர்ந்து கைகொடுக்கிறது. சமூக ஊடக பயன்பாட்டல் வளைகுடா நாடுகளில் 2010 ம் ஆண்டில் வெடித்த அரபு வசந்தம் புரட்சியின் போது போராட்டக்கார்கள் கருத்துக்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் ஆயுதம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, பிளாக் லைவ்ஸ் மேட்டர் எனும் ஹாஷ்டேக் சமத்துவத்திற்காகவும் மனிதநேயத்திற்காகவும் குரல் கொடுக்க பயன்பட்டது. பேரிடர் காலங்களில் உதவிகளையும், நிவாரண பணிகளையும், பயனுள்ள உயிர்காக்கும் தகவல்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் கைகொடுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது, #சென்னை ரைன்ஸ், #சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவிகளை ஒருங்கிணைக்க வழிகாட்டின. மெரினாவில் தைப்புரட்சி அமைதியாக மலர்ந்து வெற்றி பெற்றதிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஹாஷ்டேக் முக்கிய பங்கு வகுத்தன. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை முன்னிறுத்திவதிலும் ரசிகர்கள் ஹாஷ்டேக் ஆராதனை செய்வதை பார்க்கலாம்.

டிவிட்டரில் அறிமுகமாகி பின்னர் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக ஊடககங்களிலும் பிரபலமான ஹாஷ்டேக் இன்று, மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்யும் இணைய கூறுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்த பெருமை எல்லாம் ஒருவிதத்தில் சிறிஸ் மெஸினாவையே சேரும். அவர் தான், 2007 ம் ஆண்டில் முதல் முதலாக # குறியீட்டின் பயன்பாட்டை முன்வைத்தார். அப்போது அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற சவுத் பை சவுத்வெஸ் எனும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு தொடர்பான குறும்பதிவுகளை அவரும் நண்பர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனார். ஆனால் அந்த மாநாட்டில் ஆர்வம் இல்லாத மற்ற நண்பர்கள் இதை ரசிக்கவில்லை. நாம் முக்கியமாக கருதாத ஒரு மாநாடு தொடர்பான தகவல்கள் ஏன் நம்முடைய டைம்லைனில் ஏன் எட்டிப்பார்க்கின்றன என்று வெறுப்படைந்தனர்.

அப்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெஸினார் இது பற்றி யோசித்துப்பார்த்தார். டிவிட்டரில் எல்லா குறும்பதிவுகளையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், ஒருவர் தனக்கு தேவையானதை மட்டும் பார்ப்பதற்கான வழி என்ன எனும் கேள்வியோடு நண்பர்களோடும் பேசிப்பார்த்தார். டிவிட்டரில் விவாத குழுக்களை அமைக்கலாம் எனும் யோசனை உண்டானது. ஆனால் அது சிக்கலாக இருக்கும் என நினைத்தார். மிக எளிதான ஒரு வழி அவருக்கு தேவைப்பட்டது. இதனிடையே தான், இணைய அரட்டை அறைகளில் விவாதங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் பவுண்டு (#) குறியீடு இதற்கு பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றியது. உடனே கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன் என மனதுக்குள் பாடியபடி இந்த தகவலை குறும்பதிவாக பகிர்ந்து கொண்டார். ; http://chrismessina.me/

இது தொடர்பாக விரிவான விளக்கப்பதிவு ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சில நாட்கள் கழித்து ஸ்டோவ் பாய்ட் எனும் தொழில்நுட்ப வல்லுனர், இந்த கருத்தை ஆதரித்து ஒரு பதிவை வெளியிட்டார். ; http://stoweboyd.com/post/39877198249/hash-tags-twitter-groupings

ஹாஷ்டேக் எனும் பதத்தை அதில் அவர் முதல் முறையாக பயன்படுத்தியிருந்தார். இதன் பிறகு மெல்ல இந்த குறியீடு பயன்பாட்டிற்கு வந்தது. பயனாளிகள் மத்தியில் பிரபலமாகத்துவங்கிய பிறகு டிவிட்டரும் இதற்கு அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்கவே சமூக ஊடக பதிவுகள் ஹாஷ்டேக் மயமாகத்துவங்கின.

இந்த குறியீட்டிற்கான மூல எண்ணத்தை முன் வைத்த மெஸினா இப்போது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார். ஓபன் சோர்ஸ் சமூகத்தின் ஆதாரவாளராக இருக்கும் மெஸினா, ஹாஷ்டேக் எண்ணத்தை ஒரு போதும் காப்புரிமை பெறவோ அதிலிருந்து லாபம் பெறவோ நினைக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். இணைய சமூகத்திற்கான தனது பரிசளிப்பாக இந்த எண்ணத்தை கருதுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹாஷ்டேக் அறிமுகமாகி பத்தாண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

——-

தளம் புதிது; ரோபோ முதலாளிகள் வருகிறார்கள்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது.

இந்த அச்சமும், கவலையும் உங்களுக்கும் இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப்பார்க்கலாம். ’வில் எ ரோபோ பி மைபாஸ்’ எனும் இணையதளம் இந்த கேள்விக்கு பதில் சொல்கிறது.

இந்த தளத்தில் ஒருவர் தான் பணியாற்றும் துறையை குறிப்பிட்டால், அந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் மற்றும் ரோபோ சி.இ.ஒ வரும் வாய்ப்பு தொடர்பான தகவல் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் தொடர்பான கணிப்பை தெரிந்து கொள்ளலாம்.

உத்தேசமான கணிப்பு தான் என்றாலும் எதிர்காலம் பற்றி சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆர்டர் கியுலியன் என்பவர் இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றையும் இவர் எழுதியிருக்கிறார்.

இணையதள முகவரி: http://www.willrobotbemyboss.com/

 

 

செயலி புதிது; ஒளிப்படங்களை சீராக்க உதவும் செயலி

ஒளிப்படங்களை எடுக்க உதவும் செயலிகளைப்போலவே, ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் செயலிகளும் அவசியம். இந்த வகையில், சிறந்த செயலிகளில் ஒன்றாக ஸ்னேன்சீட் செயலி தொழில்நுட்ப வலைத்தளங்களால் வர்ணிக்கப்படுகிறது.

ஒளிப்படங்களை சீராக்க இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. 29 வகையான டூல்கள் மற்றும் பில்டர்கள் இருக்கின்றன. ஒளிப்படங்களை கிராப் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். 90 கோணத்தில் மாற்றி அமைக்கலாம்.

தேவையில்லாத பகுதிகள் அல்லது இடையூறுகளையும் எளிதாக நீக்கலாம். மேலும் பலவித மாற்றங்களை செய்யும் வசதி இருக்கிறது. முக்கியமாக பழைய மாற்றங்களை திரும்பி பார்த்து மீட்கும் வசதியும் இருக்கிறது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு தவிர ஐபோனிலும் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://support.google.com/snapseed#topic=6155507

 

 

 

பேஸ்புக்கில் நீங்கள் யார்?

People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images
People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கை நீங்கள் பயன்படுத்தும் முறை குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பேஸ்புக்கை எதற்காக, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துப்பார்த்தது உண்டா? இதுவரை இப்படி யோசித்ததில்லை எனில், இப்போது, உங்கள் பேஸ்புக் பயன்பாடு குறித்து யோசியுங்கள். ஏனெனில், பேஸ்புக்கில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் எனும் கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது உங்களுக்கு பொருந்துகிறதா என பார்க்க, பேஸ்புக்கை நீங்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கொஞ்சம் சுய ஆய்வுக்கு உள்ளாக்கி கொள்வது நல்லது தானே.

இனி பேஸ்புக் தொடர்பான ஆய்வை பார்ப்போம்.

பேஸ்புக்கின் தாக்கமும், வீச்சும் அதன் பயனாளிகள் அறிந்தது தான். அண்மை புள்ளிவிவரப்படி பேஸ்புக் 200 கோடி பேர் பயனாளிகளுக்கு மேல் பெற்றுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளுன் 128 கோடி பேர் அதை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் பயனாளி சராசரியாக தினமும் 35 நிமிடம் இந்த தளத்தில் செல்வு செய்கிறார்.  இவர்கள் ஒவ்வொருவரும் பேஸ்புக்கை ஒவ்வொரு விதமாக பயன்படுத்தலாம். நோக்கங்களும் மாறுபடலாம். ஆனால் இந்த இரண்டிலுமே பரவலான பொதுத்தன்மைகளை காணலாம்.

இந்த பொதுத்தன்மையை தான் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு மூலம் கண்டறிந்து அறிக்கையாக தந்துள்ளனர். பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கும் கண்டுபிடிப்பு என்னவெனில் பேஸ்புக் பயனாளிகளை அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கலாம் என்பது தான். அதாவது பேஸ்புக் பயனாளிகளில் நான்கு வகை இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.

உறவுகளை வலுப்படுத்துபவர்கள், தண்டோரா போடுபவர்கள், சுயபுராணம் பாடுபவர்கள் மற்றும் வேடிக்கை பார்ப்பவர்கள் என இந்த நான்கு வகையான பயனாளிகளை அமைகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையினருக்கான பேஸ்புக் குணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதல் வகையான உறவுகளை மேம்படுத்துபவர்கள், பேஸ்புக்கை தங்கள் நிஜ வாழ்க்கையின் நீட்டிப்பாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் நிலைத்தகவல்களை வெளியிடுவதற்கு பின்னே உறவுக்கு கைகொடுப்போம் என்ற நோக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பேஸ்புக்கிற்கு வெளியே உள்ள உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்காக தான் நிலைத்தகவல்களை வெளியிடுவதிலும், பதிவுகளுக்கு பதில் சொல்வதிலும் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர். கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது என்றாலும், குடும்பத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும் பேஸ்புக் உதவுவதாக இந்த பிரிவினர் கூறியிருக்கின்றனர். இந்த பிரிவினர் ஒளிப்படங்களையும், காணொலிகளையும் அதிகம் பகிர்கின்றனர்.

இரண்டாவது பிரிவினர் தண்டோரா போடுபவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்வதைவிட உலகில் என்ன நடக்கிறது என்பதையும், நாட்டு நடப்புகளை பதிவு செய்வதிலும் தான் ஆர்வம் அதிகம். இவர்கள் பெரும்பாலும் செய்திகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் தங்கள் அறிமுக பக்கத்தை அப்டேட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டாதவர்களாக இருக்கின்றனர்.

மூன்றாவது பிரிவினர் சுயநல செல்பீக்கள். அதாவது தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், விளம்பரப்படுத்திக்கொள்ளவும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள். முதல் பிரிவினரைப்போலவே இவர்களும் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகளை அதிகம் பகிர்ந்தாலும் நோக்கம் எல்லாம், இவற்றுக்கு எத்த்தனை லைக்குகள் குவிகின்றன என்பதிலேயே இருக்கின்றன. எந்த அளவுக்கு லைக் தொடர்பான அறிவிப்புகள் வருகின்றனவோ அந்த அளவு சக மனிதர்களால் அங்கீகரிக்கப்படுவதாக நினைக்கின்றனர்.

சரியோ தவறோ தங்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை பேஸ்புக் மூலம் உருவாக்குவது தான் செல்பி பிரிவினரின் நோக்கமாக அமைகிறது.

நான்காவது பிரிவினர், ஷாப்பிங் மால்களில் எதையும் வாங்காமல் அப்படியே உலா வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நிகரானவர்கள். இவர்கள் பேஸ்புக்கிலும் இப்படி தான் செய்து கொண்டிருக்கின்றனர். தங்களைப்பற்றி தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டாமல், மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முற்படும் கில்லாடிகளாக இருக்கின்றனர். பேஸ்புக்கில் யாரது பக்கத்தை வேண்டுமானாலும் எட்டிப்பார்த்து அவர்கள் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வேன் என்று கூறுபவர்களாக இந்த பிரிவினர் இருக்கின்றனர்.

இந்த நான்கு வகை பேஸ்புக் பயனாளிகளில் தண்டோரா போடுபவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் புதிதாக வெளிச்சத்திற்கு வந்து இருப்பவர்கள் என ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் டாம் ராபின்சன் வியப்புடன் கூறியுள்ளார். ஏனெனில், இதற்கு முன்னரும் பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் பேஸ்புக் பயனாளிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையினருடன் பொருத்திப்பார்க்கும் போது, உறவுகளை மேம்படுத்துபவர்களும், சுய புராணம் பார்ப்பவர்களும் எற்கனவே அறியப்பட்டுள்ளனர். ஆனால் மற்ற இரு பிரிவினரும் புதிதாக உள்ளனர் என ராபின்சன் கூறுகிறார்.

இந்த இரு பிரிவினர் குறித்து இதுவரை யாரும் அதிகம் பேசியதில்லை என்று கூறுபவ தங்கள் ஆய்வில் இவர்கள் மிகவும் பொருத்தமானவர்களாக தெரிகின்றனர் என்கிறார்.

ராபின்சனும் குழுவினரும் இந்த ஆய்வை மிக விரிவாகவே நடத்தியுள்ளனர். பேஸ்புக்குடனான தொடர்பு குறித்து 48 விதமான வாசகங்களை கொடுத்து அதற்கான கருத்துக்களை பயனாளிகளிடம் இருந்து பெற்று அதன் பிறகு தனிப்பட்ட கேள்விகளை கேட்டு ஆய்வை நடத்தியுள்ளனர். மக்கள் ஏன் பேஸ்புக்கில் தங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர் என்பதை ஆதார கேள்வியாக கொண்டு ஆய்வு நடந்திருக்கிறது.

ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யம் தருபவையாக இருப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றனர். எல்லாம் சரி, இந்த நான்கு ரகத்தில் நீங்கள் எந்த ரகம் என நினைக்கிறீர்கள்? அந்த ரகம், இந்த ரகம் என தீர்மானிக்கும் முன் ஆய்வாளர்கள் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். பேஸ்புக் பயனாளிகளில் பலர், இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையினருடன் தங்களை தொடர்பு படுத்துக்கொள்ளலாம் என்பது தான் அது. ஒன்றுக்கும் மேற்பட்ட வகையினரின் குணத்தை பார்க்க முடிந்தாலும், குறிப்பிட்ட ஒரு வகையின் தாக்கம் தூக்கலாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆய்வில் பங்கேற்றவர்களே கூட, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என பதில் கூறினாலும், பெரும்பாலும் பார்த்தால் இது தான் என குறிப்பிட்ட ஒரு பிரிவின் பக்கம் சாய்ந்துள்ளனர். இனி, ஆய்வின் படி நீங்கள் எந்த வகை பேஸ்புக் பயனாளி என ஆய்வு செய்து கொள்ளுங்கள்!

 

 

தளம் புதிது: இணைய குலுக்கல் நடத்த உதவும் தளம்

நடைமுறை வாழ்க்கையில் செய்யும் பல விஷயங்களை இணையம் மூலம் இன்னும் எளிதாக செய்ய உதவும் இணையதளங்கள் பட்டியலில் நேம்பிக்கர்நிஞ்சா தளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த தளம், பல பெயர்களை கொண்ட பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு பெயரை தேர்வு செய்ய உதவுகிறது. அதாவது பெயர்களை எல்லாம் துண்டு சீட்டுகளில் எழுதிப்போட்டு குலுக்கல் நடத்தி ஒரு பெயரை தேர்வு செய்வோம் அல்லவா? இது போன்ற நேரங்களில் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பட்டியலில் பெயர்களை எல்லாம் வரிசையாக தட்டச்சு செய்து, கோ எனும் கட்டளையை கிளிக் செய்தால், பட்டியலில் உள்ள பெயர்கள் வரிசையாக ஓடி, இறுதியில் ஒரு பெயர் மட்டும் முன்வைக்கப்படுகிறது.

சீட்டு குலுக்குப்போட பயன்படுத்தலாம். அதைவிட பள்ளி ஆசரியர்கள் மாணவர்கள் பெயர்களை எழுதி, அடுத்த கேள்வி யாரிடம் கேட்பது என தீர்மானிக்க பயன்படுத்தலாம். அடுத்த முறை அந்த பெயரை மட்டும் நீக்கவிட்டு புதிதாக பயன்படுத்தலாம். அல்லது, அந்த பெயரையும் வைத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை பட்டியலை சுழலவிடலாம். கேள்விக்கு பதில் சொல்ல மட்டும், வகுப்பில் மாணவர் தலைவரை தேர்வு செய்யுவும் கூட இந்த முறையை பயன்படுத்தலாம்.

எளிமையான இணையதளம் தான். ஆனால் சுவாரஸ்யமானது.

இணைய முகவரி: http://namepickerninja.com/index.html

 

 

செயலிபுதிது; வானிலை அறிய உதவும் செயலி

வானிலை அறிவதற்கு இன்னொரு செயலியை தரவிறக்கம் செய்ய நான் தயாரில்லை என நினைப்பவர்கள் கூட, ட்பிள்யூடிஎச்.ஆர் எனும் வானிலை செயலியை பார்த்தால் மனம் மாறும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இந்த செயலி, அத்தனை எளிமையான முறையில் வானிலை தகவல்களை அளித்து கவர்கிறது.

ஐபோனுக்கான உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, வானிலை தகவல்களை அழகாக சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அதைத்தவிர வேறு எதையும் செய்வதில்லை. திரையில் அன்றைய தினத்திற்கான வானிலை தகவல் இடம்பெறுகிறது, அவ்வளவு தான். கூடுதலாக வேறு எந்த தகவலும் கிடையாது.

மினிமலிசம் என்று சொல்லப்படும், தேவையான குறைந்த பட்ச தகவல்களை மட்டுமே அளிக்கும் கோட்பாட்டிற்கு ஏற்ப இந்த செயலி வானியை விவரங்களை கச்சிதமாக அளிக்கிறது. இந்த தகவல்களும் கையால் வரையப்பட்ட மேகச்சித்திரத்துடன், கையான் எழுதிய எழுத்துக்கள் மூலம் தெரிவிக்கப்படுவது இன்னும் சிறப்பு.

 

மேலும் தகவல்களுக்கு: https://itunes.apple.com/app/id1252405260

 

 

 

சமூக ஊடக மோகத்தை கேள்விக்குள்ளாகும் புதுமை செயலி!

8f95567489cd6b452c736829674bf0ae_originalஸ்மார்ட் போன் உலகில் ’இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்!. பெயர் மட்டும் அல்ல, உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிட தயார் என்றால் நீங்களும் கூட நோபோன்ஸ்டோர் தளத்தில் இந்த போனை வாங்கலாம்.

இந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட்போன்களில் செய்யும் எதையும் செய்ய முடியாது. ஸ்மார்ட்போன்களில் ஒருவர் எதிர்பார்க்க கூடிய எந்த அம்சமும் இந்த போனில் கிடையாது. அதனால் தான் இது நோபோன்.

இப்படி ஒரு போன் எதற்கு? ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுபடுவதற்கு தான்!

ஆம், பேசுகிறோமோ இல்லையோ, அழைப்பு வந்திருக்கிறதோ இல்லையோ, சில நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்துப்பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறதே. காலையில் கண் விழித்ததும், பல் துலக்குவதற்கு முன்னர் போன் திரையை பார்த்து விட்டு தானே வேறு வேலை பார்க்கிறோம். இரவிலும் படுக்கச்செல்வதற்கு முன் போன் தான் பக்கத்தில் இருக்கும்.

இப்படி ஸ்மார்ட்போன் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மானே தேனே போட்டுக்கொள்வது போல, வாட்ஸ் அப்பில் உலாவுவது, செல்பி எடுத்து தள்ளுவது என இதர பாதிப்புகளை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்.

பஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் செய்யும் போதும் பலரும், ஸ்மார்ட்போனில் தான் மூழ்கியபடி தனி உலகில் சஞ்சரிக்கின்றனரேத்தவிர, பக்கத்தில் உள்ளவர்களை கவனிப்பது கூட இல்லை. இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வாக அறிமுகமானது தான் நோபோன். ஸ்மார்ட்போன் போலவே தோற்றம் கொண்ட செவ்வக கட்டை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதை கையில் வைத்திருந்தால், போனை வைத்திருக்கும் அதே உணர்வை பெறலாம் எனும் உத்திரவாதத்தை நோபோன் அளிக்கிறது.

சதா சர்வ நேரமும் போனை கையில் எடுக்கும் உணர்வுக்கு மாற்றாக அமையக்கூடிய தொழில்நுட்பம் சாராத இந்த தீர்வு நிஜ உலகுடனான உங்கள் தொடர்பை அதிகமாக்கி கொள்ள உதவும் என்பது தான் நோபோன் அறிமுகத்திற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. 2014 ம் ஆண்டு வாக்கில் இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் மூலம் இந்த போனுக்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேட்டரி இல்லை, காமிரா இல்லை, புளூடூத் இல்லை, உடையாது, நீர்புகாது என்றெல்லாம் இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்பட்டன.

ஸ்மார்ட்போன் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு இல்லாத போனுக்கான தேவையை பலரும் உணர்ந்ததால், நிதி உதவியும் குவிந்து போனும் விற்பனைக்கு வந்தது. இப்போது, நோபோன்ஸ்டோர் மூலம், அடிப்படையான நோபோன் மட்டும் அல்லாது நோபோஜீரோ போன்ற பிற மாதிரிகளையும் வாங்கலாம். நோபோஜீரோ என்றால், ஸ்மார்ட்போன் பட்டன் மாதிரிகள் எல்லாம் இல்லாத வெறும் செவ்வக பலகை அவ்வளவு தான். ஆனால் பாதி விலையில் வாங்கலாம். நோபோன் ஏர் மாதிரியும் இருக்கிறது. உள்ளே ஒன்றும் இல்லாமல் இருப்பது போன்ற வெற்றுத்தோற்றம் தான் இதன் சிறப்பம்சன். இது தவிர செல்பி நோபோனும் உண்டு. நோபோனில் காமிராவே இல்லையே எப்படி படம் எடுப்பது என்று கேட்கலாம். நல்ல கேள்வி? முகம் பார்க்கும் கண்ணாடி கொண்ட நோபோன் இதற்கு பதிலாகிறது.

கேலியும், கிண்டலும் கலந்த முயற்சி என்றாலும், நம் காலத்து ஸ்மார்ட்போன் மோகத்தின் மீதான நயமான விமர்சனமாக நோபோன் அமைந்துள்ளது. அதனால் தான் இன்னமும் அப்டேட்டாகி கொண்டே இருக்கிறது.- https://www.thenophone.com/

நிற்க, நோபோன் போலவே, இப்போது சமூக ஊடக செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது என்பது தான் விஷயம்.

பிங்கி (binky. ) எனும் அந்த செயலி கொஞ்சம் புதுமையானது. வழக்கமாக சமூக ஊடக செயலிகளில் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் இதிலும் செய்யலாம். அதாவது, நிலைத்தகவல்களை வரிசையாக பார்க்கலாம், அவறை லைக் செய்யலாம், பின்னூட்டம் அளிக்கலாம், இப்பக்கமும், அப்பக்கமும் நகர்த்திப்பார்க்கலாம். இவற்றில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இவை எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாமேத்தவிர ஒருவரும் பார்க்க முடியாது!

ஆம், பிங்கி செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு, அதில் எப்போது நுழைந்தாலும் ஏதாவது உள்ளடக்கத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பேஸ்புக் அல்லது டிவிட்டரில் செய்வது போல இந்த தகவல்களை வரிசையாக பார்த்துக்கொண்டே இருக்கலாம். இடையே ஏதாவது படத்தை லைக் செய்யலாம். கருத்து தெரிவிக்க விரும்பினால், தட்டச்சு செய்யலாம். முதலெழுத்தை மட்டும் அடித்தால் போதும் மற்ற எழுத்துகள் தானாக தோன்றும்.

அவ்வளவு தான். ஆனால், நாம் தெரிவிக்கும் லைக்குகளும் கருத்துகளும் வேறு யாரையும் சென்றடையாமல் இணைய வெளியில் கரைந்து காணாமல் போய்விடும். இதில் தோன்றும் நிலைத்தகவல்கள் விலங்குகள் பறவைகள் சார்ந்தவை. நம்முடைய நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுடையவை அல்ல. எதற்கு இப்படி ஒரு செயலி?

எல்லாம் சமூக ஊடக பழக்கத்திற்கு ஒரு மாற்று தேவை என்பதால் தான்!

எப்போதும் ஸ்மார்ட்போனை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அதில் சமூக ஊடக பதிவுகளை பார்த்தபடி இருக்கிறோம் அல்லாவா? அந்த பழக்கத்திற்கு மாற்று மருந்து தான் இந்த செயலி என்கிறார் இதை உருவாக்கியுள்ள மென்பொருளாலர் டான் கர்ட்ஸ்.

சமூக ஊடக உலகில் உலாவிய உணர்வை பெறலாம், ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற உரையாடல், லைக் கணக்கு, துவேஷம் போன்றவற்றை தவிர்த்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் என்கிறார் கர்ட்ஸ். ரெயிலில் செல்லும் போது ,அன்னிச்சையாக போனை எடுத்து சமூக ஊடக பதிவுகளை பார்க்கும் தனது சொந்த அனுபவம் குறித்து யோசித்த போது, தகவல் தேவை இருக்கிறதோ இல்லையோ போனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாக தோன்றியதாக அட்லாண்டிக் இதழுக்கான பேட்டியில் கர்ட்ஸ் கூறியுள்ளார்.

போனை பார்த்துக்கொண்டிருக்கும் தேவையை உணர்ந்த போது, அதை நிறைவேற்றித்தரும் வகையில் பொய்யான ஒரு சமூக ஊடக செயலியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. துவக்கத்தில் விளையாட்டாக இந்த செயலிக்கு வடிவம் கொடுத்துள்ளார். ஆனால் இதை பார்த்தவர்கள் எல்லாம், இதன் சமூக ஊடகம் அல்லாத சமூக ஊடகத்தன்மையை விரும்பவே செயலியை முழு வீச்சில் உருவாக்கி ஐபோனுக்காக அறிமுகம் செய்துள்ளார். ஆண்ட்ராய்டு வடிவமும் வர உள்ளது. வேறு பல துணை அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருபதாக கர்ட்ஸ் கூறியிருக்கிறார்.

சமூக ஊடக செயல்பாடுகளுக்கு எந்த அளவு அடிமையாகி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் பிங்கி செயலியை பயன்படுத்திப்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதற்குள் பேஸ்புக், டிவிட்டர் மோகம் குறித்து நன்றாக யோசிக்கலாம்.

பிங்கி செயலி இணையதளம்: http://www.binky.rocks/

 

நன்றி; தமிழ் இந்துவிற்காக இளமை புதுமையில் எழுதியது.

சென்னை மழை: நேசக்கரம் நீட்டிய சமூக ஊடகங்கள்

ch-2
கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பாதிப்பு தீவிரம் என்றாலும் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இப்படி மழை வெள்ளம் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மழையின் கோரத்தாண்டவம் நம்முடைய உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையையும், தயாரிப்பு இல்லாத நிலையையும் அம்பலமாக்கியது என்றால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சமூக ஊடகங்களின் உதவியோடு நெட்டிசன்கள் களத்தில் இறங்கி கைகொடுத்தவிதம் மனிதாபிமானத்தின் எழுச்சியை உணர்த்தி நெகிழ வைத்தது.
மழை நீர் உள்ளே புகுந்த குடியிருப்புகளில் உதவிக்கு வந்தது படகுகள் மட்டும் அல்ல; சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகளும் தான். இடையே மழை உச்சத்தை தொட்ட போது இணைய இணைப்பு மற்றும் செல்போன் இணைப்புகள் சிக்கலுக்கு இலக்காகி தகவல் தொடர்பே சோதனைக்கு உள்ளானாலும், மற்ற நேரங்களில் டிவிட்டர் குறும்பதிவுகளும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளும் பெருமளவு உதவியாக இருந்தன.
இயற்கை சீற்றங்களுக்கு நடுவே மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதில் சமூக ஊடகங்கள் உடனுக்குடன் உதவிக்கு வருவதே இணைய யுகத்தின் வழக்கமாக இருக்கிறது. பிலிப்பைன்சில் ஹயான் சூறாவளியின் போதும், நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்திலும் சமூக ஊடகங்கள் பயன்பட்ட விதம் பற்றி நெகிழ்ச்சியான கதைகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவிலேயே கூட கடந்த ஆண்டு காஷ்மீரில் வெள்ளம் சூழந்த போது சமூக ஊடககங்கள் பேருதவியாக அமைந்தன.

இப்போது சென்னை நெட்டிசன்களும்,மழை வெள்ளத்துக்கு நடுவே இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நேசக்கரம் நீட்டி இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
புயல் மழையின் போதும், பேரிடர் காலங்களின் போதும் முதலில் தேவைப்படுவது தகவல்கள் தான்- பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி விவரங்கள் தெரிய வேண்டும். சிக்கியத்தவிப்பவர்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். உதவி கோருபவர்களின் நிலையும் மீட்பு குழுவுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.இன்னும் பல முக்கிய தகவல்கள் பகிரப்பட வேண்டும்.
CT6rx0SVAAAAIOk
இவற்றுக்கு அரசு அமைப்புகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது.இங்கு தான் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமாகிறது. சென்னையில் பல நெட்டிசன்கள் இப்படி தன்னார்வலர்களாக மாறினர்.
நெட்டிசன்களின் பங்களிப்பு இரண்டு கட்டங்களாக அமைந்திருந்ததை பார்க்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்க்க ஆரம்பித்த போது பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த பாதிப்புக்கு நடுவே #சென்னைரைன்ஸ் ஹாஷ்டேக் எட்டிப்பார்த்தது. டிவிட்டரில் மழையின் நிலை பற்றி உணர்ந்த இந்த ஹாஷ்டேக் அடையாளத்துடன் வெளியான குறும்பதிவுகள் எந்த எந்த பகுதிகளில் மழையின் தீவிரம் எப்படி என உணர்த்தின. நகரின் எந்த இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகம், எந்த சாலைகள் வழியே செல்லலாம் என்பது போன்ற தகவல்கள் பகிரப்பட்டு வழிகாட்டியாக அமைந்தன.தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை சிக்கியவர்களை மீட்பதற்கான கோரிக்கைகளும் வெளியாயின. வானிலை பதிவர்களும் சுற்றிச்சுழன்று செயல்பட்டு மழை பற்றிய கணிப்புகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பேஸ்புக்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதற்கான பக்கங்களும் அமைக்கப்பட்டு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
வாட்ஸ் அப்பிலும் உதவிக்கான கோரிக்கைகள் உலா வந்தன. இடையே வதந்திகளும் உலா வந்தன.
டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னை மீண்டும் ஒரு பெருமழையை எதிர்கொண்டு நிலைகுலைந்த போது சமூக ஊடக பங்களிப்பு விஸ்வரூபம் எடுத்தது. முழங்கால் அளவு தண்ணீருக்கும், தாழ்வான இடங்களில் இடுப்பளவு தண்ணீருக்கும் பழகியிருந்த சென்னை நகரம் பல இடங்களில் கழுத்தளவு நீர் உள்ளே புகந்த நிலை கண்டு திடுக்கிட்டது.முடிச்சூர்,வேளச்சேரி ,கோட்டுர்புரம் உள்ளிட்ட இடங்களில் கீழ் தளம் முழுவதையும் வெள்ளம் சூழந்து கொண்டது.

சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்த நிலையில் தன்னார்வலர்களாக களத்தில் இறங்குவதற்கு முன்னர் நெட்டிசன்கள் சமூக ஊடகங்கள் வழியே நேசக்கரம் நீட்டினர்.
#சென்னைபிளட்ஸ், #சென்னைரைன்ஸ், #சென்னை ரெஸ்கியூ, # சென்னை ரைன்ஸ் ஹெல்ப் உள்ளிட்ட ஹாஷ்டேகுகளுடன் பகிரப்பட்ட குறும்பதிவுகள் உதவி,உணவு,உரைவிடம் என எல்லாவற்றையும் அளித்தன. ராணுவம் மற்றும் தேசிய பேரிடன் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்,குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் எந்த குடியிருப்புகளில் எல்லாம் உதவிக்கு காத்திருக்கின்றனர் என்ற தகவலை குறும்பதிவுகளாக வெளியிட்டு வழிகாட்டினர். ஈக்காட்டுத்தாங்களில் குறிப்பிட்ட தெருவில் இரண்டாவது தளத்தில் வயதான தம்பதி மீட்கப்பட காத்திருக்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் ஆபத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட உதவின.

இதனிடையே உதவிக்காக மற்றும் தகவல்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்களையும் திரட்டி பகிர்ந்து கொண்டனர். உதவி தேவைப்படுபவர்கள் மற்றும் உதவ தயாராக இருப்பவர்களையும் இணைக்கும் தகவல் பக்கம் கூகுள் டாக்குமண்ட் மூலம் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. சென்னையில் வெள்ள பாதிப்பின் நிலையை உணர்த்தக்கூடிய வரைபட பக்கமும் (http://osm-in.github.io/flood-map/chennai.html#11/13.0000/80.2000) உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பங்களிப்பு கோரப்பட்டது. https://twitter.com/AidOffered பக்கம் உதவி மற்றும் நிவாரணம் பற்றிய சரி பார்க்கப்பட்ட தகவல்களை வழங்கியது. http://klipher.com/savechennai/ பக்கமும் இதே போன்ற தகவல்களை அளித்தது.மருத்துவ உதவி பற்றிய தகவல்களும் பகிரப்பட்டன.
இதனிடையே பல நல்ல இதயங்கள் ,வெள்ளத்தில் வீடுகளையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு தங்கள் வீடுகளின் கதவுகளை திறந்துவிடுவதாகவும் அறிவித்தனர்.

பல நெட்டிசன்கள் களத்திலும் இறங்கி உதவி செய்தனர். நடிகர் சித்தார்த் போன்ற பிரபலங்களும் நிவாரணப்பணிகளில் தீவிரம் காட்ட, உதவிகள் பற்றிய தகவல்கள் # சென்னைமைக்ரோ எனும் ஹாஷ்டேக் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன. என்னிடம் பால் பாக்கெட்கள் இருக்கின்றன, தருகிறேன்,.250 பேருக்கு உணவுத்தரத்தயார், என்பது போன்ற தகவல்களும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் குவிந்தன.
தலைநகர் சென்னைக்கு நிகராக பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்திலும் கவனம் தேவை என குரல் கொடுக்கப்பட்டு தன்னார்வலர்கள் அங்கும் விரைந்தனர். நிவாரணப்பொருட்களும் ,உதவியும் எங்கு அதிகம் தேவைப்படுகிறது என்ற விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த உதவிகள் தொடர்கின்றன.
சென்னை நகரம் பெரும் நெருக்கடிக்கு இலக்கான நிலையில், மனிதநேயத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இவை விளங்குவதோடு சோதனையான நிலையில் சமூக ஊடகம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கான நெகிழ்ச்சியான வெளிப்பாடாகவும் அமைகிறது!.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

செயலி புதிது; மெசேஜிங் மாயம்

புதிதாக ஒரு மெசேஜிங் செயலி அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் டிரைப்.பிஎம் எனும் அந்த செயலியை, இன்னொரு மெசேஜிங் செயலி என அலட்சியம் செய்து ஒதுக்கிவிட முடியாமல் புதுமையான அம்சங்களுடன் வந்திருப்பது தான் கவனத்தை ஈர்க்கிறது. வாக்கி-டாக்கியின் மறுவடிவம் எனும் வர்ணனை செய்யப்படும் இந்த செயலியை மிக எளிதாக,ஒற்றை விரலில் இயக்கலாமாம். இதில் மெசேஜ் அனுப்ப கீபோர்டில் கைவைக்கும் தேவையும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.எப்படி என்றால், செயலி மூலம் தொடர்பு கொள்ள வேண்டியவரின் புகைப்பட பகுதியை கிளிக் செய்து அப்படியே அழுத்திக்கொண்டிருந்தால் போதும், நாம் சொல்ல வேண்டிய செய்தியை பதிவு செய்து விடலாம். அதன் பிறகு அனுப்பு பட்டனை அழுத்தினால் போதும் அந்த செய்தி வீடியோ வடிவில் சென்றடையும். செய்தியை அனுப்பும் முன் நம்முடைய தோற்றம் எப்படி இருக்கிறது என முன்னோட்டம் பார்ப்பதற்கான கண்ணாடி வசதியும் செயலியில் இருக்கிறது. வீடியோ செய்தியை பெறுபவர் அதிலேயே கிளிக் செய்து பதில் செய்தியையும் அனுப்பலாம்.
தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் குழுவில் உள்ள அனைவருக்கும் செய்தி அனுப்ப முடியும் என்பதால் இந்த மெசேஜிங் செயலியை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
அனுப்பும் செய்திகளை சேமித்து வைக்கும் வசதியும் இருக்கிறது. உலகின் எந்த பகுதியிலும் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் அறிமுகமாகி இருக்கிறது.
தரவிறக்கம் செய்ய:http://tribe.pm/

——–

தளம் புதிது; யூடியூப் பாட்டு

யூடியூப் வீடியோக்களை பலவிதங்களில் பார்க்கலாம்; பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலருக்கு யூடியூப் வீடியோ மூலம் பாடல்களை கேட்பது பிடித்தமானதாகவும் இருக்கிறது. இத்தகைய இசைப்பிரியர்களில் பலர் யூடியூப் வீடியோக்களை எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். இந்த தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் வடிவில் அறிமுகமாகி இருக்கிறது யூடி.காம் தளம். இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியை சமர்பித்தால் போதும் அதன் எம்பி3 வடிவத்தை தரவிறக்கம் செய்து தருகிறது. இந்த தேடல் கட்டத்திலேயே குறிச்சொல்லை டைப் செய்து யூடியூப்பில் தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாடல் வீடியோ என்றில்லை எந்த வீடியோவையும் எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம். எம்பி4 வடிவத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://yout.com/

——-

கணித கண்காணிப்பு

மைக்ரோசாப்ட் வேர்ட் மென்பொருளை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஆனால் வேர்டில் உள்ள பல அம்சங்களை நீங்கள் அறியாமலே இருக்ககலாம். உதாரணமாக வேர்டில் டைப் செய்யும் போது கணித சூத்திரங்களை சரி பார்க்க அதில் உள்ள ஆட்டோ கரெக்ட் அம்சம் கைகொடுக்கிறது தெரியுமா?
ஆட்டோ கரெக்ட் அம்சம், எழுத்து பிழை மற்றும் இலக்கண பிழைகள் உள்ளிட்டவற்றை சரி பார்க்க உதவுகிறது. இந்த அம்சத்திலேயே மேத் ஆட்டோ கரெக்ட் எனும் வாய்ப்பும் உள்ளது. பைல் மெனு மூலம் ஆட்டோ கரெக்ட் பகுதிக்கு சென்று இந்த வசதியை இயக்கிவிட்டால் அதன் பிறகு கணித சமன்பாடுகளுக்கான குறியீடுகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். எண்ணற்ற குறியீடுகளுக்கான குறுக்கு வழி விசை இதில் உள்ளது. குறியீடுகளை எளிதாக இடைச்சொருக இந்த வசதி கைகொடுக்கும். இந்த பட்டியலில் இல்லாத குறியீடுகளை நாமே சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேக்யூஸ் ஆப் தளம் இது பற்றிய விரிவான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. : http://www.makeuseof.com/tag/microsoft-words-math-autocorrect-makes-equations-easier-to-type/

——–

மாற்றம் கோரும் மனு!

அமெரிக்காவின் கலிபோர்னியா என்றதும் சிலிக்கான் வேலி தானே முதலில் நினைவுக்கு வரும். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களின் தாய்வீடாக சிலிக்கான் வேலி அமைந்திருப்பது கலிபோர்னியாவுக்கு பெருமை தரும் விஷயம் என்றாலும் இதில் முரணான ஒரு விஷயம் இருக்கிறது. கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு முன்னிரிமை இல்லை என்பது தான் அது!
கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகளில் உயர்நிலை மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு காரணம் கல்லூரி அனுமதியில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களின் மதிப்பெண் வலியுறுத்தப்படுவது போல கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் முக்கியமாக கருதப்படுவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் இதை ஒரு விருப்ப பாடமாகவே அளிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் தேஎவு செய்வதிலும் அதில் தேர்ச்சி பெறுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலை வருந்த தக்கது மற்றும் மாற்றத்திற்கு உரியது என கருதுபவர்கள் ஒன்று சேர்ந்து கலிபோர்னிய கல்வி அமைப்பு ,கம்ப்யூட்டர் அறிவியலை அடிப்படையாக பாடமாக கருத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாற்றத்திற்கான கோரிக்கைகளை மனுக்களாக வெளியிட்டு ஆதரவு திரட்டும் சேஞ்ச்.ஆர்க் தளத்தில் ஒரு மனு வெளியிடப்பட்டு பத்தாயிரத்துக்கு மேல் ஆதரவு கையெழுத்துக்களை பெற்றுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் கலிபோர்னியா முன்னணியில் இருந்தும் கூட அங்குள்ள மாணவர்கள் தரமான கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை அணுக முடியாமல் இருப்பது குறித்தும், மாணவர்களின் எதிர்கால நலனுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தின் அடிப்படை எந்த அளவு முக்கியம் என்றும் இந்த மனு வலியுறுத்துகிறது.
மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வு செய்யும் துறை எதுவாக இருந்தாலும் 21 ம் நூற்றாண்டில் அவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலில் அடிப்படை அறிவு பலமாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் மாணவர்களின் கணிணி சிந்தனை மற்றும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொள்ள வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல புதிய்வற்றை படைக்கும் ஆற்றலையும் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கலிப்போர்னியா கவர்னர் கெவின் நியூசம் எழுதியுள்ள கடிதத்தில் அல்ஜீப்ரா ,போல கால்குலஸ் போல் கம்ப்யூட்டர் அறிவியலும் முக்கியமாக கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கவனிகக் வேண்டியது கலிபோர்னியா மட்டும் அல்ல;நாமும் தான் இல்லையா!

———

பேஸ்புக்கில் வருகிறது டிஸ்லைக் பட்டன்

09152015_pqa_12
சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். டிஸ்லைக் பட்டன் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக் விளங்குகிறது. பேஸ்புக்கில் வெளியாகும் பதிவுகள் மற்றும் கருத்துக்களை லைக் செய்யும் வசதி பயனாளிகளிடம் பிரபலமாக இருக்கிறது.பேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கான எளிய வழியாக லைக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட பதிவுக்கு அதிக லைக் கிடைப்பது என்பது அதன் செல்வாக்கிற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.

லைக் பட்டன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் எல்லா சூழல்களுக்கும் அது பொருத்தமானதாக இல்லை. சோகமான மற்றும் எதிர்மறையான பதிவுகளுக்கு கூட பயனாளிகள் லைக் செய்யும் தன்மை பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பேஸ்புக்கில் லைக் பட்டன் போலவே டிஸ்லைக் பட்டன் தேவை எனும் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், டிஸ்லைக் வசதியை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பயனாளிகளுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க், பலரும் பல ஆண்டுகளாக டிஸ்லைக் பட்டன் வசதி தேவை என கோரி வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் இது பற்றி கேட்டுள்ளனர். இன்று மிகவும் விசேஷமான நாள். ஏனெனில் இந்த வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை இன்று அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

எனினும் இந்த டிஸ்லைக் பட்டன் வசதி எதிர்மறையான தன்மையில் பயன்படுத்தும் வகையில் இருக்காது என்றும் மார்க் கூறியுள்ளார்.

மற்றவர்களின் பதிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்காக அல்லாமல்,சோகமான கருத்துக்கள் கொண்ட பதிவுகளை பார்க்கும் போது இந்த வசதி பயன்படுத்தப்படுவது பொருத்தமாக இருக்கும் என்றார் அவர்.
பயனாளிகள் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்தவே இந்த வசதியை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
எல்லா தருணங்களுமே மகிழ்ச்சியானவை அல்ல,ஒருவர் சோகமான ஒன்றை பகிர்ந்து கொண்டால் அதை லைக் செய்வது ஏற்றதாக இருக்காது என்றும் கூறிய மார்க் ,நண்பர்கள் மற்றும் மக்கள் இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளவும், சோகத்தை உணரவும் முடிகிறது என்பதை வெளிப்படுத்தும் வழியை விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஜக்கர்பர்க் அறிவிப்பு:http://newsroom.fb.com/news/2015/09/highlights-from-qa-with-mark-8/

——-