Tag Archives: டிஜிட்டல்

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன.

இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது.

திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார்.

ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து க‌டினமாக‌ இருக்காது.ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌மான‌ ஃபேஸ்புக் கண‌க்கின் இல‌க்கண‌ப்ப‌டி ஒவ்வொருவ‌ரின் அறிமுக ப‌க்க‌த்தில் த‌ங்க‌ள் பிற‌ந்த‌ தேதி ம‌ற்றும் வாழ் நிலையை குறிப்பிட‌ வேண்டும்.அதாவ‌து திரும‌ண‌மாகி விட்ட‌தா அல்ல‌து த‌னி ந‌ப‌ரா (ஆங்கில‌த்தில் சிங்கில்)என‌ தெரிவிக்க‌ வேண்டும்.

என‌வே திரும‌ண‌மாகாம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ள் இல‌வாழ்கக்கையில் நுழைந்த‌தும் த‌ங்க‌ள் ஃபேஸ்புக் நிலையை மாற்றிக்கொள்வ‌து தான் ச‌ரி.என‌க்கு திரும‌ண‌மாகி விட்ட‌து என்னும் ம‌கிழ்ச்சியோடு ஃபேஸ்புக்கில் இந்த‌ த‌க‌வ‌லை தெரிவிப்ப‌து ஒரு ஆன‌ந்த‌மான‌ விஷ‌ய‌ம் தான்.

இத‌ உட‌னேவும் செய்ய‌லாம் கொஞ்ச‌ம் அவ‌காச‌ம் எடுத்துக்கொண்டும் செய்ய‌லாம்.

ஹ‌ன்னா ம‌ண‌மேடையிலிருந்தே செய்திருக்கிறார்.ஆம் த‌ன‌து செல்போன் மூல‌ம் அவ‌ர் ஃபேஸ்புக் ப‌க்க‌த்தில் தான் திரும‌ண‌மாகி விட்ட‌ த‌க‌வ‌லை ப‌திவு செய்தார்.அதோடு டிவிட்ட‌ருக்கு சென்று திரும‌ண‌ம் ஆகிவிட்ட‌தை அறிவித்தார்.

டிரேசியொடு ம‌ணமேடையில் நின்றுக்கொண்டிருக்கிறேன்.அவ‌ள் என் ம‌னைவியாகி ஒரு க‌ண‌ம் தான் ஆகிற‌து என‌ ஆன‌ந்த‌ம‌ய‌மாக‌ அந்த‌ அறிவிப்பு அமைந்திருந்த‌து.

இப்ப‌டி த‌ன‌து வ‌லையுல‌க‌ தொட‌ர்புக‌ளுக்கு திரும‌ண‌ செய்தியை ம‌ண‌க்கோல்த்திலேயே ப‌கிர்ந்து கொண்ட‌தோடு இந்த‌ காட்சியை அப்ப‌டியோ விடியோவாக்கி யுடியூப்பிலும் ப‌திவேற்றினார்.

க‌ல்யான‌த்திற்கு புகைப்ப‌ட‌ம் விடியோ எடுப்ப‌து போல‌ ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளும் இனி புதிய‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளாக‌லாம்.

(நிற்க . ஃபேஸ்புக் வாழ்நிலை த‌க‌வ‌ல் மாற்ற்ம் விவாக‌ர‌த்துக்கும் ஏன் கொலைக்கும் வித்திட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் உண்டு .அவை ப‌ற்றி விரைவில்…)

——

link;
http://mashable.com/2009/12/01/groom-facebook-update/

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 3

foureyed2
(நேற்றைய தொடர்ச்சி)

வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தபிறகு அந்த படத்தை வெற்றிபெறச் செய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டனர்.
.
எப்போதுமே பின்னணித் தகவல் களுக்கு மதிப்பு உண்டல்லவா? அதாவது ஒரு படம் உருவாக்கப்பட்ட விதம் அது தயாரிப்பு நிலையிலிருந்தபோது நடைபெற்ற சங்கதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும் அல்லவா? ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கும்போது தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை இப்படி பகிர்ந்துகொள்ள தீர்மானித்தனர். அதேபோல இந்த படத்தை படவிழாக்களுக்கு அனுப்பிய அனுபவங்களையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்த முடிவு செய்தனர்.

படத்தின் பின்னணி தகவல்களை படம் எடுக்கப்பட்ட விதத்தை படமாக்கி அதனை பாட்காஸ்டிங் முறையில் ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். பாட்காஸ்டிங் என்பது ரசிகர்களின் கம்ப்யூட்டரை தேடி வரும் கோப்பு என்று சொல்லலாம். ஆர்எஸ்எஸ் என்று சொல்லப்படும் செய்தியோடை வசதி வழியே இவை வந்து சேருகின்றன.

பொதுவாக ஆடியோ கோப்புகளே பாட்காஸ்டிங் முறையில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. வீடியோ கோப்புகளுக்கும் இது ஏற்றதாக கருதப்பட்டாலும், அதற்கு தேவை யான சாதனங்கள் அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் வீடியோ வசதி கொண்ட ஆப்பிளின் ஐபாடு அறிமுகமான காலத்தில், பாட் காஸ்டிங் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டது மிகவும் கச்சிதமாக பொருந்தி வந்தது.

பலரும் தங்கள் வீடியோ ஐபாடில் இந்த பாட்காஸ்டிங் காட்சிகளை விரும்பி பார்த்தனர். வீடியோ ஐபாடு பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த காட்சிகளும் அதனால் பிரபலமாகின. ஐடியுன்ஸ் தளத்திலும் இவை பரிந்துரைக்கப்பட்டன. விளைவு ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானது.

படத்தை எடுத்த விதம், ஸ்லாம்டான்ஸ் படத்திற்கு அதை அனுப்பிய கதை, என படம் சம்பந்த மான அனுபவங்களை பாட்காஸ்டிங் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அப்படியே படத்தை சில தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு, அதனை பார்க்க வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பாட்காஸ்டிங் பார்த்து ரசிகர்கள் தங்கள் ஊரில் படத்தை திரையிட விருப்பமா என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டு அந்த தகவலை வரைபடம் மூலம் வெளியிட்டனர். படம் திரையிடப் பட்ட போது அதிக விளம்பரம் இல்லாமல் பலர் தியேட்டருக்கு வந்து பார்த்தனர்.

தனிப்பட்ட முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட படத்திற்கு இத்தகைய வரவேற்பு மிகவும் பிரம்மாண்டமானது. பொதுவாக வர்த்தக ரீதியில் தயாரிக்கும் படங்களையே பெரிய அளவில் வெளியிட்டு, அவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை ஏற்படுத்துவது சாத்தியமாக இருக்கிறது. ஆனால் சாதாரண எடுக்கப்படும் படத்திற்கும் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட முடியும் என்பதை இந்த படம் உணர்த்தியிருக்கிறது. இன்டெர்நெட் மூலம் சாத்தியமாகும் சக்திவாய்ந்த வழிகளைக்கொண்டே இதனை சாத்தியமாக்கிக்கொள்ளலாம் என்பதை இந்த படம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

2005ம் ஆண்டில் படம் எடுத்து முடிக்கப்பட்டது. 2006ல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த படம் இன்டெர்நெட் உலகில் பேசப்பட்டு வருகிறது. இன்று வரை படத்தின் டிவிடிக்கள் விற்பனையாகி வருகின்றன.

சிறிய அளவில் எடுக்கப்படும் படங்கள் இத்தனை நீண்ட காலத்துக்கு பேசப்படுவதாக இருப்பது சாதாரண மான விஷயம்தான். இதற்கும் இன்டெர் நெட்டே காரணமாக இருக்கிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப் படக்கலையை மிகவும் ஜனநாயக மயமாக்கியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த தன்மையைக் கொண்டு எவர் வேண்டுமானாலும் சுலபமாக படத்தை எடுக்கலாம் என்னும் நிலை இங்கு இருக்கிறது.
படத்தை எடுப்பது மட்டுமல்ல, அதனை விநியோகிப்பதும் கூட சுலபமானதுதான்.

விநியோகிப்பது மட்டுமல்ல அந்த படத்தை ரசிகர்கள் பார்க்கச்செய்வதும் கூட படைப்பாளி களின் கையிலேயே இருக்கிறது. இதற்கு தாராளமாக டிஜிட்டல் ஆயுதங் களை பயன் படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கிய கிரம்லே, இனி பாட்காஸ்டிங்தான் திரைப்படங்களின் எதிர்காலமாக விளங்கப்போகிறது என்று நம்பிக்கையோடு கூறுகிறார். சிறிய அளவிலான படங்கள் மட்டுமல்ல, விநியோகிப்பதற்கு மூன்றாம் நபர்களை தவிர்க்க விரும்பும் வர்த்தக ரீதியான தயாரிப்பாளர்கள் கூட இந்த வழிகளை பின்பற்றலாம் என்று அவர் கூறுகிறார்.

எப்படியும் படைப்பாளிகள் நேரடியாக ரசிகர்களை சென்றடை வதையே விரும்புகின்றனர் என்றும், அதற்கு இன்டெர்நெட் இப்போது மிகச்சரியான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

இன்டெர்நெட் நிபுணர்கள் பலர் நீண்டகாலமாகவே இந்த கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பல படைப்பாளிகள் இந்த வழிகளை மேற்கொள்ள முன்வரும்போது, திரைப்பட உலகில், டிஜிட்டல் புரட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

———–

link;
www.foureyedmonsters.com

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 1

foureyedஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அதோடு அதன் இயக்குனர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்!

.
இந்தப்படம் உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அந்த படத்தின் மீது நிச்சயம் மதிப்பு ஏற்படவே செய்யும். அதைவிட இயக்குனர்கள் மீது அதிக மதிப்பு ஏற்படும். காரணம் டிஜிட்டல் உலகில் புதிய பாதைக்கு இந்த படத்தின் மூலம் அவர்கள் வழிகாட்டியிருக்கின்றனர்.

டிஜிட்டல் உலகில் காத்திருக்கும் புரட்சிக்கான முன்னோடிகளாகவ’ம் அவர்களை கருதலாம். ஒரு படத்தை வெளியிடவும், அதற்கான ரசிகர்களை தேடிக்கொள்ளவும் இன்டெர்நெட்டை எப்படி எல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ள விதம் உண்மை யிலேயே பாராட்டத்தக்கது.

இதையே வேறு விதமாகச் சொல்வதானால் இன்டெர்நெட்டை மட்டுமே நம்பி ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்று விட முடியும் என்பதற்கான வெற்றிகரமான உதாரணமாக அவர்கள் விளங்கு கின்றனர். இதற்காகவே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்திற்கு நவீன திரைக்காவிய அந்தஸ்தை வழங்கலாம்.இந்தப்படம் எடுக்கப்பட்ட விதமே கொஞ்சம் சுவாரசியமானது.

அமெரிக்காவின் புரூக்லைன் நகரில் வசிக்கும் ஆரின் கிரம்லே மற்றும் சூசன் பைஸ் காலத்தில் இருந்து இந்தக் கதை துவங்குகிறது. இங்கே “இன்டெர்நெட் மூலம்’ என்பதை சேர்த்துக்கொள்ள வேண்டும்!

வீடியோகிராபரான கிரம்லேயும் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த சூசனும் இன்டெர்நெட் மூலம் தான் அறிமுகமாகி காதல் வயப்பட்டார் அதன்பிறகே காதலுக்கே உரிய நெகிழ்ச்சியும், டிஜிட்டல் உலகிற்கு உரிய திருப்பங்களில் இணைந்த இனிமையான காதல் அனுபவம் சாத்திய மானது. அந்த அனுபவத்தை பதிவு செய்ய இருவரும் தீர்மானித்தபோது, ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ்’ உருவானது.
இன்டெர்நெட் மூலம் காதல் தேடலில் ஈடுபடும் தற்கால இளைஞர்களின் வழக்கப்படி, கிரம்லே டேட்டிங் தளம் ஒன்றில் தான் நட்பும், காதலும் பாராட்டக்கூடிய இளம்பெண் கிடைக்க வாய்ப்புண்டா என்று தேடிக் கொண்டிருந்தார். காதல் வலை கொஞ்சம் பெரிதாகவே விரியட்டும் என நினைத்த கிரம்லே நூறு இளம் பெண்களுக்கு மேல் தேர்வு செய்து அனைவருக்கும் இமெயில் அனுப்பி முதல் கட்ட நட்புறவை ஏற்படுத்த முயன்றுக்கொண்டிருந்தார். அவர்களில் சூசனும் ஒருவர்.

சூசனுக்கு அனுப்பிய இமெயிலில் நியூயார்க் நகருக்கு வந்தது ஏன்? உங்கள் புகைப்படங்களை அனுப்பி வைக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகளை கிரம்லே கேட்டிருந்தார். கூடவே உங்கள் அருகில் நான் மயங்கி விடுவேன் என்றும் எழுதியிருந்தார்.

டேட்டிங் தளத்தில் இப்படி வழியும் பலரை தினந்தோறும் எதிர்கொள்ளும் சூசன் இதற்கு பட்டும் படாமலே பதில் அளிக்க முற்பட்டார். அவர் நழுவி விடவும் விரும்பவில்லை. அதே நேரத்தில் உடனடியாக நட்புறவுக்கும் தயாராக இல்லை. “கிரம்லே’ எப்படிப் பட்டவர் என்று ஆழம் பார்த்துவிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என நினைத்தார்.

அதன்படியே தான் வேலை பார்த்து வந்த ரெஸ்டாரண்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் வருமாறு அழைப்பு விடுத்தார். தன்னைப்பற்றி வேறு எந்த தகவலையும் அவர் பகிர்ந்து கொள்ள வில்லை.
கிரம்லேவும் அவருக்கு சளைத்த வராக இல்லை! கூலிங் கிளாஸ் மற்றும் பேஸ்டால் தொப்பி அணிந்து கொண்டு வீடியோ கேமராவோடு வந்து சேர்ந்தார்.

இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. கிரம்லே தனது வீடியோ கேமராவில் படம் எடுத்தார். சூசன் அந்த இடத்திலிருந்து நழுவிச் சென்று விட்டார்.மறுநாள் கிரம்லே வீடியோ படக்காட்சிகளை புகைப்படமாக்கி சூசனுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த சூசன் ஒருவித சந்தோஷத்தோடு எனது காதல் நாயகன் நான் எதிர்பார்த்தது போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதாக பதில் அனுப்பி வைத்தார். அதோடு இனி நாம் பேச சம்பிரதாயமான வழிகள் ஒத்து வராது. கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து பழகுவோமே என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரி என்று லேசான உற்சாகத்தோடு கிரம்லே ஒப்புக்கொண்டார்.

இந்த இடத்தில்தான் அவர்களுடைய கலைமயமான காதல் பயணம் ஆரம்பமானது!
வழக்கமான காதல்கள் போல் பார்த்துக்கொள்ளலாம். சந்தித்துக் கொள்ளலாம். ஆனால் பேச்சு மட்டும் கூடாது என தீர்மானித்துக்கொண்டனர். இந்த உடன்பாட்டின் அடிப்படையில் புருக்லினில் உள்ள நீர் வீழ்ச்சி அருகே முதல் சந்திப்பு நடைபெற்றது. இருவரும் பார்த்துக்கொண்டனர்.

புன்னகைத்துக்கொண்டனர். பேசுவ தற்கு பதிலாக துண்டுச்சீட்டு எழுதி பரிமாறிக்கொண்டனர். படம் வரைந்து காட்டினர். ஒரே ஐ பாடில் இருவரும் பாட்டுக்கேட்டு மகிழ்ந்தனர். அடுத்ததாக சூசன், கலைப்பயிற்சி பெறுவதற்காக சென்றபோது, இருவரும் வீடியோ காட்சிகளை தயார் செய்து மெயில் மூலம் பரிவர்த்தனை செய்து கொண்டனர். இப்படியாக பேச்சு இல்லாத பேச்சாக காதல் வளர்ந்தது. ஆறு மாதத்தில் மிகவும் நெருக்கமாக இருவரும் ஒரே அறையில் வசிக்கும் அளவுக்கு வந்து விட்டனர்.

அப்போது பார்த்தால் வீடியோ காட்சிகளாகவும், இமெயில் குறிப்புகளாகவும் காதல் நினைவுச் சின்னங்கள் குவிந்து கிடந்தன. வழக்கமான முறைக்கு மாறாக வித்தியாசமான முறையில் வளர்ந்த காதலை மற்றவர்கள் பார்க்க பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அந்த காதலர்கள் மனதில் தோன்றியது. ஏற்கனவே வீடியோ காட்சிகள் கொஞ்சம் இருப்பதால் அவற்றை ஆரம்பமாக வைத்துக்கொண்டு தங்கள் காதல் கதையை ஒரு முழு நீள படமாக எடுக்க நினைத்தனர்.

இந்த எண்ணம் இந்த உற்சாகத்தோடு இருவரும் வேலையை உதறிவிட்டு வீடியோ கேமராவை கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி விட்டனர். அடுத்த 18 மாதங்களுக்கு கிரிடிட் கார்டு கடனை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்பில் ஈடுபட்டு முழு படத்தையும் எடுத்து முடித்து விட்டனர். இந்த படத்திற்கு “ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ்’ என பெயர் வைத்தனர்.

தங்கள் கதையை தாங்களே நடிக்க ஒளிப்பதிவாளர் ஒருவரைக் கொண்டு அந்தக்காட்சிகளை படம் பிடித்தி ருந்தனர். கலைத்தன்மை கொண்ட காதலை விவரித்ததால் படம் சுவாரசிய மாகவே வந்திருந்தது.தாங்களே நடித்து தாங்களே இயக்கிய படத்தை எடுத்து முடித்தாயிற்று! சரி படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்வது எப்படி?

(டிஜிட்டல் பயணம் தொடரும்)

—————-
link;
www.foureyedmonsters.com

ஒலி ஏணி கேளீர்

ladder1அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர்.
.
இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், தங்கு தடையில்லா காட்டாறாக வும் பாயும் நிலையில் எந்த பொருளும் தனிமரமாக நின்று கொண்டிருப்பதில் பொருள் இல்லை. மக்கள் அவற்றை பயன்படுத்தினால் மட்டும் போதாது, தொடர்பு கொள்ளவும் சாத்தியம் இருக்க வேண்டும். சாதாரணமாக நினைக்கக் கூடிய ஏணிக்கும் இந்த கோட்பாடு பொருந்தும் என்னும் நோக்கத்தோடு, ஒலி ஏணி ஆங்கிலத் தில் டோன் லேட்ர்(Tone ladder) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏணியின் உபயோகம் எல்லோரும் அறிந்ததே. பணி நிமித்தமாக அதில் ஏறி இறங்குவதை ஏற்ற இறக்கமான ஒத்திகையோடு தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை தான் ஒலி ஏணி செய்கிறது.

விஷேசமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒலி ஏணியில் உள்ள படிகள், தொடு உணர்வை புரிந்து கொள்ளக் கூடிய சென்சார் சாதனங்கள் பொருத்தப் பட்டுள்ளன. படியின் உள்ளே கண் ணுக்கு தெரியாத வகையில் கேபிள் களும் இணைக்கப்பட்டுள்ளன.

பாடும் படியான இதில் கை வைக்கும் போதும் சரி, கால் வைத்து ஏறும் போதும் சரி, அழகிய ஒலி வடிவம் உண்டாகும். படிகள் மீது கொடுக்கப் படும் அழுத்தத்திற்கு ஏற்ப, ஒலியின் அளவும் பலமாகவே இருக்கும். ஆக, படிகளில் கால் வைத்து ஏறி இறங்கும் தன்மைக்கு ஏற்றபடி, ஒலியும் மாறு படும். அந்த உணர்வோடு-, ஈடுபாடு காட்டி படிகளில் ஏறி இறங்கினால், இசைக்கருவியை மீட்டுவதுபோல சங்கீத அலைகளை எழுப்பவும் முடியும்.

ஒரு விதத்தில் பார்த்தால், ஒட்டுமொத்த உடலசைவை பயன் படுத்தி, இசையை உருவாக்க
வழி செய்வது இந்த ஏணியின் தனிச்சிறப்பு. முதல் பார்வைக்கு சிறுவர்கள் இந்த ஏணியில் ஏறி விளையாடுவதை பெரிதும் விரும்புவார்கள் என்று சொல்லத்தோன்றலாம். இல்லை, பெரியவர்களும் அதே விதமான ஆர்வத்தோடு, ஏணியில் விளையாடி மகிழலாம்.

இந்த ஏணி இரட்டை ஏணியாக ஜோடியாகவே வருவதால் துணைக்கு ஒருவரை அழைத்துக்கொண்டும் படிகளை பாட வைக்கலாம். ஒருவர் மற்றவர் எழுப்பும் ஒலிகளை கேட்ட படி, அதற்கு பதில் போல தம்முடைய இயக்கத்தை அமைத்துக் கொண்டால், நேரம் போவதுகூட தெரியாமல், இரு வர் மனதும் இணைந்த இசைமயமான விளையாட்டில் திளைத்திருக்கலாம்.

இரண்டாவது ஏணியோடு, வயர்லஸ் தொடர்பு கொண்ட மூன்றாவது ஏணி யும் உண்டு. மேலும், ஒலி அலைக ளோடு, ஒளி வட்டங்களையும் உருவாக் கிட முடியும். படிகள்மேல் பாதம் பதிவதற்கு ஏற்ப, அருகே உள்ள திரையில் ஒளி வட்டங்கள் தோன்றி மறையும். இந்த வகையில், ஒலி ஏணி பங்கேற்பு விளையாட்டு மட்டும் அல்ல, பார்த்து மகிழக்கூடிய நிகழ்வுகளையும் கூடத் தான். ஒரு இசை நாடகம்போல, ஒலி- ஒளி நாடகத்தை நிகழச்செய்து பார்வை யாளர்களை மெய்மறக்க வைப்பதும் சாத்தியம்.

டிஜிட்டல் உலகின் மேன்மையை தொட்டுப்பார்க்கும் நவீன கலை கண்காட்சியில் ஒரு பகுதியாக, இந்த ஒலி ஏணி அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்கால சாத்தியங்களை அறிய இசையும் தொழில் நுட்பமும் சங்கமிக் கும் இடத்தில், சோதனை பயனாக வெள்ளோட்டம் விட்டும் பார்க்கும் முயற்சி. அட, என்ன புதுமை என லயித்து நின்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதை பாட்டாளிகளின் ஏணியாகவும் போற்றலாம். ஏணிகளை அதிகம் பயன்படுத்துவது யார்? உழைக்கும் வர்க்கத்தினர்தானே.

உழைப்பாளிகள், சலிப்போடு ஏறி இறங்கும் சாதனமாக இல்லாமல் வேலை செய்யும் போதே, ஈடுபாட் டோடு இசைத்து மகிழும் இசை ஏணியாகவும் இது அமையலாம் தானே! பாட்டாளிகளின் களைப்பை விரட்ட வும் கைகொடுக்கலாம் தானே!

—-
link;
http://www.tonleiter.com/

டிஜிட்டல் உலக சுமைதாங்கி

டிஜிட்டல் உலகில்தான் நமக்கு எத்தனை சுமைகள். அது மட்டுமா? குழப்பமாகவும் அல்லவா இருக்கிறது. எந்த கோப்பை எங்கே வைத்தோம் என்று தெரிவதில்லை. எந்த படம் எங்கே இருக்கிறது என்பதும் புரிவதில்லை. அதற்குள் புதிய படங்களும், கோப்புகளும் வந்து சேர்ந்து விடுகின்றன. அவற்றை சேமித்து வைப்பதற்கான இடமும் இல்லாமல் போகிறது.
.
இப்படி டிஜிட்டல் உலக குழப்பங்களுக்கு தீர்வாக புதியதொரு இணையதளம் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இணையதளம் அல்ல. ஏற்கனவே இருந்த இணைய தளம் புதிய வடிவம் எடுத்துள்ளது.

“புட் பிளேஸ்’ (www.putplace.com) எனும் அந்த இணையதளத்தில் நீங்கள் உங்களுடைய கோப்புகள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இன்னும் சகல விதமான டிஜிட்டல் சங்கதிகளையெல்லாம் சேமித்து வைக்கலாம்.

அதாவது உங்களுடைய கம்ப்யூட்டரில் இதற்கான இருப்பிடத்தை தேட வேண்டிய அவசியமில்லை. புதிய கோப்புகளை சேமித்து வைக்க பழைய கோப்புகளை டெலிட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை. அவ்வாறு செய்யும் போது பின்னாளில் தேவைப்படக் கூடிய கோப்புகளை இழந்து விடுவோமோ என்ற குழப்பமும் இல்லை.

நேராக “புட் பிளேஸ்’ இணையதளத்திலேயே நம்முடைய டிஜிட்டல் சங்கதிகளை சேமித்து வைக்கலாம். இதற்காக அந்த தளத்தில் நமக்கென தனி பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.
விஷயம் அறிந்தவர்களுக்கு இதுவொன்றும் புதிய சேவை அல்லவே என்று கேட்க தோன்றும்.

கோப்புகளை வேறிடத்தில் சேமித்து வைக்கும் வசதியை இதற்கு முன்னரே ஒரு சில இணையதளங்கள் வழங்கி வருகின்றனவே என்னும் சந்தேகம் எழும். நியாயம்தான். “புட் பிளேஸ்’ இந்த சேவையை வழங்கும் முதல் தளமல்ல. ஏற்கனவே பல தளங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.

ஆனால் “புட் பிளேஸ்’சில் சில குறிப்பிடத்தக்க விசேஷ அம்சங்கள் இருக்கின்றன. டிஜிட்டல் சுமையை குறைப்பதோடு அதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தையும் நீக்கி விடுகிறது.
இன்டெர்நெட் மற்றும் கம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பலவிதமான ஆவணங்களை சேமித்து வைக்க வேண்டி வருகிறது.

எளிமையான நோட்பேட்டில் துவங்கி ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றை சேமித்து வைக்க வேண்டி இருக்கிறது. இன்னும் சிலருக்கு ஒலி கோப்புகளும் சேர்ந்து கொள்கிறது.

அதோடு வலைப்பதிவு செய்பவர்களாக இருந்தால் அது தொடர்பான பதிவுகள், கட்டுரைகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்க வேண்டியிருக்கிறது. பாட் காஸ்டிங் மூலம் வரும் ஒலி கோப்புகளையும் சேர்த்து வைக்கும் கட்டாயம் ஏற்படுகிறது.

யு டியூப் பிரியர்கள் என்றால் (இப்போது யார்தான் யு டியூப் பார்க்காமல் இருக்கிறார்கள்). அந்த தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் வீடியோ காட்சிகளையும் சேமித்து வைக்க வேண்டியிருக்கிறது.

இதை தவிர இணையதளங்களில் பார்க்கும் தகவல்கள், இமெயில் மூலம் வந்து சேரும் புகைப்படங்கள் போன்றவற்றையும் சேமித்து வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் செல்போன், டிஜிட்டல் கேமரா மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலிருந்தும் கோப்பு களை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது.

நபருக்கு நபர் இது மாறுபடலாமே தவிர எல்லோருக்கும் இதற்கான தேவை இருக்கிறது என்பதே விஷயம். ஆனால் சங்கடம் என்னவென்றால் இத்தனை கோப்புகளையும் சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்முடைய கம்ப்யூட்டரில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே அதிக கோப்புகளை சேர்க்கும் நிலை ஏற்பட்டால் கம்ப்யூட்டர் முடங்கி போய் விடும். அத்தகைய நேரத்தில் ஏற்கனவே உள்ள கோப்பு களை டெலிட் செய்வதை தவிர வேறு வழியில்லை.

அப்படியே கோப்புகளை டெலிட் செய்து திறமையாக நிர்வகித்து வந்தாலும் கூட, தேவையான நேரத்தில் குறிப்பிட்ட கோப்பை தேடி கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். எந்த கோப்பு, எந்த இடத்தில் எப்போது சேமித்து வைத்தோம் என்று தெரியாமல் குழம்பி தவிக்க வேண்டியிருக்கும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இந்த இரண்டு பிரச்சனைகளுக்குமே சரியான தீர்வை “புட் பிளேஸ்’ இணையதளம் வழங்குகிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் அதன் பிறகு கொள்ளளவு பற்றி கவலைப்படாமல் நமக்கு தேவையான டிஜிட்டல் சங்கதிகள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

அப்படி சேமித்து வைத்த பிறகுதான் “புட் பிளேஸ்’ ஒரு மாயத்தை நிகழ்த்துகிறது. புகைப்படம் என்றால் அதனை உங்களுடைய பிளிக்கர் தளத்தின் பக்கத்தோடு இது அவற்றை இணைத்து விடுகிறது. அதே போல வீடியோ காட்சிகள் என்றால் யு டியூப் கணக்கில் சேர்த்து விடுகிறது.

இதனால் அந்த கோப்புகளை தேடுவது மிகவும் எளிமையானது. அதே நேரத்தில் அந்த கோப்புகளின் மூலபிரதியை சேமித்து வைக்கிறது. பிளிக்கர் அல்லது யு டியூப்பில் அதனை இழக்க நேரிட்டாலும் இங்கு வந்து தேடி எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு டிஜிட்டல் சங்கதிகளை அழகாக வகைப்படுத்தி அவற்றுக் குரிய இடத்தில் போட்டு வைக்கும் இந்த தன்மையின் காரணமாக குழப்பத்திற்கு இடமில்லாமல் தெளிவு பிறக்கிறது.

இந்த அம்சமே “புட் பிளேஸ்’ இணையதளத்தை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது.
வரும் காலத்தில் நம்முடைய டிஜிட்டல் சங்கதிகள் மேலும் அதிகரிக்க கூடும் என்றே கூறப்படுகிறது. எனவே “புட் பிளேஸ்’ போன்ற தளங்களின் சேவை மிகவும் இன்றியமையாதது.

தற்போது இந்த தளம் சோதனை வடிவில் அதாவது பீட்டா முறையில் இருக்கிறது. எனவே இதனை பயன்படுத்த கட்டணம் இல்லை; இலவசமானது. ஆனால் மேம்பட்ட சேவை தேவையென்றால் எதிர்காலத்தில் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை வரலாம்.

———–
link;
www.putplce.com