Tag Archives: சாப்ட்வேர்

புகைப்பட கொலேஜ்க‌ளை உருவாக்கும் இணைய‌த‌ள‌ம்

புகைப்ப‌ட‌ங்க‌ளை சேமித்து வைக்க‌வும் ப‌கிர்ந்து கொள்ள‌வும் உத‌வும் இணைய‌த‌ள‌ங்க‌ள் எத்த‌னையோ இருக்கின்ற‌ன‌.அந்த‌ வ‌ரிசையில் ஸ்கிரேப்வால்ஸ் தள‌த்தையும் சேர்த்துக்கொள்ள‌லாம்.

இருக்கும் புகைப்ப‌ட‌ ப‌கிர்வு சேவை த‌ள‌ங்க‌ள் போதாதா என்ற‌ அலுப்பான‌ எண்ண‌ம் த‌லைதுக்காக்கினாலும் இந்த‌ தள‌த்தை அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி ஒதுக்கிவிட‌ முடியாது.கார‌ண‌ம் ம‌ற்ற‌ புகைப்ப‌ட‌ ப‌கிர்வு த‌ள‌ங்க‌ளில் இருந்து மாறுப‌ட்ட‌து.மிக‌வும் மாறுப‌ட்ட‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை.ஆனால் சின்னதாக அழகானதாக மாறுபட்ட ஒரு சேவையை வழங்குகிறது.

புகைப்படங்களை சேர்க்கை சித்திரங்களாக மாற்றிக்கொள்ள உதவுவதே அந்த சேவை.சேர்க்கைச்சித்திரம் என்றால் கொலேஜ் என்று பொருள்.

வ‌ண்ண‌ங்க‌ளை கொண்டு ஓவிய‌ங்க‌ள் தீட்டுவ‌து ஒரு வ‌கை என்றால்,பல வண்ண காகித‌ துண்டுக‌ளை ஒட்டு வேலையாக சேர்த்து வைத்து அத‌ன் மூல‌மே சித்திர‌ங்க‌ளை உருவாக்குவ‌து கொலேஜ் என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌து.

மாட்ர்ன் ஆர்ட் போன்ற‌ நேர்த்தியும் சுவாராஸ்ய‌மும் கொலேஜ்ஜில் உண்டு.ஆனால் கொலேஜ் அத்த‌னை சுல‌ப‌மில்லை.அத‌ற்கு த‌னி திற‌ன் தேவை.

புகைப்ப‌ட‌ங்க‌ளை கொண்டே கொலேஜ் முறையில் ஒரு சித்திர‌த்தை உருவாக்க‌வும் செய்ய‌லாம்.இதை தான் மிக‌ சுல‌ப‌மாக‌ ஸ்கிரேப்வால‌ஸ் செய்து த‌ருகிற‌து.

இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ள் வ‌ச‌ம் உள்ள‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை ச‌ம‌ர்பித்தால் அவ‌ற்றை ஒன்றாக‌ சேர்த்து அழ‌கிய‌ உருவ‌மாக‌ மாற்றித்த‌ருகிற‌து.புகைப்ப‌ட‌ங்க‌ளை வெட்டி ஒட்டிய‌து போல‌ அழ‌காக‌ சேர்த்து மொத்த‌மாக‌ பார்க்கும் போது முழு உருவ‌மாக‌ தோன்றுகிற‌து.

திரும‌ண‌ கேக்,பேஸ்பால் ம‌ட்டை,காத‌ல் சின்ன‌ம் என‌ முப்ப‌துக்கும் மேற்ப‌ட்ட‌ உருவ‌ங்க‌ளில் புகைப்ப‌ட‌ங்க‌ளை உருவாக்கி கொள்ள‌லாம்.எந்த‌ உருவ‌ம் தேவையோ அத‌னை தேர்வு செய்த‌ பிற‌கு புகைப்ப‌ட‌ங்க‌ளை அப்லோடு செய்தால் அழ‌கான‌ கொலேஜ் த‌யாராகி விடுகிற‌து.

இவ‌ற்றை வெவேறு அள‌வுக‌ளில் பிரிண்ட‌ அவுட்டாக‌ அடுத்துக்கொள்ளும் வ‌ச‌தியும் இருக்கிற‌து.ஆனால் அத‌ற்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும்.இருப்பினும் இந்த‌ ப‌ட‌ங்க‌ளை இமெயில் மூல‌ம் அல்ல‌து பேஸ்புக் மூல‌ம் ப‌கிர்ந்து கொள்வ‌து இல‌வ‌ச‌ம் தான்.

புகைப்ப‌ட‌ங்க‌ளை வ‌ரிசையாக‌ அடுக்கி வைத்த‌து போல‌ பார்ப்ப‌தைவிட‌ இப்ப‌டி கொலேஜ் வ‌டிவில் பார்ப்ப‌து கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து தான்.

புகைப்ப‌ட‌ங்க‌ளை கொலேஜ்ஜாக்கும் போது இடைவெளி இல்லாம‌ல் மிக‌ லாவ‌க‌மாக‌ ஒட்ட‌ வைப்ப‌தாக‌ ஸ்கிரேப்வால்ஸ் பெருமைப்ப‌ட்டுக்கொள்கிற‌து.அதே போல‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை விரும்பினால‌ கொலேஜ்ஜுக்குள் வேறு இட‌ங்க‌ளிலும் மாற்றிக்கொள்ள‌லாம்.அப்போதும் இடைவெளி விழாம‌ல் மாற்றி அமைத்து த‌ருகிற‌து.

புகைப்ப‌ட‌ பிரிய‌ர்க‌ளை குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ளை ம‌ற்றும் கேளிக்கை குண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளை இந்த‌ சேவை நிச்ச‌ய‌ம் கவ‌ரும்.

இந்த‌ சேவையை உருவாக்கியுள்ள‌து அமெரிக்காவின் கெவின் பார்டர‌ஸ் என்ப‌வ‌ர்.மிக்ஸிக‌ன் ந‌க‌ரைச்சேர்ந்த‌ கெவினுக்கு ஒரு காத‌லி உண்டு.ஒரு முறை த‌ன‌து காத‌லிக்கு ப‌ரிச‌ளிக்க‌ விரும்பினார்.ப‌ரிசு வித்தியாச‌மான‌தாக‌வும் கொஞ்ச‌ம் நெருக்க‌மான‌தாக‌வும் இருக்க‌ வேண்டும் என‌ நினைத்த‌ அவ‌ர் இருவ‌ரும் சேர்த்து எடுத்துக்கொண்ட‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை ஒன்றாக‌ சேர்த்து கொலேஜ் வ‌டிவில் த‌ர‌ விரும்பினார்.

ஆனால‌ எவ்வ‌ள‌வு தேடியும் இணைய‌த்தில் அப்ப‌டி ஒரு சேவை இல்லாத்தால் த‌ன‌து ந‌ண்ப‌ர் ஒருவ‌ரின் உத‌வியோடு இதற்கான‌ சாப்ட்வேரை உருவாக்கினார்.காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் முத்த்மிடுவது போல் தோன்றிய அந்த‌ கோலேஜ் அற்புத‌மாக‌ இருக்க‌வே இத‌னை வைத்து ஒரு இணைய‌த‌ள‌த்தை உருவாக்க‌ தீர்மானித்த‌ன‌ர்.

இப்ப‌டி பிற‌ந்த‌து தான் ஸ்கிரேப்வால்ஸ் சேவை.

ஹைகூவில் ஒரு ராஜினாமா கடிதம்

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

ஆனால் அவரோ தனது வெளியேற்றத்தை கவித்துவமாக அறிவித்து வியக்க வைத்திருக்கிறார்.

சன் மைக்ரோசிஸ்டம்ஸ் டாப் பத்து சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று என கூறும் அளவுக்கு புகழும் செல்வாக்கும் பெற்றது.ஜாவா புரோகிராமிங்க் மொழி இந்நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் உருவாக்க‌ப்பட்டது.

 இதெல்லாம் பழங்கதை.சன் ஏகப்பட்ட பிரச்சனைகளூக்கு ஆளாகி மற்றொரு சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிளால் வாங்கப்பட்டு விட்டது.

இதுவும் கூட‌ ப‌ழைய‌ க‌தை தான். இப்போதைய‌ செய்தி என்ன‌வென்றால் ச‌ன் மைக்ரோசிஸ்ம‌ஸ் த‌ல‌மை அதிகாரியாக‌ இருந்த‌ ஜோனாத்த‌ன் ஸ்வார்ட்ஸ் ராஜினாமா செய்திருக்கிறார் என்ப‌தே.

இந்த‌ முடிவை அவ‌ர் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவில் அறிவித்திருக்கிறார். அதிலும் எப்ப‌டி தெரியுமா? அழ‌கான‌ ஹைகூ வ‌டிவில் க‌வித்துவ‌மாக‌ அத‌ன‌து வெளியேற்ற‌த்தை தெரிய‌ப்ப‌டுத்தியுள்ளார்.

ஆர‌க்கிள் ச‌ன் நிறுவ‌ன‌த்தை கைய‌க‌ப்ப‌டுத்திய‌து ந‌டைமுறைக்கு வ‌ருவ‌தை தொட‌ர்ந்து ஸ்வார்ட்ஸ் த‌ன‌து ப‌த‌வியில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

ச‌ன் நிறுவ‌ன‌த்தில் இது என‌து க‌டைசி நாள் என்று குறிப்பிட்ட‌ பின் ஒரு ஹைகூ வ‌டிவில் என‌து ராஜினாமா முடிவை அறிவிக்கிறேன் என்று குறிபப்பிட்டுள்ளார்.

பொருளாதார‌ சீர்குலைவு/அதிக‌ வாடிக்கையாள‌ர்க‌ளுக்கு பாதிப்பு/இனியும் த‌லைமை அதிகாரி இல்லை.

இது தான் அவ‌ர‌து ராஜினாமா ஹைகூ. ப‌த‌வி போனாலும் தொட‌ர்ந்து வ‌லைப்ப‌திவு செய்ய‌ப்போவ‌தாக‌ அவ‌ர் கூறியுள்ளார்.

ஸ்வார்ட்ஸ் முத‌லில் வ‌லைப்ப‌திவு செய்ய‌த்துவ‌ங்கிய‌ த‌லைமை அதிகாரிக‌ளில் ஒருவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

———–

http://twitter.com/openjonathan

இமெயிலுக்கு ஒரு முகமுடி

இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னப‌டுத்த வேண்டியிருக்கிற‌து. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் முகவரி தேவைப்படுகிற‌து. நம்பகமான தளங்கள் என்றால் இமெயில் சமர்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. ஆனால் ஒரு சில தளங்களில் இமெயில் முகவரியை தர தயக்கம் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தளம் அல்லது சேவையை பயன்படுத்த முடியாமல் போகலாம். இமெயில் முக‌வ‌ரியை சம‌ர்பிப்ப‌தில் இன்னோரு பிர‌ச்ச‌னையும் இருக்கிற‌து.இமெயில் முக‌வ‌ரியை தருவ‌து என்ப‌து திற‌ந்த‌வெளியில் ப‌ன‌த்தை வைப்ப‌து போல‌ தான்.அது க‌ள‌வாட‌ப்ப‌டும் வாய்ப்பு இருக்க‌வே செய்கிற‌து.இப்ப‌டி ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌டும் இமெயில்க‌ளை கொத்திச்செல்வ‌தற்காக‌ என்றே பாட்க‌ள் என்று சொல்ல‌ப்ப‌டும் குட்டி ரோபோக்க‌ள் இணைய‌த்தில் உலாவிக்கொண்டிருக்கின்ற‌ன‌. அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கு அழையா மெயில்க‌ளை அனுப்பி வைக்கும்.உங்க‌ள் முக‌வ‌ரி பெட்டியில் அடிக்க‌டு வ‌ந்து சேரும் எரிச்ச‌லூட்டும் வியாபார‌ ,விள‌ம்ப‌ர‌ மெயில்க‌ள் வ‌ந்து சேருவ‌து இப்ப‌டி தான். இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு அழ‌கான‌ ஒரு தீர்வு இருக்கிற‌து.http://scr.iம்/ இணைய‌த‌ள‌ம் அந்த‌ தீர்வை வ‌ழ‌ங்குகிற‌து.இமெயில் கோரும் எந்த‌ சேவையும் ப‌ய‌ன்ப‌டுத்தும் முன் இந்த‌ த‌ள‌த்திற்கு சென்று உங்க‌ள் இமெயிலை ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.உட‌னே அந்த‌ முக‌வ‌ரியை யாரும் ப‌டிக்க‌ முடியாத குறிச்சொற்க‌ளாக‌ மாற்றிவிடும். இனி இமெயிலுக்கு ப‌திலாக‌ இந்த‌ குறிச்சொற்க‌ளை ச‌ம‌ர்பிக்க‌லாம்.இவ்வாறு செய்வ‌த‌ன் மூல‌ம் உங்க‌ள் இமெயில் பாதுகாப்பான‌தாக‌ இருக்கும்.குறிச்சொற்க‌ள் மூடிய‌ இந்த‌ இமெயிலை ரோபோக்க‌ள் ப‌டிக்க‌ முடியாது.அவ‌ற்றோடு கேட்க‌ப்ப‌டும் ர‌க‌சிய‌ கேள்விக்கு ப‌தில் அளிக்கும் ந‌ப‌ர்கள் ம‌ட்டுமே இத‌னை ப‌டிக்க‌ முடியும். சூவ‌ர்ஸ்ய‌மான‌ சேவை;முய‌ற்சித்து பார்க்க‌லாம்.

————

link;http://scr.im/

டிவிட்டர் சாதனையாளர்களும், தேவதைக‌ளும்

twஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவது ஒரு நாளில் டிவிட்டர் மூலம் அதிக செய்திகளை பகிர்ந்து கொண்டவர். தொடர்ந்து அதிக நாட்கள் டிவிட்டரில் அதிக செய்திகளை வெளியிட்ட சாதனையாளர்களும் உருவாகலாம்.இந்த சாதனையை முறியடிக்க போட்டா போட்டி ஏற்படலாம். இந்தப் போட்டியில் முந்துவதற்காக விரைவாக டிவீட் செய்யும் உத்திகளும் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்படலாம். இதற்காகவே விசேஷ பயிற்சிகளும் அறிமுகமாகலாம். அதி விரைவாக டிவீட் செய்பவர்களை கண்டறிவதற்காக உலகலாவிய போட்டியும் நடத்தப்படலாம்.

.
அதிக டிவீட்களை செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அவற்றில் எத்தனை பயனுள்ளதாக இருக்கின்றன என்பதே முக்கியம் என்னும் விவாதமும் சூடு பிடிக்கலாம். ஒருநாள் முழுவதும் இடைவிடாமல் டிவிட்டர் செய்பவர்களும் உருவாகலாம். எது எப்படியோ, டிவிட்டரின் பயன்பாட்டில் புதுமைகளும், சாதனைகளும் தொடர்ந்து நிகழப் போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.
இப்படி உருவாக்கக் கூடிய டிவிட்டர் சாதனையாளர்களுக்கெல்லாம் முன்னோடி என்று அமெரிக்க பெண்மணி போனி ஸ்மால்லேவை (Bonney Smalley)குறிப்பிட வேண்டும்.

இவரை முதல் டிவிட்டர் தேவதை என்றும் சொல்லலாம். ஸ்மால்லே அப்படி என்ன சாதனையை செய்து விட்டார்?
அதிக டிவீட்களை வெளியிடுவதுதான் டிவிட்டரின் எவரெஸ்ட் என்றால் அந்த சிகரத்தை முதலில் ஏறி கடந்த டிவிட்டர் பயனாளி அவர்தான். ஆம், ஸ்மால்லே நாளொன்றுக்கு சராசரியாக 400 டிவீட்கள் மேல் செய்து ஒரே நாளில் அதிக டிவிட்டர் செய்தி வெளியிடுபவர் என்னும் பெருமையை பெற்றிருக்கிறார்.

இவர் டிவீட் செய்யும் வேகத்தை பார்த்து மிரண்டுப் போன டிவிட்டர் நிர்வாகம் இவரது டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆம், இந்த அளவுக்கு வேகமாகவும், சீராகவும் “டிவீட்’ செய்ய வேண்டும் என்றால் அதை செய்பவர் மனிதராக இருக்க முடியாது. இதற்காகவே உருவாக்கப்பட்ட சாப்ட்வேராக இருக்க வேண்டும் என சந்தேகித்து டிவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால் ஸ்மால்லே சாப்ட்வேர் அல்ல, அதி விரைவாக டிவீட் செய்யும் ஆற்றல் கொண்ட மனிதர் என்பதை தெரிய வந்த பின் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதனால் டிவிட்டர் கொஞ்சம் அசடு வழிய நேர்ந்தாலும், ஸ்மால்லேயின் விசேஷ ஆற்றலை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம்/ அல்லது பகிர்ந்து கொள்ளத் தோன்றும் போதெல்லாம் டிவீட் செய்யலாம். இப்படி ஒரு நாளுக்கு 10, 15 டிவீட் செய்யலாம். சில நாளில் 30,40 செய்யலாம்.ஆனால் நூற்றுக்கணக்கில் டிவீட் செய்வது சாத்தியமா என பலரையும் இந்த சம்பவம் ஸ்மால்லேவை நினைத்து வியக்க வைத்தது.

நாள் முழுவதும் டிவிட்டர் முன் அமர்ந்திருப்பதை வேலை என்றால் இது சாத்தியம்தான். அதாவது டிவீட் செய்வதே தொழிலாக வாய்த்தவர்கள் என்று பொருள்! ஆம், ஸ்மால்லே காம்காஸ்ட் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றுகிறார். வாடிக்கையாளர்களின் புகார்களை/ கோரிக்கைகளை படித்து அவற்றுக்கு டிவிட்டர் மூலம் பதிலளிப்பதே அவரது வேலை.

இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் ரொம்ப விவரமாகி விட்டார்கள். நிறுவன தயாரிப்பு/சேவையில் திருப்தி இல்லை என்றால் அவர்கள் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருப்பதோ அல்லது நிறுவனத்திடம் முறையிட்டு பதிலுக்கு காத்திருப்பதோ இல்லை. உடனே டிவிட்டரில் தங்கள் மனக்குறையை தட்டி விட்டு விடுகின்றனர்.

சில நேரங்களில் இத்தகைய டிவிட்டர் செய்திகள் பற்றிக் கொள்ளலாம்.மேலும் பல வாடிக்கையாளர்கள் இதே போன்ற புகார்களை டிவிட்டர் செய்யும் பட்சத்தில் நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்படலாம்.டிவிட்டரில் வெளியாகும் புகார்கள் செய்தி நிறுவனங்கள், நாளிதழ்கள் பார்வையில் பட்டு அவற்றால் ஊதி பெரிதாக்கப்பட்டால் பாதிப்புக்கு கேட்கவே வேண்டாம்.

இப்படி டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட புகார்களால் தலைகுனிந்து நின்ற நிறுவனங்கள் பற்றி நிறைய கதைகள் உள்ளன. டிவிட்டர் புகார்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நிறுவனங்களும் உணரத் தொடங்கி இருக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் இத்தகைய புகார்களை முளையிலேயே கிள்ளியெறியும் நோக்கத்தோடு டிவிட்டரில் தங்கள் நிறுவனம் தொடர்பான கருத்துகள் வெளியாகின்றனவா என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக என்றே ஒரு ஊழியரை நியமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

டிவிட்டர் வெளியில் நிறுவனம் பற்றி ஏதாவது சொல்லப்படுகிறதா என கண்கொத்தி பாம்பு போல பார்த்திருந்து அதற்கு பதில் அளித்து வாடிக்கையாளர்களை சாந்தப்படுத்துவதுதான் இவர்களின் வேலை. காம்காஸ்ட் சார்பில் இப்படி நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் போனி ஸ்மால்லே தினந்தோறும் டிவிட்டரில் தோன்றும் புகார்களை பார்த்து விளக்கம் அளிக்கும் பணியை அவர் மிகுந்த ஈடுபாட்டோடு செய்ததின் விளைவே நாளொன்றுக்கு சராசரியாக 400 டிவீட்கள் மூலம் அவரால் பதிலளிக்க முடிந்திருக்கிறது. டிவிட்டர் புகார்களைத் தவிர இமெயில், பேஸ்புக் மூலம் வரும் புகார்களையும் அவர் கவனித்து பதிலளிக்கிறார்.

வாடிக்கையாளர் தொலைபேசி செய்யும் போது ரிசிவரை காதில் வைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள தோழியோடு அரட்டை அடிக்கும் ஊழியரோடு இவரை ஒப்பிட்டுப் பாருங்கள்! ஸ்மால்லே கடமையில் மட்டுமே கருத்தாக புகார்களை படிப்பதும், டிவிட்டரில் பதிலளிப்பதுமாக இருப்பதால்தான் அவரை டிவிட்டர் தேவதை என்றும் வர்ணிக்கத் தோன்றுகிறது.

எப்போதும் டிவிட்டரில் பதிலளிக்க ஸ்மால்லே காத்திருப்பதால் அவர் மீதான வாடிக்கையாளர் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விளைவு வேலை முடிந்து செல்லும்போது ஸ்மால்லே டிவிட்டரில் அதை மறக்காமல் குறிப்பிட்டு விட்டு மறுநாள் சந்திப்பதாக விடைபெற்றுச் செல்கிறார்.

வருங்காலத்தில் மேலும் பல நிறுவனங்கள் இத்தகைய டிவிட்டர் தேவதைகளை பணியில் அமர்த்தலாம். இவர்கள் எப்பொழுதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை யாற்ற டிவிட்டரில் தயாராக இருக்க வேண்டும் என்பதால் விரைவாக டிவிட்டர் செய்யும் கலையையும் அதில் ஈடுபாட்டையும் வளர்த்துக் கொண்டாக வேண்டும்.

நிறுவனங்கள் மட்டுமல்ல, வேறு அமைப்புகளும், மருத்துவமனை போன்றவைகளும் கூட டிவிட்டர் பிரதிநிதி ஒருவரை நியமிக்கலாம். எங்கெல்லாம் உடனடி விளக்கங் களும், தகவல் பரிமாற்றம் தேவையோ அங்கெல்லாம் ஒரு டிவிட்டர் பிரதிநிதி தேவைப்படலாம்.

உதாரணத்திற்கு ரேஷன் அலுவலகம் போன்ற அரசு இலாகாக் களில் பொதுவாக காணப்படும் குறைகள் முறையீடுகள், சந்தேகங் கள் ஆகியவை குறித்து பொறுப்பான ஒருவர் டிவிட்டர் மூலம் விளக்கம் அளித்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்?

இதே போல மருத்துவமனையில் ஒரு நர்ஸ் (அ) வார்டுபாய், நோயாளிகளுக்கான தகவல்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்? இவ்வளவு ஏன், திருமணங்களின் போது யாராவது ஒருவர், விருந்தினர் களை வரவேற்பதையும், திருமண நிகழ்வுகளை வர்ணிப்பதையும் டிவிட்டர் செய்யலாம். விருந்தினர் களை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியையும், நலம் விசாரிப் பதையும் டிவிட்டரில் தெரிவிக்க லாம்.

இதற்கு ஒரு அழகான இளம்பெண்ணை லாப்டாப்போடு வரவேற்பு மேஜை அருகே அமர வைக்கலாம். இல்லை, கையில் செல்போனோடு சுற்ற விடலாம். (போன் மூலம் டிவிட்டர் செய்யலாம்). மிதமிஞ்சிய கற்பனையாக தோன்று கிறதோ! டிவிட்டர் பயன்பாட்டிற்கு எல்லையில்லை என்பதே விஷயம்!