Tag Archives: fats

இணையத்தில் ஒரு விநாடி

int
தளம் புதிது; இணையத்தில் ஒரு விநாடி

இணையத்தில் ஒரு விநாடியில் என்ன எல்லாம் நிகழ்கின்றன தெரியுமா? டிவிட்டர் பயனாளிகள் 6,000 குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1000 ஒளிபடங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. பேஸ்புக்கில் 52,083 லைக்குகள் விழுகின்றன. வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் 1,24,900 வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட்டில் 289 வாக்குகள் செலுத்தப்பட்டு 23 கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. முன்னணி தேடியந்திரமான கூகுளில் 54,000 தேடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. 2,501.825 மெயில்கள் அனுப்பப்படுகின்றன. 2,176 ஸ்கைப் அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இணைய பயன்பாடு பற்றிய இது போன்ற வியக்க வைக்கும் தகவல்களை இண்டெர்நெட் லைவ் ஸ்டேட்ஸ் (www.internetlivestats.com ) இணையதளம் அளிக்கிறது. ஒரு நொடியில் நிகழும் புள்ளிவிவரங்கள் என்பதால் இந்த தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த தகவல்கள் தவிர இணையத்தின் வளர்ச்சி மற்றும் இணைய போக்கு பற்றிய தகவல்களையும் இந்த தளத்தில் பார்க்கலாம். உதாரணத்திற்கு 1999ல் கூகுளுக்கு 50 மில்லியன் இணைய பக்கங்களை பட்டியலிட ஒரு மாதம் தேவைப்பட்டது. ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் இதை கூகுள் ஒரு நிமிடத்திற்குள் செய்துவிடும். அது மட்டும் அல்ல 5 ஆண்டுகளுக்கு முன் உலக மக்கள் தொகையில் 31.8 சதவீதம் பேர் தான் இணையத்தை
பயன்படுத்தக்கூடியவர்களாக இருந்தனர். இப்போது இது 46.1 சதவீதமாகி உயர்ந்திருக்கிறது.

இணையத்தின் வளர்ச்சியை அறிந்து கொள்ள இந்த இணையதளம் மீது ஒரு கண் வைத்திருங்கள்!

செயலி புதிது: ஆட்கடத்தலை தடுக்க உதவும் செயலி
unnamed
சுற்றுச்சூழல் மாசை கண்காணிக்கும் வகையில் தகவல் திரட்ட உதவும் செயலி உட்பட சமூக நோக்கிலான செயலிகள் பல இருக்கின்றன.இந்த வரிசையில் அறிமுகம் ஆகியுள்ள டிராபிக்கேம் செயலி, இளம் பெண்களை தவறான முறையில் பயன்படுத்தும் இரக்கமில்லா ஆட்கடத்தல் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பயனாளிகளின் உதவியை கோருகிறது.

அப்பாவி பெண்களின் எதிர்காலத்தை நாசாமாக்குபவர்களை சட்ட்த்தின் பிடியில் சிக்க வைக்க பயனாளிகள் செய்ய வேண்டியதெல்லாம், வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டலில் தங்க நேர்ந்தால் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் அதில் உள்ள அறையை ஒளிபடம் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றுவது மட்டும் தான். அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் இருப்பிடத்தை குறிப்பிட வேண்டும். இந்த தகவலை அளிப்பவர் பற்றி வேறு எந்த தகவலும் பதிவாகாது.

எதற்காக இந்த ஒளிபடங்கள் என்று கேட்கலாம்? இளம் பெண்களை கடத்திச்செல்பவர்கள் பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில் வைத்து படமெடுத்து இணையதளம் மூலம் விளம்பரம் செய்வதாகவும், இந்த படங்களை இந்த குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரமாகவும் பயன்படுத்தலாம் என டிராபிக்கேம் இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால், அந்த படங்கள் எங்கு எடுக்கப்பட்டன என்பதை நிருபிப்பது தான்.
எனவே தான் இணையதள விளம்பர படங்களை ஒப்பிட்டு பார்க்க ஹோட்டல் அறைகளின் படங்களை சேகரிக்கத்துவங்கின்றனர். இந்த பட்டியலிடல் உள்ள பட்த்துடன் ஒப்பிட்டு ப்பார்த்து ஹோட்டல் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் எனும் கருத்தின் அடிப்படையில் தான், ஹோட்டல் அறை ஒளிபடங்களின் விரிவான பட்டியலை உருவாக்க இந்த செயலியை வடிவமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக செயல்பட்டு வரும் டிராபிக் இனிஷியேட்டிவ் எனும் அமெரிக்க அமைப்பு இந்த செயலியை உருவாக்கி உள்ளது.
செயலிகள் வெறும் செய்தி அனுப்பவும், செல்பீ எடுக்கவும் அல்ல என்பதை உணர்த்தும் செயலியாக இது இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: http://traffickcam.org/about

வீடியோ புதிது; மூளைக்கு உதவும் உணவுகள்
3

நீங்கள் சாப்பிடும் உணவுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் , உட்கொள்ளும் உணவுக்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் தொடர்பு இருப்பது தெரியுமா? இந்த தொடர்பை விளக்கும் வகையில் டெட் கல்வி வீடியோ ஒன்று அமைந்துள்ளது. இந்த வீடியோ உணவு வகைகள் எப்படி மூளையின் செயல்பாட்டின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதை அழகாக விளக்குக்கிறது.

ஒமேகா 3 மற்றும் 6 ரக ஃபேட்டி ஆசிட்கள் கொண்ட உணவு வகைகள் மூளை விழிப்புடன் செயல்பட உதவுகின்றன. மற்ற வகை கொழுப்புகள் நீண்ட கால நோக்கில் பாதிப்பை செலுத்தலாம். அதே போல புரதம் மற்றும் அமீனோ ஆசிட்கள் நாம் எப்படி உணர்கிறோம் என்பதில் தாக்கம் செலுத்துகின்றன. அதனால் தான் சில வகை உணவுகள் விழிப்புணர்வை எற்படுத்தும் நிலையில், சில வகை உணவுகள் மந்தமாக உணரச்செய்கின்றன.

உணவின் தாக்கம் பற்றி அறிய: https://youtu.be/xyQY8a-ng6g