Category Archives: இணையதளம்

ஆன்லைனில் அசத்தும் பர்னீச்சர் நிறுவனங்கள்

இந்திய இ-காமர்ஸ் துறையை பொருத்தவரை, ஆசிஷ் கோயல் மற்றும் அசிஷ் ஷா ஆகிய இருவரையும் தீர்க தரிசனம் மிக்கவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்களின் கணிப்பு படியே இ-காமர்ஸ் என்ப்படும் மின்வணிகச்சந்தை இந்தியாவில் விரிவடைந்துள்ளது. இதை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இருவரும் இந்திய மின் வணிக துறையின் முன்னோடிகளாகவும் உருவாகி இருக்கின்றனர்.

கோயலும், ஷாவும் இணைய பர்னீச்சர் விற்பனை தளங்களான பெப்பர் பிரை மற்றும் அர்பன் லேடர் ஆகிய வெற்றிகரமான நிறுவனங்களின் இணை நிறுவனர்கள். இணைய மூலமான விற்பனை என்பது பெரும்பாலும் புத்தகங்களும், ஆடைகளும், கேட்ஜெட்களும் என்றிருந்த நிலையில், இதே போலவே மேஜை நாற்காலிகளையும் ஆன்லைனில் வாங்கும் தேவையும், பழக்கமும் இந்தியர்களுக்கு ஏற்படும் என கணித்து அதனடிப்படையில் தங்கள் நிறுவனத்தை துவக்கி வெற்றி பெற்றுள்ளனர். இன்று இந்த பிரிவு மின்வணிக சந்தையில் போட்டி மிக்க பிரிவாக மாறியிருக்கிறது.

பெப்பர்பிரை மற்றும் அர்பன்லேடர் ஆகிய இரு நிறுவனங்களுமே ஏறக்குறைய ஒரே காலத்தில் துவக்கப்பட்டவை என்றாலும், இதன் நிறுவனர்கள் இதற்கான பாதையை கண்டறிந்த விதம் கொஞ்சம் மாறுபட்டவை.

இணையம் மூலம் பொருட்களை வாங்குவதில் இருந்த தயக்கங்கள் மறைந்து மின்வணிகம் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பர்னீச்சர்களையும் ஆன்லைனில் வாங்கும் வசதி என்பது இயல்பாக எதிர்பார்க்க கூடியது தான். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், 2012 ம் ஆண்டு வரை இணைய பர்னீச்சர் விற்பனைக்கு என்று தனியே ஒரு நிறுவனம் துவங்கப்படவில்லை. மேஜை,நாற்காலி, சோபா ரகங்களை வாங்கும் தேவை எல்லோருக்கும் இருந்தாலும், பெரும்பாலும் இவை கடைகளிலேயே வாங்கப்பட்டன. பெரிய பிராண்ட்கள் சில இருந்தாலும் இத்துறை ஒருங்கிணைக்கப்படாததாகவே இருந்தது. அதோடு ஆன்லைனில் இத்தகைய பொருட்களை வாங்குவதும் இயல்பாக அமையவில்லை.

இந்த பின்னணியில் தான் அசிஷ் ஷாவும் அவரது நண்பரான அம்ப்ரீஷ் மூர்த்தியும் இணைந்து பெப்பர்பிரை இணைய நிறுவனத்தை துவக்க தீர்மானித்தனர். இருவருமே இணைய நிறுவன பரப்பில் அனுபவம் மிக்கவர்கள். மேலும் சில ஆண்டுகள் இந்திய ஏல நிறுவனமான பாஸி.காம் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இருவருக்குமே சொந்த நிறுவனம் துவக்க வேண்டும் என்ற கனவும் இருந்தது. இணைந்து செயல்படுவதை விட இதற்கு வேறு சிறந்த வழி என்ன? தங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள இணைய பர்னீச்சர் விற்பனையை தேர்வு செய்தனர்.

இந்த தேர்வுக்கு காரணம் இல்லாமல் இல்லை. இல்லங்களுக்கான பர்னீச்சர் அலங்காரம் என்பது எல்லையில்லா ரகங்களை கொண்டதாக பரந்து விரிந்து. ஆனால் அப்படியும் கூட ஆன்லையில் வாங்குவதற்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை. வேறு எந்த ஒரு நிறுவனமும் இணைய பர்னீச்சர் விற்பனையை இலக்காக கொள்ளாத நிலையில், ஷாவும், மூர்த்தியும் முழுவீச்சிலான பரினீச்சர் விற்பனையை இணையம் மூலம் அளிக்க தீர்மானித்தனர். இந்த எண்ணமே பெப்பர்பிரை நிறுவனமாக உருவானது. 2012 ம் ஆண்டு ஜனவரி மாதம் பெப்பர்பிரை செயல்படத்துவங்கியது.

பேஷன் ரகங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் எப்படி இணையதளத்தில் பார்த்து, விரும்பிய ரகத்தை தேர்வு செய்து ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடிந்ததோ , அதே போல மேஜை நாற்காலி, கட்டில், சோபா உள்ளிட்ட பொருட்களை இணையத்தில் பார்த்து வாங்க பெப்பர்பிரை வழி செய்தது.

பர்னீச்சர்களை கடையில் வாங்குவதை விட இணையத்தில் வாங்குவது புதுமையாக மட்டும் அல்ல, வசதியாகவும் இருந்தது. கடைகளில் இருப்பிடம் பிரச்சனை என்பதால் எல்லா ரகங்களையும் காட்சிக்கு வைத்திருக்க முடியாது. குறிப்பிட்ட சில ரகங்களை மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே விரும்பிய மாதிரியை தேர்வு செய்ய விரும்பும் வாடிக்கையாளர் கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். அப்படியும் விரும்பிய ரகம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. ஆனால் இணைய விற்பனையில் இந்த பிரச்ச்னை இல்லை. எல்லா வகையான பொருட்களையும் காட்சியில் வைக்கலாம். அவற்றை பல வகைகளின் கீழ் வரிசைப்படுத்தி பட்டியலிடலாம். புகைப்படங்களோடு அவை பற்றி விவரங்களையும் விரிவாக அளிக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் மனதுக்கு பிடித்த ரகத்தை தேடிப்பார்த்து தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது.

அதன் பிறகு ஆன்லைனில் ஆர்டர் செய்ததும், இல்லந்தேடி வந்து டெலிவரி செய்யப்படும். இந்த வசதி நகரபுற இந்தியர்களுக்கும் , இளம் வயதினருக்கும் ஏற்றதாக இருந்தது. இதுவே பெப்பர்பிரை தளத்தை வெற்றி பெற வைத்தது. அதன் பிறகு பெப்பர்பிரை இணைய விற்பனையில் தொடர்ந்து புதிய அம்சங்களை புகுத்தி வளர்ச்சி அடைந்து வருகிறது.

இது பெப்பர்பிரையின் கதை என்றால், அதன் பிரதான போட்டியாளரான அர்பன்லேடர் அதன் இணை நிறுவனரான ஆசிஷ் கோயலின் தனிப்பட்ட அனுபவத்தால் பிறந்த நிறுவனமாகும். எம்பிஏ பட்டதாரியான கோயல் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர். ஒரு கட்டத்தில் நண்பரான ராஜீவ் ஸ்ரீவத்ஸ்வாவுடன் இணைந்து சொந்தமாக நிறுவனம் துவக்க திட்டமிட்டார். இருவரும் பெங்களுரூவுக்கு குடிபெயர்ந்தனர்.

பெங்களூருவில் தங்கள் குடியிருப்புக்கான பர்னீச்சர்களை வாங்க முயற்சித்த போது, சரியான பொருட்கள் கிடைக்காமல் திண்டாடினர். அவர்கள் தேவைக்கேற்ற ரகங்கள் சந்தையில் கிடைக்காததோடு, இணையத்திலும் அது சாத்தியமாகவில்லை. இந்த சம்பவம் தான் கோயலை யோசிக்க வைத்தது. தனக்கு ஏற்பட்ட இதே அனுபவம் தானே மற்றவர்களுக்கும் ஏற்படும். எனில், இணையத்தில் பர்னீச்சர்களை விற்பதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதாக தோன்றியது. இந்த வாய்ப்பு உண்டாக்கிய நம்பிக்கையின் அடிப்படையில் இணைய பர்னீச்சர் கடையான அர்பன் லேடர் நிறுவனத்தை துவக்கினர். பெப்பர்பிரை துவங்கிய சில மாதங்கள் கழித்து துவக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது.  இணைய பர்னீச்சர் விற்பனை என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வரும் பெயர்களாக பெப்பர்பிரை மற்றும் அர்பன் லேடர் அமைந்துள்ளன. இந்நிறுவனங்களின் வெற்றியால் வேறு பல நிறுவனங்களும் இந்த பிரிவில் செயல்படத்துவங்கியுள்ளன. வுட்டன்ஸ்டீரிட், பேப்பரினீஷ்ம் ஹவுஸ்புல் ஆகிய இணைய நிறுவனங்கள் இப்பிரிவில் செயல்பட்டு வருகின்றன. மேலும் அமேசான், ஸ்னேப்டீல் போன்ற மின்வணிக நிறுவனங்களும் கூட இணைய பர்னீச்சர் விற்பனையை துவக்கியுள்ளன.

எனவே இந்த பிரிவு வேகமான வளர்ச்சி மற்றும் பலத்த போட்டியை கண்டு வருகிறது. ஆன்லைன் தரும் தேர்வுகள் மற்றும் வாய்ப்பு பர்னீச்சர் விற்பனையை பிரபலமாக்கியுள்ளது.

போட்டியை சமாளித்து வளர்ச்சி அடையும் வகையில் இந்நிறுவனங்கள் புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. பர்னீச்சர்களின் அளவை புரிந்து கொள்ளும் வகையில் அவற்றின் மீது மனிதர்களின் நிழலுருவத்தை பொருத்திப்பார்க்கும் வசதியை அர்பன் லேடர் வழங்கி வருகிறது. மேலும் பர்னீச்சர்களை வாங்கும் முன், வீட்டுக்கு தருவித்து சரியாக இருக்குமா என சோதித்துப்பார்க்கும் வசதியையும் அளிக்கிறது.

மேலும் பல அம்சங்களையும் அளித்து வருகின்றன. இவை பெரும்பாலும் தன்கள் சொந்த பர்னீச்சர்களை தயார் செய்து விற்கின்றன. பிராண்டட் பர்னீச்சர்களையும் வழங்குகின்றன. பரினீச்சர்களை பொருத்தவரை விலை அதிகமான பொருட்கள் என்பதும், பல்வேறு ரகங்கள் கொண்டவை என்பதும் சாதகமான அம்சங்களாகும். இவற்றில் பலரும் தனிப்பட்ட தேர்வுகளை எதிர்பார்ப்பதால் ஆன்லைன் வழங்கும் வாய்ப்பு வரப்பிசாதமாக இருக்கிறது. மேலும் அதிக விலை என்பது வருவாய்க்கும் வழி செய்கிறது. தள்ளுபடி என கூவி விற்காமலே வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய துறையாக இது விளங்குகிறது. அதுவே இணைய பர்னீச்சர் விற்பனையை மேலும் வளர்ச்செய்து வருகிறது.

 

 


 

 

உலக வானெலிகளை கேட்டு ரசிக்க!

NDL-Android-Appஇணைய யுகத்திலும் வானொலிகளுக்கான தேவை இருப்பது மட்டும் அல்ல, இணையம் மூலம் வானெலிகளை கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கிறது. இதற்கு உதாரணமாக திகழும் சேவைகளில் ரேடியோ.கார்டன் தளமும் ஒன்று.

வானொலி சேவை தொடர்பான மற்ற தளங்களை எல்லாம் விட ரேடியோ.கார்டன் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்த தளத்தில் உலகில் உள்ள எந்த வானொலி நிலையத்தை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். வானொலி நிலையத்தை தேடுவது மிகவும் சுலபம். தளத்தின் முகப்பு பகுதியில் கூகுளின் பூமி வரைபட சேவை தோன்றுகிறது. அதில் விரும்பிய நாட்டின் பகுதியில் கிளிக் செய்தால் அங்குள்ள வானொலியை கேட்கத்துவங்கிவிடலாம்.
இந்த சேவையை கிளிக் செய்ததுமே நம்முடைய இருப்பிடத்தை உணர்ந்து, அங்குள்ள வானொலி சேவையை அடையாளம் காட்டுகிறது. இதே முறையில் உலகின் எந்த பகுதிக்கும் சென்று வானொலியை கேட்கலாம்.
இது தவிர, வரலாற்று வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு ரசிக்கலாம். விளம்பரங்கள் மற்றும் கதைகளையும் கேட்டு ரசிக்கும் வசதி இருக்கிறது.
இணைய முகவரி: http://radio.garden/live/

செயலி புதிது; உள்ளங்கையில் பாடப்புத்தகங்கள்
தேசிய டிஜிட்டல் நூலகம் (NDLI ) பற்றி உங்களுக்குத்தெரியுமா? மத்திய மனித வள மேம்பாடுத்துறையின் கீழ் தகவல் தொழில்நுட்பம் மூலமான கல்விக்கான தேசிய திட்டம் முலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் நூலகம் இது.
மாணவர்கள் இந்த நூலகம் மூலம் பாட நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றை அணுகலாம். இந்த வசதியை மேலும் பரவலாக்குவதற்காக தற்போது ஐஐடி கராக்பூர் மாணவர்கள் சிலர் இந்த நூலகத்திற்கான ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கி உள்ளனர்.
இந்த செயலி மூலமும் டிஜிட்டல் நூலகத்தில் உள்ள தகவல்களை அணுகலாம். தொழில்நுப்டம், சமூக அறிவியல், இலக்கியம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்களும் ,கட்டுரைகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் பிரிவிலும் இவற்றை அணுகலாம். எந்த வகையான கற்றல் பாடங்கள் தேவையோ அதற்கேற்ப அணுகலாம். தேடல் வசதியும் இருக்கிறது.
ஆங்கிலத்தில் தேடலாம்ம். முதல் கட்டமாக இந்தி மற்றும் வங்காள மொழிகளில் தேடும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதல் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வரை பல தரப்பட்ட மாணவர்களும் இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: http://www.ndlproject.iitkgp.ac.in/ndl/

திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்

mஹாலிவுட பட ரசிகர்கள் அடுத்ததாக என்ன படம் பார்க்கலாம் என்பதை சுவார்ஸ்யமான முறையில் பரிந்துரைக்கும் இணையதளமாக முவிக்ஸ் விளங்குகிறது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான படத்தை இந்த தளத்தில் சமர்பித்தால் அதை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு பிடிக்க கூடிய வேறு திரைப்படங்களை பரிந்துரைக்கிறது.

ரசிகர்கள் குறிப்பிடும் திரைப்படங்களின் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்க கூடிய திரைப்படங்களை முன் வைக்கும் பரிந்துரை சேவையை வழங்கும் இணையதளங்கள பல இருக்கின்றன.

எனினும் முவிக்ஸ் அவற்றில் இருந்து அதன் எளிமையான தன்மையால் வேறுபடுகிறது. பொதுவாக பரிந்துரை தளங்களில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பல படங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் முவிக்ஸ் சேவையை பயன்படுத்த உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த தளத்தில் நுழைந்து, மனதில் உள்ள திரைப்படத்தை குறிப்பிட்டால் போதும், பார்க்க வேண்டிய படங்களை பரிந்துரை செய்கிறது. நிறைய படங்களை சமர்பித்தால் பரிந்துரை இன்னும் சிறப்பாக அமையலாம்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பம் மூலம் திரைப்படங்களின் பல்வேறு அம்சங்களை உடனடித்தன்மையுடன் பரிசீலித்து இந்த சேவை செயல்படுவதாக முவிக்ஸ் தளம் தெரிவிக்கிறது. இந்த முறையை ஆழ் கற்றல் என குறிப்பிடுகிறது.

மிக எளிமையான வடிவமைப்பை கொண்ட இந்த இணையதளம் நிச்சயம் திரைப்பட ரசிர்களை நிச்சயம் கவரும். அதோடு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்களையும் இந்த தளம் கவரும்.

இணையதள முகவரி: https://movix.ai/

 

 

செயலி புதிது; சுவார்ஸ்யமான ஒளிபட செயலி

ஸ்மார்ட்போன் உலகில் இப்போது ஒளிபடம் சார்ந்த செயலிகள் பிரபலமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது பேஸ் ஆப் செயலி அறிமுகமாகி இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட இந்த செயலி பயனாளிகளின் ஒளிபடத்தை பலவிதமாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. ஒருவர் தனது எதிர்கால தோற்றத்தை, புன்னகை மிக்க தோற்றத்தை காணலாம். பாலினத்தை மாற்றியும் பார்த்துக்கொள்ளலாம். இளம் வயது தோற்றத்தையும் காணலாம்.

இந்த செயலியை வேறு பல விதங்களிலும் சுவாரஸ்மாக பயன்படுத்தலாம். ஏற்கனவே உள்ள ஒளிப்பங்களை திருத்த அல்லது புதிதாக எடுத்த படத்தை மாற்றவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த செயலின் சில அம்சங்கள் நிறவெறி தன்மை கொண்டிருப்பதாகவும் சர்ச்சை உண்டாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக செயலியை உருவாக்கிய நிறுவனம் சார்ப்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த செயலி பயனாளிகளை வெகுவாக கவந்து வருகிறது. லட்சக்கணக்கில் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இந்த செயலி செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://www.faceapp.com/

கிறுக்கலை ஓவியமாக்கும் கூகுள் தளம்

autoநீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிரா எனும் அந்த தளம், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கிறுக்கல்களை கூட அழகான சித்திரங்களாக மாற்றிக்காட்டுகிறது.

இணையத்தில் ஆட்டோகரெட்க் எனும் வசதியை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்யத்துவங்கும் போதே அது இந்த வார்த்தையாக இருக்கலாம் எனும் அனுமானத்தில் தொடர்புடைய வார்த்தை முன்வைக்கப்படும். பொருத்தமான வார்த்தை எனில் அதையே தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனிலும் இந்த வசதியை காணலாம்.

ஏறக்குறைய இதே வசதியை கூகுள் இப்போது சித்திரங்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உருவாக்கப்பட்டுள்ள ஆட்டோடிரா தளத்தில் இள்ள டிஜிட்டல் பலகைகயில் தூரிகையை தேர்வு செய்து வரையத்துவதுவங்க வேண்டும். உருவத்தை வரையும் போது, தளம் அதன் போக்கை ஊகித்து, தொடர்புடைய சித்திரங்களை பரிந்துரைக்கும். பொருத்தமானதை தேர்வு செய்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு, பறவைக்கான மூக்கை வரைந்தால் அழகான பறவை சித்திரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

நாம் வரையும் கோடுகளுக்கு ஏற்ப முழுச்சித்திரங்களுக்கான பரிந்துரை, மேலே தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மிகவும் சுவாரஸ்யமான சேவை. அவசரமாக ஏதேனும் வரைய வேண்டும் எனில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைய முகவரி: https://www.autodraw.com/

 

 

செயலி புதிது; பண்டமாற்று செயலி

பயன்படுத்திய பொருட்களை வேறு நல்ல பொருட்களுக்கு மாற்றிக்கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஸ்வாப்ட் செயலி அறிமுகமாகியுள்ளது.

இந்த செயலியை தரவிறக்கம் செய்ததும், பயனாளிகள் தாங்கள் மற்றவர்களுடம் பரிமாறிக்கொள்ள விரும்பும் பொருட்கள் பற்றிய தகவலை பதிவேற்றலாம். மற்ற பயனாளிகள் இப்படி பதிவேற்றியுள்ள பொருட்களையும் பார்வையிடலாம். அவற்றில் ஏதேனும் பிடித்திருந்தால் தங்கள் வசம் உள்ள பொருளுடன் மாற்றிக்கொள்ளலாம். பொருட்தமான பொருளை தேர்வு செய்வதற்காக பயனாளிகளுடன் இணைய அரட்டையில் ஈடுபடும் வசதியும் இருக்கிறது. பொருட்களின் ஒளிப்படத்துடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இப்படி புத்தகம், செயற்கை நகைகள், பழைய சோபா என எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என ஸ்வேப்டு செயலி தெரிவிக்கிறது. பேஸ்புக் பயனர் பெயர் கொண்டு உள்ளே நுழையலாம். தரவுகளை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு அனுமதியை பெற்று உள்ளே அனுமதிக்கிறது.

அதன் பின் பயனாளிகள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை உருவாக்கி கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம்.

பண்டாமாற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த செயலி சுவாரஸ்யத்தை அளிக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் செயல்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: http://swapd.in/

கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் புதுமையான இணையதளங்கள்!

 

intகல்லூரி மாணவர்கள் நிச்சயம் தங்களுக்கு சுவாரஸ்யமான இணையதளங்களை அறிந்து வைத்திருப்பார்கள். அவற்றோடு வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய தளங்களையும், பாடத்திட்டங்களில் வழிகாட்டக்கூடிய கல்வி சார்ந்த இணையதளங்களையும் அறிந்து வைத்திருப்பார்கள். இப்படி மாணவர்கள் குறித்து வைத்திருக்கும் முக்கிய இணையதளங்களின் பட்டியலில், தனிப்பிரிவிட்டு இண்டெர்ன்சாலா, லெட்ஸிண்டெர்ன், ஹலோஇண்டெர்ன் போன்ற இணையதளங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாமே பயிற்சி நிலை பணிகளை பெறுவதற்கு வழிகாட்டும் இணையதளங்கள். எனவே மாணவர்களுக்கு முக்கியமானவை.

பயிற்சி நிலை என்பது ஆங்கிலத்தில் இண்டெர்ன்ஷிப் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணிக்கு சேரும் முன், தங்கள் விரும்பும் துறை சார்ந்த ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிக்கு சேர்ந்து முன் அனுபவம் பெற இந்த பயிற்சி நிலை பணி உதவுகிறது. பெரும்பாலும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே இந்த பணியில் சேரலாம். கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை போன்ற காலம் மிகவும் ஏற்றவை.

மாணவர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி இது மிகவும் ஏற்றது. மாணவர்களைப்பொருத்தவரை வர்த்தக நிறுவனத்தில் பணிக்கு சேர்வதற்கு முன்பே துறை சார்ந்த அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பாக பயிற்சி நிலைப்பணி அமைகிறது. தங்கள் ஆர்வத்தை பட்டைத்தீட்டிக்கொள்ளவும், துறை சார்ந்த செயல்பாடுகளை நேரடியாக அறிமுகம் செய்து கொள்ளவும் இந்த அனுபவம் கைகொடுக்கும். பயிற்சி நிலை பணிக்குப்பிறகு அவர்கள் மேலும் நம்பிக்கையிடன் வேலை வாய்ப்பை தேடலாம். தாங்கள் பயிற்சியாளராக பணியாற்றிய நிறுவனத்திலேயே முழு நேர ஊழியராக பணிக்கு சேரும் வாய்ப்பு இருப்பதோடு, வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பித்து நேர்க்காணலுக்கு செல்லும் போது பயிற்சி நிலை பணி அனுபவம் சாதகமான அம்சமாக கருதப்படும்.

அதோடு படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே மாணவர்கள் தங்களுக்கான துறையை தேர்வு செய்யவும் இந்த அனுபவம் வழிகாட்டும். இந்த காலத்திற்கு ஊக்கத்தொகையாக ஊதியமும் வழங்கப்படும்.

வர்த்தக நிறுவனங்களைப்பொருத்தவரை எதிர்கால திறமைகளை கண்டறிய, மாணவர்களை பயிற்சியாளராக பணிக்கு அமர்த்திக்கொள்வது சிறந்த வழியாகும். அதிலும் தற்போது தகவல் தொழில்நுட்பம், பொறியியல் என எல்லாத்துறைகளிலும் பட்டம் பெற்று வரும் மாணவர்களின் பணி தயார் தன்மை அல்லது திறன் பயிற்சி ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. தொழில்துறைக்கு என்ன தேவையோ அவை வகுப்பறைகளில் கற்றுத்தரப்படுவதில்லை, வகுப்பறைகளில் கற்றுத்தரப்படுபவை தொழில்துறைக்கு தேவைப்படுவதில்லை” என சொல்லும் வகையில் நிலைமை உள்ளது. இந்த சூழலில் இளம் பட்டதாரிகள் தொழில்துறைக்கு ஏற்றவர்களாக உருவாவதில் பயிற்சி நிலை பணிகள் பெருமளவு கைகொடுக்கின்றன.

கல்லூரி வளாகத்திற்கு வந்து முகாமிட்டு பிரகாசமான மாணவர்களை கொத்திக்கொண்டு போவது ஒரு பக்கம் நடந்தாலும், இன்னொரு பக்கம் வர்த்தக நிறுவனங்கள் தகுதியான, திறன் பயிற்சி மிக்க மாணவர்களை தேடிக்கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் அடுத்தது என்ன எனும் கேள்விக்கு சரியான விடை தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு கேள்விக்கும் விடை தான் பயிற்சி நிலை பணி எனப்படும் இண்டெர்ஷிப்.

பட்டப்படிப்பில் இத்தனை மதிப்பெண் பெற்றேன் என மாணவர்கள் பெருமையாக கூறிக்கொள்வது போலவே, ஆறு மாதம் இந்த நிறுவனத்தில் பயிற்சி நில பணி செய்துள்ளேன் என கூறிக்கொள்ளலாம். நிறுவனங்களும் இந்த அம்சத்தை சாதகமாக கருதும்.

எல்லாம் சரி, பயிற்சி நிலை பணிகள் தொடர்பான தகவல்களை அறிவது எப்படி? இந்த கேள்விக்கு விடையாக தான் பயிற்சி நிலை பணி தளங்கள் அமைந்துள்ளன. இவை பயிற்சி நிலை பணி தகவல்களை பட்டியலிட்டு, மாணவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை இணைத்து வைக்கின்றன. மான்ஸ்டர்.காம். நவ்கரி.காம் போன்ற வேலைவாய்ப்பு தளங்களை நாடுவது போலவே மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயிற்சி நிலை பணிகளுக்கான தேடியந்திரம் போலவே இவை அமைந்திருக்கின்றன. பணிகளை தேடுவது தவிர, பயிற்சி நிலை பணி தொடர்பாக பயனுள்ள தகவல்களையும் சுவாரஸ்யமான முறையில் அளிக்கின்றன. இண்டெர்ன்சாலா .காம் இதற்கு அழகான உதாரணம். இந்த பிரிவில் முன்னிலை பெற்றும் விளங்குகிறது.

இந்த தளத்தில் பயிற்சி நிலை பணிகளை இரண்டு விதமாக தேடலாம். பயிற்சி நிலை பணிகள் நகரங்களை மையமாக கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, தில்லி, பெங்களூரு, மும்பை என பல்வேறு நகரங்களில் உள்ள நிறுவனங்களில் உள்ள வாய்ப்புகளை இந்த பகுதி மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். வீட்டில் இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளையும் இந்த பட்டியலில் காணலாம். இதே போல பொறியியல் ஊடகம், சட்டம், தன்னார்வ பணி என துறைகளின் அடிப்படையிலும் வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் விரும்பும் நகரம் அல்லது துறையை தேர்வு செய்து அவற்றில் உள்ள வாய்ப்புகளில் பொருத்தமானவற்றை கண்டறியலாம்.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான அம்சங்களுக்கு ஏற்ப வாய்ப்புகளை தேடும் வாய்ப்பும் உள்ளது. பொருத்தமான வாய்ப்பை கண்டறிந்ததும் இந்த தளத்தில் இருந்தே விண்ணப்பிக்கலாம். பணி காலம், ஊக்க ஊதிய தொகை, பயிற்சியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவைத்தவிர பல்வேறு துறைகளில் இந்த தளமே இணையம் மூலமான பயிற்சிகளையும் அளிக்கிறது. மேலும் பயிற்சி பணி வாய்ப்பு தொடர்பான வலைப்பதிவு மூலம் பயனுள்ள தகவல்களையும் அளிக்கிறது. பயிற்சி பணி பெறுவது எப்படி? பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான விரிவான பதிலை இந்த கட்டுரைகள் அளிக்கின்றன.

சர்வேஷ் அகர்வால் எனும் ஐஐடி பட்டதாரி இந்த தளத்தை நிறுவி நடத்தி வருகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்தவரான அகர்வால், சென்னை ஐஐடியில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டப்படிப்பை முடித்தப்பிறகு வெளிநாட்டில் சில ஆண்டுகள் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, ஐஐடி பட்டதாரிகள் பலர் தொழில்முனைவோர்களாக ஸ்டார்ட் அப் துறையில் கலக்கி கொண்டிருப்பதை கேள்விப்பட்டு வியந்து நின்றார்.

தொழில்முனைவு ஆர்வத்தோடு மும்பை வந்தவர் வங்கி ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். புதிய நிறுவனங்களுக்கான பல யோசனைகளை பரிசீலித்துக்கொண்டிருந்தவர் நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டார். இந்த காலட்டத்தில் தான் நண்பர் ஒருவர் வெளிநாட்டு படிப்பு முடித்த நண்பர் ஒருவர் இந்தியாவில் பயிற்சி நிலை பணி பெற விரும்பிய போது சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருப்பதை பார்த்தார். அப்போது தான் அவருக்கு பயிற்சி நிலை பணிக்கான தகவல்களை திரட்டித்தரும் எண்ணம் உண்டானது. முதல் கட்டமாக சாதாரண வலைப்பதிவு ஒன்றை துவங்கி தனக்கு கிடைத்த பயிற்சி நிலை பணிகளை பகிர்ந்து கொண்டார். இந்த வலைப்பதிவுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறுவனங்களும் இந்த சேவையை விரும்பின. இதன் பயனாக ஒரு கட்டத்தில் தனது வேலையை விட்டுவிட்டு தனது வலைப்பதிவை முழுவீச்சிலான இணையதளமாக மாற்றினார். இப்படித்துவங்கிய இண்டெர்சாலா தான் இன்று முன்னணி சேவையாக வளர்ச்சி அடைந்துள்ளது. பயிற்சி நிலை பணிகள் பெற உதவும் இந்த தளம் ஆரம்ப கட்டத்தில், இத்தகைய பயிற்சி நிலை பணியாளர்களை கொண்டே வளர்ந்தது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த பிரிவில் முன்னணியில் இருக்கும் மற்றொரு சேவை லெட்ஸிண்டெர்ன். இந்த தளமும் பயிற்சி பணி வாய்ப்புகளுக்கான தேடியந்திரம் போலவே விளங்குகிறது. எந்த வகை பயிற்சி பணி தேவை என இதில் உள்ள முகப்பு கட்டத்தில் குறிச்சொல் மூலம் தேடலாம். இவைத்தவிர பயிற்சி பணி வாய்ப்புகள் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. நிறுவன வாய்ப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் பேஸ்புக் கணக்கு மூலம் இதில் பதிவு செய்து கொள்ளலாம். நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள பயிற்சி நிலை வாய்ப்புகளை இந்த தளத்தில் பட்டியலிடலாம்.

நகரம் மற்றும் துறை சார்ந்த வாய்ப்புகளை தேட முடிவதோடு, மாணவர்கள் தங்கள் திறன் சார்ந்த வாய்ப்புகளையும் தேடலாம். திறன் பயிற்சிகளுக்கான பாடத்திட்டம் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறது. மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய கட்டுரைகளை வலைப்பதிவு மூலமாகவும் அளிக்கிறது.

ஹலோஇண்டெர்ன் , மேக்ன் இண்டெர்ன், டுவண்டி19.காம், இந்தியன் இண்டெர்ன்ஷிப் உள்ளிட்ட இணையதளங்களும் இதே போன்ற சேவையை அளித்து வருகின்றன.

 

  • வணிகமணி இதழில் எழுதும் இனி எல்லாம் இணையமே தொடரில் எழுதியது.