Tag Archives: million

ஹாஷ்டேக் பிறந்த கதை தெரியுமா?

1-ts4Bq_xGIqK-A77lCe64ggஇணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரோடு ஸ்டோவ் பாயட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டுவதை விட, பொருத்தமான ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் உள்ளங்குளிர ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் உருவாகி பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர்.

ஹாஷ்டேக் என்றதும், # எனும் குறியீட்டுடன் இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் அடிக்கடி பகிரப்படும் பதங்கள் நினைவுக்கு வரும். நீங்களே கூட இத்தகைய பதகங்களை உருவாக்கி பகிர்ந்து இருக்கலாம் அல்லது, உங்களை கவர்ந்த தலைப்புகளுடன் இத்தகைய பதத்தை குறிப்பிட்டு நீங்களும் இணைந்திருக்கலாம். # முன்குறிப்புடன் அமையும் பதங்கள் ஹாஷ்டேக் என குறிப்பிடப்படுகின்றன. சமூக ஊடக மொழியின் பிரதான குறுக்கெழுத்து என இதை சொல்லலாம். வெறும் குறுக்கெழுத்து மட்டும் அல்ல, இணைய இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவும் ஆன்லைன் ஆயுதம். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் இந்த கருத்தை முழு மனதோடு ஆமோதிப்பார்கள்.

அந்த அளவுக்கு ஹாஷ்டேக் சமூக ஊடக உலகில் பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு கணக்குப்படி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் மட்டும் தினந்தோறும் 125 மில்லியன் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்படுபவை தனிக்கணக்கு.

ஹாஷேக் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ஏனெனில் இவை குறும்பதிவுக்கடலில் அவரவர் தங்கள் நோக்கத்திற்கும், தேவைக்கும் பொருத்தமான குறும்பதிவுகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டியாக இருக்கின்றன. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை ஒருங்கிணைப்பதற்கான குறியீடாக அமைவதன் மூலம் ஹாஷ்டேக் இதை சாத்தியமாக்குகிறது. அது மட்டும் அல்ல, குறும்பதிவுகள் சார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்கான வழிகாட்டியாகவும் ஹாஷ்டேக் அமைகிறது.

HASHTAG10_7F5CF76ECCDC4989B4A0D7F5DDEF92DFஹாஷ்டேக் மட்டும் உருவாக்கப்படவில்லை எனில் டிவிட்டர் சேவை இந்த அளவு பயனுள்ளதாக இருந்திருக்குமா? என்பது தெரியவில்லை. டிவிட்டர் உருவாக்கப்பட்ட போதே, அதில் குறும்பதிவுகளை வெளியிடுவது, நண்பர்களை பின் தொடர்வது உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் கூச்சலும், குழப்பமும் அதிகம் இருந்தது. தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கும் குறும்பதிவுகளில் பொருத்தமானவை பிரித்தறிவதற்கான வழி இல்லாமல் இருந்தது.

ஆனால், ஹாஷ்டேகின் அறிமுகம் இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு காண உதவியது. # எனும் அடையாளத்துடன் குறிப்பிட்ட மையக்கருத்தை சுட்டிக்காட்டும் குறிச்சொல்லை சேர்ப்பதன் மூலம் தொடர்புடைய குறும்பதிவுகளை எல்லாம் அந்த குறிச்சொல் கீழ் அடையாளம் காணலாம். உதாரணத்திற்கு இந்தியா கிரிக்கெட்டில் பெரிய அளவில் வெற்றி பெறும் போது, # இந்திய கிரிக்கெட் எனும் குறியீட்டை உருவாக்கி குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டால், இந்திய கிரிக்கெட் வெற்றி தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் அனைத்தையும் இதன் கீழ் படித்துவிடலாம். இது ஒரு விவாதச்சரடாகவும் தொடரும். இந்த குறியீட்டை கிளிக் செய்தால் போதும், தொடர்புடைய குறும்பதிவுகளை வரிசையாக காணலாம்.

இந்த வசதி தான் டிவிட்டரில், தொடர்ந்து கைகொடுக்கிறது. சமூக ஊடக பயன்பாட்டல் வளைகுடா நாடுகளில் 2010 ம் ஆண்டில் வெடித்த அரபு வசந்தம் புரட்சியின் போது போராட்டக்கார்கள் கருத்துக்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் ஆயுதம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, பிளாக் லைவ்ஸ் மேட்டர் எனும் ஹாஷ்டேக் சமத்துவத்திற்காகவும் மனிதநேயத்திற்காகவும் குரல் கொடுக்க பயன்பட்டது. பேரிடர் காலங்களில் உதவிகளையும், நிவாரண பணிகளையும், பயனுள்ள உயிர்காக்கும் தகவல்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் கைகொடுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது, #சென்னை ரைன்ஸ், #சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவிகளை ஒருங்கிணைக்க வழிகாட்டின. மெரினாவில் தைப்புரட்சி அமைதியாக மலர்ந்து வெற்றி பெற்றதிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஹாஷ்டேக் முக்கிய பங்கு வகுத்தன. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை முன்னிறுத்திவதிலும் ரசிகர்கள் ஹாஷ்டேக் ஆராதனை செய்வதை பார்க்கலாம்.

டிவிட்டரில் அறிமுகமாகி பின்னர் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக ஊடககங்களிலும் பிரபலமான ஹாஷ்டேக் இன்று, மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்யும் இணைய கூறுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்த பெருமை எல்லாம் ஒருவிதத்தில் சிறிஸ் மெஸினாவையே சேரும். அவர் தான், 2007 ம் ஆண்டில் முதல் முதலாக # குறியீட்டின் பயன்பாட்டை முன்வைத்தார். அப்போது அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற சவுத் பை சவுத்வெஸ் எனும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு தொடர்பான குறும்பதிவுகளை அவரும் நண்பர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனார். ஆனால் அந்த மாநாட்டில் ஆர்வம் இல்லாத மற்ற நண்பர்கள் இதை ரசிக்கவில்லை. நாம் முக்கியமாக கருதாத ஒரு மாநாடு தொடர்பான தகவல்கள் ஏன் நம்முடைய டைம்லைனில் ஏன் எட்டிப்பார்க்கின்றன என்று வெறுப்படைந்தனர்.

அப்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெஸினார் இது பற்றி யோசித்துப்பார்த்தார். டிவிட்டரில் எல்லா குறும்பதிவுகளையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், ஒருவர் தனக்கு தேவையானதை மட்டும் பார்ப்பதற்கான வழி என்ன எனும் கேள்வியோடு நண்பர்களோடும் பேசிப்பார்த்தார். டிவிட்டரில் விவாத குழுக்களை அமைக்கலாம் எனும் யோசனை உண்டானது. ஆனால் அது சிக்கலாக இருக்கும் என நினைத்தார். மிக எளிதான ஒரு வழி அவருக்கு தேவைப்பட்டது. இதனிடையே தான், இணைய அரட்டை அறைகளில் விவாதங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் பவுண்டு (#) குறியீடு இதற்கு பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றியது. உடனே கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன் என மனதுக்குள் பாடியபடி இந்த தகவலை குறும்பதிவாக பகிர்ந்து கொண்டார். ; http://chrismessina.me/

இது தொடர்பாக விரிவான விளக்கப்பதிவு ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சில நாட்கள் கழித்து ஸ்டோவ் பாய்ட் எனும் தொழில்நுட்ப வல்லுனர், இந்த கருத்தை ஆதரித்து ஒரு பதிவை வெளியிட்டார். ; http://stoweboyd.com/post/39877198249/hash-tags-twitter-groupings

ஹாஷ்டேக் எனும் பதத்தை அதில் அவர் முதல் முறையாக பயன்படுத்தியிருந்தார். இதன் பிறகு மெல்ல இந்த குறியீடு பயன்பாட்டிற்கு வந்தது. பயனாளிகள் மத்தியில் பிரபலமாகத்துவங்கிய பிறகு டிவிட்டரும் இதற்கு அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்கவே சமூக ஊடக பதிவுகள் ஹாஷ்டேக் மயமாகத்துவங்கின.

இந்த குறியீட்டிற்கான மூல எண்ணத்தை முன் வைத்த மெஸினா இப்போது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார். ஓபன் சோர்ஸ் சமூகத்தின் ஆதாரவாளராக இருக்கும் மெஸினா, ஹாஷ்டேக் எண்ணத்தை ஒரு போதும் காப்புரிமை பெறவோ அதிலிருந்து லாபம் பெறவோ நினைக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். இணைய சமூகத்திற்கான தனது பரிசளிப்பாக இந்த எண்ணத்தை கருதுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹாஷ்டேக் அறிமுகமாகி பத்தாண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

——-

தளம் புதிது; ரோபோ முதலாளிகள் வருகிறார்கள்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது.

இந்த அச்சமும், கவலையும் உங்களுக்கும் இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப்பார்க்கலாம். ’வில் எ ரோபோ பி மைபாஸ்’ எனும் இணையதளம் இந்த கேள்விக்கு பதில் சொல்கிறது.

இந்த தளத்தில் ஒருவர் தான் பணியாற்றும் துறையை குறிப்பிட்டால், அந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் மற்றும் ரோபோ சி.இ.ஒ வரும் வாய்ப்பு தொடர்பான தகவல் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் தொடர்பான கணிப்பை தெரிந்து கொள்ளலாம்.

உத்தேசமான கணிப்பு தான் என்றாலும் எதிர்காலம் பற்றி சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆர்டர் கியுலியன் என்பவர் இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றையும் இவர் எழுதியிருக்கிறார்.

இணையதள முகவரி: http://www.willrobotbemyboss.com/

 

 

செயலி புதிது; ஒளிப்படங்களை சீராக்க உதவும் செயலி

ஒளிப்படங்களை எடுக்க உதவும் செயலிகளைப்போலவே, ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் செயலிகளும் அவசியம். இந்த வகையில், சிறந்த செயலிகளில் ஒன்றாக ஸ்னேன்சீட் செயலி தொழில்நுட்ப வலைத்தளங்களால் வர்ணிக்கப்படுகிறது.

ஒளிப்படங்களை சீராக்க இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. 29 வகையான டூல்கள் மற்றும் பில்டர்கள் இருக்கின்றன. ஒளிப்படங்களை கிராப் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். 90 கோணத்தில் மாற்றி அமைக்கலாம்.

தேவையில்லாத பகுதிகள் அல்லது இடையூறுகளையும் எளிதாக நீக்கலாம். மேலும் பலவித மாற்றங்களை செய்யும் வசதி இருக்கிறது. முக்கியமாக பழைய மாற்றங்களை திரும்பி பார்த்து மீட்கும் வசதியும் இருக்கிறது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு தவிர ஐபோனிலும் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://support.google.com/snapseed#topic=6155507

 

 

 

அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார்.

ஒரு மில்லியன் வலுவான சமூகமாக திகழ்கிறோம் என அவரே மகிழ்ச்சியோடு இது பற்றி சொல்லியிருக்கிறார்.சமூகம் என கலாம் சொல்வது அவருக்கு பின்னே திரண்டிருக்கும் பேஸ்புக் சமூகத்தை.

ஆம் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலாமின் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது.

இளைஞர்களின் கூடாரமாக திகழும் பேஸ்புக்கில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான கலாம் பத்து லட்சம் நண்பர்களை பெற்றிருப்பது ஒன்று வியப்பில்லை தான்.ஆனால் இந்திய மக்கள் மத்தியில் அவர் பெற்றிருக்கும் நன்மதிப்பிற்கும் செல்வாக்கிறகும் அடையாளமாக இந்த எண்ணிக்கையை கருதலாம்.

டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் மில்லியன் கணக்கில் பின்தொடர்பாளர்களையும் நண்பர்களையும் பெறுவது என்பது பாப் பாடகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் சாத்தியமாகி வரும் நிலையில் கலாம் போன்ற மக்கள் தலைவர்கள் இத்தகைய இணைய செல்வாக்கை பெற்றிருப்பது வரவேறகத்தக்கது.

யோசித்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது.இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கு இது சாத்தியம்?முதலில் பெரும்பாலான தலைவர்களுக்கு பேஸ்புகின் முக்கியத்துவம் புரிவதே கடினம்.அப்படியே புரிந்தாலும் அதன் சூடசமங்கள் புரிவது இன்னும் கடினமானது.

பகிர்வுக்கான சாதனமான பேஸ்புக்கையும் புகழ் பெறுவதற்கான இன்னொரு வழியாக அவர்கள் கருதி விட வாய்ப்புள்ளது.மேலும் பேஸ்புக்கின் செல்வாக்கால் கவரப்பட்டு அதில் அடியெடுத்து வைத்து விட்டு உதவியாளர்களை விட்டு பதிவுகளை எழுதச்சொல்லக்கூடும்.

ஆனால் கலாம் ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு பேஸ்புக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.81 வயதில் கலாமிற்கு இருக்கும் சுறுசுறுப்பும் கருத்துக்களை பகிர்வதில் உள்ள ஈடுபாடும் தான் அவரை பேஸ்புக் நாயகனாக ஆக்கியிருக்கிறது.

அதோடு தனது மைய இலக்கில் அவர் உறுதியாக இருக்கிறார்.வலுவான இந்தியாவை உருவாக்க இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்துவதை கலாம் தன் உயிர் மூச்சாக கொண்டிருப்பதை அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.

வழக்கமான தலைவர்களில் இருந்து விலகி மனதில் உள்ள லட்சியத்தை பகிர்ந்து கொள்வதில் கலாமிற்கு உள்ள விருப்பத்தை அவர் ஜனாதிபதியாக இருந்த போது கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே பார்த்திருக்கிறோம்.எல்லா நிகழ்ச்சிகளிலுக் ஏதாவது ஒரு செய்தியை மனதில் பதிய வைக்க அவர் தவறியதில்லை.அதோடு உரையாற்றினோம் விடைபெற்றோம் என்றில்லாமல் பார்வையாளர்களோடு உரையாடி ஊக்கப்படுத்தவும் அவர் தவறியதில்லை.

குறிப்பாக இளைஞர்களையும் சிறார்களையும் கலாம் தனி கவனத்தோடு அணுகினார்.அவர்களை கவர்ந்தார்.கனவுகளை விதைத்தார்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவரது இந்த பணி தொடர்கிறது.இப்போது பேஸ்புக்கிலும் விரிவாகி இருக்கிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் கலாம் பேஸ்புக்கில் உறுப்பினரானார்.அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் தனது சுற்றுப்பயண விவரங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

முக்கிய நிகழ்வுகள் பற்றிய தனது கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.சச்சினின் நூறாவது சதத்தில் துவங்கி,தாராசிங் மரணம்,ஹிக்ஸ் போசன்ன் துகளில் இந்திய விஞ்ஞானி போசின் பங்கு,கூடங்குளம் சர்ச்சை என எல்லா முக்கிய நிகழ்வுகள் பற்றியும் கலாம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேஸ்புக் கலாச்சாரத்தை நன்கறிந்தவர் போல நிகழ்ச்சிகள் பற்றி புகைப்படங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.அவரது பதிவுகள் எல்லாமே ஏதோ ஒரு செய்தியோடு சுவாரஸ்யமாகவே உள்ளது.

பல பகிர்வுகள் சிந்தனையை தூண்டுகின்றன.

டாக்கா நிகழ்ச்சி ஒன்றில் சன்க்யுதா என்னும் ஆறு வயது சிறுமி உங்களுக்கு விஞ்ஞானத்தில் ஆரவம் உண்டா என கலாமிடம் கேட்கிறாள்.கலாம் விஞ்ஞான்ம் தான் என வாழ்க்கை என பதில் அளிக்கிறார்.இதை கேட்ட சிறுமி அப்படியென்றால் நானும் விஞ்ஞானத்தை விரும்ப என்ன வழி என்று ஆர்வத்தோடு கேட்கிறாள்.இதை குறிப்பிடும் கலாம் இதே கேள்வியை நம்மிடம் எழுப்புகிறார்.கல்வியாளர்கள்,விஞ்ஞானிகளாகிய நாம் விஞ்ஞானத்தை எப்படி விரும்பக்கூடியதாக மாற்றப்போகிறோம் என்று.

இந்த ஆர்வம் தான் கலாம்.

இந்த ஆர்வம் தான் அவரை இளைஞர்களுக்கு நெருக்கமானவராக ஆக்கியிருக்கிறது.

கலாமின் ஒவ்வொரு பதிவும் அவரது அனுபவத்தையும் நம்பிக்கையையும் வெளீப்படுத்துவதாக இருக்கிறது.ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றிருக்கிறது.நூற்றுக்கணக்கான பின்னுட்டங்களை கொண்டிருக்கிறது.ஆக கலாம் இந்த பக்கம் மூலம் இளைய இந்தியாவோடு தீவிரமான உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இந்த உரையாடலாக கவரப்படும் இளைஞர்கள் மத்தியில் டேர்கெட் 3 பில்லியன்,வாட் ஐ கேன் கிவ் மிஷன் போன்ற திட்டங்களுக்கான ஆதரவையும் திரட்டி வருகிறார்.

தொழிநுட்பத்தின் அருமையை உணர்ந்த கலாம் பேஸ்புக்ககை தலைவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என வழி காட்டி வருகிறார்.

ஏற்கனவே கலாம் இணையத்தை சிறந்த முறையில் பயனபடுத்தி வருகிறார்.அப்துல்கலாம் டாட் காம் என்னும் முகவரியில் அவரது வலைமனை உள்ளது.யூடியூப் வாயிலாகவும் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பேஸ்புக் பலரால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கலாம் பேஸ்புக்கின் வீச்சுக்கும் ஆற்றலுக்கும் சான்றாக விளங்கி வருகிறார்.

கலாமின் பேஸ்புக் முகவரி;http://www.facebook.com/OfficialKalam

இணைய உலகின் கடைக்கோடி தளங்களை தேடும் தேடியந்திரம்!.

நம்பர் ஒன் இணையதளம்,டாப் டென் தளங்கள்,நூறு முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை எல்லாம் கொஞ்சம் மறந்து விடுங்கள்.எல்லோரும் எல்லா நேரங்களிலும் முன்னலை பெறும் தளங்களை தான் கவனிக்கின்றனர்.எப்போதாவது கடைக்கோடி தளங்களை பற்றி யோசித்ததுண்டா?

கடைக்கோடி தளங்கள் என்றால் தேடல் முடிவுகள் பட்டியலில் பின் தங்கியிருக்கும் தளங்கள்.பாராமுகத்துக்கு ஆளாகும் பரிதாப தளங்கள்.

இணைய உலகில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருந்தாலும் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு தந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளில் தேடல் என்பது முதல் சில பக்கங்களிலேயே முடிந்து போய் விடுகிறது.

கூகுலில் தேடும் ஒவ்வொரு முறையும் இத்தனை நொடிக்குள் (உண்மையில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்)இத்தனை லட்சம் பக்கங்களை பட்டியலிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த குறிப்பையே கூட பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.

காரணம்,தேடல் பட்டியலின் முதல் பக்கத்திலேயே பொருத்தமான இணையதளங்கள் பட்டியலிடப்படுவதால் பலரும் அதிலேயே திருப்தி அடைந்து வெளியேறி விடுகின்றனர்.ஒரு சிலர் கூடுதல் முடிவுகளை நாடி மூன்றாவது ,நான்காவது ,ஐந்தாவது பக்கங்களுக்கு சென்று பார்ப்பதுண்டு.எப்படி இருந்தாலும் அதிகபட்சம் முதல் பத்து பக்கங்களை தாண்டி செல்வது அரிதானது தான்.

தேடலின் நோக்கமே தேவையான தகவல் அடங்கிய தளங்களை கண்டுபிடிப்பது தான் என்னும் போது முதல் பக்கத்திலேயே நாடி வந்த தளம் இருந்தால் அதை தாண்டி செல்ல வேண்டிய அவசியம் என்ன?

எல்லாம் சரி தான் ,ஆனால் தேடல் பட்டியலில் நூறாவது பக்கத்திலோ அல்லது ஆயிரமானது பக்கத்திலோ அல்லது பத்தாயிரமாவது பக்கத்திலோ உள்ள தளங்களின் கதி என்ன?இந்த தளங்கள் எல்லாமோ பின்னுக்கு தள்ளப்பட்டவை தானா?

ஒவ்வொரு தேடல் முடிவிலும் லட்சக்கணக்கான பக்கங்களில் முடிவுகள் நீளூம் போது எல்லோருமே முதல் சில பக்கங்களில் உள்ள தளங்களை மட்டுமே பார்ப்பது இணைய உலகின் நிதர்சனம் தான்!.நடைமுறை நோக்கில் பார்த்தால் இது மிகவும் இயல்பாகவும் தோன்றலாம்.

இந்த இணைய யதார்த்தம் ஒரு ப‌க்கம் இருக்கட்டும் ஒரு சுவாரஸ்யத்துக்கேனும் எப்போதாவது இணைய கடலில் ஆழச்சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறிர்களா?அதாவது இரண்டு லட்சமாவது பக்கதில் என்ன தளங்கள் இருக்கின்றன என்றோ அல்லது 17 வது லட்ச பக்கத்தில் என்ன தளங்கள் இருக்கின்றன என்றோ தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதா?

ஆம் என்றோ அல்லது அட இப்படி இது வரை யோசித்து பார்த்ததேயில்லை என்றோ நினைத்தால் மில்லியன் ஷார்ட் தளத்தை மனதார வாழ்த்துங்கள்.காரணம் இந்த விநோத தேடியந்திரம் இணைய உலகில் யாருமே பார்க்காத தளங்களை பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.முன்னணி இணையதளங்களை கடந்து சென்று எங்கோ மூளையில் மறைந்து கிடக்கும் தளங்களை இந்த தேடியந்திரம் மூலம் காணலாம்.

அதாவது தேடல் பட்டியலின் பத்தாயிரமாவது பக்கத்தில் உள்ள தளங்களை அல்லது பத்து லட்சமாவது பக்கத்தில் உள்ள தளங்களையோ இதன் மூலம் காணலாம்.

மில்லியன்ஷார்ட் தேடியந்திரம் இதனை எப்படி சாத்தியமாக்குகிறது என்றால் தேடலில் ஈடுபடும் போது இணையவாசிகள் முதலில் உள்ள பக்கங்களை நீக்கிவிட வழி செய்து இதனை நிறைவேற்றுகிறது.இதில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி முதல் நூறு பக்கங்களையோ ,முதல் ஆயிரம் பக்கங்களையோ ,முதல் லட்சம் பக்கங்களையோ,அல்லது முதல் மில்லியன் பக்கங்களையோ நீக்கி விட்டு எஞ்சியுள்ள பக்கங்களை காணலாம்.

தேடலில் ஈடுபடும் போது ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்து பார்த்தாலும் பத்து பதினைந்து பக்கங்களை கடந்த பிறகு ஒரு அலுப்பும் களைப்பும் வந்து விடும் அல்லவா?

மில்லியன்ஷார்ட்டோ ஒரே கிளிக்கில் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக கடந்து பட்டியலின் கடைக்கோடியில் உள்ள தளங்களை காண வழி செய்கிறது.

பின்னுக்கு தள்ளப்பட்ட இந்த தளங்கள் பயனில்லாதவையாக இருக்கலாம்.அல்லது இவற்றில் சில முத்துக்களும் இருக்கலாம்.எப்படி இருந்தாலும் கூகுல் உட்பட வேறு எந்த தேடியந்திரத்திலும் இல்லாத வசதியாக தேடல் பட்டியலில் பின்னோக்கி சென்று பார்க்க இந்த தேடியந்திரம் உதவுகிறது.

சுவாரஸ்யமான இந்த தேடியந்திரம் தன்னை ஒரு பரிசோத‌னை தேடியந்திரம் என்றே வர்ணித்து கொள்கிறது.எனவே கூகுலுக்கு மாற்றாக எல்லாம் இதனை கருத வேண்டாம்.ஆனால் எப்போதாவது இணைய உலகில் புதிய எல்லைகளை காண்ட வேண்டும் என நினைத்தால் இதனை பயன்படுத்தி பாருங்கள்!.வியந்துபோவீர்கள்!.

http://in.millionshort.com