Tag Archives: myspace

மைஸ்பேஸ் இருக்க பயமேன்

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி  என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது போல, இவற்றால் ஏற்படும் தீமைகளும், பாதிப்புகளும் பெரிதாக பேசப்படுகிறது. இவற்றுக்கு நடுவே, வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலத்தையும் மறந்துவிடக்கூடாது. இந்த பக்க விளைவுகள் எல்லாம்  அலட்சியப்படுத்தக் கூடிய அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வே  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

.
இந்த கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விவாதத்தில் ஈடுபடாமல், வலைப் பின்னல் தளங்களினால்  உண்டாகக் கூடிய நல்ல பயன்களுக்கான அழகான உதாரணம் ஒன்றை பார்ப்போம்.  

அது, மைஸ்பேஸ் திறந்து விட்டிருக்கும் கூடுதல் கதவுகள் பற்றிய கதையாக விரிகிறது. இளைஞர்களின் இணைய கூடாரம் என்று  வர்ணிக்கப்படும் “மைஸ்பேஸ்’ வலைப்பின்னல் தளங்களின்  பிரதிநிதியாக அறியப்படுகிறது. இந்த தளத்தின் மூலம் அதன் உறுப்பினர்கள் இமெயிலில் தொடங்கி, செய்திகள், கருத்துக்கள் என சகலத்தையும் பரிமாறிக் கொள்கின்றனர்.
மைஸ்பேஸ் மூலம் எளிதாக  நண்பர்களை தேடிக்கொள்ளலாம். தவிர, மைஸ்பேஸ் வழியே வீடியோ கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இரண்டையும் இணைத்தால், உங்களுக்கான பிரத்யேக ரசிகர்கள்  கிடைத்து விட மாட்டார்கள்.  அதாவது நீங்கள் துடிப்பும், படைப்பாற்றல் மிக்க கலைஞராகவும் இருந்து, உங்கள் படைப்பை, ரசிக்கக் கூடியவர்களை (நீங்களே) தேடிக் கொள்ளும் ஆர்வமும் இருந்தது என்றால்!

அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஷல் ஹெர்கோவிம்ப்  மற்றும் எட்வர்டு விக் ஆகியோர் இதைதான் செய்திருக்கின்றனர். இருவரும் சேர்ந்து இயக்கியுள்ள  தொலைக்காட்சி தொடரை “மைஸ்பேஸ்’ தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.  மைஸ்பேஸ் தளத்தில் வீடியோ கோப்புகளை  பதிவேற்ற முடியும் என்னும் போது, தொலைக்காட்சி தொடரின் நிகழ்ச்சிகளையும் ஒவ்வொன்றாக இந்த தளத்தின் மூலமே ஒளிபரப்பலாம் தானே!
ஆக, இந்த தொடரை  பார்க்க எந்த சேனலின் தயவும், தேவை இல்லை. மைஸ்பேஸ் தளத்தில் இதற்கென துவக்கப்பட்டுள்ள  பக்கத்திற்கு போனால் பார்த்து ரசிக்கலாம். மைஸ்பேஸ் இலக்கணப்படி உறுப்பினர்கள் இதை பார்த்து ரசித்த கையோடு, மற்ற உறுப்பினர்களோடு   நிகழ்ச்சி பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி பகிர்ந்து கொள்வதன்  மூலம்  புதிய நண்பர்களையும் தேடிக் கொள்ளலாம்.  தொடர்பு சங்கிலி பெரிதாக, பெரிதாக  நண்பர்கள்  எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, நிகழ்ச்சிக்கான புதிய ரசிகர்கள்  கிடைக்கப் பெற்று, எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகும். இந்த நம்பிக்கையில்தான் ஹெர்கோவிம்ப்  மற்றும் விக் ஆகிய இருவரும் எந்த சேனலையும் சார்ந்திருக்காமல் நேரிடையாக மைஸ்பேஸ் தளத்தில் தங்கள் படைப்பை இடம் பெற வைத்திருக்கின்றனர்.

உண்மையில் தொலைக்காட்சி சேனல்  ஒன்றுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இவர்கள் மைஸ்பேசிடம் வந்திருக்கின்றனர். கால் வாழ்க்கை என்னும் பெயரில் ஏபிசி தொலைக்காட்சிக்காக இவர்கள்  நிகழ்ச்சியின் சில பகுதியை தயாரித்துக் கொடுத்தனர். ஆனால் தொலைக்காட்சி நிர்வாகம் கதைக் கருவில் கைவைத்து, படைப்பாளி என்ற முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை  ஆலோசனைகள் என்னும் பெயரில் முன்வைத்ததால் இருவரும் வெறுப்புற்று வெளியே வந்து விட்டனர்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை முழுத்தொடராக உருவாக்கி, “கால் வாழ்க்கை’ என்னும் பெயரில் மைஸ்பேஸ் தளத்தில் வெள்ளோட்டம்   விட்டிருக்கின்றனர். நிகழ்ச்சியை மைஸ்பேஸ் உறுப்பினர்கள் வீடியோ கோப்பாக பார்க்க முடியும் என்பதோடு, அவர்களின் கூடுதல் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில், நிகழ்ச்சிக்கான பக்கத்தில் அதன் கதாபாத்திரங்கள் மற்றும் கதைப்போக்கு பற்றிய விவரங்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
கதாபாத்திரங்கள் பேசுவது போன்ற இந்த தகவல்கள், நிகழ்ச்சி மீது பற்று கொண்ட ரசிகர்கள்  வட்டத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி மைஸ்பேஸ் தனித்தன்மையை பயன்படுத்திக் கொள்வதோடு, இதே பாணியில் இந்த நிகழ்ச்சிக்காக என்றே தனியே ஒரு வலைப்பின்னல் தளமும் (quaterlife.com) என்னும்  பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
படைப்பாற்றல் பாதிக்கப்படாமல், கலைஞனுக்குரிய முழு சுதந்திரத்தோடு, நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட இது சிறந்த வழி என்று கருதப்படுகிறது.

கலைஞர்களின் மைஸ்பேஸ்

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள்.

.
ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு இல்லை. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் விதவிதமான  கலைஞர்களையும், அவர்கள் படைப்புகளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதைவிட சந்தோஷமானது வேறு என்ன இருக்க முடியும்?

இதனால் பிரமிப்பு ஏற்படும் என்றால், அட நம்மூர் கலைஞர்களுக்கு என்று இப்படி ஒரு இணைய தளம் இல்லையே என்ற ஏக்கம் ஏற்படும்? அந்த அளவுக்கு கலைஞர்களுக்கான இருப்பிடமாக அவர்களின் படைப்பிற்கான கலைகூடமாக இந்த தளம் விளங்குகிறது.
இதில் மேலும் விஷேசமானது என்னவென்றால் “மை ஆர்ட் இன்போ’, கலா ரசிகர்களுக்கானது என்பதை விட கலைஞர்களுக்கானது தான்!.

 மைஸ்பேஸ் மற்றும் பேஸ்புக் போன்றவை எப்படி இளைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக இருக்கின்றனவோ அதே போல் கலைஞர்களுக்கான வலைப்பின்னல் தளமாக மைஆர்ட் இன்போ டாட் காம் தளத்தை லூயிஸ் மெக்பெயின் என்னும் கனடா நாட்டு பிரமுகர் அமைத்திருக்கிறார்.

பதிப்பக அதிபரும், கொடை வள்ளலுமான மெக்பெயின் கலை ஆர்வம் மிக்கவர். ஓவியம் உள்ளிட்ட கலைகளில் பெருமளவு முதலீடும் செய்திருப்பவர். கலைஞர்களுக்காக என்று “ஆர்ட் இன்போ’ என்னும் பெயரில் இணைய வழிகாட்டியையும் நடத்தி வருபவர்.

“மைஸ்பேஸ்’ உள்ளிட்ட வலைப்பின்னல் தளங்கள் உண்டாக்கி விடும் அலைகளை உள்வாங்கி கொண்ட மெக்பெயின், கலைஞர்களுக்கும் இத்தகைய வலைப்பின்னல் தளம் இருக்க வேண்டும் என்னும் உந்துதலோடு “மைஆர்ட் இன்போ’ தளத்தை ஏற்படுத்தி யிருக்கிறார். கலைஞர்கள் குறிப்பாக இளம் மற்றும் புதிய கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான உலகளாவிய தளமாக இந்த தளம் அமைய வேண்டும் என்பது அவரது விருப்பம்.

தளத்தின் வடிவமைப்பும், உள்ள டக்கமும் இந்த விருப்பத்தை கச்சிதமாக பிரதிபலிக்கிறது. மைஸ்பேசில் எப்படி, ஒருவர் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு சுய அறிமுகம் செய்து கொண்டு நண்பர்களை தேடிக் கொள்ளலாமோ அவ்விதமே இதில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை இடம் பெறச் செய்து, உலகின் பார்வைக்கு படைப்புத் திறனை காட்சிக்கு வைக்கலாம்.  மைஸ்பேஸ் மகத்தானதுதான். ஆனால் அதன் வடிவமைப்பில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டப்பட்டு ஒருவித குழப்பம் ஏற்படும். ஆனால் இந்த தளத்தில் அத்தகைய குழப்பம் இல்லாமல், மிக எளிமையாக ஒருவித நேர்த்தியோடு, முகப்புபக்கம் அமைந்துள்ளது.

அற்புதமான கலைப்படைப்புகள் மற்றும் அவற்றை உருவாக்கிய கலைஞர்களின் படங்கள், முகப்பு பக்கத்தில் பளிச்சிடுகின்றன.  குறிப்பிட்ட தினத்திற்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப் படுவதோடு, மற்ற கலைஞர்கள் பற்றிய அறிமுகமும் பக்கத்திலேயே மின்னுகின்றன.

முதல் பார்வைக்கு ஓவியங்களே பிரதானமாக தோன்றினாலும் ஓவியம் மட்டும்  அல்லாமல், புகைப்படங்கள், சிற்பங்கள், வீடியோ காட்சிகள், பேஷன், கட்டிட கலை, கவிதை, வடிவமைப்பு, கண்ணாடி வேலைப்பாடுகள் என சகலவிதமான கலைப்படைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலோட்டமான ஒரு பார்வைக்கு பின், கண்ணை கவரும் ஏதாவது ஒரு படத்தை கிளிக் செய்யும் போது நீண்ட கலை பயணத்திற்கு தயாராகி விட வேண்டும். கிளிக் செய்த அந்த படம் பெரிதாகி அருகிலேயே அது பற்றிய குறிப்புகள் விரிவதோடு, அந்த கலைஞரின் மற்ற படைப்புகளும் வரிசையாக வந்து நிற்கும். ஒவ்வொரு படமும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்ற குறிப்புடன் கலைஞரைப் பற்றிய சுயசரிதை விவரங்கள் மற்றும் அவர் பங்கேற்ற  கண்காட்சி தொடர்பான தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

அவரது படைப்பு கருத்தை ஈர்த்தது என்றால் அந்த கலைஞரை பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், பிலாக் பதிவு எழுதி வைக்கலாம் (அ) உடனடியாக இன்டெர்நெட் மூலமே உரையாடலாம். பிலாக் பதிவில் மற்ற கலைஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கூடுதல் புரிதலை ஏற்படுத்தக் கூடியவையாக அமைந்திருப்பது  மற்றொரு சிறப்பம்சம்.

ஒரு கலைஞரை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டிருக்கும் போதே,அடுத்தடுத்த கலைஞர்களை அறிமுகம் செய்து கொண்டே போகலாம். படைப்புகளின்  வண்ணமும், வகைகளும் வியக்க வைக்கும் கலை பயணமாக அது அமையும்.

இதைத்தவிர, கலைஞர்கள், கலைப்படைப்புகள் கலை கூடங்கள் என எந்த தலைப்பின் கீழும் புதிய கலைஞர்களை தேடும் வசதி உண்டு. மேலும் இந்த வார கலைஞர் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட கலைஞர் என்னும் அடைமொழியோடும், கலைஞர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

தொடர்ந்து தளத்திற்கு விஜயம் செய்யும் போது, இந்த அம்சங்கள், புதிய கலைஞர்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். கலைஞர்கள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொள்ள உதவக்கூடிய  இந்த தளம், அவர்களின் படைப்புகள் உலகளாவிய  அறிமுகத்தை பெறவும் வழிசெய்கிறது.

அதிலும் குறிப்பாக புதிய கலைஞர்கள் தங்களை உலகிற்கு உணர்த்த இந்த தளம் சரியான நுழைவு வாயிலாக இருக்கும். இதுவரை 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாகி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இடம் பெற வைத்துள்ளனர். இன்னும் பெரிதாக இந்த தளம் வளரும் என்றே தோன்றுகிறது.