Tag Archives: note

பெண் விஞ்ஞானிகள் புகழ் பரப்பும் விக்கி வீராங்கனை!

_88730047_keilana_portraitஇணையத்தில் புழங்குபவர்கள் எமிலி டெம்பிள் உட்டை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். எமிலியை பற்றி தெரிந்து கொண்டால் அவர் மீது மதிப்பு உண்டாகும் என்பது மட்டும் அல்ல இணையம் மீதான நம்பிக்கையும் அதிகமாகும். அதைவிட முக்கியமாக இணையத்தின் இருண்ட பக்கமான டிரால்களின் தொல்லையை எதிர்கொள்வதற்கான ஊக்கமும் உண்டாகும்.

அமெரிக்க கல்லூரி மாணவியான எமிலி விக்கிபீடியாவின் முன்னணி பங்களிப்பாளராக இருக்கிறார். கூட்டு முயற்சியின் அடையாளமாக திகழும் விக்கிபீடியாவில் ஆயிரக்கணக்கான தன்னார்வ பங்களிப்பாளர்கள் இருந்தாலும், எமிலியின் பங்களிப்பை விஷேசமாக குறிப்பிட காரணம் இல்லாமல் இல்லை.

அவர் விக்கிபீடியாவின் பெருங்குறை ஒன்றை சரி செய்யும் வகையில் பங்களிப்பு செய்து வருகிறார். அதோடு இணையத்தின் பெருங்குறை ஒன்றை எதிர்கொள்ளும் வகையிலும் அந்த பங்களிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதை தான் விக்கிமீடியாவின் வலைப்பதிவு, எமிலி பகலில் உயிரியல் மாணவியாகவும்,இரவில் இணைய டிரால்களுடன் மல்லு கட்டுபவராகவும் இருக்கிறார் என குறிப்பிடுகிறது. டிரால்களுக்கு அவர் நல் தண்டனை வழங்கி வருவதாகவும் அந்த பதிவு பாராட்டுகிறது. அதாவது டிரால்கள் தொடுக்கும் ஒவ்வொரு ஆவேச தாக்குதலுக்கும் பதிலாக கோபமோ, வெறுப்போ கொள்ளாமல் ஒரு பெண் விஞ்ஞானிக்கான அறிமுக பக்கத்தை அவர் விக்கிபீடியாவில் உருவாக்கி வருகிறார்.

இது டிரால்களின் தாக்குதலை இலக்கு தவறிய அம்புகளாக மாற்றும் அதே நேரத்தில் அவரது ஆதார நோக்கத்தை மேலும் செழுமையாக்குகிறது.
எமிலி இதை எப்படி செய்கிறார் என பார்ப்போம்.

எமிலிக்கு இப்போது 21 வயதாகிறது. ஆனால் 12 வயதிலேயே அவர் விக்கிபீடியாவில் களமிறங்கிவிட்டார். 5 வயதிலேயே குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை கரைத்து குடித்திருந்தவருக்கு இதே ஆர்வத்தை உள்ளடக்கத்தை உருவாக்கும் திசையில் திருப்புவது இயல்பாக இருந்திருக்கிறது. தைவான் பாடகி ஏஞ்சலா சாங் பற்றிய முதல் கட்டுரையை உருவாக்கியவர் அதன் பிறகு நூற்றுக்கணக்கான கட்டுரைகளை சமர்பிப்பவராகவும், கட்டுரை தகவல்களை திருத்துபவராகவும் உருவானார்.

அவரது கட்டுரைகளில் பல குறிப்பிடத்தகவையாக இருந்தாலும், 2012 ல் அவர் துவங்கிய முயற்சி தான் இப்போது அவரைப்பற்றி பேச வைத்திருக்கிறது.

பெண் விஞ்ஞானிகளுக்கான அறிமுக பக்கங்களை கட்டுரையாக எழுதுவது தான் அவர் துவங்கிய விக்கி திட்டம்!
விக்கி நோக்கில் இது மிகவும் முக்கியமான முயற்சி. ஏனெனில் விக்கிபீடியா உள்ளடக்கத்திலும், செயல்பாட்டிலும் பெண்கள் தொடர்பாக இருக்கும் குறையை களையும் வகையில் இது அமைந்துள்ளது.

விக்கிபீடியா பங்களிப்பாளர்களில் பெண்களின் பிரதிநித்துவம் போதுமான அளவு இல்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு கவலையுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதே போலவே விக்கிபீடியா உள்ளடக்கத்திலும் பாலின இடைவெளி வெளிப்படையாகவே இருக்கிறது. விக்கிபீடியாவில் உள்ள வாழ்க்கை வரலாறுகளில் 15 சதவீதம் தான் பெண்கள் பற்றியதாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் பெண் விஞ்ஞானிகள் என்று எடுத்துக்கொண்டால் இது இன்னமும் குறைந்து போகும்.

எமிலி இந்த குறையை ராயல் சொசைட்டி ஆப் சயின்ஸ் அமைப்பின் பெண் விஞ்ஞானிகள் பற்றி விக்கிபீடியாவில் போதிய தகவல்கள் இல்லாததை கவனித்த போது உணர்ந்து கொண்டார். இந்த தகவல் அப்போது தனக்கு பெரும் ஆவேசத்தை தந்ததாக எமிலி கூறியிருக்கிறார். ராயல் சொசைட்டி என்பது விஞ்ஞானிகளின் புகழரங்கு போன்றது. அதில் இடம் பெற்ற பெண் விஞ்ஞானிகளுக்கே விக்கிபீடியாவில் இடமில்லை என்றால் எப்படி என கொதித்துப்போனவர் அந்த கணமே ( அதிகாலை 2 மணி) ஒரு பெண் விஞ்ஞானி பற்றிய அறிமுக கட்டுரையை எழுதி பதிவேற்றினார். அத்தோடு நின்று விடாமல் பெண் விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து எழுதுவதற்காக என்றே ஒரு விக்கி திட்டத்தையும் துவக்கினார். இதன் ஒரு பகுதியாக பெண் விஞ்ஞானிகளை அணுகு அவர்கள் பங்களிப்பையும் கோரினார். அறிவியல் பயிலும் மாணவிகளையும் ஒன்று திரட்டி இந்த முயற்சியில் ஈடுபடுத்தி வருகிறார். இதன் பயனாக பெண் விஞ்ஞானிகள் பற்றிய 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிபீடியா முகப்பு பக்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

_88736330_288விக்கிபீடியாவில் பெண் விஞ்ஞானிகள் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உருவாக்கி இருப்பது ஒரு சாதனை என்றால், அவர்களில் இன்னும் கவனிக்கப்படாத பிரிவினராக இருக்கும் கருப்பின பெண் விஞ்ஞானிகளையும் அடையாளப்படுத்தும் செயலில் எமிலி ஈடுபட்டு வருவது சாதாரண செயல் அல்ல என்கிறார் விக்கிமீடியா அமைப்பின் முன்னாள் ஊழியரான சிகோ பவுட்டர்சே.

இந்த செயலுக்காக எமிலி பாராட்டுக்கு மட்டும் இலக்காகவில்லை; அதைவிட அதிகமாக இணைய தாக்குதலுக்கு இலக்காகி வருகிறார். அவர் பெண் என்படாலும், பெண் விஞ்ஞானிகள் பற்றிய தகவல்களை தேடித்தேடி இடம்பெறச்செய்வதாலும் அதிருப்தி அடைந்த டிரால்கள் எனும் இணைய விஷமிகள் பலர் அவருக்கு இமெயில் மூலம் தொல்லை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவரை ஆபாசமாக வர்ணிப்பது, டேட்டிங்கிற்கு அழைப்பது, அவதூறாக பேசுவது என பலவிதங்களில் தங்கல் துவேஷத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இப்படி இணைய தாக்குதலுக்கு பெண்கள் இலக்காவது தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. இதனால் மனம் உடைந்து போகிறவர்கள் இருக்கின்றனர். இணையமே வேண்டாம் என வெறுத்து ஒதுங்கியவர்களும் உண்டு. வரிந்து கட்டுக்கொண்டு பதிலடி கொடுப்பவர்களும் இல்லாமல் இல்லை.

ஆனால் எமிலி இந்த தாக்குதலை எதிர்கொண்ட விதம் கொஞ்சம் வித்தியசாமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு இலக்காகும் போதும் அவர், புதிதாக ஒரு பெண் விஞ்ஞானி பற்றிய அறிமுக கட்டுரையை எழுதுவது எனும் கொள்கையை கடைபிடித்து வருகிறார். ஆக, மனம் வருந்தச்செய்யும் மெயில் வரும் போதெல்லாம் அதனால் துவண்டு விடாமால் அதையே ஒரு உத்வேகமாக மாற்றிக்கொண்டு புதிய கட்டுரையை எமிலியும் அவரது சகாக்களும் எழுதி வருகின்றனர்.
இப்படி அடுத்தடுத்து எழுத வேண்டிய கட்டுரைகளுக்கு என்று அவர் ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார்.
இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள தேவைப்படும் உணர்வு ரீதியான உழைப்பு அளவில்லாதது எனும் நிலையில், இத்தகைய தாக்குதல் ஒவ்வொன்றையும் தனது நோக்கத்தை மேலும் வலுவாக்கி கொள்ளும் வகையில் எமிலி செயல்படுவது துணிச்சலானது என்று பாராட்டுகிறார் பவுட்டர்சே. இது இணையத்தில் பெண்களை மவுனமாக்க முயல்பவர்களை தோல்வியடையச்செய்கிறது என்றும் அவர் புகழ்கிறார்.

எமிலியின் பங்களிப்பில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அவரது விக்கி நிபுணத்துவம். விக்கிபீடியாவில் எந்த புது கட்டுரையையும் இடம்பெற வைக்கலாம் என்றாலும் அது விக்கி விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நிராகரிக்கப்பட வேண்டும். அதிலும் வாழ்க்கை வரலாறு கட்டுரையை பதிவேற்ற வேண்டும் என்றால் அதற்கான தகுந்த முகாந்திரம் இருக்க வேண்டும். அதாவது வாழ்க்கை வரலாற்றுக்குறிய நபர் பற்றி ஏற்கனவே பரவலாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்த நபர் பற்றி ஆதார பூர்வமான கட்டுரைகள் வெளியாகி இருக்க வேண்டும்.

பெண் விஞ்ஞானிகள் வெளியே தெரியாமல் இருப்பது தான் பெருங்குறை எனும் போது அவர்களை பற்றிய கட்டுரைகள் விக்கிபீடியாவில் இடம்பெறாமல் போக இதுவே ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் எமிலி விக்கிபீடியா நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆதாரங்களை தேடிப்பிடித்து அதில் ஏற்கப்படும் நடையில் பெண் விஞ்ஞானிகளை அறிமுகம் செய்து வருகிறார்.

எமிலி பற்றிய விக்கிமீடியா வலைப்பதிவு குறிப்பு: https://blog.wikimedia.org/2016/03/08/alchemy-turning-harassment-into-women-scientists/

எமிலியின் பெண் விஞ்ஞானிகள் விக்கி திட்டம்: https://en.wikipedia.org/wiki/Wikipedia:WikiProject_Women_scientists

——-


இணைய குறிப்பேடு

papiewrஇணையத்தில் உலாவும் போது, காகிதமும் பேனாவும் கையில் இருந்தால் நல்லது தான். பயனுள்ள இணைதளங்கள் அல்லது பின்னர் பார்க்க நினைக்கும் இணைய சேவைகளை குறித்து வைத்துக்கொள்ள இது உதவலாம். அப்படியே இணைய உலாவுதலின் போது மனதில் மின்னலென தோன்றும் எண்ணங்களையும் உடன் எழுதி வைக்கலாம். காதிக குறிப்பேட்டை விட டிஜிட்டல் குறிப்பேடு இன்னும் நல்லது. இதற்கென தனியே இணைய சேவையை நாடாமல் நினைத்த நேரத்தில் குறித்து வைக்கும் வசதி இருப்பது மேலும் சிறந்தது – இப்படி நினைப்பவர்கள் குரோம் பிரவுசரில் நீட்டிப்பாக செயல்படும் கெட்பேப்பியர் சேவையை புக்மார்க் செய்து கொள்ளலாம்.

உடனடி குறிப்பேடாக செயல்படக்கூடியது என்பது இதன் சிறப்பு. இந்த சேவையை நீட்டிபாக நிறுவிக்கொண்ட பின், எப்போது குறிப்பேடு தேவையோ அப்போது புதிய டேப் ஒன்றை கிளிக் செய்து விட்டு அந்த பக்கத்தில் டைப் செய்யத்துவங்கிவிடலாம். டைப் செய்பவை தானாக சேமிக்கப்படும். இதற்கென தனியே கணக்கு துவங்க தேவையில்லை. இந்த குறிப்பேட்டை அச்சிட்டுக்கொள்ளலாம். இரவு வாசிப்புக்கு ஏற்ற அம்சமும் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: https://getpapier.com/

———

செயலி புதிது; மரம் வளர்க்கும் செயலி
forest-app-trees
ஸ்மார்ட்போனை கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று புலம்பும் அளவுக்கு அதற்கு பழகிவிட்டீர்களா? கவலையே வேண்டாம், ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து சற்றே விடுபட சுவாரஸ்யமான முறையில் வழி காட்டுகிறது பாரஸ்ட் ஆப் செயலி.

ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்தாமல் வேறு முக்கிய பணிகளில் ஈடுபட விரும்பும் போது இந்த செயலியை இயக்க வேண்டும். உடனே திரையில் ஒரு மரம் வளரத்துவங்கும். அடுத்த அரை மணி நேரத்திற்கு செயலி அப்படியே இயங்கி கொள்ள அனுமத்தீர்கள் என்றால் மரம் முழுவதும் வளரும். அது வரை நீங்களும் உங்கள் பணியில் மூழ்கி இருக்கலாம்.

மரத்தை வெட்டாமல் இருக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் நீங்கள் போனில் கை வைக்காமல் இருக்க வேண்டும். மரம் வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது உற்சாகம் ஏற்படும் அல்லவா? அதற்காக பொறுமையாக இருக்கத்தோன்றும். வேலையையும் கவனிக்கலாம்.

போனில் இருந்து விடுதலை தேவை என நினைக்கும் போது இந்த செயலியை நாடலாம்.
ஸ்மார்ட் போன் மோகத்திற்கு கொஞ்சம் எளிமையான தீர்வு தான். ஆண்ட்ராய்டு, ஐபோனில் செயல்படுவதோடு, இணைய பிரவுசர்களிலும் செயல்படுகிறது.

பிரவுசரில் பயன்படுத்தும் போது, அரை மணி நேரத்திற்கு இணையதளங்களின் பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும். எந்த தளங்களை பிளாக் செய்ய வேண்டும் எனும் பட்டியலை பயனாளிகள் தீர்மானித்துக்கொள்ளலாம். சதா பேஸ்புக், டிவிட்டர் என இருப்பவர்களும் இதை முயன்று பார்ககலாம். கவனச்சிதற்ல்களுக்கான வாய்ப்பு இணையத்தில் அதிகம் இருக்கும் நிலையில், அவற்றில் இருந்து மீட்டுக்கொள்ள இந்த சேவை கைகொடுக்கும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.forestapp.cc/

—-

தளம் புதிது: உடனடி மொழிபெயர்ப்பு வசதி
tras
இணையத்தின் மூலம் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் எளிதாக இருக்கிறது. சில நேரங்களில் சொந்த மொழி தவிர பிற மொழிகளிலும் கருத்துக்களை வெளியிட இணையத்திலேயே மொழிபெயர்ப்பு வசதியும் இருக்கிறது. இப்படி பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது டிரான்ஸ்லேட்டர் இணைதளம்.
எளிமையாக உள்ள இந்த தளத்தில் மேல் பக்கத்தில் மொழிபெயர்க்க விரும்ப்பும் வரிகளை டைப் செய்து விட்டு, கீழே உள்ள பட்டியலில் இருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வளவு தான் மொழிபெயர்ப்பு முடிந்தது. ஆனால் நீளமான பத்திகளுக்கு எல்லாம் பொருத்தமாக இருக்காது. சின்ன சின்ன வாசகங்கள் என்றால் சரியாக இருக்கும். ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் மாற்றிக்கொள்ளலாம். மிக எளிமையான சேவை; ஆனால் பயன்மிக்கது.
கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://translatr.varunmalhotra.xyz/

——-

வீடியோ புதிது: புளுடோனியம் அறிவோம்
science-elements
புளுடோனியம் தான் உலகின் ஆபத்தான தனிமம் என்று கருதப்படுவது உங்களுக்குத்தெரியுமா? மற்ற தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டவை என்றால், புளுடோனியம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. கதிரியக்க செயல்பாடால் கண்டறியப்பட்டது என்பதால் அது ஆபத்தானது. அது கதிரியக்க தன்மை கொண்டது. புளுடோனியத்தை சாதாரண ஆய்வுக்கூடத்தில் வைத்திருக்க முடியாது.; அதற்கென வடிவமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் தான் வைக்க முடியும். புளுடோனியத்தை நேரில் பார்ப்பது சாத்தியமில்லை. புளுடோனியம் பற்றி இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை வழங்குகிறது ரியல் புளுடோனியம் வீடியோ. ஆர்வத்தை தூண்டும் ஆவணப்பட பாணியில் அமைந்துள்ள இந்த வீடியோவை பார்த்து பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளலாம். புளுடோனியம் பற்றி மட்டும் அல்ல, பீரியாடிக் டேபிள் எனப்படும் தனிப அட்டவனையில் உள்ள ஒவ்வொரு தனிமம் பற்றிய வீடியோக்களையும் இதன் பின்னே உள்ள யூடியூப் சேனலில் பார்க்கலம்;

வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=89UNPdNtOoE

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

குறிப்பெடுக்க உதவும் இணைய பலகை

02காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக்கொள்ளவும், தேவை எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தால் எப்படி இருக்கும்?இந்த இரண்டையும் பின்சைடு இணைய சேவை சாத்தியமாக்குகிறது.இன்னும் பலவற்றையும் கூட சாத்தியமாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

வடிவமைப்பு மற்றும் தோற்றம் என இரண்டிலுமே எளிமையாக இருக்கும் பின்சைடு பயன்படுத்தவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் அதன் எளிமையை மீறி அதன் பயன்பாடு எல்லையில்லாமல் விரிவாதாக இருப்பது தான் ஆச்சர்யம்.

சரி, பின்சைடு மூலம் என்ன (எல்லாம்) செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

அடிப்படையில் பின்சைடு ஒரு இணைய பலகை- அதாவது இணைய குறிப்பேடு என்று வைத்துக்கொள்ளலாம்.
உள்ளங்கை அளவு மஞ்சள் வண்ண காகிதத்தில் குறிப்பெழுதி அலுவலக மேஜை முன் ஒட்டி வைத்துக்கொள்வது உண்டல்லவா?அது போலவே பின்சைடு தளத்தில் நமக்கான குறிப்புச்சீட்டை உருவாக்கி கொள்ளலாம். இந்த சீட்டில் செய்ய வேண்டியது, நினைவில் கொள்ள வேண்டியது என எதை வேண்டுமானாலும் குறித்து வைக்கலாம்.
குறிப்புச்சீட்டுகளை பெற பின்சைடு தளத்தில் உறுப்பினராக சேர்ந்தாலே போதுமானது.உறுப்பினராக இணைவதற்கு முன் இந்த சேவை எப்படி பயன்படுத்திக்கொள்வது என முன்னோட்டம் பார்க்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. இதற்காக டெமோ போர்ட் எனும் விளக்க பலகை நம் முன் வைக்கப்படுகிறது.

விளக்க பலகையில் கரும் பலகை போல வெறுமையாக இருந்தாலும் அதில் இடது பக்கத்தின் மேலே உள்ள ,புதிய குறிப்புக்கான பகுதியை கிளிக் செய்ததுமே, கரும் பலகையில் மஞ்சல் வண்ண குறிப்பிச்சீட்டு தோன்றுகிறது. மனதில் உள்ளதை அதில் டைப் செய்யலாம். தேவை எனில் புகைப்படமும் இணைக்கலாம். அவ்வளவு தான் குறிப்பிச்சீட்டை தயார் செய்தாகிவிட்டது.

இனி இந்த சீட்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இல்லை எனில் உங்களுக்கு மட்டுமே வைத்துக்கொள்ளலாம். இதில் வெறும் நினைவூட்டலை எழுதி வைக்கலாம். அல்லது செய்ய வேண்டிய செயல்களை பட்டியல் போட்டுக்கொள்ளலாம். பார்க்க வேண்டிய படங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என நீங்கள் விரும்பும் எதையும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

இப்படி எத்தனை குறிப்புகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். குறிப்புச்சீட்டுகளை கரும் பலகையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கொண்டு போய் வைக்கலாம். அவற்றுக்கான நோக்கம் நிறைவேறிவிட்டால் குறிப்புகளை நீக்கிவிடலாம்.

தனிப்பட்ட முறையில் பயன்படுத்த நினைத்தால் ,இதை உங்க்ளுக்கான இணைய பலகையாக கருதிக்கொள்ளலாம். சந்திப்புகளுககான கூட்டங்களை நினைவில் கொள்வது முதல் இன்று மாலை வாங்கி வர வேண்டிய மளிகை சாமான்கள் வரை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் பார்க்கும் பயனுள்ள இணையதளங்களையும் கூட இப்படி புக்மார்க் செய்து கொள்ளலாம்.

பகிர்தலுக்கான விஷயங்கள் என்றால் இந்த குறிப்பேட்டை நண்பர்களுடனும் கூட பகிர்ந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு ஒன்றாக திட்டமிடுவது அல்லது அலுவலக பணி பற்றி விவாதிப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.குடும்பத்தினர் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து விடுமுறை கால பயணத்தையும் திட்டமிடலாம். நண்பர்கள் இதிலேயே எடிட் செய்து கருத்து தெரிவிக்கலாம்.
பொது கருத்து என்றால் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த பலகையை பயன்படுத்தலாம். மாற்றங்களுக்கான எண்ணங்களை வெளியிட்டு ஆதரவு திரட்டவும் இது ஏற்றதாக இருக்கும். வலைப்பதிவு துவக்குவதை சுமையாக நினைத்தால், எளிதாக இதில் எளிதாக எண்ணங்களை பதிவு செய்து அந்த பக்கத்தை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம்.

மாணவர்களுக்கும் கூட இது ஏற்றதாகவே இருக்கும்.
இந்த சேவை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. புக்மார்க் செய்து கொண்டு, முயற்சித்து பாருங்கள்: http://pinsi.de/index.php

சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம்.

வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம்.

எழுத்து என்பது கலை தான் என்ற போதிலும் அதனை பட்டைத்தீட்டிக்கொள்ள படைப்பாற்றலோடு கொஞ்ச்ம பயிற்சியும் தேவை என்னும் சு ரா வின் கருத்தோடு எனக்கும் உடன்பாடு உள்ளது.

நல்ல எழுத்தாளர்கள் தினமும் ஒரு பக்கமாவது எழுதி பார்த்துவிட வேண்டும் என்று கூறும் சு ரா வின் கருத்து இணைய உலகிற்கும் பொருந்தும்.

யோசித்துப்பாருங்கள் இணையம் நமது கருத்துக்களை பதிவு செய்யவும் பகிரவும் எத்தனை வசதிகளை தந்துள்ளது.வலைப்பதிவு மூலமாக வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோமோ இல்லையோ முக்கிய அனுபவங்களை பதிவு செய்யலாம்.டைரி எழுதுவது போல மனதில் தோன்றுவதை குறித்து வைத்து கொள்ள உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.

தினமும் புகைப்பத்தோடு வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்ய தூண்டும் தளங்களும் இருக்கின்றன.எனன் இருந்து என்ன பயன்,எதையும் இடைவிடாமல் செய்யும் குணம் தான் இல்லையே.சோம்பலும் மறதியும் வழிமறித்து கொள்வதால் இத்தகைய சேவைகளை பயன்படுத்தி கொள்ளும் சுறுசுறுப்பு கிடைக்கப்பெறுவது பெரும் பாடாக அல்லவா இருக்கிறது.

இத்தகைய சோம்பேறிகளுக்காக என்றே அருமையான ஒரு இணைய டைரி சேவை அறிமுகமாகியுள்ளது.

வாழ்க்கை குறிப்புகளை எழுத உதவும் அந்த தளம் நாள் தவறாமல் அதனை எழுதி முடிக்கவும் வழி செய்கிறது.டிவிட்டர் யுகத்தில் பலரும் மறந்து விட்ட இமெயில் துணையோடு இதனை அழகாக நிறைவேற்றுகிறது இந்த இணையதளம்.அதற்கேற்ப மிகவும் பொருத்தமாக மெயில்டைரி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெயில் டைரியில் தினமும் உங்கள் வாழ்வனுபவத்தை நீங்கள் குறித்து வைக்கலாம்.டைரி எழுதுவது போல தான் என்றாலும் ஒரு நாள் உற்சாகமாக ஆரம்பித்து விட்டு மாறுநாளே மறந்து போய்விடும் அபாயம் இந்த சேவையில் இல்லை.

காரணம் இந்த தளம் தினமும் இமெயில் வாயிலாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.இதில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்ட நாள்தோறும் இமெயில் வாயிலாக இன்றைய தினம் என்ன நடந்தது என்று கேள்வியை இந்த தளம் கேட்கும் .அதற்கு பதில் அளிப்பதற்காக கொஞ்சம் யோசித்து பார்த்து முக்கிய நிகழ்வுகளை குறித்து வைக்கலாம்.

நாட்காட்டி வசதியோடு இபப்டி குறிப்புகளை இடம் பெறச்செய்வதற்கான வசதியும் உள்ளது.

இது தான் என்று இல்லாமல் எல்லா வகையான விஷயங்களையும் இதில்,பகிர்ந்து கொள்ளலாம்.அனுபவங்களை மட்டும் அல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.புகைப்படங்களையும் சேர்த்து கொள்ளலாம்.செல்போனில் இருந்தும் அனுபவங்களை அப்டேட் செய்யலாம்.

ஒரு கட்டத்திற்கு பின் திரும்பி பாத்தால் இந்த பதிவுகள் செறிவானவையாக வியக்க வைக்கலாம்.பிள்ளைகளிடமோ நண்பர்களிடமோ காட்டி மகிழ கூடியவையாக இருப்பதோடு நமக்கே பயனுள்ளதாக இருக்கலாம்.

நினைத்தை அடையவும் இந்த தளம் கைகொடுக்கும்.யார் கண்டது உங்கள் அனுபவங்கள் ஒரு ஆழமான நாவலுக்கு உரியதாக கூட இருக்கலாம்.

டைரி எழுதுவதன் அருமையை புரிந்து கொள்ள பிரும்புகிறவர்கள் அனந்தரஙக பிள்ளை டைரி பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியுள்ள குறிப்புகளை படித்து பார்க்க வேண்டும்.

டைரி எழுத இனைய முகவரி;http://maildiary.net/

திட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை.

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ள என்று இணையதளங்கள் இருக்கின்றன.நினைத்தவற்றை தள்ளிப்போடாமல் முடிக்க நினைவூட்டும் சேவைகள் இருக்கின்றன.கொஞ்சம் விரிவாக வரைபடம் போட்டு எல்லாவற்றையும் திட்டமிடவும் இணையதளங்கள் இருக்கின்றன.

இப்போது இந்த பட்டியலில் புதிதாக மை சிம்பில் சர்பேஸ் தளம் சேர்ந்துள்ளது.இது வரையான திட்டமிடல் தளங்களை விட எளிமையான ஆனால் அதே நேரத்தில் மேம்ப்பட்ட சேவையை வழங்குவதாக இந்த தளம் சொல்கிறது.

பட்டியல் போடும் தளங்களும் போதாது,குறித்து வைக்கும் சேவைகளும் முழுமையாக கைகொடுக்காது என்று சொல்லும் இந்த தளம் இந்த இரண்டும் இணைந்த ஒருங்கிணைந்த வசதியை அளித்து திட்டமிட உதவுவதாக அழைக்கிறது.

எளிமையான இணைய பலகையை வழங்குவதன் மூலம் எல்லாவற்றையும் குறித்து வைத்து அதனடிப்படையில் செயல்களை திட்டமிட இந்த தளம் வழி செய்கிறது.

அறைகுறையாக திட்டமிடலில் துவங்கி முழுமையாக திட்டமிட உதவுவது இந்த இணைய பலகையின் சிறப்பியல்பு என்றும் சொல்லப்படுகிறது.அறைகுறையாக திட்டமிடுவது என்றால் என்ன செய்யப்போகிறோம் என்பது முன்கூட்டியே முழுவதும் தெரியாத நிலையை குறிக்கும்.

திட்டமிட முயன்றவர்களுக்கு இந்த சங்கடம் நன்றாகவே புரியும்.ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்ற முடிவோடு திட்டமிட துவங்கியவுடன் எல்லாமே மறந்து போனது போல ஒரு உணர்வு ஏற்படும்.வரிசையாக என்ன என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போடவோ அல்லது குறித்து வைக்கவோ முற்பட்டால் அடுத்த செயல் எது என்று தெரியாமல் குழப்பமாக இருக்கும்.

ஆக திட்டமிடுவதற்கு முன்பாக முதலில் எப்படி திட்டமிட வேண்டும் என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பாதியிலேயே தடம் மாறி உற்சாகமும் மறைந்து போய்விடும்.

ஆனால் ‘சிம்பில் சர்பேஸ்’ இணைய பலகை இந்த பிரச்சனைக்கு அழகான தீர்வை தருகிறது.இதில் ஒவ்வொன்றாக செயல்களை குறித்து கொள்ளலாம்.எப்போது வேண்டுமானாலும் அதில் மாற்றங்களை செய்யலாம்.புதிய செயல்களை சேர்க்கலாம்.எல்லாவற்றையும் மாற்றை ஒருங்கிணைக்கலாம்.எல்லாமே மிகவும் எளிதானவை.

எதையும் திறந்த மனதோடு அணுக வேண்டும் என்று சொல்லப்படுவது உண்டல்லவா?அதே போல இணையவாசிகள் திட்டமிடுதலை துவக்க விரும்பினால் அழகான வெள்ளை பலகை வந்து நிற்கிறது.

இந்த பலகையில் எதை வேண்டுமானாலும் குறித்து வைக்கலாம்.முதல் பார்வைக்கு வெறுமையாக தோன்றினாலும் இந்த பலகையின் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

புதிதாக ஒன்றை குறித்து வைக்க வேண்டும் என்றால் ஏதாவது ஓரிடத்தில் இரட்டை கிளி செய்தால் போதும் சின்னதாக ஒரு கட்டம் தோன்றும் .அதற்கு ஒரு தலைப்பு கொடுத்த் சேமித்து கொண்டு அதன் கீழ் குறிப்புகளை இடம் பெற வைக்கலாம்.அதிலேயே மீண்டும் வலது பக்கமாக கிளிக் செய்தால் வண்ணத்தை மாற்றுவது,இணைய முகவரியை இணைப்பது,மேல் அல்லது கீழே புதிய விஷயங்களை சேர்ப்பது என பல வித உப வசதிகள் இருக்கின்றன.

ஏதாவது ஒரு தலைப்பில் மனதில் உள்ளவற்றை குறித்து வைத்து விட்டு அந்த பக்கத்தை அப்படியே சேமித்து கொள்ளலாம்.இந்த பக்கத்தை கோடு போட்டார் போல எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிரித்து கொள்ளலாம்.கோட்டை மேலும் கீழாக அல்லது பக்கவாட்டில் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தி கொள்ளலாம்.அந்த இடங்களில் இரட்டை கிளிக் செய்து புதிய தலைப்பில் குறிப்புகளை இடம் பெற வைக்கலாம்.

அதே போல அட்டவனைகளையும் விருப்பம் போல அமைத்து கொள்ளலாம்.எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம்,புதிய விவரங்களை சேர்த்து கொள்ளலாம்.ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம்.

எல்லாமே மிகவும் சுலபமானது. ஆக எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இந்த பலகையில் தகவல்களை சேர்த்து திட்டமிடுதலை ஒருங்கிணைத்து கொள்ளலாம்.

இந்த பலகையை சேமித்து வைத்து இமெயில் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.புதிய பலகையை உருவாக்கி ஒன்றோடு ஒன்று இணைப்பு கொடுத்து ஒருங்கிணைக்கலாம்.

பெயருக்கு ஏற்பவே எளிமையான பலகை தான்.ஆனால் திட்டமிடலில் பல மாயங்களை செய்ய வல்லது.ஒரு முறை பயன்படுத்தி பார்த்தால் உங்ளுக்கே புரியும்.

இணைய பலகை முகவரி;http://www.mysimplesurface.com/