நான் அரவணைக்க வந்தேன்

பொது இடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை பார்க்கும்போது உங்களுக்கு என்னத்தோன்றும்? ஆஸ்திரேலியாவின் ஜீவான் மன்னுக்கோ, அவர்களை அரவணைக்க தோன்றுகிறது. அவரைப்பற்றி அறிந்து கொண்டால் உங்களுக்கும் கூட அவ்வாறே தோன்றலாம்! ஏன் என்றால் அவரிடம் இருந்து இந்த பழக்கம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு தொற்றிக்கொண்டிருக்கிறது. அதன் பயனாக ஜீவானும் உலகம் அறிந்த மனிதராகி விட்டார்
முன்பின் பார்த்திராதவர்களை எல்லாம் அரவணைக்கும் செயலின் மூலம் ஜீவான் எதிர்பாராமல் பிரபலமானதோடு லட்சக் கணக்கானவரின் முகத்தில் புன்னகையை வரவைத்திருக்கிறார்.

இலக்கில்லாத வன்முறை என்று சொல்லப்படுவது பற்றி தானே கேள்விப்பட்டிருக்கிறோம். ஜீவானோ இலக்கில்லாத கருணைச் செயல்கள் பெருக வைத்து புகழை தேடிக் கொண்டிருக்கிறார்.

ஜீவான் நம்மூரின் தாயுமானவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தாயுமானவரை அறிந்திருந்தால் ‘எல்லோரும் புன்னகைத்திருந்தால் அன்றி வேறொன்று அறியேன் பராபரமே” என்று சொல்லிய வண்ணம் இருந்திருப்பார். எப்படியும் அதைத்தான் செயல் வடிவில் காட்டியிருக்கிறார். ரெயில் நிலையங் களிலும் விமான நிலையங்களிலும் மற்றும் பிற பொது இடங்களிலும் அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைப்பதை தான் ஜீவான் செய்திருக்கிறார்.

உடனே வசூல் ராஜா படத்தில் கமலின் கட்டிப்புடி வைத்தியம் நினைவுக்கு வரலாம். கட்டி அணைத்து அன்பை தெரிவிப்பதன் மகத்துவத்தை புரிந்து கொள்ள இது உதவும் என்றாலும், தனக்கு முற்றிலும் அந்நியமானவர்களை எல்லாம் ஜீவான் இப்படி கட்டிப்பிடித்து இருக்கிறார் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.

யார் இந்த ஜீவான்? இவர் ஏன் இப்படி செய்கிறார்? இதனால் என்ன பயன். இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கலாம். இவற்றுக்கான பதிலை பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொண்டு விட வேண்டும். அதாவது ஜீவானின் நோக்கம் நல்லது!

“அறிமுகம் இல்லாத மனிதர்களின் முகங்களில் எல்லாம் புன்னகை மலரச் செய்ய வேண்டும்” என்று இந்த நோக்கத்தை அவரே அழகாக விவரித்திருக்கிறார்.
இந்த எண்ணத்தை தனது நோக்கமாக அவர் வரித்துக் கொண்டதன் பின்னே நெகிழ்ச்சியான ஒரு கதை இருக்கிறது.

2004-ம் ஆண்டு ஜீவான் லண்டனில் இருந்து தனது தாய் நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய போது தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. அப்போது ஜீவான் மகிழ்ச்சியான மனிதராக இருக்க வில்லை.

அதுவரை லண்டனில் வசித்து வந்த அவர், காதல் தோல்வி ஏற்பட்ட நிலையில் வேலையையும் விட்டு விட்டு சிட்னி நகரில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு வீடு என்றும் எதுவும் இல்லை. உறவினர்/நண்பர் என்று சொல்லிக்கொள்ளவும் யாரும் கிடையாது. நெஞ்சு நிறைய பிரச்சனைகளை சுமந்து கொண்டிருந்த அவர் கையில் ஒரு பையோடு தனியே சிட்னி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

மற்ற பயணிகளை எல்லாம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் வரவேற்றுக் கொண்டிருந்தனர். எல்லோரும் புன்னகை மலர பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஜீவானுக்கு அந்த நொடியில் தனக்கென அங்கே யாராவது ஒருவர் இருக்கக்கூடாதா என நெஞ்சம் துடித்தது. தன்னைப் பார்த்தால் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு முகத்தை, தன்னைப் பார்த்து புன்னகைக்க கூடிய ஒரு முகத்தை அப்படியே கட்டி அணைத்து அன்பை பொழியக்கூடிய கரங்களை அவர் எதிர்பார்த்து ஏங்கினார்.

அப்போதுதான் அவர் அந்த எதிர்பாராத செயலை செய்தார். அட்டைப்பலகை ஒன்றை தேடி வைத்து எதிர் “பிரிஹக்ஸ்” (இலவச அணைப்புகள்) என்று இரு பக்கமும் எழுதி வைத்துக்கொண்டு விமான நிலையத்தின் நெரிசல் மிகுந்த இடத்தில் போய் நின்று விட்டார்.

முதல் பத்து பதினைந்து நிமிடத்திற்கு யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. அவரையும் அவரது அட்டைப்பலகை வாசகத்தையும் வெறித்துப்பார்த்து விட்டு விலகிச் சென்று விட்டனர்.

பின்னர் பெண்மணி ஒருவர் அவரை நெருங்கி வந்து தோளைத் தொட்டி தட்டி அழைத்து தனது சோகங்களை எல்லாம் சொல்லி கண் கலங்கி யாருமற்ற தனிமையில் தவித்ததை தெரிவித்து, தனக்கு தேவை அன்பான அரவணைப்பு தான் என்று சொல்லி ஜீவானை கட்டி அணைத்துக் கொண்டார். பின்னர் அவர் விடை பெற்றுச் சென்றபோது முகமெல்லாம் மலர்ந்திருந்தது.

அப்போதுதான் ஜீவானுக்கு அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்த லாம் என்ற எண்ணம் உண்டானது. உலகில் எல்லோருக்கும் பிரச்சனை கள் இருக்கின்றன. பிரச்சனைகளை ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் அவர்கள் முகத்தில் புன்னகை மலரச் செய்தால் என்ன என்னும் சிந்தனையோடு ஜீவான் அதன்பிறகு ‘இலவச அணைப்புகள்’ அட்டையை கையில் வைத்துக் கொண்டு சுற்றத் தொடங்கி விட்டார். முதலில் பலர் அவரை சந்தேக கண் கொண்டு பார்த்தாலும் நாளடைவில் அவரின் நல்லெண்ணம் மற்றவர் களையும் தொற்றிக்கொண்டது.

அவரது செயலும் பிரபலமாகி அவரும் பிரபலமாகி விட்டார். புதிய இடங்களில் எல்லாம் அவரது அரவணைப்பு செயல் பரவி, ஒரு இயக்கமாகவே உருவாகியும் விட்டது.
இந்நிலையில் எதிர்பாராத திசையில் இருந்து எதிர்ப்பு வந்தது. இத்தகைய நிகழ்ச்சிக்கான அனுமதி பெறவில்லை என்று கூறி சிட்னி காவல் துறை இந்த செயலுக்கு தடை விதித்தது.

ஆனால் தனக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி பொதுமக்கள் ஆதரவோடு காவல்துறையின் தடையை நீங்க வைத்து விட்டார். இதனிடையே சிட்னியைச் சேர்ந்த பாடகர் ஒருவர், ஜீவானால் ஈர்க்கப் பட்டு அவருக்காக பாட்டு ஒன்றை எழுதி வீடியோப் படம் ஒன்றையும் தயாரித்தார். ஜீவான் அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைக்கும் செயலை இசைமயமாக படம் பிடித்துக் காட்டிய அந்த வீடியோ ‘யூடியுப்’ தளத்திலும் அரங்கேறியது.

‘யூடியுப்’ தளத்தில் அந்த வீடியோ காட்சியை பார்த்தவர்கள் அதனை ரசித்து மகிழ்ந்ததோடு, மற்ற நண்பர்களுக்கு பரிந்துரை செய்தனர். இப்படியே லட்சக்கணக்கான முறை அந்த வீடியோ காட்சி பார்த்து ரசிக்கப்பட்டு அதன் ஆதார செய்தியும் பார்த்தவர்களை பாதித்தது. ஜீவான் சொல்வது சரியே என ஏற்றுக்கொண்டு பலரும் தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களை கட்டி அணைக்க முன் வந்தனர்.

2007ம் ஆண்டில் ஜூலை 7-ம் தேதியை சர்வதேச இலவச அழைப்பு தினமாக கொண்டாடும்படி அழைப்பு விடுக்கும் அளவுக்கு ஜீவான் பிரபலமாகி அவருக்கு என்று ஆதரவாளர்கள் உருவாகி விட்டனர். மற்ற நாடுகளில் இது கிளை இயக்கங்களாகவும் துளிர் விட்டது.

———
link;
http://in.youtube.com/watch?v=vr3x_RRJdd4
———-

0 thoughts on “நான் அரவணைக்க வந்தேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *