நான் வாங்க விரும்புவதெல்லாம்…;ஷாப்பிங் வலைப்பின்னல்


தேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம் .ஒவ்வொன்றும் ஒரு தேவையை நிறைவேற்றுகின்றன.

அதே போல வாங்க விரும்பும் பரிசுப்பொருட்களை பட்டியலிட்டு பகிர்ந்து கொண்டு அதன் மூலம் புதுமையான மற்றும் பயனுள்ள பரிசுப்பொருளை கண்டு கொள்ளும் உதவும் தளங்களும் இருக்கின்றன.

பரிசு பொருள் என்று இல்லை,பொதுவாக வாங்க விரும்பும் பொருட்களை பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் சமூகம் ஷாப்பிங் தளங்களும் இருக்கின்றன.

இவை எல்லாவற்றின் நோக்கமும் அடிப்படையில் ஒன்று தான்.இணையம் மூலம் விருப்பங்களை பகிர்ந்து கொண்டு அந்த பகிர்தல் மூலம் புதியவற்றை இனங்காண்பது தான் அது.

இந்த வகை தளங்களின் செயல்பாடுகளும் பொதுவானது தான்.விருப்பங்களை பட்டியலாக பகிர்ந்து கொள்வது.மற்றவர்களின் பட்டியலை பின் தொடர்ந்து அவர்கள் விருப்பங்களை அறிவது.அந்த அறிதல் மூலமாக புதிய யோசனைகளை பெறுவது.இவை தான் இந்த தளங்களின் அடிப்படை செயல்பாடு.

இதன் மூலம் இந்த தளங்கள் சாத்தியமாக்கும் சமூக தன்மையையும் அந்த சமூக தன்மை மூலமாக நிறைவேறும் தனிப்பட்ட தேவைகளும் அற்புதமானவை.

இந்த பிரிவில் புதுப்புது தளங்களும் அறிமுகமாகி கொண்டே தான் இருக்கின்றன.சில உண்மையிலேயே புதுமையானவை.சில ஏற்கனவே உள்ள தளங்களின் இன்னொரு வடிவமாக அலுப்பூட்டக்கூடியவை.

வான்ஸ்டர் இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கிறது.

வான்ஸ்டரை முற்றிலும் புதுமையான சேவை என்று புகழவும் முடியாது.அதே நேரத்துல் ஏற்கனவே உள்ள சேவை தானே என்று புறந்தள்ளி விடவும் முடியாது.

நீங்கள் விரும்பும் எல்லாம் ஒரே இடத்தில் என அழைக்கும் வான்ஸ்டர் ,மூன்று வகையான தேவையை ஒரே நேரத்தில் நிறைவேற்றி கவனத்தை ஈர்க்கிறது.

இணைய பலகையான பின்ட்ரெஸ்ட்டின் தோற்றத்தை நினைவு படுத்தும் முகப்பு பக்கத்தை பெற்றுள்ள வான்ஸ்டர் என்ன செய்கிறது என்றால் உங்கள் விருப்பங்களுக்கான பட்டியலை உருவாக்கி கொள்ள உதவுகிறது.விருப்பங்கள் என்பது நீங்கள் வாங்க விரும்பும் பொருட்கள்.(பெரும்பாலும் இணையம் வழியே வாங்க விரும்புபவை).

புதிதாக வந்துள்ள செல்போனையோ அல்லது புத்தகத்தை வாங்க விரும்புகிறீர்களா,உடனே அதனை உங்கள் விருப்ப பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.இதற்கென்றே புக்மார்க் வசதியும் இருக்கிறது.உறுப்பினராக சேர்ந்த பின் புக்மார்க் வசதியையும் உங்கள் பிரவுசரில் சேர்த்து கொண்டால் அதன்பிறகு இணையத்தில் உலாவும் போது வாங்க தூண்டும் பொருள் கண்ணில் பட்டல் அதன் மீது புக்மார்க்கை கிளிக் செய்தால் போதும் அந்த பொருள் தானாக உங்கள் விருப்ப பட்டியலில் சேர்ந்து விடும்.அதுவும் அதன் அழகான புகைப்படத்துடன்.

முகப்பு பக்கத்தில் இந்த புகைப்படங்களை தான் வரிசையாக பார்க்கலாம்.எந்த புகைப்படத்தை கிளிக் செய்தாலும் அத்ய் தொடர்பான விவரங்களை காணலாம்.அதாவது அந்த பொருளை வாங்க விரும்பி குறித்து வைத்தது யார்,வேறு யாரெல்லாம் அதனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் போன்ற விவரங்களை அறிந்து கொள்வதோடு அதனை எங்கே வாங்கலாம் என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.

முகப்பு பக்கத்தில் பகிரப்படும் வாங்குவதற்கான விருப்பங்களை பார்க்கும் போது புதிய பொருட்களை அறிமுகம் செய்து கொள்ளலாம் என்றால் புகைப்படங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் அவை மற்றவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.

பொருட்களின் கீழ் அவை பற்றிய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.பொருட்கள் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து அறிய இந்த பின்னூட்டங்கள் உதவலாம்.

மற்றவர்கள் விருப்பம் தெரிவித்த பொருட்களை நாமும் விரும்பினால் ஒரே கிளிக்கில் நமது விருப்ப பட்டியலில் சேர்த்து விடலாம்.குறிப்பிட்ட ஒரு உறுப்பினரின் தேர்வுகள் வியக்க வைத்தால் அவரை பின் தொடர தீர்மானிக்கலாம்.அதன் பிறகு விரும்பும் புதிய பொருட்களை நாமும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.இந்த வலையில் வாங்கும் விருப்பத்திற்கான வலைப்பின்னலாக இந்த தளம் செயல்படுகிறது.

ஷாப்பிங்கில் நாட்டம் கொண்டவர்கள் பரிசளிக்க ஏற்ற புதிய பொருட்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த தளம் மிகவும் உதவியாக இருக்கும்.

அது மட்டும் அல்ல குறிப்பிட்ட பொருளை வாங்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் இருந்தால்,அந்த கேள்வியை நமது நண்பர்கள் மத்தியில் கேட்டு கருத்து கணிப்பு நடத்தி அதனடிப்படையில் முடிவு செய்யலாம்.இது இந்த தளம் வழங்கும் இரண்டாவது வசதி.

அதே போல குறிப்பிட்ட பொருளை நண்பருக்கு வாங்கி பரிசளிக்க விரும்பி அதன் விலை கூடுதலாக இருப்பதாக நினைத்தால் மற்ற நண்பர்களோடு இணைந்து கூட்டாக அதனை வாங்கி கொடுக்கலாம்.இதற்கான ஒருங்கிணைப்பு வசதியையும் இந்த தளம் வழங்குகிறது.இது இந்த தளத்தின் மூன்றாவது வசதி.

இது தவிர பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற பரிசளிப்புக்கு ஏற்ற நாட்களை மறக்காமல் இருக்க நினைவூட்டும் வசதியும் இருக்கிறது.

பேஸ்புக் மூலமே உறுப்பினராகலாம்.தனியேவும் உறுப்பினராகலாம்.

இணையதள முகவரி;http://www.wantster.com/

0 thoughts on “நான் வாங்க விரும்புவதெல்லாம்…;ஷாப்பிங் வலைப்பின்னல்”

Leave a Reply to ஆரா . Cancel reply

Your email address will not be published. Required fields are marked *