Category Archives: இணையதளம்

இனி ரசிகர்கள் ராஜ்ஜியம்

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இருக்கும் அந்த நட்சத்திர ஆட்டக்காரர் அடுத்த பந்தை எப்படி ஆடப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது.  அதை அவர்  பவுண்டரிக்கு விளாசப்போகிறாரா, அல்லது சிக்சர் அடிக்கப்போகிறாரா, இல்லை அருகே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போகிறாரா என்பதை யாரோ தீர்மானிக்கப்போகிறார்கள்.

.
அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் நின்று நிதானமாக ஆட வேண்டுமா அல்லது அடித்து நொறுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதும் அவரது கையில் இல்லை.  அதையும் வேறு யாரோதான் தீர்மானிக்கப்போகிறார்கள்.

அந்த யாரோ, வேறு யாருமல்ல, சாட்சாத் ரசிகர்களேதான்.  ஒவ்வொரு பந்துக்கும் அல்லது ஒவ்வொரு முக்கியமான கட்டத்துக்கும் முன்பாக அவர்கள், அணியின் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானித்து சொல்லப்போகிறார்கள்.  அதைத்தான் வீரர்கள் பின்பற்ற வேண்டும்.

இந்த முடிவை ரசிகர்கள் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அவர்களுக்குள் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தாக வேண்டும். ஏகமனதாக கருதப்படும் அந்த முடிவை வீரர்கள் செயல்படுத்த வேண்டும்.

இப்படியொரு காட்சியை விவரித்தால் நம்ப முடியாததாக தோன்றலாம்.  ஆனால் இன்டெர்நெட் புண்ணியத்தால் இது சாத்தியமாக வாய்ப்புள்ளது. அதற்கான முதல்படி ஏற்கனவே  எடுத்துவைத்தாகிவிட்டது.பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்களே  விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.

இன்டெர்நெட் மூலம் விவாதம் நடத்தி, அந்த குழுவின் செயல்பாடுகளை  வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் உத்தேசத்தோடு, அதனை  இன்டெர்நெட் மூலமே விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இன்டெர்நெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த  பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இன்டெர்நெட் மூலம் ரசிகர்களே ஒன்றிணைந்து தங்கள் கையில் கூடுதல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை எடுத்து கொள்வது  இப்போது வேகமாக பிரபலமாகி வருகிறது.
இந்த பின்னணியில், பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்கள் சார்பில்  விலைக்கு வாங்குவதற்காக  மைஃபுட்பால் கிளப் என்னும் பெயரில் இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த தளத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டு, ரசிகர்களிடமிருந்து பங்குத் தொகை கோரப்பட்டது. குறிப்பிட்ட அளவிலான  தொகை சேர்ந்ததும் கால்பந்து குழுவை விலைக்கு வாங்கி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. எந்த குழுவை வாங்குவது என ரசிகர்களே வாக்களித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல குழுவின் ஒவ்வொரு செயலையும் ரசிகர்களே தீர்மானிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கப்பட வேண்டும், எந்த வீரரை அணியில் சேர்க்க வேண்டும், அணியின் வியூகம், அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் போன்ற விஷயங்களையெல்லாம் இந்த இணைய தளம் மூலம் ரசிகர்களே விவாதித்து முடிவெடுப்பார்கள்.

வில் புரூக்ஸ் என்னும் பத்திரிகையாளர் மனதில் உதித்த இந்த எண்ணத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்த கால்பந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து, எதிர்பார்த்ததை விட அதிக நிதி சேர்ந்து விட்டது. இதன் பயனாக பிரிட்டனில் உள்ள  எப்ஸ்பிலீட் யுனைடெட் என்னும் அணியை  இந்த தளம் விலைக்கு வாங்கியிருக்கிறது. இந்த  குழுவில் 51 சதவிகித பங்குகளை  ரசிகர்கள் கட்டுப்படுத்த உள்ளனர்.

இந்த குழுவின் இயக்குனர் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முற்றிலும் புதிய விஷயம் என்று இதனை அவர் வர்ணித்துள்ளார். ரசிகர்களால் ஒரு குழு வாங்கப்பட்டு நடத்த இருப்பது புதியபாதையாக அமையலாம் என்று அவர் கூறியிருக்கிறார். இதே போல வேறு கால்பந்து குழுக்களும்  ரசிகர்களால் வாங்கப்படுமா? வாங்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்றெல்லாம்  விவாதம் நடைபெற்று வருகிறது.

ரசிகர்களும் தங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியால் மகிழ்ந்து போயிருக்கின்றனர்.
அடுத்த போட்டி தொடங்குவதற்கு முன் அவர்கள் தங்கள் அணிக்கான வியூகங்களை வகுத்துத்தர உள்ளனர்.

வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய உத்தி ஆகியவைகளை அவர்கள் விவாதித்து, முன்வைக்க உள்ளனர். அதோடு போட்டியை இன்டெர்நெட் மூலம் நேரடியாக  அவர்கள் கண்டு ரசிக்க முடியும். (மைஃபுட்பால் கிளப் தளத்தின் மூலம்தான்).
அதோடு போட்டி முடிந்த பிறகு வீரர்கள் அவர்களோடு இமெயில் மூலம் உரையாடுவார்கள்.
போட்டி குறித்து வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையிலான விவாதமாக இது அமையும்.
இப்போதைக்கு போட்டியின் போது ரசிகர்கள் குறுக்கிட அனுமதிக்கப்படவில்லை. இந்த முறை வெற்றிபெற்றால் நாளை அதுவும் சாத்தியமாகும். அப்போது,  விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் விதமே மாறிவிடலாம்.  எப்படியும் சூதாட்ட தரகர்கள் மற்றும் வர்த்தக சக்திகள்  வீரர்கள் இயக்குவதை விட, ரசிகர்களே ஆட்டிவைப்பது மேலானதுதானே!

மாம்பூவே…

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போகும் விஷயத்தை பொறுத்தவரை “இதயம்’ படத்தில் வரும் ஏப்ரல், மேயிலே… பாடலை இலக்கியத் தரம் மிக்கதாக வைத்துக் கொள்ளலாம். தான் சார்ந்த சமூகத்தின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கும் தன்மை சிறந்த கவிதைகளுக்கு/பாடல்களுக்கு இருப்பதாக கருதப் படுகிறது. அந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்த பாடல் நமது சமூகத்தின், அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்தை சுட்டிக் காட்டுகிறது

 

ஏப்ரல், மேயிலே பசுமையே இல்லை காய்ந்து போச்சுடா எனும் இந்த வரி கோடைக் காலத்தில் தமிழக பகுதிக ளில் ஏற்படும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை அழகாக பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் வானிலை சார்ந்த சுற்றுச்சூழல் மாற் றங்கள் மிகவும் சுவாரசிய மானவை; முக்கியமானவை. இந்த மாற்றங்கள் நம் கண்ணில் பட்டாலும் அநேகமாக கருத்தில் கொள்ளப்படுவதில்லை.  ஜப்பான் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் வசந்தத்தின் வருகையை பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்கள் வண்ண மயமாக அறிவிக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத் தில் பறைச்சாற்றும் மலர்கள் இருக்கின் றன. கரிசல் காட்டை உள்ளடக்கிய நம் நாட்டில், செர்ரி பூக்களுக்கு நிகராக மாம்பூக்களை சொல்லலாம்.
கோடைக்காலம் இங்கு மாம்பழங் களுக்கான காலமாகவும் இருக்கிறது. அதன் வருகையை மாமரத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

அதே போல கோடையின் வெப்பத்தை வீதிகளில் நிறையும் தர்பூசணிகளும் கூடை, கூடையாக வரும் வெள்ளரி பிஞ்சுகளும் உணர்த்தும். பல நேரங்களில் இந்த பருவம் தப்பிப் போவதும் உண்டு; அப்போது காட்சி மாறும், அல்லது தாமதமாகும். இந்த மாற்றங்களையெல்லாம் கவனிப்பது அவசியம் என்று வலி யுறுத்துவதற்காக இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புராஜெக்ட் பட் பிரஸ்ட் எனும் பெயரில் தீட்டப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த இணைய தளம் இதே பெயரில் உருவாக்கப் பட்டுள்ளது. இலையுதிர் காலம் என்று சொல்வது போல, மொட்டு மலரும் காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். பட் பிரஸ்ட் என்றால் இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்.

பூக்கள் மலர்வதையும், கனிகள் உண்டாவதையும் குறித்து வைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இது ஏதோ வேண்டாத வேலை என்பது போல ஒரு எண்ணம் தோன்றலாம்.
அப்படியில்லை. இது தாவரவியலின் ஒரு பகுதி. இதற்கு பினாலஜி என்று சொல்கின்றனர். அதாவது பருவ நிலையால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விஞ்ஞானம் என்று பொருள். தாவரங்கள் மற்றும் விலங்குகளின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இதன் பிரதான அங்கமாக விளங்குகின்றன.

மரங்களும், செடிகளும் எப்போது பூக்கின்றன; எப்போது காய்க்கின்றன என்பதை வைத்து இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தாவர இனத்துக்கும், பூப்பதற்கும், காய்ப்பதற்கும் ஒரு காலம் இருக்கிறது. அவற்றின் தன்மைக்கேற்ப பருவ காலத்தோடு இது ஒத்துப் போகக் கூடியது.

உதாரணமாக வெப்பம் அதிகரிக்கும் போது செர்ரி மரங்கள் பூக்கும். குறிப்பிட்ட காலங்களில் வெப்பம் அதிகமாவது தாமதமானால் செர்ரி பூக்களும் தாமதமாக பூக்கும். பருவ நிலை மாற்றங்கள் சீராக இருந்தால் தாவரங்களும் சரியாக பூத்துக் காய்க்கும். பருவ நிலை மாறினால் தாவரங்களும் மாறி விடும்.

இந்த மாற்றத்தை கவனித்து கொண்டிருப்பது முக்கியமானதாக பினாலஜி நிபுணர்கள் கருதுகின்றனர். காரணம், இந்த மாற்றம் ஏதோ செடி, கொடிகளோடு நின்று போய் விடுவதில்லை. இதனால் விலங்குக ளின் வாழ்க்கை முறையும் பாதிக்கப் படுகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப் படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேல் மனித குலத்தின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
நம்முடைய உணவு தானிய உற்பத்தி சீராக இருக்கிறதா என்பதை இந்த மாற்றங்களே தீர்மானிக்கின்றன.

நம்முடைய முன்னோர்கள் இதனை உணர்ந்தே விவசாயம் செய்து வந்தி ருக்கின்றனர். பல கலாச்சாரங்களில் பருவ நிலை மாற்றங்களை, தாவரங் கள் மீதான அதன் பாதிப்புகளை குறித்து வைத்துக் கொள்வதே இயல்பாக நடந்திருக்கிறது.

எழுத்துக்கலை போலவே இதிலும் சீனர்கள்தான் முன்னோடி. கிட்டத் தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் செடி, கொடிகள் பூக்கும் பருவங்களை ஆவணப்படுத்தி இருக்கின்றனர். ஜப்பானில் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கும் காட்சி கொண்டாடப்பட்டு வந்திருப்பதோடு, குறித்து வைக்கப் பட்டும் இருக்கிறது. நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. கனடாவில் பிளாண்ட் வாட்ச் என்ற அமைப்பு தாவரங்களை கவனித்து வருகிறது.

அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் ஏற்படும் இத்தகைய மாற்றங் களை குறித்து வைக்க வேண்டும் என்பதே பட் பிரஸ்ட் திட்டத்தின் நோக்கம். இதற்காக பொதுமக்களின் பங்களிப்பை கோரியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் தாவரங்கள் எப்போது பூக்கின்றன அல்லது பூக்க மறுக்கின்றன என்பதை கவனித்து இந்த தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.  இதன் மூலம் நாடு முழுவதும் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொண்டு அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை பெறலாம் என்று கருதப்படுகிறது

நல்லதுக்கு நான் அடிமை

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட  அவர் அடிமையாக்க நினைக்கிறார். இப்படி அடிமையாகிறவர்களை குறிக்க அழகான புதிய சொல் ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.
.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற் கென்றே ஒரு இணைய தளத்தை அமைத்திருக்கிறார். அந்த தளத்தில்  நுழைந்தீர்கள் என்றால் நீங்களும் அடிமையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

 அடிமை என்றதுமே பொதுவாக உருவாகக் கூடிய சித்திரத்தை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டிய  அவசியமில்லை.  அன்புக்கு நான் அடிமை என்று சொல்வது போல, “டெப்பி’ அனைவரும் நல்லதுக்கு நான் அடிமை என்று சொல்ல வேண்டும் என விரும்புகிறார்.

அதாவது எப்படியும் நல்லது செய்வேன் என்னும் தீர்மானமான எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்த விரும்புகிறார்.  நல்ல தையே  நினையுங்கள், பிறருக்கு நல்லது செய்யுங்கள் என்று உபதேசிக்காத மகான்களே கிடையாது தான். எல்லா மதங்களும் இதையே தான் போதிக்கின்றன. இருப்பினும்  உலகை தீமைகளும், வன்முறைகளும் தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

போரும், உள்நாட்டுப் போரும் கோலோச்சும் உலகில் நல்லதுக்கு காலமில்லை என்றே  பலருக்கும் சொல்லத் தோன்றும்.
நண்பர்களோடு  உரையாடிக் கொண்டிருந்த போது, “டெப்பி’யும்  இதே கருத்தை தான் கேட்க நேர்ந்தது.

 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் அவரது  தோழிகள், நகரில் வன்முறை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டது பற்றி கவலைப் பொங்க பேசிக் கொண்டிருந்தனர். எங்கும் வன்முறை மயம் என்றாலும்,  உலகை மாற்ற நம்மால்  எதுவுமே செய்ய முடியாது என்னும் வேதனை யோடு  உரையாடல் முடிந்தது.

அப்போது “டெப்பி’ மனதில், “நம்மால் ஏன் முடியாது?’ என்னும்  கேள்வி எழுந்தது.  உலகம் நல்லவிதமாக இருக்க  வேண்டும் என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் தனி மனிதர்களால் என்ன தான் செய்து விட முடியும்? டெப்பியும் இதனை அறிந்தே இருந்தார். இந்த யதார்த்தத்தை மீறி, அவருக்குள் உலகை மாற்ற ஏதாவது செய்ய முடியாதா? என்னும் கேள்வி எழுந்தது.  பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றாலும், நம்மால் முடிந்த சின்ன சின்ன  விஷயங்களை செய்யலாமே  என்று அவர் நினைத்தார்.

உலகில் போரை  முடிவுக்கு கொண்டு வர என்னால் முடியாது தான்.  ஆனால் போர்முனையில்  இருக்கும் ராணுவ வீரர்  தனது மனைவி, பிள்ளைகளோடு  பேசுவதற்கான செல்போன் கார்டை அனுப்பி வைக்க முடியுமே!

 பள்ளி கட்டிடங்கள் எல்லாம் மேம்படுத்தி விட முடியாமல் போகலாம். ஆனால் பள்ளி மாணவர்கள் சிலருக் கேனும், பென்சில், நோட்டுப் புத்தகங்களை வாங்கித்தருவது சுலபம்  தானே! இப்படி  நூறுவிதமான சிந்தனைகள் அவர் மனதில் அலைமோதின.

 இதை எல்லாம் செய்வது என அவர் தீர்மானித்தார். தினந்தோறும் இல்லை என்றாலும், வாரம் ஒரு முறை ஒரு நல்ல செயலை செய்வது என முடிவு செய்து கொண்டார். இதற்காக திங்கள் கிழமை தேர்வு செய்து கொண்டார்.  ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும், அன்பையும், கருணையையும்  வெளிப்படுத்தும் ஒரு நல்ல செயலை  செய்து வந்தார். தனது நண்பர்களையும் அதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

இது நல்ல விஷயமாக  இருக்கிறதே  என பாராட்டிய  நண்பர்கள், இந்த செயல்களை இணைய தளத்தில் இடம் பெற வைக்கலாமே என்று யோசனை கூறினர்.  டெப்பிக்கும் அந்த யோசனை  பிறந்திருந்தது.  தான் மட்டும் செய்வதோடு மற்றவர்களையும் பங்கேற்கச் செய்தால் சிறப்பாக தானே இருக்கும் என்ற உணர்வுடன்  இணைய தளம் ஒன்றை  அமைத்தார்.  இவ்வாறு உருவானதுதான் டூ ஒன் நைஸ் திங் (ஈணிணிணஞுணடிஞிஞுtடடிணஞ்.ஞிணிட்) இணைய தளம்.

ஒவ்வொரு  திங்கள் கிழமையும், தான் செய்ய  உள்ள நல்ல செயல் பற்றி இந்த தளத்தில் குறிப்பிட்டு, அதில் பங்கேற்க  ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மெல்ல மற்றவர்களும் இந்த எண்ணத் தால் ஈர்க்கப்பட்டு  ஆர்வத் துடன்  பங்கேற்கத் தொடங்கினர். 2005ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த தளம் இன்று 53 நாடுகளில், உறுப்பினர்களை  பெறும் அளவிற்கு  வளர்ந் திருக்கிறது. வாரந்தோறும் இதன் உறுப்பினர்கள் ஏதாவது  நல்லது செய்த வண்ணம் இருக்கின்றனர்.

அமெரிக்காவை காத்ரீனா சூறாவளி உலுக்கிய பிறகு, அப்பகுதியில் பாதிக்கப் பட்டவர் களுக்கு  தேவை யான  உடைகள் மற்றும் உணவுப் பொருட்களை  சேகரித்து தரும் பணியை இவர்கள் மேற்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில்  இருந்த அமெரிக்க ராணுவ வீரர்  ஒருவர், அங்குள்ள பள்ளிகளில் மாணவர் களுக்கு ஸ்லேட்டு, புத்தகம் கூட இல்லை என்பதை குறிப்பிட்டு, அவர்களுக்கு நோட்டு, புத்தகம், பென்சில் அனுப்பி வைக்கலாமே என்று யோசனை தெரிவித்தார்.  இந்த யோசனை ஏற்கப்பட்டு, பென்சில், பேனா, நோட்டு, புத்தகங்களை அனுப்பி வைக்கு மாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.

அன்றிலிருந்து  இன்று வரை யாராவது ஒருவர் ஆப்கானிஸ் தானுக்கு  இந்த தளத்தின் மூலம்  பென்சில் உள்ளிட்ட வற்றை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதே போல ஈராக்கில் உள்ள ராணுவ வீரர்களுக்கு 3000 கம்பிளி போர்வைகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இந்த தளத்தின் மூலம்  நிறைவேற்றப்பட்ட செயல்களுக்கு என்று நீளமான பட்டியல் இருக்கிறது. இந்த செயல்களில் உலகம் முழு வதும் உள்ளவர்கள் பங்கேற் கின்றனர் என்பது  தான் விசேஷம்.

நல்ல செயல்கள் பற்றிய நல்ல செய்தியை  உறுப்பினர்களுக்கு இந்த தளம் இமெயில் அனுப்பி வைக்கிறது.

அதோடு உலகில் தாங்களாகவே நல்லது செய்பவர்கள் பற்றியும், இந்த தளம் அறிமுகம் செய்து வருகிறது.  உறுப்பினர்களும், இத்தகைய  அனு பவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
உதவி செய்வது உன்னதமாக உணர வைக்கும் என்று குறிப்பிடும் “டெப்பி’ நீங்களும் நைச ஹாலிக்  ஆகுங்கள் என்கிறார். அதாவது நல்லதுக்கு  அடிமையாகுங்கள் என்கிறார்.

வன்முறைக்கு இடமில்லை

உலகில் வன்முறையே இருக்கக்கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடரஅனுமதிக்கக்கூடாது என்ற உறுதி உங்களிடம் உள்ளதா?

இவற்றுக்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.  ஐ.நா. அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்துக்கு சென்று  அங்கு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் புத்தகத்தில் உங்களது கையெழுத்தை இடம்பெற செய்ய வேண்டும்.

அப்படி செய்தீர்கள் என்றால், பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக நீங்களும் குரல் கொடுத்திருக்கிறீர்கள் என்றுஅர்த்தம். ஐக்கியநாடுகள் சபை, மனிதஉரிமை மீறல்களை களைவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கெதிரான வன்முறையையும் ஒரு மனித உரிமை மீறலாகவே பார்க்கிறது.  மிகவும் முக்கியமான மனித உரிமை மீறலாக இதனை ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.

வீட்டிலும், வெளியிலும் பல விதங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறையை தடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான நிதி என்னும் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை நிகோலோ கிட்மேன் இதன் நல்லெண்ண தூதராக விளங்கி வருகிறார்.

கிட்மேனும் இந்த அமைப்பும் சேர்ந்து பெண்களுக்கெதிரான வன்முறைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இதற்காகத்தான் சே நோடு வயலன்ஸ் டாட் ஓஆர்ஜி (saynotovoilence.org) என்னும் இணைய தளம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த தளத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவோம் என அறைகூவல் விடுக்கும் டிஜிட்டல் புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதில் உலகம் முழுவதும் உள்ள வன்முறைக்கெதிரானவர்களிடமிருந்து கையெழுத்தை சேகரித்து வருகின்றனர். இந்த புத்தகத்தில்தான் உங்களையும் கையொப்பமிட அழைக்கின்றனர். ஆயிரக்கணக்கான, இயலுமானால் லட்சக்கணக்கான கையெழுத்துக் களை திரட்டி வன்முறைக்கு எதிரான செய்தியை வலுவாகவே உலகத்துக்கு உணர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான பிரச்சாரத்தை நிகோலோ கிட்மேன் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை கவலை தரும் மனித உரிமை மீறல் என்று கூறியுள்ள அவர், நாம் நினைத்தால் இதனை தடுக்க முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

இதனை உணர்த்துவதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கத்தை முன் நின்று நடத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார். இந்த கையெழுத்துக்களின் மூலம் உலக நாடுகளின் அரசுகளை பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் போதிய கவனம் செலுத்த வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

இந்த அமைப்பின் செயல் இயக்குனரான சான்டிலர், பெண்களுக் கெதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு பரவலாகியிருப்ப தாகவும், இந்தியா உள்ளிட்ட 89 நாடுகளில் இதனை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருப்ப தாகவும் தெரிவிக்கிறார். ஆனால் இந்த சட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் சுணக்கம் காட்டப்படுவதாகவும், அதனை மாற்ற வேண்டுமானால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த பணியைத்தான் இணையதள மூலம் இந்த அமைப்பு செய்து வருகிறது. மார்ச் மாதம் 8ந் தேதி வரை இந்த விளம்பர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்துக் கள் சேகரிக்கப் படவுள்ளன. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ந் தேதி இந்த பிரச்சாரம் முற்றுப்பெற உள்ளது.

பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த தளத்திற்கு விஜயம் செய்து பார்க்கலாம். அப்படியே மறக்காமல் தங்களது கையெழுத்தையும் இடம்பெறச் செய்யலாம். மேலும் தங்களது நண்பர்களுக்கு இந்த தளத்தை பரிந்துரைக்கலாம்.

இந்த முயற்சியின் மூலமாக பெண்களுக்கெதிரான வன்முறை விழிப்புணர்வில் அடுத்த கட்டத்திற்கு சென்றடையலாம் என்று ஐநா சபை நம்புகிறது. பெண்களுக்கெதிரான வன்முறை என்று குறிப்பிடும்போது, வீட்டில் நடைபெறும் தாக்குதல்கள், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான வன்முறைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

.

தீவிரவாத வலை

ஊர் அறிந்த ரகசியம் தான் அது. இல்லை உலகறிந்த ரகசியம் தான். ஆனால் அதில் இப்போது, எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.  பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இது பற்றி எச்சரிக்கை செய்யும் வகையில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இன்டெர்நெட் மூலம் தீவிரவாத இயக்கங்கள் வலை வீசி தங்களுக்கான  ஆதரவாளர்களை அதாவது, பலிகடாக்களை தேர்வு செய்யும் முயற்சி தான் இப்படி அந்த இதழால் குறிப்பிடப்படுகிறது.
.
பயங்கரவாத நடவடிக்கைகளில் முன்னிலையில் இருக்கும் அல்கொய்தா இன்டெர்நெட்டை பயன்படுத்திக் கொள்வதிலும் முன்வரிசையில் இருப்பது தெரிந்த விஷயம் தான்.
மைய தலைமை என்று இல்லாமல் ஆங்காங்கே மறைமுக கட்டளைகள் மூலம் செயல்படுவதாக கூறப்படும் அல்கொய்தா அமைப்பினர் தங்களுக்குள் தொடர்பு கொள்ள இன்டெர்நெட்டின் பரந்து விரிந்த வலை பின்னல் அமைப்பு ஏற்றதாக அமைந்திருக்கிறது. 

இதனால் இணைய தளங்கள் மூலம் அல்கொய்தா இயக்கத்தின் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டு நாசவேலைக்கான உத்தரவு கள் பிறப்பிக்கப்படுகின்றன. அதோடு இந்த இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு முயற்சியும் இன்டெர்நெட் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சி தான் என்ற போதிலும் இப்போது இதில் புதிதாக அரங்கேறி இருப்பது என்னவென்றால், அல்கொய்தா ஆதரவு இணைய தளங்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு இணையவாசிகளை கவரும் வகையில், பளீச்சென தோன்றும் வீடியோ மற்றும் கவர்ச்சிகரமான வாசகங்களோடு கண்ணை கவரும் வகையில் அமைந்திருக்கின்றன என்பது தான்.

வர்த்தக நிறுவனங்கள் புதிய மார்க்கெட்டிங் முயற்சியை மேற்கொள்ள, அற்புதமான இணைய தளங்களை அமைத்தால் எப்படி இருக்குமோஈராக் உள்ளிட்ட அல் கொய்தாவின்  வாலாட்டும் பூமியாக விளங்கும் நாடுகளில் எடுக்கப்பட்ட கார் குண்டு வெடிப்புகள் மற்றும் இதர தாக்குதல் பற்றிய வீடியோ காட்சிகள் இந்த தளங்களில் பிரதானமாக இடம் பெற்றிருக்கின்றன.

இவை சாதாரண வீடியோ காட்சியாக இல்லாமல், கண்ணை  கவரக்கூடிய பாப் பாடல் ஆல்பத்தை போல நேர்த்தியாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் விரிவான பேட்டி மற்றும் வாக்குமூலங்கள் ஆகியவையும் சுவாரஸ்யமான முறையில் அளிக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாம் புதிய தீவிரவாதிகளை  ஈர்க்கும் முயற்சியாக கருதப்படுகிறது. அரேபிய மொழி மட்டுமல்லாமல் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் 39 பக்க பிரத்யேக தீவிரவாத கையேடும் பெரும்பாலான தளங்களில் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட ஒரு தளம் தீவிரவாதத்தை பரப்புவதற்காக என்றே ஒரு நாவலை எழுதி இ புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலில் தீவிரவாதியாக மாறிய ஒருவர் தனது கதையை விவரிக்கிறார். இந்த தளங்களில் இடம் பெறும் வீடியோ கோப்புகள் யூடியூப் போன்ற வீடியோ பதிவு தளங்களில் தவறாமல் இடம் பெற்றுகின்றன. இவற்றின் தரம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்டெர்நெட் மாறி  வருவதற்கு ஏற்ப, அதனை பயன்படுத்தும் தீவிரவாத இயக்கமும் மாறி இருக்கிறது. அவற்றின் வழியும் மாறி இருக்கிறது. அதன் அடையாளம் இந்த நவீன இணைய தளங்கள் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த இணைய தளங்களுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கின்றன என்பதை சரியாக கணிக்க முடியவில்லை என்று அந்நாளிதழ் கூறுகிறது. ஆனால் தீவரவாதத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகள் இதற்கு பதிலடி தரும் வகையில் தங்கள் வலை முயற்சியை விரிவாக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.,  அப்படி அல்கொய்தா இணைய தளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.