Tag Archives: camera

போட்டோஷாப் கவிதை

Apple_Orchardபோட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது படங்களை எடுத்துக்கொண்டு, அதில் தன்னுடைய இப்போதையை தோற்றத்தை போட்டோஷாப் மூலம் அழகாக ஒருங்கிணைத்து விட்டார். அதிலும் சிறு வயது போலவே உடைகளை அணிந்து கொண்டு ஒரே படத்தில் சின்ன பையனாகவும், பெரிய இளைஞனாகவும் அவர் காட்சி அளிக்கிறார். ஒளிப்பட ஆல்பங்களை வைத்துக்கொண்டு அந்த நாள் படங்களை புரட்டியை படி நிகழ்கால தோற்றத்தை ஒப்பிடுவது என்பதே சுவாரஸ்யமானது தான். அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வகையில், கடந்த கால படத்திற்குள் இப்போதைய தோற்றத்தை இடம்பெற வைத்திருக்கிறார் நிக்கர்சன்.

இணைய முகவரி: https://www.conornickerson.com/en/projects/childhood

 

 

தேடியந்திரம் புதிது; பாட்காஸ்டிங் கேட்கவா!

வெப்காஸ்ட், பிராட்காஸ்ட் என்றெல்லாம் இருப்பது போல இணையத்தில் பாட்காஸ்டிங்கும் பிரபலமாக இருக்கிறது. ஒலி வடிவ நிகழ்ச்சிகளை சந்தா முறையில் பெற்று கையடக்க சாதனங்களில் கேட்டு ரசிப்பதற்கான முறையை தான் பாட்காஸ்டிங் என்கின்றனர். இந்த வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. ஒலிப்புத்தகங்களில் துவங்கி பலவகையான ஆடியோ நிகழ்ச்சிகளை இந்த வடிவில் கேட்டு ரசிக்கலாம். இந்த வகையான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தேடித்தருவதற்காக என்றே லிஸின்நோட்ஸ் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேடியந்திரம் மூலம் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை எளிதாக தேடி கண்டறியலாம்.

தேடியந்திர முகவரி: https://www.listennotes.com/?s=logo

 

வீடியோ புதிது; கிளிக்பைட் வலைப்பற்றிய பாடல்

ஆசை காட்டி மோசம் செய்வது போல, இணையத்தில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆசை காட்டி ஆர்வத்தை ஏற்படுத்தி வில்லங்கமான இணைப்புகளை கிளிக் செய்ய வைக்கும் உத்தி கிளிக்பைட் எனப்படுகிறது. தேவையில்லாத விளம்பரங்களை கிளிக் செய்ய வைப்பது முதல் வைரஸ் இணைப்புகளை கிளிக் செய்ய வைப்பது வரை பலவிதமாக வலை விரிக்கப்பட்டு இணையவாசிகள் வீழ்த்தப்படுகின்றன. இந்த கிளிக்பைட் உத்தியின் விபரீத்தத்தை நகைச்சுவையாக உணர்த்தும் வகையில் அயர்லாந்து காமெடி குழு ஒன்று சூப்பரான பாடல் ஒன்றை படமாக்கி அதை யூடியூப் வீடிவோவாக வெளியிட்டுள்ளது.

கேட்டு ரசிக்கும் வகையில் உள்ள அந்த பாடல், இணையத்தில் உள்ள ஆபத்துகளையும் அழகாக சுட்டிக்காட்டுகிறது.

வீடியோவை காண; https://youtu.be/bVn7sLDhZBw

 

 

தானாக படமெடுக்கும் கூகுளின் புதிய காமிரா!

கூகுள் கண்ணாடியைjbareham_170922_2006_0343 நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அதி நவீன மூக்கு கண்ணாடி அதிக ஆரவாரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் கூகுள் இதை விலக்கி கொண்டுவிட்டது. நிறுவன பயன்பாட்டிற்கான மாதிரியாக மட்டும் இது தொடர்கிறது. இணைய பக்கங்களை வாசிக்க கூடிய திரையாக திகழும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த கூகுள் கண்ணாடி எதிரே உள்ளவரை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. இந்த தன்மைக்காகவே அது சர்ச்சைக்கும் இலக்கானது.

இப்போது கூகுள் வெள்ளோட்டம் விட்டிருக்கும் கூகுள் கிளிப்ஸ் காமிராவை பார்த்தால், கூகுள் கிளாஸ் நினைவுக்கு வராமல் இல்லை. ஸ்மார்ட் காமிரா என சொல்லப்படும் கூகுள் கிளிப்ஸ் உள்ளங்கைக்குள் அடங்கிவுடக்கூடிய சதுர வடிவ காமிராவாக இருக்கிறது. அண்மையில், பிக்சல்-2 நிகழ்ச்சியில் கூகுள் அறிமுகம் செய்த புதிய பிக்சல் போன், உள்ளிட்ட சாதனங்களுக்கு மத்தியில், விரைவில் வருகிறது எனும் அறிவிப்புடன் கிளிப்ஸ் காமிராவும் அறிமுகம் செய்யப்பட்டது.

சட்டை பாக்கெட் அல்லது பர்சில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு கச்சிதமான இந்த இரண்டுஅங்குல காமிராவின் பர்ஸ்ட்லுக் அனுபவத்தை தொழில்நுட்ப இணைய இதழான தி வெர்ஜ், விரிவாக விவரித்துள்ளது. முதல் பார்வைக்கு கூகுள் கிளிப்ஸ் வியக்க வைக்கிறது.

இந்த காமிராவில் சின்னஞ்சிறிய லென்ஸ் மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி இதில் வியூபைண்டர் எல்லாம் கிடையாது. ஏனெனில் இந்த காமிரா தானாக படம் எடுத்துக்கொள்ளும். எனவே இதை கையில் வைத்து க்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டின் எங்காவது ஒரு முளையில் தொங்கவிட்டால் போதும் அது தானாக படம் எடுத்து பதிவு செய்து கொள்ளும். இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டும் இணைந்த கலையில் இது செயல்படுவதால், காட்சிகளை தானாக உணர்த்து கிளிக் செய்து விடுகிறது. அது மட்டும் அல்ல, தான் பார்க்கும் முகங்களை நினைவில் நிறுத்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருக்கிறது. ஆக, நாளடைவில் இது முகங்களை நன்றாக பரீட்சயம் செய்து கொண்டு, அறிமுகம் இல்லாதவர்களை படம் எடுப்பதை தவிர்க்கவும் கற்றுக்கொண்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றபடி வீட்டில் இருக்கும் போது, சுவாரஸ்யமான தருணங்கள் என கருதப்படும் காட்சிகளை அது படமெடுத்தபடி இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஏழு நொடி ஓடக்கூடியதாக இருக்கும். இவற்றில் இருந்து தேவையான காட்சியை தேர்வு செய்து புகைப்படமாக மாற்றிக்கொள்ள்லாம். அப்படியே தொடர் படமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஒலி வசதி கிடையாது. எனவே வீடியோ என்று சொல்ல முடியாது.

காமிராவுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக செயலி மூலம் ஸ்மார்ட்போனில் படங்களை பார்க்க முடியும். அதிலேயே சேமித்துக்கொள்ளலாம். தேவை எனில் கையாலும் இதில் படமெடுக்கலாம். இதற்கான ஷட்டர் வசதி இருந்தாலும், இந்த காமிராவை அதன் போக்கில் விட்டு விடுவது தான் சிறந்தது என கூகுள் நினைக்கிறது. உதாரணத்திற்கு மழலைகள் உள்ள வீட்டில் பாசமிகு பெற்றோர்கள் கிளிப்ஸ் காமிராவை ஒரு மேஜையில் பொருத்தி விட்டால், மழழலையின் குறும்புகளும், மந்தகாசமான புன்னகைகளும் அழகாக பதிவாகி இருக்கும். பெற்றோர் அருகே இல்லாவிட்டால் கூட, காமிரா கச்சிதமாக குழந்தையின் பொன்னான தருணங்களை பதிவு செய்து கொள்ளும். சும்மா இல்லை, 130 கோணத்தில் விசாலமாக பார்த்து காட்சிகளை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.

இந்த காமிரா, ஆக்‌ஷன் காமிராவாக வர்ணிக்கப்படும் கோ புரோ காமிரா மற்றும் ஸ்னேப்சேட் நிறுவனத்தின் ஸ்பெக்டகல் கண்ணாடிக்கு போட்டியாக சொல்லப்பட்டாலும் உண்மையில் கூகுள் இதை பெற்றோர்களை இலக்காக கொண்டு களமிறக்க உள்ளது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் செல்லப்பிராணிகள் மீது பாசம் கொண்டவர்களும் இந்த காமிராவை பயன்படுத்தலாம்.

சுற்றுப்புறத்தை புரிந்து கொண்டு, அதில் தென்படும் முகங்களை உணர்ந்து கொண்டு தானாக படமெடுக்கும் காமிரா, தானாக படமெடுக்கப்படும் போது சிக்க கூடிய அற்புதமான தருணங்களை நினைத்துப்பார்த்து வியக்க வைத்தாலும், இன்னொரு பக்கம் இது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக அமைந்துவிடாதா எனும் கேள்வியும், அச்சமும் எழாமல் இல்லை.

கூகுள் இதை உணராமல் இல்லை. அதானால் தான் காமிரா என்று எல்லோரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியாகும் சிவப்பு ஒளியும் காமிரா படமெடுத்துக்கொண்டிருப்பதை உணர்த்தும் என்பதால் எதிரே இருப்பவர்கள் அறியாமல் படமெடுக்கப்படும் அபாயம் இல்லை, தவிர இதன் பயன்பாடு பெரும்பாலும் வீட்டு சூழலில் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் மாறுபட்டதாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும், இதில் பதிவாகும் காட்சிகள் வேறு எங்கும் தானாக சேமிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே கிளவுட் வசதியில் ஒருங்கிணைக்கப்படும். எனவே புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் குறைவு என கருதலாம். இந்த காமிரா அதன் உரிமையாளருக்கே விசுவாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் தெரிந்த முகங்களுக்கு பழகி அவர்களை படமெடுக்கவே முற்படும் என்பதால் பூங்காவில் சென்று அமர்ந்திருக்கும் போது கூட, மற்ற குழந்தைகளை விட்டு, உரிமையாளர் குழந்தையின் விளையாட்டையே இது பதிவு செய்ய முற்படும். எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் மாயம்.

தினசரி வாழ்க்கை காட்சிகளை இடைவிடாமல் பதிவு செய்யும் வசதி தொழில்நுட்ப உலகில் லைப்லாகிங் என சொல்லப்படுகிறது. புதுமையான கருத்தாக்கம் என்பதை கடந்து இது நடைமுறை வாழ்க்கையில் இன்னும் பயன்பாட்டிற்கு வந்துவிடவில்லை. ஒருவிதத்தில் கூகுள் காமிராவும் இந்த பிரிவின் கீழ் தான் வருகிறது. இந்த காமிரா எந்த வகையான வரவேற்பை பெறுகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இதை தனித்து பார்ப்பதற்கு இல்லை. ஸ்மார்ட்போன் தவிர வீடுகளில் தானியங்கி சாதனங்கள் நுழையத்துவங்கிவிட்டன. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்த வகை சாதனங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. கூகுளும் தன்பங்கிற்கு கூகுள் ஹோம் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது. வீடுகளை இல்லங்களை ஸ்மார்ட் இல்லமாக்கும் போட்டியில் கூகுளும் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டுள்ளது. இதனால் சராசரி வாழ்க்கை மேம்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான் அல்லவா!

 

 

வீடியோ புதிது: அழுகையின் பின்னே உள்ள அறிவியல்

ஆனந்தத்திலும் கண்ணீர் பெருகலாம், சோகத்திலும் கண்ணில் நீர் வரலாம். இன்னும் பல காரணங்களினால் கண்ணீர் பெருகலாம். எல்லாம் சரி, கண்ணீர் ஏன் வருகிறது என்பது தெரியுமா? இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாப் சயின்ஸ் யூடியூப் சானலின் நாம் ஏன் கண்ணீர் விடுகிறோம் எனும் வீடியோவை பார்க்கலாம். அழுகையின் பின்னே உள்ள விஞ்ஞானத்தை மிக எளிதாக இந்த வீடியோ விளக்குகிறது. சராசரி கண்ணீர், அன்னிச்சை உணர்வாக வரும் கண்ணீர், உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர் என அழுகையில் அடிப்படையில் மூன்று வகை இருப்பதை தெரிந்து கொள்வதோடு, ஆனந்தக்கண்ணீர் மற்றும் உணரச்சி பெருக்கிலான கண்ணீர் உள்ளிட்டவை, பரிணாம நோக்கில் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான சமிக்ஞ்சை என்பது உள்ளிட்ட விளக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=QGdHJSIr1Z0

 

 

செய்தி புதிது; 360 கோணத்தில் காணும் வசதி

விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் 360 கோணத்திலான வீடியோக்கள் தான் அடுத்த பெரிய சங்கதி என பேசப்படுகிறது. இந்த வசதியை அளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களும் வரிசையாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வகை உள்ளடக்கத்தை காண்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. இந்த வீடியோக்களை டவுண்லோடு செய்த பிறகு அவற்றை காண தனியே பிளேயரை பயன்படுத்த வேண்டும். இந்த குறையை போக்கும் வகையில், முன்னணி பிரவுசர்களில் ஒன்றான ஓபரா விர்ச்சுவுவல் ரியாலிட்டி காட்சிகளுக்கான பிளேயர் வசதியையும் தனது பிரவுசரில் இணைத்துள்ளது. இதன் மூலம், பயனாளிகள் வி.ஆர் சாதங்களை மாட்டிக்கொண்டு எந்த சிக்கலும் இல்லாமல் மெய்நிகர் உலகில் பயணிக்கலாம். இதற்கென தனியே பிளேயரை டவுண்லோடு செய்யவேண்டிய அவசியமில்லை.

தகவல் புதிது: நோபல் பரிசு தகவல்களை அறிய …

நோபல் பரிசு தொடர்பான அறிவிப்புகளையும், செய்திகளையும் ஒரே இடத்தில் அறிய விருப்பம் எனில், நோபல் விருது குழுவின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தை பின் தொடரலாம். (@NobelPrize) நோபல் குழுவின் அறிவிப்புகள் அனைத்தும் இந்த பக்கத்தில் குறும்பதிவுகளாக சுடச்சுட பகிரப்படுகின்றன. அறிவிப்புகள் தவிர நோபல் பரிசு தொடர்பான முக்கிய செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் ரிடிவீட் வடிவில் அறியலாம். டிவிட்டரில் இருப்பவர்கள் தாங்கள் பின் தொடரும் டிவிட்டர் முகவரிகளில் இந்த முகவரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

 

 

தளம் புதிது: நேரம் என்ன நேரம்!

 

நவீன உலகில் இரவு பகல் பார்க்காமல் தான் உழைக்க வேண்டியிருக்கிறது. அதோடு, நம்முடைய பணி தொடர்புகள் உலக அளவில் விரிந்திருப்பதால், நாம் பகலில் பணியாற்றும் போது, மறுமுனைவில் இருப்பவர்களுக்கு அது இரவா, பகலா என அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இதற்கு உதவும் வகையில், உலக நேரங்களை உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப மாற்றிக்காட்டுகிறது ’மைடைம்சோன்’ இணையதளம். குரோம் பிரவுசருக்காக இது வழங்கும் நீட்டிப்பு சேவை மூலம், இந்த வசதியை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இமெயில் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒருவருடன் சந்திப்புக்கான திட்டமிடலில் ஈடுபடும் போது, இங்குள்ள நேரத்தை குறிப்பிட்டு சம்மதமா என கேட்கும் போது, வலப்பக்கமாக கிளிக் செய்தால், மெயிலை பெறுபவர் ஊரில் என்ன நேரம் என மாற்றிக்காட்டுகிறது.

 

இணைய முகவரி: https://mytimezone.io/

 

 

 

 

 

 

சிறு புத்தகங்களை பரிந்துரைக்கும் இணையதளம்

shortbookslogo1உங்கள் ரசனைக்கேற்ற புத்தகங்களை பரிந்துரைக்கும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில், புதுமையான வரவாக அறிமுகமாக இருக்கும் ஷார்ட்புக்ஸ் தளம் வழக்கமான பரிந்துரைகளில் இருந்து மாறுபட்டு, சிறு புத்தகங்களை பரிந்துரைக்கிறது. அதாவது குறைந்த பக்கங்களை கொண்ட புத்தகங்களை பரிந்துரைக்கிறது.

புத்தக புழுக்களுக்கு பக்கங்களின் எண்ணிக்கை ஒரு தடையல்ல தான். அது மட்டும் அல்லாமல் மகத்தான நாவல்கள் உள்ளிட்ட பல சிறந்த நூல்கள் அதிக பக்கங்களை கொண்டவை.

ஆனால் வாசிக்க வேண்டும் என விருப்பம் கொண்ட பலர், இந்த புத்தகங்களின் அளவை பார்த்தே மிரண்டு விடலாம். தலையணை அளவு புத்தகத்தை எப்படி படைப்பது என அவர்கள் மலைத்து நிற்கலாம். இத்தகைய வாசகர்களில் பலர், குறைந்த பக்கங்களை கொண்ட புத்தகங்கள் இருந்தால் படிக்கலாம் என நினைத்து ஏங்கவும் செய்யலாம் அல்லவா?

இந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் தான் ஷார்ட்புக்ஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 500 பக்கங்களுக்கு மேல் கொண்ட புத்தகங்களை எல்லாம் எப்படி வாசிப்பது எனும் தயக்கம் கொண்டவர்களுக்கு, இதே தலைப்புகளில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களை பரிந்துரைப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது. ஒரு புத்தகத்தை வாசிக்க தேவைப்படும் நேரத்தின் அடிப்படையில் இதை கணக்கிட்டு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த தலைப்பிலுமே நீளமான வாசிப்பு தேவைப்படும் புத்தகங்களுடன் ஒப்பிட்டு, குறைவான நேரத்தில் படிக்க கூடிய புத்தகங்களை இந்த தளம் தேடித்தருகிறது. விரும்பிய தலைப்புகளை தெரிவித்து தேடலாம் அல்லது இதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை பார்க்கலாம். கொஞ்சம் மாறுபட்ட சேவை தான். அவசர யுகத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறு புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் மட்டும் அல்லாமல், மற்ற வாசகர்களும் கூட புத்தக பரிந்துரைக்காக பயன்படுத்திப்பார்க்கலாம். ஆனால் ஆங்கில புத்தகங்களை அடிப்படையாக கொண்டது. புத்தகங்களை அமேசான் தளத்தில் வாங்கும் இணைப்பும் இருக்கிறது. இதில் கலந்திருக்கும் விளம்பர நோக்கம் பற்றியும் தளத்தின் அறிமுகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://www.shortbooks.co/index.php

 

செயலி புதிது; தூங்குவதற்கு உதவும் செயலி

screen696x696காலையில் குறித்த நேரத்தில் கண் விழிக்க வழி காட்டும் அலாரம் வகை செயலிகள் விதவிதமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் போது தூக்கம் வர வைக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன எனத்தெரியுமா? இவற்றில் மிகவும் எளிமையானதாக குவிக்கியோவின் ஸ்லீப் செயலி அமைந்துள்ளது.

ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொண்டால் இரவில் தூங்கச்செல்லும் முன் அல்லது தூக்கம் வராமல் தவிக்கும் போது இதை இயக்கி மன அமைதி அளிக்க கூடிய ஒலிகளை கேட்கலாம். இந்த ஒலிகள் தரக்கூடிய அமைதியான உணர்வு கண்களில் தூக்கத்தை தழுழச்செய்யும் என்பது எதிர்பார்ப்பு.

மழையின் சளசளப்பு, பறவைகளின் சங்கீதம், நதியின் ஓசை, விமானம் செல்லும் ஒலி என பலவித ஒலி அமைப்புகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். எவ்வளவு நேரம் இந்த ஒலிகள் கேட்க வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொள்ளலாம். தியானம் மற்றும் யோகா ஒலிகளும் இந்த பட்டியலில் உள்ளன.

தூக்கமின்மை ஒரு பிரச்சனையாக இருப்பவர்களுக்கு உதவுமா என்று தெரியவில்லை, ஆனால் கொஞ்சம் இரவில் தூங்குவதற்கு முன் அமைதியான சூழல் தேவை என நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். புத்தகம் வாசிப்பது அல்லது பாடல்கள் கேட்பது போல

மேலும் தகவல்களுக்கு: https://sleep.by.qukio.com/
யூடியூப்பில் பின்னூட்டங்களை காண புதிய வசதி

வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பில் வீடியோக்களுடன் அவற்றுக்கான பின்னூட்டங்களும் ( கமெண்ட்ஸ்) இடம்பெற்றிருக்கும். பொதுவாக இணைய பின்னூட்டங்களில் உள்ள பிரச்சனை இங்கும் உண்டு தான். அதாவது வெட்டி வீண் வம்பு கருத்துக்களோடு அவதூறான கருத்துக்களும் சேர்த்தே பதிவாகியிருக்கும். ஆனால் இந்த பதர்களை மீறி, பல வீடியோக்களின் சுவாரஸ்யம் தரக்கூடிய கருத்துக்களும் இடம்பெறுவதுண்டு. பயனுள்ள கருத்துக்களும் பதிவாகி இருப்பதை பார்க்கலாம். இவை சில நேரங்களில் வீடியோ உள்ளடக்கம் தொடர்பான கூடுதல் விவரம் அல்லது புரிதலை தரலாம்.

எனவே பின்னூட்டங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது. அவற்றில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கலாம் தான். ஆனால் இதில் சின்னதாக ஒரு சிக்கல் உண்டு. கருத்துக்களை வாசிக்க வேண்டும் என்றால், வீடியோ காட்சியில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும். பொதுவாக வீடியோவை பார்த்து முடித்துவிட்டு இப்படி கீழே உள்ள பின்னூட்டங்களை படித்துப்பார்க்கலாம்.

மாறாக வீடியோ பார்க்கும் போதே கருத்துக்களையும் படிக்க வேண்டும் என விரும்பினால், கமெண்ட்மோட் எனும் குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவை அந்த வசதியை அளிக்கிறது. இந்த நீட்டிப்பு சேவையை தரவிறக்கம் செய்து கொண்டால், எப்போது யூடியூப் வீடியோ அருகே பின்னூட்டங்கள் தோன்ற வேண்டும் என விரும்புகிறோமோ அப்போது இதை கிளிக் செய்தால் போதும், வீடியோ-பின்னூட்டங்கள் இரண்டையும் ஒரே பிரேமில் பார்க்கலாம்.

குறிப்பாகம் போட்டோஷாப் போன்ற தொழில்நுட்ப விளக்கம் சார்ந்த வீடியோக்களை பார்க்கும் போது இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். வீடியோவை பார்த்தபடி, அது தொடர்பான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய: http://daviddiamond.co/comment-mode

 

 

செல்பி முரண் அறிவீர்!

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலருக்கு தங்களை தாங்களே படம் எடுத்து பகிர்ந்து கொள்ளும் செல்பி மோகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் செல்பி எடுத்துக்கொள்ளும் ஆர்வம் இருக்கும் அளவுக்கு அவற்றை பார்த்து ரசிக்கும் விருப்பம் பலருக்கும் இல்லை என்பது தெரியுமா? அன்மையில் வெளியான செல்பி தொடர்பான ஆய்வு இத்தகைய முரணான நிலை இருப்பதை உணர்த்துகிறது.

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள ஆய்வாளர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாட்களில் உள்ள 238 சுயபட பிரியர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 77 சதவீதம் பேர் மாதம் ஒரு முறை செல்பி எடுப்பதாகவும், 44 சதவீதம் பேர் வாரம் ஒரு முறை செல்பி எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் முக்கியமான விஷயம் அதுவல்ல: அவர்களில் பெரும்பாலானோர் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் சுயபடங்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஏனினில் சுயபடம் வெளியிடுவதை நம்பகமில்லாத்தன்மை மற்றும் சுய அழகை ரசிப்பதன் வெளிப்பாடாக கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

உண்மையில் 90 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். ஆனால் 46 சதவீதம் பேர் தங்கள் செல்பி பழக்கத்தை இப்படி கருதுவதில்லை என தெரிவித்துள்ளனர். ஆக, எல்லோரும் செல்போன்களை ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டிருந்தாலும், பெரும்பாலனோர் மற்றவர்கள் செல்பிக்களை பார்க்கும் போது அதை சுய விளம்பரமாகவே கருதுகின்றனர். இதை செல்பி முரண் என ஆய்வாளர்கள் தெரிவித்து இதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர்.

சுய படம் ஒருவரின் உண்மையான தோற்றத்திற்கு மாறான தோற்றத்தை அளிக்கலாம் என்பதால் இது ஒருவரின் சுய மதிப்பையும் பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, அடுத்த முறை சுயபடம் எடுக்கும் முன் கொஞ்சம் யோசிக்கவும்.!

 

 

சைபர்சிம்மன்

இணையத்தில் தூங்கலாம் வாங்க!

sl1இணையத்தில் உலாவலாம், தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம், அரட்டை அடிக்கலாம், நேரத்தை கொல்லலாம். இப்படி இன்னும் பலவற்றை செய்யலாம். எல்லாம் சரி, இணையத்தில் தூங்க முடியுமா?

இது வரை தூங்குகின்ற நேரத்தில் தான் நாம் இணையத்தின் பக்கம் போகாமல் இருக்கிறோம். இப்போது அதையும் மாற்றும் வகையில் இணையத்தில் தூங்கலாம் வாங்க என்று அழைப்பு விடுப்பதற்காகவே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக என்றே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதளத்தின் பெயர் வேறென்ன இணைய படுக்கையறை தான் – Internet Bedroom!
கொஞ்சம் விநோதமான நிகழ்வு தான். ஆனால் இணைய கலாச்சாரம் பற்றி அறிந்தவர்களுக்கு அப்படி ஒன்றும் வியப்பை அளிக்காதது.

இணையத்தில் பலவிதமான சமூகங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சமுகமும் குறிப்பிட்ட நோக்கம் அல்லது நம்பிக்கை சார்ந்த்தாக இருக்கும். பரவலாக அறியப்பட்ட ரெட்டிட் சமூகம், விக்கி சமூகத்தில் துவங்கி வெகுசிலர் மட்டுமே அறிந்த சமூகங்கள் வரை எண்ணற்ற சமூகங்கள் இருக்கின்றன. இவற்றில் விநோதமானவை, வில்லங்கமானவையும் கூட உண்டு.

இந்த வகையில் தான் இணையத்தில் தூங்கும் கருத்தை முன் வைத்திருக்கும் சமூகம் உருவாகி இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பிரிண்ட் ஸ்கிரீன் கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்த இணைய படுக்கயறை அமைக்கப்பட்டிருந்தது. ஆர்வம் உள்ளவர் வாருங்கள், வீடியோ அரட்டை அடியுங்கள், அப்படியே தூங்கி விடுங்கள், அவ்வளவு தான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இணையத்தில் எதற்கு தூங்க வேண்டும்?

இந்த திட்ட்த்தின் இணை நிறுவனரான கென்சுகி செம்போ (Kensuke Sembo ) இணையம் ஒரு போதும் தூங்குவதில்லை என்று அறிந்த போது தான் இந்த யோசனை பிறந்த்தாக இது தொடர்பாக மதர்போர்டு இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ” ஜப்பானிய மக்கள் தூங்கத்துவங்கும் போது, நியூயார்க்கி உள்ளவர்கள் விழித்துக்கொள்கின்றனர்” என்று கூறுபவர், ’ இணையத்திற்கு தூக்கம் தேவை, அப்போது தான் இயல்பான இடமாக இருக்கும் என நினைத்தோம்” என்கிறார்.

இதற்காக தான் இணைய படுக்கையறையை ஏற்படுத்தியிருக்கிறார். கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றுக்கு நடுவே தூங்குவது அவமரியாதையாக கருதப்படும். ஆனால் இங்கு அப்படி இல்லை, இது தூங்குவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதால்,இதில் உறுப்பினர்கள் தூங்க மட்டுமே செய்யலாம். இணையத்தில் தூங்குவதாலேயே இது விஷேசமானது என்றும் அவர் சொல்கிறார்.

எல்லாம் சரி, இணையத்தில் எப்படி தூங்குவது என்று கேட்கலாம். எப்படி என்றால் வெப்கேம் வழியாக தான். அதாவது வீட்டில் தூங்கும் காட்சியை இணையத்தில் இணைத்து ஒளிபரப்பு செய்யலாம். நிகழ்ச்சி நடைபெற்ற கண்காட்சி அரங்கில் தூங்குவதற்கு என்றே அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேரடியாக வர முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே கூகுள் ஹாங்கவுட் மூலம் தூக்கத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.- http://idpw.org/bedroom/000002/

இந்த அமைப்பின் முதல் இணையத்தில் தூக்கம் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் இஸ்ரேலில் நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது என இணைடெர்நெட் பெட்ரூம் இணையதளம் தெரிவிக்கிறது. இரவு உடை அணிந்து வாருங்கள்,ரிலாக்சாக இருங்கள், உங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் நுழைந்து கூகுள் ஹாங்கவுட மூலம் இணைய படுக்கையறையில் தூங்குங்கள் என, இணைய தூக்கத்திற்கான வழிமுறையாக கொடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தை கொஞ்சம் அமைதியான இடமாக்குவதற்கான செயல் என குறிப்பிடப்படும் இந்த புதுமையான முயற்சி இணைய போக்காக உருவாகுமா? என்றுத்தெரியவில்லை. படுக்கையறை வரை இணையத்தை கொண்டு வருவது என்னவிதமான வில்லங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரியவில்லை.
ஆனால் ஒன்று, இணையத்தில் தூங்குவது என்பது இணையத்தில் பல ஆண்டுகளாகவே இருக்கும் கருத்தாக்கமாக தோன்றுகிறது.

இணைய தூக்கம் என்று தேடிப்பார்த்தால் , இந்த கருத்தாக்கம் தொடர்பான இணையதளங்கள், தகவல்களை பார்க்க முடிகிறது. இவ்வளவு ஏன், இணையத்தில் தூங்குவது எப்படி? என விளக்கும் வீடியோவும் இருக்கிறது. இணைய தூக்கம் தொடர்பான வலைப்பதிவும் இருக்கிறது. 2007 ம் ஆண்டில் மகத்தான இணைய தூக்கம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றிருப்பதும் தெரிய வருகிறது. ஒரு இணைய கலை இயக்கமாக இந்த முயற்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தில் தூங்குவதெல்லாம் தேவையா? இதனால் என்ன பயன் போன்ற கேள்விகளை பலர் கேட்கலாம். ஆனால், இணையம் சற்று விநோதமான இடமாகவும் இருக்கிறது என்பதே விஷயம்.

வெப்கேம் வழியே காட்சிகளை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்து கொள்வது என்பது இணைய கற்காலம் தொட்டே இருக்கிறது. இப்போது ஸ்டிரீமிங் ( இணைய ஒளிபரப்பு) யுகத்தில் இவை புதிய வடிவம் எடுத்துள்ளன. ஒரு பக்கம் பெரிஸ்கோப் போன்ற லைவ் ஸ்டிரீமிங் செயலிகள் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. பேஸ்புக் லைவ் வசதியும் இந்த ரகம் தான்.

இன்னொரு பக்கம் அமேசானுக்கு சொந்தமான டிவிட்ச்.டிவி இணையதளம், வீடியோ கேம் விளையாடுவதை நேரடியாக ஸ்டிரீமிங் செய்வதில் சக்கை போடு போட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் அறியலாம். டிவிட்ச்.டிவி சமீபத்தில் சாப்பிடுவதை பகிர்ந்து கொள்வதற்காக என்றே ஒரு தனி சேனலை ஆரம்பித்துள்ளது.
சோசியல் ஈட்டிங் சானல் (https://www.twitch.tv/directory/game/Social%20Eating ) எனும் இந்த பக்கம் சாப்பிடுவதை சமூக நிகழவாக மாற்ற முற்படுகிறது. சாப்பிடுவதை காமிராவில் படம் பிடித்துக்காட்டி பகிர்ந்து கொள்ள வைப்பது தான் இந்த சேனலின் நோக்கம்.

காலை உணவு, மதிய உணவு ஆகியவற்றை சுவைப்பதை உலக நேயர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இது தேவையா என மீண்டும் கேட்கலாம். இணைய தேசமான தென்கொரியாவில் இது மிகப்பெரிய போக்காக இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த தனி சேனல் என்றும் அமேசான விளக்கம் அளிக்கிறது.

நிற்க, புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில், உணவு சார்ந்த புகைப்படங்களை கலை நயத்துடன் பகிர்ந்து கொண்டே நட்சத்திரமானவர்கள் எல்லாம் இருக்கின்றனர். வீட்டிலோ, ரெஸ்டாரண்டிலோ சுவையான உணவு கண்முன் இருக்கும் போது அதன் சுவையை அனுபவிக்கத்துவங்குவதற்கு முன், அதை கிளிக் செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளாவிட்டால் சாப்பிட்ட்து போலவே இருக்காது என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் இருக்கின்றனர். சந்தேகமாக இருந்தால், இன்ஸ்டாகிரம் + உணவு என்று தேடிப்பாருங்கள்.

காமிராவில் சிக்கிய ஓவியமும் கொண்டாடிய இணையமும்

New Years Night revellersபுத்தாண்டின் முதல் வைரல் புகைப்படம்! – பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.
அந்த புகைப்படம் இணையவெளி முழவதும் பகிரப்பட்டு, தனக்கான மெமிக்களையும் உண்டாக்கி மேலும் பிரபலமாகி இருப்பதோடு,ஆண்டின் துவக்கத்திலேயே இப்படி ஒரு அற்புதமான புகைப்படமா? என்று வியந்து பாராட்டவும் வைத்திருக்கிறது.

இணையத்தில் புகைப்படங்கள் வைரலாவது ஒன்றும் புதிய விஷயமல்ல; ஆனால் மான்செஸ்டர் புத்தாண்டு காட்சி இணையத்தின் கவனத்தை ஈர்த்த வித்ததில் வழக்கமான வைரல் அம்சங்களை மீறிய விஷயங்களை கொண்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஒரு மிக நல்ல புகைப்படத்தில் என்ன எல்லாம் இருக்க வேண்டுமோ எல்லாமே அந்த படத்தில் இருக்கின்றன.

மான்செஸ்டர் நகர் வீதி ஒன்றில் புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அந்த காட்சியில் வலது பக்க ஓரத்தில் காவலர்கள் குடிபோதையில் இருக்கும் ஒருவரை கட்டுப்படுத்த மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதை வழிபோக்கர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இடது பக்கத்தில் தரையில் படுத்திருக்கும் ஒருவர் அருகாமையில் உள்ள பீர் பாட்டிலை எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறார்.
ஜோயல் குட்மன் எனும் புகைப்பட கலைஞர் எடுத்த இந்த படம் மான்செஸ்டர் ஈவ்னிங் நியூஸ் பத்திரிகையிலும் அதன் இணையதளத்திலும் வெளியானது. முதலில், புகைப்பட தொகுப்பில் அந்த படம் பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்படாமல் தான் இருந்தது.
1CXo57HFWEAAhRe0
ஆனால், ரோலண்ட் ஹீயுக்ஸ் எனும் பிபிசி செய்தியாளர் இந்த படத்தை பார்த்ததுமே அசந்துபோய் விட்டார்.
”அந்த படம் துள்ளி குதித்து நின்றது. அதில் ஒரே இடத்தில் எல்லா அம்சங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன.என்னால் அந்த படத்தில் இருந்து பார்வையை விலக்கவே முடியவில்லை” என்று ஹீயூக்ஸ் இது பற்றி வியந்து போய் குறிப்பிடுகிறார்.

இது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்ததுமே இணைய யுகத்தில் ஒருவர் என்ன செய்யக்கூடுமோ அதையே அவரும் செய்தார். ஆம்,தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த படத்தை பகிர்ந்து கொண்டார். ”இந்த மான்செஸ்டர் புத்தாண்டு புகைப்படத்தில் பாருங்கள் எத்தனை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு அழகான ஓவியம் போல” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஓவியம் போல எனும் அந்த வர்ணனை அந்த புகைப்படத்தின் அத்தனை சிறப்புகளையும் அடையாளம் காட்டியது.அந்த புகைப்படத்தை உற்றுப்பார்க்கும் போது அதே உணர்வு தான் உண்டானது. செறிவுடன் தீட்டப்பட்ட ஒரு ஓவியத்தில் நுணுக்கமாக இடம்பெற்றிருக்க கூடிய விவரங்கள் அந்த படத்திலும் இருந்தன.
மான்செஸ்டர் நகர கண்ணாடி மூலம் பிரிட்டனின் புத்தாண்டு கொண்டாட்ட முறையை அந்த காட்சி ஓவியம் போல சித்தரிப்பதாகவும் பாராட்டப்பட்டது.இதனிடையே, இன்னொரு டிவிட்டர் பயனாளி (@GroenMNG ) ஒரு நல்ல புகைப்படத்திற்காக சொல்லப்படும் தங்க விகித இலக்கணத்திற்கு இந்த படமும் உட்பட்டிருப்பதை , அந்த அந்த அம்சங்களை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருந்தார். இது மேலும் கவனிக்க வைத்தது.

ஆக,காண்பவர் கவனத்தை ஈர்க்க கூடிய தகுதி அந்த படத்திற்கு இருந்தால், டிவிட்டர் பயனாளிகள் அதற்கு உண்டான மரியாதையை செய்தனர். அதாவது தன்னிச்சையாக அதை மறுகுறும்பதிவிட்டு (ரீடிவீஇட்) தங்கள் டைம்லைனில் பகிர்ந்து கொண்டனர்.இதன் பிறகு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறும்பதிவு பத்தாகி,பத்து நூறாகி , நூறு ஆயிரமாகி குறும்பதிவுகள் பரவிக்கொண்டே இருந்தன. திடிரென பார்த்தால் 25,000 முறைக்கு மேல் மறுகுறும்பதிவிடப்பட்டு இணையவெளியின் பெரும்பாலான இடங்களில் அந்த படம் தான் கவனத்தை ஈர்த்தது.

இதற்கு அடுத்த கட்டமாக அந்த படத்தை பகிர்ந்து கொண்டவர்கள் அதனை காவிய பாணி ஓவியங்களுடன் ஒப்பிட்டதுடன் நிற்காமல், வரலாற்றின் புகழ் மிக்க ஓவியங்களுக்குள் இந்த காட்சியின அம்சங்களை திணித்து அவற்றை மெமீக்களாக பகிர்ந்து கொண்டனர். இப்படி லியானார்டோ ஓவியத்திற்கு நடுவிலும், வான்கா ஒவியம் ஊடாகவும் அந்த படம் இணையத்தில் பயணித்தது.

ஓவிய காட்சிகள் நடுவே பார்க்கும் போது அந்த படத்தின் மகத்துவம் இன்னமும் அதிகமானது.
விளைவு புத்தாண்டின் முதல் வைரல் படமாக பரவி பேசப்பட்ட இந்த நிகழ்வை பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டன.

ஆண்டின் துவக்கத்திலேயே வைரலாக பரவியது ஒரு புறம் இருக்க, அழகிய ஓவியத்துடன் ஒப்பிடக்கூடிய அம்சம் மற்றும் கலாச்சார்க்கூறுகளை கொண்டிருப்பதால் நல்லவிதமாக கவனத்தை ஈர்த்த படமாகவும் இது அமைந்துள்ளது.

தேவையில்லாத விவாதங்களையும் ,சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் கலையின் கொண்டாட்டமாகவும் அமைந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தை முதலில் கண்டெடுத்து பகிர்ந்து கொண்ட ஹீயூக்ஸ் இந்த மொத்த நிகழ்வையும் விவரித்து பிபிசி தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.இணைய உலகமே பாராட்டும் அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் குட்மேன் தனது தளத்தில் ( http://www.joelgoodman.net/) அந்த அச்சிட்ட பிரதிகளை வாங்கி கொள்ள வழி செய்திருக்கிறார்.

—-

நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.