Tag Archives: delete

ஸ்னேப்சேட் சேவை ஒரு அறிமுகம்!

 

sonakshi_1468591201பாலிவுட் பிரபலங்களின் ஸ்னேப்சேட் பயனர் பெயர் என்ன தெரியுமா?

கேள்வி பதில் இணையதளமான குவோராவில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு பலர் ஆர்வத்துடன் பதில் அளித்துள்ளனர். அதன் படி பார்த்தால் நடிகர் ஹிருத்திக்கின் ஸ்னேப்சேட் பெயர் ஜஸ்ட் ஹிருத்திக் ( justhrithik ), நடிக்கை ஜாக்குலின் பெர்னாண்டசின் ஸ்னேப்சேட் பெயர் ஜாக்குலின் 143 ( jacqueen143) , நடிகை சோனாக்‌ஷி சின்காவின் பெயர் அலிசோனா (-asilsona). ரசிகர்கள், ஸ்னேப்சேட்டில் இவர்களை பின் தொடர விரும்பினால் இந்த பெயரை அடையாளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னும் யாரெல்லாம் ஸ்னேப்சேட்டில் இருக்கின்றனர் என அறிய விரும்பி கூகுளில் தேடினால், ஸ்னேப்சேட்டில் பிரலபலமாக இருக்கும் பாலிவுட் பிரபலங்களின் பல்வேறு பட்டியல்கள் கவர்ந்திழுக்கின்றன. நடிகை சோனம் கபூரில் துவங்கி, நர்கிஸ், பரிணிதி சோப்ரா என பலரும் இந்த பட்டியலில் இருக்கின்றனர். ரன்வீர் கபூர், மிலிந்த் சோமன் என நடிகர்கள் பட்டியலும் நீளமாக இருக்கிறது. அன்மையில் அனுஷ்கா சர்மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். ஸ்னேப்சேட் மூலம் அவர் பகிர்ந்து கொண்டு அசத்தலான ஒளிப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த ஒளிப்படங்களில் கலந்திருக்கும் நகைச்சுவையான தன்மை வெகுவாக ரசிக்கப்பட்டுள்ளன.

ஆக,அனுஷ்கா சர்மா ரசிகர்கள் இனி ஸ்னேப்சேட்டில் அவரையும் பின் தொடரலாம். படப்பிடிப்பு தள காட்சிகள் முதல், அவரது மேக்கப் ரகசியம், ஆடை அழகு என பலவற்றையும் ஸ்னேப்சேட்டில் தரிசிக்கலாம்.

பாலிவுட்டில் இருந்து விலகி உலக அளவில் சென்றால் ஸ்னேப்சேட்டில் பின் தொடர வேண்டிய பிரபலங்கள், ஒளிப்பட கலைஞர்கள், நட்சத்திரங்கள் என பல்வேறு பரிந்துரைகளை பார்க்கலாம். ஸ்னேப்சேட் கதைகள், ஸ்னேப்சேட் நினைவுக்அள், ஸ்னேப்கோடு என இன்னும் பலவித நவீன பரிபாஷைகள் சார்ந்த பட்டியலையும் பார்க்கலாம்.

எல்லாம் சரி, ’ஸ்னேப்சேட்டா அது என்ன’ என சிலர் விழிக்கலாம். இன்னும் சிலர், ஸ்னேப்சேட் சேவை புரியாத புதிராக குழப்பமாக இருக்கிறதே என நினைக்கலாம். மாறாக இளசுகள் கண்ணில் ஒளி பொங்க, ஸ்னேப்சேட் அருமை பெருமைகளை பேசத்தயாராகலாம்.

எது எப்படியோ ஸ்னேப்சேட் சேவையை பரிட்ச்யம் செய்து கொள்வது நல்லது. ஏனெனில் இணைய உலகில் வேகமாக வளரும் சேவைகளில் ஸ்னேப்சேட்டும் ஒன்றாக இருக்கிறது. அதோடு அதிகம் பேசப்படும் சேவையாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சேவையாகவும் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் பேஸ்புக்கும், அதன் துணை சேவைகளுமான இன்ஸ்டாகிராமும், வாட்ஸ் அப்பும் அன்மை காலமாக அறிமுகம் செய்யும் புதிய வசதிகள் எல்லாம் ஸ்னேப்சேட் சேவையின் நகல் என்றே சொல்லப்படுவதும், அன்மையில் இதன் தாய் நிறுவனமான ஸ்னேப் ஐஎன்சி பங்குச்சந்தையில் நுழைந்து அதன் இணை நிறுவனரான இவான் ஸ்பிஜெல்லை இளம் கோடீஸ்வரராக்கியதும், ஸ்னேப்சேட் பற்றிய ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

ஸ்னேப்சேட் அடிப்படையில் மெசேஜிங் சேவை. ஆனால் வழக்கமான மெசேஜிங் சேவை அல்ல: கொஞ்சம் மாறுபட்டது. இதிலும் ஒளிப்படங்களையும், காணொலிகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றாலும், அதில் ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கிறது. ஸ்னேப்சேட் சேவை வழியே பகிரப்படும் படங்கள் தற்காலிகமானவை- தானாக மறைந்துவிடும் தன்மை கொண்டவை. ஆம், ஸ்னேப்சேட்டில் பகிரப்படும் படங்கள் பார்க்கப்பட்ட பின், தானாக அழிக்கப்பட்டுவிடும். அதிகபட்சமாக பத்து விநாடிகள் மட்டுமே அவற்றை பார்க்கலாம். அதற்கு மேல் அவை இல்லாமல் போய்விடும்.

இப்படி தானாக மறையும் படங்கள் தான் ஸ்னேப்சேட்டின் தனிச்சிறப்பு என்றாலும், முதல் முறையாக இந்த சேவையை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்குமே, அழியும் படங்களை பகிர்வதால் என்ன பயன் என்று தான் கேடக்கத்தோன்றும். பகிர்வதும் அதன் பிறகு சேமித்து வைப்பதுமே பெரும்பாலான இணைய சேவைகளின் தன்மையாக இருக்கும் போது, தற்காலிகத்தன்மை கொண்ட ஒளிப்படங்களை பகிர்வது வீணானது என நினைக்கத்தோன்றும்.

2011 ல் ஸ்னேப்சேட் அறிமுகமாகும் போது பலரும் இப்படி குழம்பித்தவித்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி ஸ்னேப்சேட் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம், மில்லினியல்ஸ் என சொல்லப்படும் புத்தாயிரமாண்டு வாக்கில் பிறந்து வளர்ந்த இளம் தலைமுறை இந்த சேவையை ஆர்வத்தோடு தங்களுக்கானதாக ஏற்றுக்கொண்டது தான். பெரியவர்கள் எல்லாம் பேஸ்புக் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த நிலையில், இளம் தலைமுறை ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று கொண்டிருந்த நிலையில், பதின் பருவத்தினர் ஸ்னேப்சேட் மூலம் பேசிக்கொண்டனர். பார்க்கப்பட்டவுடன் அழிந்துவிடும் என்பதை அறிந்தும் கூட, தாங்கள் பகிர விரும்பும் தருணங்களை ஒளிப்படமாக ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டனர். தங்கள் நட்பு வட்டத்தில் இருந்து இப்படி வந்து சேர்ந்த படங்களை இன்னும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அந்த படங்கள் எல்லாம் காணாமல் போனது பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. அவர்களைப்பொருத்தவரை, அந்த கணங்களை தான் முக்கியம். அவற்றை தான் பகிர்ந்து கொண்டாயிற்றே- பார்த்து ரசித்தாயிற்றே!

இந்த தன்மையால் ஸ்னேப்சேட் புதுயுக தகவல் தொடர்பு மொழியானது. மெல்ல இளசுகளின் வட்டத்திற்கு வெளியேவும் அது பிரபலமானது. அப்போது தான் அடுத்த பெரிய செயலி எனும் ஸ்னேப்சேட் என்று தெரிய வந்தது. இதை முதலில் புரிந்து கொண்டவர்களில் ஒருவர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கும் ஒருவர். அதனால் தான், அவர் ஸ்னேப்சேட்டை விலைக்கு வாங்க முற்பட்டார். ஆனால் ஸ்னேப்சேட்டின் இளம் நிறுவனரான ஸ்பிஜெல் இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு ஸ்னேப்சேட் பெற்றுள்ள வளர்ச்சி ஸ்பிஜெல்லின் பிடிவாதம் அசட்டுத்துணிச்சல் அல்ல என நிருபித்திருக்கிறது. இன்று பேஸ்புக் தான் எப்படியாவது ஸ்னேப்சேட்டை கோட்டைக்குள் நுழைந்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கிறது.

1488793841-picmonkey-collageஸ்னேப்சேட்டின் வெற்றிக்கு காரணம் அதன் விநோத தன்மை தான். பகிர்ந்தவுடன் அழிந்துவிடும் படங்களால் என்ன பயன் எனும் கேள்வி பழைய தலைமுறையால் கேட்கப்படுவதாகும். இணையத்திற்கு பழகிய இக்கால தலைமுறை இந்த வசதியை இயல்பாக கருதுகிறது. அதற்கு முக்கிய காரணம், ஸ்னேப்சேட் உரையாடல் என்பது பலவிதங்களில் நிஜ உலக உரையாடல் போலவே அமைந்திருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பது தான். அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி உரையாடுகிறோம். பார்க்கிறோம், பேசிக்கொள்கிறோம் அவ்வளவு தானே. அந்த தருணங்களை எல்லாம் நாம் படம் எடுத்து சேமித்து வைப்பதில்லையே- ஸ்னேப்சேட் உரையாடலும் இப்படி தான் நிகழ்கிறது.

பயனாளிகள் தாங்கள் பகிர விரும்பும் தருணங்களை கிளிக் செய்து பகிர்ந்து கொள்கின்றனர். ஸ்னேப்சேட் செயலியை திறந்ததுமே காமிரா திரை தான் தோன்றும். சுயபடம் அல்லது வேறு காட்சியை கிளிக் செய்து, தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுடன் பகிரலாம். அவர்கள் பார்த்தவுடன் அந்த படம் மறைந்துவிடும். உதாரணத்திற்கு ஒரு இளம் பயனாளி இசைக்கச்சேரிக்கு செல்கிறார் என வைத்துக்கொள்வோம், கச்சேரி அரங்கிற்கு வெளியே நிற்கும் காட்சியை கிளிக் செய்து அவர் வெளியிடலாம். நான் இங்கே இருக்கிறேன் என தெரிவிப்பது மட்டும் தான் அவரது நோக்கம். நண்பர்களும் அதை தெரிந்து கொள்கின்றனர். அவ்வளவு தான் முடிந்தது விஷயம். இது தான் ஸ்னேப்சேட்டின் அடிநாதம்.

இந்த வசதி புத்தாயிரமாண்டின் தலைமுறையை கவர்வதற்கு காரணம், இத்தகைய அக உரிமை அவர்களுக்கு தேவைப்பட்டது தான். சமூக வலைப்பின்னலாக பேஸ்புக் பிரபலமானதும் அதிலும் பெற்றோர்களும், பெரியவர்களும் கூட்டம் கூட்டமாக உள்ளே வந்ததை பிள்ளைகள் ரசிக்கவில்லை. நம் உலகில் ஊடுருவியதாக நினைத்தவர்கள் பலரும் பேஸ்புக்கில் இருந்து வெளியேறினர். அதே நேரத்தில் அறிமுகமான ஸ்னேப்சேட் சேவை அவர்களுக்கு பொருத்தமாக இருந்ததோடு, படங்கள் பார்க்கப்பட்டவுடன் அழிந்துவிடுவது, இது எங்கள் உலகம் என பூட்டு போடுவதாகவும் அமைந்தது.

இந்த அம்சங்களே ஸ்னேப்சேட்டை வெற்றி பெற வைத்தாலும், அது படிபடியாக புதிய அம்சங்களை அமைத்து மேலும் மேலும் வளர்ந்து வந்திருக்கிறது. ஆரம்ப வரவேர்பிற்கு பிறகு ஸ்னேப்சேட் தானாக மறையும் படங்கள் தவிர, 24 மணி நேரம் மட்டும் இருக்க கூடிய படங்களை உருவாக்கும் வசதியை ஸ்னேப்சேட் ஸ்டோரி எனும் பெயரில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து பிடித்த படங்களை சேமித்து வைக்கும் மெம்மரி வசதியை அறிமுகம் செய்தது. மேலும் படங்களை இஷ்டம் போல மாற்றிக்கொள்ளும் பில்டர் வசதிகளையும் அறிமுகம் செய்தது.  பயனாளிகள் மற்றவர்கள் கதைகளை பின் தொடரும் வசதியையும் அறிமுகம் செய்தது. அப்படியே பிராண்ட்கள் மற்றும் பிரபலங்களின் பக்கமும் சென்றது.

திடுரென பார்த்தால், பிரபலங்களும், தொழில்முறை கலைஞர்களும் ஸ்னேப்சேட்டில் இருந்தனர். ஸ்னேப்சேட்டில் கணக்கு துவங்குவதும், அதில் போய் வடிவிலான அறிமுக சித்திரங்களை உருவாக்கி கொள்வதும் பிரபலமானது. ஸ்னேப்சேட் மூலம் ரசிகர்களை புதிய முறையில் தொடர்பு கொள்ள முடிவதாக நட்சத்திரங்கள் கருதுகின்றனர். இவ்வளவு ஏன் ஸ்னேப்சேட்டை ஆர்வமாக பயன்படுத்தும் டாக்டர்கள் எல்லாம் இருக்கின்றனர். இக்கால தலைமுறையுடன் தொடர்பு கொள்ள ஸ்னேப்சேட்டே பொருத்தமான வழியாக கருதப்படுகிறது.

இப்போது அனுஷ்கா சர்மாவும் தன் பங்கிற்கு ஸ்னேப்சேட்டை பிரபலமாக்கியிருக்கிறார்.

 

 

ஸ்னேப்சேட் அகராதி

ஸ்னேப்ஸ்; ஸ்னேப்சேட் செயலி முலம் எடுக்கப்படும் ஒளிப்படம் அல்லது காணொலி.

ஸ்னேப்சேட்டர்ஸ்: ஸ்னேப்சேட் பயனாளிகள்

ஸ்னேப்பேக்: ஸ்னேப்களுக்கான பதில்

ஸ்டோரி; பின் தொடர்பாளர்களுக்கு ஒளிபரப்ப கூடிய ஒளிபடங்களின் வரிசை. 24 மணி நேரம் பார்வையில் இருக்கும். ஸ்னேப்சேட்டில் கதை சொல்வதை போல கருதலாம்.

ஸ்கோர்; பயனாளி பகிர்ந்த ஸ்னேப்கள், பெற்ற ஸ்னேப்கள், கதைகள் உள்ளிட்டவையின் எண்ணிக்கை.

ஸ்னேப்கோட்; ஸ்னேப்சேட்டில் நண்பர்களை எளிதாக சேர்த்துக்கொள்ள வழி செய்யும் ஸ்கேன் செய்யும் வசதி கொண்ட குறியீடு. புரபைல் திரையின் மத்தியில் இருக்கும். காமிரா திரையின் மேல் உள்ள பிசாசு ஐகானை கிளிக் செய்து அணுகலாம்.

சேட்: ஸ்னேப்சேட் பயனாளிகளின் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி. வீடியோசேட் வசதியும் உண்டு.

லென்ஸ்; ஸ்னேப்களை மேலும் கேளிக்கை மிக்கதாக மாற்றும் வசதிகள். ஸ்பெஷல் எபெக்ட் போன்றவை. காமிரா திரையில் தோன்றும்.

பில்டர்கள்:ஸ்னேப்கள் மீது பலவித தோற்றங்களை உண்டாக்கும் வசதி.

 

 

  • நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.

 

* இணைய உலகை கலக்கும் ஸ்னேப்சேட் சேவை உருவான விதம் பற்றி அறிய;

ஸ்னேப்சேட் வெற்றிக்கதை- புதுயுக செயலியை உருவாக்கிய ஸ்பிஜெல் !

 

 

 

 

 

 

இணைய விடுதலை பெற உதவும் இணைய சேவை

unஇணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு உண்டாகி, அதை செயல்படுத்தும் உறுதியும் இருந்தால் அதற்காக என்றே ஒரு இணைய சேவை அறிமுகமாகி இருக்கிறது. டீசீட்.மீ ( deseat.me) எனும் அந்த இணையதளம் உங்களை நீங்களே இணையத்தில் இருந்து டெலிட் செய்து கொள்ள உதவுகிறது.
இணையத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே வெளியேற நினைத்தாலும் அதை நாமே செய்து கொள்ளலாமே, இதற்காக தனியே ஒரு இணையதளம் தேவையா? என நீங்கள் கேட்கலாம்.
ஆம், நீங்களே நினைத்தாலும் இணையத்தில் இருந்து வெளியேறுவது என்பது அத்தனை எளிதல்ல. ஏனெனில் இணையத்தில் உங்கள் சுவடு எங்கெங்கோ பதிந்திருக்கலாம். இணையத்தில் உலா வந்த காலத்தில் நிங்கள் எண்ணற்ற இணையதளங்களை பயன்படுத்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றில் உறுப்பினர்களாகவும் பதிவு செய்து கொண்டிருப்பீர்கள். செய்திமடல் சேவைகளில் சந்தா செலுத்தி இருக்கலாம். மின்வணிக தளங்களில் பதிவு செய்திருக்கலாம். ஒருமுறை பயன்படுத்தி பார்ப்போமே என்று சில தளங்களில் உள்ளே நுழைந்து உறுப்பினராகி இருக்கலாம். இவற்றில் பல தளங்களை நீங்கள் மறந்து விட்டிருக்கலாம். இப்படி எந்த தளங்களில் எல்லாம் உறுப்பினராக பதிவு செய்து கொண்டோம் என்பதை நிச்சயமாக உங்களால் கணக்கு வைத்திருக்க முடியாது. இது அநேகமாக எல்லா இணையவாசிகளுக்கும் பொருந்தும்.
எனவே ஏதோதோ தளங்களில் உங்கள் பயனர் பெயரும், கடவுச்சொல்லும் பதிவாகி இருக்கும். அவற்றோடு நீங்கள் சமர்பித்த விவரங்களும் இருக்கலாம்.
இவற்றில் இருந்தெல்லாம் உங்கள் தடத்தை அழித்துக்கொண்டால் மட்டுமே இணையத்தில் இருந்து உங்களால் முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும்.
ஆக, இணைய விடுதலை தேவை எனில், பதிவு செய்து கொண்ட இணையதளங்களில் இருந்தெல்லாம் டெலிட் செய்து கொள்ள வேண்டும். இது கொஞ்சம் சிக்கலானது.
அதனால் தான், இணையத்தில் இருந்து தங்களை டெலிட் செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக என்றே அன்சீட்.மீ இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த மென்பொருள் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் பயனாளிகள் சார்பில் அவர்களின் இணைய சுவடுகளை எல்லாம் அழிக்க உதவுகிறது. இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள முதலில் பயனாளிகள் தங்கள் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு இந்த தளம் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தி, எந்த தளங்களில் எல்லாம் உறுப்பினராக சேர்ந்திருக்கிறோம் என காண்பிக்கிறது. அதோடு அந்த தளங்களில் இருந்து டெலிட் செய்து கொள்வதற்கான இணைப்பையும் அளிக்கிறது. எந்த தளங்களில் இருந்தெல்லாம் நீக்கி கொள்வது என முடிவு செய்து கொள்ளலாம். அல்லது ஓட்டுமொத்தமாக எல்லாவற்றில் இருந்தும் விலகலாம். இந்த தளம் மூலம் வெளியேற உதவும் சேவைகளில் பேஸ்புக்கில் துவங்கி யூடியூப், எவெர்நோட் என பெரிய பட்டியலே இருக்கிறது.
எல்லாம் சரி, இந்த தளத்திடம் இமெயில் முகவரியையும், பாஸ்வேர்டையும் சமர்பிப்பதால் அந்தரங்க மீறல் ஏற்படலாமே என்று சந்தேகிக்கலாம். அத்தகைய சந்தேகம் தேவையில்லை, பயனாளிகள் வெளியேற வேண்டிய தளங்கள் பற்றிய விவரத்தை மட்டுமே தங்களிடம் அளிப்பதாகவும், நீக்கம் தொடர்பான அனைத்து செயல்களும் பயனாளிகள் கம்ப்யூட்டரிலேயே நிகழ்வதாகவும், இந்த தளத்தை உருவாக்கிய மென்பொருளாலர்கள் வில்லே டால்போ மற்றும் லினஸ் உன்னேபேக் தெரிவிக்கின்றனர். பயனாளிகள் தொடர்பான எந்த தகவலையும் அணுக வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர். இணையவாசிகள் தங்கள் இணைய இருப்பை சுத்தமாக்கி கொள்ள உதவும் நோக்கத்துடனே இந்த தளத்தை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த சேவை மூலம் கூட இணையத்தில் இருந்து முற்றிலும் வெளியேறிவிட்டதாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் இது ஜிமெயில் கணக்கு அடிப்படையில் செயல்படுவதால், அதனுடன் தொடர்பு கொண்டு தளங்களில் இருந்து மட்டுமே நீக்கி கொள்ள முடியும். ஜிமெயிலுக்கு முந்தையை இமெயில் முகவரி ( ஹாட்மெயிலை நினைவில் உள்ளதா?) அல்லது வேறு முகவரிகளில் பதிவு செய்து கொண்ட சேவைகளை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு காலத்தில் சமூக வலைப்பின்னல் பரப்பில் கோலோச்சிய மைஸ்பேஸ் போன்ற தளங்களில் இது செல்லுபடியாகாது.
இருந்தாலும் இது சுவாரஸ்யமான சேவை தான்.
ஆனால், இணைய யுகத்தில் இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் என்னவென்றால், அப்படியே விரும்பினாலும் கூட அது முற்றிலும் சாத்தியமில்லை. பதிவு செய்து கொண்ட தளங்களில் இருந்தெல்லாம் நீக்கி கொண்டால் கூட, சமூக ஊடகங்களில் நண்பர்கள் நம்மைப்பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் இருக்கலாம். அவர்கள் டேக் செய்த படங்கள் இருக்கலாம்.
ஆக, இணையத்தில் இருந்து நீக்கி கொள்வது அத்தனை எளிதல்ல. எப்படியும் இணையம் ஏதேனும் ஒரு வழியில் நினைவில் வைத்திருக்கும். இதை ஏற்றுக்கொள்வது ஒரு விழிப்புணர்வாகவே அமையும். இணையத்தில் நம்முடைய சுவடுகள் பதிந்து கொண்டே இருப்பதால், நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. அது மட்டும் அல்ல எந்த இணையதளங்களில் எல்லாம் பதிவு செய்து கொண்டோம் என நினைத்துப்பார்ப்பதே கூட நல்ல இணைய பயிற்சியாக இருக்கும். நமது இணைய பழக்கத்தை அறிந்து கொள்ளும் பயிற்சியாக இருக்கும்!

gmail

மெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

எப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.

இமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது, அல்லது தகவல் பிழை மற்றும் விடுபட்ட தகவல் என பல காரணங்களுக்காகவும் இவ்வாறு நினைக்கலாம்.
இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்று ஜிமெயிலில் இப்போது அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி!

கூகுள் ஏற்கனவே ஜிமெயில் லேப்ஸ் மூலம் சோதனை முறையில் இந்த வசதியை அளித்து வருகிறது. அதன் புதிய மெயில் சேவை செயலியான இன்பாக்சிலும் இந்த வசதி இருக்கிறது. இப்போது ஜிமெயில் பயனாளிகளுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிமெயிலை பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு ,அன் செண்ட் வசதி கொண்ட ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால் , மெயில் சுவற்றில் அடித்த பந்து போல அனுப்ப படாமல் திரும்பி வந்துவிடும்.

அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம்.
இந்த வசதியை பயன்படுத்த ஜிமெயிலில் செட்டிங் பகுதிக்கு சென்று அன்செண்டில் 5 முதல் 30 விநாடிகள் வரையான அவகாசத்தில் அமைத்துக்கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இனி இருக்காது.
Criptext-ActivityPanel_1434388452232
கிரிப்டெக்ஸ்ட் சேவை
இதே போல மெயிலை திரும்ப பெறும் வசதியை கிர்ப்டெக்ஸ்ட் எனும் புதிய மெயில் சேவையும் அளிக்கிறது. ஜிமெயிலை விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அது மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது.
இன்பாக்சில் வந்த மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது. ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர் கம்ப்யூட்டரில் இருப்பதை இது தவிர்க்கிறது. ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.

ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். ஆனால் மெயில் பெறுபவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என தெரியாது.

அதே போல அனுப்பிய மெயில் படிக்கப்ப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை என்கிர்ப்ட் செய்தும் அனுப்பலாம்.
இமெயில் பரிமாற்றம் ரகசியமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.

ஜிமெயில் அறிவிப்பு: http://googleappsupdates.blogspot.co.uk/2015/06/undo-send-for-gmail-on-web.html

கிர்ப்டெக்ஸ்ட் சேவைக்கு: http://www.criptext.com/email/

———-


விகடன்.காமில் எழுதியது

twitwipe-logo

டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய!

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம்.

பல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம்.

அல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று தோன்றலாம்.

காரணம் என்னவாக இருந்தாலும் டிவிட்டர் குறும்பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட வேண்டுன் என்று விரும்பும் போது அதனை செய்து முடிப்பது கடினமானது.ஒவ்வொரு பதிவாக நீக்கி கொண்டிருந்தால் அலுத்து போய்விடலாம்.

இது போன்ற நேரங்களில் டிவிட் வைப் இணையளத்தை நாடலாம்.இந்த தளம் டிவிட்டர் பக்கத்தில் உள்ள குறும்பதிவுகளை அனைத்தையும் நிக்கி அதனை துடைத்து தருகிறது.(இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்கிறது இந்த தளம்)

இதற்கு பதிலாக டிவிட்டர் கணக்கையே நீக்கி விடலாமே என்று கேட்கலாம்.நீக்கலாம் தான்.ஆனால் டிவிட்டர் வெளியில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிட முடிவு செய்யும் போது தான் இது சரியாக இருக்கும்.காரணம் டிவிட்டர் கணக்கை நீக்கியவுடன் டிவிட்டரில் நமது அடையாளத்தை இழந்து விடுவோம்.மீண்டும் நுழைஅ நினைத்தால் புதிய பெயரில் தான் கணக்கை துவக்க வேண்டும்.அதோடு ஏற்கனவே பெற்றிருந்த டிவிட்டர் தொடர்புகளை இழந்து விடுவோம்.

டிவிட் வைப் சேவையை பயன்ப‌டுத்தும் போது டிவிட்டர் கணக்கை இழக்க மாட்டோம்.குறும்பதிவுகளை மட்டுமே நீக்குவோம்.அதே பெயரில் நாம் தொடர்ந்து குறும்பதிவு செய்யலாம்.பின்தொடர்பாளர்களையும் இழக்காமல் இருப்போம்.

இதே போல டிவிட்டரில் குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை மட்டும் நீக்கி கொள்ளும் வசதியை டிகிளட்டர் வழங்குகிறது.புக்மார்க்லெட் வகையை சேர்ந்த இந்த சேவையிடம் வேன்டாத பதிவுகளுக்கான குறிச்சொற்களை சம‌ர்பித்தால் அவற்றை மட்டும் நீக்கி விடுகிறது.

இணையத‌ள முகவரி;http://twitwipe.com/login.php

http://www.conroyp.com/2010/03/11/declutter/