Tag Archives: selfie

ஸ்மார்ட் போனால் ஆன பயன்!

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவை. இப்படி சொல்லப்படுவதில் சந்தேகமோ ஆச்சர்யமோ இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் பணியிடத்தில் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பிலும் கைகொடுப்பதாக தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்பெரி சார்பில் ஜிஎப்கே எனும் ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவில் இந்த கணிப்பை மேற்கொண்டது. இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகளில் சுமார் 9,500 பங்கேற்பாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தான், பெரும்பாலான இந்திய ஸ்மார்ட்ப்யனாளிகள் , ஸ்மாட்போன்கள் நேரத்தை மிச்சமாக்கி, செயல்திறனை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் பணியை மேற்கொள்ள வழி செய்வதன் மூலம் வாழ்க்கையையும் எளிதாக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில், 67 சதவீதம் பேர் ,தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 69 சதவீதம் பேர் ஏற்கனவே செய்து கொண்டுள்ள வேலைகளை மேலும் சிறப்பாக செய்ய புதிய வழிகளை தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இனியும் வேலையை செய்து முடிப்பது மட்டுமே முக்கியமல்ல, அதை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக செய்வது தான் முக்கியம் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் நேரத்தை மிச்சமாக்குவதாகவும், ஒரு வாரத்தில் சராசரியாக 5 மணி நேரம் மிச்சமாவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்மார்ட்போன் வாங்க இன்னொரு கூடுதல் காரணம் கிடைத்திருக்கிறது. அப்படியே ஸ்மார்ட்போன் பயனாளிகள் உங்கள் செயல்திறனையும் சோதித்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.

————-

லேப்டாப் கையேடு

லேப்டாப்பில் தான் எத்தனை பிராண்ட்கள்,எத்தனை ரகங்கள். புதிய லேப்டாப் வாங்க விரும்பினால் இவற்றில் சிலவற்றின் அம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது. இப்படி லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடவும் வேண்டாம், ஒப்பீட்டு இணையதளங்கள் பக்கமும் போக வேண்டாம். அமெரிக்கரான மரேக் கிப்னே (Marek Gibney ) அருமையான வழியை இதற்காக உருவாக்கி இருக்கிறார். மனிதர் லேப்டாப்களுக்கான சுற்றுலா வரைபடம் மூலம் லேப்டாப் தொடர்பான எல்லா விவரங்களையும் ஒரே சார்ட்டில் கொண்டுவந்து விட்டார். இந்த வரைபடத்தில் லேப்டாப்கள் சின்ன சின்ன ஐகான்களாக இடம்பெற்றுள்ளன. எந்த ஐகான் அருகே மவுஸ் சுட்டியை கொண்டு சென்றாலும் அந்த லேப்டாபின் படம் மற்றும் விலை உள்ளிட்ட அம்சங்கள் தோன்றுகின்றன.( விலை டாலரில் கொடுக்கப்பட்டுள்ளது). திரை அளவு ,நினைவுத்திறன் உள்ளிட்ட அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில நிமிடங்களில் ஒரு லேப்டாப் ஷோரூமிற்கு சென்று வந்தது போன்ற உணர்வை பெறலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும் வழி இருக்கிறது.
லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க இதைவிட சிறந்த வழி இருக்கலாம், ஆனால் சுலபமான வழி இருக்க வாய்ப்பில்லை.
அட லேப்டாப் வரைபடம் ( http://things.gnod.com/laptops/) நன்றாக இருக்கிறதே என்று தோன்றினால் இதன் மூல இணையதளத்திற்கும் (http://www.gnod.com/ ) சென்று பாருங்கள். எம்பி3 பிளேயர்கள் போன்றவற்றுக்கும் இதே போன்ற வசதி இருப்பதுடன், இசை,இலக்கியம் மற்றும் திரைப்ப்டங்களுக்கான இதே போன்ற ஒப்பீட்டு வசதி உள்ளன. உங்கள் ரசனை அடிப்படையில் புதிய விஷயங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான அருமையான வழியாக இவை இருக்கின்றன.

—————

ஆப்பிள் வாட்ச் அழகி

ஆப்பிள் வாட்ச் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு விடை காண இன்னும் சில மாதங்களாவது காத்திருக்க வேண்டும். சரை, ஆப்பில் வாட்சியை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? இதற்கான பதிலைப்பெற பிரபல பேஷன் இதழான வோக் ( Vogue ) பத்திரிகையின் சீன பதிப்பின் பக்கங்களை புரட்டினாலே போதும். இதன் நவம்பர் இதழில் சீன சூப்பர் மாடல் அழகி லியூ வென் ஆப்பிள் வாட்சி அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். முகப்பு பக்க்த்திலும் இந்த ஆப்பிள் வாட்ச் அழகி தான் அலங்கரிக்கிறார். இதழின் ஆசிரியர் ஆப்பிள் வாட்சுடனான இந்த கூட்டு முயற்சி பற்றி விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஆப்பில் வாட்ச் பேஷன் சந்தையை முக்கிய இலக்காக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சிக்கே முன்னணி பேஷன் கலைஞர்க்ள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வோக் சீன இதழில் முகப்பு பக்கத்தில் ஆப்பில் வாட்ச் அலங்கரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சும்மா இல்லை சீன வோக் இதழுக்கு 13 லட்சம் வாசகர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
’மற்ற நாடுகளை விட சீன மக்கள் தான் புதிய தொழில்நுப்டம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஏற்றுக்கொள்வதில் முன்னிலை வகிக்கின்றனர் . புதிய மற்றும் நவீனமான எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில் சீனர்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள்’- ஆப்பிள் சீன வோக் இதழை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு அதன் எடிட்டர் இன் சீஃப் ஏஞ்சலிசியா செயூங் அளித்துள்ள பதில் இது.
இதனிடையே ஆப்பிளின் வடிவமைப்பு நுப்டங்களை நக்லெடுப்பதாக அதன் வடிவமைப்பு பிரிவு துணைத்தலைவர் ஜோனாத்தன் ஐவி கூறியுள்ள புகாருக்கு , சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி ( Xiaomi ) தலைவர் லின் பின் மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கள் தயாரிப்பை பயன்படுத்தி பார்த்தால் தான் தெரியும், வேண்டுமானாலு ஐவிக்கு ஒரு ஜியோமி போனை பரிசாக அனுப்பி வைக்கத்தயார் என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்த பின் சொல்லும் கருத்துகளை அறிய ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சபாஷ் சரியான சவால் தான் .

———–
நான்காவது பயர்பாக்ஸ் போன்

ஸ்பைஸ், இண்டெக்ஸ் மற்றும் அல்காடெல் என பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிறுவனங்களின் வரிசையில் ஜென் மொபைலும் சேர உள்ளது. மொசில்லாவுடன் இணைந்து ஜென் மொபைல் நிறுவனமும் குறைந்த விலையிலான பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமாகும் நான்காவது பயர்பாக்ஸ் போனாக இருக்கும். ஸ்மார்ட்போன் அனுபவத்தை முதலில் பெற விரும்புகிறவர்களுக்கு பயர்பாக்ஸ் போன்ற குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் உதவும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான இந்திய பயனாளிகள் விலையை முக்கியமாக கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மொசில்லா மேலும் பல கூட்டு திட்டங்களுடன் பயர்பாக்ஸ் ஓஎஸ் பயன்பாட்டை விரிவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பயர்பாக்ஸ் சந்தையை மேம்படுத்தும் வகையில் இபே இந்தியா, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயலிகளை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

——-

இந்த காமிரா எப்படி?

ஸ்மார்ட்போன்கள் முன்பக்க காமிரா, பின்பக்க காமிரா என இரட்டை காமிராக்களுடன் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட் போன் நிறுவனமான எச்டிசி தனியே ஒரு காமிராவை அறிமுகம் செய்துள்ளது. எசிடிசி ரீ (HTC Re ) எனும் பெயர் கொண்ட அந்த காமிரா சற்றே விநோதமானது. காமிரா போலவே தோற்றம் அளிக்காத அந்த காமிரா ஒரு சின்ன குழாய் போல தான் இருக்கிறது. இதில் திரையும் கிடையாது. அதனால் என்ன கையில் எடுத்ததுமே படம் பிடிக்கதுவங்கி விடலாம் என்கிறது எச்டிசி. இதில் மொத்தமே இரண்டு பட்டன்கள் தான். பின் பக்கம் உள்ள வெள்ளி நிற பட்டனை அழுத்தினால் போதும் படம் எடுக்கத்துவங்கிவிடும். புகைப்பம் எடுக்க ஒரு அழுத்து. இன்னொரு முறை அழுத்தினால் வீடியோ. இதில் என்ன விஷேசம் என்றால் இதை ஆன் செய்ய தனியே ஸ்விட்ச் கிடையாது . கையில் எடுத்ததுமே , இயக்கத்தை உணர்ந்து ஆன் செய்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது.
படம் படிக்கும் தருணம் வந்துதும், ஸ்மார்போனை கையில் எடுத்து காமிராவை இயக்கி, காட்சியை நோக்கி மையம் கொள்வது எல்லாம் எதற்கு, உடனே காமிராவை எடுத்து கிளிக் செய்ய முடிந்தால் தான், நிஜவாழ்க்கை தருணங்களை அப்படியே படம் பிடிக்க முடியும் என்கிறது எச்டிசி. புகைப்படத்தை சேமிக்கும் மற்றும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனுடன் செயல்படும் செயலி ஒன்றும் இருக்கிறது. செயலி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்துக்கொள்ளலாம்.
காமிரா பிரிவில் கவனத்தை ஈர்த்திருக்கும் ஆக்‌ஷன் காமிராவான கோப்ரோவுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது. நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை; 199 டாலர்.
எச்டிசி அறிமுகம் செய்துள்ள டிசைன் ஐ போனிலும் செல்ஃபீ காமிரா தான் விஷேசம் என்கின்றனர்.

————–

ஆண்ட்ராய்டு ஒன் சவால்

ஆண்ட்ராய்ட் ஒன் மீது கூகிள் மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது. குறைந்த விலையிலான இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தையில் முதல் முறை ஸ்மார்ட்போன் பயனாளிகளை சென்றடைய திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி நிலவும் நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் சவாலான நிலையை எதிர்கொள்ள இருப்பதாக ஐடிசி (International Data Corporation ) ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. மார்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் அதிகமாக செலவிட்டு வரும் நிலையிலும் இந்திய சந்தையை கைப்பற்றுபது கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன சந்தை அடைக்கப்பட்டிருதால் கூகிள் இந்தியாவில் தான் அடுத்த பில்லியன் வாடிக்கையாளர்கள் பிரிவில் கவனம் செலுத்தியாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு ஒன் கூகிளுக்கு முக்கியமானது என்றும் இந்தியாவில் வாங்ககூடிய விலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் திறன் கொண்டது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆண்ட்ராய்டு ஒன் ஏற்கனவே கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்ற்உம் ஸ்பைஸ் நிறுவனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அடுத்த கட்டமாக மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் அறிமுகாமக உள்ளது.
———-

நன்றி; தமிழ் இந்து

ஸ்மார்ட்போன் நடைபாதையும் செல்போன் தொப்பியும்.

ஸ்மார்ட்போன் பாதை!
chinese-phone-laneகையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார்ட்போனும் சாதாரன போனும் கையில் இருக்கும் பழக்கத்தின் விளைவான இந்த பிரச்சனைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்- ஸ்மார்ட்போன் நடைபாதை தான் அது. ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்காக என்று சீனாவின் சாங்கியிங் (Chongqing ) நகரில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பகுதியின் நடைபாதையில் இடம் ஒதுக்கியுள்ளனர். இந்த பாதையில் 50 மீட்டர் ஸ்மார்ட்போனும் கண்ணுமாக இருப்பவர்களுகாக ஒதுக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள 50 மீட்டரில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. ஸ்மார்ட்போனை பாதையில் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் ,இதற்கான அறிவிப்பு நீங்களே பொறுப்பு எனும் எச்சரிக்கை பாணியில் எழுதப்பட்டுள்ளது. அருகிலேயே ,சீனாவின் முதல் செல்போன் நடைபாதை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமையான இந்த யோசனையை செல்போனை பார்த்து கொண்டே நடப்பதில் உள்ள ஆபத்தை உணர்த்துவதற்காக என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சி சார்பில் அமெரிக்காவின் பின்பற்றப்பட்ட யோசனையின் உந்துதலால் இந்த திட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் டிவிட்டரான வெய்போவில் இளசுகள் பலரும் மூழ்கி கிடப்பதும் அவர்களில் பலர் நடந்து கொண்டே குறும்பதிவு அனுப்பும் வழக்கம் கொண்டிருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஸ்மார்ட்போன் அடிமைகள்!

ஸ்மார்ட்போன் தாக்கம் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கவலை தரும் தகவலை தெரிவிக்கிறது. கல்லூரி மாணவ,மாணவிகளில் 75 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை சார்ந்து இருப்பது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 5 பேரில் ஒருவர் ஸ்மார்ட்போன் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 86 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை இரவில் தூங்கும் போது கைக்கு அருகிலேயே வைத்திருப்பதாகவும், 81 சதவீதம் பேர் போனை இழந்தால் பெரும் நெருக்கடிக்கு ஆளாவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இன்னும் மோசம் என்ன தெரியுமா, ஆயிவில் பங்கேற்றவர்களில் 63 சதவீதம் பேர் போன் ஒலிக்காத நேரங்களில் கூட அது ஒலிப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளது தான். இன்னும் 55 சதவீதம் பேர் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அல்லது மோசமான மனநிலையில் இருந்து விடுபட ஸ்மார்ட்போனில் தஞ்சம் அடைவதாக கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போனை சார்ந்திருப்பதற்கான காரணம் நடைமுறை சார்ந்த்தாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் கையில் போன் வைத்திருக்கும் போது பாதுகாப்புடன் உணர்வதை இதற்கான உதாரணமாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் ஸ்மார்ட்போன் தாக்கத்தால் எதுவுமே உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடதப்பட்டுள்ளது. ஆனால் மிக சுலபமாக நம் நாட்டு மாணவர்களுக்கும் பொருந்தக்கூடியது தான் இல்லையா?
அலபாமா பலகலைக்கழக ஆய்வாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மாணவர்களுக்கான தேசிய சஞ்சிகையில் வெளியாக உள்ளது. ஆய்வின் தலைப்பு; ஸ்மார்ட்போன் மோகம் பற்றிய உண்மைகள்!.

செல்ஃபீ தொப்பி-செல்பீ காமிரா !
Acer-Selfie-4செல்ஃபீ என்று சொல்லப்படும் சுயபடங்களின் மோகம் அல்லது ஆர்வம் தீவிரமாகி கொண்டே தான் போகிறது. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதுப்புது சாதனங்களும் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. செல்ஃபீ போன்கள், செல்ஃபீ பிரெஷ் என தொடரும் இந்த வரிசையில் சமீபத்திய வரவு செல்ஃபி தொப்பி. கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் தயாரிப்பில் புகழ்பெற்ற ஏசர் நிறுவனத்தின் யு.கே பிரிவு இந்த செல்ஃபீ தொப்பியை அறிமுகம் செய்துள்ளது. புகழ்பெற்ற பேஷன் வடிவமைப்பாளர் ஒருவருடன் இணைந்து உருவாக்கப்பட்டூள்ள இந்த அகண்ட தொப்பில் இணைக்கப்பட்டுள்ள டேப்லெட்டை கொண்டு அழகான சுயபடத்தை எடுத்துக்கொள்ளலாமாம்.
லண்டன் பேஷன் வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த செல்ஃபீ தொப்பி.
செல்ஃபீ தாக்கத்தின் இன்னொரு அடையாளம் காமிரா தயாரிப்பு நிறுவனமான நிக்கான் செல்ஃபீ வசதி கொண்ட காமிராவை அறிமுகம் செய்துள்ளது. அதன் புதிய கூல்பிக்ஸ் காமிரா (Coolpix S6900. ) சுயபடம் எடுப்பதற்கான டச்ஸ்கிரீன் வசதி கொண்ட எல்சிடி திரையை கொண்டுள்ளது. ஏற்கனவே கேனானின் பவர்ஷாட் காமிராவில் இதே போல செல்ஃபீக்கான வசதி உள்ளது. இதன் பின்பக்கத்தில் உள்ள எல்சிடி திரை மூலம் சூப்பராக சுயபடம் எடுக்கலாமாம்.

Apple-iPhone-Pricesஐபோன் 6 அறிமுகமும் வரவேற்பும்
ஒரு வழியாக ஐபோன் 6 அறிமுகமாகி விட்டது. பரவலாக கணிக்கப்பட்டது போலவே ஐபோன் 6 மற்றும் சற்றே பெரிய அளவில் ஐபோன் பிளஸ் ஆகியவற்றை ஆப்பிள் 9 ந் தேதி ஆப்பிள் அறிமுகம் செய்தது. கூடவே ஆப்பிள் வாட்ச் மற்றும் சொல்போனில் பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் அடுத்த ஆண்டு தான் விற்பனைக்கு வருகிறது. ஆனால் அதன் தோற்றமும், வடிவமைப்பும் பலரை கவர்ந்துள்ளது. அறிமுக விழாவில் இது வரையான ஐபோன்களிலேயே சிறந்ததாக ஐபோன் 6 உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் கூறினார். ஆப்பிள் அபிமானிகள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர் போலும். அது தான் ஐபோன் 6 மற்றும் ஐபோன் பிளஸ் ஆகியவற்றின் முன்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு24 மணி நேரத்தில் 4 மில்லியன் போன்கள் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஐபோன் 5 முதல் நாளில் 2 மில்லியன் விற்பனை ஆனதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
முன்பதிவில் ஐபோன் 6 மாதிரியை விட அளவில் பெரிய ( விலையும் அதிகம்) ஐபோன் பிளசுக்கு தான் அதிக மதிப்பு இருந்த்தாக சொல்லப்படுகிறது.
இதனிடையே பெரிய திரை போன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி இதெல்லாம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே நெக்சஸ் போனில் இருந்தது தானே என்று ஆண்ட்ராய்டு அபிமானிகள் சிலர் கேலி செய்கின்றனர் .தொழில்நுட்ப இதழ் ஒன்று இரண்டு போனின் அம்சங்களையும் ஒப்பிட்டு வெளியிட்ட வரைபட சித்திரத்தை அவர்கள் ஆதாரமாக காட்டுகின்றனர்.
எது எப்படியோ, ஐபோன் 6 மற்ற ஐபோன்கள் போல தாமதமாக அல்லாமல் சிக்கிரமே இந்தியாவுக்கு வருகிறது. அடுத்த மாதம் இந்தியாவில் ஐபோன்6 வருகிறது. அதற்கு முன்னதாக ஐபோன் 5 மாதிரிகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்ல, ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் வதந்திகளால் ஊகிக்க முடியாத தயாரிப்புகளை ஆப்பிள் உருவாக்கி கொண்டிருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இவை ஒருபுறம் இருக்க, ஆப்பிளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட எம்பி3 சாதனமான ஐபாடுகளின் நிலை என்ன என்று இசைப்பிரியர்கள் பலர் ஏக்கத்துடன் கேட்கின்றனர். ஐபாடுகளில் புதிய ரகம் எதுவும் அறிமுகமாகமல் இருப்பதால் ஆப்பிள் இதற்கு ஓசைப்படாமல் குட்பை சொல்ல இருக்கிறதா என்றும் சந்தேகிக்கின்றனர். ஆனால் ஸ்மார்ட்போன் யுகத்தில் ஐபாடுக்கு இடம் இருக்கிறதா ? இருந்தும் இது பற்றி வயர்டு இதழில் வெளியாகி இருக்கும் கட்டுரை ஐபாடு பிரியர்களுக்கு ஆன்ந்தம் அளிக்கும்: http://www.wired.com/2014/09/rip-ipod/

கிழக்கிற்காக ஒரு ஸ்மார்ட்போன்!
எதிர்பார்க்கப்பட்டது போலவே கூகிள் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. கார்பன் ( ஸ்பார்கில் வி), ஸ்பைஸ் (டிரிம் யூனோ ) மற்றும் மைக்ரோமேக்ஸ் (கேன்வாஸ் ஏ1 ) ஆகிய இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்று போன்களுமே ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்பைஸ் மற்றும் கார்ப்ன் ஆண்ட்ராய்டு ஒன் போன்களை பிலிகார்ட் மற்றும் ஸ்னேப்டீல் மின்வணிக தளங்கள் மூலமும் மைக்ரோம்கேஸ் போனை அமேசான் இந்திய தளம் மூலமும் வாங்கலாம். ஸ்பைஸ் போனின் விலை ரூ.6299. மைக்ரோமேக்ஸ் விலை ரூ. 6,499. கார்பன் போனின் விலை ரூ.6399 .
மூன்று போன்களுமே அடிப்படையில் பொதுவான அமசங்களை கொண்டிருக்கின்றன. மூன்றுமே இரட்டை சிம்கள் கொண்டவை, 4.5 இன்ச் டிஸ்பிலே கொண்டவை, முன் பக்க மற்றும் பின் பக்க காமிராக்களுடன் 1 ஜிபி ரேம் மற்றும் 1700mAh பேட்டரி கொண்டவை. 1.3GHz பிராசஸர் கொண்டிருக்கின்றன.
இரட்டை சிம் மற்றும் மெமரி கார்டு வசதி இந்தியாவுக்காக என சேர்க்கப்பட்டுள்ளன.
வாங்ககூடிய விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் எனும் கருத்துடன் கூகிள் இந்த போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் விலையை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமான ஆண்ட்ராய்டு வடிவம் மற்றும் வன்பொருள் வடிவமைப்பு கொண்டிருப்பதாக கூகிள் தெரிவிக்கிறது.
ஆண்ட்ராய்டு ஒன் போனில் கவனிக்கத்தக்க விஷயம் என்ன என்றால் இவை இந்திய சந்தையில் முதன் முதலாக அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் இருந்து தான் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்,பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு அறிமுகமாக உள்ளது. மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் இவை அறிமுகமாக உள்ளன. இவை மேற்கத்திய சந்தையில் அறிமுகமாகுமா ?என்று தெரியவில்லை . அடிப்படையில் கிழக்கில் உள்ள நாடுகளுக்கான போன் இது. இந்தியா இதன் மையமாக உள்ளது.
ஆண்ட்ராய்டு ஒன் அறிமுகம் தொடர்பான மற்ற முக்கிய அம்சங்கள் 2 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட் வசதி மற்றும் ஆப்லைனில் யூடியூப் வீடியோ பார்க்கும் வசதி.

டாப் டென்னில் இந்தியா!
ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பொருத்தவரை இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக சர்வதேச அமைப்பான ஜி.எஸ்.எம்.ஏ தெரிவித்துள்ளது. இந்தியாவில் 111 மில்லியன் ஸ்மார்ட்போன் இணைப்புகள் இருப்பதாக இதன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. சீனா ,அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
ஸ்மார்ட்போனின் எதிர்கால போக்குகள் மற்றும் கணிப்புகள் தொடர்பான அறிக்கையாக இது அமைந்துள்ளது. 2020 வாக்கில் ஸ்மார்ட்போன் இணைப்புகளில் ஐந்தில் நான்கு இணைப்புகள் வளரும் நாடுகளில் இருந்து வரும் என தெரிவிக்கும் இந்த அறிக்கை மூன்று போனில் 2 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் சொல்கிறது.
ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை குறைந்து வருவது மற்றும் பட்ஜெட் போன்களுக்கான தேவை ஆகியவை இந்த வளர்ச்சிக்க காரணங்களாகும்.
அடுத்த 18 மாதங்களில் மட்டும் 1 புதிய பில்லியன் ஸ்மார்ட்போன் இணைப்புகள் உருவாகும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

————
தமிழ் இந்துவுக்காக எழுதியது. நன்றி தமிழ் இந்து.

ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் !

01-baiduசீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை வேறு. அங்கு பெய்டு தான் நம்பர் ஒன். இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் பெய்டு சினாவில் தனது வருடாந்திர கண்காட்சியில் சமீபத்தில் ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ்களை ( சீனர்களின் ஸ்பூன்) அறிமுகம் செய்துள்ளது.
இந்த சாப்ஸ்டிக் உணவின் தன்மை மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவை கண்டறிந்து சொலலக்கூடியது என பெய்டு தெரிவித்துள்ளது. எண்ணெயின் மணத்தை வைத்து , உணவு கெட்டுப்போயிருக்கிறதா என்பதையும் இந்த சாப்ஸ்டிக் உணர்த்திவிடும். இந்த தகவலை ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக தெரிவிக்கும். சோடியம் அனலைசர் கொண்ட இந்த சாதனத்தை வை-பீ அல்லது ப்ளுடூத் மூலம் கம்ப்யூட்டருடனும் இணைக்கலாம்.
சீனர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான சாப்ஸ்டிக்சை நவீன தொழில்நுட்பத்தின் இணைத்திருப்பதாக பெய்டு தெரிவித்துள்ளது. இந்த சாப்ஸ்டிக் சாப்பிட உதவுவதோடு சாப்பாடு கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்றும் சொல்லிவிடும் திறன் படைத்த்து என்கிறது பெய்டு.
இது தொடர்பான வீடியோவை பார்க்க :http://www.iqiyi.com/w_19rso054bp.html#vfrm=2-3-0-1
அதே போல கூகிள் கிளாசுக்கு போட்டியாக , ’பெய்டு ஐ’ எனும் அணி சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் காமிரா உண்டே தவிர டிஸ்பிளேக்கான திரை இல்லை.
எனினும் இந்த இரண்டும் எப்போது சந்தைக்கு வரக்கூடும் என்பது பற்றி பெய்டு எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு இவை மாதிரி தயாரிப்பு அளவிலேயே இருக்கின்றன.

———–

செல்பீ போனும்,செல்பீ பிரெஷும்

01brushஎதிர்பார்த்தபடியே மைக்ரோசாப்ட் லூமியா 830 உள்ளிட்ட புதிய ஸ்மார்ட்போன்களை பெர்லின் தொழிநுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியாவின் செல்போன் பிரிவை கைகப்படுத்திக்கொண்டுள்ள மைக்ரோசாபட்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரகங்களில் லூமியா 735 சுயபடம் என்று சொல்லப்படும் செல்பீகளுக்கு ஏற்றது என வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ற 5 மெகா பிக்சல் காமிரா மற்றும் வைடு ஆங்கில் தன்மை கொண்டுள்ளது. இந்த போனில் நவீன் பிளாஷ் உத்தியும் இருப்பதை பிபிசி இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது. அதாவது இந்த போனில் குறைந்த ஒளியில் படம் எடுக்கும் போது,பிளாஷ் ஒளியுடன் ஒரு படம், அடுத்த்தாக பிளாஷ் இல்லாமல் ஒரு படம் என இரண்டு படங்கள் எடுக்கப்பட்டு பின்னர் இரண்டும் தானாக இணைக்கப்பட்டு சிறந்த தோற்றம் கொண்ட படம் உருவாக்கப்படும். லூமியா டெனிம் எனும் சாப்ட்வேர் இதை சாத்தியமாக்குகிறது. மற்ற லூமியா போன்களிலும் இதே அப்டேட் செய்யப்படலாம்.
லூமியா 830 போன் 3 ஜி மற்றும் 4 ஜி வசதி கொண்டது. இந்தியாவில் அடுத்த மாதம் இது அறிமுகமாகலாம் என்றும் விலை 26,000 வாக்கில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
செல்பீ மோகத்தின் இன்னொரு வெளிப்பாடாக செல்பீ பிரெஷ் அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. அதென்ன செல்பீ பிரெஷ்? சுயபடம் எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும்? ஆனால் தலையை வார பிரெஷை தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான சுயபட தருணம் மிஸ் ஆகி விடலாம் அல்லவா? அது தான் , செல்பீ பிரெஷ் வந்திருக்கிறது. இதில் தலையை வாரிக்கொண்டு அப்படிசே செல்பீயும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த பிரெஷ் , ஐபோனுக்கான கேஸ் போன்றது. அதில் பிரெஷும் இணைந்திருக்கிறது. முன்பக்கத்தில் போனும் இருக்கிறது.எப்படி?
செல்பி பிரஷ் இணையதளம்: http://www.selfiebrush.com/


சாம்சங் முந்தியது!

பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் சாம்சங் மற்றும் மோட்டரோலா,சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள் மற்றும் மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்த்து. வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாக விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக் எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus ) தனது ஜென் வாட்ச் சாதனத்தை இங்கு அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.
சாம்சங், கலெக்ஸி நோட்4 ,காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதன்ங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்க் கூடிய புதுமையான டிஸ்பிலே கொண்டிருக்கிறது. கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் ரகத்தை சேர்ந்தது. சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவ்சல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவங்கள் இந்த பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளது.


ஸ்மார்ட் பேக் -ஸ்மார்ட் சார்ஜர்

ஸ்மார்ட்போன்களிலும் டேப்லெட்களிலும் புதுப்புது மாதிரிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. பலரும் லேப்டாப் உள்ளிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப சாதன்ங்களை வைத்திருக்கின்றனர். அப்படி இருக்க தொழில்நுட்ப சாதனங்களுக்கான சார்ஜர்கள் ஈடு கொடுக்கவிட்டால் எப்படி? அது தான் , அமெரிக்காவில் இருந்து போர்ஸ் ப்ரோ (Phorce Pro) ஸ்மார்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேக் , தொழில்நுட்ப சாதன்ங்களை சார்ஜ் செய்வதற்கான பேட்டரி கொண்டது. லேப்டாப் சார்ஜர், கேபில் மற்றும் கனெக்டர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாமாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள செயலி, எந்த அளவு சார்ஜ் மிச்சமுள்ளது என்பதையும் தெரிவிக்க கூடியது. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதன்ங்களின் சார்ஜ் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த பேகை எங்காவது மறந்து வைத்தாலும் இந்த செயலியே அது குறித்த எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வைக்கும். இந்த மாத இறுதியில் சந்தைக்கு வருகிறது. இந்த பேக்கை தேவைப்பட்டால் ப்ரீப்கேசாகவும் மாற்றிக்கொள்ளலாமாம். இணையதளம்: http://phorce.com/
இதே போலவே சாம்சங் நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று சாதன்ங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் கேபிளை அறிமுகம் செய்துள்ளது.

கீபோர்ட் புதிது
01logitech-bluetooth-multi-device-keyboard-k480
லாஜிடெக் நிறுவனம் புதிய கீபோர்டை பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்த்து. ஸ்மார்ட்போன்களுக்கும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் கீபோர்டா என நினைக்க வேண்டாம். இந்த கீபோர்ட் விஷேசமானது. இது பல சாதன்ங்களில் இயங்க கூடியது. அதாவது மல்டி டிவைஸ் (Multi-Device Keyboard K480 ) தன்மை கொண்டது. ப்ளுடூத் மூலம் இயங்கும் இந்த கீபோர்டை கொண்டு கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் என மூன்று சாதங்களிலும் டைப் செய்யலாம். அதிலும் ஒரே நேரத்தில். கீபோர்டில் உள்ள ஈஸி ஸ்விட்சை மாற்றினால் கீபோர்ட் இயங்கும் சாதனமும் மாறிவிடுகிறது. கீபோர்ட் கொண்டு ஸ்மார்ட் போனில் டைப் செய்வது தேவையானது தான் இல்லையா? கீபோட்ர்டுக்கான வீடியோ விளக்கம் : http://www.youtube.com/watch?v=MceLc7-w1lQ

அந்த நான்கு செயலிகள்

சில மாதங்களுக்கு முன்னர் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆயவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சராசரியாக மாதாந்தோறும் 22 முதல் 28 செயலிகளை (ஆப்ஸ்) பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தது. இப்போது காம்ஸ்கோர் நிறுவன தகவலின் படி வரைபட விளக்க இணையதளமான ஸ்டேடிஸ்டா (Statista ) வெளியிட்டுள்ள தகவல் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 75 சதவீத நேரம் தங்களுடைய நான்கு அபிமான செயலிகளை மட்டுமே பயன்படுத்துதாக தெரிவிக்கிறது. அதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி 42 சதவீத நேரத்தை எடுத்துக்கொள்கிறதான். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் நான்கு செயலிகளை வைத்து ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்!.

———

தமிழ் இந்துவுக்காக எழுதியது; நன்றி தமிழ் இந்து.

இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் !


இது தான் இணைய வரைபடம்

இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை குறிக்கின்றன. இணையத்துடன் இணைகக்ப்பட்ட சாதனங்களுக்கு எல்லாம் கோரிக்கை அனுப்பி தகவல் திரட்டி இந்த வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த வரைபடத்தை வருங்காலத்தில் அப்டேட் செய்யும் எண்ணமும் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேதர்லி சாதாரண நபர் இல்லை. ஷோடன் எனும் தேடியந்திரத்தை அவர் நடத்தி வருகிறார். உலகிலேயே திகிலூட்டும் தேசியந்திரம் என இது வர்ணிக்கப்படுகிறது. இணையம் மூலம் எவரும் தொடர்பு கொண்டு ஹேக் செய்து விடக்கூடிய வெப்கேம்களையும் , இதர சாதனங்களையும் தேடி அடையாளம் காட்டுகிறது இந்த தேடியந்திரம். ஆனால் இந்த சேவை தவறான பயன்பாட்டிற்கானது அல்லது, இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கானது என்கிறார் மேதர்லி.

மேதர்லியின் இணைய வரைபடம் ; https://imgur.com/aQUHzgu

ஷோடன் தேடியந்திரம்; http://www.shodanhq.com/

*****

அமிதாப்புக்கு 15 மில்லியன் லைக்ஸ்

பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு 71 வயதானாலும் கூட இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் இளைஞனுக்குரிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் பயனாக அமிதாப் பேஸ்புக்கில் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளார். ஆம் பேஸ்புக்கில் அவருக்கு 15 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளன. இது பற்றி அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதிக பேஸ்புக் லைக் பட்டியலில் இந்திய நட்சத்திரங்களில் சல்மான் கான் தான் முன்னிலையில் இருக்கிறார் ( 19,143,677 லைக்ஸ்). ஆனால் அமிதாப்பிற்கு டிவிட்டரில் பாலோயர்கள் அதிகம் ( 9.85 மில்லியன்).

*****

ஒரு பேராசிரியரின் பெருந்தன்மை

2-marybeardjpg_2857755b
பிரபலங்கள் துவங்கி சாதாரண இணையவாசிகள் வரை இணையத்தில் பலரும் சீண்டலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காவது தொடந்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சீண்டல்கள் சில நேரங்களில் எல்லை மீறிச்சென்று விடுதலால் அதற்கு இலக்கானவர்கள் மனம் வெதும்பி இணையத்தில் இருந்தே விலகிச்சென்றிருக்கின்றனர். சிலர், விஷமத்தனமாகவும் ,துவேஷமாகவும் கருத்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக பதிலடி கொடுக்க முறப்பட்டதும் உண்டு. ஆனால் கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் மேரி பியரட் தன் மீது ஆவேச தாக்குதல் நடத்திய வாலிபரை மன்னித்து அவர் மனதையும் மாற்ற வைத்திருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் ஆலிவர் ராலிங்ஸ் எனும் 20 வயது வாலிபர் ,பேராசிரியர் பியர்ட்டின் ஒரு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் மீது மோசமான தாக்குதலை தொடுத்திருந்தார். ’வயதான கிழமே வாயை மூடு முதலில் .. என கூறியிருந்தவர் அதன் பிறகு மிக மோசமான கருத்தையும் கூறியிருந்தார். இதனால் வெறுத்துப்போன பேரசிரியர் தனது டிவிட்டர் பக்கதில் இது பற்றி தெரிவித்திருந்தார். டிவிட்டரில் அவருக்கு 42,000 பாலோயர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த கருத்தை ரீடிவீட் செய்து வாலிபர் ராலிங்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு சிலர் ராலிங்க்ஸ் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தருகிறோம் அவன் அம்மாவிடம் இது பற்றி முறையிடுங்கள் என்றும் சொல்லியிருந்தனர்.
இணைய உலகமே ராலிங்கிஸிற்கு எதிராக பொங்கியது எனலாம். ஆனால் பேராசியரோ பின்னர் ரேடியோ பேட்டி ஒன்றில், அந்த வாலிபரை மன்னித்து விட்டதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் சந்தித்து , இது போல இனி செய்யக்கூடாது என அறிவுரை சொல்லவும் விரும்புவதாக தெரிவித்தார்.
சொன்னது போலவே ,பேராசிரியர் ராலிங்சை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ராலிங்க்ஸ் பேராசிரியரிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டதுடன் தொர்ந்து இமெயில் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நட்பாகி இருக்கின்றனர்.
அது மட்டும் அல்ல, பேராசிரியர் பியர்ட் அந்த வாலிபருக்கு வேலைவாய்ப்புக்கான பரிந்துரையும் செயதிருக்கிறார்.
எப்போது கூகிளில் ராலிங்க்ஸ் பற்றி தேடினாலும் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வந்து நின்று அவனது வேலைவாய்ப்பை பாதிக்க்கப்போகிறது. ஒரு நிமிட மடத்தனத்தால் அவனது வாழ்க்கை பாழாக வேண்டுமா? என்று பேராசிரியர் இது தொடர்பாக நியூயார்கர் பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

*****

விண்ணில் இருந்து ஒரு லைவ் பேட்டி!
2stronaut_3014794b
சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் பிரபலங்களுடனான கேள்வி பதில் பகுதி மிகவும் பிரபலமானது. அதாவது பிரபலங்கள் பேஸ்புக் வாயிலாக பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சில வாரங்களுக்கு முன் பெண் கல்வி போராளியான பாகிஸ்தான் இளம்பெற் மலாலா இதில் பங்கேற்றார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் முதல் முறையாக விண்ணில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஜெர்ஸ்ட் ( Alexander Gerst ) இதன் மூலம் விண்வெளியில் இருந்து கேள்விகள்க்கு பதில் அளித்தார்.
ஒவ்வொரு முறை விண்கள ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து பூமியை பார்க்கும் போது கண்ணில் நீர் வந்துவிடுகிறது என ஜெர்ஸ்ட் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூறினார். பூமியை மேலிருந்து பார்ப்பது அற்புதமான அனுபவம் என்று கூறியவர் , நான் நினைத்ததை விட அது மிகவும் சிறியதாக இருக்கிறது, ஒரே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது என்றும் கூறிருந்தார். விண்வெளியில் வேலை பார்க்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 12 மணீ நேரம் பணியாற்றுவதாகவும் ஒரு மணி நேரம் குடும்பத்துடன் பேசவும், மெயில் அனுப்பவும் கிடைப்பதாக அவர் கூறியிருந்தார். நவம்பரில் பூமிக்கு திரும்ப உள்ள ஜெர்ஸ்ட் விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் அற்புத அனுபவத்தை தான் மிஸ் செய்ய வேண்டிருக்கும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் மழையில் நனைவது , காட்டில் மரங்களுக்கு நடுவே சுற்றுவது போன்ற பூமி தரும் சுகங்களுக்கு ஈடில்லை என்றும் கூறியுள்ளார்.

*****

ஆண்ட்ராய்டுக்கு சீனா பதிலடி

இணையத்தை பொருத்தவரை சீனாவின் வழி தனி வழி தான். உலகமே தேடியந்திரம் என்றாலே கூகிள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் சீனாவில் பெய்டு தான் தேடியந்திர ராஜா. அதே போல குறும்பதிவு சேவையாட ட்விட்டருக்கு நிகரான சீனாவில் வெய்போ குறும்பதிவு சேவை செல்வாக்கு பெற்றிருக்கிறது. மின்வணிகத்தை பொருத்தவரை அலிபாபா தான் சீனத்து அமேசான். இப்போது சீனா , ஓப்பரேட்டிங் சிஸ்டத்திலும் தனக்கான தனி வழியை நாட முடிவு செய்திருக்கிறது.
இணைய உலகில் பிரபலமாக இருக்கும் மைரோசாப்டின் விஸ்டோஸ் மற்றும் மொபைல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்டராய்டுக்கு போட்டியாக உள்நாட்டில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய சீனா தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஆப்பரேடிங் சிஸ்டம் அறிமுகமாக இருக்கிறது. முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் அதன் பிறகு ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஓ.எஸ் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.
மார்ச் மாதம் இதற்கான சாப்ட்வேர் கூட்டு ஏற்படுததப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சுயசார்பு தணிக்கை சார்ந்த்தாகவும் இருக்கிறது. எனவே தான் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தனது இணைய சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. சாப்ட்வேர் மூலம் அமெரிக்கா உளவு பார்ப்பதாகவும் சீனா குற்றம்சாட்டுகிறது.
ஓ.எஸ் தொடர்பான் இன்னொரு செய்தி, மைரோசாப்ட் விண்டோசின் அடுத்த வடிவமான விண்டோஸ் 9.0 செப்டம்பர் 30 ந் தேதி அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தெர்ஷ்ஹோல்ட் எனும் கோட்நேம் கொண்ட இந்த வடிவில் விண்டோஸ் 8 ல் சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

*****

சுயபட சர்ச்சைக்கு சுவையான முடிவு
2macaca_nigra_selfie
சுயபடம் (selfie.) என்பது சுயம்புவான படமாகவே கருப்பட வேண்டும் என அமெரிக்க காப்புரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு சுயபட காப்புரிமை தொடர்பான சர்ச்சைக்கான தீர்ப்பாகவும் அமைந்துள்ளது. நிச்சயம் இந்த கருத்து புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டருக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கும். அவர் தான் இந்த சுயபட சர்ச்சையின் மையத்தில் இருப்பவர். இல்லை, இந்த சர்ச்சையின் மையமாக இருப்பது ஒரு குரங்கு எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என்னும் உரிமையை நிலை நாட்ட ஸ்லேட்டர் போராடி வருகிறார்.
குரங்கு எடுத்த படத்திற்காக ஸ்லேட்டர் எப்படி உரிமை கொண்டாடலாம் ? இந்த கேள்வி தான் சர்ச்சையின் சுவாரஸ்யமே.
விஷயம் இது தான். பிரிட்டனைச்சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞரான டேவிட் ஸ்லேட்டர் 2011ல் இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுகளில் அங்குள்ள மாகாவு (macaque ) ரக குரங்குகளை படமெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரது காமிராவை பறித்துக்கொண்டு சென்று அதை வைத்து கிளிக்கி தள்ளியது. இப்படி குரங்கு எடுத்த படங்களில் சுயபடமும் ஒன்று. அதாவது தன்னைத்தானே எடுத்துக்கொண்ட் புகைப்படம். குரங்கு காமிராவை பார்த்து சிரிப்பது போன்ற அந்த படம் பத்திரிகைகளில் வெளியாகி தலைப்புச்செய்தியானது.
அந்த படம் தான் ஸ்லேட்டருக்கு தலைவலியாகவும் மாறியது. அந்த புகைப்படத்தை ஆன்லைன் களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வாகிக்கும் விக்கிமீடியா தனது புகைப்படங்கள் பகுதியில் இடம்பெற வைத்தது. இங்குள்ள படங்கள் எல்லாமே காப்புரிமை இல்லாதவை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆனால் ஸ்லேட்டர், தனது காமிராவில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என கருதுகிறார். அந்த படத்தை எல்லோரும் பயன்படுத்த அனுமதிப்பதால் தனது வருமானம் பாதிப்பதாகவும் ஆகவே அந்த புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஸ்லேட்டர் விக்கிமீடியாவிடம் கோரிக்கை வைத்தார்.
விக்கிமீடியா இதை ஏற்க மறுத்துவிட்டது. குரங்கு எடுத்த சுயபடத்திற்கான காப்புரிமை ஸ்லேட்டருக்கு உரியது அல்ல எனவே படத்தை காப்புரிமை இல்லாததாகவே கருதுவோம் என கூறிவிட்டது.
விக்கிமீடியா டெக்னிக்கலாக பேசுகிறது, காமிரா விசையை அழுத்தியதை தவிர இதில் பல விஷயங்கள் இருக்கின்றன, இதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்லேட்டர் சொல்கிறார்.
காமிரா தன்னுடையது என்பதால் அதில் குரங்கு எடுத்த சுயபடமும் தனக்கு உரிமையானது என்பது அவரது வாதம்.
இந்நிலையில் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரங்கு எடுத்த சுயபடம் ,யானை வரைந்த ஓவியம் போன்றவை எல்லாம் காப்புரிமை பெற முடியாதவை என கூறியுள்ளது.
ஆக குரங்கு எடுத்த சுயபடம் யாருக்கும் சொந்தமில்லாதது!.

*****

துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்.

2lectroluxdesignlab_
கொரியாவை சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் ரோபோ மீன்கள் கொண்டு துணிகளை சுத்தமாக்கும் வஷிங் மிஷினை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். இந்த ரோபோ மீன்கள் துணியின் உள்ள அழுக்கை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும் என்பதால் சலவைத்தூள் இல்லாமலே துணி துவைத்து விடலாம் .
சான் யோப் ஜியோங் (Chan Yeop Jeong. ) எனும் அந்த வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ள வாஷிங் மெஷினின் பெயர் பெசிரா. இது பார்த்தற்கு வாஷிங்மெஷின் போல இல்லாமல் அழகிய மீன் தொட்டி போல இருக்கும். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் டோஃபி ( Dofi) எனும் குட்டி ரோபோ மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும்.
இந்த ரோபோ மீன்கள் தான் ,துணிகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ரோபோ மீன்களில் கண்கள் போல பொருத்தப்பட்டுள்ள காமிரா மூலம் துணிகளில் உள்ள அழுக்கை கண்டுபிடித்து செயல்படுகிறது.
மனிதர்கள் கால்களில் உள்ள அழுக்குகளை உணவாக கொண்டு தூய்மையாக்கும் டாக்டர் பிஷ் என்று சொல்லப்படும் காரா ருஃபா ( Garra rufa) மீன்களை அடிப்படையாக கொண்டு இந்த துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்களுக்கான எண்ணம் பிறந்ததாக வடிவமைப்பாளர் ஜியோங் சொல்கிறார்.
எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் நடத்திய புதுமையான வாஷிங் மிஷின் வடிவமைப்பு போட்டிக்காக இந்த ரோபோ மீன் ஐடியாவை அவர் சமர்பித்திருக்கிறார்.
இந்த முறையில் சலவைத்தூளும் தேவை கிடையாது என்கிறார் ஜியோங். ரோபோ மீன் துணிகளை சுத்தமாக்கி தருவதோடு தொட்டியில் உள்ள தண்ணீரையும் சுத்தமாகவே வைத்திருப்பதால் நீரை மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஆக இந்த எந்திரம் சுற்றுச்சூழலுக்கு நட்பானது என்கிறார். எலக்ட்ரோலக்ஸ் டிசைன்லேப் தளத்தில் இந்த ரோபோ மீன் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் அவை செயல்படும் விவரங்கள் வீடியோவுடன் இடம்பெற்றுள்ளன.
மீன் தொட்டி வடிவில் இருப்பதால் இதை வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இதில் துணி துவைக்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாமாம்.
இப்போதைக்கு சிறந்த வடிவமைப்பு கருத்தாக்கமாக மட்டுமே இது இருக்கிறது. இந்த ரோபோ மீன் துணி துவைக்க, அதாவது தயாரிப்புக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.
ரோபோ மீன் துணை துவைப்பதை பார்க்க: http://electroluxdesignlab.com/2014/development-blog/chan-yeop-jeong/
——

நன்றி; விகடன்.காம்

விண்வெளியில் இருந்து ஒரு சுயபடம் !

swanson-iss-instagram-cupola-2தன்னைத்தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொள்ளும் சுயபட (செல்ஃபீ) கலாச்சாரத்தை நீங்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி, ஸ்டீவ் ஸ்வான்சனின் சுயபடத்தை நிச்சயம் வியந்து பாராட்டுவீர்கள். ஏனெனில் இது வழக்கமான சுபபட அல்ல; சாதனை சுயபடம்!. ஆம், விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராம் செய்யப்பட்டுள்ள முதல் புகைப்படம் இது. அமெரிக்க விண்வெளிவீரரான ஸ்டீன் ஸ்வான்சன் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ( ஐ.எஸ்.எஸ்) சென்றிருக்கிறார். விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து தான் அவர் தன்னை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் புகைப்பட பகிர்வு சேவை மூலம் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 7 ந் தேதி வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட முதல் புகைப்படம் எனும் சிறப்பை பெற்றிருக்கிறது.

ஸ்டீவன்சன், விண்வெளி மையத்தில் மிதந்தபடி காட்சித்தரும் இந்த புகைப்படத்தை அவரே எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதாவது சுயபடமாக வெளியிட்டிருக்கிறார். ” ஐ.எஸ்.எஸ் -சுக்கு திரும்பி வந்திருக்கிறேன், இங்கு வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ எனும் புகைப்பட குறிப்பையும் அதனுடன் இணைத்திருக்கிறார். ஸ்வான்சன் புன்னகைத்துக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் விண்வெளி மையத்தில் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதனால் உற்சாகம் அளிக்கிறது.

இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை மிகவும் பிரபலமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நட்சத்திரங்கள் முதல் சாமான்யர்கள் வரை பலதரப்பினரும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் புகைபப்டங்கள் பகிரப்பட்டு பார்த்து ரசிக்கப்படுகின்றன. இருந்தாலும் கூட விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பது விஷேசமானது.
ஏற்கனவே விண்வெளியில் இருந்து டிவிட்டர் செய்தி பகிரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். நாசாவின் மைக் மாரிமொனோ (Mike Massimino ) எனும் விண்வெளி வீரர் கடந்த 2009 ம் ஆண்டு விண்வெளியில் இருந்து முதல் டிவிட்டர் செய்தியை வெளியிட்டார். அவரது டிவிட்டர் கணக்கு : @Astro_Mike

இப்போது ஸ்வான்சன் விண்வெளியில் இருந்து சமூக ஊடக உலகிற்கு அடுத்த பாய்ச்சலை இன்ஸ்டாகிராம் படம் மூலம் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சரவ்தேச வின்வெளி மையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கணக்கு மூலம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரும் ரஷ்யாவைசேர்ந்த சக விண்வெளி வீரரகள் இருவருமாக சேர்ந்து கடந்த ஜனவரியில் இன்ஸ்டாகிராம் கணக்கை துவக்கினர். விண்வெளி பயணத்திற்கு தயாராகும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வந்தனர். இப்போது வின்வெஇல் இருந்தே படம் வந்து விழுந்துள்ளது.
ஸ்வான்சன் மேலும் சில புகைப்படங்களையும் விண்ணில் இருந்து வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் இருந்து விண்வெளி புகைப்படங்களை எதிர்பார்க்கலாம். விண்வெளி வீர்ர்களின் புகைப்படத்தை பார்த்து ரசிப்பது விஞ்ஞான ஆர்வலர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியானது . அப்படி இருக்க வீரரகள் விண்வெளியில் இருக்கும் காட்சியை அங்கிருந்தே பார்க்க முடிவது நிச்சயம் வியப்பானது தான்.

விண்வெளி வீரர்களுக்கு இந்த இன்ஸ்டாகிராம் பழக்கம் தேவையா என்று கேட்க நினைக்கலாம். ஆனால் விண்வெளி ஆய்வு தொடர்பான தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விண்வெளி ஆய்வில் விருப்பத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தை பயன்படுத்தும் பரவலான முயற்சி
யின் ஒரு அங்கமாகவே இது அமைந்துள்ளது. சமூக ஊடகம் வாயிலாக மக்களுடன் விண்வெளி ஆய்வு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா தீவிரமாக உள்ளது. நம்முடைய இஸ்ரோ அமைப்பும் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது.

ஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடுள்ள புகைப்படம் இணையவாசிகள் மத்தியிலும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. 4000 பேருக்கு மேல் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். பலர் பின்னூட்டம வாயிலாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அதில் சிலர் தாங்களும் விண்வெளி வீரராக வேண்டும் எனும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்துவதே தானே இந்த முயற்சியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

ஸ்டீவ் ஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க: http://instagram.com/iss

————-

நன்றி; தமிழ் இந்து