Tag Archives: web

புத்தகம் படிக்க உதவும் செயலி

தளம் புதிது: ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க!

docuஇணையத்தில் ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது ரோக்கும்னடரிஸ் இணையதளம்.
இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவுவதாக கூறுகிறது.
பிபிசி. சேனல்4, நெட்பிளிக்ஸ் ,யூடியூப் மற்றும் விமியோ உள்ளிட்ட தளங்களில் இருந்து ஆவணப்படங்களை தேர்வு செய்து இந்த தளம் பட்டியலிடுகிறது. முகப்பு பக்கத்திலேயே இந்த பட்டியலை பார்க்கலாம். அவற்றில் தேவையானதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு பிரிட்டனில் உள்ள ஆவணப்படங்களை மட்டுமே பட்டியலிடுவதாகவும், விரைவில் உலகம் முழுவதும் உள்ள ஆவணப்படங்கள் பட்டியலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவற்றில் சிலவற்றை பார்ப்பதில் காப்புரிமை சிக்கல்கள் இருக்கலாம்.
ஆனால் யூடியூப் போன்ற தளங்களில் இருந்து தேர்வு செய்யப்படவற்றை எளிதாக பார்க்கலாம். எப்படி இருந்தாலும் புதிய ஆவணப்படங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கான சிறந்த தளமாக இருக்கிறது.
இமெயில் முகவரியை சமர்பித்து உள்பெட்டியிலும் புதிய ஆவணப்படங்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.

இணையதள முகவரி: http://rocumentaries.com/

செயலி புதிது: புத்தகம் படிக்க உதவும் செயலி

bookletஸ்மார்ட்போன் தலைமுறையினர் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று சொல்லப்படுவதை அடிக்கடி கேள்விபடுகிறோம். இந்த பிரச்சனைக்கு, ஸ்மார்ட்போன் மூலமே தீர்வு ஒன்றை முன்வைத்திருக்கிறார் ஸ்மார்ட்போன் தலைமுறை இளைஞரான அம்ருத் தேஷ்முக். இவரது தீர்வு புத்தகம் படிக்க உதவும் செயலி.
புக்லெட் எனும் இந்த செயலி மூலம் அவர் வாரம் ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை வழங்கி வருகிறார். முழு புத்தகத்தையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதன் சாரம்சத்தை புரிய வைக்கும் அளவுக்கு இந்த புத்தக சுருக்கம் அமைகிறது. அதே நேரத்தில் வெறும் விமர்சனமாக இல்லாமல், வாசிப்பு அனுபவத்தை வழங்க கூடியதாக இருக்கிறது.
பெஸ்ட் செல்லர் என சொல்லப்படும் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இருந்து ஒரு புத்தகத்தை தேர்வு செய்து வாசித்து அதன் சுருக்கத்தை அளிக்கிறார் அம்ருத். 20 நிமிடங்களில் படித்துவிடக்கூடியதாக இது அமைந்துள்ளது. பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. சுயசரிதை, சுயமுன்னேற்றம், நிர்வாகவியல் உள்ளிட்ட துறைகளில் புத்தகங்கள் அமைந்துள்ளன. எல்லாமே ஆங்கில புத்தகங்கள்.
வேலைபளு அல்லது சோம்பல் காரணமாக புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைந்துவிட்ட நிலையில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலியை அவர் உருவாக்கியுள்ளார்.
புத்தக சுருக்கத்தையும் படிக்க நேரமில்லை என்பவர்களுக்கான அவற்றை ஒலிப்புத்தகமாகவும் வழங்குகிறார்.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.booklet.app&hl=en

வீடியோ புதிது: போட்டோஷாப் பாடங்கள்

productphotofeat-800x420-300x200-c-defaultவீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட வீடியோக்களும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட சேனல்களும் இருக்கின்றன. ஆனால் இப்படி அமோக ஆதரவு பெற்ற சேனல்களை தான் கவனிக்க வேண்டும் என்றில்லை. அதிக உறுப்பினர்களின் ஆதரவு பெறாத சேனல்களிலும் கூட நல்ல வீடியோக்கள் இருக்கலாம்.
சமூக தளமான ரெட்டிட் பயனாளி ஒருவர் இத்தகைய வீடியோ சேனல் ஒன்றை அடையாளம் காட்டியுள்ளது. கிறிஸ்டினா கிரேமரின் கிரேசி போட்டோஷாப் வீடியோ டுடோரியல் எனும் அந்த சேனலில் மொத்தமே ஏழு வீடியோக்கள் தான் இருக்கின்றன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது,’
எனினும் அதில் உள்ள வீடியோக்கள் புகைப்படங்களை போட்டோஷாப் செய்வது தொடர்பாக அருமையான விளக்கங்களை கொண்டிருப்பதாக ரெட்டிட் பயனாளி கூறியிருக்கிறார்.
புகைப்படங்களை திருத்துவது தொடர்பான நுட்பங்களை தேடிக்கொண்டிருந்த போது இந்த சேனலில் உள்ள வீடியோக்களில் தனக்கான பதில் கிடைத்ததாக அந்த பயனாளி குறிப்பிட்டுள்ளதை பெட்டாபிக்சல் தளம் அடையாளம் காட்டியுள்ளது.

ரெட்டிட் பயனாளியின் பரிந்துரை சரிதானா என நீங்களே சோதித்துப்பார்த்துக்கொள்ளலாம்;https://www.youtube.com/channel/UCZIcebBcU81BWJLrNA3Yz3g

விஞ்ஞானிகளை கவர்ந்த பாப் டைலன்!

gettyimages-85061395அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான பாப் டைலன் இலக்கிய நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது உலக அளவில் ஆச்சர்யத்தையும், ஏற்படுத்தவே செய்தது. இருந்தாலும் இந்த விருக்து ஒரு இலக்கிய மேதைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது அபிப்ராயமாக இருக்கிறது.
மேலைநாட்டு இலக்கிய மேதைகளின் பெயர்களுக்கு பரிட்ய்சமான தமிழ் இலக்கிய உலகில் பாப் பாடகரான டைலனுக்கு இலக்கிய நோபல் எனும் செய்தி கொஞ்சம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
எனக்கு டைலனிடம் அதிக பரிட்சயம் இல்லை: இசையிலும் அத்தனை தேர்ச்சி இல்லை என்பதால், டைலனுக்கு இலக்கிய நோபல் வழங்கப்பட்டது சரியா? தவறா? என அலசி ஆராய முற்படப்போவதில்லை. டைலனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவரைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிவிட துடித்துக்கொண்டிருந்தேன். டைலனை அதிகம் அறியாத நிலையில், வெறும் கூகுள் தேடலில் அவரைப்பற்றி எழுத விரும்பவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக டைலன் பற்றி எழுது அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. டைலன் விஞ்ஞானிகளை பெரிதும் கவர்ந்திருக்கிறார் எனும் செய்தி தான் அது.
டைலனின் வரிகள் அமெரிக்க பாடல் பாரம்பரியத்தில் புதிய கவித்துவ வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்ற நோபல் குழுவின் பாராட்டு ஒரு புறம் இருக்க, அவரது வரிகள் விஞ்ஞானிகளால் அவரது ஆய்வுக்கட்டுரைகளில் விரும்பி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது எனும் தகவல் அவரது கவித்துவ தாக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
இதில் என்ன விஷேசம் என்றால், இந்த தகவல் கடந்த ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தான். பி.எம்.ஜே எனும் சஞ்சிகையில் வெளியான அந்த கட்டுரை, விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகளில் 727 முறை பாப் டைலன் பற்றிய மேற்கோள்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.
ஆக, டைலன் விஞ்ஞானிகளையும் கவர்ந்திருக்கிறார். இதற்கு அழகான உதாரணம் பார்ப்போமா? நைட்ரிக் அமிலம் பற்றிய கட்டுரை ஒன்றில், பதில் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது (“Nitric Oxide and Inflammation: The answer is blowing in the wind.” ) எனும் டைலனின் வரி பொருத்தமாக அமைந்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த ஜெர் ரிஜ்கர்ஸ் எனும் விஞ்ஞானி, நான் டைனலில் ரசிகன், அதனால் தான் அவரை மேற்கோள் காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
டைலனின் பாடல் வரிகள் சாகசம் நிறைந்ததாக, சித்தனையை தூண்டுவதாக இருப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிற்க, ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், தங்களில் யார் அதிக அளவில் டைலனின் வரிகளை மேற்கோள் காட்டுகிறோம் என பார்க்கலாம் என ஒரு போட்டி வைத்துக்கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
டைலனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பற்றி கருத்து கூறும் முன் டைலனை அறிந்து கொள்வது நல்லது.
விஞ்ஞான சமூகத்தில் டைலனின் தாக்கம் ஒரு புறம் இருக்க, விஞ்ஞான கட்டுரைகளில் அவரை விட தாக்கம் செலுத்திய பாடகர்கள் இல்லாமல் இல்லை: அவர்களின் பெயர் பீட்டில்ஸ்!

செய்தி இணைப்பு:https://www.newscientist.com/article/2109079-its-not-just-the-nobel-committee-scientists-love-bob-dylan-too/

பாப் டைலன் பற்றி அறிய:http://bobdylan.com/

 

இணையத்தில் உங்களுக்காக ஒரு அறை!

animation3_still_dhylzgஇணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக இருக்கும். அந்த அறைக்கு நீங்கள் நண்பர்களையும் அழைக்கலாம். அது மட்டும் அல்ல, இணையத்தில் உங்களுக்கென உருவாகி இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அந்த அறை இருக்கும்!.

இப்படி ஒரு அறை தேவை தான் என நீங்கள் நினைத்தால், மைவெப்ரூம் சேவை இதை சாத்தியமாக்குகிறது. இந்த இணைய கண்டறிதல் சேவை, வழக்கமான முறையில் இருந்து முற்றிலும் புதுமையான வழியில் உங்களுக்கு பிடித்தமான செய்திகளையும், வீடியோக்களையும், இணையதளங்களையும் அணுக வழி செய்கிறது. இந்த சேவையில் இருந்தே இணையத்தில் உலாவலாம். அப்போது எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் இந்த தளத்திலேயே சேமித்து வைக்கலாம். அதன் பிறகு எப்போது தேவையோ, அப்போது இவற்றை மீண்டும் அணுகலாம்.

இவை எல்லாவற்றையும், உங்களுக்காக என்று ஒரு இணைய அறையை உருவாக்கி கொள்வதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த அனுபவம் காட்சிரீதியாக அமைந்திருக்கும்.

இணைய அனுபவம் என்பது பெரும்பாலும் பட்டியல்களையும், டைம்லைனையும் கொண்டதாக தான் இருக்கிறது. செய்திகள், கட்டுரைகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் என உள்ளடக்கம் பலவிதமாக இருந்தாலும், அவற்றை அணுகுவது என்பது ஒரே மாதிரியான தட்டையான அனுபவமாக தானே இருக்கிறது. காட்சிரீதியான பலகையாக இருக்கும் பின்டிரெஸ்ட் மற்றும் ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் போன்ற விதிவிலக்குகள் தவிர இணையத்தில் காட்சிரீதியான அனுபவத்திற்கு அதிக வழி இல்லை.

இந்த குறையை போக்கும் வகையில் தான் மைவெப்ரூம் சேவை அறிமுகமாகி இருக்கிறது.

இந்த தளத்தில் பயனாளிகள் தங்களுக்காக என்று ஒரு இணைய அறையை உருவாக்கி கொள்ளலாம். நிஜ வாழ்க்கையில் பார்க்க கூடிய வீட்டு அறை போலவே அது அமைந்திருக்கும். அந்த அறையில், டிவி, மேஜை விளக்கு, சோபா, கம்ப்யூட்டர் … என எல்லா பொருட்களும் இருக்கும். இவை எல்லாம் வெறும் பொருட்கள் அல்ல- உங்கள் இணைய உடமைகளின் வடிவங்கள் இவை!.

ஆம், இணையத்தில் உலாவும் போது கண்டறியும் செய்திகளையும், இணையதளங்களையும், வீடியோக்களையும் இந்த பொருட்களுக்குள் சேமித்து வைக்கலாம். உதாரணத்திற்கு வீடியோ கோப்புகளை எல்லாம் டிவியில் போட்டு வைக்கலாம், வாசிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் புத்தக அலமாரியில் போட்டி வைக்கலாம். பதிவிறக்கம் செய்பவற்றை எல்லாம், கம்யூட்டருக்குள் போட்டு வைக்கலாம். பின்னர் தேவைப்படும் அவற்றுக்குறிய பொருட்களில் கிளிக் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆக, இந்த தளம் இணைய புக்மார்கிங் சேவை போன்றது. ஆனால், குறித்து வைக்கும் தளங்களை கோப்புகளாக அல்லாமல், நமக்கான இணைய அறையில் பொருட்கள் வடிவில் அணுகலாம்.
3029927-inline-i-1-webroom
எப்படி நமது வீடு அல்லது அலுவலக அறைக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை எல்லாம் பயன்படுத்துகிறோமோ அதே போலவே , மைவெப்ரூம் மூலம் இணைய சேவைகளையும், நமக்கான அறை மூலமே மேற்கொள்ளலாம். இந்த அனுபவம் உற்சாகம் தரக்கூடியதாகவும் இருக்கும். உதாரணத்திற்கு பொழுதுபோக்கு சங்கதிகளை எல்லாம் அறையில் உள்ள சோபாவில் இருந்து பயன்படுத்தலாம்.

இந்த சேவையை பயன்படுத்துவது எளிதானது. இமெயில் முகவரி அல்லது பேஸ்புக் அடையாளம் மூலம் பயனாளிகள் தங்களுக்கான அறையை உருவாக்கி கொள்ளலாம். ஆனால், அதன் பிறகு இந்த அறையின் வசதிகள் பழக கொஞ்சம் நேரம் பிடிக்கும். புதிய வீட்டுக்குள் நுழைந்தது போல பிரமிப்புக்கு நடுவே எந்த பொருட்கள், எந்த வசதிகள் எங்கே இருக்கின்றன என சற்று குழம்ப வைக்கும். ஆனால், கொஞ்சம் ஆர்வத்துடன் உலாவினால் சுவாரஸ்யத்தோடு அறை அளிக்கும் அனைத்து வசதிகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

அறையை உருவாக்கி கொண்டவுடன் அதில் பொருட்களில் ஒவ்வொன்றாக் கிளிக் செய்து, நமக்கான கோப்பை உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு, அந்த தலைப்பு தொடர்பான இணைய பக்கங்களை அணுகி நமக்கு பிடித்த பக்கங்களை சேமித்துக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு தலைப்பாக முன்னேறி நமக்கான அறையை அலங்கரிக்கச்செய்யலாம். அறையில் வடிவமைப்பையும் மாற்றிக்கொள்ளலாம். அதில் உள்ள பொருட்களையும் மாற்றிக்கொள்ளலாம்.

இணையத்தில் இருந்து தகவல்களை சேகரிக்க, இந்த தளம் பரிந்துரைக்கும் சேவைகள் தவிர நமக்கான புதிய இணையதளங்களையும் இணைத்துக்கொள்ளலாம். நமக்கான புதிய கோப்புகளையும் உருவாக்கி கொள்ளலாம். இணைய அறையை அலங்கரிக்கும் புதிய பொருட்களையும் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

பயனாளிகள் சேகரிக்கும் தகவல்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களை அறைக்கும் அழைக்கலாம். பேஸ்புக், டிவிட்டர் போலவே இந்த சேவையிலும் மற்ற பயனாளிகளை பின் தொடரலாம். நமது அறையையும் மற்றவர்கள் பின் தொடரலாம்.

ரஷ்யாவைச்சேர்ந்த ஆர்டெம் பெடாயே (Artem Fedyaev ) எனும் இளைஞர் தனது சகாவுடன் இணைந்து இந்த சேவையை உருவாக்கி இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே இந்த தளத்திற்கான யோசனையை முன்வைத்து முதலீட்டாளர்களை கவர்ந்து, படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவுக்கு குடியேறி மைவெப்ரூம் சேவையை துவக்கியிருக்கிறார். இணையத்தில் புதுமையான அனுபவத்தை நாடுபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திப்பார்க்கலாம்.

இணைய அறையை உருவாக்க:http://www.mywebroom.com/

பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி

தளம் புதிது: பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி
safeshare_logo

இணையத்தில் வீடியோக்களை பார்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில் யூடியூப் நன்கறியப்பட்டதாக இருக்கிறது. யூடியூப் தவிர விமியோ உள்ளிட்ட வீடியோ பகிர்வு சேவைகளும் இருக்கின்றன.
யூடியூப்பில் எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம் என்றாலும், இடையூறாக தோன்றும் விளம்பரங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். எனினும் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்க விரும்பினால் சேப்ஷேர்.டிவி இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது.
யூடியூப் வீடியோவுக்கான இணைப்பை இந்த தளத்தில் சமர்பித்தால் அதில் உள்ள விளம்பரங்களை நீக்கி வீட்டு, இடையூறு இல்லாமல் பார்க்க கூடிய வடிவில் மாற்றித்தருகிறது. இந்த இணைப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
விளம்பரங்களை நீக்குவதோடு, தொடர்புடைய வீடியோக்களையும் நீக்கி விடுவதால் சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த இணைப்புகளை நம்பி பரிந்துரைக்கலாம். நாம் தேர்வு செய்ய வீடியோவை மட்டும் அவர்கள் பார்க்க முடியும். அந்த வகையில் இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது. யூடியூப்பில் உள்ள பாதுகாப்பு வசதியை விட இது சிறந்த்து என்கிறது சேப்ஷேர் தளம். எனவே கல்வி சார்ந்த வீடியோக்களை பரிந்துரைக்க இந்த வசதி மிகவும் ஏற்றது. வீடியோவின் துவக்கம் மற்றும் முடிவையும் தீர்மானிக்கும் வசதி இருக்கிறது.
யூடியூப் வீடியோ மட்டும் அல்லாமல் விமியோ தளத்தில் உள்ள வீடியோக்களையும் இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.

இணைய முகவரி: http://safeshare.tv/

செயலி புதிது: உள்ளங்கையில் விக்கிபீடியா’

wikipedia-android
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவிலும் அணுகலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது, ஆண்ட்ராய்டு போன்களுக்கான விக்கிபீடியா செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவில் மாற்றி அமைக்கப்பட்ட முகப்பு பக்கம் மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
செயலியை திறந்ததும் தோன்றும் முகப்பு பக்கத்தில் தேடல் வசதி பிரதானமாக இருக்கிறது. இங்கிருந்தே வேண்டிய கட்டுரைகளை தேட்த்துவங்கலாம். குரல் வழி தேடலுக்கான வசதியும் இருக்கிறது.
தேடல் பகுதிக்கு கீழ், பிரபலமாக உள்ள கட்டுரைகள், செய்திகள் மற்றும் ஒளிபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. வாசிக்கும் கட்டுரைகளுக்கு தொடர்புடைய கட்டுரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
முகப்பு பக்கத்தை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் அதிகம் பயன்படுத்தாத அம்சங்களை விலக்கி விடலாம்.
வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரைகளை சேமித்து வைத்து பின்னர் படிக்கும் வசதியும் இருக்கிறது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் கூட சேமிக்கப்பட்ட கட்டுரையை வாசிக்கலாம்.
கட்டுரைகளின் மொழியையும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பின்னணி மற்றும் எழுத்துரு அளவிலும் மாற்றங்களை செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=org.wikipedia

==

வீடியோ புதிது: நலமாய் இருப்பதன் அறிகுறிகள்
2
வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். அப்படி பிரச்சனைகள் வரும் போது உடலும் உள்ளமும் சோர்ந்து போகலாம். ஆனால், வாட்டும் பிரச்சனைகளால் சோர்வுக்கு உள்ளாகி இருக்கும் போது அதிலிருந்து மீண்டு வர விரும்பினால், பவர் ஆப் பாசிடிவிட்டு உருவாக்கியுள்ள வீடியோவை பார்த்து ஊக்கம் பெறலாம்.
ஒருவரது சோர்வான மனநிலைக்கான காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக இருப்பதற்கான பத்து காரணங்களை இந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது.
சொந்தமாக குடியிருக்க விடு இருப்பது, குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைப்பது, அக்கறை கொள்ள யாரேனும் இருப்பது .. என நீளும் இந்த காரணங்களை யாராலும் மறுத்து சொல்ல முடியாது.
ஊக்கம் தருவதோடு, சிந்திக்கவும் வைக்கிறது இந்த வீடியோ.

வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=mQonlXk_FBM

பாஸ்வேர்டு குறிப்புகள்

இணைய உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்ட்களின் முக்கியத்துவதும் அதிகரித்திருக்கிறது. பாஸ்வேர்ட் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.
பலரும் வலுவான பாஸ்வேர்டு உருவாக்கி கொள்வதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இல்லை என்றாலும் கூட, இணைய சேவைகளில் உறுப்பினராக பதிவு செய்யும் போது, உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதாக இருக்கிறது, இன்னும் வலுவாக்கவும் எனும் குறிப்பை அடிக்கடி பார்க்க நேரிடலாம்.இதனால் குழப்பமும் உண்டாகலாம்.
வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி எனும் கேள்வி உங்களுக்கும் இருந்தால், அதற்கு சில எளிதான வழிகள் இருக்கின்றன. எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தாமல், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயன்படுத்தவும். பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் போன்றவற்றை இடையிடையே பயன்படுத்தவும். உருவ எழுத்துக்களையும் பயன்படுத்தலாம்.
உங்கள் பெயர், நிறுவன பெயர் , குடும்பத்தினர் பெயர் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும். அகராதியில் உள்ள வார்த்தைகளையும் விட்டுவிட வேண்டும். அதோடு ஓவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.
அதோடு வழக்கமாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்களின் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.

இமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்!

best-email-tricks-you-arent-using-canned-emailsபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலக தொடர்புக்கும் பெரும்பாலானோர் இமெயிலை பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. பலர் இமெயிலிலேயே மணிக்கணக்கில் நேரத்தை செலவிடும் நிலையும் இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக இமெயில்களை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், இமெயில் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில:

* உடனடி மெயில் வாசகங்கள்

இமெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ’கேன்ட் இமெயில்ஸ்’ (http://www.cannedemails.com/# ) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இமெயிலுக்காக தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கலாம். எப்படி என்றால், எப்போதெல்லாம் வழக்கமான பதில்களை இமெயிலில் அனுப்ப நேருகிறதோ அப்போது இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, இதில் உள்ள வாசகங்களை அப்படியே நகலெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இமெயில்களை அனுப்பும் போது மெயிலின் உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் கச்சிதமாக அமைந்திருக்க வேண்டும். எனவே இதற்காக நேரம் ஒதுக்கி தனி கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி செய்ய வேண்டும் என்றில்லை. சில நேரங்களில் மிகவும் சம்பிரதாயமான பதிலை அனுப்பினால் போதும். இன்னும் சில நேரங்களில் வழக்கமான வாசகங்களை டைப் செய்தால் போதும். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். இது போன்ற நேரங்களில் ஒரே விதமான மெயிலை மீண்டும் டைப் செய்வது நேரத்தை வீணாக்கும் என்பதோடு, அலுப்பாகவும் அமையும்.
இந்த பிரச்சனைக்கான அழகான தீர்வாக தான் கேன்ட் மெயில் அமைகிறது. வழக்கமாக எதிர்கொள்ளக்கூடிய தருணங்களுக்கான மெயில் வாசகங்கள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பிரச்சனைக்காக மன்னிப்பு கோருவது, சேவையை ரத்து செய்து பணம் திரும்ப கோருவது, முந்தைய மெயிலுக்கு நினைவூட்டல் அனுப்புவது, மன்னிக்கவும், விருப்பமில்லை என சொல்வது என வரிசையாக பல தருணங்களான ரெடிமேட் மெயில் வாசகங்களை இந்த தளத்தில் பார்க்கலாம். எது தேவை என தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லது ஒரு சில வார்த்தைகளை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் அமைந்திருப்பது மட்டுமே ஒரே குறை!
best-email-tricks-you-arent-using-thisemailxyz
* இமெயில் வடிவங்கள்

கேன்ட் மெயில் தளம் போலவே, ’காண்டாக்ட்வலி டெம்பிளேட்ஸ்’ (http://templates.contactually.com/ ) பொருத்தமான இமெயில் உள்ளட்டக்கத்தை தேர்வு செய்வதற்கான தளம் என்றாலும் அதைவிட மேம்பட்ட சேவை இது. சூழ்நிலைக்கு ஏற்ற மெயில்களை இதில் நாமாக உருவாக்கி கொள்ளலாம். இதற்கென சிறிய விண்ணப்ப படிவம் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இமெயில் அனுப்புவது யாருக்கு, அதன் நோக்க என்ன எனும் கேள்விகளுக்கான பதில்களை தேர்வு செய்தால் போதும் அதற்கேற்ற பொருத்தமான மெயில் மாதிரியை உருவாக்கித்தருகிறது.

* இணையதளமாகும் இமெயில்

உங்கள் இமெயிலை ஒரு இணையதள பக்கமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது திஸ் இமெயில் இணையதளம். ( http://www.thisemail.xyz/). உங்களுக்கு வரும் இமெயில்களில் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றும் போது, இந்த சேவை கைகொடுக்கும். மெயிலை பகிர்ந்து கொள்ள எளிய வழி அதை அப்படியே பார்வேர்டு செய்வது தானே என நினைக்கலாம். ஆனால் இப்படி செய்வதன் மூலம் உங்கள் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பலருக்கு அனுப்ப விரும்பினால் சிக்கல் தான். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் பகிர விரும்பும் மெயிலை இந்த தளத்திற்கு பார்வேர்டு செய்தால், அந்த மெயிலை ஒரு இணைய பக்கமாக மாற்றி, அதற்கென ஒரு இணைய முகவரியையும் உருவாக்கித்தருகிறது. இந்த இணைய முகவரியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் போதும். உறுப்பினராக பதிவு செய்து கொள்ளாமலேயே எளிதாக பயன்படுத்தக்கூடிய சேவை இது!


* இமெயில் பாதுகாப்பு!

பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள சேவைகளில் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் தேவை ஏற்படும் போது நேரடியாக முகவரியை டைப் செய்யாமல் ஸ்கிரிம் ( http://scr.im/) தளம் வழியே அதை செய்வது நல்லது. ஏனெனில் இணையத்தில் பொது வெளியில் பகிரப்படும் இமெயில் முகவரிகளை அறுவடை செய்வதற்கு என்றே விளம்பர நிறுவனங்கள் பாட்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. சமூக ஊடகங்களில் மெயில் முகவரிகளை வெளியிடும் போது இந்த பாட்கள் அவற்றை ஸ்கேன் செய்து சேகரிக்கின்றன. இதனால் ஸ்பேம் மெயில் தொல்லை அதிகமாகலாம். இதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஸ்கிரிம், இமெயில் முகவரியை பாட்கள் ஸ்கேன் செய்ய முடியாத வகையில் பாதுகாப்பாக மாற்றித்தருகிறது.

* இமெயில் சுருக்கம்

பை.சென்டன்சஸ் ( http://five.sentenc.es/) தளம் இமெயில் பயன்பாட்டில் நேரடியாக உதவக்கூடிய சேவை இல்லை. ஆனால் இமெயில் பயன்பாட்டில் நினைவு கொள்ள வேண்டிய முக்கியமான அறிவுரையை இந்த தளம் வழங்குகிறது. இமெயிலுக்கு என அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கும் வகையில், ஐந்து வரிகளில் எல்லா மெயில்களையும் முடித்துக்கொள்ள்வும் என்பது தான் அந்த ஆலோசனை.
இமெயிலை அனுப்பவும், பதில் அளிக்கவும் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பது பிரச்சனை என குறிப்பிடும் இந்த தளம் இதற்கான தீர்வு, குறுஞ்செய்திகள் போல இமெயில் பதில்களுக்கும் ஒரு வரம்பு தேவை என வலியுறுத்துகிறது. இதற்காக, எல்லா மெயில்களுக்கும் ஐந்து வரிகள் அல்லது அதற்கு குறைவாக பதில் அளிக்க வேண்டும் எனும் கொள்கையை கடைபிடிக்கவும் என்றும் வலியுறுத்துகிறது.
இமெயில் பயன்பாடு பற்றி யோசிக்க வைக்க கூடிய சுவாரஸ்யமான இணையதளம்!.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது!