Tag Archives: youtube

யூடியூபை கலக்கும் சாண்ட்விச் வீடியோ

sa1
யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ் நம்மூர் உணவான இட்லியோ தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார்.

இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படி தான் செயல்படுவார்! அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி!
இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய அவருக்கு தேவைப்பட்ட காலம் ஆறு மாதம். ஆன செலவு 1500 டாலர்கள்- நம்மூர் கணக்கு படி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.

என்ன நம்ப முடியவில்லையா? அவர் செய்திருப்பது ஒன்றும் சாதாரண சாண்ட்விச் இல்லை, சாதனை சாண்ட்விச்.
வழக்கமாக சாண்ட்விச்சை எப்படி தயார் செய்வோம்? கடையில் இருந்து பிரெட்,சீஸ் மற்றும் காய்கறிகள் வாங்கி வந்து வைத்துக்கொண்டு சாண்ட்விச் செய்வோம் இல்லையா? ஆனால் ஜார்ஜ் அப்படி செய்யவில்லை, சாண்ட்விச்சை முழுவதும் தானே சொந்தமாக செய்திருக்கிறார். அதாவது,சாண்ட்விச் செய்ய தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் தானே உற்பத்தி செய்திருக்கிறார். அதனால் தான் ஆறு மாத காலம் ஆகியிருக்கிறது.
சாண்டிவிச்சுக்கான பிரெட் செய்ய கோதுமையை விளைவித்து, சிக்கனுக்காக கோழி வளர்த்து,காய்கறிகள் பயிரிட்டு,தேன் அறுவடை செய்து,மாட்டிடம் இருந்து பால் கறந்து சீஸ் தயாரித்து அவற்றை எல்லாம் கொண்டு சொந்தமாக சாண்ட்விச் செய்திருக்கிறார். இவ்வளவு ஏன்? இதற்கு தேவையான உப்பை கூட அவர் கடையில் வாங்கவில்லை, கடலுக்கு சென்று தானே உப்பு தயார் செய்து வந்திருக்கிறார்.
sa2
இந்த சாண்ட்விச் பயணம் முழுவதையும் அவர் வீடியோவாக உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். பண்ணையில் இறங்கி கோதுமை பயிரிடுவது,தேனடையில் தேனெடுப்பது என ஒவ்வொரு காட்சியாக டைம்லேப்ஸ் அடிப்படையில் படம் பிடிக்கும் இந்த வீடியோ யூடியூப்பில் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ஹிட்டாகி இருக்கிறது.

அவசர யுகத்திற்கு ஏற்ப நிமிடங்களில் தயார் செய்துவிடக்கூடிய உடனடி உணவாக கருதப்படும் சாண்ட்விச்சை உருவாக்க அவர் பாடுபட்டிருக்கும் விதம் பலரை கவர்ந்திருக்கிறது. இந்த பயணத்தில் உப்பை தயார் செய்ய தான் படாதுபாடு பட்டதாக ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார். தான் வசிக்கும் இடத்தில் கடல் இல்லாத்தால் விமானத்தில் பறந்து சென்று பசுபிக் பெருங்கடலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து உப்பாக்கி இருக்கிறார். பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்த போது விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கி தவித்த கதையையும் வீடியோவில் விவரிக்கிறார்.
சாதாரணமாக செய்யக்கூடிய சாண்ட்விச்சிற்காக ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும் என நினைக்கலாம். ஜார்ஜின் நோக்கமும் இது தான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் பற்றி எந்த அளவுக்கு சிந்திக்காமல் இருக்கிறோம் என்று உணர்த்தவே இவ்வாறு செய்திருக்கிறார்.

அமெரிக்க வாலிபரான ஜார்ஜ் ஹவ் டூ மேக் எவ்ரிதிங் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் ஒவ்வொரு விஷ்யத்தையும் ஆரம்பம் முதல் அவர் செய்து காட்டி வருகிறார். ஆரம்பம் முதல் என்றால் அந்த பொருளை தயாரிக்க தேவையான ஒவ்வொன்றையும் எப்படி உருவாக்குவது என்று விவரிப்பது முதல் அனைத்து அம்சங்களும் அடங்கும். இந்த வரிசையில் தான் அவர் சாண்ட்விச்சை ஆரம்பம் முதல் செய்து காட்டியிருக்கிறார்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்கள் பற்றி எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறோம் என்று உணர்த்துவதே அவரது யூடியூப் சானலின் நோக்கமாக இருக்கிறது. இதை சாண்ட்விச் தயாரிக்க ஆறு மாத காலம் கஷ்டப்பட்டு அவர் உணர்த்தியிருக்கிறார்.

பொதுவாக நம்முடைய மேஜை மீது இருக்கும் உணவு எப்படி எல்லாம் நம்மை வந்தடைகிறது என்பது குறித்து நாம் அதிகம் அறிவதில்லை என்று சொல்லப்படுகிறது. அது எத்தனை உண்மை என ஜார்ஜ் யூடியூப் வீடியோ மூலம் உணர்த்தியிருக்கிறார்.
ஜார்ஜின் வீடியோவை பாருங்கள்; சாண்ட்விச்சை செய்ய மட்டும் அல்ல; வாழ்க்கையையும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம்.

ஆண்டி ஜார்ஜ் யூடியூ சேனல்:http://www.makeeverything.tv/

—–

சைபர்சிம்மன்

so

வியக்க வைக்கும் சூரிய மண்டல மாதிரி யூடியூப் வீடியோ

சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்தனை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அமெரிக்கா இயக்குனர்கள் வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ் உருவாக்கியுள்ள சூரிய மண்டல மாதிரியை நீங்கள் பார்க்க வேண்டும்.

இவர்கள் இருவரும் இணைந்து, சூரிய மண்டலத்தின் பரப்பிற்கு நிகரான அளவில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரியை உருவாக்கி இருக்கின்றனர்.இந்த மாதிரியும் சரி, இது உருவான விதத்தை விவரிக்கும் யூடியூப் வீடியோவும் வியக்க வைக்கிறது.

சூரிய மண்டலத்தில் பூமி உள்ளிட்ட கோள்களின் இருப்பிடத்தை உணர்த்தும் எண்ணற்ற படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை எல்லாமே உத்தேசமானவையே தவிய துல்லியமானவை அல்ல; அதாவது கோள்களின் அமைப்பையும் இருப்பிடத்தையும் அவை சித்தரிக்கின்றனவே தவிர, அவற்றுக்கு இடையே உள்ள தொலைவை உணர்த்துவதில்லை.

உதாரணமாக,இந்த படங்களில் பூமிக்கு மிக அருகில் அதன் நிலவான சந்திரன் சிறியதாக இடம் பெற்றிருக்கும். ஆனால், பூமிக்கும் ,சந்திரனுக்கும் இடையிலான உண்மையான தொலைவை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப அவற்றின் இடைவெளியை உணர்த்த முயன்றால் பூமியின் இடத்தில் இருந்து சந்திரனை வெகு தூரத்தை காண்பிக்க வேண்டும். இப்படி சூரியன் உள்ளிட்ட ஒவ்வொரு கோளையும் அவற்றின் அளவு மற்றும் அவற்றுக்கு இடையிலான தொலைவுக்கு ஏற்ப வரைபடத்தில் காண்பிக்க முற்பட்டால் ஒன்று அவை வரைபடத்தில் குறிப்பிட முடியாத அளவுக்கு மிகப்பெரியதாக ஆகிவிடும்;அல்லது கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு கடுகினும் சிறியதாகி விடும்.
s0-2
ஆக, பூமி உள்ளிட்ட கோள்களை அவற்றின் நிகரான அளவுக்கு ஏற்ற வகையில் சுருக்கி காண்பிக்க கூடிய வரைபடமே சூரிய மண்டலத்தின் சரியான மாதிரியாக இருக்கும். இத்தகைய மாதிரி இதுவரை உருவாக்கப்படவில்லை.

இந்த மாதிரியை தான் ,வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ் உருவாக்கி காட்டியுள்ளனர்.
சூரிய மண்டலத்தின் சரியான மாதிரியை பார்க்க வேண்டும் என்றால் அதை உருவாக்குவது தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டபடி வைலி ஓவர்ஸ்டிரீட் இந்த முயற்சியை தனது வீடியோவில் விவரிக்கிறார்.
இவர்கள் உருவாக்கிய மாதிரி காகித்ததில் இல்லை. அமெரிககாவின் நெவேடா பாலைவனப்பகுதியில் அமைந்துள்ளது. ஏனெனில் காகித்ததில் எல்லாம் சூரிய மண்டலத்தை குறிப்பால் தான் உண்ர்த்த முடியும். அந்த பிரம்மாண்டத்தை அப்படியே சுருக்கி,மனித கண்களுக்கு புரியும் வகையில் காட்ட வேண்டும் என்றால் 7 மைல் பரப்பிலான இடம் தேவை.

அதனால் தான் பாலைவனத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தில் நடுவே சூரியனை வைத்து, அதைச்சுற்றி ஒவ்வொரு கோளாக இடம்பெற வைத்துள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், இந்த மாதிரியில் சூரியனின் அளவு பெரிய பலூன் அளவில் இருக்கிறது என்றால் பூமியின் அளவு சின்ன கோலி குண்டு அளவில் தான் இருக்கிறது. வியாழன் கிரகம் ஒரு பெரிய அளவு தர்பூசனி போல இருக்கிறது.
so

so-3
கோள்களின் சுற்றுப்பாதையை வரைவதற்காக காரில் வட்டமிட்டு அதற்கான பாதையை உருவாக்கியுள்ளனர். இதற்காக காரின் பின்னே ஒரு கேனில் விளக்கு வெளிச்சத்தை கொண்டு படம் பிடித்திருக்கின்றனர். ( வீடியோவில் ,இரவு நேரத்தில் சூரிய மண்டலம் உருவாகும் காட்சி பிரமிக்க வைக்கிறது).

இந்த வீடியோ முழுவதையும் பார்க்கும் போது ஏழு மைல் பரப்பிலான இடத்தில் சுற்றுப்பாதைகளில் சூரியன்,பூமி,வியாழன், நெப்டியூன் ( புளோட்டோ இல்லை) கோள்களை பார்க்கும் போது கோலி குண்டு அளவிலான பூமி விண்வெளியில் பூமியின் இடம் எத்தனை சிறியது என சிந்திக்க வைக்கும்.
வீடியோவின் நடுவே இளைஞர் ஓவரிஸ்டிரீட் ஒவ்வொரு கோளாக பொருத்துக்கொண்டிருக்கும் போது, உலகம் என் பாக்கெட்டில் தான் எங்காவது இருக்க வேண்டும் என நகைச்சுவயாக குறிப்பிடுவது ரசிக்கும்படி இருக்கிறது.
இந்த வீடியோ பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=zR3Igc3Rhfg

———-

emford

இணைய விஷமிகளும் வீடியோ பதிலடியும்

இணையம் அற்புதமான அனுபவங்களை தரக்கூடிய அருமையான இடம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி இருப்பதில்லை. சில நேரங்களில் மனங்கொத்திப்பறவைகளாக மாறும் மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் இதயத்தை நொறுக்கிவிடக்கூடியதாக அமைந்துவிடுகின்றன. டிரால்கள் என சொல்லப்படும் இந்த இணைய விஷமிகள் தனியேவும் தாக்குதல் நடத்துவதுண்டு; குழுவாக சேர்ந்துக்கொண்டு கூட்டுத்தாக்குதல் நடத்துவதும் உண்டு. எப்படி இருந்தாலும் தாக்குதலுக்கு இலக்காகும் அப்பாவிகளுக்கு இதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல்களும் பாதிப்புகளும் எல்லையில்லாதது. இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்துள்ளனர். சிலர் இணையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இணையத்தின் இருண்ட பக்கத்திற்கான இந்த கசப்பான உதாரணங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

லண்டனைச்சேர்ந்த இளம் பெண்ணான எம் ஃபோர்ட் அன்மையில் இந்த வகையான கசப்பான அனுபவத்திற்கு இலக்கான போது இணைய விஷமிகளுக்கு பதிலடி தரும் வகையில் வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவேற்றினார். சபாஷ் சரியான பதிலடி என பாராட்டப்படும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி 60 லட்சம் முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக அந்த வீடியோ இணைய தாக்குதலுக்கு இலக்காக கூடிய எவருக்கும் நம்பிக்கையையும் துணிச்சலையும் தரக்கூடியதாக இருக்கிறது.

எம் போர்ட் பற்றி முதலில் ஒரு சிறு குறிப்பு. மாடலிங் துறையில் இருந்துள்ள அவர் 20 வயதிலேயே அதிலிருந்து ஓய்வு (!) பெற்று திரைப்பட உருவாக்கத்தின் பக்கம் வந்தவர். தன்னை இயல்பான கதை சொல்லி என குறிப்பிடும் இவர் 2014 க்கு பிறகு வீடியோ வலைப்பதிவாளராகி யூடியூப் நட்சத்திரமாக பிரபலமானார். மை பேல் ஸ்கின் எனும் அந்த வலைப்பதிவு மூலம் அவர் அழகு கலை குறிப்புகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் போர்ட் மேக்கப் இல்லாத தோற்றத்தில் தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றினார். முகப்பருக்களுடன் தோன்றும் அந்த புகைப்படத்தில் இயல்பாக காட்சி தருவதற்காக அவர் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இணைய வெளியில் வறுத்தெடுக்கப்பட்டார். மேக்கப் இல்லாத கோலத்திற்காகவும் ,முகப்பரு தோற்றத்திற்காகவும் அவர் கடுமையாக வசைபாடப்பட்டார். இவரது முகத்தை நேராக பார்க்க கூட முடியவில்லை, இவர் முகத்தை கழுவவே மாட்டாரா? என்பது போல மிக மோசமான வகையில் கருத்துக்கள் அமைந்திருந்தன. இது போல ஆயிரக்கணக்கில் கருத்துக்கள் குவிந்தன. இந்த கருத்துக்களை படிக்க கூட வேண்டாம், பார்த்தாலே மனதை வலிக்கச்செய்யும் வகையில் இருந்தன.

இவற்றை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்த போர்ட் எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளாகியிருப்பார் என புரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் கண்ணீர் வீட்டு கதறவில்லை; ஆவேசமாக பதில் தாக்குதல் நடத்தவில்லை. இந்த வேதனையை மற்றவர்களுக்கும் குறிப்பாக , வசைபாடியவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ படத்தை உருவாக்கினார். முகப்பரு கோலத்துடன் அவர் காட்சி அளிக்கும் அந்த வீடியோவில், அதைப்பார்த்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வரிசையாக வாசகங்களாக இடம்பெற்றன. அந்த கருத்துக்களால் ஏற்படக்கூடிய வலியை அவரது முகபாவனைகள் உணர்த்தின. அதன் பிறகு அவர் மேக்கப் சாதானங்கள் மூலம அழகு செய்து கொண்டார். அப்போது அவரது அழகை பாராட்டும் வகையிலான கருத்துக்கள் திரையில் தோன்றின. ஆனால் அதன் பிறகு எல்லாவற்றுக்கும் மேக்கப் தான் காரணம், அழகில்லாத தோற்றத்தை மறைக்கிறார் என்பது போல மோசமான கருத்துக்கள் தோன்றின. அப்போது அவரது முகத்தில் கண்ணீர் வழிகிறது. இதை பார்க்கும் போது பார்வையாளர்கள் நெஞ்சமும் உலுக்கப்படுகிறது.

இறுதிக்காட்சியில் அவர் கண்களை துடைத்துக்கொள்கிறார். அப்போது ,நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனும் வாசகம் திரையில் தோன்றுகிறது. உங்கள் அழகை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள் எனும் ஊக்கமான வரிகளுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
சமூக ஊடகங்கள் உண்டாகும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பின் பாதிப்பு பற்றி உணர்த்துவதற்காக இந்த வீடியோவை உருவாக்கியதால் போர்ட் கூறியிருக்கிறார்.
நீங்கள் அருவறுப்பாக இருக்கிறீர்கள் (YOULOOKDISGUSTING ) எனும் தலைப்பிலான வீடியோ மூலம் அவர் மற்றவர்கள் தோற்றத்தை விமர்சிப்பவர்களுக்கு எல்லாம் அழகாக பதிலடி கொடுத்திருப்பதாக பாராட்டப்படுகிறார்.

எம் போர்ட் உருவாக்கிய வீடியோ: http://mypaleskin.blogspot.com.au/2015/07/you-look-disgusting.html#.VZt_7bV6fCP

silicon
தளம் புதிது; சிலிக்கான் அகராதி

இணைய அகராதிகளுக்கு குறைவில்லை. ஆங்கில அகராதிகளும் அநேகம் இருக்கின்றன. தமிழ் அகராதிகளும் இருக்கின்றன. இப்போது புதிதாக ஒரு இணைய அகராதி உருவாகி இருக்கிறது- சிலிக்கான் வேலி டிக்‌ஷனரி!
சிலிக்கான் வேலி எல்லோருக்கும் தெரியும். தொழில்நுட்ப நிறுவனங்களின் இருப்பிடம் இது. சிலிக்கான் வேலிக்கு என்று பிரத்யேக கலாச்சாரம் உண்டு. அதற்கென தனி மொழி பிரயோகங்களும் உண்டு. இப்படி சிலிக்கான் வேலியில் புழங்கும் வார்த்தைகளுக்கும் , பதங்களுக்கும் பொருள் சொல்லும் அகராதியாக இந்த தளம் விளங்குகிறது. அப்படியே அகராதி நோக்கிலான விளக்கம் என்று சொல்வதற்கில்லை. கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்து சற்றே விமர்சன ரகமாக இவை அமைந்துள்ளன. ஆனால், ரசிக்கும்படி இருக்கிறது.

இணையதள முகவரி: http://svdictionary.com/செயலி புதிது; அலர வைக்கும் அலாரம்

ஸ்மார்ட்போனுக்குள் இருந்தபடி துயிலெழுப்ப உதவும் அலாரம் செயலிகள் தான் எத்தனை வகை. இப்போது அலார்மி எனும் புதியதொரு அலாரம் செயலியும் சேர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகவும் எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும் செயலி என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெழுப்பும் நேரத்திற்கு சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றது தான். ஆனால் இது ஒலிக்கத்துவங்கிய பின் இதை சாதாரணமாக நிறுத்திவிட முடியாது. போனில் ஒரு புகைப்பட்த்தை எழுத்து பதிவேற்றிய பிறகு தான் இது மெளனமாகும். அதுவும் எப்படி தெரியுமா? அலாரமை அமைக்கும் போது நீங்கள் தேர்வு செய்து புகைப்படமாக சமர்பித்த இடத்திற்கு சென்று படமெடுத்தால் தான் இதை நிறுத்த முடியும். அது வரை கத்திக்கொண்டே இருக்கும்- அதனால் அதான் எரிச்சலூட்டும் செயலி என்கிறது. பொறுப்பாக அலாரம் வைத்துவிட்டு அதைவிட பொறுப்பாக அதை அனைத்து விட்டு தூங்கி விடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=droom.sleepIfUCan&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImRyb29tLnNsZWVwSWZVQ2FuIl0.

யூடியூப் ரகசியம்

டிவியையே கூட கம்ப்யூட்டர் மானிட்டராக மாற்றிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆனால் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு பழக்கப்பட்டவர்களுக்கு டிவி திரையில் மெனுவை பார்த்து பயன்படுத்துவது சிக்கலாக இருக்கலாம். ஆனால் டிவி திரையில் யூடியூப் வீட்டியோக்களை பார்க்க விரும்பினால் இந்த பிரச்சனைக்கு சுலபமான தீர்வு இருக்கிறது. https://www.youtube.com/tv#/browse-sets?c=FEwhat_to_watch எனும் முகவரிக்கு சென்று டிவிக்கு பொருத்தமான இடைமுகத்தை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

கேட்ஜெட் புதிது; கம்ப்யூட்டர் ஸ்டிக்
சிப் தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் இண்டெல் நிறுவனம் தனது பிசி ஆன் எ ஸ்டிக் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெண்டிரைவ் போல இருக்கும் இந்த சாதனத்தை டிவி திரை அல்லது மானிட்டருடன் இணைத்து கம்ப்யூட்டர் போல பயன்படுத்திக்கொள்ளலாம். சேமித்திறன், வை-பை வசதி என எல்லாமும் இருக்கிறது. லேப்டாப் போல எங்கும் பயன்படுத்தலாம், ஆனால் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்று விடலாம். மின் வணிக தளம் மூலம் வாங்கலாம் என இண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது. +

as

விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்! ஒரு இணைய அஞ்சலி

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித்த அவர் இணையம் மூலம் பலருக்கு அறிமுகமாகி, வீடில்லாத நட்சத்திரமாக புகழ்பெற்று மறைந்திருக்கிறார்.

கென்னி தாம்ஸ் நிக்கோலஸ் என்பது அவரது பெயர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையால் அவர் வீடில்லாதவராக வீதியில் வசிக்கும் நிலைக்கு ஆளானார். எத்தனையோ வீடில்லாதவர்கள் போலவே அவரும் கவனிக்கப்படாத மனிதராகவே இருந்திருந்தால் இன்று அவரது மரணத்தை யாரேனும் அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.

ஆனால் ஒரு வைரல் வீடியோ அவரை இணையம் முழுவதும் அறிந்தவராக்கியது. யூடியூப் வீடியோ கலைஞரான ஜோஷ் லின் என்பவர் தான் அவரை வீடியோ மூலம் புகழ்பெற வைத்தது.
ஜோஷுக்கு கூட அவரை பிரபமானவராக்க வேண்டும் என்ற நோக்கமில்லை. உண்மையில் வீடில்லாதவரான நிக்கோலசை சோதித்து பார்க்கும் வகையில் தான் அவர் அந்த வீடியோவை பதிவு செய்தார். வீடில்லாதவரிடன் 100 டாலரிடம் கொடுத்தால் அவர் என்ன செய்வார் என்று அறிவது தான் அந்த சோதனை.

கையில் கிடைத்த 100 டாலரை அவரைப்போன்ற வீடில்லாத மனிதர்கள் குடித்தே வீணடிப்பார்கள் என ஜோஷ் நினைத்தற்கு மாறாக நிக்கோலஸ் அந்த பணத்தில்
ரொட்டிகளாக வாங்கி பூங்காவில் வசித்த தன்னைப்போன்ற வீடில்லாதவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது இந்த நேர்மையான செயல் ஜோஷ் பதிவேற்றிய வீடியோ மூலம் வெளிப்பட்ட போது லட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு வைரலாக பரவி அவரை இணைய நட்சத்திரமாக்கியது. அதன் பிறகு நிக்கோலஸுக்கு நிதி திரட்டும் முயற்சியிலும் ஜோஷ் ஈடுபட்டார்.பலர் அவருக்காக அள்ளிக்கொடுத்தனர்.
வீடில்லாதவர்கள் பற்றிய பொது பிம்பத்தை மாற்றிக்காட்டிய பெரியவர் நிக்கோலஸ் அன்மையில் இறந்துவிட்டார். லாஸ் எஞ்சலஸ் பகுதியில் அவரது சடலம் கிடந்திருக்கிறது. மதுப்பழக்க பாதிப்பால் அவர் இயற்கையான முறையில் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை தான் வீடில்லாத நட்சத்திரம் மறைந்தார், இணைய புகழ் வீடியோவில் தோன்றியவர் விடை பெற்றார், என்றெல்லாம் நாளிதழ்களும் இணையதளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் அந்த வீடியோ தான் காரணம். அந்த வீடியோ வைரலாக பரவ அவரது நேர்மை தான் காரணம்.

ஆனால் , அந்த வீடியோவே செட் அப் செய்து எடுக்கப்பட்டது என்பது போல ஒரு புகாரும் கூறப்படுகிறது. இதை வீடியோ கலைஞரான ஜோஷ் மறுத்துள்ளார். நிக்கோலஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜோஷ் அவரது நினைவாக இன்னொரு வீடியோவை எடுத்து வெளியிட இருப்பதாகவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ஜோஷ் மீதான புகாரால் பெரியவர் நிக்கோலஸ் நேர்மையை சந்திக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இதற்கு விளக்கம் அளிக்க அவர் உயிருடன் இல்லாத நிலையில் அவரது நேர்மையை களங்கபடுத்தாமல் இருப்பதே சிறந்தது.
இணையப்புகழுக்கான நெகிழ்ச்சியான உதாரணமாக விளங்கிய நிக்கோலஸ் யாருமறியதவராக மறையாமல் இணைய நட்சத்திரமாக உதிர்ந்திருக்கிறார்.

நிக்கோலஸ் புகழ் பெற்ற அந்த வீடியோ நிகழ்வு பற்றி முன்னதாக விகடன்.காமில் எழுதிய பதிவு கிழே;

அமெரிக்கர்களில் பலர் தங்களுக்கு இதைவிட அருமையான கிறிஸ்துமஸ் அமைந்திருக்க முடியாது என மகிழ்ந்தும் நெகிழந்தும் போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு அல்ல; மாறாக ஒரு நல்ல மனிதருக்கு பரிசளித்து அவருக்கு மிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தை அளிக்க முடிந்ததுதான்.

இந்த வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த இணையம், வீடில்லாத மனிதர் ஒருவருக்கு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் டாலர்களை அள்ளிக்கொடுத்து, ஒரு லட்சத்திற்கும் மேல் நன்கொடையை குவிய வைத்திருக்கிறது.

விதிவசத்தால் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவருக்காக பலரும் உருகி தவித்து, உதவி செய்திருக்கும் இந்த நிகழ்வுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் காரணம் என்பது ஆச்சர்யமான விஷயம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த வீடியோ நையாண்டி நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்பதுதான்.

வீடில்லாத ஒருவரை பொறியில் சிக்க வைக்க எடுக்கப்பட்ட அந்த வீடியோ, அதை எடுத்தவருக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் சேர்த்தே மனிதநேய பாடத்தை புகட்டியிருக்கிறது.அதனால் தான் வீடியோ 2 கோடி முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

மனதை நெகிழ வைக்கும் அந்த ஆச்சர்யமான கதையை பார்ப்போம்;

அமெரிக்கா இளைஞரான ஜோஷ் பேலர் லின் (Josh Paler Lin ) யூடியூப் உலகில் வெகு பிரபலம். ஜோஷ் குறும்பும் நையாண்டியும் கலந்த வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு, யூடியூப் உலகில் தனக்கென ரசிகர்களை தேடிக்கொண்டிருப்பவர். நிஜ வாழ்க்கையில் நண்பர்களிடம், அவர்கள் அறியாமல் குறும்பு செய்து திகைப்பில் ஆழ்த்தி ரசிக்க வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டல்லவா? அத்தகைய குறும்புக்காரர் தான் ஜோஷ். அவரது வேலையே இப்படி ஏதேனும் குறும்பு செய்து அதில் சிக்குபவர்களை வீடியோவில் படம் பிடித்து தன்னுடையை யூடியூப் சேனலில் வெளியிடுவதுதான். இதற்காக என்றே பிரத்யேகமாக யோசித்து புத்துப்புது குறும்புகளாக உருவாக்கி இருக்கிறார்.

இப்படிதான் கடந்த வாரம் அவர் , வீதிகளில் வசிக்கும் வீடில்லாத மனிதர் ஒருவரை சோதித்துப்பார்க்க தீர்மானித்தார்.

வீடில்லாத மனிதர் ஒருவரிடம் 100 டாலரை கொடுத்து அவர் என்ன செய்கிறார் என ரகசியமாக படம் பிடித்து வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கண்ணில் பட்ட வீடில்லாத மனிதர் ஒருவரை தேர்வு செய்தார். அவர் யார் என்றும் தெரியாது. அவரது பெயரும் தெரியாது. அவரிடம் ஜோஷ் 100 டாலர்களை கொடுத்தார். வீடில்லாத மனிதருக்கு முதலில் ஆச்சர்யம். 100 டாலர்களை திகைப்புடன் வாங்கியவர், பின்னர் அது மிக அதிகம் என திருப்பிக்கொடுக்க முயன்றார். ஜோஷ் உங்களுக்குதான் பணம் என்று வலியுறுத்துக்கொடுத்தார்.

வீடில்லாத மனிதர் பணத்தை வாங்கி கொண்டு விடைபெற்று சென்றார். ஜோஷ் சிறுது இடைவெளி விட்டு அவரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். எதிர்பாராமல் 100 டாலர் கையில் கிடைத்ததும் வீடில்லாத மனிதர் என்ன செய்கிறார் என அவர் படம் பிடித்துக்காட்ட விரும்பியிருந்தார். வீடில்லாத மனிதர் கொஞ்ச தூரம் நடந்து மதுக்கடை ஒன்றுக்கு சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.

இது வரை ஜோஷ் மனதில் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதை படி எல்லாம் நடந்தது, ஆனால் இதன் பிறகு அந்த வீடில்லாத மனிதர் செய்தது தான் ஜோஷ் கொஞ்சமும் எதிர்பாரதது. அந்த மனிதர் அருகே இருந்த பூங்காவுக்கு சென்று, அங்கே இருந்த தன்னைப்போன்ற வீடில்லாத மனிதர்களுக்கு தான் வாங்கி வைத்திருந்த உணவு பொருட்களை விநியோகிக்க துவங்கினார்.( மதுக்கடையில் அவர் உணவு பொருட்களைதான் வாங்கி வந்திருக்கிறார்) .

இந்த காட்சியை பார்த்ததும் ஜோஷ் வியந்து போனார். வீடில்லாதவர் கையில் கிடைத்த பணத்தை குடித்து மகிழ்வார் என நினைத்தற்காக தன்னை தானே நொந்துகொண்டார்.

உடனே அந்த மனிதரிடம் சென்று தான் அவரைப்பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது செயலை படம் பிடிக்க திட்டமிட்டிருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

அப்போது அந்த மனிதர், “பணத்தை வாங்கி நான் குடித்து மகிழ்வேன் என நினைத்தீர்களா? பணத்தால் வாங்க முடியாத பல இருக்கின்றன, நான் செய்யும் செயல்கள் மூலம் மகிழ்ச்சியை பெற முயற்சிக்கிறேன் “ என்று பதில் சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நெகிழந்து போன ஜோஷ் அவரது பின்னணியை கேட்டிருக்கிறார்.

தாமஸ் எனும் பெயர் கொண்ட அந்த மனிதர் , நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது பெற்றோர்களை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் பிறகு பெற்றோர்கள் இறந்துவிட , பார்த்து கொண்டிருந்த வேலை, இருந்த வீடு இரண்டும் போய் வீதிக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

ஜோஷ் அவரிடம் மீண்டும் 100 டாலர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு , தனது போன் நம்பரையும் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் இந்த முழு சம்வத்தையும் வீடியோவாக தனது சேனலில் பகிர்ந்து கொண்டார்.

“இது போன்ற ஒரு காட்சியை நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடில்லாதவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இத்தகைய ஒரு அருமையான காட்சியை படம் பிடிக்க முடிந்தது எனக்கு மகிச்சியை தருகிறது . இந்த சேனலின் வரலாற்றில் இதுதான் அற்புதமான தருணம். ஒரு வீடில்லாதவருக்கு நான் உதவ முடிந்ததுடன் ,ஒரு மகத்தான் மனிதர் மற்றும் நண்பரையும் சந்தித்துள்ளேன்” எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.

வீடில்லாமல் வசிக்கும் எல்லோரும் சோம்பேறிகள் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட்டு விடக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த எல்லோருமே வீடில்லாத மனிதர் தாமசின் கருணையால் நெகிழ்ந்து போயினர். தன்னிடம் காசு இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்த பணத்தை தன்னைப்போன்றவர்களுக்கு கொடுத்து மகிழந்த அவரது செயல் எல்லோரையும் உருக வைத்தது. அடுத்த சில நாட்களில் அந்த வீடியோ வைரலாக பரவியது. நான்கு நாட்களுக்குள் அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிமான முறை பார்க்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்’.

இதனிடையே ஜோஷ் அந்த மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவருக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இணையம் மூலம் நிதி திரட்டுவதற்கான இண்டிகோ கோ இணையதளத்தில் தாம்சுக்காக ஒரு பக்கத்தை துவக்க, அவருக்கு நிதி அளிக்க கோரிக்கை வைத்தார்.

தாமஸ் புது வாழ்வு துவங்க கைகொடுங்கள் எனும் கோரிக்கையோடு , இந்த வீடியோவையும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிட்டு நிதி உதவி கேட்டிருந்தார்.

தன்னிடம் எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய தாமசுக்கு உதவுவோம் என அவர் குறிப்பிட்டிருந்ததை இணையவாசிகள் பலரும் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். விளைவு.. வீடியோ நான்கு நாளில் ஹிட்டானது போல் நான்கே நாட்களில் தாமசுக்கு உதவுதற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்திருக்கிறது. இன்னும் குவிகிறது.

நிதி அளித்த பலரும் இந்த பக்கத்தில் தாமஸ் பற்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்,
தாமசுக்கு பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அவருக்கு உதவுதன் மூலம், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் சிறப்புமிக்கதாக மாறியதாகவும் தெரிவித்திருந்தனர்.

” உங்கள் செயலால் அசந்து போனேன். உங்களைப்போல் மேலும் பலருக்கு கொடுக்கும் தன்மை வர வேண்டும். கிறிஸ்துமசின் உண்மையான அர்த்த்தை இது புரிய வைத்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏறக்குறைய எல்லோரும் அதை கருத்தைதான் கொண்டிருந்தனர். கூடவே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

நெகிழ வைத்த அந்த வீடியோ;https://www.youtube.com/user/JoshPalerLin

தாமசுக்காக உருவாக்கப்பட்ட இணைய பக்கம்: https://www.indiegogo.com/projects/help-thomas-to-get-a-fresh-start

waterfall-lawson_3290888b

யூடியூப் காவிய வீடியோவும், வால்பேப்பர் செயலியும்

யூடியூப்பில் ஒரு காவிய வீடியோ

யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகிப்பரவி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும்
காணொலி கலைஞரான ஜானி லாசனின் நீர்விழ்ச்சி விடியோ அவற்றில் தனித்து நிற்கிறது.
இந்த வீடியோ இதுவரை 60 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. யூடியூப் அளவுகோள்படி பார்த்தால் இது பெரிய எண்ணிக்கை இல்லை தான். ஆனால் இந்த வீடியோவின் தனிச்சிறப்பு அதன் நீளம் மற்றும் அது உண்டாக்கும் விளைவு!.
ஆம், நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே பெரும்பாலும் நிமிடக்கணக்கில் ஓடும் குவிக் பைட் ரகங்கள். இதற்கு மாறாக ஜானி லாசனின் நீர்விழ்ச்சி வீடியோ எட்டு மணி நேரம் ஓடக்கூடியது.
எட்டு மணி நேர வீடியோவா என ஆச்சர்யமாக இருக்கிறதா? அதைவிட ஆச்சர்யம் அந்த வீடியோ ஏற்படுத்திவரும் விளைவு. தூக்கமில்லாமல் தவிக்கும் பலருக்கு அந்த வீடியோ தான் தாலாட்டாக அமைந்து மன நமைதியை அளித்து நன்றாக தூங்கவும் வைக்கிறது. இந்த வீடியோ ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக மருத்துவமனை ஒன்றில் இதை தூக்கமின்மை தொடர்பான ஆய்வுக்கான கருப்பொருளாக சேர்த்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
அயர்லாந்தின் மாசுபடாத லிட்ரீம் கிராமப்பகுதியில் உள்ள வனத்தின் நீர்விழ்ச்சியில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவை பார்க்கும் போது மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருப்பது போல உணர்வு ஏற்படுகிறது. இடையே நீரின் சளசளப்பும் பறவைகளின் சங்கீதமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.இயற்கை ஆட்சி செய்யும் இடங்களில் மட்டுமே கேட்கக்கூடிய இன்னும் சில அற்புத ஒலிகளும் கேட்டுக்கொண்டே இருக்க அந்த நிர்விழ்ச்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
லட்சகணக்கானோர் இப்படி தான் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். சும்மாயில்லை, நகரத்து வாழ்வின் நெருக்கடியால் உண்டான கவலைகளை மறந்து இந்த வீடியோவிலும் அது தரும் அமைதியிலும் லயித்திருக்கின்றனர்.
பலர் இந்த வீடியோ தரும் ஆறுதலால் தங்கள் தூக்கமின்மையை மறந்து நன்றாக தூங்கியிருக்கின்றனர்.
இந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் பலரும் நடுவிலேயே தூங்கி விடுகின்றனர். பின்னர் திடிரென கண் விழித்துப்பார்த்தால் வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். அது தரும் இதத்தால் மீண்டும் தானாக தூக்கம் வந்துவிடும் என்கிறார் வீடியோவை உருவாக்கிய ஜானி லாசன். அதனால் தான் இந்த வீடியோவை 8 மணி நேரம் ஓடக்கூடியதாக படம் பிடித்ததாகவும் சொல்கிறார்.
லாசன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனது முதல் இயற்கை வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றினார். மக்களின் வாழ்க்கையில் இயற்கையை கொண்டு வருவது அவரது நோக்கமாக இருக்கிறது. இயற்கையின் எழில் கொஞ்சம் பகுதியில் வசிக்க முடிந்த பெரும் அதிர்ஷ்டம் தனக்கு வாய்த்திருப்பதால் அதை யூடியூப் மூலம் வீடியோவாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக சொல்கிறார்.
லாசனின் நீர்விழ்ச்சி விடீயோ: https://www.youtube.com/watch?t=1619&v=eKFTSSKCzWA

———
தளம் புதிது; ஹைடெக் செய்திகளின் சங்கமம்
தொழில்நுட்ப செய்திகளை பின் தொடர்வதில் ஆர்வம் இருக்கிறதா? இந்த செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறதா? இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஆல் டெக் நியூஸ் (http://alltechnews.co/ ) இணையதளம் உருவாகி இருக்கிறது. இந்த தளத்தில் தொழில்நுட்ப உலகின் அனைத்து முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். தொழில்நுட்ப செய்திகளை சிறப்பாக அளிக்கும் டிஜிட்டல் டிரென்ஸ், கீக்.காம் ஆகிய தளங்களில் துவங்கி ஹேக்கர் நியூஸ்,பிபிசி உள்ளிட்ட 41 தளங்களில் இருந்து செய்திகளை தொகுத்து வழங்குகிறது. செய்திகளுக்கான தேடல் வசதியும் இருக்கிறது.
தளத்தின் மையப்பகுதியில் செய்திகள் வரிசையாக இடம்பெற வலுது பக்கத்தில் மூல தளங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
ஹைடெக் ஆர்வலர்கள் புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய தளம் இது; http://alltechnews.co/

செயலி புதிது; தினம் ஒரு வால்பேப்பர்
ஸ்மார்ட்போன்களில் விதவிதமான வால்பேப்பர்கள் தோன்ற விரும்பினால் மியூசி (Muzei) செயலியை நாடலாம். தினம் ஒரு அழகிய வால்பேப்பரை போனில் இது இடம்பெறச்செய்கிறது. இவை வழக்கமான வால்பேப்பர் அல்ல, ஒவ்வொன்றும் ஒரு புகழ்பெற்ற கலைப்படைப்பாகும். அருங்காட்சியகம் உள்ளிட்ட பலவேறு இடங்களில் இருந்து இவற்றை எடுத்து தருகிறது. போனில் உள்ள ஐகான்கள் பளிச் என தெரியும் வகையில் இவற்றின் தோற்றம் பின்னணியில் கலந்து விடுகிறது. கலைப்படைப்பில் இரு முறை கிளிக் செய்தால் அதன் முழு தோற்றம் மற்றும் விவரங்களை காணலாம். கூடுதல் தகவல் மியூசி என்றால் ரஷ்ய மொழியில் அருங்காட்சியம் என்று பொருளாம்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=net.nurik.roman.muzei


குரோம் ரகசியங்கள் ( இணைய குறிப்பு)
குரோம் பிரவுசரில் பல கூடுதல் வசதிகள் நீட்டிப்பு சேவை மூலம் சாத்தியமாகின்றன. ஆனால் குரோம் பிரவசரிலேயே சில சேவைகளை எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா?
நீங்கள் இசைப்பிரியர் என்றால் ,குரோம் பிரவுசரில் வெற்று டேப்பை (tab ) வரவைத்து அதில் ஆடியோ அல்லது வீடியோ கோப்பை கொண்டு வந்து வைதால் போதும் பாட்டு கேட்கலாம்;வீடியோ பார்க்கலாம். மீடியா பிளேயருக்கு பதில் இதை பயன்படுத்தலாம். இதே போலவே பிடிஎப் கோப்புகளையும் குரோம் டேபிலேயே வைத்து படிக்கலாம். இதற்கும் வெற்று டேப்பில் கோப்பை இழுத்து வந்தால் போதுமானது. கோப்புகளை ஜூம் செய்யும் வசதி மற்றும் அச்சிடு வசதியும் உண்டு.


லைக்குகளில் ஒரு சாதனை
டிஜிட்டல் யுகத்தில் பத்திரிகைகளின் பாடு திண்டாட்டமாக இருந்தாலும் புகழ்பெற்ற நேஷனல் ஜியாக்ரபிக் இதழ் இக்கால தலைமுறை மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக இளசுகள் புழங்குமிடமாக இருக்கும் சமூக ஊடக பரப்பில் இந்த இதழ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இதழின் இன்ஸ்டாகிராம் கணக்கான @natgeo 17 மில்லியன் பாலோயர்களை பெற்றிருக்கிறது. பொதுவாக ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் மாடல் அழகிகளே லட்சக்கணக்கில் பாலோயர்களை பெறும் இன்ஸ்டாகிராமில் அதிக ஆதரவு பெற்ற பிரபலங்கள் அல்லாத கணக்குகளில் நேஷனல் ஜியாக்ரபிக் டாப்பில் உள்ளது. சமீபத்தில் இதன் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு பில்லியன் லைக்குகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு @natgeoyourshot, @natgeoadventure ஆகிய இரண்டு புதிய இன்ஸ்டாகிராம் பக்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் கணக்கு மூலம் வாகர்கள் தங்கள் புகைப்படங்களை சமர்பிக்கலாம். புத்தாயிரமாண்டின் தலைமுறை மத்தியில் @natgeo பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

—-

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.