இணையத்தில் வியந்து போகலாம் வாருங்கள்!

மழை வருவது மயிலுக்கு தெரியும் ; பழமொழியும் இருக்கிறது. பிரபலமான சினிமா பாட்டும் இருக்கிறது. மழை வருவது உங்கள் வீட்டு நாய்க்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த ஆச்சர்யத்தின் பின்னே உள்ள விளக்கத்தை அறிந்து கொள்ள விரும்பினாலோ, இது போன்ற இன்னும் பல ஆச்சர்யங்களை தெரிந்து கொள்ள விரும்பினாலோ இணையதத்தில் உள்ள அதிசய நகர இணையதளத்திற்கு விஜயம் செய்ய வேண்டும். வொண்டர்போலிஸ் (http://wonderopolis.org/) – இது தான் அந்த அதிசய நகரின் இணைய முகவரி!

வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகளில் இருப்பிடமாக இந்த தளம் இருக்கிறது. அறிவியல் என்றில்லை உலக விஷயங்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான பல அரிய தகவல்களை இந்த தளம் வழங்குகிறது. இந்த விவரங்களை எல்லாம் சிந்திக்க வைக்கும் கேள்விகளாக கேட்டு அதற்கான பதிலை சுவராஸ்யமான விளக்கமாக முன் வைக்கிறது.

இத்தகைய ஒரு கேள்வி தான், இடி மழையின் போது நாய்கள் ஏன் குரைக்கின்றன? என்பது. செல்லப்பிராணிகளாக நாய் வளர்ப்பவர்கள் இதை கவனித்திருக்கலாம். குறைபொலி என்பது நாய்களின் பேச்சொலி போல தான். தேவைகளையும் விருப்பங்களையும் நாய்கள் குரைப்பது மூலம் வெளிப்படுத்துகின்றன. அதே போலவே இடி மின்னலோடு மழை வரும் போது நாய்கள் பாதுகாப்பற்று உணர்ந்து அச்சத்துக்கு ஆளாகின்றன. இந்த பயத்தை தான் அவை குரைத்து வெளிப்படுத்துகின்றன. சில நாய்கள் எங்காவது போய் பதுங்கிகொள்வதும் உண்டு. ஆனால் எல்லா நாய்களும் இடி மின்னலுக்கு அஞ்சுவதாக சொல்ல முடியாது.

சில நேரங்களில் இடி மின்னலுடன் மழை வருவதற்கு முன்பே நாய்கள் குரைப்பதுண்டு. அப்போது காரணமே இல்லாமல் ஏன் நாய் குறைக்கிறது என்றும் நினைக்கலாம். இந்த குரைப்புக்கும் பயம் தான் காரணம். மழை காலத்தில் பல நேரங்களில் எங்கோ இடி இடிப்பதை கேட்க முடியும் அல்லவா? நம்மை விட நாய்களால் இந்த தூரத்து இடி முழக்கத்தை துல்லியமாகவே கேட்க முடியும் . அந்த அளவுக்கு அவற்றின் கேட்புத்திறன் நுட்பமானது. அதாவது நமது கேட்புத்திறனை விட இது 20 மடங்கு அதிகமானது. எனவே தான் , இடி மின்னல் நம் பகுதியில் தோன்றுவதற்கு முன்பு தூரத்தில் இடி இடித்துக்கொண்டிருந்தால் கூட நாய் அதைக்கேட்டு பயந்து போய் குறைக்கத்துவங்கலாம். எனவே நாய் திடிரென குறைதால் அதன் பின் இடி மின்னலுடன் மழை வரலாம். அது மட்டுமா? மழையின் மண் வாசத்தைகூட நாய்கள் நம்மை விட முன்கூட்டியே உணர்ந்துவிடும்.

அட, என்று வியக்க வைக்கிறதா இந்த விளக்கம். இப்படி தினம் ஒரு கேள்விக்கான விரிவான விளக்கத்தை தருகிறது வொண்டர்போலிஸ் தளம். இயல்பாக எல்லோர் மனதிலும் தோன்றக்கூடிய பல வித கேள்விகளை தேர்வு செய்து அதற்கான விளக்கத்தை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் அளிப்பது இந்த தளத்தின் சிறப்பு.
மாதிரிக்கு சில கேள்விகளை பார்ப்போம். இரும்பு போன்ற சில பொருட்கள் ஏன் துறு பிடிக்கின்றன? மொத்தம் எத்தனை உலகங்கள் இருக்கின்றன? சூடான் நீரில் ஏன் புகை வருகிறது? பூமியில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்? யானைகளுக்கு ஏன் காதுகள் பெரிதாக இருக்கின்றன? எல்லா தாவரங்களுக்கும் வேர் இருக்கிறதா? இப்படி விதவிதமான கேள்விகளையும் அவற்றுக்கான விரிவான பதிலையும் இந்த தளத்தில் பார்க்கலாம். இந்த பதில்களின் மூலம் குறிப்பிட்ட அந்த விஷயம் தொடர்பான மேலும் பல புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே சொன்னது போல், இந்த தளத்தில் தினம் ஒரு அதிசய தகவலை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தினத்துக்கான அதிசய தகவல் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த விளக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டு மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், இவ்வாறு ஏற்கனவே வெளி
யான தகவல்களின் பட்டியலை பார்க்கலாம். எக்ஸ்புளோர் எனும் தலைப்பின் கீழ் உள்ள இந்த பட்டியலில் உங்களை கவரும் கேள்வியை தேர்வு செய்து படிக்கலாம். எல்லா கேள்விகளுடனும் தொடர்புடைய கேள்விகள் உண்டு.
கேள்விகளை அவற்றின் துறை சார்ந்த்தும் தேர்வு செய்யலாம். அதே போல சமீபத்திய கேள்விகள் மற்றும் மிகவும் பிரபலமான கேள்விகள் என்றும் தனியே அடையாளம் காட்டப்படுகின்றன. அவற்றையும் கிளிக் செய்து புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். கேள்விகள் உங்கள் ஆர்வத்தின் அடையாளம். உங்கள் மனதிலும் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கலாம். அத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் இடமாக இந்த தளம் இருக்கிறது. மேலும் கேள்விகள் மூலம் புதிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான இடமாகவும் இருக்கிறது.

ஆக, இந்த இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதாவது புக்மார்க் செய்து கொள்ளுங்கள். தினம் ஒரு அதிசயத்தை உணரலாம். நீங்கள் விரும்பினால் இந்த தளத்தில் உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்தால் தினமும் வெளியாகும் தகவல்களை இமெயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.அது மட்டுமா , இந்த தகவல் தொடர்பாக உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு மற்றவர்களோடு விவாதிக்கவும் செய்யலாம். இந்த தகவலை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கான உங்கள் மதிப்பீட்டையும் வாக்குகளாக அளிக்கலாம். மொத்த்தில் உங்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்திவிடக்கூடிய இணையதளம் தான். அமெரிக்காவில் உள்ள நேஷனல் செண்டர் பார் பேமலிஸ் லேனிங் அமைப்பால் நட்த்தப்படும் இந்த இணையதளம் புகழ்பெற்ற டைம் பத்திரிகையால் சிறந்த தளமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

இதே போன்ற தகவல்களை அறிவதில் விருப்பம் இருந்தால் கூல்சயின்ஸ்பேக்ட்ஸ் (http://www.coolsciencefacts.com/ ) இனையதளமும் உங்களுக்கு சுவாரஸ்யம் அளிகலாம். பூவியீர்ப்பு விசையில் இருந்து பேக்டீரிய வரை பலவிதமான விஷயங்கள் பற்றிய தகவல்களை இந்த தளம் வழங்குகிறது. சயின்ஸ்பேக்ட்ஸ் (http://www.science-facts.com/ ) தளமும் இதே போலவே வியக்க வைக்கும் விஞ்ஞான தகவல்களை அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த தளத்தில் நீங்களும் கூட தகவல்கலை சமர்பித்து பங்கேற்கும் வசதி இருக்கிறது. தகவல்களை தேடும் வசதியும் இருக்கிறது. அமேசிங் ஸ்பேஸ் பேக்ட்ஸ் தளம்(http://www.amazingspacefacts.50webs.com/) விண்வெளி தொடர்பான வியப்பான தகவல்களை அளிக்கிறது. எல்லாமே ஒற்றை வரியில் அமைந்திருப்பது தான் இந்த தளத்தின் சிறப்பு. மாதிரிக்கு ஒரு தகவல்: புதன் (மெர்குரி) கிரகத்தில் ஒரு நாள் என்பது பூமியில் உள்ள 59 நாட்களுக்கு சமம்!

————-

சுட்டி விகடனில் எழுதியது. நன்றி!

 

 

One thought on “இணையத்தில் வியந்து போகலாம் வாருங்கள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *