டிவிட்டரில் நெகிழ வைக்கும் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம்!

Bt3OzlRCUAA0-5bநீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால் அந்த சிறுவனின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கலாம். யுத்ததின் அழிவுக்கு மத்தியில் நம்பிக்கைக்கு அடையாளமாக கருதப்படும் அந்த புகைப்படம் இதுவரை டிவிட்டரில் பத்தாயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டு பார்த்தவர்கள் உள்ளங்களை எல்லாம் உருக்கி கொண்டிருக்கிறது.

ஆறு வயது மதிக்கத்தக்க பாலஸ்தீன சிறுவன் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பையை மாட்டிக்கொண்டு, ’நானும் ஒரு பத்திரிகையாளர்’ என்று போஸ் கொடுத்த புகைப்படம் தான் அது. போர்க்களத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த ஸ்வீட பத்திரிகையாளர் சோமர்ஸ்டிராம் சிறுவனின் தீரத்தை பார்த்து வியந்து அந்த காட்சியை கிளிக் செய்து டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போர்க்களமாகி இருக்கிறது. ராக்கெட் தாக்குதல், குண்டு வீச்சு ,பதில் தாக்குதல் என சாஸா கலங்கிகொண்டிருக்கிறது.
காஸா இடிபாடுகளுக்கு மத்தியில் அந்த ஆறு வயது சிறுவன் யாசன் , ஸ்வீடன் பத்திரிகையாளர் சோமர்ஸ்டிராம் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே அவர் சந்தித்து பேசியிருக்கிறான். சிறுவர்களுக்கே உரிய அப்பாவித்தனதுடன், கண்களில் கனவுகளுடன் , “ நான் ஒரு பத்திரிகையாளன். இங்கு நடக்கும் செய்திகளை சேகரிக்கிறேன். இது தான் எனது பத்திரிகையாளர் சட்டை “ என்று அவன் கூறியிருக்கிறான்.
பழைய பிளாஸ்டிக் பை ஒன்றை மாட்டிக்கொண்டு பத்திரிகையாளர் போல அந்த சிறுவன் போஸ் கொடுத்ததை பார்த்த சோமர்ஸ்டிராம் உடனே தனது ஹெல்மெட்டை கழற்றி சிறுவன் தலையில் அணிவித்து அவனது பத்திரிகையாளர் தோற்றத்தை பூர்த்தி செய்து படம் எடுத்திருக்கிறார். ” நான் பத்திரிகையாளர் ஆடை அணிந்திருக்கிறேன். பெரியவனாகி பத்திரிகையாளராக ஆவேன். புகைப்படங்கள் எடுப்பேன்’ என்று அப்போது சிறுவன் கூறியிருக்கிறான்.

சோமர்ஸ்டிராம், இந்த சிறுவனின் புகைப்படத்தை தந்து டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தானே தாயரித்த பிளாஸ்டிக் சட்டையுடன் பத்திரிகையாளர் போல போஸ்கொடுக்கும் காஸாவை சேர்ந்த சிறுவன்’ எனும் வாசகத்துடன் இந்த படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

அவ்வளவு தான் டிவிட்டரில் அந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாம் நெகிழ்ந்து போய்விட்டனர். யுத்த பூமியிலும் சிறுவனின் நம்பிக்கையும் அவனது அப்பாவித்தமான தோற்றமும் பார்த்தவர்களை உருவ வைத்தது. உடனே அதை ரிடீவிட் செய்தனர். இது வரை பத்தாயிரம் முறைக்கு மேல் இந்த படம் பகிர்ந்து கொள்ளப்படுள்ளது.
புகைப்படத்தை பார்த்தவர்கள் பின்னூட்டம் மூலம் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அழிவுக்கு மத்தியில் நம்பிக்கையின் அடையாளமாக இந்த படம் அமைந்திருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

டிவிட்டரில் பகிரப்பட்ட சிறுவனின் புகைப்படம்: https://twitter.com/ekmathia/status/494778921838452738/photo/1

———-
நன்றி; விகடன்.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *