Category Archives: இமெயில்

இமெயில் கால பாதிப்பு

முகத்தை  நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க ஆய்வாளரான ராபின் ஆப்ரஹாம்ஸ்.  அரசியல் ஊழல் மயமாகி வருவதாக கவலைப்படுவது போல, சமூகம் குற்றமயமாகிவருவதாக விசனப் படுவதை போல, தற்கால தலைமுறை தொட்டாச்சிணுங்கி மயமாகி வருவதாக வருத்தப்படுகிறார் ஆப்ரஹாம்ஸ்

புகழ் பெற்ற ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியை சேர்ந்த ஆய்வாளரும்,  உளவியல் நிபுணருமான  ஆப்பிரஹாம்ஸ்  நடைமுறை வாழ்க்கையில்  நாம் பின்பற்ற வேண்டிய  நுணுக்கங்களை, கற்றுத்தேர்ந்தவர்.  இதுபற்றி அவர் அவ்வப்போது அவர் எழுதியும் வருகிறார். 

தினசரி சமூக நிகழ்வுகளையும், அதில் நாம் கவனிக்கத்தவறும் மாற்றங்களையும் அவர் உன்னிப்பாக கவனித்து வருபவர்.  அதன் பயனாக பேச்சுக்கலை மெல்ல மறக்கப்பட்டு வருவதாக அவர் கண்டறிந்து எச்சரித்துள்ளார். பேச்சுக்கலை என்றதும் மேடையில் நின்றபடி மைக்முன்  நின்று கூட்டத்தினரை மயக்கும் வகையில் சொற்பொழிவாற்றுவதை நினைத்து விட வேண்டாம்.  அல்லது அரங்கிலோ, பலர் முன்னிலையிலோ உணர்ச்சி பொங்க பேசி, உள்ளத்தில் இருப்பதை புரிய வைப்பதையோ நினைக்க வேண்டாம். 

அவர் சொல்வது, தினமும் நாம் பார்க்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களோடு முகத்தோடு முகம் பார்த்தபடி பேசும் சாதாரண உரையாடல் கலையைத்தான். இப்படி முகத்தை நோக்கியபடி பேசும் ஆற்றல் அருகி வருவதாக அவர்  தெரிவிக்கிறார். 
இமெயில், எஸ்.எம்.எஸ்., போன்றவை மூலம் தொடர்பு கொள்வது அதிகரித்து வருவதன் காரணமாக நேருக்கு நேர் பேசுவது குறைந்து கொண்டே போவதாக  அவர்  கூறுகிறார். 
எதற்கெடுத்தாலும், இமெயில் அனுப்பும் பழக்கம் உண்டாகிவிட்டது. இமெயில்  இல்லாத நேரத்தில் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.சில் தொடர்பு கொள்வது சகஜமாக இருக்கிறது. 
இது மட்டுமல்லாமல், ஐபாடுகளில் பாட்டு கேட்டபடி பயணிக்கிறார்கள்.  இதன் விளைவாக பேசுவதற்கான  வாய்ப்புகள் குறைந்து கொண்டே  போகின்றன. 

இது அநேகமாக பலரும் அறிந்ததுதான். ஆனால் இதனால் ஏற்பட்டுவரும் பாதிப்பைத்தான் யாரும் இன்னமும் உணர்ந்ததாக தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்புக்கான சாதனங்களையும், வழிகளையும் அதிகமாக்கி தந்திருப்பதால்  சிக்கலான சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும் மனப்போக்கு  உண்டாகியிருக்கிறது.  இது, பலரை மற்றவர்களிடமிருந்து சுருங்கி தங்களுக்குள் அடைபட்டு கொள்ளும் தன்மை கொண்டவர்களாக  மாற்றி வருகிறது. 

இத்தகைய நபர்களை பொதுவாக தொட்டாச்சிணுங்கிகள் என்று கூறுவோம். ஆனால் இன்று பலர் இப்படி தொட்டாச்சிணுங்கி களாகத்தான் இருக்கின்றனர். இமெயில் உலகத்தில் இயல்பாக இருக்கும் அவர்களால் சமூக சூழலில் சகஜமாக இருக்க முடிவதில்லை.  இத்தகைய போக்கு கவலைத்தரக்கூடியது என்று சொல்லும்  ப்பிரஹாம்ஸ், சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும்  தன்மையானது ஒரு நோய்கூறாகவே  உருவாகியிருக்கிறது என்கிறார். இதில் மேலும் பிரச்சனை என்னவென்றால் இந்த நோயை குணமாக்க மருந்து மாத்திரையை நாட முடியாது என்பதுதான்.

இமெயில் காலத்துக்கு முன்பாக முகம்பார்த்து பேச முடியாத குறை வெகு சிலருக்கு மட்டுமே இருந்தது. இன்றோ பலர் இந்த குறைக்கு ஆளாகியிருக்கின்றனர்.  எனவே வரும் காலத்தில், சமூக உறவுகளை மேம்படுத்தி கொள்ள பழகும் கலையை தனியே  பயிற்றுவிக்க வேண்டி வரலாம் என்கிறார் அவர். 

கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுப்பது போல, சமூக சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்கிறார்.
ஆகவே இமெயில்களையும், எஸ்.எம்.எஸ்.களையும் கொஞ்சம் மறந்துவிட்டு, சமூக நிகழ்ச்சிகளில் அதிக அக்கறை செலுத்தினால், நமக்கும் நல்லது, நாம் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் நல்லது.  இதைத்தான்  தனது ஆய்வு உணர்த்துவதாக அழுத்தம், திருத்தமாக  ஆப்பிரஹாம்ஸ் கூறுகிறார்.

ஸ்பேமை விரும்பும் பூமியிலே…

சந்தேகப்படும் படியான  இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உலகில் அழுத்தம், திருத்தமாக நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையாக இருக்கிறது.

.
இந்த ஆலோசனைக்கு  செவி சாய்க்க மறுத்தால், அதன் பிறகு மாட்டிக் கொண்டு விழிக்க நேரிடும். பலர் இப்படி கையை சுட்டுக் கொண்ட பிறகு இமெயில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கற்று கொண்டுள்ளனர்.

அதாவது  அழைப்பு இல்லாமல் வந்து சேரும் இமெயில்கள் என்று பொருள். இன்டெர்நெட் உலகில் இத்தகைய இமெயில்கள் ஸ்பேம் என்று  மிகுந்த வெறுப்போடு குறிப்பிடப்படுகின்றன.

அழையா விருந்தாளியாக  வந்து சேரும் கதைக்கு உதவாத  இமெயில் செய்திகள் இப்படி ஸ்பேம் என்று குறிப்பிடப்படுகின்றன.  ஸ்பேம்  எனும் வார்த்தைக்குள் அடங்கக்கூடிய இமெயில்கள் எண்ணிலடங்கா ரகங்களை சேர்ந்தவையாக இருக்கின்றன.
ஆரம்ப காலத்தில்  விளம்பர வாசகங்களை தாங்கி வந்த இத்தகைய  மெயில்கள், வெறும் தொல்லையாக மட்டுமே கருதப்பட்டன.

வயக்ராவை வாங்குங்கள், ஒரே நாளில் கோடீஸ்வரராவதற்கான வழி, அதிர்ஷ்டம் அழைக்கிறது, உடல் இளைக்க  எளிய முறை என்பது போன்ற விஷயங்களை தாங்கி வந்த  இந்த மெயில்கள், அதிகபட்சமாக  இணையவாசிகளின் நேரத்தை மட்டுமே வீணடித்து வந்தன.

பெரும்பாலும்  பலர் இந்த மெயில்களை அலட்சியம் செய்து விடுவது உண்டு.  ஆயிரத்தில் ஒருவர்,  ஆர்வத்தின் காரணமாக இதனை கிளிக் செய்தால், தொடர்ந்து  வீண் மெயில்களின் தாக்குதலுக்கு அவர் இலக்காக வேண்டியிருக்கும்.

இதெல்லாம் தொடக்க கால அனுபவங்கள். ஸ்பேம் பெருமை பரவ பரவ இணையவாசிகள் விவரமானவர்களாகி இத்தகைய மெயில்களை பார்த்தாலே  யோசிக்காமல் டெலிட் பட்டனை அழுத்த கற்று கொண்டுவிட்டனர்.

ஆனால் போகப்போக ஸ்பேம் மெயில்கள் ஆபத்தான வடிவில் வந்து சேரத் தொடங்கின. இணையவாசி களுக்கு  எப்படியாவது ஆசை வார்த்தை காட்டி அவர்களுக்கு மோசடி வலைவிரிக்கும்  முயற்சிகளாக இவை அமைந்தன.  இதில் பலர் ஏமாந்து தங்களது பணத்தை பறிகொடுத்திருக் கின்றனர். 

இந்த கட்டத்தில் ஸ்பேம் மெயில்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இவை தொல்லை மட்டுமில்லை, ஆபத்தும் கூட என்று எச்சரிக்கப்பட்டது.

இதுவரை ஸ்பேம் மெயில்களை டெலிட் செய்வதால்  நேரம் இழப்பு மட்டுமே ஏற்பட்டு வந்தது.  உருப்படியான  இமெயில்களை  தேடிப்படிப்பதற்கு முன்பாக பயனில்லா இமெயில்களை  எல்லாம்  டெலிட் செய்வது என்பதே முக்கிய வேலையாக அமைந்து, இணையவாசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த அனுபவமே மேல் என்று சொல்லக்கூடிய வகையில் இணையவாசிகளை  ஏமாற்றி  மோசடி செய்யும்  விதவிதமான ஸ்பேம்கள், இமெயில் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே நல்லது என்னும் எண்ணத்தைஏற்படுத்தி உள்ளன.
இப்போது ஸ்பேம் விஷயத்தில் அநேகமாக எல்லோருமே உஷாராகி விட்டார்கள் என்று சொல்லலாம்.  தெரியாதவர்களிடமிருந்து வந்திருக்கும் இமெயில்கள் என்றால் உடனே டெலிட் செய்யும் பழக்கம்  பலருக்கு வந்து விட்டது.

இந்நிலையில் ஸ்பேம் மெயில்களை  பார்த்தவுடன் டெலிட் செய்யாமல் அவற்றை ஆர்வத்தோடு பிரித்து, படித்து தொடர்பு கொள்ளும் வேலையை  இணையவாசிகள் பலர் செய்துள்ளனர்.

அந்த பலரை அடிமுட்டாள்கள் என்று நினைக்கவேண்டியதில்லை. அவர்கள் அனைவரும் இவற்றால் மோச மான  விளைவு ஏற்படலாம் என்பதை  நன்கு தெரிந்த நிலை யிலேயே ஸ்பேம் மெயில்களுக்கு பதிலளித்திருக்கின்றனர்.

ஸ்பேம் மெயில்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை  தெரிந்து கொள்வதற்காக வைரஸ் தடுப்பில்  புகழ் பெற்ற மெக் அஃபி என்னும் நிறுவனம் புதுமையான பரிசோதனை ஒன்றை நடத்த தீர்மானித்தது. அதன்படி  ஸ்பேம் மெயில்களை வரவேற்று  பதிலளிக்கும் போது என்னாகும் என  அறிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஸ்பேம் மீ என்னும் பெயரில் இதற்காக ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டு 50 இணையவாசிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தான் ஸ்பேம் மெயில்களுக்கு விரும்பி பதிலளித்திருக்கின்றனர்.
இதனை ஒரு விஷப்பரீட்சை என்று கூட சொல்லலாம். ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த

பரிசோதனையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
ஸ்பேம் மெயிலுக்கு பதிலளித்தால் நாளென்றுக்கு 70 மெயில்கள் வரை வந்து சேர்வதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்  இப்படி தொடர்பு கொள்பவர்கள் இணையவாசிகளின்  கண்களில் மண்ணை தூவிவிடக்கூடிய அளவுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் வாசகங்களை எழுதி அனுப்புவதும் தெரிய வந்துள்ளது.

இணையவாசிகளுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படாத வழிமுறைகளை இவர்கள் புதிது புதிதாக கண்டறிந்து வருவதும் இந்த சோதனையின் மூலம்  நிபுணர்களுக்கு  தெரிய வந்துள்ளது.

இதுவரை ஆங்கிலத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தி வந்தநிலை மாறி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டு மொழிகளையும் பயன் படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
காலப்போக்கில் மேலும் பல மொழிகளும் சேர்ந்து கொள்ளலாம் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக ஸ்பேம் தடுப்பில் புதிய அணுகுமுறை வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்பேம் பெறுபவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும், இத்தாலி 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முன்னிலை பெறாதது கண்டு பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.