Tag Archives: tv

யூடியூபை கலக்கும் சாண்ட்விச் வீடியோ

sa1
யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ் நம்மூர் உணவான இட்லியோ தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார்.

இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படி தான் செயல்படுவார்! அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி!
இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய அவருக்கு தேவைப்பட்ட காலம் ஆறு மாதம். ஆன செலவு 1500 டாலர்கள்- நம்மூர் கணக்கு படி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.

என்ன நம்ப முடியவில்லையா? அவர் செய்திருப்பது ஒன்றும் சாதாரண சாண்ட்விச் இல்லை, சாதனை சாண்ட்விச்.
வழக்கமாக சாண்ட்விச்சை எப்படி தயார் செய்வோம்? கடையில் இருந்து பிரெட்,சீஸ் மற்றும் காய்கறிகள் வாங்கி வந்து வைத்துக்கொண்டு சாண்ட்விச் செய்வோம் இல்லையா? ஆனால் ஜார்ஜ் அப்படி செய்யவில்லை, சாண்ட்விச்சை முழுவதும் தானே சொந்தமாக செய்திருக்கிறார். அதாவது,சாண்ட்விச் செய்ய தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் தானே உற்பத்தி செய்திருக்கிறார். அதனால் தான் ஆறு மாத காலம் ஆகியிருக்கிறது.
சாண்டிவிச்சுக்கான பிரெட் செய்ய கோதுமையை விளைவித்து, சிக்கனுக்காக கோழி வளர்த்து,காய்கறிகள் பயிரிட்டு,தேன் அறுவடை செய்து,மாட்டிடம் இருந்து பால் கறந்து சீஸ் தயாரித்து அவற்றை எல்லாம் கொண்டு சொந்தமாக சாண்ட்விச் செய்திருக்கிறார். இவ்வளவு ஏன்? இதற்கு தேவையான உப்பை கூட அவர் கடையில் வாங்கவில்லை, கடலுக்கு சென்று தானே உப்பு தயார் செய்து வந்திருக்கிறார்.
sa2
இந்த சாண்ட்விச் பயணம் முழுவதையும் அவர் வீடியோவாக உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். பண்ணையில் இறங்கி கோதுமை பயிரிடுவது,தேனடையில் தேனெடுப்பது என ஒவ்வொரு காட்சியாக டைம்லேப்ஸ் அடிப்படையில் படம் பிடிக்கும் இந்த வீடியோ யூடியூப்பில் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ஹிட்டாகி இருக்கிறது.

அவசர யுகத்திற்கு ஏற்ப நிமிடங்களில் தயார் செய்துவிடக்கூடிய உடனடி உணவாக கருதப்படும் சாண்ட்விச்சை உருவாக்க அவர் பாடுபட்டிருக்கும் விதம் பலரை கவர்ந்திருக்கிறது. இந்த பயணத்தில் உப்பை தயார் செய்ய தான் படாதுபாடு பட்டதாக ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார். தான் வசிக்கும் இடத்தில் கடல் இல்லாத்தால் விமானத்தில் பறந்து சென்று பசுபிக் பெருங்கடலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து உப்பாக்கி இருக்கிறார். பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்த போது விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கி தவித்த கதையையும் வீடியோவில் விவரிக்கிறார்.
சாதாரணமாக செய்யக்கூடிய சாண்ட்விச்சிற்காக ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும் என நினைக்கலாம். ஜார்ஜின் நோக்கமும் இது தான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் பற்றி எந்த அளவுக்கு சிந்திக்காமல் இருக்கிறோம் என்று உணர்த்தவே இவ்வாறு செய்திருக்கிறார்.

அமெரிக்க வாலிபரான ஜார்ஜ் ஹவ் டூ மேக் எவ்ரிதிங் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் ஒவ்வொரு விஷ்யத்தையும் ஆரம்பம் முதல் அவர் செய்து காட்டி வருகிறார். ஆரம்பம் முதல் என்றால் அந்த பொருளை தயாரிக்க தேவையான ஒவ்வொன்றையும் எப்படி உருவாக்குவது என்று விவரிப்பது முதல் அனைத்து அம்சங்களும் அடங்கும். இந்த வரிசையில் தான் அவர் சாண்ட்விச்சை ஆரம்பம் முதல் செய்து காட்டியிருக்கிறார்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்கள் பற்றி எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறோம் என்று உணர்த்துவதே அவரது யூடியூப் சானலின் நோக்கமாக இருக்கிறது. இதை சாண்ட்விச் தயாரிக்க ஆறு மாத காலம் கஷ்டப்பட்டு அவர் உணர்த்தியிருக்கிறார்.

பொதுவாக நம்முடைய மேஜை மீது இருக்கும் உணவு எப்படி எல்லாம் நம்மை வந்தடைகிறது என்பது குறித்து நாம் அதிகம் அறிவதில்லை என்று சொல்லப்படுகிறது. அது எத்தனை உண்மை என ஜார்ஜ் யூடியூப் வீடியோ மூலம் உணர்த்தியிருக்கிறார்.
ஜார்ஜின் வீடியோவை பாருங்கள்; சாண்ட்விச்சை செய்ய மட்டும் அல்ல; வாழ்க்கையையும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம்.

ஆண்டி ஜார்ஜ் யூடியூ சேனல்:http://www.makeeverything.tv/

—–

சைபர்சிம்மன்

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.

http _my80stv.com_ஸ்டிவி இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை பெரும் வகையில். ‘

 

இப்போது பிளாட் டிவிகளையும் பிளஸ்மா டிவிகளையும் கொஞ்சம் மறந்து , டயனோரா, சாலிடேர் காலத்துக்கு செல்லுங்கள் பார்க்கலாம். ( இளம் தலைமுறையினர் கூகுலில் தேடிப்பார்க்கவும் ,அல்லது தில்லுமுல்லு கால படங்களில் டிவியை பார்க்கவும்). ஒரு பெரிய மேஜையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்த அந்த நாள் தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இணைய திறையில் நிகழ்ச்சிகள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகின்றன. முகப்பு பக்கத்தில் இருக்கும் அந்த கால டிவியில் நிகழ்ச்சிகள் தோன்றுகின்றன. அதன் பக்கத்தில் டிவி பட்டன்கள் இருக்கின்றன. ரிமோட்டை மறந்து விட்டு இந்த பட்டன்களை இயக்குவதன் மூலம் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

 

அருகிலேயே எந்த வகையான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் எனும் பட்டியல் இருக்கிறது.

கிழே ஆண்டை தேர்வு செய்து கொள்ளாம்.

பிளேஷ்பேக்கில் முழ்கி மகிழுங்கள்.

 

இணையதள முகவரி:http://my80stv.com/#RLpc-NSoR6g

 

ஆனால் இந்த தளத்தில் ஒரே குறை அமெரிக்கா சார்ந்த நிகழ்ச்சிகளையெ பார்க்கலாம். நம்மூருக்கும் இப்படி ஒரு தளம் அமைத்தால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அடிக்கடி தடங்களுக்கு வருந்துகிறோம் அறிவுப்பு தோன்றுவதையும் பார்க்கலாம். தூர்தர்ஷனை என்ன தான் சிலர் கிண்டல் செய்தாலும் இன்றைய அழுகாச்சி மெகா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ அட்டகாசங்களுக்கு டி.டி எவ்வளவோ மேல்.

திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான இணையதளம்.

tubeplus.me

‘டியூப்பிளஸ்.மீ’ இணையதளம் அதனை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.திரைப்படங்களுக்கான எதிர்காலம் இப்படி தான் இருக்கப்போகிறது என்பது தான் அந்த செய்தி.

அதாவது திரைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கான பிரதான இடமாக இணையம் தான் இருக்கப்போகிறது என்று இதனை புரிந்து கொள்ளலாம்.

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அவை வந்து சேரும் இடம் என்னவோ இணையமாக தான் இருக்கும் என்பதை இந்த தளம் உணர்த்திக்கொண்டிருக்கிறது.

அந்த அளவுக்கு இந்த தளம் திரைப்படங்களின் இருப்பிடமாக இருக்கிறது.இதுவரை வெளியான பெரும்பாலான படங்கள் இந்த தளத்தில் தொகுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றை இணையத்திலேயே கண்டு களிப்பதற்காக தான் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தளத்தில் நுழைந்து விருப்பமான படத்தை தேர்வு செய்து இணையத்திலேயே அந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.

(ப‌டங்கள் என்னும் போது பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள் தான் என்றாலும் பாலிவுட் கோலிவுட் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன)

பார்க்க விரும்பும் படங்களை தேர்வு செய்வது சுலபம் தான்.மனதில் உள்ள படத்தின் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது ஒரு வழி.இல்லை என்றால் எந்த வகையான படம் தேவை என குறிப்பிட்டு(ஆக்ஷன்,காமெடி,திரில்லர்…) எந்த காலகட்டத்தை சேர்ந்த படமாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு படங்களின் பட்டியலை பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.திரைப்படங்களை அவற்றின் ரகத்திற்கு ஏற்ப தனித்தனி குறிச்சொற்கள் மூலமாகவும் தேர்வு செய்யலாம்.

இல்லை என்றால் முகப்பு பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள டாப் டென் பட்டியலில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த பட்டியல் அவப்போதைய முக்கிய நிகழ்வுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கிறது.எனவே மிகுந்த உயிரோட்டமான பரிந்துரையாகவும் அமைந்திருக்கிறது.

ஒரு படத்தை தேர்வு செய்து கிளிக் செய்தால் அந்த படம் தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதோடு அதனை இணையத்திலேயே பார்த்து ரசிப்பதற்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.அந்த படம் இணையத்தில் எங்கெல்லாம் டவுண்லோடு செய்ய கிடைக்கிறதோ அந்த இடங்கள் எல்லாம் இணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தேடி அலையாமல் ஒரே இடத்தில் எல்லா படங்களுக்குமான இணைப்பை வழங்குவது தான் இந்த தளத்தின் சிறப்பு.(திரைப்படங்கள் மட்டும் அல்ல திவி நிகழ்ச்சிகளையும் இவ்வாறு பட்டியலிடுகிறது)

இணையத்தில் முழு நீள திரைப்பட‌ங்களையும் திரைப்பட கிளிப்களையும் பார்த்து ரசிக்க இணையதளங்களும் டோரண்ட்களும் நிறையவே இருக்கின்றன.

ஆனால் ஒரே இடத்தில் அவற்றை தொகுத்தளிக்கிறது இந்த தளம்.

இந்த தன்மையே வியக்க வைக்கிறது.யோசித்து பார்த்தால் இது ஒரு பெரிய விஷயம் அல்ல.இணையத்தில் சிதறிக்கிடக்கும் திரைப்பட வீடியோ கோப்புகளை எல்லாம் திரட்டி அழகாக தொகுத்தளிக்கும் பணியை மட்டும் தான் இந்த தளம் செய்கிறது.ஆனால் இது உருவாக்கும் விளைவு அற்புதமாக இருக்கிறது.

இணையத்தில் பார்க்ககூடிய திரைப்படங்களையும் அவை சார்ந்த தகவல்களையும் ஒரே இடத்தில் விரம் நுனியில் பெற முடிவது திரைப்பட ரசிகர்களை கிரங்கிப்போகவே செய்யும்.

இப்படி ஒரே இடத்தில் படங்கள் குவிந்து கிடப்பதை பார்க்கும் போது எதிர்காலத்தில் வெளியாகும் படங்களும் இப்படி காணக்கிடைப்பது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.ஏன் இப்போது வெளியாகும் படங்கள் கூட இதே போல பட்டியலிடப்படலாம்.

ஆனால் ஏற்கனவே வெளியான படங்களை இணையத்தில் பார்ப்பது என்பது வேறு புதிதாக வெளியாகும் படங்களை இணையத்தில் பார்க்க முடிவது என்பது வேறு.புதிய படங்கள் இணையத்தில் வெளியாவதை தயாரிப்பாளர்களாலும் விநியோகிஸ்தர்களாலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது.

இருப்பினும் தொழில்நுட்பம் வெளியீட்டு வாயில்களை அகல திறந்து வைத்திருக்கும் போது அதற்கு அனை போடுவதோ காவல் காப்பதோ கடினம் தான்.

இணையத்திலேயே படங்களை வெளியிடுவதற்கான நிர்பந்தத்தை அல்லது அவசியத்தை திரைத்துறையினர் உணர்வதற்கு காலமாகலாம் ஆனால் அதுவே எதிர்காலம் என்பதை டைம்பிளஸ்.மீ தளம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது.

நிற்க திரைப்படங்களை திரையரங்குகளோடு இணையத்திலும் வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் நோக்கில் உள்ள சிக்கல்கள் புரிந்துகொள்ளகூடியதே.ஆனால் அதனை ஒரு வழியாக ஏற்றுக்கொண்டால் திரையரங்கு போலவே இணைய வெளியீடு மூலமும் கட்டணம் வசூலிப்பதற்கான வழிகள் உருவாக்கப்படலாம்.

டைம்பிளஸ் தளத்திலேயே எல்லா வீடியோக்களும் காப்புரிமை விதிகளின் கீழே வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.திரைப்பட உரிமையாளர்கள் தங்கள் அனுமதி இன்றி படங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக கருதினால் அதனை நீக்கி கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இதுவும் திரைப்படங்களுக்கான எதிர்காலம் தான்.

இணையதள முகவரி;http://www.tubeplus.me/

பி.கு;கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் வெளியிடும் முன்னோடி முயற்சியை புரிந்து கொள்ள முயலாமல் கண்மூடித்தனமாக எதிர்பவர்கள் இது போன்ற இணைய முயற்சிகளை அலசி ஆராய்ந்து நிதர்சனத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

நேரடி விவாதங்களுக்கான இணையதளம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்ட தலைப்புகள் குறித்து காரசாரமாக விவாதிப்பதை பார்க்கும் போது அந்த விவாதத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்படுவதோடு நம் பங்கிற்கும் சில கருத்துக்களை சொல்ல ஆர்வம் உண்டாகலாம்.ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் சாமான்யர்கள் பங்கேற்பது எப்படி?

அந்த கவலையே வேண்டாம் ,இனி நீங்களும் நிபுணர்கள் போலவே விவாதம் நடத்தலாம்.அதற்காக என்றே டீயோன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய விவாத களம் என்று சொல்லப்படக்கூடிய இந்த தளம் எதை பற்றியும் விவாதிக்கலாம்,எவரோடும் விவாதிக்கலாம் என்று ஊக்கமளிக்கிறது.

சிந்தனை வேகமும் கருத்துக்களை பகிரும் ஆர்வமும் இருந்தால் போதும் எவரும் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு நெருக்கமான தலைப்புகள் குறித்து விவாதம் நடத்தலாம்.

இணையத்தில் அரட்டை அடிக்கும் வசதி இருக்கிறது.சாட்ரவுலெட் வருகைக்கு பிறகு வீடியோ வழி அரட்டையும் புத்துயிர் பெற்றிருக்கிறது.சாட்ரவுலெட் அறிமுகம் இல்லாதவர்களோடு அரட்டை அடிக்க வழி செய்கிறது என்றால் ஏர்டைம் பேஸ்புக் நண்பர்களோடு உரையாடலில் ஈடுபட வைக்கிறது.

ஆனால் அரட்டை அடிப்பது என்பது வேறு கருத்து மோதலில் ஈடுபடுவது என்பது வேறு.ஒருவர் தீவிரமாக நம்பும் விஷயம் குறித்து இன்னொருவரோடு காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது என்பது ஊக்கம் தரக்கூடியது தான்.

அலுவலத்திலோ வீட்டிலோ நண்பர்களோடு விவாதிக்கலாம் தான்.ஆனால் விவாதத்தில் ஒரு தொழில் முறை தன்மை இருந்தால் தானே சுவாரஸ்யமாக இருக்கும்.அதை தான் டீயோ தளம் வழங்குகிறது.

மற்றவர்களோடு நேரடி விவாதத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் அதற்கான தலைப்பை குறிப்பிட்டு மற்றவர்களை விவாதத்திற்கு அழைக்கலாம்.இதற்காக என்றே விண்ணப்ப படிவம் போன்ற பகுதி இருக்கிறது.அதில் விவாதத்திற்கான கேள்வியையும் அதில் உங்கள் நிலையையும் குறிப்பிட்டு மறுத்தும் எதிர்த்தும் பேச தயாராக இருப்பவர்களை அழைக்கலாம்.

எந்த தலைப்பின் கீழும் விவாதிக்கலாம்.எந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம்.கிரிக்கெட் போட்டி நடக்கும் காலம் என்றால் அது பற்றி விவாதிக்கலாம்.தேர்தல் என்றால் கட்சிகளின் வெற்றி தோல்வி பற்றி விவாதிக்கலாம்.சமீபத்தில் வெளியான திரைப்படம் பற்றி விவாதிக்கலாம்.

கொஞ்சம் சமூக அக்கறையோடு பிரச்சனைகள் அல்லது அறிவியல் போக்கு குறித்தும் விவாதிக்கலாம்.

விவாதங்களுக்கான தலைப்பிற்கு எல்லையே கிடையாது.எனினும் இணையவாசிகளின் வசதிக்காக பொருத்தமான தலைப்புகளை தேர்வு செய்ய விவாத அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.விளையாட்டு.பொடுதுபோக்கு,கலை,கல்வ,பாலினம்,குடும்பம்,சுற்றுச்சூழல் என்று பல்வேறு தலைப்புகளில் விவாத அறைகள் இருக்கின்றன.உறவு,தொழில்நுட்பம்,அரசியல் என்றும் இவை நீள்கின்றன.
இதற்கான வண்ண பெட்டிகளில் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட துறைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கலாம்.

விவாததிற்கு என்று ஒரு பொதுவான வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளது.விவாதிக்க விருபுகிறவர்கள் தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டு விவாதத்திற்கான கேள்வியையும் அதில் தங்கள் நிலையையும் தெரிவித்து விவாதிக்க தயாராகலாம்.விவாதத்திற்கான நேரத்தையும் குறிப்பிடலாம்.

விவாதிக்க ஆர்வம் உள்ள சக உறுப்பினர்கள் இதில் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம்.

வீடியோ வசதி கொண்ட தளம் என்பதால் வெப்கேமை இயக்கி விட்டு தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவது போலவே உற்சாகமாக வாதிடலாம்.

தீவிர சிந்தனை போக்கு கொண்டவர்கள் தங்கள் மனதில் உள்ள கருத்த்துக்களையும் இங்கனம் உலகோடு பகிர்ந்து கொள்ளலாம்.

தளத்தில் இடம் பெறும் விவாதங்களையும் பார்த்து,கேட்டு ரசிக்கலாம்.அதோடு அந்த விவாதத்தின் கருத்துக்களுக்கு வாக்குகள் மூலம் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கலாம்.டிவிட்டர் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.எல்லா விவாதங்களிலும் இத்தகைய கருத்துக்களை காணலாம்.ஆக மூழு வீசிலான சமூக விவாத தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி விவாதங்களில் வெறுத்து போனவர்கள் மற்றும் சமூகத்தில் போதிய கருத்துக்கள் விவாதிக்கப்படவில்லை என நினைப்பவர்கள் இந்த களத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://deeyoon.com/

xfqfyvpcxsjwcy24_na-bole-tum-na-mene-kuch-kaha

மெகா சீரியல்களை வெறுக்க ஒரு இணையதளம்.

இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியிருக்கிறது சீரியல்ஹேட்டர்ஸ் இணையதளம்.மெகா சீரியல்களை பெண்கள் மட்டும் தான் பார்க்கின்றனரா என்று ஆவேசமாக கேட்ககூடிய பெண்களும் இந்த தளத்தில் சேர்ந்து கொள்ளலாம்.சீரியல்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தலாம்.

ஆம் சீரியல்கள் மீதான‌ வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக என்றே இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

நீங்கள் பார்த்து நொந்துபோன சீரியல் எதுவாக இருந்தாலும் சரி அதன் மீதான் வெறுப்பை இந்த தளம் மூலம் வெளிப்படுத்தலாம்.

இந்த தளத்தில் நுழைந்ததுமே வரிசையாக மெகா சீரியல்கள் அவர்றுக்கான புகைப்படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே வெறுக்கப்பட்டவை தான்.ஒவ்வொரு புகைப்படத்தை கிளிக் செய்தால் அதனை எத்தனை பேர் வெறுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நாமும் வெறுப்பதோடு அப்படியே மற்றவர்கள் அந்த சீரியல் குறித்து தெரிவித்துள்ள‌ கருத்துக்களை படித்துப்பார்க்கலாம்.

குறிப்பிட்ட சீரியலை பார்த்து ரொம்பவும் நொந்து போயிருந்தால் அந்த சீரியலை வெறுப்பதற்காக நீங்களே பரிந்துரைக்கலாம்.சீரியலின் பெயர்,ஒளிபரப்பாகும் சேனல்,அதன் மொழி ஆகிய விவரங்களை தெரிவித்தால் போதும் அந்த சீரியல் வெறுப்பதற்காக அரங்கேறி விடும்.

எல்லாம் சரி முதலில் சீரியலை வெறுப்பவர்கள் அதனை பார்த்ததாக தானே அர்த்தாம் ,பின் ஏன் இந்த ஆவேசம் என்று கேட்கலாம்.இந்த கேள்விக்கான பதிலை இந்த தளமே அதன் அறிமுக பகுதியில் குறிப்பிட்டுள்ளது.வீடுகளில் எதை பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் பெரும்பான்மை நம்மிடம் இல்லாததால் பல நேரங்களில் வேறு வழியில்லாமல் மெகா சீரியல்களை பார்க்க வேண்டியிருக்கிறது.

அதற்காக லாஜிக் இல்லாத கதை போக்குகள்,எல்லோரும் இரண்டு முறைகலயாணம் செய்து கொள்வதை,ஒவ்வொரு பெண்ணும் மூன்று மூறைவிவாகரது பெறுவதை இன்னும் பிற அபத்தங்களை பொருத்து கொள்ள தான் வேண்டுமா?குறைந்த பட்சம் அந்த வேதனையையாவது கொட்ட ஓரு இடம் வேண்டாம்.

அந்த இடமாக தான் இந்த தளம் விளங்குகிறது.

சீரியல் வெறுப்பாளர்களுக்கு இந்த தளம் சரியான வடிகால்.ஆனால் ஒரே குறை.இந்தி மற்றும் மராத்தி சீரியல்கலை வெறுக்கும் வசதி தான் தரப்பட்டுள்ளது.இது பெருங்குரை.உடனடியாக அகில இந்திய அளவில் விரிவாக்கம் செய்ய சொல்ல வேண்டும்.இல்லை என்றால் குறைந்த ப‌ட்சம் தமிழ் சேனல்களையாவது சேர்க்க சொல்ல வேண்டும்.

இணையதள‌ம் முகவ‌ரி;http://serialhaters.com/