டிஜிட்டல் தேசம் கொரியா

digital-koreaதென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

.
மேலும் அந்நாட்டில் செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் 63 சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

11 மாத காலம்: இதுதான் ஒரு செல்போன் கொரியர்களின் தங்கியிருக்கும் காலம். அதன் பிறகு பழைய போனை தூக்கியெறிந்து விட்டு புதிய போனை, அதுவும் காமிரா போன்தான், வாங்கி விடுகின்றனராம்.

கொரியாவில் பிராட்பேண்டு வசதி நீக்கமற நிறைந்திருந்தாலும் அதன் கட்டணம் என்னவோ உலகிலேயே மிகவும் குறைவாக இருக்கிறதாம். உலகம் இன்று மைஸ்பேஸ் பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே கொரியாவில் அவர்களுக்கென்று தனியே ஒரு மைஸ்பேஸ் சைவேர்ல்டு எனும் பெயரில் பிரபலமாக இருக்கிறது.

இந்த தளத்தில் 43 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு அந்நாடு வலைப்பின்னல் தேசமாகவும் இருக்கிறது. அதே போல கொரியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் காரை நிஜத்தில் பார்க்க முடியாது. காரணம் அது இன்டெர்நெட்டில் மட்டுமே உலா வரும் சாலிட் புரோ எனும் வர்ச்சுவல் காராகும்.

கொரியாவுக்கென்று தனியே ஒரு ஆன்லைன் விளையாட்டு உலகம் இருக்கிறது. லீனியேஜ் என்று அதற்கு பெயர். அதன் உறுப்பினர்களோ பிரபலமாக இருக்கும் வேர்ல்டு ஆப் வார்கிராப்ட் விளையாட்டு உலகின் உறுப்பினர்களை விட இருமடங்கு அதிகமாகும்.

தென்கொரியர்களை பற்றி வியக்க வைக்கும்புள்ளி விவரங்கள் இன்னமும் இருக்கிறது. தென்கொரிய மாணவர்களின் 40 சதவீதம் பேர் வகுப்பறையிலிருந்தே எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பி கொள்கின்றனர்.

30 சதவீத மாணவர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்புகின்றனர். 20 சதவீத தென் கொரியர்கள் செல்போனி லிருந்தே இன்டெர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் மூன்றாவது தலைமுறை செல்போன் களுக்கு மாறியிருக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தென் கொரியர்கள் செல்போனிலிருந்தே இன்டெர்நெட்டில் உலாவுகின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ரிங்டோன் வாங்குகின்றனர். ரிங் பேக் டோன் என்று சொல்லப்படும் புதுமையான ரிங்டோன் தென்கொரியாவில் உதயமானதுதான்.

இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் வியக்க வைப்பதாக மட்டுமல்லாமல் தென்கொரிய சமூகத்தில் நவீன தொழிற்நுட்பம் எப்படி இரண்டற கலந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இந்த விவரங்கள் எல்லாம் புதிதாக வெளிவந்துள்ள டிஜிட்டல் கொரியா எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டோமி ஹோனன் எனும் தொழில்நுட்ப எழுத்தாளர் இந்த துறையை சேர்ந்த மற்றொரு நிபுணரான ஓ ரியலியோடு சேர்ந்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த புத்தகத்திற்காக தென் கொரிய சமூகத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தும் விதத்தை அலசி ஆராய்ந்திருக்கின்றனர். அதன் விளைவாக அந்த புத்தகம் தென்கொரியாவில் ஏற்பட்டு வரும் தொழிற்நுட்ப மாற்றத்தை கச்சிதமாக பிரதிபலிக்கிறது.

தென்கொரியா தொழிற்நுட்ப விஷயத்தில் முன்னணியில் இருப்பதோடு குடிமக்கள் இதழியல் என்று சொல்லப்படும் பொதுமக்களே பத்திரிகையாளர்களாக செயல்படும் போக்கிலும் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டில் உதயமான ஓ மை நியூஸ் செய்திதளம் இன்று இன்டெர்நெட் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் குடிமக்கள் இதழியலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இந்த போக்குகளையெல்லாம் இப்புத்தகம் விரிவாக அலசுகிறது. மிக சரியாக இந்த புத்தகத்திற்கு டிஜிட்டல் கொரியா என்று பெயர் வைக்கப் பட்டிருப்பதாக பாராட்டப்படுகிறது. காரணம் இன்று உலகில் டிஜிட்டல் தேசம் என்று ஏதாவது ஒன்று இருக்குமாயின் அது கொரியாதான் என்று சொல்ல தோன்றுகிறது.

0 thoughts on “டிஜிட்டல் தேசம் கொரியா”

  1. இவ்வளவு மாற்றங்கள் நடந்தாலும் மடிக்கணினி விலை ஒன்றும் சல்லிசாக இல்லை என்று என் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன்.

  2. பயனுள்ள தகவல்கள். நல்ல அலசல்.

    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *