emford

இணைய விஷமிகளும் வீடியோ பதிலடியும்

இணையம் அற்புதமான அனுபவங்களை தரக்கூடிய அருமையான இடம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி இருப்பதில்லை. சில நேரங்களில் மனங்கொத்திப்பறவைகளாக மாறும் மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் இதயத்தை நொறுக்கிவிடக்கூடியதாக அமைந்துவிடுகின்றன. டிரால்கள் என சொல்லப்படும் இந்த இணைய விஷமிகள் தனியேவும் தாக்குதல் நடத்துவதுண்டு; குழுவாக சேர்ந்துக்கொண்டு கூட்டுத்தாக்குதல் நடத்துவதும் உண்டு. எப்படி இருந்தாலும் தாக்குதலுக்கு இலக்காகும் அப்பாவிகளுக்கு இதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல்களும் பாதிப்புகளும் எல்லையில்லாதது. இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்துள்ளனர். சிலர் இணையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இணையத்தின் இருண்ட பக்கத்திற்கான இந்த கசப்பான உதாரணங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

லண்டனைச்சேர்ந்த இளம் பெண்ணான எம் ஃபோர்ட் அன்மையில் இந்த வகையான கசப்பான அனுபவத்திற்கு இலக்கான போது இணைய விஷமிகளுக்கு பதிலடி தரும் வகையில் வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவேற்றினார். சபாஷ் சரியான பதிலடி என பாராட்டப்படும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி 60 லட்சம் முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக அந்த வீடியோ இணைய தாக்குதலுக்கு இலக்காக கூடிய எவருக்கும் நம்பிக்கையையும் துணிச்சலையும் தரக்கூடியதாக இருக்கிறது.

எம் போர்ட் பற்றி முதலில் ஒரு சிறு குறிப்பு. மாடலிங் துறையில் இருந்துள்ள அவர் 20 வயதிலேயே அதிலிருந்து ஓய்வு (!) பெற்று திரைப்பட உருவாக்கத்தின் பக்கம் வந்தவர். தன்னை இயல்பான கதை சொல்லி என குறிப்பிடும் இவர் 2014 க்கு பிறகு வீடியோ வலைப்பதிவாளராகி யூடியூப் நட்சத்திரமாக பிரபலமானார். மை பேல் ஸ்கின் எனும் அந்த வலைப்பதிவு மூலம் அவர் அழகு கலை குறிப்புகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் போர்ட் மேக்கப் இல்லாத தோற்றத்தில் தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றினார். முகப்பருக்களுடன் தோன்றும் அந்த புகைப்படத்தில் இயல்பாக காட்சி தருவதற்காக அவர் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இணைய வெளியில் வறுத்தெடுக்கப்பட்டார். மேக்கப் இல்லாத கோலத்திற்காகவும் ,முகப்பரு தோற்றத்திற்காகவும் அவர் கடுமையாக வசைபாடப்பட்டார். இவரது முகத்தை நேராக பார்க்க கூட முடியவில்லை, இவர் முகத்தை கழுவவே மாட்டாரா? என்பது போல மிக மோசமான வகையில் கருத்துக்கள் அமைந்திருந்தன. இது போல ஆயிரக்கணக்கில் கருத்துக்கள் குவிந்தன. இந்த கருத்துக்களை படிக்க கூட வேண்டாம், பார்த்தாலே மனதை வலிக்கச்செய்யும் வகையில் இருந்தன.

இவற்றை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்த போர்ட் எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளாகியிருப்பார் என புரிந்து கொள்ளலாம். ஆனால் அவர் கண்ணீர் வீட்டு கதறவில்லை; ஆவேசமாக பதில் தாக்குதல் நடத்தவில்லை. இந்த வேதனையை மற்றவர்களுக்கும் குறிப்பாக , வசைபாடியவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ படத்தை உருவாக்கினார். முகப்பரு கோலத்துடன் அவர் காட்சி அளிக்கும் அந்த வீடியோவில், அதைப்பார்த்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வரிசையாக வாசகங்களாக இடம்பெற்றன. அந்த கருத்துக்களால் ஏற்படக்கூடிய வலியை அவரது முகபாவனைகள் உணர்த்தின. அதன் பிறகு அவர் மேக்கப் சாதானங்கள் மூலம அழகு செய்து கொண்டார். அப்போது அவரது அழகை பாராட்டும் வகையிலான கருத்துக்கள் திரையில் தோன்றின. ஆனால் அதன் பிறகு எல்லாவற்றுக்கும் மேக்கப் தான் காரணம், அழகில்லாத தோற்றத்தை மறைக்கிறார் என்பது போல மோசமான கருத்துக்கள் தோன்றின. அப்போது அவரது முகத்தில் கண்ணீர் வழிகிறது. இதை பார்க்கும் போது பார்வையாளர்கள் நெஞ்சமும் உலுக்கப்படுகிறது.

இறுதிக்காட்சியில் அவர் கண்களை துடைத்துக்கொள்கிறார். அப்போது ,நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனும் வாசகம் திரையில் தோன்றுகிறது. உங்கள் அழகை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள் எனும் ஊக்கமான வரிகளுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
சமூக ஊடகங்கள் உண்டாகும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பின் பாதிப்பு பற்றி உணர்த்துவதற்காக இந்த வீடியோவை உருவாக்கியதால் போர்ட் கூறியிருக்கிறார்.
நீங்கள் அருவறுப்பாக இருக்கிறீர்கள் (YOULOOKDISGUSTING ) எனும் தலைப்பிலான வீடியோ மூலம் அவர் மற்றவர்கள் தோற்றத்தை விமர்சிப்பவர்களுக்கு எல்லாம் அழகாக பதிலடி கொடுத்திருப்பதாக பாராட்டப்படுகிறார்.

எம் போர்ட் உருவாக்கிய வீடியோ: http://mypaleskin.blogspot.com.au/2015/07/you-look-disgusting.html#.VZt_7bV6fCP

silicon
தளம் புதிது; சிலிக்கான் அகராதி

இணைய அகராதிகளுக்கு குறைவில்லை. ஆங்கில அகராதிகளும் அநேகம் இருக்கின்றன. தமிழ் அகராதிகளும் இருக்கின்றன. இப்போது புதிதாக ஒரு இணைய அகராதி உருவாகி இருக்கிறது- சிலிக்கான் வேலி டிக்‌ஷனரி!
சிலிக்கான் வேலி எல்லோருக்கும் தெரியும். தொழில்நுட்ப நிறுவனங்களின் இருப்பிடம் இது. சிலிக்கான் வேலிக்கு என்று பிரத்யேக கலாச்சாரம் உண்டு. அதற்கென தனி மொழி பிரயோகங்களும் உண்டு. இப்படி சிலிக்கான் வேலியில் புழங்கும் வார்த்தைகளுக்கும் , பதங்களுக்கும் பொருள் சொல்லும் அகராதியாக இந்த தளம் விளங்குகிறது. அப்படியே அகராதி நோக்கிலான விளக்கம் என்று சொல்வதற்கில்லை. கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்து சற்றே விமர்சன ரகமாக இவை அமைந்துள்ளன. ஆனால், ரசிக்கும்படி இருக்கிறது.

இணையதள முகவரி: http://svdictionary.com/செயலி புதிது; அலர வைக்கும் அலாரம்

ஸ்மார்ட்போனுக்குள் இருந்தபடி துயிலெழுப்ப உதவும் அலாரம் செயலிகள் தான் எத்தனை வகை. இப்போது அலார்மி எனும் புதியதொரு அலாரம் செயலியும் சேர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகவும் எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும் செயலி என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெழுப்பும் நேரத்திற்கு சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றது தான். ஆனால் இது ஒலிக்கத்துவங்கிய பின் இதை சாதாரணமாக நிறுத்திவிட முடியாது. போனில் ஒரு புகைப்பட்த்தை எழுத்து பதிவேற்றிய பிறகு தான் இது மெளனமாகும். அதுவும் எப்படி தெரியுமா? அலாரமை அமைக்கும் போது நீங்கள் தேர்வு செய்து புகைப்படமாக சமர்பித்த இடத்திற்கு சென்று படமெடுத்தால் தான் இதை நிறுத்த முடியும். அது வரை கத்திக்கொண்டே இருக்கும்- அதனால் அதான் எரிச்சலூட்டும் செயலி என்கிறது. பொறுப்பாக அலாரம் வைத்துவிட்டு அதைவிட பொறுப்பாக அதை அனைத்து விட்டு தூங்கி விடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=droom.sleepIfUCan&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImRyb29tLnNsZWVwSWZVQ2FuIl0.

யூடியூப் ரகசியம்

டிவியையே கூட கம்ப்யூட்டர் மானிட்டராக மாற்றிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆனால் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு பழக்கப்பட்டவர்களுக்கு டிவி திரையில் மெனுவை பார்த்து பயன்படுத்துவது சிக்கலாக இருக்கலாம். ஆனால் டிவி திரையில் யூடியூப் வீட்டியோக்களை பார்க்க விரும்பினால் இந்த பிரச்சனைக்கு சுலபமான தீர்வு இருக்கிறது. https://www.youtube.com/tv#/browse-sets?c=FEwhat_to_watch எனும் முகவரிக்கு சென்று டிவிக்கு பொருத்தமான இடைமுகத்தை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

கேட்ஜெட் புதிது; கம்ப்யூட்டர் ஸ்டிக்
சிப் தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் இண்டெல் நிறுவனம் தனது பிசி ஆன் எ ஸ்டிக் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெண்டிரைவ் போல இருக்கும் இந்த சாதனத்தை டிவி திரை அல்லது மானிட்டருடன் இணைத்து கம்ப்யூட்டர் போல பயன்படுத்திக்கொள்ளலாம். சேமித்திறன், வை-பை வசதி என எல்லாமும் இருக்கிறது. லேப்டாப் போல எங்கும் பயன்படுத்தலாம், ஆனால் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்று விடலாம். மின் வணிக தளம் மூலம் வாங்கலாம் என இண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது. +

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *