All posts by CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

குழந்தைக்கு வயது 60

மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்று தனது மணி விழாவை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல்60 என்னும் பெயரில் மான்செஸ்டர் நகரம் அதற்கு கோலாகலமாக தயாராகி இருக்கிறது.
.
இந்த பின்னணியில் அந்த கம்ப்யூட்டரின் அருமை பெருமைகளை கொஞ்சம் பார்ப்போம்.
குறிப்பிட்ட அந்த கம்ப்யூட்டரின் “கீர்த்தி’ சிறியதே தவிர சரித்திரத்தில் அதன் முக்கியத்துவம் மகத்தானது.

கம்ப்யூட்டர் வல்லுனர்கள் மத்தியில் “பேபி’ என்றே செல்லமாக குறிப்பிடப்படும் அந்த கம்ப்யூட்டர், அந்த கால வழக்கப்படி தனக்கென ஒரு பெயர்தொடராலேயே அழைக்கப் பட்டது. “ஸ்மால் ஸ்கேல் எக்ஸ்பரி மென்ட்ஸ் மெஷின்’ என்பது அதன் பெயர் சுருக்கமாக (எஸ்எஸ்இஎம்) கம்ப்யூட்டர் வரலாற்றை திரும்பிப்பார்க்கும்போது இந்த இயந்திரம் மாபெரும் மைல் கல்லாக காட்சி தருவதோடு, முதல் நவீன கம்ப்யூட்டர் என்னும் அந்தஸ்தையும் தாங்கி நிற்கிறது.

பல விதங்களில் இந்த கம்ப்யூட்டர் சிறப்பு வாய்ந்தது. ஒரு பெரிய அறையை கற்பனை செய்து கொள்ளுங்கள் இந்த கம்ப்யூட்டர் அந்த அறை அளவுக்கு பெரியதாக படைக்கப்பட்டது. அதனால் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் என்று பார்த்தால், தற்போதைய செல்போனில் இருக்கும் சிப்புகள் கூட மேம்பட்டதாக இருக்கும்.

ஆனால் பேபி என்று அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டரில் என்ன விசேஷம் என்றால் இது சகல கலா வல்லவனாக இருந்தது என்பதுதான்! அதாவது பல வேலைகளை செய்யக்கூடிய திறன் படைத்ததாக அமைந்திருந்தது. அந்த காலத்தில் இது மிகப்பெரிய விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதெல்லாம் அதாவது, 1940களில் கம்ப்யூட்டர்கள் மலை போன்ற தோற்றத்தோடு உருவாக்கப் பட்டாலும், அவை குறிப்பிட்ட “ஒரே’ ஒரு வேலையை மட்டுமே செய்து முடிக்கும் திறன் பெற்றிருந்தன. இரண்டாவதாக ஒரு வேலையை செய்ய வைக்க வேண்டும் என்றால் அந்த கம்ப்யூட்டரை மீண்டும் உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் “பேபி’ கம்ப்யூட்டர் இத்தகைய நிர்பந்தம் இல்லாமல் பல வேலையை செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. இதனை சாத்தியமாக்கும் வகையில் கொஞ்சம் போல நினைவுதிறனையும் (128 பைட்ஸ்) பெற்றிருந்தது.

இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தரும் ஆற்றலை இந்த நினைவுத்திறனே சாத்தியமாக்கியது. இந்த காரணத்தினாலேயே இது உலகின் முதல் நவீன கம்ப்யூட்டர் என்ற அடைமொழியோடு மரியாதையோடு குறிப்பிடப்படுகிறது. புரோகிராம்களின் அடிப்படையில் செயல்படக்கூடியதாக இருந்ததா லேயே இன்றைய பர்சனல் கம்ப்யூட்டர்கள் லேப்டாப்கள் ஆகிய வற்றுக்கெல்லாம் முன்னோடியாகவும் புகழப்படுகிறது.

புராதன கால அபாகஸ் கருவியில் இருந்த கம்ப்யூட்டரின் வரலாறு துவங்கி விடுகிறது என்றாலும், நெடுங்காலம் வரை இத்தகைய முயற்சி எல்லாமே அடிப்படையில் கணக்கு போடும் இயந்திரங்களாகவே இருந்தன.

கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பேஜ் 1837ல் முதல் முதலில் கம்ப்யூட்டருக்கான அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்தார். “அனல்டிகல் இன்ஜின்’ என்று சொல்லப்படும் இந்த இயந்திரத்துக்கான அடிப்படைகளை அவர் உருவாக்கித் தந்தாரே தவிர, உண்மையில் அவர் எந்த இயந்திரத்தையும் உருவாக்கவில்லை.

ஆனால் பன்ச் கார்டு மூலம் கட்டளை களை உள்ளீடு செய்யலாம் என்னும் அவரது யோசனையே பின்னால் கம்ப்யூட்டருக்கான ஆதாரமாக அமைந்தது. 1936ல் “ஆலன் டியுரிங்’ கம்ப்யூட்டர் இயந்திரத்துக்கு தேவையான சாமுந்திரிகா லட்சணம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இரண்டாம் உலகப்போரின் போதே கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களுக்கான அவசியம் பெரிதும் உணரப்பட்டு அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன. முதல் குறிப்பிடத்தக்க வெற்றி 1941ல் பதிவானது. ஜெர்மனி விஞ்ஞானிகள், ஙூ3 என்னும் பெயரில் இந்த கம்ப்யூட்டரை உருவாக்கினர்.

கம்ப்யூட்டர்களின் தாய்மொழியான “பைனரி அமைப்பின் கீழ் புரோகிராம்’களை செயல்படுத்தும் ஆற்றல் இதனிடம் இருந்தது. இருப்பினும் இதற்கு நினைவுத்திறன் கிடையாது.

ஆகவே தகவல்களை சேமித்து வைக்கும் ஆற்றலும் இருக்கவில்லை. இதே காலத்தில் அமெரிக்காவில் “அடனாசாப்ட் பெரி’ கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. இந்த கம்ப்யூட்டரும் பல சமன்பாடுகளை செயல்படுத்தும் ஆற்றலை மட்டுமே கொண்டிருந்தது.

அடுத்ததாக பிரிட்டனில் கொலசல் என்னும் ராட்சத கம்ப்யூட்டரும் (தோற்றத்தில் தான்) அமெரிக்காவில் ஹார்டுவர்டு மார்க்1 என்னும் கம்ப்யூட்டரும் வடிவமைக்கப் பட்டன.

ஆனால் நினைவுத்திறன் மற்றும் பல வேலைகளை செய்யும் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும் என்னும் அடிப்படை அம்சங்களில் ஏதாவது ஒன்றில் இவை முழுமையடைய வில்லை.

இதனிடையே இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலையில் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. யுத்த காலத்தில் அமெரிக்காவின் “கொலாசஸ்’ கம்ப்யூட்டர் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்த மேக்ஸ் நியூமன் என்னும் நிபுணர் மான்செஸ்டர் பல்கலைக்கு கணித பேராசிரியராக வந்து சேர்ந்தார்.

அவரை தொடர்ந்து டாம் கில்பர்ன் மற்றும் பிரெட்டி வில்லியம்ஸ் ஆகிய நிபுணர்களும் வந்து சேர்ந்தனர். இவர்கள் கூட்டு முயற்சியின் பயனாக 1948ல் ஸ்மால் ஸ்கேன் எக்ஸ்பெரிண்டல் மெஷின் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது.

முதல் நவீன கம்ப்யூட்டர் உருவான கதை இதுதான்! மான்செஸ்டர் இதன் 60வது ஆண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இந்த கம்ப்யூட்டரை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர் இல்லை.

மூன்று பேர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர். அவர்களை கவுரவிக்கவும் மான்செஸ்டர் பல்கலை தீர்மானித்துள்ளது. இந்த கம்ப்யூட்டரின் வருகைக்கு பிறகே நவீன கம்ப்யூட்டரின் சகாப்தம் துவங்கியது. பல காலம் மான்செஸ்டர் அதன் மையமாக விளங்கியது.

1960 களின் கம்ப்யூட்டரின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தை உணர்ந்து முதன் முதலில் “கம்ப்யூட்டர்அறிவியல்’ என்னும் தனிப்பாடப் பிரிவை மான்செஸ்டர் பல்கலை அறிமுகம் செய்தது. 1965ல் இந்த பாடப்பிரிவு அறிமுகமானது.

ஆனால் 1970களில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை இந்த இடத்தை பிடித்துக்கொண்டு விட்டது. அதன் பிறகு கம்ப்யூட்டர்களின் மையம் சிலிக்கான் பல்லத்தாக்கிற்கு மாறிவிட்டது!.

கையுறைகளை காண வாருங்கள்

அழகான ஒரு கையுறை. அதனை சாலை நடுவிலோ அல்லது வேறு ஏதோ பொது இடத்திலோ பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன செய்ய தோன்றும்? கையுறையை எடுத்துக் கொள்வீர்களா? அல்லது விட்டுச் செல்வீர்களா? என்று உங்களது நேர்மையை பரிசோதிப்பதற்கான கேள்வி அல்ல இது.
.
இப்போது ஒரே கையுறைக்கு பதிலாக பல கையுறைகள் சிதறிக் கிடக்கும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அமெரிக்க பெண்மணி ஒருவர் இது போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட போது அவருக்குள் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இணையதளம் ஒன்றையும் அமைக்க வைத்துள்ளது.

அந்த இணையதளம் ஒரு புதுமையான முயற்சியாக அமைந்திருக்கிறது. அந்த இணையதளத்தை பற்றி கேள்விப்பட்டீர்கள் என்றால் நீங்களும் கூட வியந்து போவீர்கள்.
தவற விடப்படும் கையுறைகளை அதன் சொந்தக்காரரிடம் சேர்த்து வைப்பதற்கு வழி செய்யும் இணையதளமாக அது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒன் கோல்டு ஹான்ட் டாட் காம் எனும் பெயரில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசிக்கும் ஜெனிபர் கூச் எனும் இளம்பெண் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.

இந்த தளத்தை அவர் ஏற்படுத்திய கதை மிகவும் சுவாரசியமானது. அவர் அமெரிக்காவின் டன்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர். அதன் பிறகு டெக்சாஸ் நகருக்கு குடியேறி விட்டார்.
டெக்சாஸ் பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க் நகரம் பனிப்பொழிவுக்கு பெயர் பெற்றது.

அங்குள்ள மலைச் சரிவுகளில் பனிப்பொழிவு பெய்து பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். இதனை பார்க்க பல சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதுண்டு. சமீபத்தில் ஜெனிபர் கூச் இந்த பகுதிக்கு சென்றபோது அவருக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது.

பனிப்பொழிவுக்கு நடுவே அவர் அழகான கையுறையை கண்டார். அந்த கையுறை யாருடையதாக இருக்கும்? யார் அதனை தவற விட்டிருப்பார்கள்? போன்ற எண்ணங்கள் அவருக்கு ஏற்பட்டது.

அதற்குள் அந்த இடத்தில் மேலும் பல அழகான கையுறைகள் அங்கும், இங்குமாக சிதறிக் கிடப்பதை அவர் பார்த்தார். பனி மலையில் இப்படி அங்கும், இங்குமாக கையுறைகள் சிதறி கிடந்தது காண்பதற்கு அழகாக இருந்ததோடு அவரது சிந்தனையையும் உலுக்குவதாக அமைந்திருந்தது.

முதலில் பார்த்த கையுறையை அவர் கையில் எடுக்க முயற்சித்தார். அப்போது அந்த கையுறை யாருடையதாக இருக்கும் என்ற எண்ணம் மீண்டும் ஏற்பட்டது. ஒருவேளை அந்த கையுறையை தவற விட்டவர் அதனை எடுத்துச் செல்ல மீண்டும் வந்தால் என்ன ஆவது என்ற எண்ணமும் அவருள் எழுந்தது. அந்த எண்ணத்துடனேயே அந்த கையுறையை எடுத்துக் கொண்டார்.

ஆனால் அந்த கையுறை இருந்த இடத்தில் ஒரு குறுக்குச் சீட்டை விட்டு வந்தார். அந்த சீட்டில் ஒன் கோல்டு ஹான்ட் டாட் காம் எனும் இணையதள முகவரியை எழுதி வைத்திருந்தார். இப்படித்தான் அந்த இணையதளம் உருவானது.

வீட்டிற்கு வந்ததும் அந்த பெயரில் ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அந்த கையுறையின் புகைப்படத்தையும், அதனை தான் கண்டெடுத்த விவரத்தையும் இடம் பெற செய்தார்.

கையுறைக்கு சொந்தக்காரர் அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இப்படியாக அங்கே கண்டெடுத்த மற்ற கையுறைகளையும் புகைப்படத்தோடு தளத்தில் இடம் பெற வைத்தார். கையுறைகளை கண்டெடுத்த இடம் மற்றும் அவற்றின் நிலை குறித்தும் அவர் சிறு குறிப்பும் எழுதியிருந்தார்.

கையுறைகளை தவற விட்டவர்கள் இந்த தளத்தின் மூலமாக அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பம். இதுவரை ஒருவர் கூட கையுறையை கேட்டு வரவில்லை என்றாலும், இந்த தளம் இணையவாசிகளின் கவனத்தை மிகவும் ஈர்த்திருக்கிறது. பலர் இதனை பாராட்டத்தக்க முயற்சி என்று வர்ணித்துள்ளனர்.

கையுறைகளின் புகைப்படங்கள் மற்றும் அவை கண்டெடுத்த காட்சி பற்றிய குறிப்புகள், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றன. மேலும் ஒருவர் தவற விட்ட பொருள் அவரை சென்றடைய வேண்டும் எனும் விருப்பம் மற்றும் அதற்கான அக்கறையும் பலரை கவர்ந்துள்ளது.

இதனையடுத்து ஜெனிபர் கூச், அந்த நகரம் முழுவதும் கையுறைகளை சேமிப்பதற்கான பெட்டிகளை வைப்பது பற்றி யோசித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் இத்தகைய தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஏற்கனவே நியூயார்க் நகருக்கு இது போன்ற தளம் ஒன்றை அமைக்க விரும்புவதாக பெண்மணி ஒருவர் அவரிடம் கூறியுள்ளார். அமெரிக்கா மட்டுமல்ல மற்ற நாடுகளிலும், இது போன்ற இணையதளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
———–
link;www.onecoldhand.com

சாட்டையடி இணைய தளம்

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) தளம், என்றெல்லாம் அந்த தளத்தை வர்ணிக்கலாம். எப்படி குறிப்பிட்டாலும் அந்த தளம் ஆகச் சிறந்த தளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.
.
ஒற்றை குறிக்கோளோடு ஒரே ஒரு பக்கம் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ள அந்த இணைய தளத்தில் அதிக விஷயங்கள் கிடையாது. ஒரே ஒரு நீண்ட விளக்கம் மட்டும் தான்!

அந்த விளக்கத்தை அளித்திருப்பவர் “கேரி டீன்’ என்னும் இங்கிலாந்து கோடீஸ்வரர். டீன் 19 ஆண்டு மணவாழ்க்கைக்கு பிறகு தனது மனைவி ஹெலனை விவாகரத்து செய்திருக்கிறார். விவாகரத்து தொடர்பான விளக்கம் அளிப்பதற்காக தான், டீன்டைவர்ஸ் (deandivorce.com) என்னும் பெயரில் ஒரு பக்க இணைய தளத்தை அமைத்திருக்கிறார்.

யார் இந்த டீன்? அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தால் யாருக்கு என்ன? அதற்காக ஏன் இந்த தளத்தை அவர் அமைக்க வேண்டும்? அவர் தரும் விளக்கத்தை கேட்க யாருக்கு ஆதரவு இருக்கிறது?

எல்லாமே சரியான கேள்விகள் தான்! உண்மையில் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டிருந்தால் டீன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் வேறு கேள்விகள் அவரை நோக்கி கேட்கப் பட்டதாலேயே டீன் தனது விவாகரத்து பற்றி விளக்கம் அளிக்க முன் வந்தார்.

கோடீஸ்வரர் சாபம் என்று உலகில் ஒன்று உண்டல்லவா? அதற்கு டீனும் இலக்கானார். அதாவது, பிரபலமாக இருப்பவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசுவதில் பொது மக்களுக்கு அலாதியான ஆனந்தம் உண்டா யிற்றே! இந்த ஆர்வத்துக்கு பத்திரிகைகளும் தீனி போட, மெய்யோ, பொய்யோ என்று கூட யோசிக்காமல், இல்லாததையும், பொல்லாததையும் பேசுவதுண்டு!

டீன் விவாகரத்து செய்த பிறகு அவரைப்பற்றியும் இப்படி தான் பேசிக் கொண்டனர்.
கோடீஸ்வரரான டீன், தனது மாஜி மனைவியிடம் கஞ்சத்தனமாக நடந்து கொண்டதாகவும், பெரும் செல்வம் இருந்தும் போதிய ஜீவனாம்சம் வழங்க வில்லை என்பதுதான் இந்த பேச்சுக் களின் சாரம்சம். இது எந்த அளவுக்கு சரி என்றெல்லாம் யாரும் யோசித்துப் பார்த்ததாக தெரிய வில்லை. ஆனால் கேரிடீனை பேராசைக்காரர் என்றும் கல் நெஞ்சக்காரர் என்றும் பேசிக் கொண்டனர்.

இப்படி ஊரே புரளி பேசும் போதும் பெரிய மனிதர்கள் என்ன செய்ய முடியும்!
எத்தனையே பிரபலங்களும், பெரிய மனிதர்களும் இத்தகைய தனி மனித தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின் றனர். அவர்களில் யாருமே செய்யாத விஷயத்தை கேரி டீன் செய்ய தீர்மானித்தார்.

வதங்களின் ஊற்றுக்கண்ணை அடைக்கும் வகையில் தானே விளக்கம் அளித்து விடுவதே சரியென நினைத்த டீன், இதற்காக டீன்வெர்ஸ் டாட்காம் தளத்தை அமைத்து, அதில் தனது விவாகரத்து ஒப்பந்த விவரங்களை நீதிமன்ற ஆவணத்தில் உள்ளது உள்ளபடியே இடம் பெற வைத்து விட்டார்.

டீன் மற்றும் ஹெலன் டீன் விவாகரத்து பற்றிய உண்மைகள் என்னும் தலைப்பிலான அந்த விளக் கத்தை அவர் தொடங்கியிருந்த விதமே அற்புதமாக இருந்தது. கொஞ்சம் கவித்துவமாகவும் இருந்தது.

“விவாகரத்து புள்ளி விவரத்தில் ஒரு எண்ணிக்கையாகும் விருப்பத்தோடு யாரும் திருமணம் செய்து கொள்வ தில்லை. நிச்சயம் நான் அப்படி செய்து கொள்ளவில்லை. ஆனால் விவாகரத்து இன்றைய வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. எல்லாம் மாறுகிறது. மனிதர்கள் மாறுகின்றனர் நான் மாறியிருக்கிறேன்.

இந்த ஆரம்ப வரிகளே நேர்மையான விளக்கத்துக்கு அவர் தயராக இருப் பதை உணர்த்தி விடுகிறது அல்லவா? எதற்காக இந்தவிளக்கம் என கூற முற்படும் அடுத்த வரிகளில், அவர் சாட்டையை கையில் எடுத்துக் கொள்கிறார்.

இந்த தளத்தை நான் அமைத்ததற் கான காரணம் ஒன்றே ஒன்றுதான் எனது விவாகரத்து விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு வருக்கும் அது தொடர்பான உண் மையை தெரிவிப்பது தான் இதன் நோக்கம்.

கேரியாராக இருந்தால் என்ன? ஹெலன் யாராக இருந்தால் என்ன? என் விவாகரத்து பற்றி ஒருவரும் கவலைப் படாமல் இருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும் என்று மென்மையாக ஆவேசப்படும் டீன் உண்மை என்ன வென்று தெரியாமலேயே பலரும் பேசிக் கொண்டிருப்பதாகவும் இதெல் லாம் எப்படி தொடங்கியது என்றே தெரியவில்லை, எனவும் குறிப்பிடுகிறார்.

வதந்திகள் எப்படி தொடங்கியது என்பதை விட அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே முக்கியம் என்றும் கூறியுள்ள டீன் “மோச மானவன், பேராசைக்காரன், இதயமில் லாதவன்’ என்றெல்லாம் தன்னைப் பற்றி பேசுபவர்கள் கவனத்திற்கு உண்மையான தகவல் களை முன் வைப்பதற்காக கூறி, விவாகரத்து விவரங்களை விவரிக்கிறார்.

விவாகரத்துபெறும் மனைவிக்கு ரொக்கமாக, மூன்று மில்லியன் சொச்சம் பவுண்டுகளை தருவதாகவும் பிள்ளை கள் படிப்பிற்கான செலவை ஏற்பதா கவும் உறுதி அளிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளேன். அதோடு நகைகள், கார் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் வழங்கியிருக் கிறேன் என ஜீவனாம்ச விவரங்களை அனைத்தையும் பட்டியலிட்டு விடுகிறார்.

இவை எல்லாமே தனக்கும் தனது மாஜி மனைவிக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்தாலும், அவதூறாக பேசியவர்களின் வாயை அடைக்க இவற்றை வெளியிட வேண்டிய தாகி விட்டது என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட் டுள்ளார்.

இவற்றை வெளியிடுவதன் நோக்கம் மாஜி மனைவியை அவமானப் படுத்துவதல்ல என்பதையும் மிகுந்த கன்னியத்தோடு தெளிவுபடுத்தி விடுகிறார்.
என்னைப்பற்றியும், நான் வழங்காத தொகைப்பற்றியும் விவாதம் செய்பவர் கள் இனி, அத்தகைய ஊகங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் வேண்டுகோளோடு இந்த விளக்கம் நிறைவடைகிறது.

மொத்த விஷயங்களும் ஒரு நீண்ட பக்கத்தில் அடங்கி விடுகிறது. வேறு இணைப்புகளோ, கூடுதல் தகவல்களோ கிடையாது. இந்த தளம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் நினைத் திருக்க வாய்ப்பில்லை. வதந்திகள் ஓயும் வரை அதற்கான விளக்கம் அளிக்கும் இடமாக மட்டுமே இருந்தால் போதும் என நினைத்து தளத்தை அந்த நோக்கத்திற்காக மட்டும் டீன் அமைத்தி ருக்கிறார்.

இந்த தளத்தை பார்த்த பிறகு எவருக்கும் அவரைப்பற்றி அவதூறு பேசத் தோன்ற வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு நாகரீகமாக சவுக்கடியும், சாட்டையடியும் கொடுத்து விடுகிறார் உண்மையையும் சொல்வதன் மூலம் மட்டுமே!

விலைக்கு வந்த பெல்ஜியம்

கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணையதளத்தில் சகஜமானதுதான். வினோதமான பொருட்கள் இபேயில் ஏலத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல.
அதே போல ஊர்களும், நாடுகளும் இபேயில் விலைக்கு வருவதும் நடந்திருக்கிறது. இபே மூலம் ஒரு முழு கிராமமே விற்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அது உண்மையாக நிகழ்ந்தது.

.
ஆனால் நாடுகள் விற்பனைக்கு வருவது என்பது உண்மை என்பதை விட கேலியாகவோ, விளையாட் டாகவோதான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த கேலிக்கு பின்னே ஒரு தெளிவான நோக்கம் அல்லது ஆற்ற முடியாத கோபம் இருந்திருக்கிறது. உண்மையில் இபே இணையதளத்தில் ஒரு விஷயத்தை விற்பனைக்கென பட்டியலிடுவதன் மூலம் எளிதாக உலகின் கவனத்தை ஈர்த்து விடலாம்.

அந்த வகையில் ஒரு வலுவான செய்தியை தெரிவிக்க இப்படி இபேவில் நாடுகளை விற்பதாக அறிவிப்பதுண்டு. ஈராக் போரின் போது அமெரிக்காவில் ஆக்கிரமிப்பு உணர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈராக் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே பாணியில் தற்போது ஐரோப்பிய நாடான பெல்ஜியம் இபேயில் விற்பனைக்கு வந்திருக் கிறது. அந்நாட்டை சேர்ந்த ஆசிரியரும், முன்னாள் பத்திரிகை யாளருமான கேரிட் சிக்ஸ் என்பவர் பெல்ஜியத்தை விற்பதாக அறிவித்திருக்கிறார்.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள பெல்ஜியத்தை விலை கொடுத்து வாங்கினால் ராஜா மற்றும் நீதிமன்றம் இலவசமாக கிடைக்கும் என்று இதற்காக இபேவில் அவர் உருவாக்கிய விளம்பர பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் எதிர்பார்த்ததுபோலவே இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை ஈர்த்தது.

இபே கலாச்சாரம் பற்றி அறியாதவர்களுக்கு இது வியப்பை அல்லது அதிர்ச்சியை அளிக்கலாம். ஒரு நாட்டை விற்பனைக்கு கொண்டு வருவதா? என்னதான் விளையாட்டு என்றாலும் அதற்கு நாடுதான் கிடைத்ததா? என்றெல்லாம் கேட்க தோன்றலாம். இந்த நடவடிக்கைக்கு பின்னே உள்ள நோக்கத்தை தெரிந்து கொண்டால் இந்த கேள்விகளுக்கான விடை கிடைத்து விடும்.

பெல்ஜியம் நாட்டில் தற்போது கடும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த விஷயம் தலைப்பு செய்தியில் இடம் பிடிக்காததால் பெரும்பாலா னோருக்கு தெரியாமலே போயிருக்கலாம். ஆனால் பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இந்த நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெல்ஜியம் நாட்டில் டச்சு மொழி பேசுபவர்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இடையே அரசியல் மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இந்த இரு கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு இன்னமும் முடிவு தெரியவில்லை.

நூறு நாட்கள் ஆன பிறகும் ஆட்சியமைக்க முடியாமல் கட்சிகள் சண்டையிட்டு கொண்டிருப்பதால் சராசரி பெல்ஜியம் மக்கள் வெறுத்துப் போயிருக்கின்றனர். இவர்களில் ஒருவரான கேரிட் சிக்ஸ் வெறுத்து போனதோடு கொதித்தும் போயிருக்கிறார்.

நாட்டின் நலனை மறந்து விட்டு கட்சிகள் இப்படி அடித்துக் கொள்வதை கண்டிக்க நினைத்த அவர், அதற்கான சிறந்த வழி இபே தளத்தில் நாட்டை விற்பதாக அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தார்.

இந்த வினோத அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்து பெல்ஜியத்தின் பிரச்சனையையும் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறது. பெல்ஜியம் மிகவும் விலை மதிப்பு மிக்கது. அதனை மறந்து விட்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பது சரியல்ல என்பதை இந்த விளம்பரத்தின் மூலம் உணர்த்த விரும்பியதாக கேரிட் சிக்ஸ் கூறுகிறார். இபே நிர்வாகமும் இதனை அங்கீகரிக்கிறது.

பெல்ஜியம் மகத்தான நாடு. அதனை விற்பது வெட்கப்பட வேண்டிய செயல் என்பது போன்ற செய்தியை உணர்த்திய இந்த விளம்பரத்தை இடம் பெற வைப்பதில் மகிழ்ச்சியே என்று இபே சார்பில் கூறப்பட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒரு சிலர் பெல்ஜியத்தை வாங்குவதற்காக தாங்கள் தர தயாராக இருக்கும் விலையையும் குறிப்பிட்டு ஏலம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து இபே இந்த விளம்பரத்தை அகற்றி விட்டது.

தணிக்கைகள் பலவிதம்

ஈரானில் சிவப்பு நிற ஐகான். சிரியாவில் ஒரு சிறு குறிப்பு. சவூதி அரேபியாவில் ஒற்றை எழுத்துக்களில் மீண்டும் அறிவிப்பு. இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா?
இதெல்லாம் இன்டெர்நெட் தணிக்கைக்கான அடையாள சின்னங்கள்தான். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளை பார்த்ததுமே அவை எல்லாமே மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவை என்பது விளங்கி விடும்.
இன்டெர்நெட்டுக்கு வாய்ப்பூட்டு போடும் விஷயத்தில் முன் நிற்கும் நாடுகளும் இவைதானே. கிழக்கில் ஒரு சீனா என்றால், அதற்கு நிகராக இன்டெர்நெட் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பவையாக அரபு நாடுகள் திகழ்கின்றன.

நாம் இன்டெர்நெட்டை பார்ப்பதற்கும் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் இன்டெர்நெட்டை
பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய அனுபவம் எல்லையில்லா பெருவெளிக்கு நிகரானது என்றால் அரபு நாடுகளை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் பாதை மறிக்கப்படும் பயணத்தை போன்றது, இன்டெர்நெட்டில் உலா வருவது.

காரணம் இந்த நாடுகளில் அநேக இணையதளங்கள் பார்க்கத்தகாதவை என்று தடை விதிக்கப்படுவதுதான். கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கு இன்டெர்நெட் வழி செய்திருப்பதால், கருத்துப் பரிமாற்றத்திற்கும் போராட்டம் நடத்துவதற்கும் இன்டெர்நெட் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

இந்த காரணத்தினாலேயே சுதந்திரத்தை நேசிப்பவர்கள் அதன் அடையாளமாக இன்டெர்நெட்டையும் நேசிக்கின்றனர். ஆனால் இதே காரணத்திற்காக சர்வாதிகார மற்றும் ஜனநாயகம் இல்லாத அரசுகள் இன்டெர்நெட்டை கட்டுப்படுத்தவும் விரும்புகின்றன.

அரசுக்கு எதிரான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இன்டெர்நெட் கைகொடுக்கும் என்பதால் சர்வாதிகார அரசுகள் இன்டெர்நெட் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்கின்றன.

அவை பலவித வழிகளை கையாண்டு இன்டெர்நெட் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வருவதோடு தங்கள் கொள்கைக்கு பாதகமாக அமையக் கூடிய இணையதளம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு தடை விதித்து விடுகின்றன.

பெரும்பாலான அரபு நாடுகள் இந்த பட்டியலில்தான் வருகின்றன. விதிவிலக்காக மொராக்கோ, ஜோர்டான், லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மட்டும்தான் இன்டெர்நெட்டுக்கு எவ்வித தடையும் விதிக்காமல் இருக்கின்றன.

எகிப்து தற்போது இதற்கான சட்டத்தை தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. மற்றபடி சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இன்டெர்நெட் கட்டுப்பாடு தீவிரமாகவே இருக்கிறது.
இன்டெர்நெட்டில் அதிகம் பார்க்கப்படும் தளங்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம் பெற்றிருக்கும் மை ஸ்பேஸ், பேஸ்புக், யுடியூப் போன்ற தளங்களையெல்லாம் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் அணுகவே முடியாது.

அவற்றை அணுக முயற்சிக்கும் போது தடை செய்யப்பட்டிருக்கிறது எனும் தகவல்தான் வந்து நிற்கும். அதாவது ஈரானில் பேஸ்புக் அல்லது மை ஸ்பேஸ் தளத்தை யாராவது பார்க்க முயற்சித்தால் அவரது கம்ப்யூட்டரில் அந்த இணையதளம் வருவதற்கு பதிலாக ஒரு சிவப்பு ஐகான் மட்டுமே தென்படும்.

குறிப்பிட்ட அந்த தளம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது.
பெரும்பாலான அரபு நாடுகள் இந்த தகவலை கொட்டை எழுத்துக்களில் தெரிவித்து எச்சரிக்கின்றன. ஈராக்கில் கூட அமெரிக்க ராணுவம் தங்களுக்கு பாதகமான இணையதளங்களுக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது.

இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். அண்மையில் கூட ஈரானில் 2 பேர் பெண்ணிய கருத்துக்களை பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் ஆபத்தானவை எனும் அறிவிப்போடு தடை செய்யப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளிலும் இத்தகைய இன்டெர்நெட் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. ஆனால் ஒன்று. அரசுகளை போலவே இந்த நாடுகளின் இணையவாசிகளும் கில்லாடிகளாகவே இருக்கின்றனர்.

அரசு கட்டுப்பாட்டை விதித்தால் அவற்றை மீறி இணையதளத்தை பார்வையிடும் வழிகளை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இதற்காக மாற்று ஐபி அடையாளங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல வழிகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இவற்றை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதும் சம்பந்தப்பட்ட நாடுகளின் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இன்டெர்நெட் கட்டுப்பாடு தீவிரமாக இருக்கிறதே தவிர முழு வெற்றி பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.