நாடோடி அதிபர்கள்-2

நாடோடி அதிபர்களாக நீங்களும் வாழலாம் என்று சொன்னால், நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இது ஒன்றும் சாத்தியம் ஆக முடியாத அதிசயம் அல்ல. துணிச்சலும், புதிய இடங்களை பார்ப்பதில் பரவசமாகும் ஆர்வம் இருந்தால் நீங்களும் கூட ஊர் ஊராக சென்றபடி அங்கிருந்தே வேலை பார்க்கலாம். அல்லது தொழில் செய்யலாம்.
.
மேலை நாட்டினர் பொதுவாகவே பயண பிரியர்களாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் இப்படி துணிந்து நாடோடி அதிபர்களாகியிருக்கின்றனர். குறிப்பிட்ட காலம் உழைத்து விட்டு சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு மாதக்கணக்கில்  சுற்றுலா செல்லும் பழக்கம் மேலை நாட்டினருக்கு இருக்கிறது.

உலக அனுபவத்துக்கு இது உதவுகிறது என்றாலும், ஒரு சிக்கல் என்னவென்றால் பயணம் முடித்து திரும்பி வரும்போது, கையில் இருந்த காசெல்லாம் கரைந்திருக்கும்.
இதற்கு மாற்றாக சுற்றுலா பயணம் மேற்கொள்ளும்போதே வேலையும் பார்த்துக்கொண்டிருந்தால், கையில் காசு புரண்டு கொண்டே இருக்கும்.

இந்த காரணத்துக்காகவே பலர் தாங்கள் செல்லும் இடத்துக்கு தங்களது வேலையையும் எடுத்துச் சென்று விடுகின்றனர். இன்டெர்நெட் வசதி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பணி செய்வது சாத்தியமாவதால், இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

 

 வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது பழக்கமான ஒரு கருத்தாக்கம்தானே. இன்டெர்நெட் இதனை சுலபமாக்கி தந்திருக்கிறது. அலுவலகம் பக்கமே தலை வைத்துப் படுக்காமல், இமெயில் மூலமே தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விடும் நபர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

இதையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று வெவ்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கிருந்த படியே வேலை செய்யும் ஆர்வமும், துணிச்சலும் அந்தோனி பேஜ் போன்றோருக்கு இருக்கிறது.

பல நாடுகளில் சுற்றியபடி தன்னுடைய இணைய வடிவமைப்பாளர் வேலையை சிறப்பாக செய்து வரும் அவர், தன்னைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக என்றே ஒரு இணையதளத்தையும் அமைத்திருக்கிறார். ஒர்க்கிங் நோ மேட்ஸ் டாட் காம் என்பது அந்த தளத்தின் முகவரி. அதாவது பணிபுரியும் நாடோடிகள் என்ற பொருள் வரும்.

இந்த தளத்தில் அவர் தனது பயண, பணி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு புதிதாக இத்தகைய வாழ்க்கையை துவங்க இருப்பவர் களுக்கான ஆலோசனைகளையும் அளித்து வருகிறார்.

புதிய நாடுகளுக்கு செல்லும்போது விசா பெறுவது எப்படி? அங்கே தங்குமிடங்கள் எப்படி இருக்கும், உள்ளூர் மக்கள் எவ்வாறு பழகுவார்கள் போன்ற விவரங்களையெல்லாம் அவர் பதிவு செய்து வருகிறார்.

பேஜை போலவே ஊர் சுற்றியபடி சொந்தமாக தொழில் செய்யும் மற்றொரு நபர் கனடாவைச் சேர்ந்த சைமன் லீ பைன்.  வாடிக்கையாளர்கள் தன்னை தொடர்புகொள்ளும் போதெல்லாம் இப்போது  எந்த நாட்டில் இருக்கிறீர்கள், எந்த இடத்தைப் பார்த்தீர்கள் என்று தவறாமல் விசாரிப்பதாக அவர் கூறுகிறார்.

ஊர் சுற்றியபடி இருப்பது அவருக்கு ஒரு கூடுதல் தகுதியாகியிருப்பதை இந்த விசாரிப்பு உணர்த்துகிறது அல்லவா? அது மட்டுமல்லாமல் வெளியூரில் தங்கியிருக்கும்போது, உண்மையில் செலவு குறைந்து கூடுதலாக சேமிக்க முடிகிறது என்கிறார் அவர்.

பேஜே கூட லண்டனில் இருந்ததை விட ஊர் சுற்றி பார்க்கும் இந்த காலத்தில் அதிகம் சம்பாதித்து அதிகம் சேமித்திருப்பதாக தெரிவிக்கிறார். அதோடு, புதிய இடங்களை பார்க்கும் அனுபவம் மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தை எதிர்கொள்ள நேர்வது உங்களது சிந்தனையை செழுமையாக்கி துடிப்போடு செயல்பட வைக்கிறது.

இந்த அனுபவம் எப்போதுமே புத்துணர்ச்சி மிக்கவராக, செல்வ செழிப்பு மிக்கவராக உணரவும் வைக்கிறது என்கிறார் பேஜ். ஆக, நிச்சயம் நீங்களும் துணிந்து நாடோடி அதிபராகலாம். வெளியே இருந்தபடி பணி செய்வதற்கு ஏற்ற துறையை தேர்வு செய்து கொண்டால், போதுமானது.

இன்டெர்நெட் சார்ந்த வேலை என்றால் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்காக தொழில் நுட்ப கில்லாடிகள் மட்டும்தான் இப்படி வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு தெரிந்த வேலையை கூட இன்டெர் துணையோடு நிறைவேற்றிக் கொள்ளும் வழியை கண்டு பிடித்து விடலாம்.

உதாரணத்துக்கு நீங்கள் பங்குச் சந்தை ஆலோசனை வழங்குபவர் என்றால், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பங்குச் சந்தை நடவடிக்கைகளை கவனித்து உங்களது வாடிக்கையாளர்களுக்கு உரிய ஆலோசனையை வழங்க முடியும் தானே.
இப்படி உங்களுக்கு ஏற்ற வழியை நீங்களும் தேடிக்கொள்ளலாம்.

நாடோடி அதிபர்கள்1

‘மாதந்தோறும் 800 டாலர்கள் சம்பாதிக்கிறேன். ஆனால் நாடோடியாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ இப்படி கூறும் அந்தோனி பேஜ் குரலில் ஒருவித ஆனந்தம். அவரது முகத்தில் ஒரு எல்லையில்லாத திருப்தி.  லண்டனைச் சேர்ந்த பேஜ், சந்தோஷமாக உலகில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அதனால்தான் தன்னை நாடோடி என்று குறிப்பிடுகி றார். அதேநேரத்தில், கைநிறைய சம்பாதிக்கவும் செய்கிறார்.
.
புதிய புதிய இடங்களை சுற்றிப் பார்த்தபடி, மனதுக்கு பிடித்த வேலையை செய்து கொண்டிருப்ப தால், அவர் பேரானந்தத்தோடு இருக்கிறார். பேஜ் நிச்சயம் புதுமையான மனிதர் தான். அதைவிட அவரது வாழ்க்கை முறை முற்றிலும் புதுமையானது.
பொதுவாக ஊர் சுற்றுவதும், உழைப்பதும் ஒன்றுக்கொன்று எதிரா னது. ஊர் சுற்றுபவர்கள் உழைப்பவர் களாக இருக்க வாய்ப்பு இல்லை. உழைக்கும் நோக்கம் கொண்டவர்கள் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

ஆனால் அந்தோனி பேஜோ, ஊர் சுற்றிபடி உழைத்துக்கொண்டிருக் கிறார் என்பதுதான் விசேஷமானது. அவரை நவீன நாடோடி என்று சொல்லலாம். அல்லது நாடோடி அதிபர் என்றும் சொல்லலாம். காரணம், அவர் சொந்தமாக தொழில் செய்தபடி, அதேநேரத்தில் உலக நாடுகளை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
துணிமணிகளுக்கான ஒரு பெட்டி, ஒரு லேப்டாப் இவ்வளவுதான் அவருடைய சொத்து. அதை முதுகில் சுமந்தபடி விரும்பிய நாடுகளுக்கு சுற்றுலா பயணியாக சென்று விடு கிறார். ஓட்டலில் தங்கிக் கொள்கிறார். சுற்றுலா பயணியாக இருப்பதற்கு இந்த வசதி போதுமானதுதான். ஆனால் இப்படி இருந்துகொண்டே சொந்தமாக தொழில் செய்வது எப்படி?
அதற்கு அலுவலகம் வேண்டாமா?, ஊழியர்கள் வேண்டாமா?, முதலீடு தேவையில்லையா?
இதெல்லாம் எதற்கு? இன்டெர்நெட் இணைப்பு இருந்தால் போதாதா? என்றுகேட்கிறார் பேஜ்.

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், ஏதாவது ஒரு இடத்தில் இன்டெர்நெட் இணைப்பை பார்க்க முடிகிறது. ஏழை நாடுகளில் கூட ஒரு இடத்தில் இல்லை என்றால், இன்னொரு இடத்தில் இன்டெர்நெட் மையம் இருக்கிறது.

அங்கிருந்தபடி வாடிக்கையாளர் களை தொடர்புகொண்டால் போயிற்று. இமெயில் யுகத்தில் வேலைக்கான ஆர்டரை பெறுவதற்கோ அல்லது வேலையை முடித்து அனுப்புவதற்கோ தூரம் ஒரு பிரச்சனையா என்ன? எங்கிருந்தாலும் இன்டெர்நெட் மூலமே தொடர்புகொண்டு விடலாமே?

வேலையை முடித்தபிறகு பணம் பெறுவதற்கு கூட “பேபால்’  போன்ற எளிமையான இன்டெர்நெட் பண வசதி முறை இருக்கிறது. அப்படி இருக்க எந்த ஊரில் இருந்தால் என்ன? நமக்கு தெரிந்த வேலையை தாராளமாக செய்ய முடியும்தானே! இந்த நம்பிக்கையோடுதான் பேஜ் லண்டனிலிருந்து லேப்டாப்பை மட்டும் எடுத்துக்கொண்டு உலகை சுற்ற புறப்பட்டு விட்டார். 35வது வயதாகும் பேஜ், கம்ப்யூட்டர் விஷயத்தில் கில்லாடி. லண்டனில் ஹைடெக் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் திடீரென அந்த நிறுவனம் தனது பெரும்பாலான பணிகளை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் முறையில் மாற்றிவிட்டது. இதனால் பேஜ் உள்ளிட்ட பல ஊழியர்களின் சேவை தேவை யில்லை என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. வேலை போனதால் வெறுத்துப் போன பேஜ் மீண்டும் வேலை தேட மனமின்றி கையிலிருக்கும் தொழிலை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்.

இயல்பாகவே  அவர் சுற்றுலா பிரியர். புதிய இடங்களை பார்த்து மகிழும் விருப்பம் கொண்டவர். எனவே, சொந்தமாக தொழில் செய்வது என முடிவு செய்தபிறகு சொந்த ஊரிலேயே இருக்க வேண்டிய அவசிம்  என்ன? ஊர் ஊராக சுற்றிப்பார்ப்போமே என தீர்மானித்து விட்டார்.

புறப்படுவதற்கு முன்பாக தனக்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு ஊருக்கு போகிறேன். எதுவாக இருந்தாலும் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் அங்கிருந்தே முடித்து தருகிறேன் என்று கூறிவிட்டார். கடந்த 9 மாதங்களுக்கு மேலாக அவர் பல நாடுகளில் சுற்றியபடி ஓய்வு நேரத்தில் வேலையும் செய்து கொண்டிருக்கிறார்.

எந்த இடத்தில் இருக்கிறாரோ அதற்கு அருகே உள்ள இன்டெர்நெட் மையம்தான் தன்னுடைய அலுவலகம் என்று அவர் உற்சாகமாக கூறுகிறார். இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதோடு வருவாய் தேடித்தரக்கூடியதாகவும் இருக்கிறது என்று அவர் தெம்பாகவே சொல்கிறார்.

பேஜ் அப்படி என்னவேலை செய்கிறார் என்று வியந்து போக வேண்டிய அவசியம் இல்லை. அவர் இணையதள வடிவமைப்பாளராக இருக்கிறார். இந்த வேலையை எங்கிருந்தும் செய்யலாம் அல்லவா? லண்டனில் தனக்குதெரிந்த வாடிக்கை யாளர்கள் மற்றும் இன்டெர்நெட் மூலம் அறிமுகமான நிறுவனங்களுக்கு இருந்த இடத்தில் இருந்தபடியே அவர்களின் தேவைக்கு ஏற்ப இணையதளங்களை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.

கூடவே தனக்கென சில இணைய தளங்களை அமைத்து அதன்மூலம் விளம்பர வருவாயையும் தேடிக் கொண்டிருக்கிறார். எனவே கைநிறைய காசு புரள்கிறது.
இணையதளங்களின் மூலம் வரும் வருமானத்தை மட்டுமே வைத்துக் கொண்டு புதிய புதிய நகரங்களை பார்த்தபடி வாழ்க்கை நடத்த முடியுமா என்று யோசித்து பார்க்கும் உத்தேசத்தோடு கிளம்பி வந்ததாக கூறும் பேஜ், அதில் வெற்றி பெற்றிருப்பதை அவரது உற்சாக குரலே உணர்த்துகிறது.

பேஜ் அனுபவம் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அவரது அனுபவம் விதிவிலக்கானது அல்ல. இது  புதிய போக்காகவே உருவாகி வருகிறது.
பேஜை போல மேலும் பலர் இப்படி நாடோடி அதிபர்களாக வாழத் துணிந்திருக்கின்றனர்.
நீங்களும் கூட இப்படி வாழலாம். அதுபற்றி நாளை பார்க்கலாம்

யூடியூப் விவாகரத்து

இது வீடியோ யுகம். யூடியூப் காலம். எனவே  அந்தரங்க வீடியோ கோப்புகள்  இன்டெர்நெட்டில் பதிவேற்றப்பட்டு உலகம் முழுவதும் உள்ளவர்களால் பார்த்து ரசிக்கப்படுவது  வியப்புக்கோ, திகைப்புக்கோ உரியதல்ல.
.
எத்தனையோ விதமான வீடியோ காட்சிகள், யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  யூடியூப் தளத்தில், வன்முறை காட்சிகள் இடம் பெற வைக்கப்பட்டு திகைப்பை ஏற்படுத்தியுள்ளன.  

யூடியூப்பில் இடம் பெறும் வீடியோ கோப்புகள், குற்றவாளிகளை பிடிக்க உதவியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க பெண்மணி ஒருவர் விவாகரத்து கேட்டு யூடியூபுக்கு போயிருக்கிறார்.

வழக்கமாக விவாகரத்து கோருபவர்கள்  நீதிமன்றங்களைத் தான் நாடுவார்கள்.  டிரேசியா வால்ஷ் ஸ்மித் என்னும் அந்த பெண்மணியும் நீதிமன்றத்தையே நாடியிருக்கிறார்.
ஆனால் அதோடு யூடியூபின் உதவியையும் நாடியிருக்கிறார். அதாவது விவாகரத்து கோருவதற்கான சூழ்நிலையையும், காரணங்களையும் அவர் வீடியோ கோப்பில் விவரித்து அதனை யூடியூப் தளத்தில்  இடம் பெற வைத்திருக்கிறார். 

பிரிட்டனைச் சேர்ந்த டிரேசியா, அமெரிக்காவில் குடியேறி கோடீஸ்வரர் பிலிப் ஸ்மித்தை மணந்து கொண்டார்.  பிலிப் ஸ்மித்திற்கு 75 வயதாகிறது.  இவர்களின் இல்வாழ்க்கை சொல்லிக் கொள்ளும் படி சிறப்பாக இல்லை என்று  தெரிகிறது.

பிராட்வே திரையரங்க உரிமையாளரான ஸ்மித் மீது அவரது மனைவிக்கு கடுங்கோபம் இருக்க வேண்டும் போல் தெரிகிறது.  மணவாழ்க்கையை முறித்து கொள்ள முடிவு செய்துள்ள அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்திருக்கிறார்.  இந்தவழக்கு நடைபெற்று வருகிறது. 

விவாகரத்து கோருவதற்கான முகாந்திரத்தை வழக்கறிஞரிடம் தெளிவாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இது போதும் என்று அவர் நினைக்கவில்லை. தான் விவாகரத்து பெறுவதற்கான காரணம் உலகிற்கு தெரிய வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. வீடியோ காமிராமுன் அமர்ந்து  கொட்டி தீர்த்துவிட்டார்.  கணவரோடு ஏற்பட்ட இல்வாழ்க்கை கசப்புகளை பட்டியலிட்ட அவர், அவரோடு இனியும் தொடர்ந்து வாழ்க்கை நடத்துவது சாத்தியமில்லை என்பதை  கடுங்கோபத்தோடு விவரித்திருக்கிறார்.

இந்த காட்சி 6 நிமிடம் ஓடக்கூடிய படமாக பதிவாகியிருக்கிறது. இந்த படத்தில், கணவர் மீது குற்றச்சாட்டு களை அள்ளி வீசியதோடு, திருமண புகைப்பட ஆல்பத்தை கையில் வைத்து கொண்டு  கணவரின் உறவினர்களையும் ஒரு பிடி பிடித்துள்ளார்.

இப்படி கடுமையான  கோபத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ கோப்பை யூடியூப் தளத்தில் இடம் பெற வைத்து விட்டார்.  யூடியூப் ரசிகர்கள் லட்சக்கணக்கில் இந்த வீடியோ கோப்பை பார்த்து ரசித்துள்ளனர். இதன் காரணமாக இந்த வீடியோ கோப்பு யூடியூப் பட்டியலில் முன்னணி இடத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் இந்த வீடியோ கோப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
யூடியூப் யுகத்தில் அந்தரங்க கோபங்கள் பகிரங்கப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், விவாகரத்து கோரிக்கையை பொது மக்களிடம் தெரியப்படுத்தி, மணவாழ்க்கை ரகசியங்களை  ஒருவர் பகிர்ந்து கொள்ள முன்வந்திருப்பது பலரை திடுக்கிட வைத்துள்ளது. 

பொதுவாக யூடியூப் தளத்தில் அந்தரங்க  வீடியோ கோப்புகளை பதிவேற்றுபவர்கள் இளைஞர் களாகவே இருக்கின்றனர். அதில் ஒருவித விளையாட்டு தன்மை இருக்கும். ஆனால் இல்வாழ்க்கை சம்பந்தமான முற்றிலும் அந்தரங்க மான விவரங்கள் இப்படி  வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருப்பது  முன்னெப்போதும் நிகழ்ந்திராததாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள முன்னணி பத்திரிகைகள் இந்த நிகழ்வு பற்றி பெரிதாக செய்தி வெளியிட்டு, இதன்  நியாயம் பற்றி விவாதித்து வருகின்றனர்.
ஒருசில நிபுணர்கள் வருங்காலத்தில் இது போன்ற வீடியோ கோரிக்கைகளும், வீடியோ வாக்குமூலங்களும் அதிகரிக்கப் போகின்றன என்று எச்சரித்துள்ளனர்.

யூடியூப் மூலம் கருத்துக்களை வெளியிட பலர் தயாராகி வரும் நிலையில், விவாகரத்து கோரிக்கை போன்றவை வீடியோ கோப்புகளாக யூடியூபில் இடம்பெறுவது  இனி சகஜமாகலாம் என்று ஒரு சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வீடியோ படம் ஒரு போக்காக உருவாகுமா? அல்லது விநோதமான  சம்பவமாக முடிந்து போகுமா என்பது தெரியவில்லை.

இதனிடையே இந்த வீடியோ கோப்பு சம்பந்தப்பட்ட பெண்மணியின் விவாகரத்து வழக்கில் உதவுமா அல்லது வழக்கிற்கே தீங்காக அமையுமா என்னும் விவாதமும் வழக்கறிஞர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.  இந்த வீடியோ கோப்பு நீதிபதியின் மனநிலையை மாற்றலாம் என்று வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.  அந்த பாதிப்பு சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் அமையலாம் என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக விவாகரத்து பற்றி செய்தித் தாள்களில் செய்தி  வந்துவிடக்கூடாதே என்று பலரும் கவலைப்படுவார்கள். ஆனால் இப்போது யூடியூபில் பகிரங்கமாக விவாகரத்து பற்றிய விவரங்களை வெளியிடும் அளவுக்கு நிலைமை வந்திருக்கிறதே என்று  சில வழக்கறிஞர்கள் வருத்தத்தோடு கூறுகின்றனர்.

டிரேசியாவின் விவாகரத்து வழக்கு  எப்படி முடியும் என்று தெரியவில்லை.  ஒருவேளை வழக்கின் தீர்ப்பு பற்றிய விவரத்தையும் அவர் யூடியூப் மூலமே உலகிற்கு அறிவிக்கக்கூடும்.

தினம் ஒரு கால் பந்து

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த கேள்விக்கு, தானத்தில் சிறந்தது கால்பந்து தானம்தான் என்று சொல்லக்கூடும்.

 

இதனை செயல்படுத்தி காட்டுவதற்காகவென்றே அவர் லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார். இந்த தளத்தின் மூலமாக கால்பந்து களை சேகரித்து உலகம் முழுவதும் உள்ள ஏழை எளியவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.  

கிரிக்கெட் மீது மோகம் கொண்ட நம்மவர்களுக்கு கால்பந்தின் அருமை உடனடியாக விளங்கிவிட வாய்ப்பில்லை. இங்கே கிரிக்கெட் என்பது மதமாக இருக்கலாம்.  ஆனால் இந்தியாவுக்கு வெளியே சென்று விட்டால்  கால்பந்துதான் மதம்.
அதிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில், கால்பந்து என்பது சகலமுமாக இருக்கிறது. 

ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும்  இதே நிலைதான். கால்பந்து மீது இந்நாட்டு மக்களுக்கு தீராத பற்று இருப்பதோடு, அதனை விளையாடி மகிழ்வது என்பது  சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும் அமைகிறது. 

அது மட்டுமல்லாமல்  ஏர்டெல் விளம்பரம் ஒன்றில் வருவது போல கால்பந்து என்பது பகைமையை மறந்து நட்பை வளர்ப்பதாகவும் இருக்கிறது. 

குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில்  முள்கம்பிகள் எல்லையை பிரிக்கும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் கால்பந்தாடுவதன் மூலம் நண்பர்களாவார்கள். பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் பல நாடுகளில் இது நடைமுறை எதார்த்தம். கால்பந்து பலரை ஒன்றிணைத்து இருக்கிறது. 

மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ரசிகர்கள், கால்பந்து போட்டிகளில் தங்கள் அணி சிறப்பாக விளையாடுவதை  தேசத்தின்  சார்பில் தெரிவிக்கப்படும் செய்தியாகவே கருதுகின்றனர்.  உலக கோப்பையில்  பெயர் தெரியாத ஒரு ஆப்பிரிக்க தேசம், ஒரே ஒரு போட்டியில்  வெற்றி பெற்றால் கூட  அந்நாட்டவர்  முழுவதும் கொண்டாடி மகிழ்வது இதன் காரணமாகத்தான்.

இப்படி கால்பந்து என்பது ஒரு விளையாட்டுக்கும்  மேற்பட்டதாக இருக்கிறது.  தவிர இயல்பாகவே கால்பந்து விளையாட்டின் மீது அசாத்தியமான ஈடுபாடும் நிலவுகிறது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் வறுமை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பல ஏழை நாடுகளில் சிறுவர்களுக்கு கால்பந்து என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. கால்பந்தை  காசு கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருப்பதால் பல ஏழை சிறுவர்கள் அந்த 
விளையாட்டில் ஈடுபட முடியாத நிலையும் இருக்கிறது.

அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக பணியாற்றிய டிரேவர் ஸ்லேவிக் இதனை நெகிழ்ச்சியான முறையில் உணர்ந்து கொண்டார். அவரே ஒரு கால்பந்தாட்ட பிரியர். எப்போது  பணிநிமித்தமாக பறந்து சென்றாலும்,  தன்னோடு அவர் கால்பந்து ஒன்றை எடுத்து செல்வார்.  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் கால்பந்தாடுவது அவரது வழக்கம்.  ஒருமுறை ஹான்டூராஸ் நாட்டுக்கு சென்றிருந்த போது அவர் தன்னோடு வைத்திருந்த கால்பந்தை  தெருவோர சிறுவர்களுக்கு வழங்கினார்.  

பந்தை வாங்கியதுமே சிறுவர்கள், தங்களது வேலையை மறந்துவிட்டு விமான நிலையம் அருகிலேயே  மிகுந்த மகிழ்ச்சியோடு கால்பந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.
இந்த சம்பவம் அவரது மனதில் ஆழப்பதிந்து விட்டது. அதன் பிறகு  ஈராக்கில் அவர் பணியாற்றி கொண்டிருந்த போது அங்கிருந்த சிறுவர்கள்  அவரிடம் கேட்கும் பரிசு பொருள் என்பது கால்பந்தாகவே இருக்கிறது. 

ஈராக்கில் அவர் தங்கியிருந்த காலத்தில் அமெரிக்க பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், அமெரிக்க படைகளோடு நெருங்கி செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ஒருநாள் சிறுவர்களின் கால்பந்து மோகம் பற்றி குறிப்பிட்ட டிரேவர், பத்திரிகையாளர் டப்சிடம், அமெரிக்கா திரும்பியதும்  முடிந்தால் கால்பந்து களை சேகரித்து அனுப்புமாறு கேட்டு கொண்டார். 

டப்ஸ் நிச்சயம் செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் அமெரிக்கா திரும்பிய சில நாட்கள் கழித்து டிரேவர் குண்டுவெடிப்பில் பலியானதாக செய்தி கிடைத்தது. 

இருப்பினும் டிரேவரின் கடைசி ஆசையாக அதனை ஏற்று கொண்டு  கால்பந்துகளை சேகரித்து அனுப்பும் முயற்சியை அவர் மேற்கொண்டார்.  

இதற்காக  லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் பெயரில் இணைய தளத்தை அமைத்து கால்பந்துகளை சேகரித்து ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார். ஈராக்கோடு நின்றுவிடாமல், ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக் கெல்லாம் கால்பந்துகளை அனுப்பி வைக்கத் தொடங்கினார்.  வசதி படைத்தவர்கள் புதிய கால்பந்தை வாங்கி இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கலாம்.  இவ்வாறு சேகரிக்கப்படும் கால்பந்துகளை தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். 

கால்பந்து கிடைக்கப்பெறும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதனை  பொக்கிஷமாக கருதி மகிழ்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் கால்பந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கான சிறிய பங்களிப்பை செய்யுமாறு லிட்டில்ஃபீட் இணைய தளம் அனைவரையும் கேட்டு கொள்கிறது.

மைஸ்பேஸ் புத்தகம்

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் பட்டதை பதிவு செய்து, புதிய நண்பர்களை தேடிக்கொள்ள மைஸ்பேஸ் பேருதவியாக இருக்கிறது. அதுதான் பிரச்சனையே.

மனதில் பட்டதை எல்லாம் எழுதி விடுவதால் அந்தரங்கத்தின் எல்லைக்கோடு மறைந்து, எல்லாமே பகிரங்கமாகி விடுகிறது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்ட கதைகளும் அநேகம் இருக்கின்றன. இதன் விளைவாக  மைஸ்பேஸ் சர்ச்சைக்கு இலக்காகி இந்த போக்கிற்கு கட்டுப் பாடு தேவை என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்த சர்ச்சைகளை மீறி மைஸ் பேசின் சக்தி அற்புதமானதாக இருக்கிறது. புதிய நண்பர்களை தேடித்தரும் அதன் ஆற்றலை எந்த ஒரு  விஷயத்திற்கு வேண்டுமானால் ஆதரவு திரட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். முதன் முதலில் இதனை உணர்ந்து பயன்படுத்திக் கொண்டது இசைக் கலைஞர்கள் தான். புதிய பாடகர்கள் மைஸ்பேஸ் தளத்தில் ஒரு பக்கத்தை அமைத்து அதன் மூலம் தங்களுக்கான ரசிகர்களை தேடிக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளனர். 

இந்த வெற்றிக்கதைகள் மைஸ்பேஸ் தளத்தை மிகவும் பிரபலமாக்கியதன் விளைவாக பல துறையை சேர்ந்தவர் களும் மைஸ்பேசில் இடம்பிடித்து வருகின்றனர். குறிப்பாக பல எழுத்தாளர்கள் மைஸ்பேஸ் பக்கம் மூலம் வாசகர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். மைஸ்பேஸ் இதற்கான சுலபமான மற்றும் செலவு குறைந்த வழியாக கருதப்படுகிறது.

இந்த பின்னணியில் தான் மைஸ்பேஸ் தளத்துடன் புகழ்பெற்ற ஹார்ப்பர் அண்டு காலின்ஸ் பதிப்பகம் கைகோர்த்துள்ளது. மைஸ்பேஸ் உறுப்பினர்கள் உதவியோடு புத்தகம் ஒன்றை வெளியிட இந்த பதிப்பகத்தின் சிறுவர் புத்தக பிரிவு தீர்மானித்துள்ளது. 

சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான இந்த புத்தகத்தை பத்திரிகையாளரான ஜேகா டாடே என்பவர் எழுத இருக்கிறார். இந்த புத்தகம் தொடர் பான கருத்துக்களை மைஸ்பேஸ் உறுப்பினர்கள் தெரிவிக்கலாம்.

மைஸ்பேசில் எண்ணற்ற சமூகங்கள் இருக்கின்றன. இவற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை சமூக நோக்கில் விவாதிப்பதற்காக என்றே அவர் பிளேனட் என்னும் சமூகமும் இருக்கிறது.

இந்த பகுதியில் தான் புத்தகத்திற் கான ஆலோசனைகளை பதிவு செய்ய வேண்டும். இணையவாசிகள் வழங்கும் ஆலோசனைகளில் இருந்து மிகச் சிறந்த 40 கருத்துக்களை தேர்வு செய்து புத்தகத்தில் பொருத்தமான இடத்தில் பயன்படுத்திக்கொள்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஆய்வு நூல்களில் ஆங்காங்கே நிபுணர்களின் கருத்துக் கள் மேற்கோள் காட்டப்படும் அல்லவா, அதேபோல இணைய வாசிகள் சமர்ப்பிக்கும் கருத்துக்கள் எடுத்தாளப்படும்.

புத்தகத்தின் முடிவில் ஆலோசனை வழங்கியவர்களின் பட்டியலும் இடம் பெற்றிருக்கும். ஆலோசனைகள் ஒரு வரியாகவும் இருக்கலாம்! ஒரு பத்திரிகையாகவும் இருக்கலாம்.
மைஸ்பேஸ்/அவர் பிளேனட் என்னும் பெயரில் வெளியிடப்பட உள்ள இந்த புத்தகம் முதல் கட்டமாக இரண்டு லட்சம் பிரதிகள் அச்சிடப்பட உள்ளது.  அடுத்த  ஆண்டு ஏப்ரல் 22ந் தேதி புத்தகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று உலக பூமி தினம் என்பது விசேஷம்.

மைஸ்பேஸ் தளத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான டாம் ஆண்டர்சன் இந்த திட்டத்தை குறிப்பிடத்தக்க முயற்சி என்று வர்ணிக்கிறார். இளைஞர்களை சுற்றுச்சூழல் விவாதத்தில் ஆர்வம் கொள்ள வைக்க இந்த புத்தக திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை யோடு சொல்கிறார். மைஸ்பேஸ்  மூலம் உருவாக உள்ள முதல் புத்தகமாகவும் இது அமையும் என்கிறார். ஏற்னவே மைஸ்பேஸ் எம்.டிவியோடு இது போன்ற ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டது. தற்போது பதிப்பக நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது.

இதனிடையே மைஸ்பேஸ் மற்றொரு கூட்டு முயற்சியையும் அறிவித்திருக் கிறது. தற்போது வீடியோ கேம்கள் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருவதால், வீடியோ கேம்களை உருவாக்குவதற்காக என்று வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான ஒபிரான் மீடியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த கூட்டு முயற்சியில் 5 நிமிடத்தில் விளையாடி முடிக்க கூடிய குறைந்த நேரத்திலான வீடியோ கேம்கள் உருவாக்கப்பட உள்ளன. போகிற போக்கில் ஆடக் கூடிய எளிமையான கேம்களாக இவை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மைஸ்பேஸ் பற்றி மற்றொரு செய்தி. பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் தனது ரசிகர்களுக்காக என்று மைஸ்பேஸ் தளத்தில் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் எலக்ட்ரிக் கள்  தொடர்பான தனது கருத்துக்களை கூறி அதற்கு தெரிவித்துள்ளார்.