Tag Archives: தேடல்

ஒரு இணைய கையேடு மூடப்படுகிறது, கொஞ்சம் வருந்தலாமே பிளிஸ்!

C6ifJ90VwAAatO4டி.எம்.ஒ.இசட் தளம் முடப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு வருத்தம் தரும் செய்தி என்றாலும், அதைவிட முக்கியமானது, இணையத்தின் மகத்தான ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது தான். அது மட்டுமா, இணைய தேடலின் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. மறக்கப்பட்ட அத்தியாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதனால் தான் இந்த செய்தி இன்னும் வேதனை தருகிறது.
டி.எம்.ஒ.இசட் தளமா அது என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், இந்த தளம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம். இணையத்தின் ஆதிகால கையேடு இது. அதாவது இணையதளங்களை பட்டியலிட்டு பரிந்துரைத்த தளம். யாஹு கையேட்டை போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
யாஹூ கையேடா? அது என்ன என்றும் கேட்கலாம். என்ன செய்ய? கூகுள் அலையில் காணாமல் போன சேவையில் யாஹூ கையேடும் ஒன்று! இருந்தாலும் என்ன யாஹு கையேடு தான் இரு காலத்தில் இணையவாசிகளுக்கு புதிய பயனுள்ள இணையதளங்களை அடையாளம் காட்டும் சேவையாக இருந்தது. இணையத்தின் கலங்கரை விளக்கம் என்றும் சொல்லலாம். அதாவது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இணையதளங்கள், அவற்றின் தன்மைக்கேற்ப பலவித தலைப்புகளில் பட்டியலிடப்பட்டிருக்கும். புதிய தளங்களை நாடுபவர்கள் இந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான பிரிவில் விரும்பிய தலைப்பை கிளிக் செய்து, புதிய தளங்களை தெரிந்து கொள்ளலாம். இதுவும் ஒரு தேடியந்திரம் தான்!
இணையத்தின் துவக்கத்தில் இதுவே இணையதளங்களை கண்டறிவதற்கான வழியாக இருந்தது. லைகோஸ், அல்டாவிஸ்டா போன்ற தேடியந்திரங்களுக்கு மத்தியிலும் இது பிரபலமாக இருந்தது. எனினும், தேடியந்திரமாக கூகுள் எழுச்சி பெற்று இணையத்தில் எதையும் தேடுவதை சுலபமாக்கிய பிறகு, யாஹூ கையேடு செல்வாக்கை இழந்து பின்னர் மூடப்பட்டது.
யாஹூ கையேடு மூடப்பட்டாலும், அதே போன்ற இணைய கையேடான , ஓபன் டைரக்டரி எனப்படும் டி.எம்.ஓ.இசட் தளம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. சிறந்த இணையதளங்களை அறிந்து கொள்ள உதவும் இந்த தளம், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் இணைய கூட்டு முயற்சியாக பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. இடையே இந்த தளத்தின் வடிவமைப்பும் புதுப்பிக்கப்பட்டு சிறந்த தோற்றத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில் தான், இந்த சேவை மார்ச் 14 க்கு பிறகு செயல்படாது என கடந்த மாதம் ஏ.ஓல்.எல் நிறுவனம் அறிவித்தது. ஏ.ஓ.எல் தான் ஓபன் டைரக்டரி தளத்தின் உரிமையாளர்.
தேடியந்திர முடிவுகளை பட்டியலிடுவது உட்பட பலவற்றில் மென்பொருள்கள் இயக்கும் அல்கோரிதம் ஆதிக்கம் செலுத்தும் இணைய உலகில், கைகுத்தல் அரசி போல, மனிதர்கள் பார்த்து கவனமாக தேர்வு செய்த இணையதளங்களின் தொகுப்பாக ஓபன் டைரக்டரி இருந்தது என்பது அதன் தனிச்சிறப்பு. தன்னார்வர்லர்கள் பார்த்து பார்த்து தொகுத்து வழிகாட்டிய அந்த சேவை மூடுவிழா கண்டிருக்கிறது என்பது வருத்தமாக உள்ளது. ஒருவிதத்தில் இணையத்தில் இனி மனிதர்கள் தேர்வுக்கு மதிப்பில்லையோ எனும் கேள்வியையும் எழுப்புகிறது.
கூகுள் ஆதிக்கத்தால் மற்ற மாற்று தேடியந்திரங்களே கவனிப்பாரற்று கிடக்கும் போது, ஓபன் டைரக்டரி சேவை ஈர்ப்பில்லாமல் போனதில் வியப்பென்ன என நினைக்கலாம். இன்னொரு கோணத்தில் பார்த்தால், இணைய கையேடு எனும் கருத்தாக்கத்தின் தேவை முடிந்துவிட்டதே என்றும் கூறலாம்.
இந்த சேவை மூடப்படுவது பற்றிய இரங்கற்பா செய்திகளில் கூட, எப்படியும் ஓபன் டைரக்டரி சேவையை இப்போது யாரும் கண்டுகொள்வதில்லை, மேலும் அது அடிக்கடி சரியாக அப்டேட் செய்யப்படுவதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாராமுகத்தை மீறி, ஓபன் டைரக்டரி சேவை முக்கியமானது என்பதை, அது தொடர்பான குறும்பதிவுகள் உணர்த்துகின்றன. (#DMOZ ) . அது மட்டும் அல்ல, இந்த சேவை மூடப்பட்டது ஏ.ஓ.எல் நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவு என்றும், இந்த திடீர் முடிவு அதன் தன்னார்வலர்கள் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் மதர்போர்ட் செய்தி தளம் தெரிவிக்கிறது. இது பற்றி ஏ.ஓ.எல் விரிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஓ.எல் மூடிவிட்டாலும் தன்னார்வலர்கள் ஒன்று கூடி ஏதேனும் ஒரு வகையில் இதை காப்பாற்றலாம் என எதிர்பார்க்க தோன்றுகிறது.
நிற்க அதே செய்தியில், இந்த தளத்தின் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பும் வருகிறது. தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியால் செயல்படும் இந்த தளம், கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு முன்னோடியும் கூட. இந்த சேவை தங்களுக்கு ஊக்கம் அளித்ததாக விக்கிபீடியா இணை நிறுவனர் லாரி சாங்கர் ஒரு முறை கூறியுள்ளார்.
ஏ.ஒ.எல் நிறுவனம் விலைக்கு வாங்கி இருந்தாலும், இதன் தன்னார்வலர்கள் தங்களுக்குள் சமூக ஒப்பந்தம் செய்து கொண்டே செயல்பட்டு வந்தனர்..
ஆக, விக்கிபிடியாவுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்த சேவை ஏதேனும் ஒரு வகையில் மறு அவதாரம் எடுக்கட்டும்.
இணையத்தில் எப்போதும் கூட்டு முயற்சியின் கை ஓங்கியிருக்க வேண்டும்.

குறிப்பு1; டி,எம்.ஓ.இசட் சேவை பற்றி தமிழ் இந்து இணைய பதிப்பில் எழுதிய ஆவலை விசுவோம் தொடரில் விரிவாக எழுதியுள்ளேன்.- http://bit.ly/2d8rMHm

 

இது நடுநிலையான தேடியந்திரம்!

logo10vertical-home2-192x185அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு.

தேடியந்திர உலகில் எந்த ஒரு ஒற்றை தேடியந்திரமும் ஆதிக்கம் செலுத்துவது நல்லதல்ல, அதை ஏற்றுக்கொள்ளவது அதைவிட நல்லதல்ல எனும் சிந்தனை ஐரோப்பாவில் வலுவாகவே இருக்கிறது. அதன் அடையாளமாக உருவான தேடியந்திரங்களின் வரிசையில் அன்பபிள் தேடியந்திரமும் வருகிறது.

ஆனால் இது மூல தேடியந்திரம் அல்ல: மெட்டா தேடியந்திர வகையைச்சேர்ந்தது. அதாவது இது சொந்தமாக இணையத்தை தேடுவதில்லை. மாறாக, பிற தேடியந்திரங்களின் தேடல் அட்டவனையை பயன்படுத்தி அவற்றில் இருந்து பொருத்தமான தேடல் முடிவுகளை அளிக்கிறது.

மற்ற தேடியந்திரங்களை அடிப்படையாக கொண்டு இயங்கினாலும், இரண்டு காரணங்களுக்காக இந்த தேடியந்திரத்தை கவனிக்க வேண்டும். முதல் காரணம் இதன் தேடல் இடைமுகம் நன்றாக இருக்கிறது. எளிமையாக, ஆனால் சற்று வண்ணமயமாக இருக்கும் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை டைப் செய்ததும் முடிவுகளை வரிசையாக பட்டியலிடுகிறது. தேடல் முடிவுகள் நீல நிற கொட்டை எழுத்துக்கள், அதன் கீழ் சிவப்பு நிறத்தில் இணையதளத்தின் பெயர், அதற்கும் கீழ் தளத்திற்கான விளக்கம் என இதன் தேடல் பட்டியல் தெளிவாக, பளிச்சென இருக்கிறது. முடிவுகளின் இடப்பக்கத்தில் தளத்தின் தன்மையை உணர்த்தும் வகையில் அவற்றின் முகப்பு பக்க துண்டு படம் இடம்பெறுகிறது. வலப்பக்கத்தில் கூடுதல் அம்சங்களுக்கான குறிப்புகள் மற்றும் தேடல் பரிந்துரைகளை காணலாம்.

முடிவுகள் பல தேடியந்திரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை என்பதை பிரதிபலிக்கும் வகையில் பட்டியலின் தரம் இருப்பதை பார்க்கலாம். ஆக, ஓரளவு சிறந்த தேடல் அனுபவத்தையே அளிக்கிறது.

முடிவுகளை இணையம், புகைப்படங்கள், செய்திகள், ஷாப்பிங் உள்ளிட்ட வகைகளின் கீழ் தேடலாம். அறிவியலுக்கான பகுதியும் இருக்கிறது. குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடுவதற்கான குறுக்கு வழி உள்ளிட்ட மேம்பட்ட தேடல் வசதிகளும் இருக்கின்றன.

இந்த தேடியந்திரம் தொடர்பான இரண்டாவது முக்கிய அம்சம், தேடலில் நடுநிலைத்தன்மையை பின்பற்றுவதாக தெரிவிக்கப்படுவது தான். ஆம், இந்த தேடியந்திரம் நடுநிலையான தேடல் முடிவுகளை அளிப்பதாக உறுதி அளிக்கிறது. இந்த நோக்கத்துடன் பல்வேறு தேடியந்திரங்கள் மற்றும் தேடல் ஆதாரங்களில் இருந்து முடிவுகளை எடுத்து அவற்றின் நடுநிலைத்தன்மையை பரிசீலித்து பட்டியலிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தேடல் குமிழ் இல்லாத முடிவுகளை பட்டியலிடுக்கிறது. பொதுவாக கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் முடிவுகளை வடிகட்டித்தருகின்றன. இந்த வடிகட்டல் பலவிதங்கள் நிகழ்கின்றன. இணையவாசிகளின் இருப்பிடத்திற்கு ஏற்ப அவரது நாட்டுக்கான தேடியந்திர வடிவம் முன்வைக்கப்படலாம். உதாரணத்திற்கு,இந்தியாவில் இருந்து தேடுபவர்களுக்கு இந்தியா சார்ந்த தேடல் முடிவுகள் பிரதானமாக இருக்கும். சர்வதேச பதிப்பில் இருந்து இது வேறுபட்டிருக்கும். இது தவிர, இணையவாசிகளின் கடந்த கால தேடல்களுக்கு ஏற்ப அவரது விருப்பங்கள் சார்ந்த தேடல் முடிவுகள் முன்வைக்கப்படலாம். இத்தகைய வடிகட்டல் நிகழ்கிறது என்பதை இணையவாசிகள் அறியாமலே இருக்கலாம். தேடல் குமிழ் என்பது பயனாளிகளின் தகவல் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைவதாக கடுமையான விமர்சனம் இருக்கிறது.

இணைய கடலில் இருந்து தகவல்களை தேடித்தருவதாக நம்பிக்கொண்டிருக்கும் போது, தேடியந்திரங்கள் அந்த முடிவுகளை வடிகட்டி தருவது ஏற்கத்தக்கது அல்லவே. எனவே தான் அவை இணையவாசிகளை சுற்றி ஒரு குமிழை உண்டாக்கி விடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த தேடல் குமிழ்கள் இல்லாமல் தேடல் முடிவுகளை அளிப்பதாக அன்பபிள் பெருமிதம் கொள்கிறது. அதன் பெயரும் இதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இது தவிர, தேடல் ஆதாரங்களின் தன்மையை பரிசீலித்து, நடுநிலையான முடிவுகளை மட்டுமே தேர்வு செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி நடுநிலையான தேடல் ஆதாரங்களை தீர்மானிப்பதற்கான பிரத்யேக வழியை உருவாக்கி வைத்திருப்பதாகவும் அன்பபிள் தெரிவிக்கிறது.

பல்வேறு தேடியந்திரங்களை பரிசீலித்து ஒரே இடத்தில் சிறந்த முடிவுகளை வசதியான முறையில் அளிப்பது இதன் சிறப்பம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இணையவாசிகள் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தேடல் முடிவுகளையும் அளிக்கிறது.

ஜெர்மனியில் உள்ள சாஸே எனும் மென்பொருள் நிறுவனம் இந்த தேடியந்திரத்தின் பின்னே உள்ளது.  நன்கொடை மற்றும் ஷாப்பிங் பரிந்துரை மூலமான நிதி ஆதாரங்களை நம்பி இருக்கிறது.

தேடல் என்பது கூகுளுடன் தொடங்கி கூகுளில் முடியாமல் பரந்து விரிந்திருக்கிறது என்பதை உணர அன்பபிள் தேடியந்திரத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.

 

தேடியந்திர முகவரி: https://www.unbubble.eu/

 

 

மெட்டா தேடியந்திரங்கள் பற்றி அறிய: http://bit.ly/2dybzLd

 

 

கலைகளுக்கான தேடியந்திரம்!

women-artists-of-the-renaissance-sofonisba-anguissola-self-portrait-midகுறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclopedia). பெயரில் இருந்தே உணரக்கூடியது போலவே இது கலைகளுக்கான தேடியந்திரம்.

கலை மற்றும் கலைஞர்கள், குறிப்பாக ஓவியக்கலைஞர்கள் தொடர்பான தகவல்களை தேட இது உதவுகிறது.
முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட கலைகளுக்காக என்று தனியே ஒரு தேடியதிரமா என வியக்கத்தோன்றும். ஆனால், இதை பயன்படுத்திப்பார்க்கும் போது, இவ்வளவுதானா? என்ற அலுப்பும் ஏற்படலாம். ஏனெனில் இதில் எல்லா கலைஞர்களை பற்றிய தகவல்களை தேட முடியாது. இதன் தொகுப்பில் உள்ள கலைஞர்கள் பற்றி மட்டுமே தேட முடியும். பொதுவான தேடலில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு இது ஏமாற்றம் தரலாம். ஆனால் இந்த தேடியந்திரத்தின் வரம்பை புரிந்து கொள்ளும் போது தான் அதன் அருமை புரியும்.

அருங்காட்சியக தரத்தை அளவுகோளாக வைத்துக்கொண்டு தான் இந்த தேடியந்திரம் கலைஞர்கள் மற்றும் அவர்களின் கலை தொடர்பான தகவல்களை தொகுத்தளிக்கிறது. அதாவது உலக அருங்காட்சியகத்தில் படைப்புகள் இடம்பெற்றிருக்க கூடிய கலைஞர்கள் மட்டுமே இந்த தொகுப்பில் உள்ளனர். அது மட்டும் அல்ல, அருங்காட்சியகத்தில் உள்ள அந்த கலைஞர்களின் படைப்புகளை இணையம் மூலம் அணுகும் வாய்ப்பும் இருக்க வேண்டும்.

இது தவிர, பொதுவாக இணையத்தில் தேடப்படும் கலைஞர்கள், இணையத்தின் மூலம் தகவல்கள் தேட்பபடக்கூடிய கலைஞர்கள் தொடர்பான தகவல்களே பட்டியலிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 9,000 கலைஞர்கள் , 2900 கலை இணையதளங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 1,60,000 தான்!
ஆனால் இந்த வரம்புகளை புரிந்து கொண்ட பிறகு இந்த தேடியந்திரத்தை பயன்படுத்த முற்பட்டால் புதிய வெளிச்சம் கிடைத்தது போல இருக்கும். இதில் பிரதானமான மூன்று வகையாக தேடலாம்: கலைஞர்களின் பெயரை குறிப்பிட்டு தேடலாம். அவர்களின் படைப்புகளை பெயரை குறிப்பிட்டும் தேடலாம். மூன்றாவது வழி அருங்காட்சியகத்தை குறிப்பிட்டு தேடுவது.

தேடல் வசதி தவிர, இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள பட்டியலில் இருந்தும் கலைஞர்களை அணுகலாம். கலைஞர்களின் பெயர், அவர்கள் பயன்படுத்திய கலை சாதனம், தேர்வு செய்து கொண்ட வகை மற்றும் அவர்களின் தேசம் ஆகிய தலைப்புகளில் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெண் கலைஞர்களுக்கும் தனிப்பகுதி இருக்கிறது. கலை இயக்க வகைகளுக்கான பட்டியலும் கூட இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து பார்க்கலாம். அந்த பிரிவில் இடம்பெற்றுள்ள கலைஞர்களை தனித்தனியே கிளிக் செய்து பார்க்கலாம்.

இந்த அம்சங்கள் இந்த தளத்திற்கு இணைய கையேடு தன்மையை அளிக்கிறது. முகப்பு பக்கத்திலேயே, பிரபலமான கலைஞர்கள் பட்டியலும் வழிகாட்டுகிறது. மற்றொரு முக்கிய அம்சம் கலை சார்ந்த செய்திகளும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர்கள் பற்றி அறியும் ஆர்வம் கொண்டவர்கள் இந்த தளத்தில் அங்கும் இங்கும் உலாவும் போதே கலைகள் தொடர்பான அருமையான தகவல் களஞ்சியமாக இது அமைந்திருப்பதை உணரலாம்.
குறிப்பிட்ட கலைஞர்கள் தொடர்பான தகவல்களை தேடும் போது இதன் அருமையை இன்னும் கூடுதலாக உணரலாம். பிக்காசோ, வான்கா, சால்வடார் டாலி என ஓவிய மேதைகள் பெயரை கிளிக் செய்து தேடினால் அட என்ற வியப்பு கண்டிப்பாக ஏற்படும். பிக்காசோ என்று குறிப்பிட்டதும் கூகுள் போல கோடிக்கணக்கில் பக்கங்களை பட்டியலிடுவதற்கு பதிலாக், ஒரே பக்கத்தில் பிக்காசோ தகவல்களை முன்வைக்கிறது. ஆனால், எந்த முடிவை கிளிக் செய்தால் பிக்காசோ பற்றிய தகவல்களை சரியாக தெரிந்து கொள்ள முடியும், எந்த தளத்தில் அவரது ஓவியங்களை பார்க்கலாம் என்ற தடுமாற்றம் எல்லாம் இருக்காது. பிக்கசோ பற்றிய சுருக்கமான அறிமுகத்திற்கு கீழே, இந்த விவரங்கள் எல்லாம் அழகாக வகைப்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம். முதலில் அருங்காட்சியகங்களிள் உள்ள பிக்காசோ படைப்புகளின் பட்டியல் தோன்றுகிறது. உலகம் முழுவதும் உள்ள பிக்காசோ ஓவியங்களை இதில் பார்க்கலாம். புதிய சேர்க்கைகள் தனியே அடையாளம் காட்டுப்பட்டுள்ளன. தொடர்ந்து கலைக்கூடங்களில் உள்ள படைப்புகள், ஒளிபடங்களின் பட்டியல் இடம்பெறுகின்றன. பிக்காசோ தொடர்பான இணையதளங்கள், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களையும் தனிதனியே அணுகலாம். தளங்களை தேடிப்பார்க்க வேண்டிய தேவையே இல்லாமல், ஏற்கனவே கவனமாக அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்த தளங்களில் உள்ள தகவல்களை மட்டுமே இங்கு அணுகலாம்.

இதே போல ஒவ்வொரு கலைஞர்களுக்குமான தகவல்களை தேடலாம்.
இந்த தளத்தின் பயன்பாட்டை உணர வேண்டும் என்றால் கலைகளின் மீதும் ஓவியர்கள் மீதும் தனியாத தாகம் இருக்க வேண்டும். இந்த தேடியந்திரத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்றால் கூட, கலைஞர்கள் பற்றியும், கலைகள் பற்றியும் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

கனடாவைச்சேர்ந்த ஜான் மேல்யான் என்பவர் இந்த தேடியந்திரத்தை நடத்தி வருகிறார். 1999 ம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது.

தேடியந்திர முகவரி:http://www.artcyclopedia.com/

தேடல் நுட்பங்கள்: தமிழ் இந்துவில் தேடியந்திரங்கள் தொடர்பான ஆ’வலை’ வீசுவோம் தொடரில் இடம்பெற்று வரும் பிரதான தேடியந்திரங்கள் தவிர கவனத்தை ஈர்க்கும் பிற தேடியந்திரங்களின் வரிசையில் இந்த தேடியந்திரம் அமைகிறது.

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக?

wolff_2946050fதேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்கிறேன். இவற்றில் பல தேடியந்திரங்கள் இடையே காணாமல் போய்விட்டது வேறு விஷயம். ஆனால் இன்னமும் தேடியந்திரங்கள் ஈர்ப்புக்குறியவையாகவே இருக்கின்றன. ஒரு புதிய தேடல் நுட்பத்துடன் அறிமுகமாகும் தேடியந்திரத்தை பரீட்சயம் செய்து கொள்வதை உற்சாகம் அளிக்கவே செய்கிறது.

இந்த ஆர்வம் காரணமாகவே தமிழ் இந்துவில் ஆ’வலை வீசுவோம் எனும் தலைப்பில் தேடியந்திரங்கள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். 25 வது பகுதியில் கணக்கீட்டு இயந்திரம் என வர்ணிக்கப்படும் வோல்பிராம் ஆல்பா பற்றி எழுதியிருக்கிறேன்.

தேடியந்திரங்கள் பற்றி பேச முற்படும் போதெல்லாம், கூகுள் (தான்) சிறந்த தேடியந்திரம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. கூகுளை மிஞ்ச வேறு தேடியந்திரம் இல்லை என்பதில் துவங்கி, கூகுளைவிட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்பது வரை இந்த கருத்து பலவிதமாக அமைகிறது.

கூகுள் சிறந்த தேடியந்திரம் என்பதற்காகவே வேறு தேடியந்திரங்களை அறியாமல் இருப்பதோ, தேவையில்லை என புறந்தள்வதோ சரியானதல்ல. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். மாற்று என்பது தேவை என்பதை மட்டுமே இப்போதைக்கு வலியுறுத்தினால் போதும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் மாற்று தேடியந்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாற்று தேடியந்திரங்கள் ஏன் தேவை என்பதற்கான ஒரு அழகான உதாரணம் பார்க்கலாம். இணையத்தில் பயன்பாட்டில் இல்லாமல் போகும் தளங்கள் பிரச்சனையை நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது ஏற்கனவே இருந்து பின்னர் பல காரணங்களினால் காணாமல் போன தளங்கள். இவை இறந்த இணைப்புகள் அல்லது இறந்த தளங்கள் என குறிப்பிடப்படுகின்றன.

ஏதேனும் ஒரு கட்டத்தில் இத்தகைய இறந்து போன தளங்களை தேடும் தேவை ஏற்படும் போது அவற்றை எப்படி அணுகுவது?

இந்த கேள்விக்கான பதிலை https://www.journalism.cuny.edu/research-center/research-guides/finding-dead-websites/ தளம் முன்வைக்கிறது.

இறந்த தளங்களை அணுகுவதற்கான முதல் வழியாக இந்த தளம், கூகுளில் தேடல் பட்டியலில் கேச்சே பகுதியை கிளிக் செய்து பார்ப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. கேச்சே என்பது, இணையதளங்களின் சேமிக்கப்பட்ட முந்தைய வடிவத்தை குறிக்கும். தேடல் பட்டியலில் தனியே இந்த சேமிக்கப்பட்ட வடிவத்தை பார்க்கலாம். ஆக, ஒரு இணையதளம் இப்போது பயன்பாட்டில் இல்லை என்று தெரியவரும் போது, இந்த சேமிப்பி இணைப்பை கிளிக் செய்து அதன் முந்தைய வடிவத்தை பார்க்கலாம். இறந்த தளங்களை அணுக இது ஒரு வழி.

கூகுள் மட்டும் அல்ல, பிங், டக்டக்கோ போன்ற மற்ற தேடியந்திரங்களிலும் சேமிக்கப்பட்ட பகுதியை பார்க்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுளில் எல்லா தளங்களின் சேமிப்பும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே மற்ற தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் போது விடுபட்ட இணையதளங்களின் பழைய வடிவம் கிடைக்கலாம். அது மட்டும் அல்ல, இவை வேறு வேறு கட்டங்களில் இணையதளங்களை சேமித்து வைத்திருக்கலாம். எனவே காணாமல் போன தளங்களை தேடும் போது ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடும் போது கூடுதல் பலன் கிடைக்கும்.

மற்ற தேடியந்திரங்களும் பயன்பாட்டில் இருக்கும் போது தான் இத்தகைய பரவலான தேர்வு மற்றும் வாய்ப்புகள் சாத்தியம். ஒற்றை தேடியந்திரத்தை மட்டும் நம்பி இருக்கும் போது நமக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை இந்த உதாரணம் புரிய வைக்கிறது அல்லவா?

வெவேறு கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள் கொண்ட தேடியந்திரங்கள் இருப்பது இணைய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

தமிழ் இந்து தேடியந்திர தொடரை வாசிக்க:http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8897674.ece

பாட்டி கற்றுக்கொடுத்த இணைய பாடம்!

_89993166_ben_john_granஇங்கிலாந்தைச்சேர்ந்த 86 வயது பாட்டி ஒருவர் கூகுளில் எப்படி தேடுவது என கற்றுக்கொடுத்திருக்கிறார். கூகுளில் தேடுவது தான் நமக்கெல்லாம் அத்துப்படியாயிற்றே, அப்படி இருக்க பாட்டியிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம். உண்மையில் பாட்டி, தேடல் நுட்பத்தை கற்றுக்கொடுக்கவில்லை, ஆனால் இணைய பயன்பாட்டில் கொஞ்சம் பணிவு தேவை என்பதை தனது அறியாமை மூலம் அழகாக புரிய வைத்திருக்கிறார்.

விஷயம் இது தான். இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் வசிப்பவர் மே அஸ்வத். 86 வயதான இந்த பாட்டி வயதானவர்களுக்கான இணைய வகுப்பில் சேர்ந்து அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் இன்னும் இமெயிலுக்கு கூட அவர் அதிகம் பழகவில்லை. ஆனால் அடிக்கடி கூகுளில் தேடிப்பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார். இப்படி தான் சமீபத்தில் அவர் கூகுளில் ஒரு தகவலை தேடிப்பார்த்திருக்கிறார். அதன் பிறகு தனது லேப்டாப்பை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டார்.
பேரன் பென் எகர்ஸ்லே, பாட்டியை காண வந்த போது இந்த லேப்டாப்பை பார்த்து அதில் கூகுள் தேடல் பக்கம் அப்படியே இருப்பதை கவனித்திருக்கிறார். பாட்டி என்ன தேடிய விதத்தை பார்த்து பேரன் அசந்து போய்விட்டார்.

ஏனெனில் பாட்டி தனது தேடல் கோரிக்கையை மிகவும் பணிவாக டைப் செய்து நன்றியும் தெரிவித்திருந்தார்.
“ தயவு செய்து இந்த ரோமன் எழுத்துக்களை மொழிபெயர்க்கவும், மிக்க நன்றி” – இப்படி தான் பாட்டியின் தேடல் கோரிக்கை அமைந்திருந்தது. கூகுளில் கோடானு கோடி முறை தகவல்கள் தேடப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் கேள்விகளாக கூட கோரிக்கை வைத்துள்ளனர். சிலர் கேலியாக கூட தேடியுள்ளனர். ஆனால், இப்படி தயவு செய்து என கேட்டு பணிவுடன் தேடி அதற்கு நன்றியும் தெரிவித்துக்கொண்ட முதல் பயனாளியாக இந்த பாட்டி தான் இருக்க வேண்டும்.

பேரன் பென் உடனே பாட்டியின் தேடல் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், பகிர்ந்து கொண்டார். “ என் பாட்டியின் லேப்டாப்பை திறந்து பார்த்த போது அவர் தயவு செய்து, மற்றும் நன்றி என பயன்படுத்தியதை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த பகிர்வு பற்றி அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்களை பாட்டியின் பணிவான தேடல் மிகவும் கவர்ந்து விட்டது. பலரும் இந்த பணிவை பாராட்டி டிவிட்டர் மூலம் பதில் அளித்தனர். மேலும் பலர் இந்த குறும்பதிவை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். இந்த தகவலை பார்த்தவர்களும் வியந்து போய் அதை தங்கள் பங்கிற்கு மறு குறும்பதிவிட்டனர்.

இப்படியாக 10,000 முறைகளுக்கு மேல்க் அந்த குறும்பதிவு பகிரப்பட்டு அதைவிட அதிக முறை விரும்பப்பட்டு பாட்டி இணைய புகழ் பெற்ற பாட்டியாகிவிட்டார். அது மட்டும் அல்ல இந்த குறும்பதிவுகளை கவனித்த கூகுல் நிறுவனமே அவருக்கு பதில் அளித்து, எங்களுக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் பாட்டியம்மா எனக்கூறி அவரது பணிவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

ஆனால் பாட்டி இணைய புகழ் பெற்றது முக்கியமல்ல: அவர் செய்த விஷயமும் அதற்கான எதிர்வினையுமே முக்கியமாக இருக்கிறது.

நாம் எல்லோரும் தான் இணையத்தில் தேடுகிறோம். சொல்லப்போனால் தேடல் கலையில் நிபுணத்துவமும் பெற்று விடுகிறோம். ஆனால் தேடலை நாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். தேடல் என்றில்லை இணையத்தில் பல விஷயங்களை மிகச்சாதாரணமாக நினைத்து விடுகிறோம்.
ஆனால் பாட்டி மே அஸ்வத்தை போன்ற ஒருவர் நமக்கு அரிதான ஒரு விஷயத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். அதாவது இணையத்தில் புழங்கும் போது நாம் பணிவுடன் செயல்பட மறந்து விடுகிறோம் என்பதை அவர் உணர்த்தியிருக்கிறார்.

உண்மையில் பாட்டி இதை தெரியாமல் தான் செய்திருக்கிறார். இணையத்தில் தேடும் போது வேண்டுகோளே தேவையில்லை, கட்டளையிட்டாலே போதும் என்பதை அறியாமல், அவர் தயவு செய்து என விளித்து வேண்டுகோள் வைத்திருக்கிறார். ” கூகுளில் தேடும் போது மறுமுனையில் யாரோ ஒருவர் இருந்து தேடித்தருகிறார் என நினைத்ததாகவும், வேண்டுகோள் விடுத்தால் விரைவான பதில் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு கோரிக்கை வைத்ததாகவும் பாட்டியே கூறியுள்ளார்.

பாட்டி அறியாமையில் செய்தாலும் அவரது செயல் யோசிக்க வைக்கிறது. இணையவாசிகள் பலரும் தேடலில் அவர் காட்டிய பணிவால் வியந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கின்றனர். ஒருவர் இது தான் மிகவும் அழகான விஷயம் என்று பாராட்டியுள்ளார். இன்னொருவர் அடுத்த முறை தேடும் போது நானும் இதே முறையை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார். இன்னொருவர் பாட்டியின் பண்பாடு வியக்க வைக்கிறது என கூறியுள்ளார். முந்தைய தலைமுறைக்கு மட்டும் தான் இது சாத்தியம் என்றும் பலர் கூறியுள்ளனர்.

இந்த விவாதச்சரடு சில சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்புகிறது.தயவு செய்து மற்றும் நன்றி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது நல்ல பண்பாடு. இணையத்தில் நாம் ஏன் அதை மறந்து விடுகிறோம். யோசித்துப்பாருங்கள், இணையத்தில் தேடும் ஒவ்வொரு முறையும் , அந்த கோரிக்கையை பணிவோடு சமர்பித்தால் எப்படி இருக்கும். இணைய தேடலில் குறிச்சொல்லை அடிப்பதை விட்டுவிட்டு, தயவசெய்து என துவங்கி நீட்டி முழக்குவது எல்லாம் தேவையா? என பலரும் கேட்கலாம். ஆனால் இணையத்தில் தேடும் போது பணிவு தேவை என்பதல்ல விஷயம்; இந்த விதிவிலக்கான ஒரு நிகழ்வு அதன் அரிதான தன்மை காரணமாக இணையத்தை நாம் பயன்படுத்தும் விதம் பற்றி யோசிக்க வைக்கிறது. கூகுளில் தேடும் போது பணிவோ ,கணிவோ தேவைப்படாது தான். ஆனால் இணையத்தில் விவாதத்தில் பங்கேற்கும் போதும், கருத்துக்களை வெளியிடும் போதும் நாம் அடிப்படை மனித பண்புகளை கடைபிடிக்க வேண்டும் அல்லவா?

கருத்துக்களை வெளியிடுவது எளிதாக இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் ,எப்படி வேண்டுமானாலும் சொல்லும் போக்கு இணையத்தின் பிராகாசத்தையே குறைக்கிறதே!

பேஸ்புக் கருத்துக்களிலும், வலைப்பதிவு விவாதங்களிலும் எத்தனை காழ்ப்புணர்ச்சியை, துவேஷத்தின் வெளிப்பாட்டை அடிக்கடி பார்க்க நேர்கிறது. கலாய்க்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஆளுமைகளை அடித்து நொறுக்குகிறோம். மறுமுனையில் இருப்பவர் நிலை பற்றி கவலைப்படாமல் மோசமாக கருத்துச்சொல்லி மனங்களை உடைக்கிறோம். உடன் பருமனாக இருப்பவர் புகைப்படத்தை பார்த்து எள்ளி நகையாடுவதும், ஒருவரின் நிறம் அல்லது பின்னணி குறித்து துவேஷமான கருத்துக்களை கூறி காயப்படுத்துகிறோம். எத்தனை பலவீனமான உள்ளங்களை இணையம் பக்கமே வராமல் ஓடச்செய்திருப்போம். இசங்களை கேலி செய்கிறோம். இன்னும் பலவிதங்களில் இணைய சுதந்திரத்தை அதன் அருமையே உணராமல் தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாவற்றையும் தான் பாட்டி தன்னை அறியாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாற்று கருத்தை முன்வைத்தால் கூட கண்ணியமாக தெரிவிக்க வேண்டும், கருத்து கூறும் போது மற்றவர் மனம் காயப்படாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற மனிதநேர பண்புகள் இணைய உரையாடலிலும் நமக்குத்தேவை என அவர் உணர்த்தியிருக்கிறார்.

பாட்டி பேரனின் டிவிட்டர் பக்கம்: @Push10Ben

பாட்டிக்கு கூகுள் பாராட்டு பற்றிய பிபிசி செய்தி: http://www.bbc.com/news/uk-36538356