Tag Archives: emai

இணைய மோசடிக்கு எதிராக ஒரு இணையதளம்

ransomware_keyஇணையம் தொடர்பான உங்கள் கவலைகளில் ரான்சம்வேர் மோசடியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இணைய மோசடிகளில் மிகவும் அச்சம் தரக்கூடியது மற்றும் இதில் ஈடுபடும் தாக்காளர்களுக்கு கைமேல் பலன் அளிக்ககூடியது என இது வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த வகை இணைய மோசடி தொடர்பான விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

மால்வேர், ஸ்பைவேர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ரான்சம்வேர் புதிதாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். இது புதிய மோசடி அல்ல: ஆனால் சமீப காலத்தில் இதன் தீவிரம், அதிகமாகி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது.

நிஜ உலகில் கடத்தல்காரர்கள் யாரையாவது பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால் தான் விடுவிக்க முடியும் என மிரட்டுவது போல, இணைய உலகில் ஹேக்கர்கள் எனப்படும் தாக்காளர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் அல்லது அவற்றில் உள்ள முக்கியமான கோப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதை விடுவிக்க பணம் தரம் வேண்டும் என மிரட்டும் உத்தியே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நிஜ உலக கடத்தலுக்கும், இந்த வகை கடத்தலுக்கும் என்ன வேறுபாடு என்றால் இதில் விஷமிகள் எதையும் கடத்திச்செல்வதில்லை: மாறாக பயனாளிகளின் கம்ப்யூட்டருக்குள் அத்துமீறி நுழைந்து அதை பயன்படுத்த முடியாமல் செய்து விடுகின்றனர்.

ரான்சம்வேரில் பல வகை இருக்கின்றன. கம்ப்யூட்டருக்குள் நுழைந்து அதை பயன்படுத்த முடியாமல் பூட்டுப்போட்டு விட்டு பணம் கேட்டு மிரட்டுவது ஒரு ரகம். இன்னொரு ரகம், முக்கியமான கோப்புகளை என்கிர்ப்ட் செய்து விட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டுவது. கம்ப்யூட்டர் என்றில்லை, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களையும் இப்படி கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தாக்காளர்கள் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய தாக்குதலுக்கு இலக்கான பயனாளிகள், தங்கள் சாதனத்தை விடுவித்துக்கொள்ள அல்லது முக்கியமான கோப்புகளை விடுவித்துக்கொள்ள பணம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொதுவாக பெரிய வர்த்தக நிறுவனங்களே இவ்வாறு குறி வைக்கப்படுகின்றன. தனி நபர்களும் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகலாம்.
மற்ற வகை இணைய தாக்குதல்களில் முக்கியமான விவரங்கள் திருடப்படுவதுண்டு. கிரெடிட் கார்டு அல்லது வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு கைவரிசை காட்டுவதுண்டு. ஆனால் ரான்சம்வேர் மூலம் பயனாளிகள் கம்ப்யூட்டருக்கு எங்கிருந்தோ பூட்டு போட்டு விட்டு அவர்களிடம் இருந்து பணம் கறக்கின்றனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த வகை தாக்குதல்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெரும்பாலும் விஷமத்தனமான மால்வேர் மூலம் தான் இந்த தாக்குதலை நடத்துகின்றனர். போலி மெயில்களை அனுப்பி வைத்து,அதில் உள்ள வில்லங்கமான இணைப்புகளை கிளிக் செய்யும் வகையில் பயனாளிகளை தூண்டி வலைவிரிக்கின்றனர். தப்பித்தவறி இந்த இணைப்புகளை கிளிக் செய்துவிட்டால் மால்வேர் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனுக்குள் இறங்கி தனது வேலையை காட்டத்துவங்கிவிடும். அதன் பிறகு அந்த சாதனம் தாக்காளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

இந்த வகை தாக்குதல்கள் அதிகரித்திருப்பதுடன், பிணைத்தொகையும் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தாக்காளர்களை பொருத்தவரை கை மேல் காசு தரும் உத்தி என்பதால் இந்த வகை தாக்குதல் அவர்களுக்கு லாபம் மிகுந்ததாக அமைகிறது. ஆனால் பயனாளிகள் பாடுதிண்டாட்டம் தான்.
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தாக்காளர்கள் மிரட்டலுக்கு அடிபணிவதை தவிர வேறு வழியில்லை என்பது தான் தற்போதைய நிலை. ஆனால் இதை மாற்றும் வகையில் சைபர் பாதுகாப்பு வல்லுனர்களும் களத்தில் இறங்கிவிட்டனர். ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் ,ரான்சம்வேர் தாக்குதலில் சிக்கியவர்களுக்கு உதவிவதற்காக என்று ’நோ மோர் ரான்சம்’ ( https://www.nomoreransom.org/) எனும் இணையதளத்தை அமைத்துள்ளது. நெதர்லாந்து காவல்துறை மற்றும் இண்டெல் செக்யூரிட்டி மற்றும் காஸ்பெர்ஸ்கி லாப் அகியவையும் இதில் இணைந்துள்ளன.

தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு தேவையான உதவியை இந்த தளம் அளிக்கிறது. ரான்சம்வேர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் பாதிக்கப்பட்ட கோப்புகளை சமர்பித்து அதற்கான நிவாரணம் பெற முயற்சிக்கலாம். தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கான பூட்டுகள் இதில் அளிக்கப்பட்டுள்ளன. இன்னும் எல்லா வகையான தாக்குதல்களுக்கான பாதுகாப்பு உருவாக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றனர். தாக்குதல் பற்றிய விவரங்களையும் இந்த தளத்தின் மூலம் புகார் செய்யலாம்.

இந்த இணையதளம் , தாக்காளர்களின் பிடியில் சிக்கி செய்வதறியாமல் தவிக்கு அப்பாவி பயனாளிகளுக்கு நிச்சயம் ஆறுதல் அளிப்பதாக அமையும். இதே போலவே தாக்காளர்கள் பூட்டை விடுவிக்க கூடிய சாவிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற சைபர் பாதுகாப்பு முயற்சிகளும் தீவிரமாகி வரும் நிலையில், உண்மையான பாதுகாப்பு என்பது இணையவாசிகளின் விழிப்புணர்வில் தான் இருக்கிறது என்கின்றனர் வல்லுனர்கள். சந்தேகத்திற்குறிய மெயில்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது, வைரஸ் தடுப்பு பாதுகாப்பை நாடுவது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். அதோடு, முக்கிய கோப்புகளை பேக்கப் எடுத்து வைப்பதும் அவசியம் என்கின்றனர்.

இமெயில் வாசிக்கப்பட்டதா என அறிவது எப்படி? சில வழிகள்! பல கேள்விகள்!

bananatag_01-100612056-large.idgeநான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?
இமெயில் பயனாளிகள் பலருக்கும் கேட்கக்கூடிய கேள்வி தான் இது. இந்த கேள்விக்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் ஒருவர் அது வாசிக்கப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பானதே!

இமெயில் பயனாளிகளில் எத்தனை பேருக்கு இந்த கேள்வி எழுகிறது? எப்போது எழுகிறது என்பவை சுவாரஸ்யமான துணை கேள்விகள்!

இப்போது, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வழி இருக்கிறதா? எனும் ஆரம்ப கேள்விக்கான பதிலை பார்க்கலாம். இந்த கேள்விக்கான பதில் எளிமையானது மற்றும் சிக்கலானது. எளிமையான பதில், இமெயில் வாசிக்கப்பட்டதை அறிய வழி இருக்கிறது. ஆனால் அது உங்கள் இமெயில் சேவையில் இல்லை; தனியே நாடப்பட வேண்டும். அதாவது இந்த வசதியை அளிப்பதற்கு என்றே தனியே இணையதளங்கள் இருக்கின்றன.

இத்தகைய சேவைகளை பட்டியலிட்டு அவை செயல்படும் விதம் பற்றி விளக்குவதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இமெயில் வாசிக்கப்பட்டதா? என்பதை அறியும் வசதி இமெயில் கண்காணிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இமெயில் டிராக்கிங் என்று சொல்லப்படுகிறது. கண்காணிப்பு என்றவுடன் ஒற்று அறிவது அல்லது உளவு பார்ப்பதுடன் ஒப்பிட முடியாது என்றாலும் கூட, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறிவதற்கான வழிகள் அனைத்தும் ஒருவிதத்தில் கண்காணிப்பு என்று சொல்லக்கூடிய உத்தியையே பின்பற்றுகின்றன. அதனால் தான் இந்த பதில் சிக்கலானதாகவும் அமைகிறது.
வழக்கமாக யார் இமெயில் அனுப்பி வைத்தாலும் சரி, பெறுபவர் அதை உடனடியாக படித்துப்பார்கலாம், அல்லது தாமதமாக படிக்கலாம். இல்லை படிக்காமலே டெலிட் செய்து விடலாம். இது அவரது விருப்பம் மற்றும் உரிமை. அனுப்புகிறவர் இமெயில் பெறும் போதும் இது பொருந்தும்.

பொதுவான இமெயில் அமைப்பில், மெயில் வாசிக்கப்பட்டதா என்பதை உணரும் வழி இல்லை. அவுட்லுக் போன்ற இமெயில் சேவையில், இதை உறுதி செய்து கொள்வதற்காக, பெறப்பட்டது என்பதை தெரிவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இந்த வசதியை ஏற்று பதில் தெரிவிப்பது மறுமுனையில் இருப்பவரின் விருப்பம் சார்ந்தது. இந்த வசதியை பிளாக் செய்வதற்கான வழியும் இருக்கிறது. எனவே, இதற்கான நேரடி வழி இல்லை.
இந்த இடத்தில் தான் இமெயில் டிராக்கிங் சேவைகள் வருகின்றன். பனானாடேக், பூமாரங், ட்டிதேரீட் இட் ஸ்டீரிக், காண்டாக்ட் மன்கி மற்றும் இன்னும் பிற பல சேவைகள் இந்த வசதியை அளிக்கின்றன. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு மூலம் இந்த வசதியை அளிக்கும் சேவைகளும் கூட இருக்கின்றன.

இந்த சேவைகளை பயன்படுத்தும் போது அவை ஒருவர் அனுப்பும் இமெயிலில் சின்னதாக ஒரு புகைப்பட குறியீட்டை இடம்பெறச்செய்கின்றன. கண்ணுக்குத்தெரியாத புள்ளியாக கூட அது இருக்கலாம். அதில் இருக்கும் எச்.டி.எம்.எல் குறியீடு மூலம் மெயில் பிரிக்கப்பட்டதும், சர்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த தகவல் பயனாளிக்கும் தெரிவிக்கப்படும்.

இதே முறையில் இமெயிலில் அனுப்பும் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டதா என்பதை அறியவும் தனியே ஒரு குறியீடு இணைக்கப்படுகிறது. இந்த சேவைகளின் மூலம் இமெயில் எப்போது பிரிக்கப்பட்டது என்பதையும், அதன் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டதா என்பதையும் அறியலாம். பொதுவாக மார்க்கெட்டிங் நோக்கில் இமெயில்களை கூட்டம், கூட்டமாக அனுப்பி வைப்பவர்கள் தங்கள் முயற்சியின் பலனை அறிய இந்த சேவைகளை பயன்படுத்துகின்றன. தனி நபர்களும் கூட இந்த சேவையை பயன்படுத்தலாம். இவற்றில் இலவச சேவைகளும் இருக்கின்றன, கட்டண சேவைகளும் இருக்கின்றன. இது தொடர்பான இணைப்பு: http://www.computerworld.com/article/2979569/web-browsers/review-6-chrome-extensions-let-you-track-your-gmail.html

ஆனால் இதை கூட நூறு சதவீதம் உத்திரவாதமானது என்று சொல்வதற்கில்லை. டிராக்கிங் சேவைகள் அதிகபட்சமாக இமெயில் திறக்கப்பட்ட தகவலை தெரிவிக்கின்றன. ஆனால் அது வாசிக்கப்பட்டதன் அடையாளமாக அமையுமா என்பது கேள்விக்குறி தான். அதை மெயில் பெற்றவர் மட்டும் தான் உறுதி செய்ய முடியும்.

இமெயிலின் அத்தனை வசதிகளையும் மீறி இது நிச்சயம் இமெயிலின் குறை தான். இல்லை அப்படியும் சொல்வதற்கில்லை. உண்மையில் இது இமெயில் பயன்படுத்தப்படும் விதத்தின் பக்கவிளைவாக உண்டான பிரச்சனை. இமெயில் அடிப்படையில் இலவசமாக இருப்பதால், அதை தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நோக்கிலும் பயன்படுத்தி வருகின்றனர். காசா, பணமா, ஒரு இமெயில் தானே என வர்த்தக நிறுவனங்கள் கூட்டமாக மெயில்களை அனுப்பி வைக்கின்றன. இவை த்தவிர மோசடி மெயில்கள், வில்லங்க மெயில்கள், மால்வேர் வாகன மெயில்கள் என பல ரகங்கள் இருக்கின்றன. இவை எல்லாமுமாக சேர்ந்து ஸ்பேம் எனப்படும் குப்பை மெயில்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய குப்பை மெயில்களில் இருந்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படவே செய்கிறது. இதன் விளைவாகவே மெயில்களை படித்துவிட்டோம் என தெரிவிக்கும் வசதி செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவை உண்மையான அக்கரையோடு தங்கள் மெயிலுக்கான எதிர்வினையை தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கான மூன்றாம் தரப்பு தீர்வாகனே மெயில் டிராக்கிங் சேவைகள் அமைகின்றன. ஆனால் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இது போன்ற சேவைகள் மூலம் மெயில் பிரிக்கட்ட நேரத்தை அறிவதோடு, அவை பிரிக்கப்பட்ட இடத்தை கூட அறியலாம். இது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கலாம். மேலும் இணைய விஷமிகள் இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இமெயில் டிராக்கிங் சேவையை பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், அதை மெயில் அனுப்பும் போது தெரிவித்துவிடுவது சிறந்த இணைய அறமாக இருக்கும். அதிலும் வர்த்தக நிறுவனத்தில் இருந்து கொண்டு இதை செய்யும் நிலையில் நிச்சயம் இது தொடர்பான நிறுவன கொள்கையை அறிந்திருப்பது நல்லது.

பயனாளிகள் நோக்கில் பார்த்தால், இன்பாக்ஸ் தேடி வரும் இமெயிலுக்குள் இப்படி ஒரு வசதி இருப்பதும் அதை அறியாமல் இருப்பதும் திடுக்கிட வைக்கலாம். ஆனால் நல்லவேளையாக இதை தடுக்கும் வசதியும் இல்லாமல் இல்லை. ஜிமெயில் உள்ளிட்ட பெரும்பாலான மெயில் சேவைகளில் செட்டிங் பகுதிக்கு சென்று , புகைப்படம் போன்றவை இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை தானாக திறக்கப்படாமல், புகைப்பட இணைப்பை திறக்கலாமா என அனுமதி கேட்டு அதன் பிறகே செயல்படும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். இது தொடர்பான இணைப்பு: http://bgr.com/2015/11/19/how-to-stop-email-tracking/

விக்கிபீடியாவில் அதிக அறியாத வசதிகள்

Wikipedia-hovercards-640x398
விக்கிபீடியா நிச்சயம் நீங்கள் நன்கு அறிந்த தளம் தான். கட்டற்ற களஞ்சியமான அதை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக்கொண்டிருக்கவும் செய்யலாம். சில நேரங்களில் குறிப்பிட்ட விவரங்களுக்காக நீங்களே விக்கிபீடியாவை நாடலாம். அல்லது பலநேரங்களில் தகவலை தேடும் போது தேடல் பட்டியலில் முதலிலேயே விக்கிப்பீடியா பக்கம் கண்சிமிட்டி வரவேற்கலாம்.

எல்லாம் சரி விக்கிபீடியா பயனாளியான நீங்கள் எப்போதாவது விக்கிபீடியாவாவில் உறுப்பினராவது பற்றி யோசித்திருக்கிறீர்களா?

நுழைவுச்சீட்டு போன்ற அனுமதி தேவைப்படாத சேவையாகவே விக்கிபீடியா இருப்பதால் உறுப்பினராகாமலேயே அதை பயன்படுத்தலாம். அதன் கட்டுரைகளை வாசிக்க மட்டும் அல்ல, அவற்றை திருத்தவும் பயனாளியாக இருந்தால் மட்டுமே போதுமானது: உறுப்பினராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கட்டற்ற களஞ்சியம் என்பதால் எந்த கட்டுப்பாடும் கிடையாது என்பது விக்கிபீடியாவின் சிறப்பாக இருக்கிறது.

இருந்தாலும் விக்கிபீடியாவில் உறுப்பினராவது மூலம் கூடுதல் பலன்களை பெற முடியும் தெரியுமா?
அப்படியா எனும் ஆச்சர்யம் ஏற்பட்டால், பிரபல தொழில்நுட்ப இணையதளமான மேக்யூஸ்ஆப் , இது பற்றி வெளியிட்டுள்ள கட்டுரை உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். விக்கிபீடியாவில் உறுப்பினராகாமல் இருப்பதன் மூலம் நீங்கள் இந்த இணைய களஞ்சியத்தை தவறான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என குறுப்பிடும் இந்த கட்டுரை, விக்கிபீடியா உறுப்பினராவதால் பெறக்கூடிய பலன்களை பட்டலிட்டுள்ளது:

இணைப்புகளின் முன்னோட்டம்:
விக்கிபீடியாவில் இடம்பெறும் எல்லா கட்டுரைகளும் மற்ற பல கட்டுரைகளுக்கான இணைப்புகளை கொண்டவை. இவற்றில் பல சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இணைப்பாக கிளிக் செய்து படித்துப்பார்ப்பது கொஞ்சம் சோதனையான அனுபவமாக தான் இருக்கும்.
இதற்கு மாறாக இணைப்புகளின் உள்ளடக்கத்தை சுருக்கமான அறிமுகத்தோடு முன்னோட்டமாக பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும். இதற்கென உள்ள ஹோவர்கார்டு வசதியை உறுப்பினர்கள் பிரபர்ன்ஸ் பகுதிக்கு சென்று வரவைத்துக்கொள்ளலாம்.

இதே பகுதியில் சென்று தொடர்புடைய கட்டுரைகள் அம்சத்தை கிளிக் செய்தால், ஒவ்வொரு கட்டுரையின் அடிப்பக்கத்திலும் தொடர்புடைய கட்டுரைகளுக்கான இணைப்புகளை பார்க்க முடியும்.
இந்த வசதி மூலம் விக்கிபீடியாவில் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
Wikipedia-watchlist-640x403
புதிய டேபில் இணைப்புகள் ;
விக்கிபீடியா கட்டுரைகள் ஆதாரங்களுக்கான அடிக்குறிப்புகளை கொண்டிருப்பவை. தகவல்களின் நம்பகத்தன்மையை உணர்த்துவதற்காக இது கைகொடுக்கிறது. ஆனால் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் போது , இணைப்புகளில் கிளிக் செய்தால் அந்த பக்கத்திற்கு அழைத்துச்செல்லப்படுவோம். மீண்டும் கிளிக் செய்து மூல கட்டுரைக்கு திரும்பி வரவேண்டும்.
இந்த சங்கடத்தை தவிர்க்க, பிரபரன்ஸ் பகுதிக்கு சென்று பிரவுசிங் அம்சத்தில் இணைப்புகளை தனியே புதிய டேபாக தோன்றும் வசதியை இயக்கி கொள்ளலாம்.
வெவ்வேறு பின்னணி
விக்கிபீடியா கட்டுரைகளின் தோற்றம் உங்களுக்கு அலுப்பூட்டலாம். எனில் வேறு பல பின்னணி வண்ணங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு நான்கு விதமான வசதிகள் இருக்கின்றன.
விளம்பரம் நீக்க வசதி!
அதே போல விக்கிபீடியாவை ஆண்டிற்கு ஒரு முறை தோன்றக்கூடிய நன்கொடை கோரும் விளம்பர அறிவிப்பையும் நீக்கிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
அதே போல நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரையின் பக்கத்தை கவனிக்க விரும்பும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் அந்த பக்கத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பான தகவல்களை பெற முடியும்.

இந்த வசதியை உங்களுக்கு பிடித்தமான கட்டுரைகளுக்கான புக்மார்க் வசதி போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற உறுப்பினர்களையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல குறிப்பிட்ட தலைப்பை பின் தொடரும் ஆர்வம் இருந்தால் அந்த தலைப்பு தொடர்பான அறிவிப்புகளை கவனிக்க விரும்பும் பட்டியலில் பெற ஏற்பாடு செய்யலாம். கட்டுரை பக்கத்தின் மேல் உள்ள கவனிப்பு பட்டியல் ஐகானை கிளிக் செய்து அந்த கட்டுரையை நமக்கான பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் ஆண்டின் சிறந்த புகைப்படம் போன்றவற்றின் மீது வாக்களிக்கும் உரிமையும் பெறலாம். இப்போது இணைந்தால் கடந்த ஆண்டுக்கான புகைப்படங்கள் மீது வாக்களிக்கலாம். மேலும் பல அம்சங்களும் இருக்கின்றன.
புதிய பக்கங்களை துவக்குவது, பெயர் மாற்றம் செய்வது ஆகிய அம்சங்கள் இதில் அடங்கும்.
உங்களுக்கான பயனர் பெயரையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
வாசிப்பதை மீறி , விக்கிபீடியா தன்னார்வலர்கள் சமூகத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று விக்கிபீடியா உறுப்பினர் பக்கத்தில் அழைப்பு விடுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Why_create_an_account%3F

———
செயலி புதிது; கூகுள் காலண்டரில் புதிய வசதி

கூகுள் காலண்டர் செயலியை பயன்படுத்த மேலும் ஒரு வலுவான காரணம் கிடைத்துள்ளது. இந்த செயலிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலக்குகள் வசதி தான் அது.
கோல்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம் பயனாளிகள் தங்கள் சின்ன சின்ன இலக்குகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான ஊக்கம் பெறலாம்.
வாரம் ஒரு புத்தகம் படிப்பது, தினமும் 15 நிமிடம் நடக்க வேண்டும் என்பது போல நாம் அடைய விரும்பும் இலக்கு எதுவாக இருந்தாலும் அதற்காக இந்த வசதியை நாடலாம்.
மனதில் உள்ள இலக்கை, கூகுள் காலெண்டர் செயலியில் சமர்பித்தால் போதுமானது. அதன் பிறகு நம்முடைய நாட்காட்டியில் எந்த நேரம் வெறுமையாக இருக்கிறது என கண்டறிந்து அந்த நேரத்தை இது தானாக பரிந்துரைக்கிறது.
கூகுள் காலெண்டர் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு இது கூடுதல் வசதியாக அமையும். புதிய பயனாளிகள் இலக்கை அடையும் வாய்ப்பை பெறுவதற்காகவும் கூகுள் காலெண்டர் சேவையை பயன்படுத்தலாம்.
நிகழ்ச்சிகளை குறித்து வைத்து திட்டமிடலுக்கு உதவும் இந்த சேவையில் ஏற்கனவே நினைவூட்டல் உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.google.android.calendar

——–

தளம் புதிது; மாற்று மென்பொருளுக்கான தளம்

உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள புதிய மென்பொருள்களை தெரிந்து கொள்வது அவசியமானது. இந்த அறிமுகம் வசதியை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் தெரிந்து கொள்ள வழி செய்கிறது ஆல்டர்நேட்டிவ்டு.நெட் இணையதளம்.

பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த தளம் மாற்று மென்பொருள்களை அறிமுகம் செய்கிறது. அதாவது ஒருவர் ஏற்கனவே அறிந்த அல்லது பயன்படுத்தும் மென்பொருளுக்கான மாற்று மென்பொருளை அறிமுகம் செய்கிறது.

நல்ல மென்பொருள்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வழியாக இது முன்வைக்கப்படுகிறது. இந்த தளத்தில் வழக்கமான மென்பொருட்களுக்கான மாற்றுகளை அறிந்து கொள்ள முடிவதோடு, உறுப்பினராகி உங்களுக்கு தேவையான மாற்று மென்பொருளையும் தேடிக்கொள்ளலாம்.
பிரபலமாக இருக்கும் மாற்று மென்பொருட்கள் மற்றும் செயலிகள் முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளன. இவை தவிர மென்பொருள் வகைக்கேற்பவும் பட்டியல் உள்ளது.

பயனாளிகளும் தாங்கள் அறிந்த மென்பொருட்களை சமர்பிக்கலாம். இப்படி பலரது பரிந்துரையால் மென்பொருட்கள் பட்டியலிடப்படுவது இந்த தளத்தின் சிறப்பம்சமாகவும் இருக்கிறது.
மென்பொருட்களை லைக் செய்யும் வசதியும் இருக்கிறது. அதற்கேற்ப அதிக லைக் செய்யப்பட்டவற்றை பார்க்கும் வசதியும் இருக்கிறது.
மென்பொருள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள சுவாரஸ்யமான இணையதளம்.

இணையதள முகவரி: http://alternativeto.net/

——–

வீடியோ புதிது; 100 ஆண்டுகள் :100 திரைப்படங்கள்

திரைப்படங்களின் 100 ஆண்டுகளை சுவாரஸ்யமான முறையில் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஜேகப் ஸ்வின்னி எனும் இணையவாசி. திரைப்பட ஆர்வலர்,எடிட்டர், இயக்குனர் என வர்ணித்துக்கொள்ளும் ஸ்வின்னி தனது விமியோ சேனலில் ( யூடியூப் போன்ற வீடியோ பகிர்வு சேவை) புதிய வீடியோ தொகுப்பு ஒன்றை பதிவேற்றி இருக்கிறார்.

இந்த தொகுப்பில் திரைப்பட உலகின் 100 ஆண்டுகளை திரும்பி பார்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு திரைப்படத்தை தேர்வு செய்து ஒவ்வொரு படத்தில் இருந்தும் சிறந்த காட்சியை வீடியோவாக தைத்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களின் ஆதிக்கம் இருந்தாலும் ஒற்றை வீடியோவில் 100 ஆண்டு படங்களை பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும். 30 ஷாட்களில் ஸ்பீல்பர்க் போன்ற வீடியோக்களையும் உருவாக்கி இருக்கிறார்.

வீடியோவை காண: https://vimeo.com/162855085

———

இணைய பகிர்வுக்கு எளிய வழி!

நீங்கள் பார்த்து ரசித்த இணைய பக்கங்களை டிவிட்டர்,பேஸ்புல், இமெயில் என பல இடங்களில் பகிர்ந்து கொள்ள விரும்பலாம். இப்படி பகிர நினைக்கும் போது குறிப்பிட்ட இணைய பக்கத்தின் முகவரியை மவுசால் தேர்வு செய்து பின்னர் அந்த டெக்ஸ்ட்டை காபி செய்து கொள்ள வேண்டும். இதைவிட எளிய வழி தேவை என்றால் இதற்கான பிரவுசர் குறுக்கு வழியை பயன்படுத்தலாம்.
இணைய பக்கம் ஒன்றின் இணைப்பை பகிர்ந்து கொள்ள விரும்பினால், உடனே விசைப்பலகையில் கண்ட்ரோல்+ எல் என டைப் செய்தால் போதும், குறிப்பிட்ட அந்த இணைய முகவரி தானாக தேர்வு செய்யப்பட்ட, ஹைலைட் செய்யப்பட்டிருக்கும். அதை அப்படியே நகலெடுத்து வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்து பகிர்ந்து கொள்ளலாம்.
இதே போலவே பிரவுசரில் இணைய முகவரிக்கான எழுத்துக்களை டைப் செய்த பிறகு கண்ட்ரோல்+ எண்டர் என டைப் செய்தால் போதும் முகவரிக்கு முன்னர் மற்றும் பின்னர் வரவேண்டிய (www. and a .com. ) பதங்களை தானாகவே இடம்பெறச்செய்து இணையபக்கத்தை அணுக வழி செய்யும்.

——-

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

பெண் விஞ்ஞானிகள் புகழ் பரப்பும் விக்கி வீராங்கனை!

_88730047_keilana_portraitஇணையத்தில் புழங்குபவர்கள் எமிலி டெம்பிள் உட்டை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். எமிலியை பற்றி தெரிந்து கொண்டால் அவர் மீது மதிப்பு உண்டாகும் என்பது மட்டும் அல்ல இணையம் மீதான நம்பிக்கையும் அதிகமாகும். அதைவிட முக்கியமாக இணையத்தின் இருண்ட பக்கமான டிரால்களின் தொல்லையை எதிர்கொள்வதற்கான ஊக்கமும் உண்டாகும்.

அமெரிக்க கல்லூரி மாணவியான எமிலி விக்கிபீடியாவின் முன்னணி பங்களிப்பாளராக இருக்கிறார். கூட்டு முயற்சியின் அடையாளமாக திகழும் விக்கிபீடியாவில் ஆயிரக்கணக்கான தன்னார்வ பங்களிப்பாளர்கள் இருந்தாலும், எமிலியின் பங்களிப்பை விஷேசமாக குறிப்பிட காரணம் இல்லாமல் இல்லை.

அவர் விக்கிபீடியாவின் பெருங்குறை ஒன்றை சரி செய்யும் வகையில் பங்களிப்பு செய்து வருகிறார். அதோடு இணையத்தின் பெருங்குறை ஒன்றை எதிர்கொள்ளும் வகையிலும் அந்த பங்களிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதை தான் விக்கிமீடியாவின் வலைப்பதிவு, எமிலி பகலில் உயிரியல் மாணவியாகவும்,இரவில் இணைய டிரால்களுடன் மல்லு கட்டுபவராகவும் இருக்கிறார் என குறிப்பிடுகிறது. டிரால்களுக்கு அவர் நல் தண்டனை வழங்கி வருவதாகவும் அந்த பதிவு பாராட்டுகிறது. அதாவது டிரால்கள் தொடுக்கும் ஒவ்வொரு ஆவேச தாக்குதலுக்கும் பதிலாக கோபமோ, வெறுப்போ கொள்ளாமல் ஒரு பெண் விஞ்ஞானிக்கான அறிமுக பக்கத்தை அவர் விக்கிபீடியாவில் உருவாக்கி வருகிறார்.

இது டிரால்களின் தாக்குதலை இலக்கு தவறிய அம்புகளாக மாற்றும் அதே நேரத்தில் அவரது ஆதார நோக்கத்தை மேலும் செழுமையாக்குகிறது.
எமிலி இதை எப்படி செய்கிறார் என பார்ப்போம்.

எமிலிக்கு இப்போது 21 வயதாகிறது. ஆனால் 12 வயதிலேயே அவர் விக்கிபீடியாவில் களமிறங்கிவிட்டார். 5 வயதிலேயே குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை கரைத்து குடித்திருந்தவருக்கு இதே ஆர்வத்தை உள்ளடக்கத்தை உருவாக்கும் திசையில் திருப்புவது இயல்பாக இருந்திருக்கிறது. தைவான் பாடகி ஏஞ்சலா சாங் பற்றிய முதல் கட்டுரையை உருவாக்கியவர் அதன் பிறகு நூற்றுக்கணக்கான கட்டுரைகளை சமர்பிப்பவராகவும், கட்டுரை தகவல்களை திருத்துபவராகவும் உருவானார்.

அவரது கட்டுரைகளில் பல குறிப்பிடத்தகவையாக இருந்தாலும், 2012 ல் அவர் துவங்கிய முயற்சி தான் இப்போது அவரைப்பற்றி பேச வைத்திருக்கிறது.

பெண் விஞ்ஞானிகளுக்கான அறிமுக பக்கங்களை கட்டுரையாக எழுதுவது தான் அவர் துவங்கிய விக்கி திட்டம்!
விக்கி நோக்கில் இது மிகவும் முக்கியமான முயற்சி. ஏனெனில் விக்கிபீடியா உள்ளடக்கத்திலும், செயல்பாட்டிலும் பெண்கள் தொடர்பாக இருக்கும் குறையை களையும் வகையில் இது அமைந்துள்ளது.

விக்கிபீடியா பங்களிப்பாளர்களில் பெண்களின் பிரதிநித்துவம் போதுமான அளவு இல்லை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு கவலையுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதே போலவே விக்கிபீடியா உள்ளடக்கத்திலும் பாலின இடைவெளி வெளிப்படையாகவே இருக்கிறது. விக்கிபீடியாவில் உள்ள வாழ்க்கை வரலாறுகளில் 15 சதவீதம் தான் பெண்கள் பற்றியதாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் பெண் விஞ்ஞானிகள் என்று எடுத்துக்கொண்டால் இது இன்னமும் குறைந்து போகும்.

எமிலி இந்த குறையை ராயல் சொசைட்டி ஆப் சயின்ஸ் அமைப்பின் பெண் விஞ்ஞானிகள் பற்றி விக்கிபீடியாவில் போதிய தகவல்கள் இல்லாததை கவனித்த போது உணர்ந்து கொண்டார். இந்த தகவல் அப்போது தனக்கு பெரும் ஆவேசத்தை தந்ததாக எமிலி கூறியிருக்கிறார். ராயல் சொசைட்டி என்பது விஞ்ஞானிகளின் புகழரங்கு போன்றது. அதில் இடம் பெற்ற பெண் விஞ்ஞானிகளுக்கே விக்கிபீடியாவில் இடமில்லை என்றால் எப்படி என கொதித்துப்போனவர் அந்த கணமே ( அதிகாலை 2 மணி) ஒரு பெண் விஞ்ஞானி பற்றிய அறிமுக கட்டுரையை எழுதி பதிவேற்றினார். அத்தோடு நின்று விடாமல் பெண் விஞ்ஞானிகள் பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து எழுதுவதற்காக என்றே ஒரு விக்கி திட்டத்தையும் துவக்கினார். இதன் ஒரு பகுதியாக பெண் விஞ்ஞானிகளை அணுகு அவர்கள் பங்களிப்பையும் கோரினார். அறிவியல் பயிலும் மாணவிகளையும் ஒன்று திரட்டி இந்த முயற்சியில் ஈடுபடுத்தி வருகிறார். இதன் பயனாக பெண் விஞ்ஞானிகள் பற்றிய 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிபீடியா முகப்பு பக்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

_88736330_288விக்கிபீடியாவில் பெண் விஞ்ஞானிகள் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உருவாக்கி இருப்பது ஒரு சாதனை என்றால், அவர்களில் இன்னும் கவனிக்கப்படாத பிரிவினராக இருக்கும் கருப்பின பெண் விஞ்ஞானிகளையும் அடையாளப்படுத்தும் செயலில் எமிலி ஈடுபட்டு வருவது சாதாரண செயல் அல்ல என்கிறார் விக்கிமீடியா அமைப்பின் முன்னாள் ஊழியரான சிகோ பவுட்டர்சே.

இந்த செயலுக்காக எமிலி பாராட்டுக்கு மட்டும் இலக்காகவில்லை; அதைவிட அதிகமாக இணைய தாக்குதலுக்கு இலக்காகி வருகிறார். அவர் பெண் என்படாலும், பெண் விஞ்ஞானிகள் பற்றிய தகவல்களை தேடித்தேடி இடம்பெறச்செய்வதாலும் அதிருப்தி அடைந்த டிரால்கள் எனும் இணைய விஷமிகள் பலர் அவருக்கு இமெயில் மூலம் தொல்லை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவரை ஆபாசமாக வர்ணிப்பது, டேட்டிங்கிற்கு அழைப்பது, அவதூறாக பேசுவது என பலவிதங்களில் தங்கல் துவேஷத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இப்படி இணைய தாக்குதலுக்கு பெண்கள் இலக்காவது தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. இதனால் மனம் உடைந்து போகிறவர்கள் இருக்கின்றனர். இணையமே வேண்டாம் என வெறுத்து ஒதுங்கியவர்களும் உண்டு. வரிந்து கட்டுக்கொண்டு பதிலடி கொடுப்பவர்களும் இல்லாமல் இல்லை.

ஆனால் எமிலி இந்த தாக்குதலை எதிர்கொண்ட விதம் கொஞ்சம் வித்தியசாமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு இலக்காகும் போதும் அவர், புதிதாக ஒரு பெண் விஞ்ஞானி பற்றிய அறிமுக கட்டுரையை எழுதுவது எனும் கொள்கையை கடைபிடித்து வருகிறார். ஆக, மனம் வருந்தச்செய்யும் மெயில் வரும் போதெல்லாம் அதனால் துவண்டு விடாமால் அதையே ஒரு உத்வேகமாக மாற்றிக்கொண்டு புதிய கட்டுரையை எமிலியும் அவரது சகாக்களும் எழுதி வருகின்றனர்.
இப்படி அடுத்தடுத்து எழுத வேண்டிய கட்டுரைகளுக்கு என்று அவர் ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார்.
இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள தேவைப்படும் உணர்வு ரீதியான உழைப்பு அளவில்லாதது எனும் நிலையில், இத்தகைய தாக்குதல் ஒவ்வொன்றையும் தனது நோக்கத்தை மேலும் வலுவாக்கி கொள்ளும் வகையில் எமிலி செயல்படுவது துணிச்சலானது என்று பாராட்டுகிறார் பவுட்டர்சே. இது இணையத்தில் பெண்களை மவுனமாக்க முயல்பவர்களை தோல்வியடையச்செய்கிறது என்றும் அவர் புகழ்கிறார்.

எமிலியின் பங்களிப்பில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அவரது விக்கி நிபுணத்துவம். விக்கிபீடியாவில் எந்த புது கட்டுரையையும் இடம்பெற வைக்கலாம் என்றாலும் அது விக்கி விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நிராகரிக்கப்பட வேண்டும். அதிலும் வாழ்க்கை வரலாறு கட்டுரையை பதிவேற்ற வேண்டும் என்றால் அதற்கான தகுந்த முகாந்திரம் இருக்க வேண்டும். அதாவது வாழ்க்கை வரலாற்றுக்குறிய நபர் பற்றி ஏற்கனவே பரவலாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்த நபர் பற்றி ஆதார பூர்வமான கட்டுரைகள் வெளியாகி இருக்க வேண்டும்.

பெண் விஞ்ஞானிகள் வெளியே தெரியாமல் இருப்பது தான் பெருங்குறை எனும் போது அவர்களை பற்றிய கட்டுரைகள் விக்கிபீடியாவில் இடம்பெறாமல் போக இதுவே ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் எமிலி விக்கிபீடியா நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆதாரங்களை தேடிப்பிடித்து அதில் ஏற்கப்படும் நடையில் பெண் விஞ்ஞானிகளை அறிமுகம் செய்து வருகிறார்.

எமிலி பற்றிய விக்கிமீடியா வலைப்பதிவு குறிப்பு: https://blog.wikimedia.org/2016/03/08/alchemy-turning-harassment-into-women-scientists/

எமிலியின் பெண் விஞ்ஞானிகள் விக்கி திட்டம்: https://en.wikipedia.org/wiki/Wikipedia:WikiProject_Women_scientists

——-


இணைய குறிப்பேடு

papiewrஇணையத்தில் உலாவும் போது, காகிதமும் பேனாவும் கையில் இருந்தால் நல்லது தான். பயனுள்ள இணைதளங்கள் அல்லது பின்னர் பார்க்க நினைக்கும் இணைய சேவைகளை குறித்து வைத்துக்கொள்ள இது உதவலாம். அப்படியே இணைய உலாவுதலின் போது மனதில் மின்னலென தோன்றும் எண்ணங்களையும் உடன் எழுதி வைக்கலாம். காதிக குறிப்பேட்டை விட டிஜிட்டல் குறிப்பேடு இன்னும் நல்லது. இதற்கென தனியே இணைய சேவையை நாடாமல் நினைத்த நேரத்தில் குறித்து வைக்கும் வசதி இருப்பது மேலும் சிறந்தது – இப்படி நினைப்பவர்கள் குரோம் பிரவுசரில் நீட்டிப்பாக செயல்படும் கெட்பேப்பியர் சேவையை புக்மார்க் செய்து கொள்ளலாம்.

உடனடி குறிப்பேடாக செயல்படக்கூடியது என்பது இதன் சிறப்பு. இந்த சேவையை நீட்டிபாக நிறுவிக்கொண்ட பின், எப்போது குறிப்பேடு தேவையோ அப்போது புதிய டேப் ஒன்றை கிளிக் செய்து விட்டு அந்த பக்கத்தில் டைப் செய்யத்துவங்கிவிடலாம். டைப் செய்பவை தானாக சேமிக்கப்படும். இதற்கென தனியே கணக்கு துவங்க தேவையில்லை. இந்த குறிப்பேட்டை அச்சிட்டுக்கொள்ளலாம். இரவு வாசிப்புக்கு ஏற்ற அம்சமும் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: https://getpapier.com/

———

செயலி புதிது; மரம் வளர்க்கும் செயலி
forest-app-trees
ஸ்மார்ட்போனை கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று புலம்பும் அளவுக்கு அதற்கு பழகிவிட்டீர்களா? கவலையே வேண்டாம், ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து சற்றே விடுபட சுவாரஸ்யமான முறையில் வழி காட்டுகிறது பாரஸ்ட் ஆப் செயலி.

ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்தாமல் வேறு முக்கிய பணிகளில் ஈடுபட விரும்பும் போது இந்த செயலியை இயக்க வேண்டும். உடனே திரையில் ஒரு மரம் வளரத்துவங்கும். அடுத்த அரை மணி நேரத்திற்கு செயலி அப்படியே இயங்கி கொள்ள அனுமத்தீர்கள் என்றால் மரம் முழுவதும் வளரும். அது வரை நீங்களும் உங்கள் பணியில் மூழ்கி இருக்கலாம்.

மரத்தை வெட்டாமல் இருக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் நீங்கள் போனில் கை வைக்காமல் இருக்க வேண்டும். மரம் வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது உற்சாகம் ஏற்படும் அல்லவா? அதற்காக பொறுமையாக இருக்கத்தோன்றும். வேலையையும் கவனிக்கலாம்.

போனில் இருந்து விடுதலை தேவை என நினைக்கும் போது இந்த செயலியை நாடலாம்.
ஸ்மார்ட் போன் மோகத்திற்கு கொஞ்சம் எளிமையான தீர்வு தான். ஆண்ட்ராய்டு, ஐபோனில் செயல்படுவதோடு, இணைய பிரவுசர்களிலும் செயல்படுகிறது.

பிரவுசரில் பயன்படுத்தும் போது, அரை மணி நேரத்திற்கு இணையதளங்களின் பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும். எந்த தளங்களை பிளாக் செய்ய வேண்டும் எனும் பட்டியலை பயனாளிகள் தீர்மானித்துக்கொள்ளலாம். சதா பேஸ்புக், டிவிட்டர் என இருப்பவர்களும் இதை முயன்று பார்ககலாம். கவனச்சிதற்ல்களுக்கான வாய்ப்பு இணையத்தில் அதிகம் இருக்கும் நிலையில், அவற்றில் இருந்து மீட்டுக்கொள்ள இந்த சேவை கைகொடுக்கும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.forestapp.cc/

—-

தளம் புதிது: உடனடி மொழிபெயர்ப்பு வசதி
tras
இணையத்தின் மூலம் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் எளிதாக இருக்கிறது. சில நேரங்களில் சொந்த மொழி தவிர பிற மொழிகளிலும் கருத்துக்களை வெளியிட இணையத்திலேயே மொழிபெயர்ப்பு வசதியும் இருக்கிறது. இப்படி பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது டிரான்ஸ்லேட்டர் இணைதளம்.
எளிமையாக உள்ள இந்த தளத்தில் மேல் பக்கத்தில் மொழிபெயர்க்க விரும்ப்பும் வரிகளை டைப் செய்து விட்டு, கீழே உள்ள பட்டியலில் இருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வளவு தான் மொழிபெயர்ப்பு முடிந்தது. ஆனால் நீளமான பத்திகளுக்கு எல்லாம் பொருத்தமாக இருக்காது. சின்ன சின்ன வாசகங்கள் என்றால் சரியாக இருக்கும். ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் மாற்றிக்கொள்ளலாம். மிக எளிமையான சேவை; ஆனால் பயன்மிக்கது.
கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://translatr.varunmalhotra.xyz/

——-

வீடியோ புதிது: புளுடோனியம் அறிவோம்
science-elements
புளுடோனியம் தான் உலகின் ஆபத்தான தனிமம் என்று கருதப்படுவது உங்களுக்குத்தெரியுமா? மற்ற தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டவை என்றால், புளுடோனியம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. கதிரியக்க செயல்பாடால் கண்டறியப்பட்டது என்பதால் அது ஆபத்தானது. அது கதிரியக்க தன்மை கொண்டது. புளுடோனியத்தை சாதாரண ஆய்வுக்கூடத்தில் வைத்திருக்க முடியாது.; அதற்கென வடிவமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் தான் வைக்க முடியும். புளுடோனியத்தை நேரில் பார்ப்பது சாத்தியமில்லை. புளுடோனியம் பற்றி இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை வழங்குகிறது ரியல் புளுடோனியம் வீடியோ. ஆர்வத்தை தூண்டும் ஆவணப்பட பாணியில் அமைந்துள்ள இந்த வீடியோவை பார்த்து பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளலாம். புளுடோனியம் பற்றி மட்டும் அல்ல, பீரியாடிக் டேபிள் எனப்படும் தனிப அட்டவனையில் உள்ள ஒவ்வொரு தனிமம் பற்றிய வீடியோக்களையும் இதன் பின்னே உள்ள யூடியூப் சேனலில் பார்க்கலம்;

வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=89UNPdNtOoE

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

குறிப்பெடுக்க உதவும் இணைய பலகை

02காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக்கொள்ளவும், தேவை எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தால் எப்படி இருக்கும்?இந்த இரண்டையும் பின்சைடு இணைய சேவை சாத்தியமாக்குகிறது.இன்னும் பலவற்றையும் கூட சாத்தியமாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

வடிவமைப்பு மற்றும் தோற்றம் என இரண்டிலுமே எளிமையாக இருக்கும் பின்சைடு பயன்படுத்தவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் அதன் எளிமையை மீறி அதன் பயன்பாடு எல்லையில்லாமல் விரிவாதாக இருப்பது தான் ஆச்சர்யம்.

சரி, பின்சைடு மூலம் என்ன (எல்லாம்) செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

அடிப்படையில் பின்சைடு ஒரு இணைய பலகை- அதாவது இணைய குறிப்பேடு என்று வைத்துக்கொள்ளலாம்.
உள்ளங்கை அளவு மஞ்சள் வண்ண காகிதத்தில் குறிப்பெழுதி அலுவலக மேஜை முன் ஒட்டி வைத்துக்கொள்வது உண்டல்லவா?அது போலவே பின்சைடு தளத்தில் நமக்கான குறிப்புச்சீட்டை உருவாக்கி கொள்ளலாம். இந்த சீட்டில் செய்ய வேண்டியது, நினைவில் கொள்ள வேண்டியது என எதை வேண்டுமானாலும் குறித்து வைக்கலாம்.
குறிப்புச்சீட்டுகளை பெற பின்சைடு தளத்தில் உறுப்பினராக சேர்ந்தாலே போதுமானது.உறுப்பினராக இணைவதற்கு முன் இந்த சேவை எப்படி பயன்படுத்திக்கொள்வது என முன்னோட்டம் பார்க்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. இதற்காக டெமோ போர்ட் எனும் விளக்க பலகை நம் முன் வைக்கப்படுகிறது.

விளக்க பலகையில் கரும் பலகை போல வெறுமையாக இருந்தாலும் அதில் இடது பக்கத்தின் மேலே உள்ள ,புதிய குறிப்புக்கான பகுதியை கிளிக் செய்ததுமே, கரும் பலகையில் மஞ்சல் வண்ண குறிப்பிச்சீட்டு தோன்றுகிறது. மனதில் உள்ளதை அதில் டைப் செய்யலாம். தேவை எனில் புகைப்படமும் இணைக்கலாம். அவ்வளவு தான் குறிப்பிச்சீட்டை தயார் செய்தாகிவிட்டது.

இனி இந்த சீட்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இல்லை எனில் உங்களுக்கு மட்டுமே வைத்துக்கொள்ளலாம். இதில் வெறும் நினைவூட்டலை எழுதி வைக்கலாம். அல்லது செய்ய வேண்டிய செயல்களை பட்டியல் போட்டுக்கொள்ளலாம். பார்க்க வேண்டிய படங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என நீங்கள் விரும்பும் எதையும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

இப்படி எத்தனை குறிப்புகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். குறிப்புச்சீட்டுகளை கரும் பலகையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கொண்டு போய் வைக்கலாம். அவற்றுக்கான நோக்கம் நிறைவேறிவிட்டால் குறிப்புகளை நீக்கிவிடலாம்.

தனிப்பட்ட முறையில் பயன்படுத்த நினைத்தால் ,இதை உங்க்ளுக்கான இணைய பலகையாக கருதிக்கொள்ளலாம். சந்திப்புகளுககான கூட்டங்களை நினைவில் கொள்வது முதல் இன்று மாலை வாங்கி வர வேண்டிய மளிகை சாமான்கள் வரை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் பார்க்கும் பயனுள்ள இணையதளங்களையும் கூட இப்படி புக்மார்க் செய்து கொள்ளலாம்.

பகிர்தலுக்கான விஷயங்கள் என்றால் இந்த குறிப்பேட்டை நண்பர்களுடனும் கூட பகிர்ந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு ஒன்றாக திட்டமிடுவது அல்லது அலுவலக பணி பற்றி விவாதிப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.குடும்பத்தினர் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து விடுமுறை கால பயணத்தையும் திட்டமிடலாம். நண்பர்கள் இதிலேயே எடிட் செய்து கருத்து தெரிவிக்கலாம்.
பொது கருத்து என்றால் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த பலகையை பயன்படுத்தலாம். மாற்றங்களுக்கான எண்ணங்களை வெளியிட்டு ஆதரவு திரட்டவும் இது ஏற்றதாக இருக்கும். வலைப்பதிவு துவக்குவதை சுமையாக நினைத்தால், எளிதாக இதில் எளிதாக எண்ணங்களை பதிவு செய்து அந்த பக்கத்தை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம்.

மாணவர்களுக்கும் கூட இது ஏற்றதாகவே இருக்கும்.
இந்த சேவை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. புக்மார்க் செய்து கொண்டு, முயற்சித்து பாருங்கள்: http://pinsi.de/index.php