Category Archives: இன்டெர்நெட்

இது ஒய் 2 கே நாவல்

kevinஉலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது!

.
‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி றதா? புத்தாயிரமாவது நெருங்கி கொண்டிருந்த நிலையில், ‘எல்லாமே தவறாகப் போகிறது. என்னவெல் லாமோ விபரீதங்கள் நிகழப்போகிறது’ என்றெல்லாம் பீதியடையச் செய்தது.

ஒய் 2 கே என்னும் பூதம். கம்ப்யூட்டர் களுக்கு உலகம் பழகி, அவை வாழ்க்கையில் நீக்கமற கலந்துவிட்ட நேரத்தில்தான், சாப்ட்வேர் நிபுணர்கள் அந்த குண்டை எடுத்து வீசினர்.

2000-மாவது ஆண்டை தொட்ட துமே, கம்ப்யூட்டர்களுக்கு கிறுக்கு பிடித்துப்போய்விடும். அதனால், பிரளயமே ஏற்பட்டு பூலோகமே சர்வநாசமாகிவிடலாம். இப்படித்தான் திகிலை ஏற்படுத்தினர்.

ஆரம்பத்தில், சாமான்யர்கள் இது பற்றி கவலையில்லாமல் இருந்தனர். ஆனால் வையம் தழுவிய விழிப் புணர்வு இல்லாவிட்டால் மனித குலத்தை மாபெரும் அழிவிலிருந்து காக்க முடியாமல்போய்விடுமே என அஞ்சிய நிபுணர்கள் வெகு விரைவில் பாமரர்களுக்கு ‘ஒய் 2 கே’வை புரிய வைப்பதில் வெற்றி பெற்றனர். அதனால் ‘ஒய் 2 கே’ பூதம் ஒவ்வொரு வரையும் பிடித்தாட்டத் தொடங்கியது. பிரச்சனை என்னவென்று பலருக் கும் புரிந்தது.

வருடங்களை எழுதும் போது, கடைசி இரண்டு இலக்கத்தை மட்டும் எழுதும் பொதுவான சோம்பேறித்தனம் உண்டல்லவா? சாப்ட்வேர் நிபுணர் களும், இந்த சோம்பலுக்கு ஆட்பட்டு, வருடங்கள் வரும் இடங்களில் எல்லாம் கடைசி இரண்டு இலக்கத்தை மட்டுமே பயன்படுத்தினர். அதாவது ‘1947’ என குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘47’ என சுருக்கத்தை மட்டுமே கையாண்டனர்.

இதற்கு சோம்பல் மட்டுமே காரணம் இல்லை. சாப்ட்வேர் நிபுணர்களின் சிக்கன அணுகுமுறையே பிரதான காரணம். இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். கம்ப்யூட்ட ரின் செயல்திறனும், அதன் நினை வாற்றலும் பல மடங்கு அதிகமாகி இருக்கும் காலம் இது.

ஆனால், 1990-கள் வரை, கம்ப்யூட் டரின் நினைவாற்றல் கொள்ளளவுக்கு வரம்பு இருந்ததால், அதன் பயன் பாட்டில் சிக்கனம் அவசியமா னது. எனவேதான் புரோகிராம்களை எழுதும் போது, எங்கெல்லாம் மிச்சம் பிடிக்க முடியும் என பார்த்தனர். வருடங்களை குறிப்பிடும்போது இரண்டு இலக் கங்களை சுருக்கி எழுதும் குறுக்கு வழியை கையாள்வது இயல்பானதா கவே அமைந்தது.

துவக்கத்தில் இந்த சிக்கனத்தால் பெரும் பிரச்சனை வரக்கூடும் என ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால், ‘2000’மாவது ஆண்டை நெருங்கி கொண்டிருந்த நிலையில் தான், இது எத்தனை பெரும் தவறு என உரைத்தது.

‘47’-ஐ, 1947 என கம்ப் யூட்டர் புரிந்து கொள்ளும். ஆனால், 1999 முடிந்து 2000 வரும்போது, ‘00’ என்று மட்டும் அல்லவா காட்டும்! இதை கம்ப்யூட்டர் ‘2000’ என புரிந்து கொள்ளாமல், ‘1000’ என்றோ, ‘3000’ என்றோ புரிந்து கொண்டுவிட்டால் சிக்கல் இல்லையா? என்பது கேள்விகள் அலைமோதின. இல்லை-, ‘00’ என் னும் எண்களை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளாமலே குழம்பி நின்றால் என் னாகும் என்னும் அச்சமும் உண்டானது.

இன்சூரன்ஸ்அலுவலகம், வங்கிகள், வாகன அலுவலகம், சம்பள பட்டு வாடா, பதிவு போன்ற எங்கெல்லாம் வருடங்கள் முக்கிய பங்கு வகிக்கி றதோ, அங்கெல்லாம் இந்த பிரச்சனை யால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

பாதிப்பு இல்லை, விபரீதம் காத்திருப் பதாகவும் சொல்லப்பட்டது. ஏடிஎம் இயந்திரங்கள் கேள்வி கேட்காமல் பணத்தை வாரியிறைக்கலாம், மூடப் பட்ட லிப்ட்கள் திறக்கப்படாமல் போகலாம். நடுவழியில் விமானங்கள் திசைமாறலாம், சம்பள கணக்கு தாறுமாறாகலாம்…

இதுபோன்ற பெரும் பிழைகள் எல்லாம், புத்தாயிரமாண்டில் அடியெடுத்து வைத்ததும் சர்வ சகஜமாக நிகழலாம்! இப்படித்தான் பேசப்படலாயிற்று! இதற்கு மாற்று மருந்து தேட வேண் டிய அவசரத்தோடு, உலகம் முடுக்கி விடப்பட்டது. ‘ஒய் 2 கே’ பக் என்று சொல்லப்பட்ட, இப்பிரச்சனைக்கு தீர்வு காண, கம்ப்யூட்டரில் வருடங்கள் இடம் பெற்ற பகுதிகளை திருத்தி எழுத தொடங்கினர்.

குறித்த நேரத்திற் குள் இந்த பணியை நிறைவேற்றிவிட முடியுமா? என்னும் கேள்விக்குறி யோடு வீராவேசத்தில் மாற்று புரோ கிராம்கள் எழுதப்பட்டன. இந்த பர பரப்பு பீதியால் அதிகம் பயனடைந்தது இந்திய சாப்ட்வேர் புலிகள்தான். ‘ஒய் 2 கே’ மாற்று மருந்து ஒப்பந்தங்கள் பெரும்பாலும் அவர்களைத்தான் தேடி வந்தன. இதையெல்லாம் இன்று நினைத் துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

எப்படி எல்லாம் பயம் காட்டப்பட்டது. கடைசியில் ஒன்றும் நடக்காமல் போனது. மற்ற வருடங்களைப் போலவே புத்தாயிரமாண்டும் கோலா கலத்தோடு பிறந்தது. கொண்டாட்டங் களின் மத்தியில் ‘ஒய் 2 கே’ மறந்தது. அதன் பிறகு காணாமலும் போனது! இப்போது எதற்கு இந்த பழங்கதை?

அமெரிக்கர் ஒருவர் இந்த கேள்வியை கேட்க வைப்பதற்காகவே ஒரு நாவலை எழுதியுள்ளார். ‘ஒய் 2 கே’ பிரச்சனை பூதாகரமாக அச்சுறுத்திவிட்டு, கடைசியில் ஒன்று மில்லாமல் போனது. உலகம் அதனை மறந்தும் விட்டது.

ஆனால் ‘கெவின் ஷே’ மறக்கத் தயாராக இல்லை. உலகம் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக அவர் எழுதியுள்ள நாவல்தான், ‘தி என்ட் ஆப் ஐ நோ இட்’. தமிழில் இதனை மொழிபெயர்த்தால், ‘நான் அறிந்த வகையிலான முடிவு’ என்பது போல வரும்.

நாவலின் தலைப்பே விசேஷமானது தான். உள்ள பக்கத்தின் சாராம்சத்தையும், நாவலின் நோக்கத்தையும், பொடி வைத்து பேசுவதுபோல பூடகமாக உணர்த்திவிடும் தலைப்பு.
தி என்ட்: அதாவது ‘முடிவு’ என்பது. ஒரு விதத்தில் உலகின் அழிவு என்னும் அர்த்தத்திலும் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

‘ஒய் 2 கே’ பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்த போது, அழிவுகாலம் நெருங்கிவருகிறது என்னும் அச்சமே மைய கருத்தாக இருந்தது. அப்படி எதுவும் நிகழவில்லை என்பது வரலாறு. இந்நிலையில், நான் அறிந்த வகையிலான ‘முடிவு’ என்னும் தலைப்பு, பேரழிவு கூச்சல்கள் எல்லாம் பொய்த்தப்போய், பிரச்சனை எங்கோபோய் முடிந்தது என்னும் மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

ஏ நாவல் ஆப் மில்லினியம் அன்சிட்டி, (புத்தாயிரமாண்டை உலுக்கிய கவலை பற்றிய நாவல்) என்னும் துணைத் தலைப்பு இதனை மேலும் அழகாக விளக்குகிறது. ‘ஒய் 2 கே’வை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் இல்லை இது. ‘ஒய் 2 கே’ பூதம் உலகை உலுக்கி கொண்டிருந்தபோது, நாளிதழ்களும் பத்திரிகைகளும் பிரச்சினையை விளக்கி, அலசும் வகையில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளின.

இந்த பரபரப்புக்கு தூபம் போடும் வகையில் நாவல்களும் எழுதப்பட்டன. திரைப்படங்கள் மற்றும் டாக்குமென்ட்ரிகளும் எடுக்கப்பட்டன. ‘ஒய் 2 கே’வை மையப்படுத்தினால் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என்னும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டது.

ஆனால், ‘ஒய் 2 கே’ அலை ஓய்ந்த பிறகு, அதில் இனியும் ஆர்வம் இல்லை என்றான பிறகு, எழுதப்பட்ட முதல் நாவல் கெவின் ஷேவினுடையது. காலத்தை பின்னோக்கி பார்க்கும் முயற்சி என்பதால், ‘ஷே’ நாவலை நகைச்சுவை கலந்து, ‘ஒய் 2 கே’ கூத்து மீதான நையாண்டியாக எழுதியிருந் தார்.

‘ஒய் 2 கே’ நிகழ்வை திரும்பி பார்த்து, அப்போது நடந்ததை கேலியும் கிண்டலுமாக விவரித்திருப்பதால், நாவல் சுவாரசியமாக படிக்கும் வகையில் அமைந்துவிட்டது என்கின்றனர்.

‘ரான்டல் நைட்’தான் நாவலின் கதாநாயகன். அவரது பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. ரான்டல், குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்துபவர். ரான்டல் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இன்டெர்நெட்டிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. இன்டெர் நெட்டில் ‘ஒய் 2 கே’ பிரச்சனையை படித்து தெரிந்து கொள்ளும் அவர் திடுக்கிட்டுப் போகிறார். தொடர்ந்து ‘ஒய் 2 கே’ பற்றி விரிவாக ஆய்வு செய்யத் தொடங்குகிறார்.

‘ஒய் 2 கே’ தொடர்பான குழுக்களில் நடக்கும் விவாதங்களிலும் பங்கேற்கிறார். விளைவு ரான்டலை பீதி பற்றிக் கொள்கிறது. ‘ஒய் 2 கே’வால் உலகிற்கு கேடு வரப்போகிறது என பதறிப்போய் எதிர்வர உள்ள பேரழிவை தடுத்து நிறுத்த ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடிக்கிறார்.

இப்படியொரு பூதம் தாக்குவதற்கு தயாராக உள்ள நிலையில் உலகமோ அதை அறியாமல் இருக்கிறதே என்றும் படபடக்கிறார். அவ்வாறுதான், உலகை காக்கும் மாபெரும் பொறுப்பை தனது தோள்களில் சுமக்க வேண்டும் என முடிவு செய்து, வேலையை உதறித்தள்ளிவிட்டு, நாடு தழுவிய விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்கிறார்.

‘ஒய் 2 கே’ பிரச்சனை தொடர்பான சகல விவரங்களையும் கையில் வைத்துக் கொண்டு ‘நான் சொல்வதை கேளுங்கள்’ என ஊர் ஊராக சென்று மக்களிடம் மன்றாடுகிறார். ஆபத்தை அறியாமல் அலட்சியமாக இருக்கின்றன என பதறும் அவரை மற்றவர்கள் கிறுக்கனாக பார்க்கின்றனர்.

கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பிரச்சனையின் பிரம்மாண்டத் திலும் அதை பிறருக்கு உணர்த்துவதிலும் மூழ்கிப்போயிருக்கும் ரான்டல், தான் திரட்டி வைத்திருக்கும் விவரங்களை எடுத்துச் சொல்ல என்னை நம்புங்கள் என மன்றாடுகிறார்.

‘ஒய் 2 கே’ வெடிகுண்டு பூமி மீது வெடிக்க காத்திருக்க அமெரிக்காவோ, அதிபரின் காதலி பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதே என கொதித்து போகும் ரான்டல், அடுத்த அடுத்த ஊர்களுக்கு சென்று பேசிப்பார்க்கிறார்.

ரான்டல் பயமும் கவலையும் உண்மை தானா, உலகம் விழித்துக் கொள்ளுமா? என்னும் கேள்விகளோடு-, அவரது பயணம் தொடர்கிறது. கடைசியில் ஒன்றுமே ஆகவில்லை என்னும் உண்மை அறிந்த நிலையில் ரான்டலின் பயணத்தை பின் தொடர்வது சுவையாகவே இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

அந்த வகையில் சமகால நிகழ்வு தொடர்பான மிகச் சிறந்த நையாண்டியாக நாவல் அமைகிறது. ‘ஒய் 2 கே’ அச்சம் தவறானது மட்டம் அல்ல, தவரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் கெவின் ஷே, மோசமான நிகழ்வுகள் நடக்கும் என்று உலகம் ஏன் நம்புகிறது என்னும் கேள்வியை நாவல் மூலம் எழுப்பியிருப்பதாக சொல்கிறார்.

பரபரப்பின் உச்சநிலையை விவரித்து, அதன் ஆதார இயல்புகளையும் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அமெரிக்காவின் போஸ்டனில் பிறந்து கேம்பிரிட்ஜில் படித்து, பின் உளவியல் பட்டமும் பெற்ற, ஷேவுக்கு சாப்ட்வேர் துறையில் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் இருந்தது. ‘ஒய் 2 கே’ தொடர்பான அதீத பரபரப்பால் ஏற்பட்ட தாக்கத்தையே நகைச்சுவையோடு நாவலாக்கி இருக்கிறேன் என்கிறார் அவர்.

‘மெக்ஸ்வேனி’ என்னும் நகைச்சுவை தளத்தில் கட்டுரைகள் எழுதி தனது நையாண்டி பாணிக்கு பட்டை தீட்டிக் கொண்டது நாவலில் அவருக்கு கைகொடுத்தது. ““டேகர் நேஷன்’ என்னும் இணையதளத்தை நடத்தி வரும் அவர், நாவலுக்காக ‘கேஷே’ டாட் காம் என்னும் தனிப்பகுதியை உருவாக்கி உள்ளார்.
—————

link;
www.kshay.com

டிஜிட்டல் தேசம் கொரியா

digital-koreaதென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

.
மேலும் அந்நாட்டில் செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் 63 சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

11 மாத காலம்: இதுதான் ஒரு செல்போன் கொரியர்களின் தங்கியிருக்கும் காலம். அதன் பிறகு பழைய போனை தூக்கியெறிந்து விட்டு புதிய போனை, அதுவும் காமிரா போன்தான், வாங்கி விடுகின்றனராம்.

கொரியாவில் பிராட்பேண்டு வசதி நீக்கமற நிறைந்திருந்தாலும் அதன் கட்டணம் என்னவோ உலகிலேயே மிகவும் குறைவாக இருக்கிறதாம். உலகம் இன்று மைஸ்பேஸ் பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே கொரியாவில் அவர்களுக்கென்று தனியே ஒரு மைஸ்பேஸ் சைவேர்ல்டு எனும் பெயரில் பிரபலமாக இருக்கிறது.

இந்த தளத்தில் 43 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு அந்நாடு வலைப்பின்னல் தேசமாகவும் இருக்கிறது. அதே போல கொரியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் காரை நிஜத்தில் பார்க்க முடியாது. காரணம் அது இன்டெர்நெட்டில் மட்டுமே உலா வரும் சாலிட் புரோ எனும் வர்ச்சுவல் காராகும்.

கொரியாவுக்கென்று தனியே ஒரு ஆன்லைன் விளையாட்டு உலகம் இருக்கிறது. லீனியேஜ் என்று அதற்கு பெயர். அதன் உறுப்பினர்களோ பிரபலமாக இருக்கும் வேர்ல்டு ஆப் வார்கிராப்ட் விளையாட்டு உலகின் உறுப்பினர்களை விட இருமடங்கு அதிகமாகும்.

தென்கொரியர்களை பற்றி வியக்க வைக்கும்புள்ளி விவரங்கள் இன்னமும் இருக்கிறது. தென்கொரிய மாணவர்களின் 40 சதவீதம் பேர் வகுப்பறையிலிருந்தே எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பி கொள்கின்றனர்.

30 சதவீத மாணவர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்புகின்றனர். 20 சதவீத தென் கொரியர்கள் செல்போனி லிருந்தே இன்டெர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் மூன்றாவது தலைமுறை செல்போன் களுக்கு மாறியிருக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தென் கொரியர்கள் செல்போனிலிருந்தே இன்டெர்நெட்டில் உலாவுகின்றனர்.

செல்போன் வைத்திருப்பவர்களில் ஒருசிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ரிங்டோன் வாங்குகின்றனர். ரிங் பேக் டோன் என்று சொல்லப்படும் புதுமையான ரிங்டோன் தென்கொரியாவில் உதயமானதுதான்.

இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் வியக்க வைப்பதாக மட்டுமல்லாமல் தென்கொரிய சமூகத்தில் நவீன தொழிற்நுட்பம் எப்படி இரண்டற கலந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இந்த விவரங்கள் எல்லாம் புதிதாக வெளிவந்துள்ள டிஜிட்டல் கொரியா எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. டோமி ஹோனன் எனும் தொழில்நுட்ப எழுத்தாளர் இந்த துறையை சேர்ந்த மற்றொரு நிபுணரான ஓ ரியலியோடு சேர்ந்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த புத்தகத்திற்காக தென் கொரிய சமூகத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தும் விதத்தை அலசி ஆராய்ந்திருக்கின்றனர். அதன் விளைவாக அந்த புத்தகம் தென்கொரியாவில் ஏற்பட்டு வரும் தொழிற்நுட்ப மாற்றத்தை கச்சிதமாக பிரதிபலிக்கிறது.

தென்கொரியா தொழிற்நுட்ப விஷயத்தில் முன்னணியில் இருப்பதோடு குடிமக்கள் இதழியல் என்று சொல்லப்படும் பொதுமக்களே பத்திரிகையாளர்களாக செயல்படும் போக்கிலும் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டில் உதயமான ஓ மை நியூஸ் செய்திதளம் இன்று இன்டெர்நெட் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் குடிமக்கள் இதழியலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இந்த போக்குகளையெல்லாம் இப்புத்தகம் விரிவாக அலசுகிறது. மிக சரியாக இந்த புத்தகத்திற்கு டிஜிட்டல் கொரியா என்று பெயர் வைக்கப் பட்டிருப்பதாக பாராட்டப்படுகிறது. காரணம் இன்று உலகில் டிஜிட்டல் தேசம் என்று ஏதாவது ஒன்று இருக்குமாயின் அது கொரியாதான் என்று சொல்ல தோன்றுகிறது.

ஒரு தளம் பல வண்ணம்

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டாலும் இதற்கான மிகச்சிறந்த உதாரணமாக எளிமையே வடிவான முகப்பு பக்கத்தை தேடியந்திர முதல்வனான கூகுல் பெற்றிருந்தாலும், அநேக இணைய தளங்கள் வண்ணப் படங்கள், வரைபடங்கள், வீடியோ வசதி என ஏராளமான அம்சங்களை கொண்ட தாகவே உருவாக்கப்படுகின்றன.
.
சில தளங்கள் கிராபிக்ஸ் மயமாகவும் அமைகின்றன. இத்தகைய தளங்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால் வசீகரமாக இருக்கலாமே தவிர, பயன்படுத்தும் போது சிக்கலான அனுபவத்தை தரலாம் என்று கருதப்படுகிறது. படங்கள், வரைபடங்கள் தவிர, இணையவாசிகளுக்கான சர்வே, ஒப்பிட்டு பார்க்கும் வசதி போன்ற கூடுதல் அம்சங்களையும் பல தளங்கள் கொண்டிருக்கின்றன.

எனவே, இதுதான் சிறந்த வடிவமைப்பு என்று சொல்ல முடியாத குழப்பமான நிலையே இன்டெர்நெட் உலகில் நிலவுகிறது. ஒரு தளம் எப்படி இருக்கிறது என்பதை விட, இணையவாசிகளுக்கு அது எத்தகைய அனுபவத்தை தருகிறது என்பதை பொறுத்தே அது சிறந்ததா, இல்லையா என்ற தீர்மானத்திற்கு வர வேண்டியிருக்கிறது.

ஆனால், இணையவாசிகள் பல தரப்பட்டவர்களாகவும் அவர்களின் எதிர்பார்ப்பு பலதரப்பட்டதாகவும் இருக்கும் போது என்ன செய்வது? எல்லோரையும் திருப்திபடுத்தக் கூடிய இணைய தளத்தை வடிவமைப்பு எப்படி? எளிமையான வடிவமைப்பை விரும்புகிறவர்கள், ஏராளமான அம்சங்களை கொண்ட தளத்தை விரும்பாமல் விலகிச் செல்லும் போது என்ன செய்வது?

வடிவமைப்பாளர்கள் மனதில் எழக்கூடிய இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் தரக்கூடிய வகையில் புதுமையான இணைய தள வடிவமைப்பு முறை முன்வைக்கப்பட்டுள்ளது.

எம்ஐடி பல்கலையைச் சேர்ந்த ஸ்லோன் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முன்வைத்துள்ள இந்த வடிவமைப்பு முறை உண்மையிலேயே சுவாரசியமானது. ஒரு குறிப்பிட்ட வகை தளத்தை வடிவமைக்காமல், நான்கைந்து வகையான தளங்களை வடிவமைக்க வேண்டும் என்பதே இந்த முறையின் மைய கருத்து. அதாவது நான்கைந்து வகையான இணைய தளங்களை ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்து, ஒரே தளமாக உருவாக்கி விட வேண்டும்.

இப்படி ஒரு தளத்தை உருவாக்கும் பட்சத்தில், இணையவாசிகளின் தன்மைக்கு ஏற்ப, அவர்களுக்கு ஏற்ற வகையான வடிவமைப்பு கொண்டதாக இணைய தளம் தானாக மாறிவிடும்.

உதாரணமாக, இணையவாசி எளிமையை விரும்புகிறவர் என்றால், இணைய தளமும் தானாகவே எளிமையான வடிவமைப்பு கொண்டதாக மாறிவிடும். அதே நேரத்தில் புகைப்பட பிரியராக விளங்கும் இணையவாசி என்றால், தளம் வண்ணப்படங்களை கொண்டதாக காட்சி தரும். இத்தகைய தளம் எவரையும் ஏமாற்றாது. எல்லோரையும் திருப்தி படுத்தக்கூடியதாக இருக்கும்.

எதிர்காலத்தில் இத்தகைய வடிவமைப்பு முறையே கோலோச்சப் போவதாக பேராசிரியர் ஜான் ஹாசர் கூறுகிறார். மேலே சொன்ன வடிவமைப்பு முறையை முன் வைத்துள்ள ஆய்வுக் குழுவின் தலைவராக ஹாசர், இந்த வகை இணைய தளம், இணையவாசிகளின் இயல்பை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப மாறும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூறுகிறார். இந்த தளம் மாறுகிறது என்பது கூட இணையவாசிகளுக்கு தெரியாமல், அது, அவருக்கு ஏற்றதாக மாறியிருக்கும் என்று இவர் கூறுகிறார்.

கிட்டத்தட்ட வடிவமைப்பு மாயம் என்று இதனை வர்ணிக்கலாம். இந்த மாயம் எப்படிசாத்தியமாகிறது? இணைய தளம் அந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக வடிவமைக் கப்படுகிறது என்பதே விஷயம்.

இணையவாசிகள் “கிளிக்’ செய்யும் முறையை வைத்தே அவர்களின் எதிர்பார்ப்பை யூகித்தறியும் ஆற்றல் கொண்டதாக இருப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.
முகப்பு பக்கத்தை பார்த்தவுடன் இணையவாசி, விலைகளை ஒப்பிட்டு பார்க்கும் வசதியை கிளிக் செய்தார் என்றால், அவர் அலசி ஆராயும் மனோபாவம் கொண்டவராக இருக்கக்கூடும் என்ற அனுமானம் கொள்ளப்பட்டு, அதற்கேற்ற வடிவமைப்புடன் தளம் உருமாறிக் கொள்ளும். அதே போல இணையவாசி கேள்வி பதில் பகுதியை கிளிக் செய்தால் அவர், தளத்தோடு தொடர்பு கொண்டபடி இருக்கும் ஒருவித உரையாடல் தன்மையை விரும்புகிறவர் என்று புரிந்து கொள்ளப்படும்.

வரைபடங் களை கிளிக் செய்பவருக்கு தளம் கிராபிக் மயமாக காட்சி தரும். அதிகபட்சமாக இணையவாசிகளின் பத்து கிளிக்குகளுக்குள் இணைய தளம் அவரது எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு விடும் என்று பேராசிரியர் ஹாசர் நம்பிக்கையோடு சொல்கிறார்.
அது மட்டும் அல்ல, இணையவாசிகள் தொடர்ந்து பயன்படுத்தும் விதத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலம் பொதுவாக எந்த வகையான அம்சங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்பதையும் தளம் குறித்து வைத்துக் கொள்ளும்.

இந்த ஆய்வு இன்னமும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றாலும் எதிர்காலத்தில் இணைய தள வடிவமைப்பில் ஆய்வு மூலமான புரிதல் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த முறையில் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்திற்கு சோதனை அடிப்படையில் ஒரு இணைய தளம் வடிவமைத்து தரப்பட்டுள்ளது. இந்த தளத்தின் செயல்பாடுகள் ஆர்வத்தோடு கவனிக்கப்பட்டு வருகிறது.

எம்ஐடியின் ஸ்லோன் பள்ளியைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியரான கிளன் அர்பன், இந்தக் குழு ஜப்பானிய வங்கிக்கு ஜப்பானிய மொழியில் ஒரு மாதிரி தளத்தை வடிவமைத்து வருவதாக கூறுகிறார். இந்த சோதனை முயற்சிகள் வெற்றி பெறுமானால் எதிர்காலத்தில் எல்லோருக்கும் ஏற்ற தளமாக மாறக் கூடிய தளங்கள் வடிவமைக்கப்படுவது சாத்தியமாகும் என்று அர்பன் கூறுகிறார்.

டொமைன் வெற்றிக்கதை

டொமைன் வெற்றிக் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கின்றன என்பதை கிரிஸ் கிளார்க் லட்சாதிபதியாகி இருப்பது உணர்த்துகிறது.வெறும் 20 டாலர் முதலீட்டில் கிளார்க் லட்சாதிபதியாகி இருக்கிறார் என்று சொன்னால் வியப்புக்கு நடுவே இதெப்படி சாத்தியம் என்று கேட்கத் தோன்றும். ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன் கிளார்க் 20 டாலர் முதலீடு செய்த போது அவரே கூட இது தன்னை லட்சாதிபதியாக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்.

இன்று அந்த முதலீடு தான் அவருக்கு 26 லட்சம் டாலர்களை பெற்றுத் தந்திருக்கிறது.
இந்த அற்புதம் சாத்தியமாக அவர் செய்தது எல்லாம் புதுப்பித்தலும், காத்திருத்தலும் தான்.
ஆம், கிளார்க் 1994ம் ஆண்டு இணையதள முகவரி ஒன்றை பதிவு செய்துவிட்டு, ஆண்டு தோறும் அதனை புதுப்பித்து வந்தார். அந்த முகவரிதான் இன்று 26 லட்சம் டாலருக்கு விலை போயிருக்கிறது. அது நம்ப முடியாத வியப்பாக இருக்கிறது என்று கிளார்க்கே அதிசயித்து நிற்கிறார்.

டொமைன் நேம்ஸ் என்று குறிப்பிடப்படும் இணையதள முகவரிகள் அதன் உரிமையாளர்களை லட்சாதிபதிகளாகவும், ஏன் கோட்டீஸ்வரர்களாகவும் ஆக்கியுள்ள கதைகள் ஒன்றும் புதிதல்ல. 1999ம் ஆண்டில் 75 லட்சம் டாலர்களுக்கு விற்பனையான பிஸ்ன் டாட்காம் முகவரியை, இதன் சிகரம் என்று குறிப்பிடலாம். அதற்கு முன்னும், பின்னும் கூட பல இணையதள முகவரிகள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டன.

உலகில் 1500 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தள முகவரிகள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. இந்த கடலுக்கு நடுவில், அபூர்வ இணைய தள முகவரிகளை தேடி எடுப்பது என்பது முத்தெடுப்பது போல தான்.

இத்தகைய முத்துகளை பதிவு செய்து கொண்டிருப்பவர்களிடம் இருந்து, வர்த்தக நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்க தயாராக உள்ளன. பொதுவாக ஒரு இணைய தள முகவரிக்கு சராசரியாக 2,000 டாலர் வரை விற்பனை ஆகின்றன. ஆனால் அபூர்வத்திலும் அபூர்வமான இணைய தள முகவரிகள் மட்டும் லட்சக்கணக்கில் பெற்றுத் தரும்.

தனித்தன்மை வாய்ந்த இணைய தள முகவரிகள் இப்படி அள்ளித் தருகின்றன. பிஸ்னஸ் டாட் காமிலோ, அதன் பிறகு விற்பனைக்கு வந்த கோடிகளை கொட்டிய டைமன்ட் டாட் காமிலோ அல்லது புகழ் பெற்ற புத்தக விற்பனை நிலையமான பார்னர்ஸ் அண்டு நோபுள் நிறுவனத்தால் வாங்கப்பட்ட புக்ஸ் டாட் காமிலோ என்ன புதுமையும், தனித்தன்மையும் இருக்கிறது என கேட்கலாம். இந்த பெயர்களில் எல்லாம் வேறு ஒரு முகவரியை பதிவு செய்ய முடியாது என்பதே விஷயம். முதலில் பதிவு செய்தவர்களைத் தவிர, வேறு யாரும் அவர் எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் கூட இவற்றை மீண்டும் பதிவு செய்ய முடியாது. எனவே தான், தேவைப்படும் நிறுவனங்கள் இவற்றை என்ன விலை கொடுத்தேனும் வாங்க தயாராக உள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் கிரிஸ் கிளார்க் 14 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்து வைத்திருந்த பிட்சா டாட் காம் முகவரியும் இதே போல் தான் தற்போது 26 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.

1994ம் ஆண்டில் பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாமலேயே கிளார்க் இந்த முகவரியை பதிவு செய்து வைத்தார். டாட்காம் அலைக்கு முந்தைய காலம் என்பதால் இந்த முகவரி மூலம் ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்டம் இருப்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.

இணைய தள முகவரிகளை பதிவு செய்வது ஒரு புதுமையாக கருதப்பட்ட நிலையில், பிட்சா டாட் காமை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அவருக்குத் தோன்றியது. அப்போது அவர் இன்டெர்நெட் ஆலோசனை வழங்குவதை தொழிலாக கொண்டிருந்தார்.
இந்த இணைய முகவரி மூலம் பிட்சா நிறுவனம் ஏதாவது ஒன்றின் ஒப்பந்தம் தனக்கு கிடைக்கலாம் என அவர் எதிர்பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. பின்னர் ஆலோசனை நிறுவனத்தையே விற்று விட்டார். ஆனால் இணைய தள முகவரியை மட்டும் விற்காமல் வைத்துக் கொண்டிருந்தார். ஆண்டு தோறும் அதன் உரிமையை தவறாமல் புதுப்பித்தும் கொண்டிருந்தார்.

இதனிடையே டாட்காம் அலைவீசி, பிஸ்னஸ் டாட்காம் போன்ற பொதுப் பெயர்கள் பொக்கிஷமாக கருதப்பட்ட போதெல்லாம் கூட, தன்னிடமும் தங்கம் இருப்பதைஅவர் உணரவில்லை.

டாட்காம் அலை ஓய்ந்து பல டொமைன் பெயர்கள் செல்லாக்காசாகி, பிறகு மீண்டும் அபூர்வ இணைய தள முகவரிகளுக்கு மதிப்பு ஏற்பட்ட போதும் கூட அவர் தனது முகவரியை விற்க முடியும் என நினைக்கவில்லை.

இந்நிலையில் தான் ஓட்கா டாட்காம் முகவரியை ரஷ்ய ஓட்கா நிறுவனம் ஒன்று பெருந்தொகை கொடுத்து வாங்கியதை கேள்விப்பட்டார். அப்போது தான் அவருக்கு தன்னிடம் உள்ள பிட்சா டாட்காம் முகவரியையும் தள்ளிவிடலாமே என்று தோன்றியது.

டொமைன் பெயர் விற்பனைக்கான ஏல தளத்தில் இந்த முகவரியை விற்பதாக தெரிவித்துவிட்டு காத்திருந்தார். முதலில் 100 டாலருக்கு கேட்கப்பட்டது. பின்னர் ஆயிரம் டாலரானது. 24 மணி நேரத்தில் பார்த்தால் போட்டா போட்டி ஏற்பட்டு, லட்சம் டாலருக்கு வாங்க தயாராக இருந்தனர். பின்னர் இந்த தொகை 20 லட்சம் டாலரை தாண்டிவிட்டது. இறுதியாக 26 லட்சம் டாலருக்கு விற்பனை செய்ய கிளார்க் ஒப்புக் கொண்டார்.

இந்த தொகை தான் எதிர்பார்த்திராத அதிர்ஷ்டம் என்று அவர் நம்ப முடியாத வியப்புடன் கூறுகிறார்.

நிற்க, பிட்சா டாட்காம் போன்ற முகவரிகளை ஏன் இவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று கேட்கலாம்.

தேடியந்திர யுகத்தில், பிட்சா டாட்காம் போன்ற பொதுவான முகவரிகள் தேடல் முடிவு பட்டியலில் முந்தி நிற்கும் திறன் பெற்றவை என்பதே விசேஷம்.

சந்தேகம் இருந்தால் “பிட்சா’ என்னும் சொல்லை டைப் செய்து பாருங்கள் பிட்சா டாட்காம் முதலில் வந்து நிற்கும். இதனால் அந்த தளம் எளிதாக கிளிக் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. வர்த்தக நிறுவனங் களுக்கு இந்த தன்மை வருவாயை கொடுக்கும்.

ஒன்றுமே தகவல் இல்லாத ஓட்கா டாட்காம் தளத்தை தினந்தோறும் 17 ஆயிரம் பேர் கிளிக் செய்து பார்க்கின்றனர் என்பதை அறிந்தே ரஷ்ய நிறுவனம் அதனை வாங்க முன் வந்தது.

அந்த வரிசையில் அடுத்த பம்பர் பரிசு எந்த முகவரிக்கு என்று தெரியவில்லை?

—————

தணிக்கைகள் பலவிதம்

ஈரானில் சிவப்பு நிற ஐகான். சிரியாவில் ஒரு சிறு குறிப்பு. சவூதி அரேபியாவில் ஒற்றை எழுத்துக்களில் மீண்டும் அறிவிப்பு. இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா?
இதெல்லாம் இன்டெர்நெட் தணிக்கைக்கான அடையாள சின்னங்கள்தான். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளை பார்த்ததுமே அவை எல்லாமே மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவை என்பது விளங்கி விடும்.
இன்டெர்நெட்டுக்கு வாய்ப்பூட்டு போடும் விஷயத்தில் முன் நிற்கும் நாடுகளும் இவைதானே. கிழக்கில் ஒரு சீனா என்றால், அதற்கு நிகராக இன்டெர்நெட் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பவையாக அரபு நாடுகள் திகழ்கின்றன.

நாம் இன்டெர்நெட்டை பார்ப்பதற்கும் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் இன்டெர்நெட்டை
பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய அனுபவம் எல்லையில்லா பெருவெளிக்கு நிகரானது என்றால் அரபு நாடுகளை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் பாதை மறிக்கப்படும் பயணத்தை போன்றது, இன்டெர்நெட்டில் உலா வருவது.

காரணம் இந்த நாடுகளில் அநேக இணையதளங்கள் பார்க்கத்தகாதவை என்று தடை விதிக்கப்படுவதுதான். கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கு இன்டெர்நெட் வழி செய்திருப்பதால், கருத்துப் பரிமாற்றத்திற்கும் போராட்டம் நடத்துவதற்கும் இன்டெர்நெட் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

இந்த காரணத்தினாலேயே சுதந்திரத்தை நேசிப்பவர்கள் அதன் அடையாளமாக இன்டெர்நெட்டையும் நேசிக்கின்றனர். ஆனால் இதே காரணத்திற்காக சர்வாதிகார மற்றும் ஜனநாயகம் இல்லாத அரசுகள் இன்டெர்நெட்டை கட்டுப்படுத்தவும் விரும்புகின்றன.

அரசுக்கு எதிரான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இன்டெர்நெட் கைகொடுக்கும் என்பதால் சர்வாதிகார அரசுகள் இன்டெர்நெட் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்கின்றன.

அவை பலவித வழிகளை கையாண்டு இன்டெர்நெட் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வருவதோடு தங்கள் கொள்கைக்கு பாதகமாக அமையக் கூடிய இணையதளம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு தடை விதித்து விடுகின்றன.

பெரும்பாலான அரபு நாடுகள் இந்த பட்டியலில்தான் வருகின்றன. விதிவிலக்காக மொராக்கோ, ஜோர்டான், லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மட்டும்தான் இன்டெர்நெட்டுக்கு எவ்வித தடையும் விதிக்காமல் இருக்கின்றன.

எகிப்து தற்போது இதற்கான சட்டத்தை தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. மற்றபடி சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இன்டெர்நெட் கட்டுப்பாடு தீவிரமாகவே இருக்கிறது.
இன்டெர்நெட்டில் அதிகம் பார்க்கப்படும் தளங்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம் பெற்றிருக்கும் மை ஸ்பேஸ், பேஸ்புக், யுடியூப் போன்ற தளங்களையெல்லாம் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் அணுகவே முடியாது.

அவற்றை அணுக முயற்சிக்கும் போது தடை செய்யப்பட்டிருக்கிறது எனும் தகவல்தான் வந்து நிற்கும். அதாவது ஈரானில் பேஸ்புக் அல்லது மை ஸ்பேஸ் தளத்தை யாராவது பார்க்க முயற்சித்தால் அவரது கம்ப்யூட்டரில் அந்த இணையதளம் வருவதற்கு பதிலாக ஒரு சிவப்பு ஐகான் மட்டுமே தென்படும்.

குறிப்பிட்ட அந்த தளம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது.
பெரும்பாலான அரபு நாடுகள் இந்த தகவலை கொட்டை எழுத்துக்களில் தெரிவித்து எச்சரிக்கின்றன. ஈராக்கில் கூட அமெரிக்க ராணுவம் தங்களுக்கு பாதகமான இணையதளங்களுக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது.

இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். அண்மையில் கூட ஈரானில் 2 பேர் பெண்ணிய கருத்துக்களை பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் ஆபத்தானவை எனும் அறிவிப்போடு தடை செய்யப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளிலும் இத்தகைய இன்டெர்நெட் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. ஆனால் ஒன்று. அரசுகளை போலவே இந்த நாடுகளின் இணையவாசிகளும் கில்லாடிகளாகவே இருக்கின்றனர்.

அரசு கட்டுப்பாட்டை விதித்தால் அவற்றை மீறி இணையதளத்தை பார்வையிடும் வழிகளை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இதற்காக மாற்று ஐபி அடையாளங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல வழிகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இவற்றை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதும் சம்பந்தப்பட்ட நாடுகளின் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இன்டெர்நெட் கட்டுப்பாடு தீவிரமாக இருக்கிறதே தவிர முழு வெற்றி பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.