Tag Archives: click

monica

பரிவு மிக்க இணையம் வேண்டும்; மோனிகா லெவின்ஸ்கி உருக்கம்.

மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். இணையத்தின் வீச்சால் தாங்க முடியாத அவமானத்திற்கு இலக்கானவர் தன்னைப்போன்ற பாதிப்புகுள்ளாகிறவர்கள் சார்பில் பரிவு மிக்க இணையம் வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப்பெண்ணாக இருந்ததும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாகி நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதி தான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டும் அல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை. பல ஆண்டு மவுனத்தை களைத்து கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட்டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்த போது தான் இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் வேதவையின் தீவிரத்தை உலகம் உணர்ந்தது.

லெவின்ஸ்கி -கிளிண்டன் விவகாரம் இணையத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்து அதன் பிறகு உலகை உலுக்கியது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் இது பேசப்பட்டு அவர் தலைகுணிந்து நின்றார்.

இந்நிலையில் மோனிகா லெவின்ஸ்கி, டெட் அமைப்பின் சார்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பார்வையாளர்களை எழுந்து நின்று கைத்தட்டி ஆங்கிகரிக்க வைத்த இந்த உரையில் அவர் இணைய கலாச்சாரம் மற்றும் போக்கு தொடர்பாக கவலை தரும் பல விஷ்யங்களை சுட்டிக்காட்டி பரிவு மிக்க இணையத்தின் அவசியம் பற்றி உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இப்போது இணையச்சீண்டல் என அறியப்படும் பிரச்சனையின் முதல் உதாரணம் தான் என்று கூறியவர், 22 வயதில் எனது மேலதிகாரியுடன் நான் காதலில் விழுந்தேன். 24 வயதில் அதன் மோசமான பாதிப்பை அனுபவித்தேன்” என்று குறிப்பிட்டார்

தன்னுடைய தனிப்பட்ட அவமானத்தை இணையம் பன்மடங்கு மோசமாக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் டிஜிட்டல் புரட்சியால் ஊதிப்பெரிதாக்கப்பட்டதாக குறிப்பிட்டவர் ,தனிப்பட்ட நபராக இருந்த நிலை மாதிரி உலகம் முழுவதும் அவமானத்திற்கு இலக்காக்கப்பட்டவர் , இணையம் முழுவது கல்வீச்சுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

மோசமான பெண்ணாக முத்திரை குத்தப்பட்டு , மதிப்பை இழந்து, கவுரவத்தை இழந்து கிட்டத்தட்ட வாழ்க்கையையும் இழந்துவிட்டதாக அவர் உருக்கமாக குறிப்பிட்டார்.
அவமானத்தின் உணர்வை தொழில்நுட்பம் பன்மடங்காக்கி இருப்பதாக வேதனை தெரிவித்தவர், முன்பு நண்பர்கள் வட்டம் , குடும்பத்தினரோடு முடிந்த விஷயம் இப்போது முழு இணைய சமூகத்திற்கும் பரவி இருப்பதாக தெரிவித்தார்.

இணையம் மற்றவர்களின் வலி மற்றும் தவிப்பு குறித்து உணர்ச்சியற்று போகச்செய்திருப்பதாக கூறியவர் , அவமானப்படுத்தும் கலாச்சாரத்தில் இருந்து விலகி பரிவு மற்றும் அக்கறை கொண்ட இணையம் உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பரிவான பின்னூட்டம் எதிர்மறையான கருத்துக்களை வெல்ல உதவும் என்று கூறியவர் பரிவு எல்லோருக்கும் நலன் பயக்கும் என்றார். மற்றவர்கள் தலைப்புச்செய்தியில் ஒரு மைல் தூரம் பயணித்து பாருங்கள் என்றும் கூறியவர், இணையம் மூலம் அவமானத்திற்கு ஆளாகும் எவரும் இதை தாக்கு பிடித்து எழுந்து நிற்பது சாத்தியம் என உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மோனிகா லெவின்ஸ்கியின் டெட் உரை: http://blog.ted.com/imagine-walking-a-mile-in-someone-elses-headline-monica-lewinsky-speaks-at-ted2015/

——

skellie-skeleton6-550x352

இன்ஸ்டாகிராமில் கலக்கும் எலும்புக்கூடு !

அந்த எலும்புக்கூடு ரெஸ்டாரண்டிற்கு செல்கிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஷாப்பிங் செய்கிறது. மேக் அப் செய்து கொள்கிறது. கண்ணாடி முன் அமர்ந்து அழகு பார்க்கிறது. நீச்சல் குளத்தில் குளிக்கிறது. புத்தாண்டு உறுதிமொழி எழுதிவைக்கிறது. எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறது.இந்த பகிர்வ்களை பார்த்து ரசிக்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் அதற்கும் இருக்கின்றனர். சும்மாயில்லை, இன்றைய தேதிக்கு 2 லட்சத்தை அதன் பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை நெருங்கியிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆம், இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டிருக்கும் ஸ்கல்லியை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்! அது தான் அந்த எலும்புக்கூட்டின் பெயர்.

ஸ்கல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் அதன் புகைப்பங்களை பார்த்து நீங்களும் சொக்கிப்போவீர்கள். நீங்கள் இன்ஸ்டாகிராம் பயனாளி என்றால் அதற்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து லேசாக பொறாமை படவும் செய்வீர்கள். ஒரு எலும்புக்கூட்டிற்கு இத்தனை பாலோயர்களா? என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் அதன் படங்களை பார்த்தால், அததனையும் அழகாக தான் இருக்கின்றன என்று சொல்லத்தோன்றும்.

எலும்புக்கூடு எப்படி தன்னைத்தானே படம் எடுத்து வெளியிட முடியும் என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மனதில் தோன்றி அதற்கான பதிலையும் கூட ஊகித்திருக்கலாம்.

ஆம், சரி தான் இந்த எலும்புக்கூடு இன்ஸ்டகிராமின் கணக்கின் பின்னே யாராவது இருக்க வேண்டும் என்னும் ஊகம் சரியானது தான்.

கனடா நாட்டைச்சேர்ந்த டானா ஹெர்லி (Dana Herlihy ) எனும் பெண்மணி தான் இந்த எலும்புக்கூட்டை இன்ஸ்டாகிராமில் உரிய பெற வைத்திருப்பவர்- ஓஎம்ஜிலிட்ரலிடெட் எனும் முகவரியில்!

சமூக ஊடக மார்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் டானா, இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைத்ததன் பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

skellie-skeleton2-550x550கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டானா பணியாற்றும் நிறுவனத்திற்கு யாரோ ஒருவர் பிளாஸ்டிக் எலும்புக்கூட்டை பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இது போன்ற திகிலூட்டும் பரிசிகளுக்கும் செயல்களுக்கும் பெயர் பெற்ற ஹாலோவன் பண்டிகையின் போது தான் ஒரு குறும்புக்காரர் இந்த விஷமத்தனத்தை செய்திருக்கிறார். எலும்புக்கூட்டை பார்த்து டானாவின் சக ஊழியர்களில் எத்தனை பேர் பயந்தனர் என தெரியவில்லை, ஆனால் குறும்புக்காரர் ஒருவர் அந்த எலும்புக்கூட்டின் கைகளில் ஸ்டார்பக்ஸ் காபி கோப்பையை வைத்துவிட்டு சென்று விட்டார். எலும்புக்கூடு காபி பருகுகிறதாம் !

இந்த காட்சியை பார்த்து புன்னகைத்த டானா அதை அப்படியே கிளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். எலும்புக்கூடு காபி குடிக்கும் புகைப்படம் செம கியூட்டாக இருப்பதாக பலரும் பார்த்து ரசித்தனர். அதோடு அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். இப்படி தான் அந்த புகைப்படம் இணையத்தில் பிரபலமாகி ஸ்கெல்லியாக உருவெடுத்தது. டானா தொடர்ந்து எலும்புக்கூட்டை வைத்து வேறு சில புகைப்படங்கலை எடுத்து பகிர்ந்து கொண்ட போது இதற்காக என்றே தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைக்கலாமே என நினைத்து , எலும்புகூட்டிற்கு பெயரும் வைத்து இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துவைத்தார்.

அடுத்தடுத்த புகைப்படங்களில் ஸ்கெல்லியும் பிரபலமாகி அதற்கென்று ரசிகர்கள் உருவாகத்துவங்கிவிட்டனர்.

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் டானாவும் ஸ்கெல்லியை விதவிதமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் பேஷன் ரசம் சொட்டும் புகைப்படங்களையும் சுய அழகு புகைப்படங்களையும் பார்த்து அலுத்தவர்கள் ஒரு மாறுதலுக்காக ஸ்கெல்லியின் புகைப்படத்த்தை பார்த்து ரசிக்கின்றனர். அதின் பின்னே மறைந்திருக்கும் கேலியான நகைச்சுவை சொக்க வைக்கிறது.

ஆனால் , ஸ்கெல்லியின் பிரம்மாவான டானா வெறும் நகைச்சுவையாக மட்டும் இந்த படங்களை எடுப்பதில்லை. சமகாலத்து இளம் பெண்களின் மனப்போக்கையும் பழக்க வழக்கங்களையும் அழகாக பகடி செய்யும் வகையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதாவது இந்த கால பெண்கள் எதை எல்லாம் புதிய போக்கு என விழுந்தடித்து பின்பற்றுகின்றனரோ அதை எல்லாம் ஸ்கெல்லியையும் செய்ய வைத்து விமர்சனம் செய்கிறார்.

அழகிய பின்னணியில் ஃபர் கோட்டு போட்டுக்கொண்டு தலையில் மலர் கிரிடம் வைத்துக்கொண்டிருக்கும் பெண் போல எலும்புக்கூடு போஸ் தரும் புகைப்படமும் அதனுடன் வன ராணி போல உணர்கிறேன் எனும் வாசகமும், சிரிக்கவும் வைக்கிறது சிந்த்திக்கவும் வைக்கிறது.

இன்னொரு புகைப்படத்தில் கண்களில் வெள்ளரிக்காயை வைத்துக்கொண்டு அழகு கலை ரகசியம் பற்றி பேசுகிறது. இன்னொரு படத்தில் பணியிடத்தில் களைத்து போய் படுத்திருக்கும் போசில் அலுத்துக்கொள்கிறது. இப்படி ஒவ்வொரு புகைப்படமும் சமகால போக்கை அழகாக கேலிக்குள்ளாக்கி பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.

skellie-skeleton7-550x550இணையம் மூலம் படம் பார்க்கும் சேவையான நெட்பிளக்சில் படம் பார்ப்பது, போம் குளியல் குளித்து இளைப்பாறுவது, புதிய ஷூ வாங்கி கொண்டு பெருமைபடுவது என ஒவ்வொரு படமும் ஒரு செய்தியை கேலியாக முன்வைக்கிறது. ஆனால் புகைப்படத்தின் அமைப்பும் அதன் பின்னே உள்ள கற்பனைத்திறன் மற்றும் கிரியேட்டிவிட்டி கவர்ந்திழுக்குக்கிறது.

அதனால் தான் ஸ்கெல்லிக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போகின்றனர்.

இவ்வளவு ஏன் பத்திரிகைகளில் ஸ்கெல்லியின் பேட்டியும் கூட வெளியாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் சில ஆயிரம் பாலோயர்களையேனும் பெறுவது எப்படி என பலரும் திண்டாடிக்கொண்டிருக்கையில் டானா, ஒரு எலும்புகூட்டை உருவாக்கி லட்சகணக்கானவர்களை அதன் அபிமானயாக்கி காட்டியிருக்கிறார். வித்தியாசமாக செயல்பட வேண்டும், அந்த வித்தியாசம் கவனத்தை பெறும் போது அந்த ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு புதுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதும் தான் ஸ்கெல்லி மூலம் டானா பிரலமாகி இருப்பது உணர்த்தும் செய்தி.

டானா, ஸ்கெல்லி மீது ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஸ்கெல்லி படம் போட்ட கோப்பைகள், ஸ்மார்ட்போன் கவர்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்யத்துவங்கியிருக்கிறார்.

டானாவின் கதை ஊக்கமளிக்கிறதா? புதுசாக ஏதாவது செய்து பாருங்கள் ,நீங்களும் பிரபலமாகலாம்.

 

ஸ்கெல்லியின் இன்ஸ்டாகிராம் பக்கம்:..http://instagram.com/omgliterallydead/

 

——–

 

 

 

 

 

einstein-hero

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது படைப்புகளை அணுகலாம். அதாவது ஐன்ஸ்டீன் படைப்புகள் விரல் நுனியில் ஒரு கிளிக்கில் காத்திருக்கின்றன.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி பிரஸ் தன் வசம் இருந்த ஐன்ஸ்டீன் படைப்பகளை டிஜிட்டல் மயமாககி , எளிதாக தேடக்கூடிய வசதியையும் அளித்திருக்கிறது. சொல்லப்போனால் அறிவியல் பொக்கிஷத்தை ஆன்லைனில் கொண்டு வந்திருக்கின்றனர் என்று சொல்லலாம்.
இது எத்தனை மகத்தான வாய்ப்பு என்று வியப்பும் ஏற்படுகிறது.
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் உள்ளிட்ட விஞ்ஞான கோட்பாடுகளை அறிந்து கொள்ள புத்தகங்கள் இருக்கின்றன. இணையத்திலும் அநேக வழிகள் இருக்கின்றன. ஐன்ஸ்டின் தொடர்பான பிரத்யேக இணையதளங்களும் இருக்கின்றன. ஆனால் டிஜிட்டல் ஐன்ஸ்டீன் இணையதளத்தில் ஐன்ஸ்டீன் படைப்புகளை அணுகலாம் என்பது தான் விஷேசம். ஐன்ஸ்டீன் படைப்புகள் என்றால் அவர் எழுதிய எல்லாவற்றின் தொகுப்பு. ஐன்ஸ்டீனின் இளமைக்காலம் தொட்டு 1923 ம் ஆண்டு வரை அவர் எழுதியவை , சிந்தத்தவற்றின் குறிப்புகள் எல்லாம் புத்தகமாக தொகுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் இணையவாசிகள் பார்வைக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. ஐன்ஸ்டீனின் காதல் கடிதங்கள், பள்ளி மதிப்பெண் சான்றிதழ் போன்றவயையும் இந்த தொகுப்பில் அடங்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆக, ஐன்ஸ்டீன் எனும் மேதை சிந்தித்த மற்றும் செயல்பட்ட விதத்தை அறிந்து கொள்ளவும் , ஆய்வு செய்யவும் இந்த டிஜிட்டல் ஆவணங்கள் உதவியாக இருக்கும்.
பொதுவாக ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் படைப்புகளை , அந்தரங்க கடிதங்களை, குறிப்பேடுகளை நேரில் பார்ப்பது என்பது எல்லோருக்கும் கிடைக்க கூடிய வாய்ப்பு இல்லை. இத்தகைய முக்கிய ஆவணங்கள் அருங்காட்சியகம் மற்றும் பலகலைக்கழகங்களில் பாதுகாக்கப்படும். அவற்றை அணுக வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி தேவை. அதிலும் ஆய்வு மாணவர்களுக்கு தான் இத்தகைய அனுமதி கிடைக்கலாம்.
ஆனால்,இணைய யுகத்தில் இந்த வரம்புகள் இல்லை. ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையத்திற்கு கொண்டுவரப்பட்டால் அவற்றை எல்லோரும் அணுகலாம்.
இந்த அற்புதம் தான் இப்போது நிகழ்ந்திருக்கிறது. பிரின்ஸ்டன் பலகலைக்கழகத்தால் தொகுக்கப்பட்டு வரும் ஐன்ஸ்டீன் படைப்புகளில் 13 தொகுதிகள் இப்போது ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. பெரும்பாலான தொகுதிகள் மூலமொழியான ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பை கொண்டுள்ளன. தொகுதிகளை டிஜிட்டல் புத்தகமாக எளிதாக புரட்டிப்பார்க்கலாம். விரும்பியதை தேடும் எளிய வசதியும் இருக்கிறது.
ஐன்ஸ்டீனின் அறிவியலை மட்டும் அல்ல, ஐன்ஸ்டீன் எனும் மனிதரையும் இந்த படைப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஐன்ஸ்டீனின் சகோதரி மாஜா எழுதிய ஆரம்ப கால சுயசரிதையும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஐன்ஸ்டீனின் அம்மா அவரது தலையின் பொருந்தா தோற்றத்தை பார்த்து கவலைப்பட்டது , ஆரம்பத்தில் மொழியை கற்பதில் அவருக்கு இருந்த குறைபாடு, பேசும் போது ஒவ்வொரு வரியையும் தனக்குத்தானே மெல்ல மீண்டும் சொல்லிப்பார்க்கும் விநோத பழக்கம் அவருக்கு இருந்தது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை இந்த படைப்புகளில் இடம்பெற்றிருப்பதை பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதே போல பள்ளித்தேர்வு முறையை ஐன்ஸ்டீன் எதிர்த்திருக்கிறார். தேர்வுகள் தேவையில்லாதது, தீங்கானது என குறிப்பிட்டுள்ள ஐன்ஸ்டீன் , இதற்கு மாறாக மாணவர்களின் பக்குவம் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள் மூலம் ஆசிரியர்கள் மதிப்பிடலாம் என குறிப்பிடுகிறார்.
ஐன்ஸ்டீனின் காதல் கடிதங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்கின்றன என்றால் மற்ற கடிதங்கள் மற்றும் எழுத்து மூலம் அவரது சமூக பார்வையை அறியலாம்.
ஆக, ஐன்ஸ்டீன் பற்றி படிக்கும் வாய்ப்பு இப்போது இணையம் மூலம் சுபலமாகி இருக்கிறது. நீங்கள் விரும்பினால் ஐன்ஸ்டீன் பற்றி ஆய்வும் செய்யலாம். இதற்கு பிஎச்டி பட்டம் தேவை என்றில்லை , ஆன்லைனில் http://einsteinpapers.press.princeton.edu/ என்ற முகவரிக்கு சென்றாலே போதுமானது!

_79507168_robotatcomputer

கூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை!

இணையத்தை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகிள் இணையவாசிகளுக்கான புதிய பரிசோதனை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் , இணையவாசிகள் தாங்கள் மனிதர்கள் தான் என்பது முன்போல எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்காது என கூகிள் கருதுகிறது.

கூகிள் அறிமுகம் செய்துள்ள இந்த பரிசோதனையின் பெயர் ரி-கேப்ட்சா. ( No-CAPTCHA ) . இந்த சோதனையின் முந்தைய வடிவமான கேப்ட்சாவை நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். புதிய இணைய சேவைக்காக பதிவு செய்யப்படும் போது அல்லது இணைய ஷாப்பிங் போன்றவற்றில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு நிலையில் சின்ன கட்டத்தில் , ஜாங்கிரி போன்ற எழுத்துக்கள் தோன்றும். அந்த எழுத்துக்களை நீங்கள் சரியாக கண்டுபிடித்து டைப் செய்தால் உள்ளே நுழையும் அனுமதியை பெறலாம்.

இந்த சோதனை தான் கேப்ட்சா என்று சொல்லப்படுகிறது. இந்த சோதனையின் நோக்கம் இணையத்தை பயன்படுத்த முயற்சிப்பவர்கள் மனிதர்கள் தான் என்பதை உறுதி செய்வது தான் . அதாவது இந்த சோதனையை முன்வைக்கும் ஒவ்வொரு இணையதளமும் நீங்கள் மனிதர் தானா? என்ற கேள்வியை முன்வைத்து அதை உறுதி செய்து கொள்கின்றன.
இது அபத்தமாக தோன்றலாம்.
ஆனால், இந்த சோதனையை இணையவாசிகள் எதிர்கொள்ள நேர்ந்தாலும் உண்மையில் இது அவர்களுக்கான அல்ல; இணையத்தில் உலாவும் அல்லது உலாவவிடப்படும் பாட் என்பபடும் சாப்ட்வேர் படைப்புகள் அல்லது எந்திரங்களை தடுப்பதற்காக தான்.

ஸ்பேம் மெயில் அனுப்ப, பாஸ்வேர்டு திருட என்று பலவிதமான பாட்கள் உருவாக்கப்பட்டு உலாவ விடப்பட்டுள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டே, இணையவாசிகளுக்கு கேப்ட்சா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கிளிக் செய்து உள்ளே உழைய மட்டுமே தயார் செய்யப்பட்ட ஸ்பேம் பாட்களால் , இந்த சோதனையில் வெற்றிபெற முடியாது என்பதால் அவை திருதிருவென்று முழித்து நிற்கும். அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

இப்படி தான் கேப்ட்சா முறை இணையசேக்கான பூட்டு சாவியாக செயல்படுகிறது. அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கிய முறை இது.
ஆனால், இந்த சோதனையை எதிர்கொள்வது எரிச்சலாக இருக்கும். சில நேரங்களில் மீண்டும் மீண்டும் எழுத்துக்களை டைப் செய்ய வேண்டியிருக்கும் போது எரிச்சல் பலமடங்கு அதிகமாகும்.
அதோடு, இப்போதெல்லாம் இந்த கேப்ட்சா சோதனைக்காக பதிலை அளிக்ககூடிய புத்திசாலித்தனமான பாட்களை உருவாக்கத்துவங்கிவிட்டனர். விளைவு பாட்கள் கேப்ட்சா சோதனையை கூடு உடைத்து உள்ளே நுழைந்துவிடுகின்றன.

இதற்கு மாற்று மருந்தாக தேடியந்திர நிறுவனமாக கூகிள் ,ரி-கேப்ட்சா எனும் புதிய முறையை முன்வைத்துள்ளது. இணைய பாட்களுக்கு கடுமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய முறை இணையவாசிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என கூகிள் சொல்கிறது. இணையவாசிகள் , நான் ரோபோ இல்லை எனும் கட்டத்தை கிளிக் செய்தால் மட்டும் போதுமானது. இந்த கிளிக்கை வைத்தே ரி-கேப்ட்சா சேவையை பயன்படுத்த இருப்பது இணையவாசியா அல்லது ரோபாவா என தீர்மானித்துவிடும்.
ரோபோக்களுக்கு சிக்கலானது, மனிதர்களுக்கு எளிதானது எனும் வர்ணணையோடு கூகிள் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையை மற்ற இணையதளங்களுக்கும் கூகிள் வழங்க இருக்கிறது. ஏற்கனவே வலைப்பதிவு சேவையான வேர்டுபிரஸ் போன்றவை இதை பயம்படுத்த முன்வந்துள்ளன,.
இந்த சேவை எளிதாக தோன்றினாலும் இதன் பின் பெரிய அளவிலான ஆய்வு மற்றும் சிக்கலான செயல்முறைகள் இருக்கின்றன என்று கூகிள் சொல்கிறது.

கடந்த காலங்களில் இணையவாசிகள் கேப்ட்சா சோதனையை எதிர்கொள்ளும் விதம் மற்றும் பாட்கள் அணுகும் வித்த்தை ஆழமாக கவனித்து அதன் அடிப்படையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அட்வான்ஸ்ட் ரிஸ் அனாலசிஸ் என்று கூகிள் இதை சொல்கிறது.

ரி-கேப்ட்சா சோதனையின் போது, அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இணையவாசியின் செயல்பாட்டை கவனித்து செயல்படும் ஆற்றல் இந்த முறையில் இருப்பதாக கூகிள் குழு சொல்கிறது. சில நேரங்களில், புகைப்படம் போன்றவை காண்பிக்கப்பட்டு அடையாளம் காட்ட கேட்கப்படலாம். இந்த சோதனை மனிதர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதோடு , புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வசதி, வரைபட சேவை மேம்பாடு ஆகியவற்றுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி கேப்ட்சா என்றால் என்ன என்று குழப்பமாக இருந்தால் , அதற்கான விரிவாக்கம் :Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart. கம்ப்யூட்டர் மற்றும் ரோப்போக்களை வேறுபடுத்துவத்ற்கான தானியங்கி டியுரிங் டெஸ்ட் என்று பொருள்.
கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டியூரிங் செயற்கை அறிவிற்காக முன்வைத்த சோதனை டியூரிங் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

———-
ரிகேப்ட்சா பற்றி கூகிள் விளக்கம்: https://www.google.com/recaptcha/intro/index.html

—–

நெட்சத்திரங்கள் அப்டேட்;
மஹிர் காக்ரியை தெரியுமா என நேற்று கேட்டிருந்தேன். காக்ரி துருக்கி நாட்டவர். இணைய நட்சத்திரம். சொல்லப்போனால் இணையத்தின் முதல் நட்சத்திரம். யூடியூப் காலத்திற்கு வெகு முன்னரே, இமெயில் மூலம் இணைய வெளி முழுவதும் பிரபலமானவர். ஒரு சாமான்யர் பற்றி எல்லோரையும் பேச வைக்க முடியுமா என புத்தாயிரமாண்டில் வியக்க வைத்தவர்.
காக்ரி என்ன செய்தார் ? எப்படி பிரபலமானா? அதன் பிற்கு என்ன ஆனார் ? என்பது பற்றி எல்லாம் , நெட்சத்திரங்கள் புத்தக்த்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
மேலும் நெட்சத்திரங்கள் பற்றிய சுவாரஸ்ய்மான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் சிம்மன்புத்தகம் பற்றிய விவரங்களுக்கு ;

புத்தகத்தின் விலை ரூ. 130 ( 176பக்கங்கள்).

விவரங்களுக்கு ; Vivek Enterprises,
No.2/3, 4th Street,
Gopalapuram,
Chennai – 600 086.
Ph: 044-28111506

அன்புடன் சிம்மன்.

அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

wபடித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் என்றில்லை. இணைய வசதி இருந்தால், இணையத்திலேயே புரியாத எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு விடலாம். இதற்காக என்றே ஆன்லைன் அகராதிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அகராதிகளில் பல ரகம் இருப்பது போலவே இணைய அகராதிகளிலும் பல ரகம் இருக்கின்றன. அவற்றில் அசத்தலான அகராதிகள் சிலவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாமா?

இந்த அகராதிகளின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இவை அர்த்தம் தேடுவதை மேலும் சுவாரஸ்யமாக்குவதோடு , வார்த்தைகளுக்கான பொருளை காட்சிரீதியாவும் புரிய வைக்க கூடியவையாக இருக்கின்றன. அது மட்டுமா? அர்த்தம் தேடும் சொற்களுடன் தொடர்புடைய வேறு பல விஷயங்களையும் இவை தெரிந்து கொள்ள உதவுகின்றன.

இத்தகைய காட்சி அகராதிகளுக்கு அழகான உதாரணமாக வேர்ட்சென்ஸ்.மீ (http://wordsense.me/ ) அகராதி இருக்கிறது. வேர்டு சென்ஸ் தேடப்படும் வார்த்தைகளுக்கான அர்த்ததை அழகாக வரைபடம் போல காட்டுகிறது. இடது பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால் தேடிய சொல்லுக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சொல்லுக்கு பெயர்ச்சொல்லாக என்ன பொருள், வினைச்சொல்லாக இருந்தால் என்ன அர்த்தம் போன்றவற்றை இதைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்படியே பக்கத்தில் பார்த்தால் , அந்த சொல்லுக்கு இணையான சொற்கள் மற்றும் தொடர்புடைய சொற்களின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அவற்றில் எந்த சொல்லை கிளிக் செய்தாலும் அதற்கான விளக்கமும் வரும். அந்த சொல்லுக்கான வார்த்தை வரைபடமும் வரும். ஆக, எந்த சொல்லாக இருந்தாலும் அதற்கான பொருளையும் பயன்பாட்டையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலம் அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தால் இந்த இணைய அகராதி உங்களை கவர்ந்திழுத்துவிடும். ஏதோ இணைய விளையாட்டு ஆடுவது போல நேரம் போவதே தெரியாமல் இதை பயன்படுத்திக்கொண்டே இருக்கத்தோன்றும்.
இந்த அகராதியில் இன்னும் ஒரு சிறப்பு , நீங்கள் ஏற்கனவே தேடிய வார்த்தைகளையும் இது நினைவில் வைத்துக்கொண்டே அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கும். அதே போல இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் பட்டியலையும் கிள்க் செய்து பார்க்கலாம்.

எல்லாம் சரி, அகராதியை பாடம் படிப்பது போல படித்துப்பார்க்கலாம் என்றால் நம்ப முடிகிற்தா? கிட்ஸ்.வேர்ட்ஸ்மித் ( http://kids.wordsmyth.net/we/) இதை சாத்தியமாக்குகிறது. இதில் மற்ற அகராதிகள் போல புரியாத வார்த்தைக்கான பொருள் தேடலாம். குறிப்பிட்ட அந்த வார்த்தைக்கான விளக்கத்தை விரிவாக பார்க்கலாம். அந்த சொல்லின் சரியான உச்சரிப்பையும் ஆடியோவாக கேட்கலாம். இதே பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு சொல்லுக்கும் , வார்த்தை ஆராய்ச்சி, வார்த்தை வரலாறு ,வார்த்தை பாகங்கள் ஆகிய வசதிகள் இருப்பதை பார்க்கலாம். இதில் வார்த்தை ஆராய்சியை கிளிக் செய்தால் அந்த சொல்லின் பயன்பாடு தொடர்பான வாக்கியங்களை பார்க்கலாம். வாரத்தை வரலாறு அந்த சொல் தோன்றிய விதம் பற்றி தெரிந்து கொள்ளலாம். வார்த்தை பாகங்கள் பகுதியில் எந்த ஒரு சொல்லையும் பகுதி பகுதியாக பிரித்து பொருள் சொல்லப்படுகிறது.

இது வார்த்தை தேடலுக்கானது. முகப்பு பக்கத்தில் வார்த்தைகளுக்கான வழிகாட்டி எனும் வர்ணனையோடு பலவேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். வரலாறு, மனித உடல், பொருளாதாரம என பல தலைப்புகளை பார்க்கலாம். எந்த தலைப்பை கிளிக் செய்தாலும் அந்த தலைப்புக்கான முக்கிய சொற்களின் பட்டியல் வந்துநிற்கும். அந்த சொற்களுக்கான பொருளை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். வார்த்தைகளின் தங்கச்சுரங்கம் என்று இந்த வசதியை இந்த தளம் குறிப்பிடுகிறது. இதை பயன்படுத்திப்பார்ப்பு சுவாரஸ்யமானது என்பதோடு தினமும் புதிய சொற்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். வார்த்தை விளையாட்டு புதிர்களும் இதில் உண்டு. சிறுவர்களுக்கான தனி பகுதியில் இருக்கிறது. அதில் எல்லாமே காட்சிகளாக விளக்கப்பட்டிருக்கும்.
ஸ்னேப்பி வேர்ட்ஸ் ( http://www.snappywords.com/) அகராதி இன்னும் கூட சுவாரஸ்யமானது.

இதில் எந்த வார்த்தையை சமர்பித்தாலும் அந்த சொல்லை மையமாக வைத்துக்கொண்டு தொடர்புடைய சொற்களை வரைபட சித்திரமாக காட்டுகிறது. சொற்களின் அருகே மவுசை கொண்டு சென்றாலே அவற்றுக்கான விளக்கத்தை பார்க்கலாம். அந்த வார்த்தையில் கிளிக் செய்தால் , அந்த சொலை மையமாக கொண்ட வார்த்தை சித்திரத்தையும் பார்க்கலாம். ஒரு வார்த்தை மட்டும் அல்ல இரு வார்த்தை சொற்களையும் இப்படி தேடிப்பார்க்கலாம். இந்த சித்திரத்தில் சொற்களின் தன்மைக்கு ஏற்ப தனித்தனி வண்ணங்களிலும் அடையாளம் காட்டப்படுகின்றன. அதாவது வினைச்சொல் என்றால் ஒரு வண்ணம். பெயர்ச்சொல் என்றால் ஒரு வண்ணம். ஆங்கில சொற்களின் பயன்பாட்டை காட்சிரீதியாக மிக அழகாக புரிய வைக்கிறது இந்த அகராதி.
காட்பிரைனி (http://www.gotbrainy.com/ ) அகராதி சொற்களுக்கான விளக்கத்தை அளிப்பதுடன் அதை புகைப்படமாகவும் காண்பித்து வியக்க வைக்கிறது. சொற்களின் அர்தத்தை விளக்கும் இந்த படங்கள் மூலம் சொற்களின் பயன்பாட்டை இன்னும் கூட தெளிவாக புரிந்து கொள்ளலாம். இந்த புகைப்படங்கள் பெரும்பாலும் இணையவாசிகளால் சமர்பிக்கப்பட்டவை.

அகராதிகளை பயன்படுத்துவது இத்தனை சுவாரஸ்யமானதா என்று வியப்பை ஏற்படுத்தி , வார்த்தைகளுக்கு பொருள் தேடும் ஆர்வத்தையும் இந்த அகராதிகள் உருவாக்கும். அப்படியே உங்களை ஆங்கில புலியாகவும் ஆக்கிவிடும்.